படைத்தல்

அன்று கண்விழித்தபோது தன்னுள் ஒரு உதயம் நிகழ்வதாய் உணர்ந்தாள். இரவின் வீச்சு இன்னும் ஓயாத புலரி ஒரு பண்டிகையின் அதிகாலை நோக்கி விடிவதாய் தோன்றியது. தூக்கமின்மை களைப்பு என எல்லா சோர்வையும் மறைத்துவிடும் ஒரு மாயக்கம்பளம் என அக்காலை இப்பூமியின் மீது அவ்வூரின் மீது அவ்வில்லத்தின் மீது விரிக்கப்படுவதாய் பட்டது. முகம் விழும் சிகையைக் கோதி காதோரம் விட்டாள். அகம் முகம் மலர எழுவது அவளுக்கே ஆசையாய் இருந்தது. நீரள்ளி குளிர் உணர உணர முகத்தில் வீசிக்கொண்டாள்.மூக்கு நுனி தாடை என திரண்டு சொட்டும் நீர், ஒவ்வொரு அசைவுக்கும் ஒட்டி ஒலி எழுப்பும் வளையுடன் மெல்ல ஆடி நோக்கினாள். மகிழ்வான முகம் பூரித்திருந்தது. உதயமேதான்.

நேற்றிலிருந்து பார்த்து பார்த்து செய்தவைதான் ஆனாலும் ஏதோ குறைந்தது. மீண்டும் வீட்டை ஒதுங்க வைக்கப்பார்த்தாள். வீடு ஒருங்கிதான் இருந்தது. தெள்ளத் தெளிவாக துளி மாசின்றி பளிச்சிட்டது. ஆனாலும் ஒரு முறை பெருக்கி நீரிட்டுத் துடைத்தாள். பசி துளியுமில்லை. உடல் என ஒன்றில்லை என ஆனது. மனம் மகிழ்விலாடும் கடல் என தளும்பிக்கொண்டிருந்தது. 

ஆடை களைந்து ஷவரின் கீழ் நின்றாள். மழையென மேல் விழுந்தது நீர்.

“மழையின் துளிகள்
கார்வானின் மைத்துளி
ஓடும் குழந்தையின் கிண் கிணி நாதம்
மழை வந்தது
மழை வந்தது
என் ஏக்கத்தின் மூச்சோடு
காற்று உஷ்ணம் கொண்டது
மழையின் வேதனை
யார் அறிவார்
மழை தரும் வேதனை
யார் அறிவார்
நீரானது பூமியெங்கும்
நீர் சூழ்ந்த இத்தனி நிலத்தில் நான்
உன் பாதமெங்கே
உன் பாதமெங்கே
ராமா”

தடையின்றி பாடினாள். அத்தை முதன் முதலில் அவளுக்கு சொல்லித்ததந்த பாடல் இது. ராமனின் பிரிவுத் துயர் தாளாமல் சீதை பாடுவதாய் அமைந்தது.  தன் துயர் அவ்வளவு பெரியதா என்ன? ராமன் இருக்கிறானா இல்லையா, தான் இருக்கும் இடத்தை அறிவானா? 

காதல் பாடல்களில் சோகம் தோயாத பாடலே இல்லையா. சோகமும் ஏக்கமும் இல்லாவிட்டால் காதல் எப்படி அழகாகும் என நினைத்துக்கொண்டாள்.

“ஆநிரை பின் சென்றான்
கண் நிறை நீர்த் துளி காணாதான்
பூதனை முலையுண்ட சழக்கன்
இவ்வூனுயிர் வாடிடச் சென்றுவிட்டான்
போர்நிலம் நின்றான்
உயிர்கள் அழிந்த ஆடல் கண்டு நின்றான்
மலரொன்று வாடி உதிர்வதை
பொருட்டெனெக் கொள்வானா?
கானில் குழல்நாதம்
வானின் நீலம்
பகலும் இரவும்
இரவும் பகலும்
ஆடிச் சலித்து நீர்த்துளி உதிரும் முன்
மயிற்பீலி தொட்டால் போதும்
மயிற்பீலி தொட்டால் போதும்”

பாடலின் கடைசி வரியுடன் குளித்து முடித்து அணி சூடி கதவு திறந்தாள். தேங்கி நின்ற ஒளிவெள்ளம் உடைத்துப் பெருக்கெடுத்தது. அப்பெருக்கை எதிர்கொண்ட போது ஷனாயின் நாதம் மனதில் ஒலித்தது. மிருதங்கம் வயலின் அழகுதான். ஆனால் தபேலா ஷனாய் போல் ஏக்கத்தை சொல்ல முடியுமா? ஒரு நொடிக்குள் பெரும்படையென ஏக்கமும் சோகமும் எழுந்து வரும். நிலவும் தனிமையும் இரவும் சோகமும் என ஷனாயும் தபேலாவும் காதலுக்கானதுதான். காதலுக்கு மட்டுமே ஆனது. 

