மிளகு  அத்தியாயம் முப்பத்தொன்று

ஹொன்னாவர் 1600

நேமிநாதன் பெத்ரோவின் மாளிகையில் இருந்து வெளியே இறங்கும் முன் தெருவில் பரபரப்பு மிகுந்தது. நாலு பேர் இப்படியும் அப்படியும் போனபடி அரசகுமாரர் வாழ்க என ஆரவாரம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். 

ஒரு சாரட் வண்டி அரசாங்கக் கொடி பறக்க அடித்துப் பிடித்துக்கொண்டு ரதவீதியில் உருண்டு விழுந்து விடுவது போல் ஓடி தோப்புப் பக்கம் மறுபடி நேர் பின்னால் திரும்பி ஓட ஆரம்பித்தது. 

நேமிநாதன் வீரப்ப ஷெட்டியாரின் பவனத்தில் அடுத்து கை கூப்பியபடி நுழைந்தான். நமஸ்காரம் என்று அவன் சொல்லியபடியே உள்ளே போக ஷெட்டியாரையோ அவருடைய குடும்பத்தில் யாரையுமோ அங்கே காணோம்.

பவனத்தின் காவலுக்கு இருந்த ஒரு வயோதிகன் பின்னால் இருந்து தள்ளாடி ஓடிவந்தான். ”ஐயா, ராஜாங்க அதிகாரி வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க. மன்னிக்கணும். அல்ப சங்கைக்கு பின்னாடி போய்ட்டு வந்தேன். தண்ணீ கெடைக்காமல் பட்சி குடிக்க வச்சிருந்ததை எடுத்து களுவ வேண்டிப் போச்சு” என்றான். 

நேமிநாதன்  பக்கத்தில் நின்ற அவனுடைய அணுக்கத் தொண்டனை, வீரப்ப ஷெட்டியார் சமணரா என்று கேட்டான். இல்லை மாத்வர் என்றும் சைவர் என்றும் பதில்கள் வர, யாராக இருந்தாலும் பட்சி தாகவிடாய் ஆறத் தண்ணீர் எடுத்து வைக்கிற நல்ல மனுஷர் வாழ்க என்றபடி நேமிநாதன் வெளியேறினான்.  போகும்போது ”இங்கே எதுக்கு கூட்டி வந்தீங்க” என்று தணிந்த குரலில் அணுக்கத் தொண்டர்களைக் கடிந்து கொண்டான்.

”ஷெட்டியார் வடதேசத்துக்கு யாத்திரை போயிருக்கார்னு தெரிஞ்சே ராஜாங்க விஷயம் பேச யார்யாரோ வந்துட்டு போறாங்க” என்று தெருவில் நின்று தொன்னைகளில் காராமணி சுண்டலை மென்று கொண்டிருந்த இரண்டு பேர் கருத்துச் சொல்ல அவர்களை ஓரமாக ஒதுங்கச் சொல்லி நேமிநாதனின் குழு தள்ளியது. 

அந்த இரண்டு பேர் மிட்டாய் அங்காடியின் வாசல் படிக்கட்டுகளில் தலை மோத விழுந்திட, சுண்டல் சிதற, கூக்குரலிட்டுக் கூட்டம் கூட்டும் சூழ்நிலை. நல்ல வேளை, உள்ளே இருந்து யாரோ வெளியே வந்து ஏதோ இனிமையாகப் பேசி கொஞ்சம் இனிப்பும் விலையின்றி நல்கிட, உடனே கலைந்து போனது.

”நீங்கள் போகலாம்” என்று சொல்லியபடி நேமிநாதன் இனிப்பு அங்காடிக்குள் புகுந்தான். வெளிச்சம் தாழ்வாக இருந்த மாடிப் படிக்கட்டுகளில் தாவி ஏறி அவன் முதல் தளத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது ரோகிணி அங்கே காத்திருந்தாள்.  

”ராஜகுமார் வரவில்லை என்று முடிவு செய்திருந்தேன். எத்தனை எத்தனை வேலைகளும் கடமைகளும் காத்திருக்கின்றன தங்களுக்கு. என்னைப் போலவா, சர்க்கரையைக் கொண்டுவா, நெய்யை ஊற்றிக் கிண்டு, தேங்காயைப் போட்டுக் கிளறு என்று தினசரி பொழுது போய் பொழுது வந்தால் நேற்றைய தினத்துக்கும் இன்றைய நாளுக்கும் நாளை என்ற மற்ற நாளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் சில்லுண்டி வேலைப் பளுவா?”

ரோகிணி உதட்டைக் கடித்தபடி நேமிநாதனைப் பார்க்க அவன் அந்த உதடுகளில் அழுத்தமாகக் கடித்து முத்தமிட்டான். 

