- ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்
- மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா
- புலவர்த்தி கமலாவதி தேவி எழுதிய ‘குமுத்வதி’ வரலாற்று நாவல்
- பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’
- ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி
- அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்
- மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்
- மாலதி சந்தூர், ரேணுகா தேவி
- கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்
- ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு
- வட்டிகொண்ட விசாலாட்சி
- நிஷ்காம யோகி நாவல்
- வட்டிகொண்ட விசாலாக்ஷி-2
- காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி
- காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி
- காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்
- தென்னேட்டி ஹேமலதா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

1924 ல் புலவர்த்தி கமலாவதி தேவி ‘குமுத்வதி’ என்ற வரலாற்று நாவலை எழுதி, நாவல் இலக்கிய வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக தன் பெயரை பதிவு செய்து கொண்டுள்ளார். இந்த நாவலை ராஜமகேந்திரவரத்தில் உள்ள சரஸ்வதி கிரந்த மண்டலி பிரசுரித்தது. சிவசங்கர சாஸ்திரி இதன் எடிட்டர். முன்னுரையில் நாவலாசிரியை இது மகாராஷ்டிராவில் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன் சம்பாஜியின் அரசாட்சி காலத்தில் நடந்த அரசியல் குழப்பத்தைச் சித்தரிக்கும் நாவல் என்றும் கொமர்ராஜு வெங்கட் லக்ஷ்மணராவு எழுதிய சிவாஜி சரித்திரம், சில்லகிரே சீனிவாச ராவு எழுதிய மகாராஷ்டிரர்களின் சரித்திரம் ஆகியவற்றைப் படித்து தன் நாவலுக்கு வரலாற்று உபகரணங்களைத் தொகுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் கணவர், அவர் படித்த ரெனால்ட்ஸ் எழுதிய மார்கரெட் நாவலில் உள்ள கதையின் கற்பனையைக் பற்றி கூறிய விஷயங்களை மகாராணா ராஜசிம்ஹனின் பாத்திரத்தின் இயல்பை வடிவமைப்பதற்கு உபயோகித்து கொண்டதாகக் கூட கூறியுள்ளார். ராஜ மகேந்திரவரத்தின் தெய்வம் ராஜகோபால மூர்த்திக்கு இந்த நாவலை சமர்ப்பித்துள்ளார்.
1680ல் தந்தையின் மரணத்திற்கு பிறகு மராட்டிய சாம்ராஜ்ஜியத்திற்கு அரசனான சம்பாஜி முகலாய சக்கரவர்த்திகளோடு போராடி 1689ல் ஔரங்கசீப்பிடம் கைதியாகப் பிடிபட்டு மரண தண்டனை பெற்றான் என்று வரலாறு கூறுகையில் இந்த நாவலில் நாவலாசிரியை 1680 லேயே சிம்ஹகாட் யுத்தத்தில் அவன் முகலாயர்களுக்கு மேலும் சில நிலப்பிரபுக்களோடு சேர்ந்து கைதியாகச் சிக்கி பத்தாண்டுகள் சிறையில் இருந்து பின், கோடி ரூபாய்கள் கப்பம் செலுத்தி விடுதலையானதாக கற்பனை செய்துள்ளார். உண்மையில் மராட்டியர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையில் சிம்ஹகாட் யுத்தம் நடந்தது சிவாஜியின் காலத்தில்தான். அதாவது 1670 ல். அதனை எதனாலோ கமலாவதி தேவி பத்தாண்டுகள் நகர்த்தியுள்ளார்.
சம்பாஜியின் விவேகமற்ற முடிவினால் நடந்த இந்த யுத்தத்தின் காரணமாகவே கொங்கண ராஜ்யத்திற்கு மிகப்பெரும் நஷ்டம் நேர்ந்தது என்று ஆரம்பத்திலேயே எடுத்துரைத்து, அந்தப் பின்னணியில் நாவலின் கருவை கட்டமைத்துக் கொண்டு சென்றுள்ளார் நாவலாசிரியை. அவுரங்கசீபிடம் சிறைக் கைதியாக இருந்த காலத்தில் அவனுடைய அரசாங்கத்தை நடத்திய அவனுடைய மாமாவுக்கு உதவியாக இருந்த நிலப் பிரபுக்கள், ஜமீன்தார்கள் சம்பாஜியின் வருகையால் தங்களை அவன் தண்டிக்காமல் விடமாட்டான் என்ற அச்சம் கொண்டு மகாராஷ்டிராவை விட்டு ராஜபுத்திர அரசாங்கத்திற்கு குடி பெயர்ந்தார்கள் என்று சொல்லி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சூழ்நிலையை சரி செய்து கொண்டு சம்பாஜியின் நம்பிக்கையை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு அவர்கள் திரும்பி வரத் தொடங்கினார்கள் என்றும் கூறி நாவலின் கதையை அங்கு தொடங்குகிறார் கமலாவதி தேவி.