இல்லம் திருத்தி நீராடி ஆயிற்று. உணவு என்ன செய்வது? வந்து சேர மதியமாகிவிடும். உணவு இல்லை. அத்தை சொல்வதுண்டு கிருஷ்ணனுக்கு அமுதுபடைக்க வேண்டும். உணவல்ல. அவளுக்கு பாட வேண்டும் போலிருந்தது.

“கொஞ்சம் புன்னகை
கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் மருட்சி
கொஞ்சம் வளையோசை
கொஞ்சம் கொலுசொலி
கொஞ்சம் ஊடல்
கொஞ்சம் சின்மொழி
கொஞ்சம் சினம்
கொஞ்சம் காதலிட்டு
அமுது சமையுங்கள் கிருஷ்ணனுக்கு
கொஞ்சம் போதும் கன்னியரே
நீலத்தின் துளியவன் உண்டு மகிழ்ந்து
வான்நீலம் கொடுத்துச் செல்வான்
வான்நீலம் கொடுத்துச் செல்வான்”

தீபமேற்றி இருந்த கிருஷ்ணன் படத்தின் முன் அமர்ந்து பாடியவள், அப்படியே அமர்ந்திருந்தாள். நேரம் ஒழுகிச் செல்லும் பிரக்ஞை அற்று மனம் ஓய்ந்து சோகம் கொள்ளும் வரை அமர்ந்திருந்தாள்.அழ வேண்டும் போலிருந்தது. மனம் ஏன் மகிழ்வுக்கும் சோகத்திற்கும் நடுவில் ஆடுகிறது. அப்பா சொல்வதுண்டு திடசித்தம் வேண்டும் என்று. திடசித்தத்திற்கு மகிழ்வும் சோகமும் கிடையாது என்பார். அத்தை சொல்வாள் திட சித்தம் என்பது மகிழ்வில் நிலைத்துவிட்ட சித்தம் என்று. அப்பா மறுப்பார். பின் ‘நீ ஏன் சோகமும் ஏக்கமும் நெறஞ்ச பாடலா பாடுற?’ என்பார். ‘நான் பாடுற சோகமும் ஏக்கமும் மகிழ்ச்சியோட ஒரு பாவம்தான்’ என்பாள்.

இதற்குமேல் அமர்ந்திருந்தால் ஆகாது என எழுந்துகொண்டாள். ஸ்கூட்டியை லேசாகத் தட்டித் துடைத்து கிளப்பினாள். கழுத்தை வளைத்து முதுகில் தொங்கிக்கிடக்கும் ஷாலை முன் பக்காமாய் இழுத்து கட்டிக்கொண்டாள். ஆனாலும் அது தளர்ந்து அவள் கழுத்தோடு ஒட்டிச் சிறகென பின் எழுந்தது. வழக்கத்தை விடவும் வேகமாகச் சென்றாள். மெயின் ரோடு அடைந்து கிழக்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் செல்ல வேண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்கு. வழியில் ஒரு சிக்னல். பெரிய கோயிலுக்கு செல்லும் பாதை அங்கிருந்து வலது புறமாய் பிரியும். கோயிலுக்கு இட்டுச் செல்லும் அந்நேர் தெருவெங்கும் பூக்கடைகள். சொல்லிவைத்தாற்போல் எப்பொழுதுமே கூட்டம். வெறும் நிறத்தின் பெருக்கு. மகிழ்ச்சியின் நிறம்தான் இத்தனையும் என்று தோன்றியது. மகிழ்ச்சி கொண்டாட்டம் இத்தனை நிறமுடையதாகத்தான் இருக்க முடியும். சிக்னல் பச்சை விழுந்தது. சிறு புன்னகையுடன் கடந்து சென்றாள். மூன்று நிறத்தில் தோரணம் கட்டியிருந்தாள் வீட்டின் நிலையில். சரியாக கட்டியுள்ளதா என ஒருமுறை பார்த்திருக்க வேண்டும். போவதற்குள் அவிழ்ந்து அலங்கோலமாய் கிடக்கக் கூடாது என நினைத்துக்கொண்டாள்.

