
இரண்டு கேள்விகள் என்று ஞாபகம் இருக்கிறது, ஆனால் இரண்டாம் கேள்வி என்ன என்பதுதான் மறந்துவிட்டது. இப்படித்தான் சில நாட்கள் காலையில் எழுந்திருக்கும்பொழுதே ஓர் ஆப்த வாக்கியம் போன்றோ, மந்திர உச்சாடனம் போன்றோ, கவிதை வரிகள் மாதிரியோ, பிரகடன ஷரத்துக்கள் வடிவமாகவோ ஏதோ தோன்றும். அது அவளை நாள் முழுவதும் பின்தொடர்ந்துகொண்டே இருக்கும். மனம் மோப்ப நாய் மாதிரி அந்த வார்த்தைகளின் வாசனையைப் பிடித்துக்கொண்டே நினைவுகளின் காடுகளில், இரைக்க இரைக்க நாக்கு வெளியில் தொங்க ஓடி அவள் எதிர்பாராத இடங்களில் எல்லாம் அவளைக் கொண்டுசேர்க்கும்.
இன்றைய முதல் கேள்வி ஞாபகம் இருக்கிறது. எப்பொழுதிலிருந்து, எதனால் தனக்கு வங்க மொழி சம்பந்தப்பட்ட திரைப்படங்களும், கதைகளும் பிடிக்க ஆரம்பித்தன?
அவளுடைய பத்தாவது வயதில். அப்பா அழைத்துக்கொண்டு போன படத்தால்.
அப்பா ஒரு என்றும் மாறாத கற்பனாவாதி. கொஞ்சம் லக்ஷ்யம், கொஞ்சம் கம்யூனிஸம், கொஞ்சம் கற்பனாவாதம், கொஞ்சம் குதூகலம் எல்லாம் கலந்த கலவை அவர்.
அவளுடைய பத்தாவது வயதில் ஒரு நாள்,
“ ஏம்மா! பக்கத்து டூரிங்க் கொட்டையிலே தேவதாஸ் படம் வந்திருக்கு, பாக்கலாமா” என்றார். போதும் போதாதற்கு கண்களை உருட்டிக்கொண்டு
“ஓ! ஓ!ஓ!ஓ!தேவதாஸ்! ஓ!ஓ!ஓ!ஓ! பார்வதி! படிப்பும் இதானா, வாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கறே, ஊரைச் சுத்தறே” என்று பாடி வேறு காண்பித்தார்.
“சரிப்பா! படத்துக்குப் போலாம்! அதுக்குப் பாட்டெல்லாம் பாட வேண்டாம்”
“ஏம்மா! என் பாட்டு நன்னா இல்லையா?” என ஒரு பாவனையான வருந்தும் குரலில் கேட்டார்.
“ கொஞ்சம் சுமாரா இருக்கு! ஆனா பரவாயில்லை!” என்றாள் இவ
ளும் பாவனையான கடின குரலில். ஆனால் உண்மையிலேயே அப்பா பாடியது நன்றாகத்தான் இருந்தது. அப்பா சிரித்து அவள் தலையில் தட்டினார்.
அது அந்தக் காலத்து கறுப்பு வெள்ளை படம். நாகேஸ்வர ராவ், சாவித்ரி நடித்தது. அப்பா சொல்லியிருந்தார், அது சரத்சந்திர சாட்டர்ஜி என்பவர் எழுதிய பெங்காலி நாவலின் படமாக்கம் என்று. கொட்டகையில் விளக்குகள் அணைந்து படம் ஆரம்பித்ததுமே படம் அவளை உள்ளே இழுத்துக்கொண்டது. அந்த வங்காள கிராமத்தில் அவளும் வசித்து அவர்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சாவதற்கு முன் பார்வதியைப் பார்க்க தேவதாஸ் அவளிருக்கும் ஊர் செல்வதற்கு ரயிலில் பயணிக்கிறான். அவனின் படு மோசமான உடல் நிலையில் அவனால் கண்களைத் திறக்கக்கூட முடியவில்லை. அவன் உடலின் காய்ச்சலின் வெம்மை திரையைத் தாண்டி இவளை சுட்டது. அவன் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்து விட்டது. பிரக்ஞை தவறிய நிலையில் அவன். அந்த படு இருட்டான ரயில் நிலையத்தில் ஒரு கிழவன் மனித குலத்தின் சோகத்தை எல்லாம் திரட்டி இறுகப் பிடித்து ஒரு துளியாக்கி காலாதீதமான குரலில் துர்காபூர்.. துர்காபூர்..துர்காபூர்… என்று அறிவித்துக்கொண்டே ரயிலின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை கூவிக்கொண்டே போகிறான். தேவதாஸ் இன்னும் கண் விழிக்கவில்லை. இவளுக்கு பதைபதைப்பாக இருந்தது. “இறங்குடா ! கடங்காரா! கண்ணை முழிச்சுக்கோ” என்று வாய்க்குள் சொல்லிக்கொண்டாள்.
அப்பா” என்ன?’ என்று கேட்டார்.
தெய்வம் அவன் மேல் கருணை கூர்ந்து கண் திறந்து பார்த்த ஒரு மந்திர கணத்தில், தனக்குள் ரொம்ப தூரம் , ரொம்ப ஆழத்தில் அமிழ்ந்து கொண்டேயிருந்த அவனை, அந்த குரல் ஒரு கையாக உள்ளிருந்து இழுத்தது. கண்களை லேசாக விழித்தவன் காதுகளில் துர்காபூர் என்ற சத்தம் எங்கோ தொலை தூரத்திலிருந்து விழ, தட்டுத் தடுமாறி மெல்ல இறங்குகிறான்.
இவள் “அப்பாடா!” என்றாள். கொஞ்சம் அழுகை வரும்போல இருந்தது.
அந்த சினிமாவின் அந்த காட்சி மட்டும் அவளுடன் பல காலம் பயணித்தது.
அப்புறம் பல வருடங்கள் கழித்து அவளின் முப்பதுகளில் பல வங்காளப் படங்கள், கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்கக் கிடைத்தன. ஒவ்வொன்றைப் பார்க்கும் பொழுதும் அவள் அப்பாவை நினைத்தாள்.
ஏக் தின் அசானக் ( திடீரென்று ஒரு நாள்) என்று ஒரு மிருணாள் சென் படம். அதுவும் வங்க மொழிக் கதை தான், ஆனால் ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம்.
