தனித்த வனம்  

அப்பா இறந்ததாக காலை பத்தரை மணிக்கு கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. வாணியை அழைத்தேன். இரண்டு முறை பொய்த்தபின் மூன்றாம் முறை எடுத்தாள். அப்பா இறந்ததை அவளிடம் கூறினேன். மூச்சுக்காற்றைக் கேட்கும் மௌனம். செருமி அவளால் உடனே கிளம்ப இயலாது என்றாள். 

“விமல்?”

“குழந்தையையா?”

மற்ற விஷயங்களை கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்கும் முன் வாணி மறுபடியும் செருமி மன்னிப்பு கேட்டாள்.     

மேனேஜரிடம் விஷயத்தைக் கூறினேன். ஒரு நிமிட மௌனம். வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். ஒரு வாரம் விடுப்பு கேட்டேன். மூன்று நாட்களில் திரும்பி வர முடியுமா என்று கேட்டார். தலையாட்டி விட்டு இருக்கைக்கு வந்து கணினியை அணைத்துவிட்டு பார்த்திபனின் இருக்கைக்கு சென்றேன். காபி அருந்திக் கொண்டே கணினியை வெறித்துக் கொண்டிருந்த அவனிடம் அப்பா இறந்ததைக் கூறினேன். ஒரு நிமிடம் மௌனம்.  

அதே ஒரு நிமிட மௌனம். எதற்கு இந்த அசௌகரிய மௌனம். என்ன யோசிக்கிறார்கள்? என் அப்பாவை கற்பனை செய்து கொள்கிறார்களா? ஒரு உயிர் விடுதலை அடைகிறது என்று சந்தோஷிக்கிறார்களா? உடனே மறுமொழி பேசினால் நன்றாக இருக்காது என்று சில வினாடியைத் தேமேவென கடத்துகிறார்களா ? 

வேலைகளை பார்த்திபனிடம் ஒப்படைத்து விட்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் சென்று ஆடைகளையும் மற்றவைகளையும் தோற்பையில் திணித்துக் கொண்டு அதே ஆட்டோவில் மும்பை விமான நிலையத்திற்கு சென்று சரியான நேரத்திற்கு விமானம் கிளம்ப மூன்று மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தேன்.  

கை அசைத்து வந்து நின்ற டாக்ஸியில் அமர்ந்து “கோவைப்புதூர், உறவுகள் எல்டர்ஸ் சொசைட்டி” என்றேன். ஆயிரம் ரூபாய் சார் என்றான். தலையை ஆட்டினேன். அப்பா இருந்திருந்தால் தீனமான குரலில் அவருக்கே உரிய கிண்டலுடன், “அதான் போயிட்டேனே, இனி எதுக்கு அவசரமா டாக்ஸி புடிச்சு வர்றே. உக்கடம் வந்தா நிறைய பஸ் காலியா கிடைக்கும். பழைய பஸ்ல ஏழு ரூபா டிக்கெட் எடுத்து பொறுமையா வா” என்று சொல்லி இருப்பார். 

ஐந்து வருடங்களில் கோவை சற்று அதிகமாகவே முன்னேறி இருந்தது. அவினாசி சாலை மரங்கள் அனைத்தையும் இழந்து வெயிலை நிர்வாணமாக பிரதிபலித்தது. புதுப் பாலங்கள், புது கட்டிடங்கள், புது மனிதர்கள். ரயில் நிலையம் முன் நடு ரோட்டில் பேருந்துகள் நிற்க பயணிகள் சாவகாசமாக இறங்கிக் சாலையை கடந்து கொண்டிருந்தனர். பஸ் பின்னால் டிராபிக் ஜாம். டாக்ஸி டிரைவர் ஒலிப் பெருக்கியில் ஆர்வத்தை இழந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள பார்கள் நிறைந்த சந்தில் இளைஞர் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லூரியில் படிக்கையில் இங்கு வைத்துத்தான் அப்பா நான் புகை பிடிப்பதை முதல் முறையாக பார்த்தார். அவரைக் கண்டதும் தலையை குனித்து திருப்பிக் கொண்டேன். என்னுடன் புகை பிடித்துக் கொண்டிருந்த நண்பன், அப்பா அவனைப் பார்த்து சிரித்ததாக சொன்னான். இரவு வீட்டுக்கு வந்ததும், அப்பாவைத் தேடினேன். அவர் அறைக்குள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அம்மா ஏதாவது கேட்பாள் என்று நினைத்தபடியே உணவருந்த அமர்ந்தேன். அவள் எப்போதும் போல சகஜமாக பேச அப்பா எதையும் அவளிடம் சொல்லவில்லை என்று அறிந்து மகிழ்ந்தேன். அப்பாவும் என்னிடம் புகை பிடிப்பதைப் பற்றி எதுவும் பேசவில்லை. என் திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு நாள், அம்மா என்னிடம் “நீ சிகரெட் பிடிப்பாயாமே?” என்று கேட்டாள். நெளிந்தபடி தலையை ஆட்டினேன். “காதலிச்சவளுக்கு தெரியுமா? தலையை மட்டும் ஆட்டு. நீ கொழந்தைன்னு நினைச்சேனேடா, ஏன் இப்படி எல்லாம் பண்ணற? இனி வேண்டாம் நிறுத்திடுன்னு  சொல்லி அப்பா சொல்ல சொன்னார்” என்றாள். அம்மா பேசிய போது அப்பாவின் மீது கோபம் வந்தது.