ரயில்வே ஸ்டேஷன் அமைதியாய் கிடந்தது. ரயில் வர ஒரு மணி நேரம் பிடித்தது. ஸ்டேஷன் தன்னை அதன் அமைதிக்குள் விழுங்கிக்கொண்டுவிடும் போலிருந்தது. ரயில் வரும் சப்தம் கேட்ட போது அவள் மனம் ஏன் துள்ளி எழவில்லை என ஆச்சர்யப்பட்டாள். மெல்லத் தேய்ந்து ஒலித்துச் சலித்து நின்றது ரயில். ரயிலிலிருந்து அவன் ஒருவன் மட்டும்தான் இறங்கினான். இரண்டு ட்ராலி இருந்தது. இரண்டையும் இழுத்துக்கொண்டு முதுகுப் பையையும் சுமந்துகொண்டு காதில் ப்ளுடூத் இயர்ஃபோன்ஸுடன் எதையோ ஆங்கிலத்தில் சிடு சிடு முகத்துடன் பேசிக்கொண்டு வந்தான். தன்னை பார்க்கவேயில்லை என நின்றாள்.

அருகில் வந்தவன் அவளை உட்காரும்படி கைகாட்டிவிட்டு அவனும் அமர்ந்து ஃபோனில் தொடர்ந்தான். “திஸ் வீ கான்ட் அக்ஸப்ட். ரிடிக்குலஸ் – தட் ஈஸ் த ஒன்லி வர்ட். யூ பீப்பிள் ஆர் ரிடிக்குலஸ். டு நாட் புஷ் மி. ப்ளீஸ் டு நாட் புஷ் மி. ஐ வான்ட் த வர்க் டன் பை டுமாரோ. ஐ டோன்ட் மைன்ட் இட்ஸ் அ ஸன்டே. ஐ டோன்ட் கிவ் அ டாம் அபவ்ட் யுவர் பர்ஸனல் டைம் வென் யூ ஹாவ் க்ளியர்லி லெட் டவுன் த ஆர்கனைஸேஷன்…” இப்படி பத்து நிமிடம் பிடித்தது. ஃபோனை கட் செய்தவன் இவளைப் பார்த்தான்,

“ஹவ் ஆர் யூ?… உன்ன யார் இந்த வெயில்ல வந்து காத்திருக்கச் சொன்னது.. என்ன இப்பதான் முதன் முதல்ல ஊருக்கு வரேனா நானு”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“ரெண்டு ட்ராலி இருக்கு.. ஹவ் டு ட்ராவல் இன் யுவர் ஸ்கூட்டி. கார எடுத்துட்டு வந்திருக்கலாம்ல… இப்ப ஆட்டோ எடுத்துக்கலாம்.”

ஆட்டோ வைத்துவிட்டு தன்னோடு வந்திருக்கலாம் ஸ்கூட்டியில் ஆனால் ஆட்டோ காரனை நம்பி ட்ராலியை விட முடியாதாம். இவள் மட்டும் ஸ்கூட்டியில் ஆட்டோ பின்னாடியே வந்தாள். ஆரத்தி எடுப்பதை அவளே அறியாது மனம் தவிர்த்தது. வீட்டிற்குள் நுழைந்தவன்… “லுக்ஸ் நீட்.. என்ன தோரணமெல்லாம் கட்டிருக்க.. தெருவெல்லாமும் தோரணம் கட்டிருக்காங்க எதுவும் சாமி ஊர்வலமா?”

இவள் பேச வாயெடுப்பதற்குள் ஃபோன் ஒலித்தது. அட்டென்ட் செய்து “ஏக் ஸெக்கன்ட்” என்றவன். “ஏதோ சொல்ல வந்த?” என்றான் இவளிடம். “ஒன்னுமில்ல” என்றாள். “ஆல்ரைட்… வீ வில் ஹாவ் அவர் டைம். நைட் நயனோ க்ளாக் டின்னர் போகலாம் என்ன?” என்றான். சரி என்றவளை சற்றே பார்த்திருந்தவன் “என் வர்க் இன்னும் கம்ப்ளீட் ஆகல.. ஸோ லெட் மீ கான்ஸன்ட்ரேட்.. வேலதான் சம்பளம் கொடுக்குது.. கார் ட்ரஸ் ஃபுட் எல்லாம் வர்க்தான்.. ” என்றபடி ரூமுக்குள் சென்றுவிட்டான்.