சந்திரகாட் ஜமீன்தார் பானோஜி அவ்வாறு திரும்பி வந்தவர்களில் ஒருவன். அவனுடைய மகள் ஸ்வயம்பிரபா. அவன் வளர்க்கும் பிள்ளைகள் வீரபாலனும் குமுத்வதியும். அதே நேரத்தில் சம்பாஜியோடு கூட கைதியாக கொண்டு செல்லப்பட்ட சிம்ஹபாலனும் விடுதலையாகித் திரும்பி வந்தான். சம்பாஜிக்குப் பிறகு மராட்டா சாம்ராஜ்ஜியத்தை அவுரங்கசீபிடம் தாக்கல் செய்வதற்குச் செய்த முயற்சிகளால் பானோஜியின் பார்வையில் அவன் ஒரு தேசத்துரோகி.
நாவலின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் ஒரு பாத்திரம் சூரசேனன். இவன் ராஜபுத்திர வீரன் பிரதாப்பசிம்ஹனின் பிரதிநிதியாக மகாராஷ்டிராவுக்கு வருகிறான். வீரபாலனுக்கும் சிம்ஹபாலனுக்கும் இடையில் போட்டி தொடங்கி பல சம்பவங்களோடும் பரபரப்போடும் தொடரும் நாவலின் ஒவ்வொரு திருப்பத்திலும் சூரசேனனின் பாத்திரம் முக்கியமானதாக உள்ளது.
வீரபாலன் சிம்ஹபாலனைக் கொலை செய்தான் என்று துஷ்டகேதன் செய்த குற்றச்சாட்டின் மீது விசாரணை செய்ததில், இறந்துவிட்டான் என்று எண்ணிய சிம்ஹபாதன் உயிர் ஊசலாடும் நிலையில் இருப்பதைத் தெரிந்து கொண்டு தகுந்த மருத்துவம் செய்து அவனுடைய வாக்குமூலத்தில் அண்ணனான அவனுடைய செல்வத்தின் மீது ஆசையால் கொலை செய்தது துஷ்டகேதன் என்று நிரூபித்து வீரபாலனை குற்றமற்றவனாக நிலைநிறுத்துகிறான் சூரசேனன். இறக்கும் தருவாயில் சிம்ஹபாலன் வீரபாலனுக்கு எழுதி வைத்த சொத்துக்களை அபகரிப்பதற்காக துஷ்டகேதன் செய்த சதித் திட்டங்களை தகர்க்கிறான் சூரசேனன், குமுதவதியை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் குடித்தனம் செய்து ஆசை தீர்ந்தபின் அவளை விட்டுவிடுவதற்கு சம்பாஜி செய்த முயற்சிகளை முறியடித்து குமுத்வதியை மனைவியாக ஏற்கும்படிச் செய்கிறான் சூரசேனன். இது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் சூரசேனனின் புத்தி பலமும் வீரமும் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. அப்படி இருக்கையில் இந்த நாவலுக்கு குமுத்வதியின் பெயரை எதனால் வைத்துள்ளார? குமுத்வதி ஒரு காலத்தில் மகாராஷ்டிர சாம்ராஜ்ய நிர்மாணத்தில் சிவாஜிக்குத் துணையாக நின்ற அஷ்ட மந்திரி குழுவில் ஒருவரான மோரோஜி பந்த் என்பவரின் மகள் என்பதாலா? மகாராஷ்டிரா மகாராஜாவான சம்பாஜியின் மனைவி என்பதாலா?
