
அதிகாலைக் கனவு பலிக்கும் என்பதுதானே ஐதீகம். கனவுகள் கறுப்பு-வெள்ளையாகத்தான் இருக்கும் என்பார்கள்; அவை சில விநாடிகளுக்குமேல் நீடிப்பதில்லை என்றும்கூடச் சொல்வார்கள். இப்படித்தான் ஒவ்வொரு துறையிலும் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்து, அறுதியிட்டுச் சொல்கிறார்கள். நடைமுறையில் அதே சந்தர்ப்பத்தை நாம் எதிர்கொள்ளும்போது முழுக்க வேறுமாதிரியான அனுபவம் நேரிட்டுவிடுகிறது.
பல வருடங்கள் கழித்து, தெய்வாதீனமாக யாரோ ஒரு ஆய்வாளருக்கும் இதே மாதிரி நேர்ந்து, அல்லது இப்படியொரு சாத்தியம் குறித்த சந்தேகம் அவருக்குள் உதித்து, தரவுகளைச் சேர்க்கவும் கோக்கவும் தொடங்கி, ‘ஆமாம், எங்கள் முன்னோர் சொன்னது தவறுதான்’ என்று அவர்களுக்குள் மட்டுமே புழங்கும் மொழியில், ஏகப்பட்ட குறிகளையும் குழூஉக் குறிகளையும் பயன்படுத்தி விளக்கி, அது பாமரப் பொது அறிவுக்குள் நுழைவதற்குள் இன்னும் ஐம்பது நூறு ஆண்டுகள் ஓடித் தீர்ந்து… அதற்குள் ஆதி அனுபவத்தை அடைந்த நபர் இல்லாமலேகூடப் போயிருப்பார்.
நான் நள்ளிரவில் கண்ட கனவு ஒன்றைப் பற்றிச் சொல்கிறேன். கனவு முடிந்தவுடன் விதிர்த்து விழித்துக்கொண்டதால் வேளை தெரியவந்தது. அது பலித்துவிட்டது என்றால், ஆரம்ப வரி என்னைப் பொறுத்தவரை உடனடியாய் ரத்து ஆகிவிடும். ஐதீகம் கிடக்கிறது ஐதீகம். அதற்கெல்லாம் புள்ளிவிவரப் பின்புலம் உண்டா என்ன.
நான் கண்ட கனவில் ஏகப்பட்ட நிறங்கள் தென்பட்டன என்பது இன்னொரு விசேஷம். இது அறிவியல் சொல்லும் உண்மைக்கு எதிரானது என்கிற மாதிரித் தெரிகிறது அல்லவா. ஆனால், கனவில் வந்த கோமதி நிஜத்தில்போலவே கறுப்பாய் இருந்தாள்; அவளுடன் வந்திருந்த பவித்ரா செக்கச்செவேலென்று இருந்தாள். சம்பத் சிரித்தபோது எப்போதும் போலவே அவனுடைய நேர்த்தியான வரிசைப் பற்கள் வெள்ளைவெளேரென்று பொலிந்தன. அதைவிட, பொங்கிப் பெருகிய அவனுடைய ரத்தம் தத்ரூபமாக ரத்தச் சிவப்பில் இருந்தது. இவ்வளவு ஏன், கோமதியின் கணவருடைய குடுமி அத்தனை கறுப்பாய் இருந்தது. என் தலையில் எஞ்சியிருக்கும் ஐம்பது அறுபது முடிகளில் முக்கால்வாசி வெள்ளையாய் இருக்கும்போது, என்னைவிட ஆறுவயது மூத்தவரான அவரது கேசம் கட்டுக் குலையாமல் இருந்ததும், அதில் கொஞ்சம்கூடச் சாம்பல் நிறம் சேரவில்லை என்பதும் எனக்கு மட்டும்தானே தெரியும்.
ஆனால், வேறொரு உண்மையை மறுக்க முடியாது – எவ்வளவு நேரம் அந்தக் கனவு நீடித்தது என்று உறுதியாய்ச் சொல்வதற்கில்லை. சொல்லிக்கொள்கிற மாதிரி ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே என்று மற்றவர்களுக்குத் தோன்றலாம் – அனுபவித்தவனுக்குத்தான் அதன் தீவிரமும், உள்ளர்த்தமும் தெரியும். எப்போதுதான் இது முடியுமோ என்று அப்போது நான் பதற்றமாய் இருந்ததும் உண்மைதான். கனவுக்குள் இருக்கும்போது, அது வெறும் கனவுதான் என்று உணர முடியுமா என்ன!
