கோர்பச்சோவ் ஒரு பாகற்காய்

1931-2022

கோர்பச்சோவ் ஒரு பாகற்காய். பலருக்கு கசப்பையும், சிலருக்கு சுவையையும் கொடுத்தவர் அவர்.  

“கோர்பச்சோவை ஒரு முட்டாள்” என்று அன்றைய சீன அதிபர் தெங் சியாவோ பிங் கருதியதாக அவர் மகன் தெங் சிவாங் கூறுகிறார். அவர் “ஒரு பின்வாங்கிய தலைமகன்” என்கிறார் ஜேர்மன் கவிஞர் என்சென்ஸ்பேகர். “துரோகி, வெகுளி, அவல நாயகர்…” என்றெல்லாம் அவருக்கு பல்வேறு முத்திரைகள் குத்தப்பட்டுள்ளன.

1978ல் சீனாவின் அதியுச்சத் தலைவராய் ஓங்கிய தெங் சியாவோ பிங் சீன வரலாற்றை திசைதிருப்பத் தீர்மானித்தார். பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியை நிலைநிறுத்தும் அதேவேளை, பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க முடிவுசெய்தார். அதன் விளைவாக சீனா அடைந்த பொருளாதாரப் பாய்ச்சல் வியக்கத்தக்கது. 13 ஆண்டுகள் கழித்து ரஷ்யா அதிபராகப் பதவியேற்ற கோர்பச்சோவ் அத்தகைய கொள்கையைப் பின்பற்ற எண்ணவில்லை.

கோர்பச்சோவ் – தெங் சியாவோ பிங்

சோவியத் ஒன்றியத்துக்கு நேர்ந்த கதியை இன்றைய சீன அதிபர் சி-ஜின்பிங் எட்டிநின்று பார்த்தவர். ஆதலால் தெங் சியாவோ பிங்கின் கொள்கையை அவர் கடும்பிடியாக முன்னெடுத்து வருகிறார். பொருளாதார வளர்ச்சி மும்முரமாக இடம்பெறும் அதேவேளை, பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியை என்றென்றும் நிலைநிறுத்தும் நோக்குடன் காலவரையறையின்றிப் பதவிவகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கோர்பச்சோவ் எப்படிச் செயற்படிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, தெங் சியாவோ பிங் செய்தது போல், பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டு, பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றே சி-ஜின்பிங்கும், பூட்டினும் விடை அளித்திருப்பார்கள்! 

தமது அரசியற் சீர்திருத்தம் பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்று கோர்பச்சோவ் எதிர்பார்த்தார். அதன் விளைவாக சோவியத் ஒன்றியமும், வார்சோ ஒப்பந்த அணியும், தோழமைக் கட்சிகளும் நிலைகுலைந்தனவே ஒழிய, அவர் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. அதை அறிந்து தெங் சியாவோ பிங் உள்ளூர நகைத்திருப்பார். “முட்டாள்!” என்று முணுமுணுத்திருப்பார்!

ரஷ்ய மாமன்னர்களால் கைப்பற்றப்பட்ட லற்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா, ஆர்மீனியா, அஜபைசான், ஜோர்ஜியா, கசக்ஸ்தான்… முதலிய ஆள்புலங்கள் விடுதலை முழக்கங்களை எழுப்பின. ஜேர்மனியில் ஐக்கிய முழக்கம் எழுந்தது. கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடைமைக் கட்சிகளின் அரசுகள் ஆட்டம் கண்டன. வெளியுலக தோழமைக் கட்சிகள் குழப்பமடைந்தன…

ஈற்றில் செஞ்சேனை களத்தில் இறக்கப்பட்டு, கிளர்ச்சிகள் அடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தமது அரசியற் சீர்திருத்தத்தின் பக்கவிளைவுகளாய் ஏற்பட்ட கிளர்ச்சிகளை அவர் படைபலம் கொண்டு அடக்க மறுத்துவிட்டார். “தியனன்மென் சதுக்கத்தைப் போல் செஞ்சதுக்கம் மாறுவதை நான் விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்! 

1991 திசம்பர் 3ம் திகதி ரஷ்ய அதிபர் யெல்ற்சின் (Boris Yeltsin), உக்ரேன் அதிபர் கிரவ்சுக் (Leonid Kravchuk), பெலரஸ் அதிபர் சுஷ்கேவிச் (Stanislav Shushkevich) மூவரும் கூடி ஒப்பமிட்ட பெலவெஷா உடன்படிக்கையின் (Belavezha Accords) மூலம் சோவியத் ஒன்றியம் குலைக்கப்பட்டது. கோர்பச்சோவ் சோவியத் அதிபராக இருக்கையிலேயே, அவர் நாடற்ற ஆட்சியாளராக மாற்றப்பட்டு, பதவிதுறக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்!