“டவுன்ஹால் டிராபிக்கா இருக்கும் சார். திருப்பி சுங்கம் பைபாஸ் புடிச்சு உக்கடம் போயிடலாமா, ரோடு ப்ரீயா இருக்கும்?” என்று டிரைவர் கேட்டான் .

“இல்லப்பா, என் ஸ்கூல பாக்கணும். டவுன்ஹால் வழியாவே போ” என்று சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டேன். முன் கண்ணாடி வழியே டிரைவர் என்னைப் பார்த்தான். நான் அவனைப் பார்த்ததும், தலையை தாழ்த்தி சாலையைக் கவனித்தான்.

சந்தோஷமோ, துக்கமோ, ஒவ்வொரு முறையும் டவுன்ஹாலைக் கடக்கையில் என்  பள்ளியைப் பார்க்க நான் தவறுவதே இல்லை. யாரும் நுழையாத அந்த தனித்த வனத்தில் நான் புகுந்து வெளியேறியபின் திரும்பிப் பார்க்கையில் யாரும் நுழையாத தனித்த வனத்தைப் பார்ப்பது போல ஒரு வினோத உணர்வு, நாஸ்டால்ஜியா. பழையதை மறக்க முடியாமல் அசைபோடும் இந்த பழக்கம் மட்டும் அப்பாவிடம் இருந்து எனக்கு ஒட்டிக் கொண்டது என்று நினைக்கிறேன். மற்றபடி எங்கள் விருப்பங்களும் ஈடுபாடுகளும் வேறு வேறு. அப்பா இயற்கையின் காதலர். வருடத்துக்கு இரண்டு முறை விடுப்பில் தனது சொந்த ஊரான ஷிமொகாவுக்கு சென்று விடுவார். தினமும் தனியாக மேற்குத் மலைத்தொடரின் ஏதாவது ஒரு  மலையுச்சிக்கோ, நீரொழுக்குக்கோ சென்று அமர்ந்து கொள்வார். நான் பிறக்கும் முன் ஒன்றிரண்டு முறை அம்மாவும் அவருடன் சென்றாளாம், அந்த சத்தம் இல்லாத கிராமத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் அமைதி அம்மாவுக்கு பிடிக்காததால் அங்கு  செல்வதை நிறுத்தி விட்டாள். ஆகவே என்னையும் அனுப்பியது இல்லை. ஒவ்வொரு வருடமும் அப்பா மட்டும் தனியாக சென்று வருவார். 

“சார் நீங்க சொன்ன இடம் வந்துருச்சு”. சொசைட்டி கேட்டை கடந்து விடுதி மேற்பார்வையாளர் அறையின் முன் டாக்ஸி நின்றிருந்தது. இறங்கி டிரைவருக்கு பணமும் நன்றியும் கொடுத்து அனுப்பினேன். மழையில் நனைந்து நின்றிருந்த அந்த  ஒற்றை அறைக்குள் யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. சந்தேகத்துடன் கதவை தட்டிப் பார்த்தேன். பதில் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் அப்பாவை சேர்த்து விட்டுச் செல்கையில் பார்த்த கட்டிடங்கள் சற்று சிறியதாகி இருந்தது. விடுதியைச் சுற்றி இருந்த பழைய சுவர் சாயம் வெளிறி ஆங்காங்கே பாசி படிந்து இருந்தது. சுற்று முற்றும் பார்த்துவிட்டு எழுந்து சுவற்றின் அருகே சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். சுவரில் படிந்த பாசியை தடவிப் பார்த்தேன்  

ஆறாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் எங்கள் குடும்பமும் மாமா குடும்பமும் ஒன்றாக கார் பிடித்து கேரளாவில் உள்ள கோவில்களுக்கு சென்றிருந்தோம். மதியம் பகவதி கோவிலில் தரிசனம் முடித்து கோவில் முன் இருந்த மரத்தின் நிழலில் அனைவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். நான் அப்பாவுடன் கோவில் குளத்தின் படித்துறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன். அப்பா குளத்திற்குள் முட்டி அளவு தண்ணீரில் இறங்கி என்னையும் அவரோடு வர அழைத்தார். நான் பயத்துடன் அவர் கையைப் பிடித்து உள்ளே இறங்க ஆரம்பித்தேன். தண்ணீர் ஆரம்பித்த முதல் படி பாசி படிந்து வழுக்கியது. தடுமாறிய என்னை இரண்டு கைகளாலும் அப்பா தூக்கி அணைத்துக் கொண்டார். அப்படியே அந்தப் படியில் அமர்ந்து என்னை தன் அருகில் அமர்த்திக் கொண்டார். டிரவுசர் முழுவதும் நனைந்தது. அப்பா பரவாயில்லை என்றார். அமர்ந்திருந்த படியில் கை வைத்துப் பார்த்தேன். பாசியின் மேற்பரப்பு தடவுவதற்கு வெல்வெட்டைப் போல மிருதுவாக இருந்தது. ஆச்சரியத்துடன் அப்பாவின் தோளில் கை வைத்து “ரொம்ப மிருதுவா இருக்குப்பா” என்றேன். அவர் கண்ணுக்கு நான் குழந்தையாக தோன்றியிருக்க வேண்டும், தூக்கி அணைத்துக் கொண்டார். அன்றுமுதல் எங்கு பச்சைபசேலென பாசியை பார்த்தாலும் கை வைத்து மிருதுவாக தடவுவது என் வழக்கமானது. அந்த விடுமுறைதான் நான் என்னைக் குழந்தையாக உணர்ந்த கடைசி காலம். ஏழாவது வந்ததும் நண்பர்கள் அறிமுகப்படுத்திய புத்தகங்கள் அவசரமாக என்னை முதிர்த்தியது . 

பின்னால் இருந்து யாரோ என் தோளைத் தொட திரும்பினேன், விடுதிப் பொறுப்பாளன் பாபு நின்றிருந்தான். சென்ற முறை பார்த்ததை விட தலைமுடிகளை இழந்து, சற்று பெருத்திருந்தான். நான் சிகரெட்டை கீழே போட்டு மிதிப்பதை அமைதியாக ஒரு நிமிடம் பார்த்து பின் “என்ன சொல்றதுன்னே தெரியல சார், ஸாரி” என்றான். அப்பா எங்கே என்று கேட்டேன். “வாங்க சார்” என்று அவன் முன்னே சென்றான் .

நடை பாதையின் இருபுறமும் ஒட்டிக் கட்டப்பட்ட நானூறு சதுர அடி வீடுகள்.  அப்பாவைச் சேர்க்கும் போது வீடுகள் தாண்டி பின்புறம் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. இப்போது தோட்டம் குறுகி அந்த இடத்திலும் வீடுகள் முளைத்து இருந்தன. பாதையின் கடைசியில் இருந்த ஒரு கூடத்தில் விரிவான ஒரு ஹால், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் மருத்துவர் அறை இருந்தது. 

கூடத்திற்குள் சென்று மூலையில் மருத்துவர் அறைக்கு எதிரே இருந்த அறையில் நுழைந்தோம். அறை நடுவே இருந்த கட்டிலில் அப்பா படுக்க வைக்கப்பட்டிருந்தார். சுற்றி நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் காலியாக இருந்தன. அப்பாவின் கால் அருகே நாற்காலியில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் மெலிதாக சிரித்தார். 

“இவர் கூடத்தான் மூர்த்தி சார் தங்கி இருந்தார்” 

“அப்பாவுக்கு தனியா இருக்கத்தானே பிடிக்கும்?” என்று பாபுவிடம் கேட்டேன்.

“இல்லையே சார், இரண்டு வருஷமா அவர் வெங்கடேசன் சார் கூட ஒண்ணா தான் இருக்கார், இருந்தார்.” 

வெங்கடேசன் சிரித்தது போல இருந்தது. அவர் நாற்காலியில் இருந்து எழுந்து எனக்கு இடம் கொடுத்தார். நாற்காலியை நகர்த்திக் கொண்டு கேட்டேன்.  

“எப்படி ஆச்சு?”

வெங்கடேசன் கவனம் கலைந்து பார்த்தார். “எப்படி ஆச்சு?” என்று திரும்ப கேட்டேன். 

“காலைல வாக்கிங் போனோம். வந்து குளிச்சுட்டு இட்லி சாப்பிட்டோம். அப்பறம் தோட்டத்துல பேப்பர் படிச்சுட்டு இருந்தோம். திடீர்னு நெஞ்சை புடிச்சுக்கிட்டான். பாபு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போனான். பாதி வழியிலயே மூர்த்தி போயிட்டானாம்.” 

“அவர் எதுவும் பேசலையா?”