அடுத்த நூற்றாண்டில் இதை வாசிக்கிற ஒருத்தருக்கு, அதாவது அதுவரை இது எஞ்சியிருந்தால், ஒட்டுமொத்த அறிவியலுக்கும் எதிரான ஒரு செயல்பாடு ஒரு தனிமனித வாழ்க்கைக்குள் நிகழ்ந்தேறியது தெரிய வரலாம். யார் கண்டது, அந்த நாளில் அறிவியலும் இதே இடத்துக்கு வந்திருக்குமானால், ஜோசியம் ஆரூடம் ஈஎஸ்பி இவற்றுக்கெல்லாம் புதிய கவனமும் புதிய ஆதரவாளர்களும் கிடைக்கவும் செய்யலாம் – முன்னுணர்வு என்ற சொல் நியூட்ரான் என்ற சொல்லுக்கு இணையாக அறிவியல் புலத்தில் புழங்க ஆரம்பித்திருக்கலாம்…
‘அடேய், ராம்தாஸு, நீ என்னதான் சொல்லவருகிறாய், இப்படி வறட்டுத்தனமாய் வாக்கியங்கள் போய்க்கொண்டே இருந்தால் நம்பிப் படிக்க ஆரம்பித்தவர் எப்பேர்ப்பட்ட உளைச்சலுக்கு ஆளாவார்’ என்றெல்லாம் எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். அவ்வளவு குழம்பியிருக்கிறேன். ஆனாலும், வெறும் நாட்குறிப்பு மாதிரித்தான் என்றாலும், என்றோ படிக்கவிருக்கிற யாரையோ உத்தேசிக்காமலா இவ்வளவுநாளும் எழுதி வந்திருக்கிறேன்… இவை என்னுடைய குறிப்புகள் என்பதால், கேட்கிற ஆளுக்கு, முதல் ஆள் சொல்லும் பதிலையும் நான்தானே சொல்லியாக வேண்டும்…
சிலநொடிக் கனவின் விதிர்ப்பு மறுநாள் அதிகாலைவரை தொடரும்போது, எல்லாரும் ஒரே மாதிரி எதிர்கொள்வார்களா என்ன.
பின்னே, ஒருத்தர் கடவுளிடம் ஓடுவார்; மற்றவர் அதிகாலையிலேயே குடிக்க ஆரம்பிக்கலாம். இன்னொருத்தர், விட்ட இடத்திலிருந்து மறுபடி தூங்க முயற்சிக்கலாம். நாலாவது நபர் ஓயாமல் சிகரெட் ஊதித் தள்ளலாம். என்னை மாதிரி ஆட்கள் வார்த்தைகளிடம் சரணடைகிறோம். அவற்றின் வழியே, வழிந்து தீரும் நிம்மதியின்மையிடம் மண்டியிட்டு மன்றாடுகிறோம் – அவ்வளவுதான். ‘வாசிக்கிறவருக்கும் அது தொற்ற வாய்ப்பிருக்கிறதே’ என்றால், கொஞ்சம் முரட்டுத்தனமாகத்தான் பதில் சொல்ல வேண்டி வரும். வாசிப்பில் இன்பம் மட்டுமே கிடைக்கவேண்டுமென்றால் அவர்கள் வாசிக்கவேண்டியது வேறு சமாசாரங்களை.
