- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- காணும் பேறைத் தாரீரோ?
- இறை நின்று கொல்லுமோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
このたびは
ぬさもとりあへず
手向山
紅葉のにしき
神のまにまに
கனா எழுத்துருக்களில்
このたびは
ぬさもとりあへず
たむけやま
もみぢのにしき
かみのまにまに
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: புலவர் மிச்சிஜானே
காலம்: கி.பி. 845-903.
ஜப்பானின் ஷிண்டோ மதத்தின் இடி, மின்னல் கடவுளாகவும் கல்வியின் கடவுளாகவும் வணங்கப்படுபவர். அரச குடும்பத்தில் பிறக்காத இவர் பின்னாளில் கடவுளாக வணங்கப்படுவதன் பின்னணியில் சுவையான வரலாறு ஒளிந்துள்ளது.
கி.பி 887ல் அரசராக அரியணையேறிய பேரரசர் உதா கி.பி 987ல் தன் மகன் அட்சுஹிதோவுக்கு வழிவிட்டுத் துறவறம் பூண்டார். முந்தைய கட்டுரைகளில் பார்த்தவாறு ஃபுஜிவாரா குடும்பமானது அரச வம்சத்தினருடன் திருமண உறவு கொள்ளும் தகுதி பெற்றது. உதா அரசராக முடிசூடியபோது அரசவை அதிகாரத்திலும் இந்த ஃபுஜிவாரா வம்சம் உச்சத்தில் இருந்தது. அதற்குப் போட்டியாக சுகாவரா குடும்பம் வளர முற்பட்டது. அதில் இப்பாடலாசிரியர் மிச்சிஜானே மிக வேகமாக உயர்ந்து மூன்றாம் மட்டத்தை (அரசருக்கு அடுத்தநிலைக்கு அடுத்தநிலை) அடைந்தார்.
இந்தக் குடும்பம் அறிஞர்கள் நிரம்பியதாக இருந்தது. இவரது தாத்தா கியோதொமோ அரசவையில் புதிதாகப் பொறுப்பேற்கப் போகும் அதிகாரிகளுக்கு வரலாற்றுப் பாடம் நடத்திவந்தார். இவரது தந்தை கொரேயொஷி அரசவை அதிகாரிகளாக விரும்புபவர்களுக்கு நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும் பயிற்சியகத்தைத் தன் வீட்டிலேயே நடத்தி வந்தார். மிச்சிஜானேவும் இங்குதான் தன் இளநிலைக் கல்வியைப் பெற்றார். பின்னர் கி.பி 870ல் கடைநிலை அதிகாரியாகக் குடிமைப்பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இவர் சீனமொழியில் பெற்றிருந்த புலமையும் வேகமான பணிவளர்ச்சிக்கு அடிகோலியது. கி.பி 877ல் கல்வியையும் அறிவுப்புலத்தையும் நிர்வகிக்கும் அமைச்சகத்தின் உயரதிகாரி ஆனார். அவரது தந்தையின் இறுதிக்காலத்தில் அவர் நிறுவிய பள்ளியான கான்கே ரோக்காவின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று அதன் தரத்தை உயர்த்தினார். கி.பி 894ம் ஆண்டின் ஆவணம் ஒன்று இவர் சீனாவுக்கான தூதர், இடங்கைப் படைப்பிரிவைக் கட்டுப்படுத்தும் அதிகாரி, இளவரசரின் முதன்மைப் பாதுகாவலர் போன்ற 7 பதவிகளை வகித்ததாகக் கூறுகிறது.
இப்படி ஏறுமுகத்தில் இருந்த இவரது வளர்ச்சி ஃபுஜிவாரா வம்சத்தின் கண்களை உறுத்தவே, இவருக்கு எதிரான சதிவலை பின்னப்பட்டது. இளவரசர் அட்சுயோஷிக்குப் பதிலாக இன்னொரு இளவரசர் தொக்கியோவை அரசராக்க முயல்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் கடைநிலை அதிகாரியாகப் பதவியிறக்கம் செய்யப்பட்டுத் தலைநகரிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஊரில் பணியமர்த்தப்பட்டார். ஏறத்தாழ ஓர் அகதிபோல் அவ்வூரில் வாழ்ந்து வந்தவர், தன் மீதான களங்கத்தைத் துடைக்க வாய்ப்பு இல்லாமல் சில ஆண்டுகளிலேயே கி.பி. 903ல் மரணித்தார்.
இவர் இறந்த உடனே ஜப்பானில் பிளேக் நோய் பரவத் தொடங்கி இளவரசர்கள் ஒவ்வொருவராக இறக்கத் தொடங்கினர். அரண்மனையின் கலைக்கூடம் தொடர்ந்து பலமுறை மின்னல் தாக்குதலுக்கு உள்ளானது. நாட்டின் பல பகுதிகளில் பெருமழையும் வெள்ளமும் வாரக்கணக்கில் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தின. மக்கள் இவற்றையெல்லாம் மிச்சிஜானேவின் ஆவி கோபத்தால் ஏற்படுத்தும் அழிவுகள் என நம்பத் தொடங்கினர். கோபத்தைக் குளிர்விக்கத் தலைநகர் கியோத்தோவில் கிதானோ தெம்மாங்கு என்ற இடத்தில் இவருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு இடி, மின்னலின் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். பின்னர் 70 ஆண்டுகள் கழித்து இவரது கல்விப்பணிக்காகவும் இலக்கியப் பங்களிப்புக்காகவும் கல்விக் கடவுளாகவும் ஆக்கப்பட்டார். நாடெங்கும் பல கோயில்களில் இவரது சிலைகள் வைக்கப்பட்டு இன்றும் பள்ளி மாணவர்கள் தேர்வுக்குச் செல்லுமுன் இவரை வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
பாடுபொருள்: தமுக்கே மலையின் பெருமை.
பாடலின் பொருள்: தமுக்கே மலையில் இருக்கும் இக்கோயிலுக்கு வரும்பொழுது வழிபாட்டுக்கான செம்பட்டின் இழையைக் கொண்டுவர இயலவில்லை. ஆனால் இம்மலையிலுள்ள மேப்பிள் மரத்தின் செவ்விலைகள் பட்டிழைகளைவிட உயர்ந்தவை ஆதலால் அவற்றை என் இதயப்பூர்வமான காணிக்கை ஆக்குகிறேன்.
நேரடியாகப் பொருள் கொள்ளும் விதத்தில் மிக எளிமையாக எழுதப்பட்ட இப்பாடல் மலையின் இயற்கை வளத்தை உயர்த்திக் கூறுகிறது. பழங்காலத்தில் தமுக்கே என்றழைக்கப்பட்ட மலை இன்று யொஷினோ மலை என்று அழைக்கப்படுகிறது. நரா மாகாணத்தில் உள்ளது.
வெண்பா:
செம்பட்டு நாரும் இறையேற்கும் ஆயினும் அம்பரம் நோக்கும் வரைநிறை - செம்மலர் பூத்துக் குலுங்க வளமிகுத்துக் காட்டிடும் செம்மை இலையும் உயர்வு அம்பரம் - வானம்