சோவியத் ஒன்றியத்தின் திடீர் மறைவுக்கு கோர்பச்சோவின் பரமவைரியாகிய போரிஸ் யெல்ற்சினே தலையாய காரணம் என்கிறார் சோவியத் வரலாற்றுப் பேராசிரியர் வலரி சொலொவேய் (Valery Solovei). அதிபர் குருசேவின் கொள்ளுப்பேத்தியும் வரலாற்றறிஞருமாகிய நினா குருசேவாவும் யெல்ற்சின் மீதே பழி சுமத்துகிறார். 

எனினும், சோவியத் ஒன்றியத்தின் நிலைகுலைவுக்கு கோர்பச்சோவே முழுமுதற் காரணம் என்பது பூட்டின் உட்பட பரந்துபட்ட ரஷ்ய மக்கள் அனைவரதும் ஒருமித்த கருத்து. உள்நாட்டு, வெளியுலக தோழமைக் கட்சிகளின் நிலைப்பாடும் அதுவே.  உலகளாவிய தோழமை இயக்கங்களின் கருத்தும் அதுவே. ஏன், கோர்பச்சோவின் தீயூழும் அதுவே!    

1917 வரை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலவிய ரஷ்ய முடியாட்சியிலும், 1917 முதல் 74 ஆண்டுகளாக நிலவிய சோவியத் ஆட்சியிலும் அடுக்கடுக்காக ஓங்கிய அந்த மாபெரும் வல்லரசின் நிலைகுலைவை “இந்த நூற்றாண்டின் மாபெரும் உலகப் பேரிடி” என்று பூட்டின் குறிப்பிட்டுள்ளார். அதை எண்ணி வருந்தாதவர்களுக்கு இதயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

ஆனாலும், அத்தகைய வல்லரசிலிருந்து விடுபட்டு, தமது சுதந்திரத்தை மீட்டுக்கொண்ட நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அதை ஒரு “பேரிடி” என்று கருதியதில்லை. அவற்றைப் பொறுத்தவரை அது 20ம் நூற்றாண்டின் மாபெரும் மீட்சி எனலாம். அதனால் தானோ என்னவோ, சோவியத் ஒன்றியத்தை புதுப்பிக்கலாம் என்று  எண்ணுவோருக்கு மூளை இல்லை என்றும் பூட்டின் குறிப்பிட்டுள்ளார். 

கோர்பச்சேவ் பூட்டின்

கோர்பச்சோவின் இறுதிச் சடங்கில் பூட்டின் கலந்துகொள்ளவில்லை. அதற்கு தனது வேலைப்பளுவை அவர் காரணம் காட்டினார். முன்கூட்டியே சென்று, உடலைப் பார்த்து, குனிந்து பணிந்து, சிலுவைக்குறி காட்டி, பேழையில் பூவைத்து வெளியேறினார். கோர்பச்சோவ் குடும்பத்துக்கு அவர் அனுப்பிய இரங்கல் செய்தி கிரெம்ளின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது:

“மிக்கையில் கோர்பச்சோவ் உலக வரலாற்றுப் போக்கில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதி, அரசியல்மேதகை. இந்த நாட்டுக்கு அவர் தலைமை வகித்த காலத்தில் திடீரென சிக்குப்பிக்கான மாற்றம் ஏற்பட்டது. வெளியுறவு, பொருளாதார, சமூகத் துறைகளில் பாரிய சவால்கள் எழுந்தன. 

அவற்றை எதிர்கொள்ள சீர்திருத்தங்கள் தேவை என்பதை அவர் உணர்ந்துகொண்டார். நீடித்த பிரச்சனைகளுக்கு தமது சொந்த தீர்வுகளை முன்வைக்கப் பாடுபட்டார். கடந்த சில ஆண்டுகளாக மிக்கையில் கோர்பச்சோவ் புரிந்த மனிதாபிமான அலுவல்களையும், அறச்செயல்களையும், போதனைகளையும் இங்கு நான் சிறப்பித்துக் கூற விரும்புகிறேன்.”   