”இதென்ன ஹொன்னாவர் பழக்கமா அல்லது ஜெருஸோப்பா வழக்கமா? தனியாக இருக்கும் பெண்களை, அதுவும் ஐந்து பத்து வருடம் வயசில் மூத்தவர்களை, ராஜகுமாரர்கள் சந்திக்கும்போது உதட்டைக் கடித்துக் காயப்படுத்துவது தான் புது நடைமுறையா?”

”ரொம்ப நேரமாக் காத்திட்டிருக்கியா?’ என்றபடி அவள் தலையில் முத்தமிட்டான் நேமிநாதன். பின்னால் இருந்து அவளை அணைத்தபடி அவள் சூடியிருந்த அந்த மல்லிகைச் சரங்களில் முகம் புதைத்தான். 

“அப்புறம்?” என்று ரோகிணி கேட்டாள். ”அப்புறம் மேலே போக வேண்டியது தான் கேளிக்கை எல்லாம்” என்றான் நேமிநாதன். 

“அப்படித் தெரியவில்லையே. எதிர்த்திசையில் தானே போக்குவரத்து இருக்கிறது?” என்றபடி அவனுடைய ஊர்ந்து இறங்கும் கைகளை சிருங்கார பாவத்தோடு இடுப்பில் இருந்து விலக்கினாள் ரோகிணி.

முப்பத்தைந்து வயதுக்காரி முப்பது வயது இளைஞனை சிருங்கார வலையில் பரிபூரணமாக மாட்டித் தொங்க விட்டிருந்தாள்.

”அரைமணி நேரத்துக்கு முன்பே நீங்கள் சமண வசதிக்குள்  நுழைந்ததைப் பார்த்தேனே. பாட்டும் ஆட்டமும் அங்கே உங்களைக் கட்டிப் போட்டு விட்டதோ?” ரோகிணி பொய்க் கோபத்தோடு வினவினாள்.

“சமண வசதியில் ஆட்டமா? நான் போய் ஆடினால்தான் உண்டு” நேமிநாதன் அடக்க முடியாமல் சிரித்தான்.

பீங்கான் பாத்திரத்தில் மூடி வைத்திருந்த ஜாங்கிரிகளைக் காட்டி எப்படி உள்ளன என்று விசாரித்தாள் ரோகிணி. “இன்னும் ரெண்டா?” நேமிநாதனிடம் எதிர்பார்த்த பதில் அது. 

”போகட்டும், எனக்கு வாக்குக் கொடுத்ததைச் செய்ய முடிந்ததா ராஜா?”   அவன் என்ன அது என்று குழப்பத்தோடு பார்த்தான். 

”உங்களுக்கு பெத்ரோ அவர்களின் வீட்டு மாடியறையை ஒதுக்கித்தரக் கேட்கச் சொல்லியிருந்தேனே. மறந்து போனீர்களோ? அங்கே இன்னும் சௌகரியமாக வந்திருந்து, இங்கும் அங்குமாக இருந்தும் கிடந்தும் பேசிக் கொள்ளலாம் என்று கோடி காட்டினது புரிந்திருக்குமே.  தனியாகவோ, சிறுத்தைகள் போல் கட்டிப் புரண்டோ படுத்து உருள விசாலமான இடமாச்சே, கேட்டீர்களா?”

”பார்க்கலாம் பெண்ணே”. நேமிநாதன் கவுரவமான பதில் சொன்னான். 

இப்போதைக்கு தனியறை சதுரங்கத்தில் பெத்ரோ தான் ஜெயித்திருக்கிறார். ரோகிணியிடம் இதைச் சொன்னால் நேமிநாதனை போடா புல்லே என்று உதாசீனம் செய்யலாம். அழகான ரதி என்ன செய்தாலும் கோபம் வரமாட்டேனென்கிறது. 

பெட்ரோவிடம் அடுத்த வாரம் இந்தப் பேச்சை மறுபடி எடுப்பான் நேமிநாதன், எடுக்கும்போது பெத்ரோ வீட்டு மாடியறை, கஸாண்ட்ராவோடு கூடக் கிடைத்தால் என்ன நேர்த்தியாக இருக்கும். 

ரோகிணி ஒரு வகை சித்தினி ஜாதி. கஸாண்ட்ரா பதுமினி ஜாடை. இரண்டு பேரும் இன்பந்தருவதில் இரண்டு விதம் என்று நேமிநாதன் சீர்தூக்கிச் சொல்ல கஸாண்ட்ராவையும் அனுபவித்திருக்க வேணும். அது இன்னும் கைகூடவில்லை.