கல்கத்தாவின் பிரபலமான பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற புகழ் பெற்ற பேராசிரியர் ஒருவர், மழை பெய்கின்ற ஒரு சாயங்கால வேளையில் கையில் குடையுடன் தன் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். (ஒரு சாயங்கால நடைக்கோ அல்லது கடைக்கோ என்பது மாதிரியான ஒரு சர்வ சாதாரணமான வேலைக்காக)
பின்னர் அவர் வீடு திரும்பவேயில்லை.
அவர் வாழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாரும், அவருடன் வாழ்ந்த வாழ்க்கை, அவர் எதனால் வீட்டை விட்டுப் போயிருக்கக்கூடும், எங்கு போயிருக்கக்கூடும் என்றெல்லாம் யோசிக்கிறார்கள். அவர் மனைவி , மகள் அவருடைய பிரியத்துக்குகந்த ஆராய்ச்சி மாணவி இப்படி ஒவ்வொருவர் பார்வையிலும் விரியும் அந்தக் கதை. அவருடைய பெண்ணாக ஷபனா ஆஸ்மியும், ஆராய்ச்சி மாணவியாக அபர்ணா சென்னும் நடித்திருந்தார்கள்.
அப்புறம் அந்த நாட்களில் ஒரு பிரபலமான ஆங்கில , ஹிந்தி சானல் ஒன்று அழகான சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு மணிநேர படமாக ஒளிபரப்பினார்கள். அதில் ரொம்ப யதேச்சையாக பார்த்த ஒரு படம் சத்யஜித் ரேயின் ஒரு கதை. சத்யஜித் ரேயின் பல படங்களில் நாயகனாக நடித்திருந்த சௌமித்ர சாட்டர்ஜிதான் அந்த குறும் படத்தில் பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பேசும் படங்களுக்கு முந்தைய மௌனப் பட கால கட்டத்தில் ரொம்ப பிரபலமாக இருந்த நகைச்சுவை ஜோடியைப் பற்றிய கதை அது. சௌமித்ர சாட்டர்ஜியும் , இன்னொரு நடிகரும் (அவர் யாரென்று நினைவில்லை) நகைச்சுவை இரட்டையராக போடு போடென்று போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேற்குலகின் லாரல் ஹார்டி இரட்டையர் போல, வங்கத் திரையுலகில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை. கொஞ்சம் கொஞ்சமாக தொழில் நுட்பம் வளர வளர பேசும் படங்கள் திரையில் வலம் வரத் தொடங்கின.
இந்த இரட்டையர்கள் சில பேசும் படங்களிலும் தொடர்கின்றனர். ஆனால் அவர்கள் புகழ் மங்கத் தொடங்குகிறது. ஒரு வேளை பார்வையாளர்கள் மனதில் நினைத்துக்கொண்டிருந்த குரல் அவர்களின் நிஜக் குரலுக்குப் பொருந்தவில்லையா அல்லது அவர்களால் புதிய தொழில் நுட்பத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தெரியவில்லையா? ஏதோ காரணங்களால் அவர்கள் மெல்ல மெல்ல மறக்கப்படுகிறார்கள். திரை உலகின் வெளிச்சத்திலிருந்து கண்காணாமல் எங்கோ போய்விடுகிறார்கள். அவர்களைத் திரையில் பார்த்த தலைமுறை மறைந்து போன பிறகு அவர்கள் ஜனங்களின் நினைவிலிருந்து முற்றாக நீங்கிவிடுகிறார்கள்.
அந்த இரட்டையரில் சௌமித்ரா ஓரளவு பணவசதி படைத்த நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் , கொஞ்சம் கொஞ்சமாக தொழில் ஒன்று தொடங்கி சில பல வருடங்களில் தொழிலதிபர் ஆகி விடுகிறார். அவருடன் இருந்த அந்த இரட்டையரில் மற்றவர் கிராமத்திலிருந்து வந்த ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் கையிலிருந்த சொற்ப பணம் கரைந்து போனவுடன் தன்னுடைய கிராமத்துக்கே திரும்பிப் போய்விடுகிறார்.
இப்போது எழுபத்தைந்து வயதான சௌமித்ரா தன் தொழிலிருந்தும் ஓய்வு பெற்று, கல்கத்தாவின் மேல்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் ஆடம்பரமான, அழகான, அமைதியான குடியிருப்புப் பகுதியில் அழகிய தோட்டத்துடன் கூடிய ஒரு பங்களாவில் ஒரு வேலைக்காரனுடன் தனியே வசித்து வருகிறார். அவருக்கு இருக்கும் சொற்பமான நண்பர்களுடன் மாலை நடைக்குப் போவது, பாட்மின்டன் விளையாடுவது, அவருடைய அற்புதமான பாடல் சேகரத்திலிருந்து ஹிந்துஸ்தானி சங்கீதம், ரபீந்த்ர சங்கீதம், மேலை இசை இவைகளைக் கேட்பது, செஸ் விளையாடுவது என்று அவரின் நாட்கள் கழிகின்றன. அவர்கள் யாருக்கும் கூட இவர் நாற்பந்தைந்து ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் நடித்திருக்கிறார் என்று தெரியாது.
ஒரு நாள் வெகு யதேச்சையாக சத்யஜித் ரே, ரித்விக் குமார் கடக் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தன்னை அறியாமல் தான் சினிமாவில் நடித்த காலத்தைப் பற்றிச் சொல்கிறார். நண்பர் நம்ப முடியாத ஆச்சரியத்தில் மூழ்கி விடுகிறார்.” உங்களுடன் நடித்த அந்த இன்னொரு நடிகர் இப்போது எங்கே இருக்கிறார்? நீங்கள் பின்னர் எப்போதாவது அவரைப் பார்த்தீர்களா?’ என்று நண்பர் கேட்கிறார்.
சௌமித்ரா ரொம்ப துக்கத்துடன் “இப்போது கொஞ்ச நாட்களாக அவர் நினைவு ரொம்ப வருகிறது. பார்க்கவேண்டும் போல இருக்கிறது” என்கிறார்.
“ நீங்கள் அவர் கிராமத்தின் பேரைச் சொல்லுங்கள். நிச்சயம் கண்டு பிடித்து விடலாம்” என்கிறார் நண்பர்.