“தெரியலயே. திரும்பி வர மாட்டான்னு தெரிஞ்சிருந்தா போக விடாம நிறுத்திப் பேசிட்டு இருந்திருப்பேன்”

மெதுவாக வெங்கடேசன் வெளியே சென்றுவிட்டார். நாற்காலியை இழுத்து அப்பாவின் தலைமாட்டில் அமர்ந்து அவர் முகத்தை உன்னிப்பாக பார்த்தேன், என் நினைவில் இருந்த முகத்தில் இருந்து அப்பாவின் முகம் மாறுபட்டு இருந்தது. பாபுவை பார்த்தேன். அவன் அறையை விட்டு வெளியேறினான். ஐந்து வருடங்கள் கழித்து நான் தனியே அப்பாவுடன். 

ஆறு வருடங்களுக்கு முன் அம்மாவும் இது போலத்தான் மும்பையில் என் வீட்டில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள். அது ஒரு வியாழன், நானும் வாணியும் ஆபீஸில் இருந்தோம். அப்பா பெட்டித் நூலகத்திற்கு சென்றுவிட்டு மதிய உணவுக்கு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். நான் வீட்டுக்கு போன் செய்தபோது அப்பாவுக்கு பிடித்த பாவக்காய் பொரியலும் புளி ரசமும் சமைத்து வைத்துவிட்டு அவர் வரும் வரை தூங்கப் போவதாக அம்மா சொன்னாள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அப்பா போனில் அழைத்து விஷயத்தை சொன்னார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது அம்மா கட்டிலில் உறங்குவது போலத்தான் படுத்துக் கிடந்தாள். முகத்தில் அமைதி. அப்பா அம்மாவின் கை விரல்களை தடவிக் கொண்டிருந்தார். அம்மாவுடன் போனில் பேசியதை அப்பாவிடம் சொன்னேன். 

என் அழுகையில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்த்து அவர் தோளைத் தொட்டேன். அப்பா எழுந்து சென்று விட்டார். உடைந்து அழ சற்று தனிமை கிடைத்தது. அழுது தீர்க்கும் முன் பின்னால் யாரோ, வாணி வந்திருந்தாள். அழுகையைத் துடைத்துக் கொண்டு எழுந்தேன். கட்டிலில் அம்மாவின் அருகே அமர்ந்த வாணி சாப்பாடு தானே முக்கியம் என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். நான் அறையை விட்டு வெளியே வந்தேன். வாணியின் அழுகுரல் அறையை தாண்ட ஆரம்பித்தது. அப்பா தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தட்டின் முன் சாதப் பாத்திரம், ஈயப் பாத்திரத்தில் ரசம், சட்டியில் எண்ணையில் வதக்கிய வெங்காய வாசனையுடன் நல்ல சிவந்த பாவக்காய் பொரியல். அப்பா தட்டு நிறைய சாதத்தைப் போட்டு உருட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நானும் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அவர் அருகே அமர்ந்தேன். அப்பா எனக்குப் பரிமாறினார். இருவரும் பேசாமல் சாப்பிட்டோம். நான் முதலும் கடைசியுமாய் அப்பா அழுவதைப் பார்த்தது அன்றுதான்.  

அப்பாவின் கன்னத்தை தடவிப் பார்த்தேன். இன்று கூட ஷேவ் செய்திருக்கிறார். பாபு உள்ளே வந்தான். ஒரு நிமிஷம் வெளியே போங்க பாபு என்று அவனை அனுப்பி விட்டு அப்பாவின் கையில் ஒரு முத்தம் கொடுத்தேன். 

அப்பாவை எரித்துவிட்டு காப்பகத்திற்கு திரும்பி வர இரவு எட்டு மணி ஆகி விட்டது.  பாபுவின் அறையில் சென்று அமர்ந்தேன். தூக்கமும் அல்லாத விழிப்பும் அல்லாத ஒரு மயக்கம் வர, சாய்ந்து அமர்ந்து கொண்டேன். போன் அடித்தது. வாணி பேசினாள். விமலுக்கு காய்ச்சல். என்னைப் பார்க்க வேண்டி அழுகை. சமாதான சாக்லேட் பயனளிக்கவில்லை. முடிந்த விரைவில் திரும்புவதாய் சொல்லி பேசி முடித்தேன். காப்பக முதியவர்களை அவரவர் அறைகளுக்குச் சென்று பார்த்து விட்டு பாபு வந்தான். “சார் நைட் என் ரூமில் படுத்துக்கோங்க” என்றான்.  

சற்று யோசித்து விட்டு “அப்பா அறைல படுத்துக்கட்டுமா” என்று கேட்டேன். பாபு யோசித்து தலையசைத்து அனுமதித்தான். 

*** 

One Reply to “தனித்த வனம்  ”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.