”அடுத்த வாரம் பெத்ரோ சென்ஹோர் அவர்களுக்கு ஆணையிட்டு மாடியறை கைமாறும் வேலையை முடிக்க முடிந்தால் நாம் பிறகு எப்போதும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்கலாம் உங்களுக்கும் மிட்டாய்க்கடை நெய் காய்ச்சும் வாடையும் பால் திரியும் வாடையும் இல்லாமல் போகும். கைப்பிடிச் சுவரை ஒரு செங்கல் நீட்டினால் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் போக வர சௌகரியம். இன்னும் எத்தனை பிரயோஜனம்? பட்டியல் போட்டால் இதமான, வெறியுடனான கற்பனை எல்லாம் மனதிலிருந்து கொட்டும்” என்றாள் சிரித்தபடி. ஊம் என்று முனகினான் நேமிநாதன்.

”சரி எப்படியும் அடுத்த வாரம்” என்றபடி அவன் கரத்தை தன் முதுகில் வைத்து கச்சை தளர வழிகாட்டினாள். ஒரு ஜாங்கிரியை வாயிலிட்டுக் கடித்து விண்டாள். பெரிய பகுதியை அவனிடம் கொடுத்தாள்.

”இன்றைக்கு பகலில் மாவு அரைத்தெடுத்து ஒரு மணி நேரம் முன்பு பிழிந்து பொரித்த ஜாங்கிரிகள் இவை. இன்னும் இரண்டு எடுத்து வைத்திருக்கிறேன்”.

”இதுவே பெரிது. இன்னும் ரெண்டு  சாப்பிட  வயிறு நிறைந்து விடுமே?” 

அவன் ரோகிணியின் காது மடலைக் கடித்தபடி இருந்தான். ”வா, சற்று இளைப்பாறலாம்” என்றான் உள்ளே தனியறையாகப் பூட்டி வைத்திருந்த இடத்தைக் காட்டி. 

ரோகிணி இடுப்பில் இருந்து சாவியை எடுத்து அந்த அறையைத் திறந்தபடி பின்னால் திரும்பி அவன் மனதைக் குழைய வைக்கும் ஏக்கப் பார்வையை வீசிச் சிருங்காரம் சிதறினாள். ரோகிணியின் இடுப்பில் கைகொடுத்து வளைத்துக் கோர்த்தபடி அறைப் பக்கம் அவளை இழுத்துக் கொண்டு நடந்தான் நேமிநாதன்.

”ரெண்டு ஜாங்கிரி அதிகம் சாப்பிட வயிறு நிறைந்து விடுமே என்கிறீர்கள். இந்த அறைக்கு தினம் வந்தால் நானும் அதேதான் சொல்ல வேண்டி வரும்”   

”அப்படியா அதற்குள் சூல் பிடித்து விட்டதா?” கத்தரிக்காய் காய்த்திருக்கிறதா என்று சுபாவமாகக் கேட்பது போல் கேட்டான் நேமிநாதன்.

”ஆம் என்றால் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் ரோகிணி.

அந்த விஷயத்தில் நான் கறார் என்றான் நேமிநாதன் பெரிய நகைச்சுவையைச் சொன்னமாதிரி சிரித்துக் கொண்டு.

”பைத்தியநாத வைத்தியரிடம் சொல்லிக் கலைத்துப் போட வேண்டியதுதான். அவர் பெண்டாட்டி மிங்குவிடம் சொல்லி பப்பாளிப்பழம் உனக்கு அனுப்பி வைக்கச் சொல்லட்டா? மிங்குவே நடமாடும் பப்பாளி”. 

மிங்குவை ஒரு முழு நிமிடம் அவன் மனதில் ரசிக்க, ரோகிணி அவன் முதுகில் சுளீரென அடித்தாள். அது சிருங்கார விளையாட்டு இல்லை.

 ரோகிணியின் முகம் அவனுக்குப் பின்னால் வன்மம் கொண்டு வற்றியதுபோல் கோபமும் வெறுப்பும் கூடி நிற்க அவள் கண்களின் தீவிரம் அவனைச் சுட்டுப் போடும் என்று சொல்லிக் கொண்டிருந்தது. ரோகிணி எனினும் ஒரு நிமிடத்தில் இயல்புக்கு வந்தாள். நேமிநாதனின் காமக்கிழத்தி வேடத்தை இன்னொரு முறை சத்தம் போடாமல் அணிந்து கொண்டாள் அவள்.  

“வியர்வையும் வெப்பம் அதிகரித்ததும் அப்பாடா என்று சாய்ந்து உட்கார்ந்து பேச தடை செய்கின்றன. மேல் துணியை எடுத்து விடு” என்று வெகு சாதாரணமாகச் சொன்னான் நேமிநாதன்.  ’ஆமாடா, அதுக்குத்தானே பனாஜியிலே இருந்து வந்திருக்கேன்’ என்று ரோகிணி முகம் மீண்டும் ஒரு முறை ரௌத்ர பாவம் காட்டி சமநிலைக்கு மீண்டது. 