“அதைத்தான் கடந்த ஒரு வாரமாக நினைவு படுத்திக்கொள்ள முயல்கிறேன். கொஞ்சம் கூட நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது ” என்று வருத்தத்துடன் சொல்கிறார். அப்புறம்…….
ரொம்ப பொருத்தமான , அற்புதமான முடிவு கொண்ட கதைகளில் இந்த கதைக்கு அதிமுக்கியமான இடம் இருக்கிறது என்று அவள் எப்போதும் நினைத்துக்கொள்வாள்.
அப்புறம் இப்பொழுது சமீபத்தில் ரபீந்த்ரநாத் தாகூரின் வாழ்க்கையை அடியொற்றி எடுக்கப்பட்ட காதம்பரி என்ற படத்தைப் பார்த்திருந்தாள். காதம்பரி, ரபீந்த்ரநாத் தாகூரின் அண்ணா ஜோதிந்த்ரனாத் தாகூரை மணந்துகொண்டு அவர்கள் வீட்டுக்கு வரும்பொழுது அவளுக்கு ஒன்பது வயது. அவளுக்கும் அவள் கணவருக்கும் பத்து வயது வித்தியாசம். முன் பின் தெரியாத பல பெரியவர்கள் கூடியிருக்கிற பெரிய அரண்மனை மாதிரியான பங்களாவில் சத்தமும் இரைச்சலுமான சூழ்நிலையில், குழப்பமும், கலக்கமுமான மன நிலையில் அவள் சுற்றும் முற்றும் பார்க்கும்பொழுது தூணை ஒட்டி நின்றுகொண்டு அவளைப் பார்க்கிற அந்த சிறுவன் கண்ணில் படுகிறான். தன்னையொத்த வயதில் இருக்கிற சிறுவனைப் பார்த்ததும் அவளுக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அந்த ஏழு வயது பையன் ரபீந்த்ரநாத் தாகூர்!
அன்றிலிருந்து அவளும் ரபீந்த்ராவும் உற்ற விளையாட்டுத் தோழர்களாகிறார்கள். அரண்மனையின் மூலை முடுக்கில் எல்லாம் ஓடி, ஒளிந்து விளையாடுவது, தோட்டத்துக்குச் சென்று மலர்களை , வண்ணத்துப் பூச்சிகளை ரசிப்பது, அஸ்தமன சூரியனின் அழகில் லயித்திருப்பது என்று அவர்கள் பொழுது தினமும் விளையாட்டும், சந்தோஷமுமாக கழிகிறது.
அவர்கள் வளர வளர அந்த நட்பும், அன்பும் வளர்கிறது. ரபீந்த்ரா எழுதுகிற கவிதைகளுக்கு முதல் ரசிகை ஆகிறாள் காதம்பரி. அவனை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கிறாள்.
ஜோதிந்த்ரனாத் தாகூரும் ஓவியம், சங்கீதம் , புத்தக மொழிபெயர்ப்பு என்று பல்துறை வித்தகராக இருக்கிறார். காதம்பரியைப் படிப்பதில் ஊக்குவிக்கிறார். குதிரையேற்றம் கூட கற்றுக் கொடுக்கிறார். ஆனாலும் குடும்பத் தொழிலைக் கவனிப்பதிலும் பின்னர் தானே தனிப்பட்ட முறையில் ஆரம்பித்த தொழிலிலும் அவர் முனைப்போடு ஈடுபடுவதினாலும், அவரால் காதம்பரியுடன் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. அவளுடைய அந்த தனிமையைப் போக்கும் சினேகிதனாக ரபீந்த்ரா இருக்கிறார். அவர்களிடையே இருந்த பெயரிட முடியாத அந்த நேசத்தை, ப்ரியத்தை, நட்பை அந்தப் படம் வெகு அழகாகக் காண்பித்தது.
இந்நிலையில் ரபீந்தரநாத் தாகூருக்கு திருமணம் நடக்கிறது. காதம்பரி அந்தத் திருமணத்திற்கு நாலு மாதங்களுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டு இறக்கிறாள்.
காதம்பரியாக கொங்கனா சென் ஷர்மாவும், தாகூராக பரம்பிரத சாட்டர்ஜியும் அற்புதமாக நடித்திருந்தனர். தாகூர் வேடத்திற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது பரம்பிரதாவின் முகம். கையில் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் அப்படியே ஏசுநாதர் மாதிரியும் இருப்பார் என்று அவளுக்குத் தோன்றியது.
இந்த இடத்தில் ஓடிச்சென்று நின்ற மோப்ப நாய் கேட்டது,
“இந்த இடம் நினைவிருக்கா? நீ இங்கு வந்து பல வருடங்கள் ஆகிறதே?”
“ஓ மை காட்! ஓ மை காட்! இந்த இடம் எப்படி இத்தனை நாள் என் நினைவில் வராமல் போனது? நீ சொன்னது போல பல வருடங்கள் முன்னால் நினைத்திருக்கிறேன். சமீபத்தில் இந்த நினைவே வந்ததில்லை!”
சுற்றி முற்றி பார்த்தாள்.சாந்தி நிகேதனேதான்!
அவளுடைய கல்லூரி நாட்களின் முதல் வருடத்தில், தென் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு, ஏழு கல்லூரிகளிலிருந்து பதினைந்து மாணவ மாணவிகள் பல்கலைக் கழகத்தின் கலாசார பரிவர்த்தனைக் குழுவினராக சாந்தி நிகேதனின் விஷ்வபாரதி பல்கலைக்கழகத்திற்குப் போவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.
கல்கத்தாவிலிருந்து (அப்போதெல்லாம் அப்படித்தான் சொல்வார்கள்)
ரயிலில் போல்புர் ரயில் நிலையத்தில் இறங்கினார்கள். அவர்களுடன் அவளின் கல்லூரிப் பேராசிரியைகள் இருவரும், மற்றொரு ஆண்கள் கல்லூரி முதல்வரும் அவர் மனைவியும் அவர்களுக்குத் துணையாக வந்திருந்தனர்.