இவளுக்கு வெறிச்சென்றிருந்தது. கோபமாய் வந்தது. தோரணம் கட்டியிருப்பது இனிப்பு செய்து வைத்திருப்பது ஒன்றையும் கவனிக்கவில்லை. ஒரே வார்த்தை “லுக்ஸ் நீட்” அவ்வளவுதான். இப்படி ஒரு குதூகலத்துடன் தானிருக்கும் போது சற்றேனும் அதை பகிர்ந்து கொண்டால்தான் என்ன? வர்க் வர்க்… சாப்பாடு கார் வீடெல்லாம் வர்க்தான் குடுத்துச்சாம். அப்போ இது மட்டும் போதுமா? இந்த அன்பு பாசமெல்லாம் கூட வர்க் குடுத்துருமோ? மனம் புலம்பி புலம்பி அடங்க சற்று நேரமெடுத்தது.

அத்தை இந்நேரம் என்ன செய்வாள்? மடப்பள்ளி பாத்திரத்தை ஆற்றில் அலம்பிக்கொண்டிருப்பாள். அப்பா கரையோரம் மர நிழல்ல படுத்துண்டு ஆத்த பாத்திட்டிருப்பார்.. நான் செஞ்சதுதான் தப்பு.. பெருந்தப்பு.. படிச்சிருக்கக் கூடாது.. எஞ்சினியரிங் போய் படிசேன்ல வேணும். முடிச்ச கையோட ஆத்துலயாது இருந்திருக்கலாம். போரேன் போரேன்னு வேலைக்கும் போனேன். கேம்பஸ் இன்டர்வியூல தூக்கி கைல கொடுத்தான் வேலைய.. ரெண்டு வருஷம் ஆச்சு புரிய.. நமக்கு காவிரிதான் சரின்னு. அதுக்குள்ள கல்யாணம் ரெடி.. இப்ப இந்த ஊரு… ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ வீட்டுக்கு வர மிஸ்டர் ஜானகிராமன். பெயர் மட்டும்தான் ஜானகி ராமன். இந்த தடவ போய் ஆறு மாசமாறது.. கொஞ்சம் கூட சந்திக்கிறோமேன்னு ஆவல் இருக்காதா.. கேட்டா தினம் தினம் வீடியோ கால்ல பாத்துக்கறமே என இழுக்க வேண்டியது.

லேசாக அழக்கூடத் தோன்றியது. கோபம் மேலெழுந்து ரூம் கதவை இடித்துத் திறந்து அவனுடன் சண்டையிட வேண்டும் போலிருந்தது. ஒரு பாடலும் பாடத் தோன்றவில்லை. காலையில் இருந்த எக்காளமெல்லாம் காணாமல் போய்விட்டது. எவ்வளவு முயன்றாலும் தன்னால் இப்போது ஒரு பாடல் பாட முடியும் எனத் தோன்றவில்லை. அத்தை எப்படியும் ஃபோன் எடுக்க மாட்டாள். ஆனாலும் அடிக்கலாம் என்று பட்டது. செல்ஃபோனை எடுத்து அழைத்தாள்,

“ஹலோ” குரலை கேட்டதுமே நீர் அரும்பியது.
“அத்த”
“சொல்டி கண்ணம்மா” அன்பான குரலை கேட்கவும் சற்று அழுதுதான் வைத்தாள்.
“ஹலோ என்ன ஆச்சு பேசுடீம்மா” என்றாள்.
“அத்த நீதான் எனக்கு பாட்டு சொல்லி சொல்லி கெடுத்து வெச்சிருக்க”

“நன்னா இருக்கே,, பாட்டு சொல்லிண்டு கெட்டுபோனவான்னு யாரும் இந்த லோகத்துல கிடையாதுடி”
“நான் ஒருத்தி இருகேன் அப்டி”
“என்ன ஆச்சுன்னு சொல்லுடீம்மா”
“ஒரு மண்ணுமில்ல அத்த விட்ருங்கோ”
“சொல்லுட்டீன்னா கழுத”