அதைக் காணாமல் அவன் இருக்கக் கச்சு நழுவவிட்டு அவன் முகத்தைப் பற்றி இழுத்துப் பரந்த மாரிடத்தில் புதைத்தாள் ரோகிணி. சந்தன வாடை முகர்ந்தபடி நேமிநாதன் கண் மூடிய கணத்தில் அறை வாசலில் யாரோ வந்து நின்று பார்த்து அவசரமாகக் கடந்து போகிறது மனதில் பட்டது. யார் அது? 

அவன் தலையை நிமிர்த்த முடியாமல் ரோகிணி தன் கரங்களால் அவனைச் சிசு போல் அங்கேயே இருத்தியபடி காமத்தில் முனகினாள். இல்லை, அவனுக்கு யார் வந்தது என்று தெரிய வேண்டும். அவள் கையை விலக்கி எழப் பார்த்தான். ரோகிணி நெருங்க அணைத்துப் படுக்கையில் அவனைத் தள்ள வேறேதும் நினைவில் முன்னில்லை. அவன் முயங்கும்போது கண்ணின் மேல் பட்டையாக ஏதோ தரித்து மணிக்கட்டையில் இன்னொரு சிறு பட்டையாக தாயத்து அணிந்து தலை முடியை ஏதோ கோரமாகச் சிங்காரம் பண்ணிய ஒருத்தன் மனதின் ஓரத்தில் எட்டிப் பார்த்தான். அவனை எங்கே பார்த்தான் இதற்கு முன்? 

நினைவு வந்து விட்டது. சிவராத்திரி இரவில் ரோகிணியோடு மிட்டாய் அங்காடிக்கு மகாபலேஷ்வரர் கோவிலில் இருந்து கூட நடந்து வந்தவன் இல்லையோ இந்த வர்ணக் கோமாளி? இனிப்பு அங்காடியில் புளியன்னம் அறிமுகப் படுத்தியபோது கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தவர்களை அதிகாரம் செய்தபடி அவன் நின்றது மெல்லிய நினைவாகத் தேங்கி இருந்தது. 

கடை ஊழியன் என்றால் கடையோடு வைத்துக் கொள்ளணும். கடை வைத்த பெண்ணின் படுக்கை அறையில் ஏன் எட்டிப் பார்க்கணும்?

ஆடி அடங்கி அவளோடு சுருண்டு கிடக்கும்போது நேமிநாதனுக்கு இன்றைக்கு ஒரு கடமைக்காக அடுத்தாற்போல் நஞ்சுண்டையா பிரதானி வீட்டுக்கு அவரைச் சந்திக்கப் போக வேண்டும் என்று மனதில் பட்டது.

 நேமிநாதன் தேர்ந்தெடுத்த கொங்கணி கவிதைகளை போர்த்துகீஸ் மொழியில் மொழியாக்கம் செய்ய நஞ்சுண்டையா உதவுகிறார். வாரம் இரு முறை ஜெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவர் வந்து தங்கியிருந்து மொழிபெயர்ப்பு முன்னால் நகர்வதைப் பார்வையிட்டுப் போகிறான் நேமிநாதன்.  

ஆக, முதலில் கவிதைகளை கொங்கணியில் தேட வேண்டியுள்ளது. அல்லது   எழுத வேண்டியிருக்கிறது. நாலைந்து எழுதிவிட்டு மறுபடி மறுபடி குயில், தும்பைப் பூ, மாரிடம் பெருத்த ஊர்வசிகள், ரம்பைகள் என்று எழுதி அலுத்து விடவே, இதையே இன்னும் புதுப் பார்வையாக அங்கே இங்கே மாற்றி எழுத கவிஞர்கள் கோரப்பட்டார்கள். ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேலாக மயில் கழுத்துப் பெண்கள் சாகாவரம் பெற்றுக் கவிதைகளில் ஜீவிக்க, கவிஞர்களின் கற்பனை வற்றாததும், போஷகர்கள் கிடைப்பதும் நிகழ்ந்தன. 

எப்படியோ நஞ்சுண்டையாவுக்கும் நேமிநாதனுக்கும் ஒவ்வொரு மாதமும் ஐநூறு கவிதை யார்யாரோ எழுதியது சேர்ந்து விடுகிறது. ஒரு வராகனும் ஒண்ணரை வராகனுமாக அவற்றுக்குச் சன்மானம் கொடுக்கப் படுகிறது – ”நல்லாயில்லேன்னா நல்லாயில்லே தான். எழுதி பழகிட்டு வாங்க. நல்லா இருந்தா பரிசு உண்டு”- 

கறாரான விமர்சகர்களாக அவற்றை மதிப்பீடு செய்து கவிதைகளை வடிகட்டுவதும் கூடவே நடக்கிறது. 