சம்பாஜி போலவே வரலாற்று மனிதன் மாரோஜி பந்த். ஆனால் அவன் இந்த நாவலில் பாத்திரம் அல்ல. அவனுடைய தம்பிகளாக கூறிக் கொள்ளும் மடாதிபதி யோகி ராமச்சந்திர பாவாஜியும் ராஜபுத்திர வீரன் சூரசேனனும் இந்த நாவலில் உள்ளார்கள். இந்த சூரசேனனே ராஜா பிரதாபசிம்ஹன் என்பது நாவலின் இறுதியில் தெரிகிறது. அவர்கள் இருவரின் உரையாடல் மூலம் மோரோஜி பந்த்தின் கதையும் நமக்கு தெரிய வருகிறது. சிவாஜிக்குப் பிறகு அரச வாரிசாக நினைக்கப்பட்டவர்களிடையே நடந்த போராட்டத்தின் விளைவாக சம்பாஜியும் மோரோஜியும் பகைவர்களாக மாறினார்கள். அஷ்டமந்திரி மண்டலியில் இருந்த மோரோஜியும் அன்னாஜியும் சம்பாஜியின் சிற்றன்னை மகனான ராஜாராமுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று நினைத்த பிரிவினரில் முக்கியமானவர்கள். அவர்கள் அவ்வாறு நினைத்தது சிவாஜியின் விருப்பத்தின்படிதான் நடந்ததா? பத்து வயதே நிரம்பிய ராஜாராமின் தரப்பில் அவனுடைய தாயை ரீஜென்டாக நியமித்து உண்மையான அதிகாரம் தாம் செய்ய வேண்டும் என்ற சுயநலத்தினால் இவ்வாறு நடந்ததா? பேஷ்வாக்களாக பெயர் பெற்றிருந்த தாங்களே அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற சதித்திட்டத்தில் இது ஒரு பாகமா? என்று கேட்டால், வரலாற்று ஆசிரியர்களிடையே இது குறித்து வேறுபட்ட அபிப்ராயங்கள் உள்ளன.
எது எப்படியானாலும் சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு ராஜாராமை சிம்மாசனம் மீது உட்கார வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது மட்டும் உண்மை. அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டு பன்ஹாலா கோட்டையிலிருந்து சம்பாஜி சைன்யத்தோடு ராய்கட் மீது படையெடுத்து, தன் சிற்றன்னையையும் சகோதரனையும் குற்றவளிகளையும் சிறைப் பிடித்து, தண்டனை விதித்து, சிம்மாசனம் ஏறி அனைவரின் சொத்துக்களையும் வசப்படுத்திக் கொண்டு பகை தீர்த்துக் கொண்டான். அன்னாஜியை யானைகளால் மிதிக்கச் செய்து கொன்றதாக கூறுவார்கள். இது வரலாற்று உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் மோரோஜி முகலாயர்களுடைய உதவியோடு சம்பாஜியை ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையோடு டில்லிக்கு சென்றதாகவும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ஆனால் அவர் அங்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றார் என்றும் மகள் இறந்து போனதாகவும் அதன் பின் அவர் சம்பாஜியிடம் மன்னிப்பு வேண்டி, தன் முந்தைய சொத்துக்களை வசப்படுத்திக் கொள்வதற்காகச் செய்த முயற்சிகள் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் ராமச்சந்திர பாவாஜி, சூரசேனன் உரையாடல் மூலம் வாசகர்களுக்கு தெரிவிக்கிறார் கமலாவதி தேவி.
