பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள்

தமிழாக்கம் : மைத்ரேயன்

அவரால் இன்னும் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஸாஷா அவருடைய பயிற்சி அறையில் இருக்கிறாள். ஸாஷா சொன்னது, “வாவ்.”

அவர் அந்த வார்த்தையைக் கேட்கையில் அது ஒரு இசைச் சுரம் போலிருக்கிறது. அதாவது, “வாவ்” என்ற சொல்லின் தொனிக்கு அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது. மறுசந்திப்பாலும், இந்த வாய்ப்பாலும் எழும் உணர்ச்சிகளையும், காலம் கடந்ததால் கிட்டும் மனத்துன்பத்தையும் ஒருங்கே கைப்பற்றுகிறது.

“எப்படி இருக்கே, ஆல்பெர்ட் ?” என்று கேட்கிற ஸாஷாவின் பார்வையில் அன்பும், ஈடுபாடும் தெரிகிறது. 

“ஃபைன்.” பிறகு அதை விட மேலான சொல் அவனுக்குத் தோன்றுகிறது. “நல்லா இருக்கேன். நீ?நீ எப்படி இருக்கே?”

“ஓ, உனக்குத் தெரியுமே. நாளெல்லாம் நீளமா இருக்கு, ஆனால் வருஷங்களெல்லாம் பறந்து போயிடுது.” ஏதோ எல்லாரும் இப்படித்தான் காலப் போக்கை உணர்கிறார்கள் என்பது போல அனாயாசமாக, அர்த்தமில்லாமல் அவள் பதில் சொல்வது அவருக்கு எரிச்சலூட்டுகிறது. அவருடைய அனுபவம் அப்படி இருக்கவில்லை. எனவே அந்தச் சிறு மறுப்பு எண்ணத்தோடு, அவளை மேலும் தெளிவாகப் பார்ப்பதில் தன்னை ஈடுபடுத்துகிறார்.

அவளுடைய முடி மாறியிருக்கிறது. அதன் காந்திக்கு ஏதோ செய்யப்பட்டிருக்கிறது. அது இப்போது பளபளப்பாக, பட்டுப்போல வழ வழப்பாகத் தெரிகிறது, அவளுடைய தாடைக்கும், தோள்களுக்கும் இடையில் கருக்காகக் கத்திரிக்கப்பட்டுத் தொங்குகிறது. அவள் மேல்சட்டை பட்டுத் துணிபோல இருக்கிறது, கால்சராய்க்குள் நுழைக்கப்பட்டுள்ளது. அவள் முன்போலக் குச்சியாக இல்லை, ஆனால் இன்னும் மெலிவாகத்தான் தெரிகிறாள். அவளுடைய இடை பூரித்திருக்கிறது, சட்டை கால்சராயுக்குள் நுழையுமிடத்தில் பிள்ளைப்பேறுடைய சுவடாகச் சிறு மேடு இருக்கிறது. கழுத்தில் சிறு தங்கச் சங்கிலி. அதில் திறந்த இதயத்தின் வடிவில் ஒரு பதக்கம்,, அவளுடைய கழுத்தெலும்புக் குழியருகே தொங்கியது. நகைகள் அவருக்கு ஒருபோதும் புரிவதில்லை, இதுவும் அவரைக் குழப்பியது. ஓர் இதயத்தை எதற்காக அணிய வேண்டும்? ஜன்னல் வழியே வந்த மாலை ஒளியில் சாயப் பூச்சு பூசிய அவளுடைய கன்னத்தின் வளைவை அவரால் பார்க்க முடிந்தது. அவளுடைய புருவங்களில் அடர் சிவப்பு நிறத்தில் சிறு சாயப் பென்சில் கோடுகள் தெரிந்தன. அவளுக்கு வயது இருபத்தி ஒன்று இல்லை, நாற்பத்தி மூன்று. அவரை அவள் ஒரு முறை துரிதமாக அணைத்துக் கொண்டபோது, அவரால் அவளுடைய வாசனைத் திரவியத்தின் ரோஜாவும், காடியின் புளிப்பும் கலந்த வாடையை முகர முடிந்தது.

அவருடைய பார்வையை அறிந்தவள் போல, அவளுடைய கை மேலே போய், தலைமுடியைத் தொட்டுப் பார்க்கிறது. அவள் தன் நிலை தவறும்போது தரிக்கும் புன்னகையைத் தவழ விடுகிறாள், கோரைப்பற்கள் தெரிகின்றன, அவள் மூக்கு இன்னமும் அந்தச் சிறு கொக்கியைக் காட்டுகிறது. அவளுடைய கைநகங்கள் வியப்பு தரும் நிறம் பூசப்பட்டுள்ளன, துருவின் நிறம்.

“நீ இப்ப வாசிக்கிறதில்லை போல,” அவர் சொல்கிறார், அந்த நகங்களைப் பார்த்தவண்ணம்.

“ஓ, இல்லை. அப்பலேர்ந்தே- எத்தனையோ காலமாச்சு. யாருக்கு நேரம் இருக்கு.” அப்போது தீர்மானமான வேகத்தோடு, திடீரென்று சொல்கிறாள். “ஆனால் உன்னைப் பார்! நீ இன்னும் விடாம அதைச் செய்யறே! அதைக் கேட்டப்போ எனக்கு அத்தனை சந்தோஷமா இருந்தது. அபாரம்! கெட்டிக்காரன்! வாழ்த்துகள்!”

“என்ன சொல்றே நீ?” அவருக்கு அவள் சொல்வது எதைப் பற்றி என்று புரியவில்லை.

“ஓ, வெகுளி மாதிரி நடிக்காதே, திருவாளர் வான் க்ளைபர்ன் விருதுக்காரா!”

“பரிசு கிடைக்கல்லை. தாமிரப் பதக்கம்தான்.” அவர் ஜன்னலை நோக்கிப் போய், திரையைத் திறக்கும் நாடாக்களை கச்சிதமாக இழுத்து, ஜன்னல் திரைத் தடுக்குகளை சரியாக இணையாகத் தொங்கச் செய்கிறார். “அது என்ன பத்தொன்பது வருஷங்கள் முன்னாடியில்லையா, 1999 லெ,” சரியான தகவல்களைக் கொடுப்பதில் கவனமாகச் சொல்கிறார்.

“தாமிரமா! அதுவுமே பெரிசுதான்! அற்புதமான விஷயம்! மத்த எங்களை எல்லாம் பாரு. நாங்க என்ன செஞ்சிருக்கோம்?”

ஒரு கணம், அவர் தன் முதுகைக் காட்டியபடியே இருக்கிறார். ஸாஷாவின் உற்சாகத்தில் ஏதோ பொய்யாகவும், முறைப்படி நடப்பதில் விருப்பமுள்ளவளாகவும் இருப்பதாக உணர்கிறார்.  அவளிடம் அதைக் குறையாக அவர் காணவில்லை. அந்தப் போட்டி, அதற்குப் பின் விளைவுகள் போன்றவற்றைப் பற்றித் திரும்ப யோசிப்பதை அவர் தன்னளவில் விரும்புவதில்லை. அந்த முதல் வருடத்துப் புயல் வேக பயணச் சுற்று: பல நாடுகளில் கச்சேரிக்கான முன்பதிவுகள். அவர் வாசித்த அந்த முதலும் கடைசியுமான ஒலிப்பதிவு, ஈ.எம்.ஐ நிறுவனம் வெளியிட்ட ப்ராம்ஸின் தொகுப்புகள், தலைப்பு: சிரத்தை. (அவருக்கு அந்தத் தலைப்பு என்றுமே பிடித்ததில்லை. அது நிஜமாக என்னவாக இருந்ததோ அதையே தலைப்பாக வைத்திருக்கவே அவர் விரும்பினார், அதாவது, பியானோவில் தனி வாசிப்புக்காக ப்ராம்ஸின் சாஹித்தியங்கள் என்று. ஆனால் அந்த இசைத் தட்டின் தயாரிப்பாளர் ஒரு தலைப்பு என்பது வெறும் விவரணை இல்லை, சந்தையில் விற்பதற்கான வாய்ப்பை உருவாக்குவது என்று சொல்லிவிட்டார்.) பிறகு என்ன? 2003 இல் அடுத்த போட்டியில் இன்னொரு ஜதை பரிசு வென்றவர்கள். அதற்கு நான்கு வருடங்கள் கழித்து, இன்னொரு ஜதை பரிசு வென்றவர்கள். அவர்கள் எல்லாருக்கும் என்ன ஆயிற்று- அத்தனை பேருக்கும்? சில பத்தாண்டுகளில், ஒருக்கால் ஒருவரோ இருவரோ மட்டுமே – பார்வையிழந்த அந்த ஆர்ஜெண்டினியர், உயர்ந்த குதிகாலணியும், மினிஸ்கர்ட்டும் அணிந்த அந்த சீனப் பெண்மணி- பெரும் அரங்குகளில் இன்னும் வாசிக்கிறார்கள், புகழ்பெற்ற இசைக்குழுக்களோடு நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள், புது ஒலிப்பதிவுகளைச் செய்கிறார்கள்.

தனக்குப் பெரிதாக ஒளியூட்டப்பட்ட ஒரு தொழில் வாழ்க்கை வேண்டுமென்று அவர் விரும்பவில்லை. ஆனால் போதனையாளராக ஆகவும் அவர் விரும்பவில்லை. மோசமான சில நாட்களில், தன் மாணவர்களின் வாசிப்பொலியைக் கேட்டு அவருக்கு கடும் துன்பம் எழும். தாளகதியை எத்தனை அலட்சியமாக அவர்கள் புறக்கணிக்கிறார்கள். சாஹித்தியகர்த்தாவின் நோக்கங்களை எத்தனை எளிதாக அவர்கள் அலட்சியம் செய்கிறார்கள்.

வெளியே நாற்சதுக்கத்தை ஜன்னல் வழியே பார்த்து நிற்கிறார். அவ்வப்போது, முதுகில் பையோடு ஒரு மாணவர் கண்ணில் தென்பட்டு மறைகிறார். அப்போது ஸாஷா சொல்வது கேட்கிறது, இறுகலான, கட்டுப்பாடான குரலில் அவள் சொல்கிறாள், “அலீஸா, தயவு செய். சும்மா. உட்கார்.”

அலீஸா. ஸாஷாவின் மகள். உண்மையில், அவளை அவர் முழுதும் மறந்து விட்டார். பியானோ பெஞ்சின் மேல் அந்தச் சிறுமி சற்று முயற்சி செய்து ஏறி அமர்கிறாள். ஸாஷா அவளுக்குப் பத்து வயது என்று சொல்லி இருந்தாள், ஆனால் அவளுக்கு ஏழு வயது என்று கூடச் சொல்ல முடியாது; அவள் கால்கள் பியானோவின் கால் விசைகளைக் கூடச் சரியாக எட்டவில்லை. அவளுடைய தலைமுடி கருமையாக, ஆனால் ஒளி மழுங்கி இருக்கிறது, காது வரை குறைத்து வெட்டப்பட்டிருக்கிறது. மற்ற சிறுமிகளின் மின்னும் தலைகளில் அவர் வழக்கமாகப் பார்க்கிற அலங்காரப் பொருட்களும், ஆபரணங்களும் இவளிடம் இல்லை. அவள் ஸ்ட்ரெட்ச் சராய்களையும், ஸ்னீக்கர்களையும் அணிந்திருக்கிறாள். ஸாஷாவின் மகள் என்று அவர் கற்பனை செய்திருக்கக் கூடியவள் மாதிரி அவள் சிறிதும் இல்லை.