அவர்களை வரவேற்க சாந்திநிகேதனிலிருந்து ஒரு மாணவர் குழு ஒன்று ரயில் நிலையத்துக்கு வந்திருந்தது. அப்போதுதான் அவனை அவள் பார்த்தாள். நல்ல உயரமாக , கொஞ்சம் ஆஜானுபாகு என்றே சொல்லலாம், சிவப்பாக , சுருள்தலையுடன் இருந்தான். சிரித்துக்கொண்டே தான் மாணவர் சங்கத் தலைவன் சமீர் தத்தா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு “வெல்கம் டு சாந்தினிகேதன்” என்றான். நிரஞ்சன் சௌத்ரி மாணவர் சங்க செயலாளர், கொஞ்சம் சின்ன உருவாக துறுதுறுவென்று இருந்தான். பானர்ஜிக்களும் சாட்டர்ஜிக்களும் , சக்ரபர்த்திகளும், கோஷ்களும் எல்லாருக்கும் கை குவித்து வணக்கம் சொன்னார்கள்.
சமீர் அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுஜா அக்காவை இரண்டு மூன்று முறை பார்க்காததுபோல பார்த்தான்.
கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டிருந்த ராகினி மே’ம் அவளைப் பார்த்து கண்ணை உருட்டி என்ன என்பதாக சமிக்ஞையில் கேட்டார். அவள் உதட்டைப் பிதுக்கி தோளை அசைத்தாள்.
சாந்தினிகேதனில் உள்ளே நுழைந்ததும் அந்த பசிய மரங்களினூடாகத் தெரிந்த வெளிறிய மஞ்சள்நிற கட்டிடங்கள் காலம் அங்கே மெல்ல மெல்ல சிற்றடி எடுத்து வைத்து நடக்கிறதோ என்பது மாதிரியான ஒரு தோற்ற மயக்கத்தைக் கொடுத்தன.
அவர்கள் தங்கும் இடத்தைக் காண்பித்துவிட்டு சமீர் தத்தா
“கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மணிநேரத்தில் வருகிறேன். எல்லோரும் சிற்றுண்டி தேனீர் அருந்திவிட்டு ஒரு சின்ன அறிமுகம் செய்துகொள்ளலாம். உங்களுடைய இந்த நாலு நாட்கள் தங்கலில் என்ன என்ன செய்யப் போகிறோம் என்று முடிவு செய்யலாம்” என்றான்.
“இஸ் தட் ஓகே மே’ம்?” என்று ராகினி மே’மையும் , வத்சலா மே’மையும் பார்த்துக்கேட்டான்.
ராகினி மே’ம் ” தட் சௌண்ட்ஸ் குட்! தாங்க்ஸ்!”என்றார். வத்சலா மே’ம் தலை அசைத்தார்.
அவன் அவளைப் பார்த்து “பை! சோட்டு!” என்றான்.
“என் பெயர் மீனாக்ஷி!”
“ரொம்ப நல்ல பேரு! எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான்.
“என்னை ஏன் சோட்டு என்றீர்கள்?”
“நீ ஊரில் இருக்கும் என் குட்டித் தங்கை மாதிரி இருக்கிறாய்! அவளை அப்படித்தான் அழைப்பேன்! உன்னையும் அப்படி அழைத்தால் பரவாயில்லைதானே? ” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“பரவாயில்லை ! நான் உங்களை எப்படி அண்ணா என்று உங்கள் மொழியில் அழைப்பது?”
“சோட்டு ! நீ ரொம்ப ரொம்ப ஸ்மார்ட்!” என்று அவளைத் தோளில் தட்டிவிட்டு “என்னை சமீர் தா என்று அழை!” என்றான்.( அந்த ‘தா’ வை தமிழில் தந்தம் என்பதில் வரும் த போல சொல்லவேண்டும்) .
சாயங்காலம் எல்லாரும் ஒரு சிறிய அரங்கிற்கு சென்றார்கள். மாணவர் சங்கத்தின் பல்வேறு துணைச் சங்கங்களின் செயலாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அவர்கள் குழுவினர் அனைவரும் அவர்கள் பெயரைச் சொல்லி என்ன படிக்கிறோம் என்பதையும் சொன்னார்கள். சுஜா அக்கா மெதுவான குரலில் “சுஜாதா! ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு” என்றாள்.
சமீர் தா ” அழகான பெயர்!” என்றான். அக்கா வேறு பக்கம் பார்த்தாள்.
சாந்திநிகேதன் குழுவில் இருந்து ஒரு பையன் அப்போது பிரபலமாக இருந்த ஒரு ஹிந்தி பாட்டைப் பாடினான். அந்த பாட்டின் தோராயமான அர்த்தத்தை சொல்லிவிட்டுப் பாடினான்.
‘மே ஷாயர் தோ நஹி! மகர் ஹை ஹசீன், ஜப் சே தேகா மைனே துஜ்கோ முஜ்கோ ஷாயரி ஆ கயி’ (நான் கவிஞன் இல்லை, ஆனால் அழகிய பெண்ணே! நான் உன்னைப்பார்த்ததும் எனக்கு கவிதை வந்துவிட்டது)
அந்த பாடலின் இடையே சிற்சில சமயங்களில் சமீர் தா சுஜா அக்காவைப் பார்த்தான். பொதுவாக மற்றவர்கள் கவனத்துக்கு வராதவாறு, ஆனால் பார்க்கப்படுபவருக்கு மட்டும் உணர்த்துவது போல. அக்கா மீனாக்ஷியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ” என்ன மீனு! என்ன மீனு இது! ரொம்ப கஷ்டமா இருக்கே!” என்று மெதுவாக அவள் காதுகளில் முணுமுணுத்தாள். ராகினி மே’ம் வேறு சமீரையும், சுஜா அக்காவையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தார்.
சங்கர் என்று திருநெல்வேலியில் இருந்து வந்த பையன் ” இதே மாதிரி ஒரு கவிஞன் தான் பார்த்த பெண்களிலேயே இவளை மாதிரி அழகான பெண்ணை பார்த்தேயில்லை என்று தமிழில் பாடியிருக்கிறான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
பையன்கள் உற்சாகமானார்கள், நிரஞ்சன் அவனை முதுகில் தட்டிப் பாடச் சொன்னான்.
அவன் கணீரென்ற குரலில் “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன், நல்ல அழகி என்பேன்,” என்று பாட கைதட்டல் அரங்கு அதிர்ந்தது.
பின்னர் அவர்களுடைய குழுவில் வந்த மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து “அதோ அந்த பறவை போல ” பாட ஆரம்பித்ததும் அந்த வங்காள மாணவர்களும் கோரஸில் கலந்துகொண்டு அந்த இடமே ஒரே ஆரவாரமும், குதூகலமுமாக கிளர்ந்தது.
