
(1)
குழந்தையின் கையில்
பொம்மையாகி
அதைச் சிரிக்க வைக்கும்
ஆசையில்
பொம்மையானேன்.
குழந்தை என்
கையை முறுக்கியது.
காலைத் திருப்பியது.
உடலை வளைத்தது.
தலையைத் திருகியது.
விழிகளைப் பிதுக்கியது.
சிரித்துக் கொண்டே இருந்தேன்.
பொசுக்கென்று தூக்கிப் போட்டது
பொம்மையென்னை
குழந்தை- பொம்மை
அழவில்லையென்று.
(2)
விரைந்து வீடு
தன்னைக் கட்டிக் கொண்டது.
சுடாமல் சூரியன்
ஓடி வந்து உதித்துச்
சிரித்தான்.
நெடுநெடுடென
ஒற்றைத் தென்னை
உடனே வளர்ந்து விண்ணை
இடித்தது.
குட்டி வானில்
பறந்து பறந்து தீரவில்லை
பறவைகள்.
ஓவியம் தன்னை வரையக்
குழந்தை வரைந்த ஓவியம் அது.
குழந்தை வரைந்த வீட்டுக்குள்
நுழைய நான் துணிய என்
தலை தட்டியது.
குழந்தைகள் வசிக்கும்
வீடு அது.
(3)
’தாத்தா’-
குரலின்
பனிவிரல் தீண்டித்
திரும்பிப் பார்க்க
குளுகுளுவெனச் சிரித்து
முன் பின் முகம் தெரியாத ஒரு குழந்தை-
இது வரை எனக்குத் தெரியாத
பிறக்கும் முன்னே
என் முகம் எதுவோ அதுவாய்
அதன் முகம் தெரிய
எனக்கு.
(4)
பேந்தப் பேந்த அழும் குழந்தை
முதல் நாள் நர்சரியில்.
பொம்மைகளைக் காட்டி
விளயாட்டு காண்பிப்பாள் ஆயா.
பொம்மைகளோ குழந்தையோடு
சேர்ந்து அழும்.
சமாதானங்கள் சொல்லிப் பார்ப்பாள் ஆயா.
ஆனால் அம்மாவின் சமாதானங்கள் போல்
நம்பிக்கையாயில்லை அவை.
குழந்தைக்குத் தெரிந்ததெல்லாம் அழுதால்
அம்மா வருவாள்.
அம்மா வந்தாள் ஓடி-
அன்று நர்சரியில் முதல் நாள்
அழுத குழந்தை அவளுக்குள்,
அவளுக்கு முன்
ஓடி வந்தது.
(5)
ஓடிப் பிடித்து
விளையாடும் குழந்தைகள் மைதானத்தில்.
குழந்தைகளின் விளையாட்டு விதிகள்
வித்தியாசமானவை.
குழந்தைகள் சேர்த்துக் கொள்ளவில்லை என்னைக்
குழந்தைகளின் விளையாட்டில்.
குழந்தையாயில்லை நான் என்றல்ல.
குழந்தைகளின் விளையாட்டில்
வெற்றியில்லை; தோல்வியில்லை.
விளையாட்டே ஜெயிக்கும்.
பிறர் தோற்று நான் ஜெயிக்க அல்லது
நான் தோற்று பிறர் ஜெயிக்கவே
விளையாடத் தெரியும் எனக்கு.
குழந்தைகள் சேர்த்துக் கொள்ளாததால்
குழந்தைகள் விளையாட்டை
எட்டி நின்று இரசித்து
ஒவ்வொரு குழந்தையின் பின்னும்
ஓடோடும் என் விழிகள் மட்டும்
என் பால்யத்தினுடையதாய் இருக்கும்.
(6)
குழந்தைகள் அதிசியமானவை:
பட்டாம்பூச்சிகளாய்ப் பறந்து திரிகின்றன மைதானத்தில்.
அதன் பிரதிபலிப்பாய்ப்
பட்டாம்பூச்சிகளும் அதிசியமானவை:
குழந்தைகளாய்த் துள்ளித் திரிகின்றன வானில்.
இதை அதிசியிக்காது
குழந்தைகளின் உலகில்
நுழைந்து விட முடிவதில்லை;
அதன் வழியாய்ப்
பட்டாம்பூச்சிகளின் உலகும் பிடிபடுவதில்லை.
அனைத்து உலகுகளின்
நுழைவாயில்-ஆச்சரியத்தை-
அகன்று விரியும்
தம் விழிகளில் தெரிவிக்கும்
நிதர்சனத்தில், அதனாலேயே
குழந்தைகள் ஆச்சரியமானவை.
(7)
இன்னும்
வார்த்தை
உவர்க்காத
மழலையில்
இனிக்க
ஒலிக்கும்,
வியப்பில்
நோக்கிக்
குதூகலிக்கும்
குழந்தையின்
விழிகளில்-
உவர்க்கும்
சமுத்திரம்
உவப்பில்
இனிக்கிறது-
மிதந்து.
ஒவ்வொன்றும் மிக அருமை நண்பரே !!!
வாழ்த்துகள் !!!!
நண்பருக்கு நன்றி; வணக்கம்.