எப்படியானாலும், அவள் இப்போது இங்கே இருக்கிறாள்.

“நாம் ஆரம்பிக்கலாமா?” ஜன்னலிலிருந்து திரும்பிய அவர் கேட்கிறார். அந்தக் கேள்வியை இருவரையும் நோக்கிக் கேட்கிறார்.

 ஸாஷாதான் இயங்குகிறாள், கைப்பையிலிருந்து எல்லா இசைப் புத்தகங்களையும் வெளியிலெடுக்கிறாள், பிறகு பியானோவுக்கு அடியில் நுழைந்து கால்விசைக்கான பெட்டியை [1] லைர் கால்களுக்கு எதிராகப் பொருத்த சிரமப்படுகிறாள். அவள் இருக்கும் நிலை அவளுக்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கவில்லை, அவருக்கு அவளுடைய பிருஷ்டமும்,  தொடைகளும் கீழ் ஆடையால் கட்டுப்படுத்தப்படுவதற்கு எதிராகத் திமிருவதைக் காட்டுகின்றன. அவள் கால் விசைகளைச் சரியாகப் பொருத்த முயலும் போது அவை ஒரு இடை வெட்டும் ஒழுங்கில் அசைகின்றன. தான் அங்கே பார்க்கக் கூடாது என்று உணர்கிறார். அவளுடைய தலைமுடி முன்பு எப்படியிருந்தது என்பது அவருக்கு சட்டென்று நினைவு வருகிறது – தங்க நிறம் ஆங்காங்கே பரவிய, புஸ்ஸென்று விரிந்து பெரிதாகத் தெரியும் முடி  அது – ஸாஷா இங்கு எதற்கு வந்திருக்கிறாள் என்று அவர் யோசிக்கிறார், இப்படி யோசிப்பது முதல் தடவையல்ல. அவள் மகளை ஏன் தன்னிடம் அழைத்து வந்திருக்கிறாள். என்னவானாலும் ஸாஷாவே ஸோர்கினிடம் கற்றவள்தான். அவளும் இசையில் பல்கலைப் பட்டதாரி. தன் மகளுக்கு எளிதாகவே அவளால் கற்றுக் கொடுத்திருக்க முடியும்.

பியானோவின் கீழிருந்து எழுந்த ஸாஷா, “அலீஸா,” என்று விளித்துச் சொல்கிறாள், “தயவு செய்து திரும்பிப் பார், அம்மாவுடைய பழைய நண்பரான, மிஸ்டர் ஒம்மிற்கு ஹலோ சொல்லு.”

அம்மாவின் பழைய நண்பர். ஆமாம், சரிதான் என்று நினைத்தார் ஆல்பெர்ட். சரியாக அவர் அதுதான். அப்படி அது வருணிக்கப்படுவதைக் கேட்பது குளிர்ச்சியை, அதிலிருந்து கிட்டும் புத்தித் துல்லியத்தை அவருக்குக் கொடுத்தது.

அந்தப் பெண் ஏதும் செய்யாமல் சும்மா இருந்தாள்.

“நீ என்ன தயார் செய்திருக்கேன்னு அவரிடம் சொல்லு,” ஸாஷா உந்துகிறாள்.

அலீஸா இன்னும் அசைவில்லாமல் இருப்பதைப் பார்த்து, ஸாஷா இசைப் புத்தகங்களின் அடுக்குகளிலிருந்து ஒரு சாஹித்தியத்தின் மூல வடிவுப் பிரதியை உருவி எடுக்கிறாள். அது பீத்தோவனின் ஸொனாட்டாக்களில் இரண்டாம் புத்தகம்.

ஆல்பெர்ட் தீர்மானமாக ஒரு அடி முன்னெடுத்து வைக்கிறார். மற்ற எந்த வகுப்பையும் அவர் நடத்துவது போல இங்கும் அவர் பொறுப்பைக் கையிலெடுக்கும் நேரம் வந்து விட்டது. அந்தச் சிறுமியை ஒரு சுரத்தை வாசிக்கச் சொல்ல வேண்டும் அவர். அவர் பியானோவை நோக்கி நகரத் தொடங்கும்போது, ஸாஷா திடீரென்று அவர் முன்னால் தடுப்பது போல வருகிறாள். அவளுடைய முகபாவத்தைப் பார்த்து அவர் நின்று விடுகிறார். அவள் முகத்தில் ஒளிவே இல்லாமல் தெரிகிற வேண்டுகோள் விடுக்கும் பாவத்தைப் போல வேறெந்த வளர்ந்தவரின் முகத்திலும் அவர் இதற்கு முன் பார்த்ததில்லை.

“ஆல்பெர்ட்,” என்கிறாள், “அலீஸா நல்லா வாசிப்பா. நான் சும்மா இதைச் சொல்லவில்லை. அவள் ஒண்ணும்… நான் என்ன சொல்றேன்னா அவள்- இரு, நீயே பார்ப்பே. உனக்குப் புரியும்.” ஸாஷா இந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பவள் போல இருந்தது, ஆனால் அவள் எப்போதாவது அப்படி நிறுத்திக் கொண்டிருந்திருக்கிறாளா? அவளுடைய அடுத்த பேச்சு அடித்துக் கொட்டுகிறது.

“க்ரெக் இது நார்மல் இல்லைன்னு நினைக்கிறார். அவருக்குப் புரியல்லை. அவர் எப்பவும் சொல்லிக்கிட்டிருக்கார்: அலீஸா வெளியில் போகணும். ஸாஷா, அலீஸா வெளியில் போய் ஓடியாடணும். ஸாஷா, அலீஸாவுக்கு நண்பர்கள் வேணும். மணிக்கணக்கா பியானோவை நோண்டிக்கிட்டு இருக்கக் கூடாது. அது அவரோட வார்த்தை: ’நோண்டிக்கிட்டு.’ ஆனா நான் ஒண்ணு உங்கிட்டே சொல்றேன். வாழ்க்கைங்கறது விளையாட்டுக்காக நேரம் ஒதுக்கறதை எல்லாம் விடப் பெரிசு. ஓடியாடிக்கிட்டிருக்கறதை விட வாழ்க்கை பெரிசு. உன் கிட்டே நான் இன்னொண்ணையும் சொல்றேன். அலீஸாவுக்கு அஞ்சு வயசாகிற வரை அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ‘அம்மா ’ , ‘மா ’, ‘மாமா ’ எதுவுமே இல்லை. ஆனால் ரெண்டு வயசான அன்னிக்கு, அதே நாள்ல, அவள் பியானோ கிட்டே போனா, “ஃபயர் ஷாக்”[2] ஐ அப்படியே வாசிச்சாள்.  இரண்டே வயசு. முதல்லேருந்து கடைசி வரைக்கும்.”

இதைச் சொன்ன பிறகு அவள் அவரைப் பார்த்தபடி இருக்கிறாள், அவர் ஏதும் மாற்றாகச் சொல்லவில்லை என்ற போதும், அவருக்கு சவால் விடுவது போல அவள் முகபாவம் இருக்கிறது. பிறகு பீத்தோவனின் சாஹித்தியப் புத்தகத்தை பியானோவின் பெஞ்சில் வைத்து விட்டு, இன்னொரு மனநிலைக்குள் கரைகிறாள்.

“ஒவ்வொருத்தரா ஆசிரியர்களை மாத்திப் பார்த்துட்டோம். எத்தனை பேருன்னு என்னைக் கேளு. இல்லை, கேட்காதே. போன அஞ்சு வருஷத்துலெ பதினேழு பேர். எல்லாரும் இவளுக்கு சங்கீத ஞானம் இயல்பாவே இருக்குன்னு சொல்றாங்க. ஆனா யாருக்குமே இவளைப் புரியல்லை. சமீபத்துல இருந்த பியானோ வாத்தியார் கிட்டேயும் தோத்துப் போனப்ப இனிமே என்ன செய்யறதுன்னு எனக்குத் தெரியல்லை. சரின்னு விட்டுடலாம்னு இருந்தேன்.” அவள் ஆல்பெர்ட்டைப் பார்க்கிறாள். “நான் என்ன சொல்றேன்னு உனக்குப் புரியறதில்லையா?”

அவரிடம் பதில் ஏதும் இல்லை.

“அப்ப, ஒருநா நான் சமையலறை மேஜை கிட்டே உட்கார்ந்திருந்தேன். அலீஸா இன்னொரு அறையில பியானோ வாசிச்சுக்கிட்டிருந்தா. அங்கே உட்கார்ந்து அதைக் கேட்டுகிட்டிருந்தேன், எனக்கு இந்த யோசனை தோணித்து. இந்த அசட்டு யோசனை. நான் நினைச்சது இதுதான்: இவள் அடுத்த ஆல்பெர்ட் ஒம்.” அவள் அந்த தோளைக் குலுக்கியபடி வீசும் சிரிப்பைக் கொண்டிருக்கிறாள். “அப்பதான் உன்னைத் தேடிப் பிடிச்சேன்.”

ஆல்பெர்ட் இதை ஏற்க மறுக்கிறார். இதை அவர் என்னவென்று எடுத்துக் கொள்வது? இது ஒரு சிக்கலான பிதற்றல் என்று நினைக்கிறார். இதில் எதிரெதிரான யோசனைகளை ஒன்றாகச் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. அந்தச் சிறுமியை இன்னொரு தடவை உற்று நோக்குகிறார், அவளோ அப்படி ஒரு ஆழ்ந்த மௌனத்தில் அமர்ந்திருக்கிறாள், தொங்குகிற அவளுடைய கால்கள் கூடச் சிறிதும் அசையாமல் இருக்கின்றன. அவளுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

ஸாஷா காத்திருக்கவில்லை. அவள் அந்த பீத்தோவன் புத்தகத்தை எடுத்து, பியானோவின் புத்தக இருக்கையில் விரிக்கிறாள். ஒரு திக்கில் பக்கம் புரட்டுகையில் நிறைய பக்கங்கள் தாண்டிப் போய் விடுகிறாள், பின் மறு திக்கில் நிறைய தாண்டிப் போகிறாள், கடைசியில் அவளுக்கு என்ன வேண்டுமோ அதைக் கண்டு பிடிக்கிறாள். ஸொனாட்டா எண் 21,  “வால்ட்ஸ்டைன்.”

“செல்லம், பீத்தோவன்லெ ஆரம்பிக்கலாம், சரியா? ப்ளீஸ், நான் உன்னைக் கேட்டுக்கறேன். பீத்தோவன்.”

குறிப்பிடத் தக்க விதத்தில், அந்தச் சிறுமி தன் மடியிலிருந்து கைகளை மேலே எடுக்கிறாள்.