“பெண்கள் யாரும் பாடவேயில்லையே” என்றான் அருண் கோஷ்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அவர்களுக்குள் வீணை வாசிப்பவளாக இருந்த லலிதாவை எல்லோரும் பார்த்தனர்.
“எனக்கு இந்த மாதிரி ஜாலியான சினிமா பாட்டெல்லாம் தெரியாதுப்பா! தொண்டை வேறு சரியில்லை!”
“ மே’ம்! நீங்க?” என்று வத்சலா மே’மைப் பார்த்தாள் லலிதா.
வத்சலா மே’ம் ஒரு பாரம்பர்யமான இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தாத்தா நீடாமங்கலம் சாமினாத அய்யர் கர்னாடக சங்கீத உலகில் ரொம்ப பிரபலமான பெயர். அன்றைய காலகட்டத்தில் சென்னை சபாக்களில் பாடிக்கொண்டிருந்த பாதிப் பேர் அவருடைய சிஷ்யர்கள்தான்.
மே’ம் கண்களை மூடிக்கொண்டு “ம்………” மெதுவாக சுருதி பிடித்து ” கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி, கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலன் தன்னை… கண்ட நாள் முதலாய்……” இனிமையும் , கம்பீரமுமாக அவர் குரல் அந்த அறையை நிறைத்தது.
ராகினி மே’ம் மீனுவைப் பார்த்து நம்ப முடியாத ஆச்சரியத்தோடு தன் பெரிய வட்டக் கண்களை விழித்து , கைகளை விரித்து வாயசைப்பாக
“என்னது இது?” என்று கேட்டார். ராகினி மே’ம் பரத நாட்டிய கலைஞர். (அவர்கள் குழுவின் நடனத்தை அவர்தான் ஒருங்கிணைத்திருந்தார்.) இயல்பாகவே அவர் முகம் பாவபூர்வமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
அவள் சமாதானமாக தலையை லேசாக சாய்த்து ” பரவாயில்லை” என்பதாக சைகை செய்தாள்.
அரங்கு அதிர கைதட்டல். வத்சலா மே’ம் நாணப் புன்னகையுடன் அதை அங்கீகரித்தார்.
“அற்புதம் மே’ம்! என்ன அர்த்தம் இந்த பாட்டுக்கு?’ என்று சமீர் தா கேட்டான்.
வத்சலா மே’ம் கார்த்திகேயனைக் கண்டதுமே காதல் கொண்ட பெண்ணைப்பற்றின பாடல் அது என்று கொஞ்சம் விளக்கமாகவே சொன்னார்.
ராகினி மே’ம் தலையில் கை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தார்.
வத்சலா மே’ம் அதைப் பார்த்துவிட்டு ” ஏன்? என்ன ஆச்சு?”என்றார், பின் அவளைப் பார்த்து “என்ன மீனாக்ஷி?” எனக் கேட்டார்.
“மேமுக்கு லேசாக தலை வலிக்கிறது போலிருக்கிறது, நம்முடைய நாலு நாட்கள் நிகழ்ச்சி நிரல் என்ன என்று இவர்களிடம் கேட்டு விடலாம். ஒத்திகைக்கான கால அவகாசத்திற்கேற்ப மாற்ற வேண்டியிருந்தால் மாற்றலாம் “என்றாள் மீனாக்ஷி.
“சமீர் தா! எங்களுடைய நான்கு நாட்கள் நிகழ்ச்சிகள் என்ன?”
என்று கேட்டாள் .
“நாளை திங்கட்கிழமை காலை உத்தராயன் வளாகத்தில் இருக்கும் தாகூர் அருங்காட்சியகத்திற்குப் போகலாம். பக்கத்தில் அவர் குடும்பத்தினர் கட்டிய பல மாளிகைகள் இருக்கின்றன. பொதுவாக சுற்றிப் பார்க்கலாம். நாளை சாயங்காலமும் மறுநாள் காலையும் உங்கள் ஒத்திகை. செவ்வாய் , புதன் இரண்டு நாட்களும் நிகழ்ச்சி. வியாழன் வளாகத்தில் சில இடங்கள், கலா பவன் , சங்கீத் பவன் , சில மரத்தடி வகுப்புகள் பார்த்துவிட்டு, மாலை சினிமாவிற்குப் போகிறோம், கிராமத்தில் வங்காள சினிமா பார்க்கிற அனுபவத்திற்காக. சொல்ல மறந்து விட்டேனே புதன் இரவு எங்களுடைய சில பேராசிரியர்களுடன் விருந்து. வியாழன் ஏற்கனவே சொல்லிவிட்டேன். வெள்ளி இரவு நீங்கள் கிளம்புகிறீர்கள்”
அவ்ர்களுடன் வந்த ஆண்கள் கல்லூரி முதல்வர் சமீரின் முதுகில் தட்டி
“ரொம்ப நல்ல ப்ரோகிராம் போட்டுருக்கீங்க! ஆனா அந்த சினிமா வேணுமா என்ன?” என்று கேட்டார்.
பையன்கள் எல்லாம் “சார்! என்ன சார் ! நியாயமேயில்லை” என்று கத்தினார்கள்.
“சரி! சரி! எல்லா இடத்துலையும் சினிமா ஒண்ணுதானே. டயம் வேஸ்டுன்னு பாத்தேன்!! என்னவோ பண்ணுங்க போங்க!” என்றார்.
தாகூர் அருங்காட்சியகம் அழகாக இருந்தது. தாகூர் பயன் படுத்திய பொருட்கள், அவரின் ஓவியங்கள், அவருக்கு உலகின் பல இடங்களிலிருந்தும் வந்த பரிசுப் பொருட்கள், அவர் கைப்பட எழுதிய கவிதைகள், கதைகள், அவர் சந்தித்த பெருந்தலைவர்களுடான புகைப்படங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுபதக்கம். (அவர்கள் சென்று வந்த பல வருடங்களுக்குப் பின்னர் அது அங்கிருந்து திருடு போய் விட்டது என்று நாளிதழ்களில் படித்த போது அவளுக்கு வருத்தமாக இருந்தது).