“ஆறு மாசம் கழிச்சு வீட்டுக்கு வரார்.. நான் வீட்ட நாலு தடவ கூட்டி பெருக்கி தொடச்சு தோரணமெல்லாம் கட்டி.. அமுது..ம்ச்..சாப்பாடு வகைவகையா செஞ்சு.. லட்டு புடிச்சு வெச்சேன் பாயாஸம் செஞ்சேன்.. எதையும் பாக்கல.. கழுத்துல பொழுதெல்லாம் தொங்கறதே அத காதுல செருகிண்டு ரூம் குள்ள போயாச்சு.. என் ப்ரெண்டு இருக்காளே ஜானவி, அவளும் வேலைக்கு போறா அவ ஹஸ்பண்டும் வேலைக்கு போறார்… பட்டும் படாம இருந்துக்குறா… வேலைக்கு போகவும் அத பாக்கவுமே நேரம் சரியா இருக்கு அவாளுக்கு.. நான் தன் பாட்டு பாடிண்டு வரார் வரார்னு.. இன்னும் டான்ஸ் ஆடாத கொறதான்,, நல்ல வேல அப்பா இந்த மோகன் மாமாவ சேக்கல வீட்ல.. சேத்திருந்தா டான்ஸூம் ஆடிண்டு அலைவேன்.. நீதான் பாட்டு சொல்லிக்கொடுத்த.. ஏக்கமும் காதலுமா இருக்குற கீதங்களா படிப்பிச்ச.. நான் அத வெச்சுண்டு நின்னா.. கிலோ எத்தன ரூபானு கேட்டாலும் பரவால்ல… திரும்பி கூட பாக்க முடியல யாராலயும்”

“கொழந்த”

“நீ கொழந்த போடாத அத்த என்ன.. நான் பேசாம ஊருக்கே வந்திடரேன்.. மடப்பள்ளீல உன்னோட வேல பாத்திட்டு பாட்டு படிச்சுண்டு இருந்துடறேன்..”

“நான் சொல்றத சித்த கேளுடீம்மா.. நான் உனக்கு படிப்பிச்ச பாட்டெல்லாம் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஆனது.. அந்த கீர்த்தனைகள்லாம் மனுஷாளுக்கானதல்ல.. அன்பும் ஏக்கமுமா ராதைதான் ஒரு வாழ்க்கைய பூரா கழிக்க முடியும்… மனுஷாளால முடியாது.. அப்படி பித்தெழுந்த அன்ப மனுஷாள நோக்கி செலுத்தவும் முடியாது. செலுத்துனா மிஞ்சறது ஏமாற்றம்தான்.. கனிஞ்ச மனசுலயே மனுஷாளால நீடிக்க முடியாது.. கொஞ்சம் கசப்பு வெறுப்பு கோபம் கயம வன்மம் எல்லாம் தேவ மனுஷனுக்கு.. பெரிய்ய மனுஷா கனிஞ்சு அன்புலயே நீடிக்கிறா.. எல்லாராலயும் முடியிரதில்லடி கொழந்த..நீ இங்லிஷ்ல சொல்வியே ‘டு எர் ஈஸ் ஹ்யூமன்ன்னு…’ அப்டியான மனுஷாள்ட்ட நீ அன்புலயே நெலச்சு நின்னுட்ட தேவனுக்கு படைக்கிறத படச்சா? அதுலயும் இப்ப காலம் நீ சொல்றாப்லதான் இருக்கு.. சோமு லீவ்ல வந்திருந்தான்.. காதுல மாட்டிண்டு சதா சர்வகாலமும் டென்ன்ஷனா பேசிண்டே இருந்தான்.. ஏன்டாப்பா இப்டியே இருந்தா ரத்தக் கொதிப்பு வந்துடாதோன்னேன்.. குர்ர்ர்ர்ருன்னு பாத்தான்.. அதுக்குள்ள ஃபோன் வரவும் காதுல மாட்டிண்டு நகந்துட்டான்… ஆனா இந்த மனுஷாதான் முயற்சி செஞ்சுண்டே இருக்கா.. கனிஞ்ச மனசு நன்னா இருக்குன்னு, அதுலயே நெலச்சுட முயற்சி செஞ்சுண்டே இருக்கா..”
” “
“என்ன கொழந்த அமைதியாய்ட்ட? என்ன சொன்னார் நீ பண்ணின அலங்காரம்லாம் பாத்து?”
“லுக்ஸ் நீட் அப்டின்னார்… நைட் நயனோ க்ளாக் டின்னர் போலாம்னார்”