பாசமலர் படத்தையோ, அன்றாடம் சாயங்கால தொலைக்காட்சித் தொடர்களையோ பார்த்துக் குடம்குடமாய்க் கண்ணீர்விடும் ஜனக்கூட்டம், இதுபோலப் பத்து வாக்கியம் வாசிப்பதால் சிரமப்படும் என்பதே சற்று தர்க்கவிரோதமான விஷயம்தான். ரே படங்களில், மிருணாள் சென், கௌதம் கோஸ் படங்களில் தெரியவரும் துயரங்களைப் பார்த்து இன்புறுகிறவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இதைவிடக் கடினமான ஆங்கில வாக்கியங்களில் அந்நியதேசத்தவர்களை வாசிப்பதில் அவர்களுக்கு எந்தவிதமான மனத்தடையும் இருப்பதில்லை என்பதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன். சரி விடுங்கள், சொல்லவந்த விஷயத்துக்குப் போகலாம்…
தாம்பரம் ரயில் நிலையம். மின்ரயில்களுக்கான நடைமேடையில் நிற்கிறேன். பணியில் இருந்த காலத்திலேயே அந்த மேடைக்கெல்லாம் போகவேண்டிய அவசியம் நேர்ந்ததில்லை. முந்தின நிலையத்தில்தான் காலையிலும் மாலையிலும் நின்றிருப்பேன். வெளியூர்ப் பயணங்களையொட்டித் தாம்பரம் நிலையத்துக்குப் போனால் உண்டு. அதுவும்கூட, நிச்சயமாக அலுவலக நேரங்களில் அல்ல. அப்படியிருக்க, என் கனவில் சாயங்கால வேளையில், அந்த நடைமேடையில் நின்றிருந்தேன் என்பதே விநோதமாய்த்தான் இருந்தது.
அவரவர் கனவுக்கு மூலகாரணத்தை அவரவரும் தேடத்தானே செய்வார்கள். நானும் தேடுவதுதான் முறை. ஆனால், இப்போது அவகாசம் இல்லை. ஆழ்மனத்தின் சித்துவேலை அல்ல இந்தக் கனவு; அதற்கும் அப்பாலுள்ள ஏதோவொன்றின் முன்கணிப்பு என்பது கடைசிப்பகுதிக்கு வரும்போது வாசிப்பவருக்கே தெரிந்துவிடும்…
திடீரென்று, கோமதி என்னை நோக்கி வருவதைக் கவனித்தேன். அவள் கோமதி என்று புரிவதற்கு முன்னாலேயே கோமதிதான் அது என்று எனக்குத் தெரிந்துவிட்டது. தன் ஒல்லி உடம்பின் மேற்பகுதியை ஒயிலான பெண்டுலம்போலப் பக்கவாட்டில் அசைத்தபடி என்னை நெருங்கி வருகிறாள். தோகைவிரித்து ஆடும் மயில் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாய் இருக்குமோ. அலுவலகம் விட்டுக் கிளம்புவதற்கு முன்னால் அவள் மெலிதாகப் பூசிக்கொள்ளும் லாக்டோ காலமைன் மணம் என்னை எட்டுவதற்கு இன்னும் சில தப்படிகள் பாக்கி. அதற்குள்ளேயே என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டாள். சிங்கப்பற்கள் வெளித்தெரிந்து என்னைக் கிறுகிறுக்க வைக்கின்றன.
இதை விவரிக்கும்போதுதான் தெரிகிறது – நான் பார்த்த கோமதி திருமணத்துக்கு முன்னால் இருந்த எழிலரசி. திருமணமான மூன்றாவது மாதத்தில் அவளுடைய தோற்றத்தில் மேலும் மெருகேற ஆரம்பித்தது. திருச்சியில் போய் அவளைப் பார்த்த சந்தர்ப்பங்களில், என்னிடம் பிறவியிலேயே இல்லாமல் போய்விட்ட துணிச்சல் பற்றி அத்தனை ஏக்கமாய் இருந்தது.
ஆனால், அவள் கணவர் இறந்தபோது போயிருந்தேன் அல்லவா, அன்றாடம் பல் துலக்கி குச்சங்கள் தொய்ந்த பிரஷ்போல, பழைய கோமதியின் தேய்ந்த வடிவம்தான் சடலத்தின் தலைமாட்டில் அமர்ந்திருந்தது. உயிரில்லாத கண்களுடன் என்னைப் பார்த்து, கண்ணாலேயே ஆமோதித்தாள். இழவு வீட்டில் ’வா’ என்று சொல்வது மரபு இல்லை அல்லவா.
ஆக, கடைசியாய்ப் பார்த்த தோற்றம் இப்படியிருக்க, கனவில் என்னை நோக்கி நடந்துவந்த உருவம் அதற்குப் பல ஆண்டுகள் முன்னால் பார்த்த ஒன்று என்பதை என்னால் செரித்துக்கொள்ளவே முடியவில்லை.