ஆல்பெர்ட் கைகளைக் குறுக்கே கட்டிக் கொண்டு, முகத்தைச் சுருக்குகிறார்: கேட்கத் தயாராக ஆகும்போது அது அவருடைய இயல்பான உடல்பாவிப்பு. அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவள் ‘வால்ட்ஸ்டைனை’ எத்தனை நன்றாக வாசித்தாலும், அது பீத்தோவனின் நோக்கப்படியான ‘வால்ட்ஸ்டைனாக’ இராது. ஆனால் அவள் செய்கிற ஒரு சிறு செயல் அவர் கவனத்தை ஈர்க்கிறது. தனிப்பட்ட விதத்தில், ஆனால் ரகசியமாக இல்லாமல், அவள் அந்தப் பளபளக்கும் கருப்பு வீழ்பலகையில் தங்க எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும்  ’ஸ்டைன்வே அண்ட் சன்ஸ்’ என்ற பெயரில் உள்ள ஒரு ‘ஏ’ எழுத்தைத் தொடுகிறாள். ஒரே ஒரு கணம், தன் சுட்டு விரலால். ஓ! அவருக்கு இந்தச் சைகை தெரியும். அந்த ஏ என்பது  “ஆல்பெர்ட்”டுக்காக, பியானோ முன் உட்காரும் ஒவ்வொரு தடவையும் அவர் அப்படி எண்ணுவது அன்று அவர் வழக்கம். அப்போது அவள் வாசிக்கத் தொடங்குகிறாள்.

அவள் என்ன வாசிக்கிறாளோ, அது ‘வால்ட்ஸ்டைன்’ இல்லை. அது ஒரு மலிவான, இலேசான கீதத்தில் துவங்குகிறது. அது என்னது? அவர் முனகிக் கொள்கிறார். ஈ-டி-ஸி. “ஹாட் க்ராஸ் பன்ஸ்.”

ஒரு கணம் தாண்டி, அந்த கீதம் அலங்காரப்படுகிறது, ட்ரில்கள், திருப்பங்கள், ஆட்ட பாட்டமான இடது கை பாணிகள். ஆக அவள் சாமர்த்தியம் காட்டுகிறாள்.

ஒன் எ பென்னி, டூ எ பென்னி,

ஹாட் க்ராஸ் பன்ஸ்.

பிறகு அவள் நிஜமாகவே பிய்த்துக் கொண்டு போகத் தொடங்குகிறாள், அந்தக் குட்டிக் கரிச்சான் காக்கை. அவர் “ஹாட் க்ராஸ் பன்ஸை” ஸ்டகாட்டோவில் கேட்கிறார், பிறகு ‘ஹாட் க்ராஸ் பன்ஸ்” இடது கைப் பக்கம் எடுத்துப் போகப்படுகிறது. அவள் க்ரேஸ் நோட்களைப் பயன்படுத்தவில்லை.[3] அப்படித்தானே இருக்க முடியும்! அது ரொம்பவே தேய்வழக்கில்லையா! மாறாக, அவள் அப்பொஜடூராக்களைப் பயன்படுத்துகிறாள், அவை சுரத்தை அரை அடிப்பு தள்ளிப் போடுகின்றன. தன் கண்ணோரத்தால், அவர் ஸாஷாவைப் பார்க்கிறார். அவள் அவர் வழக்கமாக உட்காரும் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். தன் நீண்ட கையால் அலீஸாவை நிறுத்தி, அந்தப் பாடாவதி ‘வால்ட்ஸ்டைனை’ வாசிக்க வைக்க முயலப் போகிறாள். ஆனால் அவர் பொறுமையிழந்து தன் கையால் ஒரு சைகை செய்கிறார், ”ஷ்ஷ்ஷ்! ”

அடுத்து என்ன? அலீஸா அந்தப் பாட்டை ரிலெடிவ் மைனருக்கு எடுத்துப் போயிருக்கிறாள். ஹார்மோனிக் மைனருக்கு ஏன் போகவில்லை? அவர் ஒரு அடி கிட்டே நெருங்குகிறார். ஆமாம், அவளுடைய தேர்வு கூடுதலாகச் சுவாரசியம் உள்ளதாக இருக்கிறது. அடுத்து அவள் “ஹாட் க்ராஸ் பன்ஸ்” பாட்டை ஒரு பரோக் ஃப்யூகாக அளிக்கிறாள். அட, அது ஹாஸ்யமாக இருக்குமே! அவளுடைய முகபாவத்தைப் பார்க்க முயல்கிறார், அது சற்றும் மாறாமல் இருக்கிறது.

ஏதோ ஒரு கட்டத்தில், தான் பியானோவின் விசைப்பலகையருகே வந்திருப்பதை அவர் அறிகிறார், ஓரத்தில் நிற்கிறதால், அவள் வாசிப்பதற்குக் கொஞ்சம் ஹார்மோனிக் சுவை கூட்டுவதற்காக சில விசைகளைத் தானும் அழுத்தி இசையில் சேர்கிறார்.

இசை திடீரென்று நிற்கிறது.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. திடீரென்று ஒலி நின்றது அவருக்கு ஆழ்ந்த எரிச்சலை ஊட்டுகிறது. “ஆ, சரி, சரி, மேலே வாசி, வாசி.”

அவள் மாட்டாள்.

“என்னம்மா- அலீஸாதானே நீ? நிறுத்தாதே. நான் இங்கே இல்லைன்னு நினைச்சுக்கோயேன்.”

ஏதும் நடக்கவில்லை. அவள் தன் கருமையான விழிகளைக் கொண்டு முன்னால் பார்த்தபடி, தன் கைகளைச் சிறு முஷ்டிகளாக்கியிருக்கிறாள், அவற்றைத் தன் கால்களுக்கிடையில் நுழைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவர் ஸாஷா தன் இருக்கையில் மறுபடி முன்னால் நகர்வதை அறிகிறார், அவளைச் சும்மா இருக்கும்படி செய்ய முடியக் கூடாதா என்று விரும்புகிறார்.

“முதல்லேயிருந்து மறுபடி ஆரம்பிக்கிறியா? மாட்டியா?”

“அப்ப இங்கேயிருந்து ஆரம்பிக்கலாமா, என்ன.”

அவர் “ஹாட் க்ராஸ் பன்ஸ்” கீதத்தின் சில சுரங்களை வாசிக்கிறார்- அந்த விசைகளை அவருடைய விரல்களின் கீழ் உணர்வதில் இருந்த மகிழ்ச்சிக்காக, அவர் விரும்பியதை விடச் சில சுரங்கள் கூடவே வாசிக்கிறார். அந்த முதல் சில சுரங்கள் அவள் வாசித்து அவர் கேட்டவை. ஒரு ஆக்டேவ் மேலே போய் விட்டு, ஒரு ஆக்டேவ் கீழிறங்கி ஒரு உலா போவது போல அது, இல்லையா.

ஸாஷா இப்போது எழுந்து நிற்கிறாள். பியானோவின் மறுபக்கத்துக்குப் போகிறாள், அவர் அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக. “ஆல்பெர்ட்,” என்று மெல்ல அழைக்கிறாள்.

“இது எப்படி இருக்கு?” அவர் ஒரு அரை சுரம் மேலே ஏற்றி ஒரு தொடர்ச்சியை ஆரம்பிக்க உதவ தன் விரல்களை நடத்துகிறார்.  அதை விட மேலாக: அடுக்கான தொடர்ச்சி. இங்கே சில கருப்பு விசைகளைச் சேர்க்கலாம்.

“ஆல்பெர்ட்,” என்று சற்று உரக்க விளிக்கிறாள் ஸாஷா.

அவர் அவளைப் பார்க்கிறார், கேட்கிறார், ஆனால் இந்தக் கணத்தில் அவர் ஒரு போலிக் கருவை அங்கு இசையில் கலப்பதில் முனைந்திருக்கிறார். “ஹே?”

அந்தச் சிறுமி ஏதும் சொல்வதில்லை. இன்னும் நின்றபடி, தன் இடது காலை நீட்டி ஒரு கால் விசையைத் தொட்டு, பெடல் பெட்டியை அடைகிறார். இப்போது அவளை அந்த பெஞ்சிலிருந்து இறக்கி விட்டு விட்டு, அந்த இருக்கையைத் தான் முழுதும் அடைய வேண்டுமென்றும், கால் விசைகள், பியானோவின் கீழ் ஸ்தாயி விசைகளையும் பெற வேண்டும், தான் பியானோவை முழுதுமாக வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் மேல் ஸ்தாயி விசைகளருகே தானிருக்கும் வசதியற்ற நிலையிலிருந்து விசைகளைத் தட்டி ஒலியெழுப்பிய வண்ணம் இருக்கிறார்.

“இதுதான் நீ அந்த மைனரில் வாசித்த உருமாற்றம்,” அந்தச் சிறுமியிடம் சொல்கிறார்.

“சில நேரம் ரொம்ப வற்புறுத்தாம இருக்கறதுதான் அலீஸாகிட்டே நல்லா வேலை செய்யும்,” என்கிறாள் ஸாஷா.

“இப்ப ஒரு மிர்ரர் இன்வர்ஷன் செய்தா எப்படி இருக்கும்?”

“அவ கிட்டே மேலே மேலே சொல்லிகிட்டே போனா, அவ-”

“இதைக் கேட்டியா? என்னவெல்லாம் சாத்தியம்னு பாத்தியா?”

அவர் வாசித்துக் கொண்டே போகும்போது, அவர் எதையோ கேட்கிறார், அது என்னதென்று அவர் புரிந்து கொள்ள ஒரு நொடி ஆகிறது. லைர் கம்பங்களுக்கெதிராக ஒரு மந்த ஒலி கொண்ட இடிப்பு அது. அதைப் பொருட்படுத்தாமல் அவர் மேலே வாசித்தபடி இருக்கிறார்.

மறுபடியும்,  ஸ்னீக்கர் அணிந்த அந்தக் கால் வீசி உயரே எழுகிறது.

 “வேண்டாம்,” என்கிறார் ஆல்பெர்ட், “செய்யாதே.” சிறுமியின் முழங்காலின் மீது ஒரு கையை உறுதியாக வைக்கிறார். உள்ளங்கைக்குள் அவளது முழங்கால் முழுதும் அடங்கி விடுகிறது. கால் துடிக்கிறது, அவர் தன் கையை மேலெடுக்கிறார், பிறகு மறுபடியும் வலுவோடு கீழிறக்கிப் பிடிக்கிறார்.

“ஆல்பெர்ட்,” என்கிறாள் ஸாஷா. “அலீஸா,” என்கிறாள் ஸாஷா.