மரங்களின் ஊடாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் “உஷ்!” வாயில் விரல் வைத்து அவர்களை அசையாமல் நிற்க சொன்னான் நிரஞ்சன் சௌத்ரி. எதிர் பக்கத்தில் சற்று தூரத்தில் இருந்த குறுங்காட்டில் இருபது இருபத்தைந்து மான்கள் புல்லை மேய்ந்து கொண்டிருந்தன. அவர்கள் இருப்பை உணர்ந்து அவை தன் செவிகளை விரைப்பாக வைத்துக்கொண்டு அசையாமல் நின்றன. அவர்கள் அனைவரும் சத்தம் போடாமல் நின்றார்கள். அக்காவின் அருகில் சமீர் தா நின்று கொண்டிருந்தான். அவன் மான்களைப் பார்க்காமல் அக்காவையே பார்த்துக்கொண்டிருந்தான்.சுஜா அக்கா அவள் கைகளை பற்றிக்கொண்டாள். கன்னங்களும் காதுகளும் செம்மை கொண்டன. எதிர் திசையையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்களுடன் வந்த யாரோ லேசாக தொண்டையை செருமிய மாதிரி இருந்தது.
அத்தனை மான்களும் ஒரே நேரத்தில் அவைகளின் கால்கள் காற்று வெளியில் ஜிவ்வென்று பறக்க , ஓர் அழகான பாலே நடன ஒத்திசைவு போலத் தாவின. அனைவரும் ஏக காலத்தில் பெரு மூச்சு விட்டோம்.
சமீர் தா “சுஜாதா…” என்று மென்மையாக அழைத்தான்.
அக்கா திரும்பாமல் எதிரில் இருந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கு முன்னாலும் அன்றைய காலையிலும், முந்தின நாளும் சமீர் தா சுஜா அக்காவிடம் பேச முயற்சி செய்துகொண்டே இருந்தான். அக்கா அதைத் தவிர்த்துக்கொண்டே இருந்தாள்.
சமீர் தா தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனாக இருந்தான்.
“சுஜா! மேலே என்ன செய்யலாம் என நினைத்திருக்கிறாய்? இந்த வருடத்தோடு பட்டப்படிப்பு முடிக்கிறாய் அல்லவா?”
அக்கா பதில் சொல்லவில்லை.
“கமான்! சுஜா! இந்த சாதாரணமான கேள்விக்குக்கூட ஏன் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய்? ஏதாவது சொல்லேன்!”
…………….
“சோட்டு! நீ சொல்லேன் அவளுக்கு”
“சமீர் தா ! நீங்கள் கேட்க நினைப்பது இது அல்ல என்று அவளுக்குத் தெரியும். அதான் பேச மறுக்கிறாள்.”
“ மை காட்! சோட்டு! யூ ஆர் சோ…..”
சப்யசாச்சி அருகில் வந்து “சமீர்! உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்” என்று
அவன் தோளைத் தட்டிவிட்டு அவளைப் பார்த்து “மன்னிக்கவும் குறுக்கிட்டதற்கு” என்றான்.
சமீர் தா அவனைக் கவனிக்காமல் “……..ப்ரூடல்லி ஹானஸ்ட்! சோ ஸ்மார்ட் டூ” மீனுவின் முதுகில் தட்டினான்.
சிறிது தூரம் நடந்ததும் மீனுவைத் திரும்பிப் பார்த்தான். ராகினி மே’ம் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார் என்பதை மீனு உணர்ந்தாள்.
மற்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவையான உடைகள், அணிகலன்களை அடுத்த அறையில் சரி பார்த்துக்கொண்டிருந்தனர்.
ராகினி மே’ம் “என்ன நடக்குது இங்கே?’ என்று மீனாக்ஷியிடம் கேட்டார்.
“மே’ம்?”
“சும்மா நடிக்காதே! உனக்கு நிச்சயம் என்ன கேக்கறேன்னு தெரியும். சமீருக்கும் சுஜாக்கும் நடுவிலே என்ன?”அடுத்த அறையில் இருப்பவர் காதில் விழாமல் இருக்க மெதுவாகப் பேசினார்.
“வா! வெளில தோட்டத்துல போய் பேசலாம் “என்றார்.
“நிஜமாவே என்னப்பா நடக்குது. ?” வத்சலா மேம் கொஞ்சம் குழப்பத்துடன் கேட்டுக்கொண்டே அவர்களுடன் வந்தார்.
“இப்ப சொல்லு”
“ஒண்ணும் இல்ல மே’ம்! சமீர் தா க்கு அக்கா மேல ஒரு இன்டரஸ்ட் இருக்குன்னு நினைக்கறேன். அக்கா அதற்கு இடம் கொடுக்காம விலகியே இருக்காங்க அவ்வளவுதான்!”
“பாத்து ஒரு நாள் ,இரண்டுநாளைக்குள்ள என்ன அவ்வளவு பெரிய….. இன்டரஸ்ட்?”
“அதான் மே’ம் பாடினாங்களே கண்ட நாள் முதலாய் னு” சிரித்தாள் மீனு.
“ஐய்யோ!நான் பாடினது தப்பா போச்சோ?” வத்சலா மே’ம் உண்மையிலேயே பயந்தார்.
“நீ சும்மா இரு வத்சலா! அதெல்லாம் ஒண்ணும் இல்ல! இதைப் பாரு மீனாக்ஷி! உங்க அப்பா அம்மா எங்க மேல நம்பிக்கை வைச்சு உங்களையெல்லாம் எங்களோட அனுப்பியிருக்காங்க! இந்த பத்து நாள் ட்ரிப் முடிஞ்சு உங்களை பத்திரமா அவங்ககிட்ட கொண்டுசேக்கணும் ! எதாவது ஏடாகூடமா நடந்தா யார் பொறுப்பு ஏத்துக்கறது?”
“நான் என்ன பண்ணனும் மே’ம்?”
“கொஞ்சம் அவனுக்குப் புரிய வை! உன்னைத்தான் அவன் சோட்டு சோட்டுங்கறானே! அப்புறம் அவன் உன்னைத் தொட்டுப் பேசறதும் சரி இல்லை!”
“நான் அவன் கிட்ட சொல்றேன் மே’ம்! அவன் என்னைத் தன்னோட தங்கையா நினைக்கறான்! அதான்!”
“இருக்கட்டுமே! நம்ம ஊர்ல சொந்த அண்ணா கூட ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்புறம் தங்கையைத் தொட்டுப் பேசறதில்லைன்னு சொல்லு”
அவள் மே’ம் கண்களைப் பார்த்தாள்.