ஆமாம், என்னை நோக்கி வந்த கோமதி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தையவள். அப்போது ஒருநாள் சீண்டுவதற்காக, பொது இடத்தில் வைத்து, ‘எங்கே, நிஜமாகவே என்மீது அபிமானம் இருந்தால், இங்கே வைத்து முத்தம் கொடு பார்ப்போம்’ என்று நான் விடுத்த சவாலுக்கு, ‘உனக்கில்லாமலா!’ என்று உடனடியாக உதட்டில் முத்திய அதே கோமதி.
அலுவலகம் விட்டுத் திரும்புகிற பயணிகள், தோளில் தொங்கும் கோணியுடன் தண்டவாளத்தில் இறங்கிக் குப்பை பொறுக்கிய பெண்மணி, நாங்கள் வழக்கமாக நிற்கும் இடத்தில் அமர்ந்து தகர டப்பாவைத் தட்டி யாசகம் கேட்கும் ஊனர், இளநீலச் சேலையும் வெள்ளை ரவிக்கையும் கையில் பச்சைக்கொடியுமாய் நின்ற ரயில்வே ஊழியர், ஸேஃப்டி பின் கொத்தை வாங்கச்சொல்லி வாய் ஓயாமல் நச்சரித்த நரிக்குறவச் சிறுமி என ஏகப்பட்ட பேர் பார்க்க இது நடந்தது. அவரவர் ஈடுபாட்டில்கூட மூழ்கியிருந்திருக்கலாம்; என்றாலும் எல்லாரும் என்னையே பார்க்கிற மாதிரி என் உடல்முழுவதும் உணர்ந்தேன்.
மறுநாளிலிருந்து எழும்பூர் நிலையம் போவதைத் தவிர்த்துவிட்டேன். மெனக்கெட்டு நகர்ப் பேருந்து ஏறி, அடுத்த நிலையத்தில் ரயிலேற ஆரம்பித்தேன். எழும்பூரில் ஏறியவர்கள்தானே ரயிலுக்குள் இருந்திருப்பார்கள் என்று இப்போது தோன்றுகிறது. சரிதான், காதலோ அவமானமோ விசைகொள்ளும்போது, சுற்றுப்புறமென்ன, தர்க்கமென்ன. அதெல்லாம் சாவகாசமாய் இருக்கும்போது கவனத்தில் வருகிறவையல்லவா. ஆனால், நான்தான் அப்படிச் செய்தேன். கோமதி தொடர்ந்து எழும்பூரில் சென்றே ரயிலேறினாள்.
நானென்ன ஜேப்படியா பண்ணினேன்?
என்று சரளமாக பதில் சொல்லவும் செய்தாள். இதுதான் அவளுக்கும் எனக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. எதிரில் நிற்பது யானையாகவே இருந்தாலும் சரிசமமாய் மல்லுக்கட்டத் துணிந்தவள் அவள். எனக்கானால், கொசுவத்திப் புகை இல்லாத இடத்தில் தூங்கக்கூட முடியாது. பொன்னேரி பதிவு அலுலவலகத்தில் போய்த் திருமணம் முடித்துக்கொண்டு, வடபழனியில் தாலிகட்டிக்கொள்ளலாம் என்று எவ்வளவோ சொன்னாளே. பிடிவாதமாய் மறுத்துவிட்டேன்…
என் சுபாவத்தை மாற்ற வேண்டும் என்றுதானோ என்னவோ, என்னை ஒரு வடக்கத்திப் பல்கலைக் கழகத்தில், பி ஏ ஸைக்காலஜி சேரச் சொன்னாள். எனக்கு அனுசரணையாக, தானும் சேர்ந்தாள். தபாலில் வரும் பாடங்களுக்கு அப்பால், கன்னிமாராவிலிருந்து சில நூல்கள் எடுத்து வந்து வாசிக்கத் தருவாள். அவளை இழந்த பிறகு, கராத்தே, சங்கீதம் இரண்டையும் தவிர, ஏகப்பட்ட விஷயங்களை தபால் வழியில் படித்துவிட்டேன். எதுவுமே நினைவில் இல்லை என்று வையுங்கள். ரெஸ்பான்ஸ் ஷீட் அனுப்பி அனுப்பி, பக்கம்பக்கமாக எழுதித்தள்ளும் பழக்கம் மட்டும் என்னுடன் தங்கிவிட்டது.