அவர்களை அவள் அழைத்த ஒலிக்கு ஏற்பட்ட விளைவு அவள் நினைத்திருக்கக் கூடியதற்கு மாறாக இருந்தது. அவள் அங்கே இருந்ததை மறுபடி உணர்ந்து கொண்டு அவளை நோக்கித் திரும்புவதற்குப் பதிலாக, அல்லது எதார்த்தமான மறுவினைக்குப் பதிலாக, அவள் அவர்களைச் சுற்றி ஒரு கண்ணுக்குப் புலப்படாத வட்டத்தை வரைந்தது போலவும், அவளால் அதற்குள் நுழைய முடியாதிருப்பதைப் போலவும் ஆகியது. அந்த வட்டத்துக்கு வெளியே, அவளுடைய வெளுத்த முகம், கவலையின் படபடப்பு எல்லாம் சம்பந்தமற்றவை. அந்த வட்டத்துக்குள், அந்தச் சிறுமி அவர் சிந்தனையில் நுழைகிறாள், ஆல்பெர்ட் ஸாஷா மீதான கவனத்தைப் பின்னால் ஒதுக்குகிறார். அந்தச் சிறுமியின் துள்ளும் முழங்கால் முட்டியின் மென்மையான எலும்புக் கட்டமைப்பில், உதைக்கவும், தொடர்ந்து உதைத்தபடி இருக்கவும் ஒரு பிடிவாதமான, எந்திரத்தனமான விருப்பத்தை அவர் உணர்கிறார். அவள் வேகமாக மூச்சு விடுவதை அவர் கேட்கிறார், அந்த மூச்சு சுடரைப் போல தெறிக்கிறது. அவளுடைய உச்சந்தலையிலிருந்தும், முடியிலிருந்தும், இயற்கையான, ரோமங்களடங்கிய உடலிலிருந்து வரும் ஒரு வாடை, வாடி, துகளாகத் தொடங்கும் சரத்கால இலைகளைப் போன்ற நெடியை அவர் முகர்கிறார். அந்தச் சிறுமியின் முகத்தை அவர் பார்க்கவில்லை, ஆனால் அவளோடு அவர் எப்படியோ ஒரு தொடர்பை ஏற்படுத்தி விட்டதாகவும், அதன்படி திட்டம் என்னவென்றால் அவர் கையை எடுத்த பின் அவள் உதைக்க மாட்டாள் என்றும் அவருக்கு ஒரு புரிதல் எழுகிறது. அவர் கால் முட்டியிலிருந்து கையை எடுக்கிறார். அவள் உதைப்பதில்லை. அந்த கால் முட்டி அமைதியாக, ஒழுங்கு தவறாமல் இருக்கிறது, ஆனால் அவள் தன் ஸ்ட்ரெட்ச் சராயின் துணியைத் தொடர்ந்து எதிர்ப்பது போல முட்டியை இறுக்கித் தளர்த்திய வண்ணம் இருக்கிறாள்.  எல்லாம் இப்போது நெருங்கி வந்தாயிற்று. கட்டுக்குள் இருப்பதாகி விட்டது.

ஆனால் அடுத்த கணமே, சிறுமி தன் மெல்லிய கரங்களை உயர்த்துகிறாள். தன் மணிக்கட்டின் உள்புறத்தால் தன் தலையை அடித்துக் கொள்ளத் துவங்குகிறாள். அவளுடைய வாய் திறக்கிறது, அழுவது போன்ற ஒலியை எழுப்புகிறாள், ஆனால் அவளுடைய விரிந்த கண்களில் நீரேதும் கசியவில்லை. அந்த ஒலி, பயனற்ற விதமாக உள்ளிழுக்கப்படும் மூச்சு, படிப்படியாக உயரும் ஆற்றாமை, ஹா-ஹா என்று ஒலிக்கப்படும் ஓசைகள், மற்றும் இதர வினோதமான ஓசைகள் கொண்டது, அவரிடம் செவிப் புலனில் ஒவ்வாமையை எழுப்புகிறது. இதைத் தொடர்ந்து சடுதியில் அவர் மனதில் இதையெல்லாம் ஒதுக்க வேண்டிய உணர்ச்சி, அது கோபத்தை நிகர்த்திருக்கிறது, எழுகிறது. எதற்காக அழ வேண்டும்?

அவர் பின்னே நகர்கிறார், அந்தக் கணத்தில் ஸாஷா பாய்ந்து கிட்டே நெருங்குகிறாள். சிறுமியைத் தன் கரங்களால் வளைத்து, பாதி தூக்கி, பாதி இழுத்து, அந்த பெஞ்சிலிருந்து அகற்றுகிறாள். அவளைத் தன் அணைப்பில் வைத்துக் கொள்ள முயல்கிறாள், ஆனால் சிறுமி அதை எதிர்க்கிறாள்- முரண்டு பிடித்து எந்தத் தேற்றுதலையும் ஏற்க மறுக்கிறாள். ஆல்பெர்ட் அவள் முகத்தை ஒரு முறை பார்க்க முடிகிறது, அது எதிர்ப்பை உண்மையாகவும், தீவிரமாகவும் காட்டுகிறது, அவளை ஏதோ மூச்சு விடத் தவிப்பவள் போலக் காட்டுகிறது. அவர் ஸாஷாவையும் பார்க்கிறார், அந்தச் சிறுமியை நெருக்கமாகப் பிடிப்பதில், அவளுடைய கரங்களின் தசை வலுவுள்ள முயற்சியையும், (ஸாஷாவின்) தாடைகளில் இறுகலையும், அவ்வப்போது கீற்றாகத் தெரியும் பற்களையும் பார்க்கையில் அந்த முயற்சியின் மீது பரிவும், சற்று அருவருப்பும் ஒருங்கே அவரிடம் எழுகின்றன.

திடீரென, தப்பித்தல். பிடியில் சிறிது நெகிழ்ச்சியை உணர்கிற சிறுமி, குதித்துத் தப்பி விடுகிறாள். அந்தப் பயிற்சி அறையின் முதல் கதவுகள், பிறகு இரண்டாம் கதவுகளூடே ஓடி வெளியேறுகிறாள். “அலீஸா” என்று கூக்குரலிடுகிறாள் ஸாஷா. தன் பணப்பையை அள்ளிக் கொண்டு, பின்னே நோக்கி, வார்த்தைகளின்றி, உதட்டசைவில், “ஸாரி,” என்று சொல்லிக் கொண்டு வெளியே விரைகிறாள். ஆல்பெர்ட் வெளிப்புறத்துக் கூடத்தில் பாதி தூரம் வரை அவள் பின்னே போகிறார், தன் குழப்பத்திலிருந்து கிட்டும் உணர்வு உந்துதல்களால் நடத்தப்பட்டிருக்கிறார், எலிவேட்டரை அழைக்கும் பித்தானை மறுபடி மறுபடி அழுத்திக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்கிறார்- அது ஒன்றும் அந்த எலிவேட்டரை வேகமாக வரச் செய்யாது. அந்தச் சிறுமியோ ஏற்கனவே போய் விட்டிருக்கிறாள்.

“ஸாஷா,” அவர் சொல்கிறார், அவளோ அவரை நேராகப் பார்க்கவில்லை. என்ன சொல்வது அல்லது எப்படிச் சொல்வது என்பது அவருக்குத் தெரியவில்லை. ஆனாலும் உணர்வதைச் சொல்ல சிறு முயற்சி செய்கிறார். “அவளுக்கு என்ன குறை?”

அது அவள் கவனத்தை இழுக்கிறது. அவரை முழுதுமாகப் பார்க்கிறாள், ஆனாலும் அவள் தன்னைப் பார்க்கிறாள் என்பதை விட, அவர் அவளைப் பார்க்க அனுமதிக்கிறாள் என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. “உனக்குத் தெரியல்லியா? உன்னால புரிஞ்சுக்க முடியல்லியா? ”

எலெவேட்டர் கதவுகள் திறந்து அவளை உள்ளே விடும்போது, நிமிர்ந்து அவள் முகத்திலிருக்கும் பாவத்தைப் பார்க்க அவருக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள்.

அடுத்து, இந்தக் காட்சியின் தொடர்ச்சியை, தன் வகுப்பறையின் ஜன்னல் வழியே பார்க்கிறார். சூரியன் மறைந்து விட்டாலும், இன்னும் ஓரளவு ஒளி இருக்கிறது, அவள் அலீஸாவை நெருங்கி விட்டதை அவரால் பார்க்க முடிகிறது, இருவரும் கீழே நாற்சதுர வெளியில் நடந்து போவதை மங்கலாகப் பார்க்க முடிகிறது. அந்தக் காட்சி விட்டு விட்டுத் தெரிகிறது, கடைசியில் ஓரத்தில் நிழலாக வளர்ந்திருக்கும் டாக் உட் மற்றும் எல்ம் மரங்களின் அடியில் அவர்கள் மறைகிறார்கள். ஜன்னலை விட்டு அகன்று போய், விளக்குகளை ஒளிரச் செய்கிறார், அந்த இசையறை திடுமென்று பார்வையில் எழுகிறது. அவர்கள் இசைப் புத்தகங்கள் மற்றும் பியானோ பெட்டியை விட்டு விட்டுப் போய் விட்டார்கள் என்பதைக் கவனிக்கிறார், – அவரிடம் எதையும் விட்டுச் செல்வது – அது நியாயமல்ல என்று அவருக்குத் தோன்றுகிறது. யோசனை ஏதும் செய்யாமல், எந்திரம்போல அந்தப் புத்தகங்களைச் சேகரித்து ஒரு அடுக்காக்குகிறார். விசைப்பலகைக்குக் கீழே சென்று, கால் விசைகளுக்கிடையே உள்ள பிடிமானங்களையும், நீட்டல் விசைகளையும் கழற்றுகிறார். பெடல் பெட்டியை விடுவித்து, அறையில் ஒரு மூலையில் வைக்கிறார். பிறகு, முதலில் அப்படிச் செய்ய அவர் எண்ணி இருக்கவில்லை என்றாலும், பியானோவின் எதிரில் அமர்ந்து, கைவிரல்களை நீட்டிப் பார்க்கிறார். மகிழ்வூட்டும் செயல் அது. குனிந்து தன் கைகளைப் பார்க்கிறார். செயலுக்கு உதவும் அவர் கைகள். அவரது, முடியேதும் இல்லாத பத்து நீண்ட விரல்கள், ஒவ்வொரு விரல் முட்டியும் சிறிது பொருந்தி அமையாமல் இருக்கிறது, சுட்டு விரல்கள் சிறிது நீண்டு கிட்டத்தட்ட மோதிர விரல்கள் அளவு இருக்கின்றன. அவற்றை விசைப்பலகையில் வைக்கும்போது, சிறிது வியப்புணர்வு தன்னுள் எழ அவர் அனுமதிக்கிறார். ஸாஷா ஏன் அப்படிக் கேட்டாள்: உனக்குத் தெரியல்லியா? உன்னால புரிஞ்சுக்க முடியல்லியா?