ராகினி மே’ம் கொஞ்சம் மென்மையான குரலில் “நீ என்ன நினைக்கறேன்னு தெரியுது! நம்ம ஊர்ல ரொம்ப முற்போக்கு சிந்தனையோட சரளமா இருக்கற மே’ம் ஏன் இப்படி இருக்காங்க? அதானே உன் கேள்வி? என்ன செய்யறது? பொறுப்பு வரும்போது கொஞ்சம் முற்போக்கைப் பத்தி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கு!”
கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னார் “நீ இங்க இருக்கற மத்தவங்களைக் காட்டிலும் சின்னவளா இருந்தாலும் கூட அவங்களை விட உனக்கு அறிவு முதிர்ச்சியும், நிதானமும் ஜாஸ்தி ! அதான் உங்கிட்ட சொல்றேன்”
சினிமா பார்த்துவிட்டு திரும்பி கொண்டிருந்தார்கள். கிராம சினிமா கொட்டகையில் சினிமா பார்த்துவிட்டு வருவதான அனுபவத்தை முழுமையாக உணர வைக்கும் முகமாக எல்லோருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களுக்கும், குதிரை வண்டிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். முழு நிலவு நாளுக்கு சில தினங்களே இருந்ததால், நிலவு ஒளி பாதையோர மரங்களிலும், கிராமத்து சரளைக்கல் பாதையிலும், சாலையில் மரங்களின் இடைவெளியில் தெரிந்த வயல்களிலும், குளங்களிலும் பனி போல் படர்ந்து கனவு சாயையைக் கொடுத்திருந்தது. அதை கலைக்க மனமில்லாததுபோல் எல்லாரும் பெரும்பாலும் அமைதியாக இருந்தனர். அபூர்வமான பேச்சுகூட ரொம்ப அடங்கி மென்மையான முணுமுணுப்பாக ஒலித்தது. குதிரையின் குளம்படி சத்தம், மனதின் தாளமாக ஒலித்தது.
சமீர் தா மீனுவும், சுஜாதாவும் சென்று கொண்டிருந்த ரிக்ஷா அருகில் வந்தான். “சோட்டு! சினிமா எப்படி இருந்தது?” என்று கேட்டான்.
அது உத்தம் குமாரும், சுசித்ரா சென்னும் ( பாட்டி சுசித்ரா சென், அம்மா மூன் மூன் சென் ,பெண்கள் ரைமா சென்,ரியா சென்) நடித்த கறுப்பு வெள்ளைப் படம். காதல் படம். நம்ம ஊர் சிவாஜி , பத்மினியின் பழைய படம் மாதிரி இருந்தது.
“பரவாயில்லை சமீர் தா! எங்கள் ஊர் பழைய படம் பார்க்கும் உணர்வு இருந்தது.”
சமீர் தா அவள் பேசியதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அக்காவைப் பார்த்து “சுஜா!” என்று மெல்ல அழைத்தான்.
அக்கா “ம்?” என்றாள்.
மீனுவுக்கே ஒரு கணம் ஆச்சர்யமாக இருந்தது.
“நீங்கள் நாளை இரவு கிளம்புகிறீர்கள்! நான்….. அதாவது எப்படிச் சொல்வது? உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும்!”
அக்கா மிக மெதுவாக இறைஞ்சுவது போல “ப்ளீஸ்! ப்ளீஸ் ! ஒன்றும் சொல்லாதீர்கள்! எதுவும் சொல்லவேண்டாம் ” என்றாள்.
இரண்டு ரிக்ஷாக்களும் ஒரே வேகத்தில் அருகருகே சென்றுகொண்டிருந்தன.
சமீர் தா கெஞ்சுவது போல “சுஜா! சுஜா!……”என்றான்.
அக்கா அவனை முதன் முறையாக நிமிர்ந்து பார்த்தாள். அக்காவின் பக்கவாட்டுத் தோற்றத்தில் அவள் கண்களில் பளபளத்த கண்ணீர் தெரிந்தது. சமீர் தா அவன் ரிக்ஷாவிலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு மிக நீண்ட நிமிடம் அவர்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். மேலே நிலவு தன் கண்ணீரை அவர்கள் மேல் பாலாய்ச் சொரிந்தது என்று மீனுவுக்குத் தோன்றியது. சமீர் தா மறு வார்த்தை பேசாமல் , ரிக்ஷாக் காரனிடம்
வேகமாகப் போகும்படி சொன்னான். அவன் ரிக்ஷா அவர்களுக்கு முன்னால் வெகு வேகமாகச் சென்றது.
மறுநாள் இரவு . மீண்டும் போல்புர் ரயில் நிலையம். ரயில் பெட்டியின் உள்ளே குண்டு பல்பின் மங்கிய மஞ்சள் வெளிச்சம். ரயில் நிலையமும் இருட்டு கட்டிக்கொண்டிருந்தது.
சமீர் தா சந்தன வண்ண குர்தா அணிந்திருந்தான். ஒரு காலை மடக்கி இன்னொரு காலை லேசாக நீட்டியபடி , அவன் ஒரு ரபீந்திர சங்கீத் பாடலைப் பாடிக் கொண்டிருந்தான்.
பாடுவதற்கு முன்னால் அதன் அர்த்தத்தைச் சொன்னான்.
தன் காதலி வருவாள் வருவாள் என்று எதிபார்த்து ஒரு நதிக்கரையோரத்தில் காத்துக்கொண்டிருக்கும் காதலன் பாடுவது போன்ற பாட்டு. (தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா பாட்டு கொஞ்சம் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் எல்லா மொழிகளிலும் எல்லா காதலர்களும் நீர்நிலைகளுக்கு அருகே காத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள் என்று அவளுக்கு இப்போது தோன்றியது.) ஆனால் அந்த காதலி கடைசி வரை வரவேயில்லை. அவன் குரலில் எல்லையில்லாத வேதனையும் தவிப்பும் தெரிந்தது. அவன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு பாடினான். சுஜா அக்கா அவனுக்கு எதிரில் தரையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் பாடி முடித்தான். வத்சலா மே’ம் லேசாக மூக்கை உறிஞ்சியதைப் போல இருந்தது. ராகினி மே”ம் முகமும் சோகமாக இருந்தது.