சம்பாஜியைப் பழி தீர்க்கும் பரிணாமங்களில் ஒரு பகுதியாகவே அவனுடைய சகோதரர்கள் ராமச்சந்திர பாவாஜியும் சூரசேனனும் ஆளுக்கு ஒரு திசையில் வாய்ப்புகள் கிடைத்த போது ஒருவர் மடாதிபதியாகவும் மற்றொருவர் ராஜாதிபதியாகவும் வளர்ந்ததாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
சிவாஜியின் அரசாட்சியில் யுத்த தந்திர நிர்வாகியாகவும் கோட்டை நிர்வாகத்தின் காவலதிகாரியாகவும் எட்டு பேரோடு கூடிய முக்கியமான மந்திரி மண்டலியில் ஒருவராகவும் புகழ்பெற்ற மோரோஜி பந்த் குற்றவாளியாக நகரத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது. மோரோஜி பந்த்தின் மகனான வீரபாலனை சம்பாஜிக்கு பிரதான தளபதியாகவும், மகளான குமுத்வதியை சம்பாஜிக்கு மகாராணியாகவும் செய்து அவனுடைய வாரிசத்துவத்தை கொங்கண ராஜ்யத்தில் மீண்டும் நிலைநாட்டச் செய்வதே லட்சியமாக நாவலின் கதை அம்சம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்தனையும் செய்த கர்த்தா சூரசேனனே ஆனாலும் பலனை அனுபவிப்பது வீரபாலனும் குமுத்வதியும் என்பதால் அவர்கள் இருவரும் நாவலின் கருப்பொருளில் முக்கிய கதாபாத்திரங்களாக விளங்குகிறார்கள். வீரபாலனின் வீரம் அவனை வளர்த்து கல்வி அறிவு போதித்த மானோஜியின் மானத்தையும் உயிரையும் பாதுகாப்பதில் கூர்மையாகிறது. சம்பாஜியின் படைக்கு தளபதியாக நியமிக்கப்படும் வரை சூரசேனனின் முயற்சியும் வியூகமும் வழிகாட்டியாக நின்றன. அண்ணன் மகனின் உயர்வு அவ்விதமாக அவனுடைய லட்சியமாக இருந்தது. பானோஜியின் மகள் சுயம்பிரபாவும் வீரபாலனும் பரஸ்பரம் காதலோடு வளர்ந்து இறுதியில் திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தையைப் பெறுவது வரை வீரபாலனின் வாழ்க்கை வளர்ந்து தலைமுறையாக தொடர்ந்தது. ஆனால் இந்த நாவலின் பெயர் வீரபாலனின் விஜயம் என்று வைக்காமல் குமுத்வதி என்று ஏன் வைத்தார்?
சாகசமும் சுயமாக முடிவெடுக்கும் குணமும் இயல்பாகக் கொண்டவளாக இருந்ததால் குமுத்வதி இந்த நாவலுக்கு கதாநாயகியானாள். சுயம்பிரபாவுக்கு நெருங்கிய தோழியாக இருந்ததோடு அவளுக்கு உதவியாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் நின்றாள் குமுத்வதி. சுயம்பிரபாவுக்கும் அண்ணன் வீரபாலனுக்கும் இடையில் இருக்கும் அன்பு அவளுக்குத் தெரிந்த விஷயமே. அவர்களுக்கு அவள் தார்மீக ஆதரவு கூட கொடுத்தாள். குதிரை சவாரி போன்ற வீர விளையாட்டுகளில் மட்டுமின்றி, ஓவியத்திலும் திறமையுள்ள பெண் அவள். ஆபத்துக் காலத்தில் மூர்ச்சை போட்டு விழும் சுயம்பிரபாவை ஆதரித்து தைரியம் சொல்லக்கூடிய வீரம் கொண்டவள். கஷ்ட சமயங்களில் நலிவடைவதோ துக்கப்படுவதோ அல்லாமல் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தக்கூடிய சாகசம் நிறைந்தவள். பானோஜியை துஷ்டகேதனின் சைன்யம் தாக்கி தூக்கிச் செல்லும்போது வீரபாலன் போன்றோர் அவனை மீண்டும் அழைத்து வரும் முயற்சியில் இருந்தபோது சம்பாஜி மகாராஜாவுக்கு விஷயத்தைக் கூறி அவனை விடுவிக்கும் மார்க்கத்தைப் பற்றி ஆலோசித்து முயற்சித்து அவனுக்கு அருகாமையில் செல்லும் அளவுக்கு புத்தி கூர்மையை வெளிப்படுத்துகிறாள்.
முதல் முறை சம்பாஜியை பார்த்தபோதே அவனிடம் அன்பு தோன்றியது குமுத்வதிக்கு. அவனுக்கு தனக்கும் இடையில் இருக்கும் இடைவெளி பற்றிய உண்மை தெரிந்தும் அவள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. பானோஜியைப் பற்றிய விஷயத்தைக் கூறுவதற்கு சென்றபோது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவனே கேட்டது அவளுக்கு மகிழ்ச்சியளித்தது. சில காரணங்களால் ரகசிய விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்று அவன் கேட்ட போது தன் மன எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு அவள் கொஞ்சமும் தயங்கவில்லை.