அதற்குப் பதில் சொல்வது போல, ஒரு முழுச் சுற்றில் அடிப்படை ஸி-மேஜர் சுரத்தை வாசிக்கிறார். துவக்க கட்ட மேஜர் சுரம்.[4] ஸாஷாவின் பெண்ணிடம் என்ன குறை? ஸி-மேஜர் ஹார்மெனிகளை பெடலால் நீட்டிக் கொண்டு, அண்டை சுரங்களை, பி-மேஜரை அழுத்தி, ஒவ்வாத ஒலியை எழுப்புகிறார். சிறுவனாக இருக்கையில் இந்த விளையாட்டை அவர் விளையாடியதுண்டு, கொஞ்சம் வளர்ந்த பிறகும்தான் – ஹார்மெனிகளை நிறங்களைக் கலப்பது போலக் கலப்பது அந்த விளையாட்டு [5]. தான் வித்தியாசமானவன் என்பது அவருக்கு எப்போதுமே தெரிந்திருந்தது. நையாண்டி அவருக்குப் பல வேளைகளிலும் புரியத்தான் இல்லை, அதுவும் வாழ்வென்ற பெரும் நையாண்டி அவருக்கு எட்டவில்லை. வாழ்க்கையைத் தீவிரமான முனைப்போடு வாழ, அதுவும் ஒரு விஷயத்தை முனைப்பாகப் பின் தொடரும் வாழ்க்கையை வாழவே அவர் விரும்பி இருக்கிறார். அது ஏன் புதிராகவோ, ஏற்கத் தகாததாகவோ கருதப்பட வேண்டும்? அதற்காக அவர் ஏன் வழக்காட வேண்டும்? அவர் விசைப்பலகை நெடுக வண்ணங்களின் கலவையை இசைத்துப் பார்க்கிறார், தான் படைக்கும் ஒலிகளில் கிளர்வும், நம்பகமானதுமான ஈடுபாடு எழுவதை உணர்கிறார். ஒரு சிறு கணம், காரெனைப் பற்றி எண்ணுகிறார். அவர்களுடைய குறுகிய காலத் திருமண வாழ்வின்போது, அவள் அவர் மீது பல சாடல்களை ஏவியிருக்கிறாள். சவாலானவர், உளைச்சல் கொண்டவர், சுயநலக்காரர், தனிப் பிரக்ருதி, துப்பில்லாதவர், அட்டூழியம் செய்பவர், சோகமானவர். ‘சோகமானவர்’ என்று எதற்காக அவள் சொன்னாள்? அவர் அனேகமாக வருத்தப்படுவதே இல்லை.

அவருடைய விரல்கள் சூடு ஏறி, வளைந்து கொடுக்க ஆரம்பித்து, பியானோவை முழு ஈடுபாட்டுடன் வாசிக்கும் ஆர்வத்தில் நீளத் தொடங்கியதும், அவர் தன் உள்ளுந்துதலுக்கு வணங்குகிறார்- அவருடைய வாழ்வின் உள்ளுந்துதல் அது – அந்தக் கேள்விகளை ஒருபுறம் ஒதுக்கி வைக்கிறார். இப்படியும் அப்படியுமாகச் சில தாளகதிகளை வாசிக்கிறார், கற்பனையில் கரு உருவாகுமுன் முன்னோடும் சில ஒலிகள் அவை, அவை நிகழும்போது சில சமயம் அவருக்கு வியப்பைக் கொணரக் கூடியவை. ஸி-ஷார்ப் மைனரை ஒலிக்கிறார், அது ஸாஷாவின் முத்திரை விசை: அந்த பண்டிதர் வகுப்பில் ஸோனாட்டாவை ஸி-ஷார்ப் மைனரில் வாசித்ததிலிருந்து அப்படித்தான் அவள் வாசிப்பை நினைவு வைத்திருக்கிறார். அது சவாலான தொனி. அதன் சுரவரிசையில் ஒன்றைத் தவிர மற்றெல்லாக் கருப்பு (விசைகளின்) தொனிகளும் உண்டு. பீத்தோவனுக்கு முன்னர், அனேகமாக வேறெந்த சாஹித்தியகர்த்தாவும் அதைப் பயன்படுத்தியதில்லை. ஆனால் எல்லா மைனர் விசைகளிலும் ஸி ஷார்ப் மைனர் விசையில்தான் ஏதோ சிக்கலுள்ள நம்பிக்கையுணர்வு புலப்படுகிறதாக ஆல்பெர்ட் உணர்கிறார்.

முன்பு வாசிக்கப்பட்டு அவர் கேட்ட ஏதோ ஒன்றின் நினைவு உடன் தொடர்ந்தபடி இருக்க, அவர் இப்போது வாசிக்கிறது என்ன….

இடது கையால், டி-மைனரில் துடிப்பொலிகள்.[6] வலது கையால், துரிதமாகக் கடக்கப்படும் சுரவரிசைகள். மர்மம், வஞ்சகம், மோதும் கத்திகள். ஒரு கூட்டிசைக் குழுவின் எல்லா ஒலிகளையும் பியானோ எழுப்புகிறது: தந்தி வாத்திய இசை, பித்தளைக் குழாய்க் கருவி இசை, பேரிகை ஒலிகள்.

 “மோட்ஸார்ட்!” பியானோ முன் அமர்ந்திருந்த ஸோர்கின் கூவினார். “டோன்னா ஆன்னா மயக்கப்பட்டிருக்கிறாள்! அவளுடைய அப்பாவான இல் கொமெண்டொடொரே [7],  டொன் ஜுவான்னிக்கு சவால் விட்டு சணடைக்கு அழைக்கிறார். ஜுவான்னி கத்தியை எடுக்கிறார். தாக்கு! தாக்கு! பிறகு இங்கே.. இதென்னது..?”

வியப்பும், அமைதியும். ஸி மேஜரில் ஓஸ்டினாட்டோ முக்கோர்வைகள்.

“கொமெண்டேடொரேயின் சாவு.”

இசை தொடர்ந்தது, மென்மையாக ஆனால் விடாப்பிடிவாதமாக, ஒவ்வொரு கோர்வையாக.

பிறகு ஸோர்கின் தன் உடல் வாகில் சிறு மாற்றம் செய்து கொண்டார். அதே முக்கோர்வைகளை வாசிக்கத் தொடங்கினார், ஆனால் இப்போது ஸி-ஷார்ப் மைனரில். அந்த நிபுணர் எடுக்கும் வகுப்பின் மாணவர்களுக்குத் தாம் என்ன கேட்கிறோம் என்பது புரியத் தொடங்குகையில் அவர் சொன்னார், “இது உங்களுக்குத் தெரியும். பீத்தோவன், ஓபோஸ் இருபத்தி ஏழு, எண் இரண்டு. நாம் இதை ‘மூன்லைட் ஸோனாட்டா’ என்று அழைக்கிறோம்.

அப்போது பல தொடர்ச்சிகளில், “மூன்லைட்” கீதத்தின் இந்த மாற்றப்பட்ட அனுபவம் அங்கு ஒலித்தது.

“வியன்னாவில் ஏடுகள் இருக்கின்றன, அவற்றை நிரூபணத்துக்கு நீங்கள் பார்க்கலாம்,” வாசித்தபடியே ஸோர்கின் பேசினார். “பீத்தோவன், மோட்ஸார்ட்டிடமிருந்து இந்தப் பகுதிக்கான கருவை எடுத்துக் கொள்கிறார், தன் ஸோனாட்டாவினுள் அதைப் புகுத்துகிறார். நீங்கள் கவனித்துப் பார்த்தால், இதை பீத்தோவனின் கையெழுத்திலேயே நீங்கள் பார்க்கலாம்.”

சிறிது நேரம் கழிந்த பின், இசை மறுபடியும் மாறியது. முக்கோர்வைகள் இப்போது சிறு மாறுதலுடன் இடது கைப்பக்கத்துக்கு மாற்றப்பட்டன- இப்போது தாளம் இரண்டிரண்டாக வகுக்கப்பட்டது, முன்போல மூன்றாக இல்லை.

“முப்பது வருடங்கள் கழிந்த பின்னர். இந்த நபர் வருகிறார். இந்த ஷோபென். அவர் எல்லாவற்றையும் ஸி-ஷார்ப் மைனரில் அமைக்கிறார்.”

ஸோர்கின் இந்த இடத்தில் அவர்களுக்கு மிக நெருக்கமானவர் போலப் புன்னகைத்தார். தன் வலது மணிக்கட்டை உயர்த்தி, விரல்களைத் திறந்து விரித்தார், பிறகு – அங்கு ஒலித்தது அந்தப் புகழ் பெற்ற கீதம், நாக்டுயெர்ன் எண் 20, ஸி- ஷார்ப் மைனரில்.

 “பார்த்தீங்களா?”என்றார், இன்னும் புன்னகைத்தவராக.

மேலும் சில அளவைகளுக்கு நாக்டுயெர்னை வாசித்தபிறகு, இசை மறுபடி மாறியது. ஈ- மேஜர். அப்போது விசை மாற்றத்தில் ஓர் உணர்ச்சிப் பொழிவு தெரிந்தது. ஸோர்கின் தன் பார்வையை உயர்த்தினார்.

“ ‘மூன்லைட் ஸோனாட்டா’விற்கு நூறு வருடங்களுக்குப் பிறகு: செர்கேய் ரஹ்மானினாஃப்.”

அட ஆமாம். இரண்டாவது பியானோ கான்ஸெர்ட்டோவின் இரண்டாவது அசைவு. இதை அவர்கள் ஏன் முன்பே உணரவில்லை!

“ரொமாண்டிக் காலத்தின் முடிவு.”

அவர் இதைச் சொன்ன விதத்தால், ரஹ்மானினாஃபும் அவரும் ஒரே நாட்டவர் என்பதும், ரஷ்யா சோவியத் யூனியனாக ஆனபிறகு ஸோர்கின் அந்த நாட்டுக்குத் திரும்பிப் போகவில்லை என்பதும் அவர்களுக்கு நினைவு வந்தன.

மறுபடியும் இசை மாறியது. ஏதோ முற்றிலும் புதியதாக – எளிமையானதாகவும், களிப்பூட்டுவதாகவும்- உருமாறியது. அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டதைப் பார்த்து ஸோர்கின் குதூகலித்ததாகத் தெரிந்தது. “பிகாஸ் த வோர்ல்ட் ஈஸ் ரௌண்ட், இட் டர்ன்ஸ் மீ ஆன்,” என்று பாடினார், ஆனால் அவர் பாடியது மோசமாக இருந்தது. “பிகாஸ் த விண்ட் ஈஸ் ஹை, இட் ப்ளோஸ் மை மைண்ட்.”

“யாருக்காவது தெரிந்ததா?” திரும்பினவர், அவர்களிடம் கேட்டார்.

“இது பீட்டில்ஸ்! யோகோ ஓனோ ஒரு நாள் ‘மூன்லைட் ஸோனாட்டா’வை வாசித்துக் கொண்டிருந்தார், ஜான் லென்னன் சொல்கிறார்: எனக்கு அந்தச் சுர வரிசையைத் தலைகீழாக் கொடு!”

அவர் அந்த பீட்டில்ஸ் பாட்டை மேலும் சில வரிகள் வாசித்தார், பிறகு நிறுத்தினார்.

“இப்படித்தான் எல்லாம் போகிறது,” என்றார்.

அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை. கடைசி நிபுணர் வகுப்பு முடிவுக்கு வந்தது. அவர்களுக்குக் கொடுத்த நேரம் தீர்ந்து போயிருந்தது. ஆனால் மாணவர்கள், தங்கள் மடியில் இருந்த இசைக் குறிப்புகள் மேல் கைகளைக் கோர்த்து வைத்தபடி இன்னும் காத்திருந்தனர்.

