வாங் வீ  சீனக் கவிதைகள்

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

1.
விடைபெறுதல்

குதிரையிலிருந்து இறங்கி, நண்பருக்கு வழங்கினேன் ஒரு கோப்பை மது ரசத்தை,
நான் கேட்டேன் எந்த இடத்தை நோக்கிப் பயணிக்கிறார் என.
அவர் சொன்னார் தான் தனது இலட்சியங்களை அடையவில்லை என்றும்
தென் குன்றுப் பகுதியில் ஓய்வு பெறப் போவதாகவும்.
நல்லது செல்லுங்கள், இதற்கு மேல் எதையும் கேட்காதீர்கள்,
வெண் மேகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் எப்போதும்.
*

2.
விடைபெறுதல் (II)

குன்றின் அருகில் ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கொண்டோம்.
நாள் அந்தியை சந்திக்கும் பொழுதில், மரத்தாலான வாசற்கதவை மூடுகிறேன்.
அடுத்த வருடம், வசந்த காலத்தில், மீண்டும் வரும் பச்சைப் புற்கள்,
ஆனால் என் மதிப்புற்குரிய நண்பர் திரும்பி வருவாரா?
*

3.
துணை அலுவலர் ஜாங்’கிற்குப் பதில் அளித்தல்

தற்போது இந்த முதிய வயதில், அமைதியின் மதிப்பு எனக்குத் தெரிகிறது,
உலகின் பிரச்சனைகள் முன் போல என் மனதைப் பாதிப்பதில்லை.
என்னை நானே திரும்பிப் பார்க்கையில், என்னிடம் எந்த உயரியத் திட்டங்களும் இல்லை,
என்னால் செய்ய முடிந்ததெல்லாம் முதியவர்களின் காட்டுக்குத் திரும்புவதுதான்.
பைன் மரங்களிலிருந்து வீசூம் காற்று என் இடைக்கச்சையைத் தளர்த்துகிறது,
குன்றுகளின் ஊடாக நிலவு ஒளிர்கிறது; நான் பேரரசை எதிர்க்கத் துணிகிறேன்.
நீங்கள் கேட்கிறீர்கள் ஏன் உலகம் எழ வேண்டும், பின் விழ வேண்டும்,
மீனவர்கள் பாடுகிறார்கள் நதியின் செங்குத்தான கரையோரங்களில்.
*

4.
சாங்ஷியான் மலைக்குத் திரும்புதல்

தெளிந்த நதி ஓடுகிறது புதர்களுக்கு நடுவே,
குதிரையும் வண்டியும் நகருகின்றன நேரத்தைப் போக்கியபடி.
பாய்கிறது தண்ணீர் தன் சித்தப்படி,
அந்தியில், திரும்புகின்றன பறவைகள் ஒன்றாகக் கூடடைய.
பாழடைந்த நகரம் எதிர் கொள்கிறது பண்டையகால ஓடத்தை,
அஸ்தமிக்கும் சூரியன் நிரப்புகிறது இப்பொழுது இலையுதிர்காலக் குன்றுகளை.
உயர்ந்த சாங்ஷியானின் உருளும் உச்சிப் பகுதிக்கு வெகு கீழே,
வீடு திரும்பி, மூடுகிறேன் கதவைத் தற்காலிகமாக.
*

5.
கோயில் மரப் பாதை

கோயில் மரத்துக்குச் செல்லும் குறுகிய, சூரியஒளியற்ற பாதை,
ஆழ்ந்த இருட்டானது; ஏராளமான பச்சைப் பாசியுடையது.
முற்றத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்ததும் வாசற்கதவருகே காத்திருக்கவும்,
ஒருவேளை துறவி குன்றிலிருந்து இறங்கி வரக்கூடும்.
*

6.
ஹுவாஜி மலையுச்சி

பறத்தலில் இருக்கும் பறவை செல்கிறது எந்த வரையறையும் இன்றி,
இலையுதிர்காலத்து வர்ணங்கள் இணைகின்றன மறுபடியும் குன்றுகளோடு.
ஹுவாஜி மலையுச்சியின் மேலிருந்து கீழ் வரையிலும்
சோக உணர்விற்கு முடிவே இல்லை.

சீனக் கவிஞரான வாங் வீ  (701–762),  மத்திய சீனாவிலுள்ள ஷென்சி நகரில் பிறந்தவர். பன்முகத் திறன் கொண்டவர்.  இசைக் கலைஞராகவும், அழகிய கையெழுத்தாளராகவும், சிறந்த ஓவியராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர். லி பய், டு ஃபூ ஆகிய இருவரோடு, டாங் வம்சத்தின் ஆரம்பக் கால மூன்று முக்கியக் கவிஞர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர். இவரது கவிதைகள் 420 வரையிலும் பாதுகாக்கப் பட்டுள்ளன. “முன்னூறு டாங் கவிதைகள்” எனும் பிரபலமான 18_ஆம் நூற்றாண்டின் பாடல் திரட்டில் இவரது 29 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இவரது தந்தை உள்ளூரில் அரசு அலுவலராகப் பணி புரிந்தவர். தாய் கெளரவம் மிக்க இலக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். 721_ஆம் ஆண்டு சிங் – ஷே பரீட்சையில் தேறியதும் இலக்கிய வட்டம் மற்றும் அரசு அலுவலகப் பணிகளுக்குள் நுழைந்தார் வாங் வீ.  திருமணம் செய்து கொண்டு சேங்-ஆன் நகரின் தென்பகுதியிலுள்ள மலைப் பிரதேசத்தில் பண்ணை நிலம் வாங்கித் தோட்டத்தை உருவாக்கியதோடு வாய்ப்புக் கிடைக்கும் பொழுதுகளில் அங்கு சென்று தங்கி இருந்திருக்கிறார். (இவர் எழுதிய பல நாலடிப் பாக்கள் இந்தப் பண்ணைத் தோட்டத்தைப் பற்றிய வர்ணனைகளாக அமைந்துள்ளன.) இவருக்கு 30 வயதாக இருக்கையில் மனைவி காலமாகி விட்டார்.

சேங்-அன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாங் வீ வெற்றிகரமான அலுவலராகப் பணியாற்றி வந்திருக்கிறார். கொந்தளிப்பான ஆன் வுஷன் புரட்சியின் போது புரட்சியாளர்கள் பக்கம் நிற்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகி அதற்காகக்  குறுகிய காலம் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் மன்னிப்புப் பெற்று மீண்டும் அலுவலகப் பணியைத் தொடர்ந்திருக்கிறார்.

இவரது படைப்புகள் பெரும்பாலும் புத்த சமயப் பார்வையுடன் இயற்கை அழகுகளுக்கு கூடுதல் கவனம் அளிப்பதாகவும், புலன்கள் சார்ந்த மாயைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துபவையாகவும் அமைந்தவை.

*

கவிஞர் பற்றிய குறிப்பு மற்றும் கவிதைகள், 

ஆங்கிலம் வழித் தமிழில்: ராமலக்ஷ்மி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.