இந்த கலாசார பரிமாற்றத்தை போர்த்துகல்லில் பாதிரியார்கள் கண்டிக்கிறதாகவும், கொங்கணியை அவர்கள்  உத்தேசித்திருப்பதாகவும் லிஸ்பனிலிருந்து வரும் வதந்திகள் தெரிவிப்பதாக நஞ்சுண்டய்யா பிரதானி நேமிநாதனிடம் சொல்லியிருக்கிறார். எது எப்படியோ, கொங்கணக் கொங்கைகள் இப்போதைக்கு லிஸ்பனில் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.

ரோகிணியோடு உடல் கலந்திருந்த ராத்திரிகளில் அன்பே நீ என்று இரண்டு வரி மடக்கி எழுதினால் கூட படிக்க சுவையாக இருக்கிறது நேமிநாதனுக்கு. அந்தக் கவிதைகளை போர்ச்சுகீஸில் மொழிபெயர்த்து அனுப்பி அப்பாவி போர்ச்சுகீசியர்கள் மேல் சிருங்கார ஆக்கிரமிப்பு நடத்த அவனுக்குப் பிடித்திருக்கிறது. 

வார இறுதியில் கவிதை,  நஞ்சுண்டையா வீட்டு மிளகுப் பொங்கல், ரோகிணி என்று மனம் சுவாரசியமான கலவையாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது.

”ராஜகுமாரரே, ஸ்னானம் செய்து வருகிறீர்களா? பிரதானி உங்களை எதிர்பார்த்திருப்பார். நடு ராத்திரிக்கா அவரைச் சந்திக்கப் போகப் போகிறீர்?”

முதல் தளத்திலேயே சயன அறையும் குளியல் அறையும் அமைத்து இனிப்புக்கடைக் கட்டிடத்தை ரோகிணி கட்டி இருக்கிறாள், முக்கியமாக இந்த மாதிரி நேரங்களுக்காக.

 ரோகிணி அவன் உதடுகளுக்கு நன்றி தெரிவித்து எச்சில்படுத்தி எழுந்து அமர வைத்தாள். நேமிநாதன் எழுந்து உட்கார்ந்தபோது அந்த வினோதமான மனுஷர் மறுபடி மனதில் தட்டுப்பட ஆரம்பித்தார். அவளிடம் அதைச் சொல்லவும் சொன்னான். பயமுறுத்தும் விதமாக அன்றி நகைச்சுவையாகச் சொல்வதாக. 

“பாரேன் ரோகிணி, நம் கூடலை மேற்பார்வையிட வேறு கிரகத்தில் இருந்தெல்லாம் நபர்கள் வந்து போகிறார்கள் போலிருக்கு. யாராக இருக்கும்? இனிப்பு செய்கிற மடையர்கள் யாரெல்லாம் நியமிக்கப்பட்டார்களோ அவர்களை எல்லாம் நாளைக்காலை என்னை வந்து பார்க்கச் சொன்னால் என்ன? நானும் யார்யார் நான் புழங்கும் இடங்களில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள எளிதாக இருக்கும்”. 

”ஓ அரசரே, நீங்கள் புழங்கும் இடம் எல்லாம் நீங்கள் திரும்பப் போனதும் பத்திரமாக துணிகட்டி மூடி இருக்கும். வேறே யாரும் அங்கெல்லாம் புழங்க அனுமதி இல்லை. அந்தக் கோமாளி போல் தோற்றமளிக்கும் நபர் நாலைந்து மாதமாக ஜெருஸுப்பா கடையில் தான் மடையராக இருக்கார். அங்கே இருப்பதைவிட இங்கே ஹொன்னாவரில் இருப்பதைத்தான் விரும்புகிறவர் என்பதாலும். ஹொன்னாவரிலும் புத்தம்புதிய இனிப்புகள் இங்கேயே தயாரித்து உடனே உண்ணக் கிடைக்க வேண்டும் என்பதாலும் அந்த மடையர் பெரும்பாலும் இந்த ஹொன்னாவர் கடையில் தான் வேலை பார்க்கிறார்; தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பதால் நீங்கள் பார்த்திருக்க முடியாது தான். கொஞ்சம் புத்தி சுவாதீனமில்லாத மனுஷர். கண்ணில் பட்டை கண்ணாடி, தலை மயிரை அங்கங்கே பிடுங்கிக் கொள்வது, கால் சராயை கோமாளி போல தரிப்பது என்று அவருக்கே சில கோணல்கள். அதை பெரிய விஷயமாக மதிக்கக் கூடாது. அருமையான இனிப்பு செய்யும் மடையர் அவர். ஜயவிஜயீபவ அவருடைய முத்திரை இனிப்பு”. 

ரோகிணி நிஜமாகவே கரிசனத்தோடு சொன்னாள். நேமிநாதன் அவளை அணைத்த கைகளை இறுக்கியபடி கிடந்தான்.