அத்தை சிரித்தாள் “ஜானகிராமன் அவனால முடிஞ்சத செய்றான்… ஆனா பேர பாரேன்டி ஜாஆனகி ராமன்”

“சாயுங்காலம் ஆச்சுடீம்மா.. நான் இன்னும் விளக்கு போடல கோயில்ல,.. போறேன்… நீ போய் வீட்ல விளக்கேத்தி ஒரு கீர்த்தன பாடு.. எல்லாம் சரியாய்டும்”

மேலும் அரை மணி நேரமானது அவ்விடம் விட்டு எழ. அத்தையால் மட்டும்தான் இப்படி முடியும் என நினைத்தபடி இடம்விட்டு எழுதாள். உள்ளே ரூமுக்குள் இன்னும் பேசும் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. மெல்ல கதவைத் தட்டினாள். பின் திறந்தாள். பெட்டில் அமர்ந்தபடி,

“வன் மினிட்.. ப்ளீஸ் ஹோல்ட்..” என்றபின் “சொல்லு” என்றான்.
“காஃபி?” என்றாள்.
“ப்ளீஸ் குடேன்.. மை லைஃப் வில் பி ஸேவ்ட்”

காஃப்பி ரெடி செய்து கொடுத்த போது
“தாங்க் யூ ஸோ மச்.. தாங்க் யூ”
“லவ் யூ சொல்லலாம் ஒன்னும் தப்பில்ல” என்றாள்.

சிரித்தபடி “லவ் யூ வொய்ஃப்” என்றான்.

மீண்டும் அவன் அறையுள் சென்றுவிட வாசலுக்கு வந்தாள். இருட்டி விட்டிருந்தது. ஆனால் தெருவெல்லாம் சரம் சரமாய் விளக்கும் தோரணமும். தான் எப்படி காலையில் கவனிக்க விட்டோம் என வியந்துகொண்டாள். வளைவேதுமில்லாமல் ஒரே கோடாக நீண்ட தெரு அது. தெரு முனையில் ஊர்வலம் திரும்புவது தெரிந்தது. தீப்பந்த ஒளியில் கிருஷ்ணர் தெரிந்தார். மெல்லிய ஒரு நடனத்துடன் கிருஷ்ணர் நகர் வலம் வருவது வழக்கம். கால் மாற்றி சுமப்பவர்கள் ஆட, மெல்ல கிருஷ்ணன் ஆடுவது மங்கலாகத் தெரிந்தது. லேசாக நாதஸ்வர இசை கேட்டது. சிரித்துக்கொண்டாள். பித்தெழவில்லை. ஆனால் பூரணமாகச் சிரித்தாள். மெல்லப் பாடினாள்,

“அவன் நடந்து வர உடன் வந்தது வசந்தம்
உலகே நீ சிலைத்து நின்றது போதும்
புள்ளே நீ இறகொடுங்கி அமைந்தது போதும்
வானே நீலம் சூடு
நகரே விழவு கொண்டெழு
கண்களே மையிட்டெழுது
கைகளே வளைசூடு
பிறந்தவனும் பிறப்பித்தவனும் வருகிறான்
காதலிப்பவனும் காதலாகி நிற்பவனும் வருகிறான்
நீ படைக்கும் அமுதெல்லாம் உண்டு
உன் இல்லின் தோரணமெல்லாம் கண்டு
சூடி நிற்கும் அலங்காரமெல்லாம் நோக்கி
மெல்ல கண் சுழற்றுவான் மெச்சி
அழகென்று”

மெல்ல மெல்ல ஆடி கிருஷ்ணன் நெருங்கிக் கொண்டிருந்தார். இவள் பூரணமாய் நின்று கொண்டிருந்தாள். அருகிலிருக்கும் மரத்தின் அசைவு நடனமெனத் தோன்றியது. அடுத்தமுறை ஊர் சென்றால் மோகன் மாமாவை தேடிப்பிடித்து நடனம் சொல்லிக்கொண்டே ஆக வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.