அவர்கள் எத்தனை இளையவர்களாகத் தெரிந்தார்கள் என்று ஆல்பெர்ட்டுக்கு நினைவிருந்தது. எத்தனை பேராசைகளோடு எவ்வளவு தெளிந்த இதயமும் கொண்டிருந்தனர். தங்களுடைய பல வருடங்களை- மொத்தமாகத் தங்களையே கூட – இந்தக் கருவிக்கு, இந்த இசைக்கு, இந்தக் கலைக்கு அவர்கள் அர்ப்பணித்திருந்தனர். ஆனால், எதார்த்த உலகுக்கு அவர்கள் திரும்புமுன், அவர்களுக்கு இப்போது ஏதோ ஒரு நிமித்தம் தேவைப்பட்டது. அது மிகச் சிறியதாக இருந்தாலும் போதும். ஆனால் அவர்களுடைய ஆசிரியரால் என்ன உறுதி கொடுத்திருக்க முடியும்? இதைத்தான். கலையின் தொடர்ச்சியைத்தான். அவர்கள் அதில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது தொடரும்.

பயிற்சி அறையில் தொலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அது தானாக நிற்கும் வரை மணி அடிக்கட்டுமென்று விடுகிறார் ஆல்பெர்ட்.  பிறகு செய்தி பதிவாகிறதைச் சுட்டும் விளக்கு மின்னுவதைப் பார்த்திருக்கிறார், அவருக்கு ஏற்கனவே தெரிந்ததை அது சொல்கிறது: அவருக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது. ஆனால் அவர் பின்னொதுங்கிய நிலையில் உட்கார்ந்திருக்கிறார். அந்த நிபுணரின் வகுப்பு பற்றிய நினைவு அவரைப் பாதுகாப்பான, சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஓரிடத்துக்குத் திரும்பக் கொணர்ந்திருக்கிறது. இசை கொணர்ந்த ஏமாற்றங்கள்: அவற்றை அவர் எப்படியோ சமாளித்துக் கொள்வார். பல நேரங்களில் அவர் செய்ய வேண்டியதெல்லாம், நம்பிக்கையுள்ள ஒரு சிறு செயல்தான்: அமர்ந்து, விசைப்பலகையின் மூடியைத் திறந்து, இசைக்குறிப்புகள் வைக்கும் பலகையை சரியான கோணத்தில் சாய்த்து நிறுத்தி வைத்தால் போதும். ஆனால், பிற நினைவுகள், ஏமாற்றங்கள், கடும் குழப்பத்தை உடன் கொணர்வதாக அச்சுறுத்துவன. அவர் ஸாஷாவைப் பற்றி நினைக்கப் போவதில்லை. அவளுடைய எழுச்சியை, வீழ்ச்சியைக் காட்டும் கணங்களையும், அவளுடைய முகபாவங்களின் ஜாலங்களைப் பற்றி யோசிக்கப் போவதில்லை. அவள் திடீரென்று அவர் வாழ்வில் மறுபடி தோன்றியதையோ, அதே போல திடுமென்று விட்டு நீங்கியதையோ பற்றி குழப்பங்கள் ஏதும் மீதம் வைத்துக் கொள்ளப் போவதில்லை. அவளுடைய மகளின் சுவையான இசைக் கோர்வையைத் தவிர வேறெதையும் அந்தச் சிறுமியைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளப் போவதில்லை. அந்த இசைப்பின் சூட்சுமத்தை அவர் தன் கைகளால் வாசித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும். இப்படி அவர் நினைப்பதையோ, அவருடைய பழக்கங்களையோ, வழக்கமாக அவர் மேற்கொள்ளும் முறைகளையோ, செயல்களையோ கேள்விக்குள்ளாக்கக் கூடிய நபர் ஒருவர் பற்றி- ஆனால் அப்படி ஒரு நபர் யாரிருக்கிறார்- அவருக்கு ஒரு க்ஷணம் சினம் எழுந்தது, அந்தக் கோபம் அவருக்கு இயல்பானதே அல்ல. அவர் வேறென்ன செய்ய வேண்டும்? அபூர்வமாக, சுயப்பரிதாபம் கொண்டு யோசிக்கிறார். அவருடைய நலனைக் காக்க வேறு யார் இருக்கிறார்கள்?

இத்தனை வருடங்களாக அவர் யோசித்திராத இன்னொன்றைப் பற்றி இப்போது நினைக்கிறார். ஸோர்கின் இறந்த பிறகு – அது நடந்து பத்து வருடங்கள் இருக்குமா? – ஆஸ்டோரியாவில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடானது. பாறைகளால் கட்டப்பட்ட சர்ச்சின் முன், அவருடைய முன்னாள் மாணவர்கள், அமைதியாக ஒன்று சேர்ந்தார்கள், இசைநிகழ்ச்சிக்கான முறையான உடைகள் அணிந்து வந்தனர். மின் கம்பிகளூடே உயர்ந்து வளர்ந்திருந்த லோகஸ்ட் மரங்களின் தட்டையான விதை அவரைகளின் சாறு கறைப்படுத்திய நடைபாதையில் அவர்கள் நின்றிருக்கையில், யாரோ ஆல்பெர்ட்டின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள், அது ஸாஷா இல்லை, பென்.

சடங்கு முடிந்தபின், சிறு ஸ்போர்ட்ஸ் பார் ஒன்றில் அவர்கள் இருக்கிறார்கள். பென் ஒரு பியரும், ஆல்பெர்ட் ஒய்னும் கொணரச் சொல்கிறார்கள். ஒய்ன் ஒரு தடியான, தூசி படர்ந்த கண்ணாடிக் குவளையில் வருகிறது. சியர்ஸ்.

பென் இப்போது ஒரு சமூகவியலாளர். ரட்கர்ஸ் பல்கலை. ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். ‘மேதைமை எனும் புனைகதை’ தலைப்பு. தன் குடும்பத்தின் படங்களை செல்ஃபோனில் காட்டுகிறார், முகநூல் தளத்துக்குப் போய், அவர்களுக்குத் தெரிந்தவர்களைப் பற்றிப் பார்க்கிறார்.

“இது அந்த ஃப்ரெஞ்ச் ஹார்ன் வாசிச்சவன். அவன் பெயர்… என்ன…. ஸாண்ட்ரோ.  அவனுடைய ஹார்ன் வாத்தியத்தை ஐயாயிரம் டாலருக்கு விற்று விட்டான்.

“யங் ஊ(க்). அவனை நினைவிருக்கா? அவன் மாணவர்களை பரீட்சைங்களுக்குத் தயார் செய்யற மையங்கள் சிலதை நடத்துகிறான். எஸ் ஏ டி பரீட்சைக்குப் பயிற்சி.

“க்ரேஸ் ஏரன். அவள் இப்போ எல். ஏ. ஃபில்ஹார்மோனிக்கில் இருக்கிறாள்.

”இவளுக்கு என்ன ஆச்சு… அதான்… ஸில்பர்,” ஆல்பெர்ட் கேட்டார். “நான் கேட்கிறது ஸாஷாவைப் பத்தி.”

“ஸாஷா ஸில்பரா? யாருக்குத் தெரியும்? கடைசியா நான் கேட்டவரைக்கும் அவள் திரும்ப நியூயார்க்கு வந்துட்டா.” பென் தன் பியரை ஒரு வாய் உறிஞ்சினார், பிறகு இன்னும் எதையோ நினைவு கொண்டார். “அவ கிட்டே ஏதோ வினோதமா இருந்தது. கொஞ்சநாளைக்கு, நாம எல்லாரும் முகநூல்லெ சிக்கிக்கிட்டிருந்தபோது, அவதான் மிஸ்.சோஷியல் மீடியாவா இருந்தா. ஏகப்பட்ட பதிவுகள். அப்புறம் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆலிஸனா? எல்ஸீயா?அதுக்குக் கொஞ்ச நாளைக்கு அப்புறம் பதிவு போடறதை சுத்தமா நிறுத்திட்டா. ஏதோ ஆகியிருக்கணும். வாழ்க்கையாத்தானிருக்கும்.”

“சரிதான்,” என்றார் ஆல்பெர்ட். ஸாஷா பற்றிய தகவலால் தான் தடுமாற்றம் பெற்றதை மறக்க, “அப்ப ஜோ என்ன ஆனான்?” என்று கேட்டார். 

“ஜோவா?” என்றார் பென். “ஜோ டோர்ரெஸா? நிஜமாக் கேட்கறியா?”

“எனக்குப் புரியல்லை.”

“உனக்கு ஜோ டோர்ரெஸைப் பத்தித் தெரியாதுன்னா சொல்றே?”

“ஜோ டோர்ரெஸைப் பத்தி என்ன தெரியாதான்னு கேட்கறே?”

“ஃபக்!” என்றார் பென், தன் கையிலிருந்த பானத்தைக் கீழே வைத்தபடி. “ஆல்பெர்ட், ஜோ போய்ட்டான்.”

“ என்ன சொல்றே, ‘போய்ட்டான் ’னா என்ன அர்த்தம்?”

“அது ஆகி அஞ்சு வருஷமாயிடுத்து. அவன் தன்னோட மருந்தை எல்லாம் நிறுத்தினான், மறுபடி கோக் எடுத்துக்கிட்டு மட்டையானான், அப்புறம் அவன், ஐயோ, ஆல்பெர்ட், ஒரு ரயில் முன்னாடி குதிச்சுட்டான். உனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு என்னால நம்பவே முடியல்லே.”

 “என்ன ரயில்?”

“என்ன சொல்றே, ‘என்ன ரயில்னு ’ எதுக்குக் கேட்கறே?”

“என்ன மாதிரி ரயில் அது?”

“எனக்குத் தெரியாது. ஆம்ட்ராக்.”

“அது எங்கே போயிக்கிட்டிருந்தது?”

“ஒருக்கால் நியூ ப்ரன்ஸ்விக்? எனக்கு அதெல்லாம் தெரியாது. அவன் கொஞ்ச நாள் யேல்-லெ இருந்தான்.”

“அந்த ரயில் வடக்குப் பாக்க போயிட்டிருந்ததா? தெற்கேயா?”

“என்னது? நிசம்மாத்தான் கேட்கறியா?என்ன மாதிரி கேடுகெட்ட கேள்வி அது?”

அப்படியா? ஆல்பெர்ட் யோசித்தார். வேறு எப்படி அந்தச் செய்தி உண்மையா இல்லையா என்று அவருக்குத் தெரியும்? ஜோ டோர்ரெஸ் போய் விட்டான் என்ற செய்தி- என்னது அது, செத்துப் போயிட்டானா?