சங்கர், கனகராஜ், செந்தில் மற்ற பையன்கள் எல்லாரையும் கட்டித்தழுவி விடை பெற்றான் சமீர் தா. முதல்வரிடம் கை குலுக்கி நன்றி தெரிவித்தான். இரண்டு மே’ம்களையும் பார்த்து அருமையான நிகழ்ச்சிக்கும் , அவர்கள் அனைவருடைய நட்புக்கும் நன்றி சொன்னான்.
இரண்டு மே’ம்களும் எழுந்து அவனுடனும், நிரஞ்சன் சௌத்ரியுடனும் கை குலுக்கி அவர்கள் விருந்தோம்பலுக்கு நன்றி சொன்னார்கள்.
சமீர் தா மீனாக்ஷியின் அருகில் வந்து அவள் தலையில் கை வைத்து
“தாங்க்ஸ் சோட்டு ஃபார் எவ்ரிதிங்க்! என்னை மறக்க மாட்டாய்தானே!” என்று கண்கள் கலங்க சொல்லிவிட்டு அவள் கைகளைப் பற்றிக்கொண்டு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். பின்னர் யாரையும் திரும்பிப் பார்க்காமல் ரயிலை விட்டு இறங்கினான். நிரஞ்சன், அருண் கோஷ், சப்யசாச்சி எல்லாரும் விடை பெற்றனர். ரயில் கிளம்பியது.
மீனுவுக்கு ஏனோ “துர்க்காபூர்…. துர்க்காபூர் ..”என்ற குரல் எங்கிருந்தோ கேட்பது போல இருந்தது.
அப்புறம் அந்த வருடத் தேர்வுகள் முடிந்து சில மாதங்களிலேயே சுஜா அக்காவின் கல்யாணம் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியோடு நடந்தது என்று மீனு கேள்விப்பட்டாள்.
சில வருடங்களில் சமீர் தா வட கிழக்கு மாகாணங்களில் ஒன்றில் இளைஞர்களுக்கான புதுக் கட்சி ஒன்று ஆரம்பித்து, தேசிய அளவில் கவனிக்கப்படும் ஒரு தலைவனான். அவன் மாநிலத்தில் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியில் அவன் ஒரு சக்தி வாய்ந்த அமைச்சராகவும் ஆனான். சில ஆண்டுகள் எல்லா பத்திரிகைகளிலும் அவன் இருந்தான். சமீர் தா கொஞ்சம் தொப்பை போட்டு லேசான முன் வழுக்கையோடு இருந்தாலும் அவன் கண்களின் கூர்மை மட்டும் அப்படியே இருந்தது.
சமீர் தா தன் வேலைகளுக்கிடையே மழை பெய்கிற ஒரு இரவு வேளையில் கையில் ஒயினோட இருக்கிற சமயத்தில் சாந்திநிகேதனில் தன் வாழ்க்கையில் நான்கே நான்கு நாட்கள் மட்டுமே சந்தித்த அழகிய பெண்ணைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பானா?
சுஜா அக்கா அவள் கணவன் தாமதமாக வருகிற இரவு வேளையில் ஜன்னல் வழியாக வெள்ளிக் கம்பளத்தை விரிக்கும் நிலவைப் பார்க்கும் வேளையில், சாந்தி நிகேதனில் நிலவு வெளிச்சத்தில் ரிக்ஷாவில் போன அந்த இரவை நினைத்திருப்பாளா?
இரண்டாம் கேள்வி ஞாபகம் வரும் போலிருந்தது. ஆனாலும் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று தோன்றியது.
வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்கள், அதை மிக அழகாக கண்ணுக்கு தெரியாத மெல்லிய சரடில் நேர்த்தியாக கோர்த்துள்ளது, ஆசிரியரின் தெளிவான சிந்தனையை வெளிபடுத்துகிறது.
ஆசிரியர் தேவதாஸ் படத்தை பார்க்கும்போது , எழுதின மாதிரி , நானும் இந்த ஒவ்வொரு சம்பவத்தின் கதாபாத்திரமாக வாழ்வது போல் உணர்கிறேன்.
சமீர் தாவின் வேதனை மனபாரம், சுஜா அக்காவின் வெளிபடுத்த இயலாத சோகம் , எனக்குள் பாரமாக உணர்கிறேன்…..
கதாபாத்திரத்தின் மென்மையான உணர்வுகளை அழகாக வெளிபடுத்திய கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
நாம் வாழ்வில் பார்த்த சிலரை நினைவூட்டுகிறது்
மிக்க நன்றி பிரேமா! இவ்வளவு உணர்வுபூர்வமாக கதையை ஒன்றி படித்ததற்கும்,அதே அளவு உணர்வுபூர்வமாக பாராட்டுதல்களை தெரிவித்ததற்கும் என் மனமார்ந்த நன்றி
Malathyji,
Thi. Janakiraman would have been proud of you! And what a befitting title for the story! Made my day.
Where were you all these years?!! Please do write more.
Dear Alexa
உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
நம்முடைய எழுத்து எங்கோ ஒருவரைத் தொட்டு அசைக்கிறது என்பதை அறியும் கணம் உணர்வுபூர்வமானது. அந்த கணத்தை தந்தமைக்கு நன்றி.
எழுதுகிற ஆசை என்கிற கனன்று கொண்டிருக்கிற கங்கை விசிறி விடுகிற காற்றாக , உங்களின், உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகள் அமைகின்றன.மீண்டும் நன்றி
மெல்லிய உணர்வுகளை கண்முன் படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் மறுபடியும்!
Thanks for your inspiring story..The way you have brought the complex title of the story to understand is truly impressive. Simple love story takes us to Calcutta with beautiful descriptions. Loved the technic of Mentioning films such as Devdas, kadhambari and Ray’s story for her liking towards Bengali movies and Novels . The protogonists Sameer and Suja are unforgettable.Every story is just a unique experience..Keep writing I love it..Thank you Malathi Sivaramakrishnan!!!
Dear Malathi, !! Thanks for your inspiring story. The way you have brought the complex title of the story to understand is truly impressive..Simple love story takes us to Calcutta with beautiful descriptions .Loved the technic of mentioning Devdas ,Kadhambari , Ray’ movies for how you had started liking Bengali movies and novels..The protogonists Sameer and Suja are unforgettable..Every story is just a unique experience..!!!And this one
NEDUNALVADAI..