“நீங்கள் விரும்பும் ரகசிய விவாகத்தால் துஷ்யந்தனின் காரணமாக சகுந்தலைக்கு நேர்ந்த கதி தனக்கும் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்டதோடு கூட, “இது கலியுகம் அல்லவா! ஆகாசவாணி பேசாதல்லவா” என்று சூழ்நிலையை எடுத்துரைத்தாள். இத்தனை தெரிந்தும் கூட ரகசிய விவாகத்திற்கு அப்போதைக்கு ஒப்புக்கொண்டு, மிக விரைவில் அதனை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கூறுவதால் அவளிடம் இருக்கும் அச்சமற்ற இயல்பைப் பார்க்கிறோம். அரசியல் வியூகத்தில் ஒரு பாகமாகவே இதையும் பார்க்க வேண்டும். தான் விரும்பிய புருஷனை அடைவதோடு கூட பானோஜி எங்கு இருக்கிறானோ தெரிந்து கொண்டு அவனை விடுதலை செய்வதற்கு உதவியைக் கோருவதும் இதில் உள்ளது. அந்த இலக்கும் அடையப்பட்டது. அது மட்டுமல்ல. முதலிரவின் போது தன் விருப்பமாக, ராஜ வம்சத்திற்குத் துரோகம் இழைத்த தன் வம்சத்தினரை மன்னிக்கும்படிக் கேட்கிறாள். அந்த விதத்தில் தானும் தன் அண்ணனும் நகரத்தில் திரும்பவும் நுழைவதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொண்டாள்.
ரகசிய விவாகத்திற்குப் பிறகு சம்பாஜியோடு மூன்று நாட்கள் கழித்துவிட்டு மீண்டும் பானோஜியின் வீட்டுக்கு சென்ற குமுத்வதி விரகத்தால் அவனுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று விரும்பி பானோஜியின் படுக்கை அறைக்குப் பக்கத்திலிருந்து ஆயுத சாலையை நிர்வகிக்கும் கோவிந்தசேனன் என்பவனுடைய காகிதம் கலம் அனைத்தும் இருக்கும் இடத்திற்குச் செல்கிறாள். அங்கு கல் பலகைகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடிகளில் கண்களின் அசைவுகள் தென்பட்டதால் யாரோ அந்த அறையில் நுழைந்து ஒளிந்துள்ளார்கள் என்ற விஷயத்தை அறிந்து முதலில் சற்று அச்சமடைந்தாலும் யார் அவர்கள்? எதனால் அங்கு வந்தார்கள்? என்று யோசிக்கத் தொடங்கி, பானோஜியின் எதிரியான துஷ்டகேதனின் சதித்திட்டமே அது என்றும் சுயம்பிரபாவை தூக்கிச் செல்வதற்கு வந்திருப்பார்கள் என்றும் யூகித்து சரியான சமயத்தில் அனைவரையும் எச்சரித்து ஆபத்திலிருந்து காத்த மதியூகி குமுத்வதி. அந்த சமயத்தில் அவள் தன்னுடைய தைரியத்தைத் திரட்டிக் கொண்டு, மராட்டியரின் சாம்ராஜ்ய லட்சுமி நான் என்றும் சம்பாஜி நரேந்திரனின் ராணி நான் என்றும் நானாவது பயப்படுவதாவது என்றும் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதை நாம் கவனிக்கலாம். தைரியமாக முன்னேறி அடியெடுத்து வைப்பதற்கு எந்த வாய்ப்பானாலும் அவள் எவ்வாறு உபயோகித்துக் கொள்கிறாள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