ஆரம்பத்தில், நான் எழுதிய கட்டுரைப் பீடிகையின் மூலகாரணம் ஒருவழியாய்ப் புரிந்திருக்குமே. இப்போதும், கத்தையாய்த் தாள்கள் கோத்த குறிப்பேடும், கைபேசியும் இல்லாதிருந்தால், என் வாழ்க்கை நரகமாய்த்தான் ஆகியிருக்கும். தோன்றுவதையெல்லாம் எழுதிவைப்பேன். என்றோ இதை வாசிக்கப்போகும் அந்தப் பாவப்பட்டவரை மனத்தில் பார்த்தவாறே, மனம்போல தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதுவேன். இது நாட்குறிப்பு மாதிரித்தானே தவிர, நாட்குறிப்பே அல்ல என்று ஏற்கனவே சொன்னேனில்லையா.
இதெல்லாம் கிடக்கட்டும், மெனக்கெட்டும், தற்செயல் போலவும் ஒருவருக்கொருவர் உரசியவாறே நாங்கள் ரயில்நிலையம்வரை நடப்பது மேற்படி சம்பவத்தால், நின்றுபோனது. உபரியாக, அவ்வப்போது குமிழ்கள் உரசும் கிளுகிளுப்பும் இருவருக்கும் இல்லாமல் ஆனது.
மேற்சொன்ன நிலைமை பத்தே நாள்தான் நீடித்தது. ஜேப்படியைவிட மோசமான ஒரு செயல் நடந்துவிட்டதாக அலுவலகத்துக்கு யாரோ நலம்விரும்பி தெரிவித்துவிட்டார்.
அதென்னாங்க, ஒரு மேலதிகாரின்ற மரியாதெகூட இல்லாமெ, வீம்பாப் பேசுது அந்தப் பொம்பளெ. அந்தாளு எவ்வளவு பணிவா பதில்சொன்னான்? என் மூஞ்சியெப் பாத்துப் பேசவே கூசுனான். அவனுக்காகத்தான் ட்ரான்ஸ்ஃபரோடெ நிறுத்துனேன். இல்லாட்டி, அந்தக் களுதையெ சஸ்பெண்டே பண்ணீருப்பேன்.
என்று தம்மிடம் செல்வராஜ் சார் சொன்னதாக டீக்கடையில் வைத்து, என்னிடம் தெரிவித்த தலைமைக் கணக்கர் ராஜாங்கம், என் முகத்தையே உற்றுப் பார்த்தார். சாதாரண பாவத்தை முகத்தில் நிலைவைத்துக்கொள்ள எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா. தவிர,
அந்தாள் அநாவசியமா என்கிட்டெ நூல்விடுறான். ஒருநா செருப்படி வாங்கப்போறான் பார்.
என்று செல்வராஜ் பற்றி கோமதி என்னிடம் சொன்னதுவேறு உடனடியாய் நினைவு வந்து தொலைத்ததா, முகம் மாறாமல், புரையேறாமல் டீ குடிப்பது பெரும்பாடாகி விட்டது… பின்னாளில் ஒரு சட்டப் பட்டயம்கூடப் படித்தேன். முதல்வகுப்பில் தேறினேன். அலுவலகத்துக்கு வெளியில் நடந்த சம்பவத்துக்கு அலுவலகம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது பற்றி அதில் ஒரு கேஸ் ஸ்டடி இருந்தது. விளக்கம் மறந்துவிட்டது – இங்கேதான் சமாசாரம் முடிந்தே போயிருந்ததே…
ஆனால், கெட்டதிலும் ஒரு நல்லது என்கிற மாதிரி, அலுவலக மாற்றம் கோமதிக்கு சாதகமாகவே ஆனது. பெருங்களத்தூரிலிருந்து எழும்பூர் வந்து மேற்கொண்டு இருபது நிமிஷம் நடப்பது வசதியா, பரங்கிமலையில் இறங்கி பத்துநிமிஷம் ஷேர் ஆட்டோவில் போவது வசதியா. வீட்டைவிட்டு முக்கால்மணி நேரம் தாமதமாகக் கிளம்ப முடிகிறது என்று ஃபோனில் உற்சாகமாகத் தெரிவித்தாள்.