ரோகிணி அவன் தோளைப் பற்றித் தன்மேல் கவிழ்த்துக் கொண்டு காதைக் கடித்து முனகினாள். இருந்தாலும் அந்த விநோத உடுப்பு மனுஷர். நாளைக் காலையில் கடைக்குள் எட்டிப் பார்த்து விட்டு அவர் யார் என்று நிச்சயம் செய்துகொண்டு விடலாம் என்று நேமிக்குத் தோன்றியது. அவர் மடையராக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ரோகிணியின் சயன அறை வாசலுக்கு வந்து நின்று பார்த்துப் போனார் என்றால் அவரைப் பற்றி மேலும் தெரிய வேண்டும்.

ஜெருஸோப்பா இனிப்பு அங்காடியின் அடுத்த கடையாக வியாபாரம் விருத்தியாகத் திட்டமிட்டு ஹொன்னாவரில் அமைக்க இடம் பார்த்தவள் ரோகிணி தான். 

ரோகிணியை முப்பது கல் பிரயாணம் செய்து ஹொன்னாவரில் கண்டு இருந்து சுகிப்பது அவளோடு ஜெருஸப்பாவில் இன்பம் அனுபவிப்பதை விட எளிமையானதாக அவளும் நேமிநாதனும் உணர்ந்திருக்கிறார்கள். மூன்றாண்டு பந்தம் இது. ஜெருஸப்பா துறைமுக வீதியில் நகைக் கடைகளை அடுத்து ரோகிணி இனிப்பு அங்காடி திறந்து விஜயநகர  புதுத் தலைநகர் பெனுகொண்டாவில் அறிமுகமான புது இனிப்புகளை இங்கும் அறிமுகப்படுத்தியிருந்தாள் ரோகிணி. 

நேமிநாதனுடைய நண்பர்கள் இனிப்பு தின்று அவனிடம் சொன்னது – இனிப்பை விட பார்க்கவே இனிக்கிறாள் அந்தக் கடைக்காரி. கடன்காரி. உனக்கு பிடிக்காமல் போகாது. ருசித்துப் பார்.

போனான். பார்த்தான். பிடித்துத்தான் போனது.

ரஞ்சனாதேவி வருடத்தில் மூன்று மாதம் உடுப்பியில் பெற்றோரோடு இருப்பது சௌகரியமாகப் போனது நேமிநாதனுக்கு. ரஞ்சனா தேவியின் காதில் ரோகிணி பற்றிய செய்தியும், மனதில் அவளுடைய உருவமும் ஏறி அமர, அவள் உடுப்பியில் இருந்து ஜெருஸப்பா உடனே வந்து அரண்மனைக்குக் கூடப் போகாமல் ரோகிணியின் இனிப்பு அங்காடிக்குப் போய்விட்டாள். ஆனால் அவள் அந்தஸ்துக்கு சண்டை எல்லாம் போடமுடியாது என்பதால், ரஞ்சனா ரோகிணியிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு வந்தாள் – ”நேமிநாதன் அரசராக வர இருப்பவர். ரோகிணியோடு கலையும் இலக்கியமும் மட்டும்  விவாதிக்க நட்பு இருந்தால் தொடரட்டும். இல்லை என்றால் இனிப்பு அங்காடி  வேறு ராஜதானி எதாவது தேடிப் போகட்டும். புது இனிப்புகள் தின்னாவிட்டால் யாரும் இதயம் வெடித்துச் சாகப் போகிறவர்கள் இல்லை. மேலும் உலகில் வேறு இனிப்புக் கடையே இல்லையா என்ன?”

அதற்கு அப்புறம் தான் நேமிநாதனின் யோசனைப்படி ஹொன்னாவரில் இனிப்புக் கிளை. போர்த்துகீஸில் கவிதை மொழிபெயர்ப்பு. 

இதோ நஞ்சுண்டையா காத்திருக்கிறார் தர்மசங்கடத்தோடு. தினம் என்ன மொழிபெயர்க்கப்பட்டது, என்ன பேசப்பட்டது என்பது ராணியம்மாவுக்குத் தெரியப்படுத்தாவிட்டாலும் தகவல்கள் கேட்கப்பட்டால் உடனே தரும் விதத்தில் அவர் வைத்திருக்க வேண்டும். 

இந்தக் கவிதைச் சனியன் இல்லையென்று யார் அழுதார்கள்? நஞ்சுண்டையா அறுபது வயதை நெருங்கும் நேரத்தில் முலைகளைப் பற்றி போர்த்துகீசியர்களை உடுப்பு நனைக்க வழிசெய்ய வேண்டுமா? 

வந்து விட்டான் காலன் நேமிநாதன். இன்னும் இரண்டு மணி நேரம் அவரை குரங்காட்டி மாதிரி ஆட்டி வைக்கப் போகிறான். வந்தாச்சு. 