இலண்டன் கார்டியன் நாளேட்டில் ஐவன் கிரஸ்டேவ் எழுதுகிறார்: “கோர்பச்சோவ் பின்வாங்கிய தலைமகன் அல்ல; அவர் சீர்திருத்தம் கொணர்ந்த இறைதூதர். ஆனாலும் சமவுடைமையைக் காக்கத் தவறியவர். தமது நாட்டை அழிப்பதில் வெற்றி பெற்றவர். உளமுடைந்து, சினந்து, கசந்தவர். அவருக்கு இரங்கலாமே ஒழிய, இனிமேல் அவரை மெச்சமுடியாது. குறிக்கோள் இல்லாமல் தோற்றவர். மேற்குலகு தமது நாட்டைக் காக்கும் என்றெண்ணி அதை அரவணைக்க விரும்பியவர். அது நடக்கவில்லை. மேற்குலகினால் அல்லது விடுதலையையும் சுதந்திரத்தையும் நாடி மக்கள் விடுத்த கோரிக்கைளினால் அல்லது வரலாற்றினால் கூட தாம் வஞ்சிக்கப்பட்டேனோ என்ற உணர்வு அவரிடம் எஞ்சியிருக்கலாம்… அதேவேளை, மாஸ்கோவில் அமைந்துள்ள பேர்போன பல்கலைக்கழகம் ஒன்றில் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் என்னிடம் இப்படிச் சொல்லி வியந்தார்: கோர்பச்சோவை எனது மாணவர்கள் நோக்கும் விதம் வேறு. அவர்களது பெற்றோர் நோக்கும் விதம் வேறு. சோவியத் வல்லரசின் நிலைகுலைவுக்கு கோர்பச்சோவை மாணவர்கள் குறைகூறவில்லை. ஏனென்றால், சோவியத் ஒன்றியம் அவர்களது நாடல்ல. மாறாக, அங்கு நிலைநின்ற கட்டமைப்பை எதிர்த்துச் செயற்பட்ட அவரது தீரத்தையும், அமைதிவழியில் அவர் பதவிதுறந்த  பண்பையும் அவர்கள் மெச்சுகிறார்கள்ஆருயிர் மனைவி ரயிசாவின் மறைவு அவரைப் பிடித்து ஆட்டிய அதேவேளை, ஆருயிர் தாயகத்தின் அகால மறைவு தொடர்பான  குற்ற உணர்வும், சீற்றமும்  அவரை குத்திக்குதறின”  (Ivan Krastev, London Guardian, 2022-09-04). கோர்பச்சோவ் கழிவிரக்கத்துக்கு உள்ளாகியிருந்தார் என்பதில் ஐயமில்லை.

மேர்க்கல் கோர்பச்சேவ்

கிழக்கு ஜேர்மனியில் பிறந்து, ஐக்கிய ஜேர்மனியின் அதிபராய் ஓங்கிய அஞ்சலா மேர்க்கெல் விடுத்த இரங்கல்செய்தி: “…கோர்பச்சோவ் எனது வாழ்க்கையை அடியோடு மாற்றியவர். அவர் உலக வரலாற்றை எழுதியவர். ஓர் அரசியல்மேதகை தன்னந்தனியாக உலகத்தை மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டியவர். அவர் காட்டிய தீரத்தால்தான் கிழக்கு ஜேர்மனியில் அமைதிப்புரட்சி கைகூடியது. ஜேர்மனி ஐக்கியப்படுவதற்கும் அது நேட்டோவில் அங்கம் வகிப்பதற்கும் அவர் அனுமதி அளித்தார். அவரை என்றுமே நான் மறக்கமாட்டேன்…”

. நா. தலைமைச் செயலாளர் அந்தோனியோ குடரஸ்

ஐ. நா. தலைமைச் செயலாளர் அந்தோனியோ குடரஸ் விடுத்த செய்தி அவரது இணையத்தளத்தில் பொறிக்கப்பட்டுள்ளது: “…கோர்பச்சோவ் வரலாற்றின் போக்கினை மாற்றிய ஒரு தனித்துவமான அரசியல்மேதகை. வல்லரசுப் பகைமையை அமைதிவழியில் முடிவுறுத்துவதற்கு வேறெவரையும் விட அவரே அதிகம் பாடுபட்டவர். ‘ஒப்புமையில் ஒற்றுமை காண்பதல்ல அமைதி, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அமைதி’ என்ற தமது முழக்கத்தை செயலில் காட்டியவர். அதற்காகவே பேச்சுவார்த்தை, சீர்திருத்தம், வாய்மை, படைவலுக்குறைப்பு என்பவற்றை நாடியவர். பன்னாட்டுப் பண்பாட்டினைப் பேணுவதற்கு உறுதிபூண்டவர். உலக அமைதிகாக்க அயராது  பாடுபட்டவர்…” 

கோர்பச்சோவின் பழைய உதவியாளர் ஒருவர், “கோர்பச்சோவ் எங்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கினார். அந்த வாய்ப்பினை நாங்கள் இழந்துவிட்டோம்” என்று கூறுகிறார். “கோர்பச்சோவ் நல்லதொரு மீட்பர்; ஆனால் வழிதெரியாத அரசியல்வாதி” என்பது இன்னோர் உதவியாளரின் கூற்று.

கோர்பச்சோவை நினைந்துருகும் நினா குருசேவா விடுத்த இரங்கல் செய்தி இது: “ரஷ்யாவின் மாபெரும் குடியாட்சியாளர் கோர்பச்சோவே. எனது முப்பாட்டன் குருசேவே தனது வழிகாட்டி என்று கோர்பச்சோவ் என்னிடம் தெரிவித்ததார். கோர்பச்சோவ் ஈந்த கொடையைக் காப்பாற்றத் தவறியதன் மூலம் அவருக்கு நாம் துரோகம் இழைத்துவிட்டோம். ரஷ்யா பின்னோக்கி நடைபோடும் இவ்வேளையில் நாம் கோர்பச்சோவையும் இழந்து, எமது நம்பிக்கையையும் இழந்து தவிக்கிறோம். ” 

கோர்பச்சோவ் ஒரு பாகற்காய். பலருக்கு கசப்பையும், சிலருக்கு சுவையையும் கொடுத்தவர் அவர்.  

மணி வேலுப்பிள்ளை, 2022-09-10

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.