இப்படித்தான், அவளுடைய வாழ்க்கையில் எல்லாமே நல்லவிதமாக அமைந்து வந்தது. கேள்வி கேட்காத பெற்றோர், கேட்டதையெல்லாம் வாங்கித்தரும் உடன்பிறப்புகள், மத்திய அரசு உத்தியோகம் என்று. அவள் கேட்ட ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக மறுத்துவிட்டார்கள். வேறென்ன, என்னைத்தான். வேறுவேறு சாதியில் பிறந்திருந்தோம் என்பதால், உள்ளூர இருவருமே இதை எதிர்பார்த்திருந்தோம். என் தொடர்பாக அவளுக்கிருந்த ஆவேசமும் இதன் காரணமாகவே இருந்திருக்கலாம். ஆனால், முழுக்கவே நாங்கள் எதிர்பார்த்திராத வேறொன்று நடந்துவிட்டது.
அபூர்வமான மனிதர் அவளுக்குக் கணவராக அமைந்தார். காந்தியின் காலத்தில், வார்தா ஆசிரமத்தில் இருந்திருக்க வேண்டிய சாத்வீகர், எல்லைஸியில் வேலைபார்ப்பார் என்று யார்தான் நினைத்திருப்பார்? என்னுடைய கண்ணேறே பட்டுவிடப் போகிறதே என்று ரொம்பநாள் புழுங்கிக்கொண்டிருந்தேன்…
இதையெல்லாம் விவரிக்கத்தான் இவ்வளவு நேரம் பிடிக்கிறது. கனவில் அவளைப் பார்த்தபோது இவ்வளவும் ஞாபகம்கூட வரவில்லைதான்; என்றாலும், மொட்டையாக ’கோமதி வந்தாள்’ என்று சொன்னால், ‘செவ்வாய்க்கு சீனா அனுப்பிய கலம் பத்திரமாகச் சென்று இறங்கியது’ என்கிற மாதிரி தொனிக்காதா! அதை உத்தேசித்துத்தான் இவ்வளவும் சொன்னேன். தவிர, என்னை மாதிரி வருடக்கணக்காகப் படுத்தபடுக்கையாய் இருப்பவர்கள், எதையுமே கொஞ்சம் விரிவாக யோசிக்கத்தான் செய்வார்கள், யோசனையின் வழியாக எவ்வளவு தூரத்தையும் எவ்வளவு காலத்தையும் சமாளித்துவிட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். கேட்க எதிரில் ஆளிருந்தால் சொல்லவும் செய்வார்கள்… லாக்டோ காலமைன் மணம் நாசியில் மோதிய அதே வேளையில்,
பவியும் சம்பத்தும் பின்னாடி வர்றாங்க.
என்று தகவல் சொன்னாள் கோமதி. கனவில் மணம் தெரியுமா என்ற சந்தேகம் இப்போது வந்திருக்குமே! எனக்கும் வரத்தான் செய்கிறது. அதை அப்புறம் கவனிப்போம். கோமதி சொன்னவுடன், அவளுக்குப் பின்னால் எட்டிப் பார்த்தேன். துலக்கமாய்த் தெரியவில்லை. சட்டென்று தோள்பையைத் திறந்து கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டேன். சுமார் ஐம்பதடி தொலைவில் இருவரும் வந்துகொண்டிருந்தார்கள்.
இருங்கள், இந்த இடத்தில் இன்னொரு தடவை ஆச்சரியப்பட்டுக்கொள்கிறேன். கோமதி தொடர்பு அறுதியாக விட்டுப்போய், சுமார் இருபது வருடம் கழித்துத்தான் நான் பைஃபோகல் கண்ணாடி அணியவே ஆரம்பித்தேன். ஆக, நடைமேடையில் நான் இப்போதைய வயதிலும் கோமதி அப்போதைய வயதிலும் இருந்தது ஒரு ஆச்சரியம்; இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன்.
ஒரு இடத்தில் பத்துப் பேர் இருந்தால், பத்துப்பேர் கடியாரமும் ஒரே வேளையைக் காட்டும்தான்; அதற்காக, பத்துப்பேருக்கும் பொதுவான காலவுணர்வு இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் உண்டா.