இந்த இரண்டு நாளும் வீட்டில் வரலட்சுமி நோன்பு என்பதால் மாடியில் இந்த அறை தவிரப் பெண்டுகள் ஆக்கிரமித்து மஞ்சளும், சந்தனமும், தேங்காயும் குங்குமமுமாக வீடே  துர்க்கை கோவில் மாதிரி ஆனது. கிடைத்த கவிதை எதையும் படிக்க முடியாமல் போனது என்றார் நஞ்சுண்டையா இவன் தலை தெரிந்ததுமே. ஒரு விதத்தில் நேமிநாதனுக்கும் இதமான பதில்தான் அது. 

’கவிதை கிடக்கட்டும். இன்னொரு தடவை ரோகிணியை தீர்க்கமாக வாசித்து விடலாம். ஒரு தடவை மட்டும் என்ன? உடம்பு ஒத்துழைக்க இன்னும் கூட’ 

அவன் முகத்தில் புன்முறுவல் அரும்ப, நஞ்சுண்டய்யா நினைத்துக் கொண்டது பிரதானி இன்றைக்கு வேலை பார்க்க வேண்டாம் என்று தள்ளிப்போடுகிறார் என்று நேமிநாதனுக்குப் பட்டிருக்கும். 

எதற்கு வம்பு, ராணியம்மாவின் தத்து புத்திரன். இன்றைக்கு குடமிளகாய் போல் பெரிய பிரயோஜனமில்லாமல் இருந்தாலும் நாளை மிளகாவான், பச்சை மிளகாயாவான். மூப்பு வர மூப்பு வர மதிப்பு அதிகமாகும். அவன் அப்போது நஞ்சுண்டையாவுக்கு என்ன வேண்டுமானாலும் உதவுவான். 

நஞ்சுண்டையா அலமாரியில் இருந்து போனமாதம் திருத்திய பிரதிகளை எடுத்து வெளியே வைத்தார். போன வாரம் முடிவு செய்த மொழிபெயர்ப்பில் நூற்று முப்பத்தேழு கொங்கணிக் கவிதைகள் உண்டு. ஒவ்வொன்றாகப் படிக்கலாமா? நேமிநாதனுக்கு வேறு வழியில்லை. கட்டாயத்தின் பேரில் கவிதை வாசிக்கும் நேரம். 

ஏழெட்டு கவிதை வழக்கமான குயில், தோப்பு, கடற்கரை, நண்டு, நாரை என்று நகர, கடற்கரைப் பட்டணமான மால்பேயிலிருந்து இதை எழுதி எடுத்து வந்த வயதான கவிஞர் பெற்றுப்போன பொற்காசுகளை அரிசி வாங்கிச் செலவழித்திருப்பார் இந்நேரம். அவர் உண்டு விட்டு அடுத்த கவிதையை எழுதத் தொடங்கி இருப்பார். நேமிநாதனோ விருந்துக்குக் காத்திருக்கிறான். 

”பிரதானியார் ராத்திரிக்கு உண்டாகி விட்டதா?” அவன் கேட்க பதறி எழுந்து நஞ்சுண்டையா  சொன்னார் – 

“ராஜகுமாரரே, நீங்கள் வரும் நாளில் உங்களை விட்டுவிட்டு விருந்துண்ண முடியுமா என்ன? மனம் தான் கேட்குமா?” 

ரோகிணி என்ன செய்து கொண்டிருப்பாள்? ஒரு விருந்து உண்ணப்படக் காத்திருக்கும். எங்கே தொடங்கி உண்ணலாம்?

”இன்றைக்கு சைவ உணவு. நோன்பு இன்று காலையில் தான் முடிந்ததால் ராத்திரிக்கு வெங்காயம் சேர்ப்பது விரத பங்கமாக்கி விடும்”. பிரதானி சொன்னார்.  “என்ன இருந்தாலும் சுத்த சைவ உணவின் சுவையும் மணமும் வெங்காயமும் பூண்டும் சேர்த்த உணவுக்கு வருமா?” பிரதானி கேட்டபடியே கூட வந்தார்.

படி இறங்கி வரும்போது மேற்கு திசைக் கட்டிடமான இனிப்பு அங்காடியைப் பார்த்தான் நேமிநாதன். விளக்குகள் கிட்டத்தட்ட எல்லாம் சுடர் பெருக வைத்து இருட்டில் இருந்தது இனிப்பு அங்காடி. நேமிநாதன் மெல்ல நஞ்சுண்டர் பின் நடந்தபடி சொன்னான் – 

“ஆமாம் உண்மைதான் பிரதானியவரே. சைவ உணவின் ருசி மற்றதுக்கு வருமா. இன்றைக்கு என்ன பிரசாதம் எடுத்து வைத்திருக்கிறார்கள் சகோதரியவர்கள்?” தன் மனைவியை நேமிநாதன் சகோதரி என்று குறிப்பிட்டது நஞ்சுண்டய்யாவுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. எல்லா உறவுகளும் அழைப்புகளும் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படலாம். 