ஆல்பெர்ட்டின் குழப்பத்தைப் புரிந்து கொண்டவர் போல, பென்னுடைய முகபாவம் மாறியது. ஆத்திரமோ, எரிச்சலோ அடங்கியது. அவர் அடுத்துப் பேசிய வார்த்தைகளில் பரிவு இருந்தது. “உனக்குத் தெரியறதா, ஆல்பெர்ட்?” என்றவர் ஆழ நோக்குபவராக இருந்தார், “நீ எப்பவுமே இப்படி…”

இப்படி .. என்ன? மேலும் கேட்க அவர் காத்திருக்கையில், ஆல்பெர்ட்டுக்கு உடலில் அதிர்வு பரவியது. பென் சொல்லவிருப்பதைக் கேட்பதோ, மற்றவர்கள் அவரைப் பார்க்கும் விதமாகத் தன்னையே பார்ப்பதோ, அவருக்கு வேண்டும் போலவும் இருந்தது, வேண்டாமென்றும் தோன்றியது.

“நீ எப்பவுமே இப்படி ஒரு கோணக் கிறுக்கனாத்தான் இருந்திருக்கே.” ஆறுதல் தருவது போல ஆல்பர்ட்டின் தோளில் உறுதியாக ஒரு கையைப் பதித்தார் பென். அந்தக் கடைக்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு எழுந்து போனார்.

தொலைபேசி மறுபடி ஒலிக்கிறது. ஆல்பர்ட் அது அடித்து ஓயட்டும் என்று விடுகிறார். பியானோ முன் அமர்ந்திருக்கிறார், இது அகால வேளை அவருக்கு, ஓர் அதிசயமான மாலையின் இறுதி. அவர் துக்கப்படவில்லை. பழைய நினைவுகளில் உருகி விடவில்லை. அவருக்கு ஐயங்கள் இல்லை. ஆனாலும் தீர்க்கமாகப் பார்த்துப் புரிந்து கொள்ள உதவும் வெளியில் நுழைந்திருப்பதாக உணர்கிறார். பியானோ. ஜன்னல். நாற்காலி. கடிகாரம். ஒரு கணம், எதுவும் பொருத்தமற்றதாக அங்கு இல்லை. பொருட்கள் பழக்கத்தால் புலப்படுகின்றன, பல கால கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளின் விளைவுகள் அவை என்று காட்டுகின்றன. இந்த பியானோ. இந்த நாற்காலி. இந்தக் கடிகாரம். தன் புத்தி தன்னை எத்தி விட்டது என்று அவருக்குப் புரிகிறது. ஸோர்கினின் அஞ்சலி நிகழ்ச்சி பற்றிய நினைவில் நுழைந்ததன் மூலம், அது நீண்டதொரு பாதையில் சுற்றி அழைத்து வந்து அதே கேள்விகளை எதிர் கொள்ளும்படி நிறுத்தி இருக்கிறது. உனக்குத் தெரியல்லையா? உன்னால புரிஞ்சுக்க முடியல்லியா?

          ஏதாவது செய்ய வேண்டுமென்று அவர் தன் பொருட்களைச் சேகரிக்கத் துவங்குகிறார். அவருடைய பையில் வெவ்வேறு அளவுள்ள பகுதிகளில் தக்க பொருட்களை வைப்பது அவருக்கு வெவ்வேறு அறிதல்களை அதிர்வுகளாகக் கொடுக்கிறது. விசைப்பலகையில் மூடியை மென்மையாகக் கீழிறக்குகிறார். தொலைபேசியை எட்டிப் பிடித்து, அந்தப் பயிற்சி அறையை இரவு நேரத்துக்காக மூடுவதற்கு முன், தனக்கு வந்த செய்திகளை ஒலிக்க விடுகிறார்.

” ஆல்பெர்ட்,” பதிவில் இருந்த குரல் அழைக்கிறது. “ஸாஷா,”

அவள் குரலைத் தெரிந்து கொள்ள அவருக்கு ஒரு கண நேரம் தேவைப்படுகிறது, அவளுடைய குரலில் இருந்த வெறுப்பைப் புரிந்து கொள்ள இன்னொரு கணம் தேவையாகிறது.

“நான் உன்னை அழைக்கக் காரணம். அதுதான். ஏன்னு சொன்னா…”

அவளுடைய சொற்கள் வினோதமாக இடைவிட்டு விட்டு விழுகின்றன, நிதானமிழந்த மூச்சுடன் ஒலிக்கின்றன.

“நான் எதுக்குக் கூப்பிடறேன்னா…”

அவள் குரல் நடுங்குகிறது. அவருக்கு இப்போது புரியத் தொடங்குகிறது. அவள் கோபமாக இருக்கிறாள். அது கடுங்கோபம்.

 “ உனக்கு என்ன தைரியம். அதுவும் நீ, மத்தவங்க எப்படியோ இருக்கட்டும். அலீஸாவிடம் ஏதோ குறைகிறதுன்னு சொல்ல உனக்கு எப்படித் தைரியம் வந்தது? நான் ஒண்ணு சொல்றேன், கேட்டுக்க. அலீஸாகிட்டே ஒரு குறையும் இல்லை. எதுவுமில்லை. ஒண்ணு கூட இல்லை. அவள் யாராயிருக்காளோ அதுதான் அவள். அது, அது… அபாரமான விஷயம். ஓகே?

“ஆல்பெர்ட், உனக்குக் கேட்கறதா? நீ இதைக் கேட்கிறியா? நாசமாப் போக, இந்த மெஷின் ஃபோனைக் கீழே வச்சுடுத்தா?”

அவர் மெய்யடங்கி உட்கார்ந்திருக்கிறார். தீவிர அதிர்ச்சியில் இருக்கிறார். இது ஸாஷாவிடமிருந்து, வெட்டிப் போட்ட மாதிரி திடீரென்று வந்திருக்கிறது. அவருடைய சுய பரிசீலனை மனநிலைக்கு முழுதும் எதிரான திக்கிலிருந்து வருகிறது. ஏதோ அவருடைய புரிதல் எல்லாவற்றையும் அநியாயமாக, பின்னாலிருந்து, முரட்டுத்தனமாகத் தாக்கிய மாதிரி இருக்கிறது அவள் பதிவாகக் கொடுத்த செய்தி. அவர் தன்னுடைய நாற்காலியில் அப்படியே குன்றிப் போய் அமர்ந்திருக்கிறார், நிரப்பப்பட்ட தன் தோள்பையின் வாரைக் குருட்டுத்தனமாகக் கையால் தேடுகிறார். அவர் மேலும் யோசிக்குமுன், அந்த எந்திரம் மறுபடி இயங்குகிறது, அடுத்த செய்தியை ஒலிபரப்புகிறது.

“ஆல்பெர்ட், நான் தான் மறுபடியும். நான், ஸாஷா. கேளு- “

அவள் குரல் கரைகிறது.

“ஐ ஆம் ஸாரி. என்னை மன்னிச்சுடு. அலீஸாவை நான் உன் கிட்டே அழைச்சுகிட்டு வந்திருக்கக் கூடாதோ என்னவோ. ஒருவேளை அது மோசமான யோசனையா இருக்கலாம். என்னை மறுபடி பார்க்கவோ, என் கிட்டே இருந்து எதையும் கேட்கவோ உனக்குப் பிடிக்கல்லைன்னா, அது எனக்குப் புரியும். நான் பூரணமா அதைப் புரிஞ்சுப்பேன். ஆனால்…”

அங்கே ஒரு ‘ஆனால்’ இருக்கிறது.

“ஆனாக்க, எனக்கு இது நிஜம்மா தெரிஞ்சுக்கணும் போல இருக்கு. எனக்குப் பார்க்க ஒண்ணு இருக்கு… எனக்கு ஒரு கேள்வி இருக்கு…”

பிறகு அவள் ஒரு கேள்வி இல்லை, மூன்று கேள்விகள் கேட்கிறாள். அவளுடைய வழக்கமான வழி அது.

“நீ உன்னோட வாழ்க்கையை வாழ்ந்திருக்கியா ஆல்பெர்ட்?” அவளுடைய குரல் சங்கீதமாக ஆகியிருக்கிறது, அதில் தெரிந்து கொள்வதற்கான நம்பிக்கை இருக்கிறது. “நீ சந்தோஷமா இருந்திருக்கியா? அது.. அது.. சாத்தியமா?

“ப்ளீஸ் ஆல்பெர்ட், ப்ளீஸ்.”

அவர்தான்  “ப்ளீஸ்” என்று சொல்ல வேண்டிய நிலையில் இருப்பவர். “ப்ளீஸ் ஸாஷா, என்னை என் போக்கில இருக்க விடு.” மாறாக, அவர் ஒரு பதிலைத் தயார் செய்ய முனைகிறார். அவர் சந்தோஷமாக இருந்திருக்கிறாரா? அவருக்கு உடனே தோன்றும் மறுவினை: சந்தோஷம் என்பதை வரையறை செய்.[8] அந்த உந்துதலை விட ஆழத்தில் இருப்பது உள்ளுணர்வு, அவருடைய உள்ளுணர்வு தற்காப்பு முயற்சியில் இருக்கிறது. திடீரென்று, அவர் தான் ஆத்திரப்படுவதை உணர்கிறார். ஸாஷா என்ன சுட்டுகிறாள் என்பதை அவர் அறிய மாட்டாதவரா? அவர் தனக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிற வாழ்க்கையில் ஏதோ குறை இருக்கிறதா? அவரிடமே ஏதோ குறை உண்டா? சந்தோஷம் என்பது அல்லது சந்தோஷத்துக்கான விருப்பம், என்பது எல்லாரிடமும் உண்டு என்று எதேச்சையாக எல்லாரும் எடுத்துக் கொள்கிறார்கள், ஆனால் அவரிடம் மட்டும், நிரூபணம் கேட்கிறாள் அவள். சான்று கொடு என்கிறாள். என்ன சான்று?அவர் ஏதும் செய்யமுடியாத நிலையில் தான் இருப்பதாக உணர்கிறார். இதோ இருப்பது அவருடைய வாழ்க்கை. அது காலையில் விழிப்பு பெறுகிறது, இரவில் உறங்கப் போகிறது. அதற்கு என்று தினசரி வழக்கமான வழிமுறைகள் உண்டு: சந்திக்க வேண்டியவர்களைச் சந்திப்பது, அது பயணிக்க வேண்டிய பாதைகள். அதற்கு ஏதோ அர்த்தமும் உண்டு, அந்த அர்த்தத்தை வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியுமோ இல்லையோ. ஆனால் இருக்கிறது. அதனிடம் (அர்த்தம்) உண்டு.

அவர் இதை அழிக்கப் போகிறார். இந்தச் செய்தியை அவர் அழிப்பார், அதற்கு முந்தையதையும் அழிப்பார், அதற்கும் முன்னால் இருப்பதையும் அழிப்பார். தன் உடலில் தோன்றும் வேகத்தில் உறுதியான, முடிவு கட்டும் செயலுக்கான உந்துதலை அவர் உணர்கிறார். ஆனால் அதைச் செய்து கொண்டிருக்கையிலேயே, அவளுடைய தொலைபேசி எண் அவருக்கு இப்போது பாடமாகி விட்டது என்று, அவருக்குத் தெரியாதா என்ன? அவளுடைய அழைப்புக்குப் பதிலாக அவளை அவர் கூப்பிட்ட அந்தக் கணத்திலிருந்தே அந்த எண் அவருடைய விரல்களின் நுனியில் இருக்கிறது.