சம்பாஜியிடம் கொண்ட காதலில் குமுத்வதிக்கு இருந்த நேர்மை அவளிடம் அவனுக்கு இல்லை. அவனுக்கு அவள் மேல் ஈர்ப்பு மட்டும் இருந்ததே தவிர நிலையான தொடர்பாக அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மனைவியின் மரணத்திற்குப் பிறகு பிற பெண்டிர் மேல் மோகத்தில் அலைந்து மீண்டும் திருமணம் என்ற எண்ணமே இல்லாதவனாக இருந்ததை கதையின் ஓட்டத்தில் அறிய முடிகிறது. திருமணம் என்று கூறினால்தான் அவள் தனக்கு இணங்குவாள் என்று தெரிந்துதான் அவன் ரகசிய விவாகம் என்ற பேச்சையே எடுத்தான். திருமணமாகி, அவள் தனக்கு ஒத்துழைத்த பின் அவளை அதிகார கர்வம் பிடித்தவள் என்று எண்ணுகிறான். அவள் மேல் ஆசைப்பட்டேன் என்பதற்காக கோரக்கூடாத கோரிக்கைகளை கோருகிறாள் என்று எண்ணினான். “இரு. இரு. உன்னைப் பார்த்துக் கொள்கிறேன். உனக்குத் தகுந்த சாந்தி செய்கிறேன்” என்று மனதிற்குள்ளே சபதம் செய்கிறான். அதனால்தான் அவள் தம் திருமணம் குறித்த ரகசியத்தை வெளியிட்டு விடக் கூடாது என்பதற்காக ஏமாற்றி அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்த பிறகுதான் அவளுக்கு அவனுடைய அந்தரங்கம் புரிகிறது. ஆனாலும் அழுது கொண்டு உட்காராமல் அங்கிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்து வெற்றியை சாதித்தாள். சூரசேனனை சந்தித்து உண்மைகளைக் கூறிய பின் சம்பாஜி அவளைத் திருமணம் செய்தான் என்பதற்கான சாட்சிகளை வரவழைத்து… இந்த நாடகம் எல்லாம் நடத்தியவன் சூரசேனனே. ஒரு காலத்தில் தன் தந்தையையும் தன்னையும் கைதிகளாக சிறைபிடித்து சோறும் நீரும் கொடுக்காமல் தந்தையின் மரணத்திற்குக் காரணமாகி, அதன் பிறகு தன்னை ஆசைப்பட்டு திருமணம் செய்து, ஆசை தீர்ந்த பின் அலட்சியம் செய்த துஷ்டகேது மீது லாவண்யா செய்த குற்றச்சாட்டு விசாரணையின் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குமுத்வதியை விட்டு பிரிந்து விடலாம் என்று நினைத்த சம்பாஜி, தன் தவறை ஒப்புக்கொள்ளும்படி செய்வதற்கு சூரசேனன் உபயோகித்த திறமையும் திடீரென்று அவன் எதிரில் குமுத்வதியை நிறுத்திய முறையும் ‘சீதையை ராமன் தெரிந்து கொள்வதற்கு’ உத்தர ராமச்சரித்திரத்தில் பவபூதி நடத்திய நாடகத்தை நினைவூட்டுகிறது.
எது எப்படியானாலும் சுயமுயற்சியால் தன் வாழ்க்கையைத் தானே நிர்ணயித்துக் கொண்ட விவேகம் நிரம்பிய பெண்ணாக குமுத்வதியை எடுத்து வந்து காட்டுவது புலவர்த்தி கமலாவதி தேவியின் இலக்கு என்று நாவலின் பெயரைக் கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது.
விஜய பாஸ்கர விஜயம் (1929 என்ற சமூக நாவலை கூட இவர் எழுதியுள்ளார். கணவர் எத்தனை அலட்சியம் செய்தாலும் பிற பெண்களின் மீது மோகத்தோடு எத்தனை இக்கட்டுகள் செய்தாலும் பொறுத்துக் கொண்டு வாழ்வதில்தான் பெண்களின் வாழ்க்கையின் விடிவுகாலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் கருவோடு நடக்கும் அந்த நாவலில் அவ்வாறு வாழ்வதே பெண் வாழ்க்கையின் லட்சியம் என்ற எண்ணமும் அவ்வாறு வாழ்வதே மானத்தோடும் வாழ்வதாகும் என்றும் உள்ளர்த்தமாகத் தெரிகின்றன. இவை மட்டுமின்றி விக்டோரியா கிராஸ், புளிந்த கன்யா போன்ற நாவல்கள் கூட புலவர்த்தி கமலாவதி தேவி எழுதியுள்ளார். அதே போல் துப்பறியும் நாவல் எழுதுவதற்கு கூட புலவர்த்தி கமலாவதி தேவி ஆசைப்பட்டது சிறப்பு. அவர் எழுதிய துப்பறியும் நாவல்களில் மீர் ஜும்லா (1929) ஒன்று.