இன்றைக்கு என்ன உணவு? பரிமாற வந்து நின்ற வரிசையாக ஏழு பணியாளர்களை அடுத்து மெல்ல நடந்து வந்த நஞ்சுண்டையாவின் மனைவி ஹொன்னம்மா முகம் முழுக்கப் பெரிய சிரிப்பை உற்பத்தி செய்து ஒட்டிச் சிரித்தாள். ராஜகுமாரர் வீட்டுக்கு விருந்தாட வருவது தொடங்கிய புதிதில் பெருமை கொள்ள வேண்டிய பரபரப்பான நிகழ்வாகத் தெரிந்து இத்தனை நாட்களில் புதுமையும் அருமையும் நீர்த்துப் போயிருக்கலாம். 

ஏழு பரிசாரகர்கள் இல்லாமல் அவளே ஓடி ஓடிப் பரமாறி பார்த்துப் பார்த்து கரண்டி கரண்டியாக வட்டித்தும் இலையில் இதமாக ஊற்றியும் மரியாதை செய்தது பணியாளர்கள் பரிமாறுவதை கார்வார் செய்வதோடு முடிந்துவிடுமாக இருக்கும். நேமிநாதனுக்கு ஒண்ணும் குறைவில்லை. 

நல்ல சாப்பாட்டை யார் சமைத்தால் என்ன? யார் பரிமாறினால் என்ன? உண்டு விட்டு இன்னும் ஒரு மணி நேரம் மொழிபெயர்ப்பு ஒப்பு நோக்குவதாகப் பெயர் பண்ணிக் கிளம்பினால் ராத்திரி பதினோறு மணிக்கு ரோகிணியின் பாதங்களை முத்தமிட்டுத் சிரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். 

தந்தசுத்தி செய்யவேண்டும். கையில் சஞ்சியில் உமிக்கரியும் வேம்புக் குச்சியும் கொண்டு வந்திருக்கிறான். நஞ்சுண்டய்யா கண்ணில் பட்டால் விநோதமாக நோக்குவாராக இருக்கும். உண்டதும் பல் விளக்கும் நல்ல பழக்கத்தை ஐரோப்பியரிடம் கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் போதும். எதற்கு உண்மை விளம்ப வேண்டும்?

அருமையான உணவு. அதெல்லாம் உடுப்பியில் தன் பிறந்த வீட்டுச் சமையல்முறைப்படி சமைக்கப்பட்டது என்று நான்கு முறை நஞ்சுண்டரின் மனைவி ஹொன்னம்மா சொல்லி விட்டாள். நேமிநாதனும் உடுப்பி உப்பிட்டுவையும், பாயசத்தையும், உப்பு-புளி-காரத் தோசையையும் நினைவு கூர்ந்து அந்தவகை உணவின் சுவையே சுவை என்று சொன்னான். 

நஞ்சுண்டய்யாவின் மனைவி ஹொன்னம்மா வழிகாட்ட நஞ்சுண்டரே சமைத்தாலும் உணவு பரமானந்தமாக உருவாகி விடுமே. இலையில் பரிமாறிய உப்பைக்கூட அதன்   உடுப்பி வெண்மைக்காகப் பாராட்ட, ஹொன்னம்மா மண்டப கூரைக்குப் பறந்துபோய் விட்டிருந்தாள்.

இனிப்பு சாப்பிடுங்கள். அவள் கீழே வந்து வற்புறுத்தினாள். 

“பக்கத்தில் பெயர் பெற்ற இனிப்பு அங்காடி இருப்பதால் அங்கே வாங்கிய கடை இனிப்புகள் தானே இங்கே   இடம் பெறும் என்று இந்த விருந்தில் இனிப்பை உண்ணாமல் ஒதுக்கிவிட வேண்டாம் என் அன்பு இளைய ராஜபுத்திரர். வங்காள முறைப்படி ரஸகுல்லா செய்திருக்கிறேன். உண்டு பார்த்து சொல்லும்படி பிரார்த்திக்கிறேன்” என்றாள் நஞ்சுண்டரின் மனைவி ஹொன்னம்மா.  

அருமையான இனிப்பு. ரோகிணி செய்வாளா என்று தெரியவில்லை. ராத்திரி வயிறு நிறைந்திருக்க நஞ்சுண்டரிடமும் அவர் மனைவியிடமும் விடை பெற்று   சாரட்டை அவர் வீட்டு வாசலில் இருக்குமாறு நிறுத்திவிட்டு, ஓரத்தில் தென்பட்ட கோணிப்படிகள் ஏறி இனிப்பு அங்காடி மாடிக்குப் போக, ரோகிணி.

அவனுக்கு உறக்கம் வந்தது.

***

Series Navigation<< மிளகு  அத்தியாயம் முப்பது  மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.