ஒருவேளை அந்த எண்ணை அவர் அழைத்தால்.

இதை அவர் வேறொரு கோணத்தில் பார்க்கிறார். ஒருவேளை எந்த எதிர்பார்ப்புமின்றி, அச்சத்தோடும்,  கடமைப்பட்ட உணர்வோடும் அவர் அந்த எண்ணை அழைத்தால். ஒருக்கால் அவள் பதில் பேச தொலைபேசியை எடுத்தால். அவர் என்ன சொல்வார்?

ஒரு கணம் கடந்து போகிறது, அவருக்கு ஒரு விஷயம் தோன்றுகிறது. அடுத்த சனிக்கிழமை மார்ச் முப்பத்து ஒன்றாம் தேதி.

அதைத் தொடர்ந்து இன்னொன்று: ஏழு மணிக்கு வா. தாமதம் செய்யாதே.

அவர் இன்னொரு எட்டு எடுத்து வைக்கிறார். இது சனிக்கிழமை, முப்பத்து ஒன்றாம் தேதி என்று வைத்துக் கொள்ளலாம், அந்தச் சிறுமி வாயில்கதவைத் தாண்டி உள்ளே நுழைகிறாள். ஒவ்வொரு அடியாக, ஆனால் ஒரு சமயத்தில் ஒரு அடி மட்டும் முன்னெடுக்கிறவருக்கு, ஏதோ தோன்றுகிறது.

அந்தச் சிறுமி கதவைத் தாண்டி வருகிறாள்.

அவள் முன்பு விட்டுப் போன பெடல் பெட்டியைப் பற்றி அவர் யோசிக்கிறார். அந்த பெடல் பெட்டியைப் பற்றி அவர் ஒரு ஜோக் சொல்லலாமா. இது உன்னோடதா என்று கேட்கலாம். இந்த ஜோக் அவளைச் சிரிக்க வைக்காது என்று அவருக்குத் தெரியும், மேலும், அவருடைய கற்பனையிலேயே, அவருக்கு அது ஒரு சவாலாகத் தெரிந்தது.

பியானோவின் மேல் மூடியைத் தாங்கும் குச்சியில் பாதி வரை திறக்காமல், அதை அவர் விசாலமாகத் திறக்கக் கூடும், அவள் அவர் அருகே நிற்கணும் என்று அவளிடம் சைகை செய்யக் கூடும். அலீஸா, பியானோங்கறது செம்பும், இரும்பும், காஷ்மீரக் கம்பளியும் சேர்ந்து செய்யப்பட்டதுன்னு உனக்குத் தெரியுமா? ஆஹா! பாத்தியா! அது ஒரு விஷயம் உனக்குத் தெரியல்லை இல்லையா. ஒரு ஆட்டோட அடிவயிற்றிலேர்ந்து எடுத்த முடியால பின்னின கம்பளியாக்கும், என்று அவர் சொல்லக் கூடும்.

அவளுடைய இசைக் குறிப்புப் புத்தகங்களின் அடுக்கை எடுத்து அப்பால் வைக்கிறதான செயலை வெளிப்படையாகச் செய்யக் கூடும். பாஹ், பீத்தோவன், ப்ராம்ஸ் எல்லாம் இனி கிடையாது. ”ஹாட் க்ராஸ் பன்ஸ்” எல்லாம் கிடையாது, அதை எத்தனைதான் சாதுரியமாக வாசிக்க முடியும் என்றாலும் கிடையாது. பெடல் பெட்டியும் கிடையாது. அந்த பெஞ்சில் அவளை உட்கார்த்தி வைத்து, அதன் திருகுவிசைகளைத் திருகி அந்த பெஞ்ச் பியானோவுக்கு ஏற்ற உயரத்தில் அவள் அமரும்படிச் செய்வார்.

அப்புறம் என்ன?

அவளை வேறு ஏதாவது வித்தியாசமான ஒன்றில் அவர் துவங்கக் கூடும். ஆமாம், வித்தியாசமான இசை. வாழ்க்கையில் எத்தனையோ இசை இருக்கிறது என்று அவர் நினைக்கிறார். எத்தனையோ விதங்களில் அதைப் படைக்கலாம். முற்றிலும் எதிர்பார்க்க முடியாத ஒன்றை அவர் கொணரக் கூடும், உதாரணமாக,  உதாரணமாக – அவர் எப்படியெல்லாமோ கற்றுக் கொண்ட நிறைய இசைத் தொகுப்புகளின் விசாலமான பரப்பில் சென்று தேடுவதில் நுழைந்து அந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் – ஹென்ரி காவெல்லின் “ஏயோலியன் ஹார்ப்” [9] என்ற படைப்பைப் போல ஒன்று. அது பகுதி விசைப்பலகையிலும், பகுதி பியானோவுக்குள்ளே சென்றும் இசைக்கப்படும். பியானோவின் உள்ளே கரம் நீட்டி, கம்பிகளின் அதிர்வை மட்டுப்படுத்தும் தளைகளை உயர்த்தி விட்டு, அந்தக் கம்பிகளைச் சுண்டி இசைக்க வேண்டும். அப்போது அவர் சொல்வார், கேள். கவனி. ஐம்பத்தி இரண்டு எந்திரப் பொறிகள் இந்த விசைப்பலகையின் பின்னே இருந்தாலும், பியானோ ஒரு தந்தி வாத்தியமாகவும் ஆக முடியும் என்று பார்த்துக் கொள்.

அப்போது அவள், பெஞ்சில், அவளுடைய பாதங்களை பிருட்டத்தின் கீழ் வைத்துக் கொண்டு, முட்டிபோட்டு அமர்கிறாள் என்று வைத்துக் கொள்ளலாம். அவர் தன் கால்களை நீட்டுகிறார், அவளுடைய கால்கள் கீழே நீட்ட முடியாது என்பதால். அவருடைய கால் பெடலை அழுத்துகிறது, அவர்கள் அந்த மட்டுப்படுத்தும் விசைகள் உயர்வதைப் பார்ப்பார்கள். அவளுடைய ஆள்காட்டி விரலை அவர் எடுத்துக் கொள்வார்- இல்லை, அவை எல்லாமே சிறியவை என்பதால், ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் எடுப்பார். ஆமாம், இரண்டு விரல்களையும்தான், அவற்றால் அந்த இசைக்கருவியை முற்றிலும் புதிய முறையில் அவர்கள் இசைப்பார்கள். அவளுடைய விரல்களைச் சரியாக அவர் பொருத்திக் கொடுத்து, இப்போது மெதுவாகச் செய், என்பார். அந்த விரல்களை கம்பிகள் பேசும் மொத்த நீளத்தின் குறுக்காகவும் நகர்த்திப் போவார்.

தோலால் ஆன இறக்கை வடிவ நாற்காலியின் உள்ளடங்கிய, வளைவான முதுகுப் பகுதியில் சாய்ந்து கொள்ளாமல், முன்னால் இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறார்.  இதையெல்லாம் அவர் கற்பனை செய்வது என்பது ஒன்று, ஆனால் முன்னே போய் அவற்றை எட்டிப் பிடிக்கத் தேவையான நடவடிக்கை எதையும் அவர் எடுப்பது என்பது வேறொன்று. நிஜமான ஸாஷாவையும், நிஜமான அலீஸாவையும் அந்தக் கதவுகள் வழியே உள்ளே அனுமதித்து, மறுபடி அவருடைய வாழ்வில் நுழைய விடுவது என்பது- அதற்கு அவரால் இப்படி ஓர் ஒப்புதலை, ஏற்பாட்டைத் தன்னுள்ளே கண்டு பிடிக்க முடியுமா?

அவர் ஸாஷாவின் எண்ணை அழைக்கவில்லை, அல்லது ஸாஷாவின் எண்ணை இன்னமும் அழைக்கவில்லை.

***

இங்கிலிஷ் மூலம்: யூன் சோய் 

தமிழாக்கம்: மைத்ரேயன் / ஜூலை-ஆகஸ்டு, 2022

மூலக்கதை வெளியீட்டு விவரங்கள்:

கதைத் தலைப்பு: ஸோலோ ஒர்க்ஸ் ஃபார் பியானோ (Solo Works for Piano)

வெளியான புத்தகம்: ஸ்கின்ஷிப் ( Skinship) [சிறுகதைத் தொகுப்பு]

பிரசுரகர்: ஆல்ஃப்ரெட் ஏ. க்நாப்ஃப் (Alfred A. Knopf)

                 நியூயார்க், 2021


[1] லைர் போஸ்ட் என்பது பியானோவின் கால்புறத்து அமைப்பு. அதைப் பற்றி மேலும் அறிய பார்க்க: http://www.piano.christophersmit.com/pedalSupport.html

[2] ‘Are you sleepin, are you sleeping, Brother john’ என்ற ஒரு சிறு பிராயத்துக் குழந்தைகளுக்கான பாட்டு பிரபலமானது. அதன் ஃப்ரெஞ்சு வடிவம் இந்தப் பாட்டு. ‘Frère Jacques’ என்பது அந்த ஃப்ரெஞ்சுச் சொல்.

[3] க்ரேஸ் நோட்ஸ் என்பது என்ன என்று இந்த விடியோ விளக்கும்: https://youtu.be/pbaL-vmIu3k

[4] Home-major என்று இதைக் குறிக்கிறார் மூலக் கதையாசிரியர் யூன் சோய்.

[5] நிறங்களை எப்படி பியானோ வாசிப்பில் எழுப்புவது என்று விளக்க இந்தப் பக்கத்தைப் பார்க்கலாம்: https://jeffreychappell.com/pianist/how-to-create-color-in-piano-playing/

[6] Tremolos- ட்ரெமெலோக்கள் – துடிப்பொலி என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. the rapid reiteration of a musical tone or of alternating tones to produce a tremulous effect என்கிறது ஒரு இங்கிலிஷ் அகராதி.

[7] நாட்டுச் சேவைக்காக வழங்கப்படும் ஒரு கௌரவப் பட்டம். ஃப்ரான்ஸில் இதுவே ஷெவாலியே என்று கொடுக்கப்படும். பிரிட்டனில் ‘லார்ட்’ என்று கொடுக்கப்படலாம். இந்தியாவில் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்றன தரப்படுகின்றன.

[8] வரையறை= define.

[9] Aeolian Harp என்பது ஒரு தந்தி வாத்தியம். பண்டை கிரேக்க நாகரீகத்திலிருந்து, யூத சாம்ராஜ்யத்திலிருந்து இதன் பழங்கதை தொடர்கிறது. இதன் தனிச் சிறப்பு என்னவென்றால், தந்தி/ கம்பிகள் கொண்டதானாலும் இதன் இசை காற்றால் எழுப்பப்படுகிறது. இதன் சிறப்புகளையும், ஹென்ரி காவெல்லின் இசைத் தொகுப்பையும் பற்றி விளக்குகிற இந்தக் கட்டுரையைப் பார்க்கலாம்: https://soundgenetics.com/guide-to-aeolian-harp/   இதில் வரும் கின்னார் என்ற சொல்லைக் கவனித்தீர்கள்தானே?

Series Navigation<< பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.