என்று மைக்கேல் சார் சொன்னது, அவர் ‘ரிலேட்டிவிட்டி தியரி’ எடுக்கும்போதும் சரி, அதற்குப் பின்னாலும் சரி, புரியாமலே இருந்துவந்தது, இந்தக் கனவைப் பற்றி யோசிக்கும்போது, சட்டென்று ஒருவிதமாகப் பொருள்படுகிறது. சார் இன்னொன்றும் சொன்னார்:
இங்கே நடப்பது எல்லாமே இணைப்பிரபஞ்சம் ஒன்றில் இதே வேளையில் நடந்துகொண்டிருக்கிறது என்றும், நடக்கிற எல்லாமே ஒரு சூட்சும வெளியில் இதேவிதமாகப் பதிவாகிக்கொண்டிருக்கிறது என்றும்கூடச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நிரூபணம் இல்லாதவற்றை அறிவியலின் எந்தக் கிளையும் ஏற்றுக்கொள்ளாது…
அவர் சொன்ன இன்னும் எத்தனையோ விஷயங்கள் நினைவு வருகிறது. அதையெல்லாம் தனியாக இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம்…
இப்போதைக்கு, ஒரே நடைமேடையில், ஒரே வேளையில் நின்றிருந்த கோமதியும் நானும் ஆளுக்கொரு காலத் துகளைச் சுமந்து நின்றிருந்தோம் என்று சொன்னால் சரியாய் இருக்கும். நனவில் பாறாங்கல்போலக் கனக்கும் கடந்தகாலம், கனவில் தூசுபோல எடையற்று இருந்தது என்பதையும் சொல்லவேண்டும். தவிர, நிஜத்தில் எப்போதோ பதிவானதைத்தான் கனவில் மீட்டெடுத்துப் பார்த்தேனோ என்றும் தோன்றத்தான் செய்கிறது. பால்யத்தில் நடந்த கல்யாணத்தின் வீடியோ பதிவை வயோதிகத்தில் இன்னொரு தடவை பார்க்கிற மாதிரி.
ஆனால், இப்படியெல்லாம் விளக்க ஆரம்பித்தால் இதுவரை விவரித்த அத்தனையுமே துலங்குவதற்குப் பதில், மர்மமானதாய் ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே, நான் சொல்வதையெல்லாம் அதனதன் போக்கில் எடுத்துக்கொள்வதுதான் சரி; ஏனென்றால், மேலே சொன்னதைவிடப் பெரிய மர்மம் ஒன்று பின்னாலேயே வருகிறது…
ஆமாம், கண்ணாடி அணிந்தபின் பார்வைக்குத் துலங்கிய பவித்ராவும் சம்பத்தும்கூட, கோமதியின் காலத்திலேயே இருந்தார்கள். ஆக அவர்களெல்லாம் சுதந்திரமாக விரும்பிய காலத்தில் இருக்கும்போது, கனவில்கூட நான் தற்போதைய காலத்தில் இருந்து வதைபடுகிறேனே என்ற வருத்தமும் எழத்தான் செய்கிறது. அப்புறம், இப்போதைய தாம்பரம் நிலையம் எப்படி இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. அதுதான் சொன்னேனே, கிட்டத்தட்ட ஆறுவருடமாய்ப் படுத்தபடுக்கையாய்க் கிடக்கிறேன் அல்லவா. அதனால், கனவில் வந்த தாம்பரம் நிலையமும் அவர்களைப்போலவே பழமைக்குள் அமிழ்ந்து கிடந்தது…
கோமதியைப் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு, பவித்ராவையும் சம்பத்தையும் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது மித்திரத் துரோகம்.
எனக்குக் கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. நான், சுசித்ரா, கெடு தேதிக்கு ஒரு மாதம் முன்பே பிறந்து, இன்றைக்குப் பிரமாதமான ஆகிருதியோடு இருக்கும் பாபு என்று மிகச் சிக்கனமான குடும்பம். எங்கள் வம்சத்திலேயே இப்படியொரு கோளாறு இருந்திருக்கிறது போல. சகோதர முறை சொல்லிக்கொள்ள இருந்தவர்கள் எல்லாருமே அவரவர் குடும்பத்துக்கு ஒற்றைக் குழந்தைகள். அதிலும் பெண்கள் அறவே இல்லை. சுசித்ரா தன்னையும் ’ஒற்றைக் குரங்கு’ என்று சொல்லிக்கொள்வாள்.
சுசியின் கழுத்தில் நாத்தனார் முடிச்சுப் போட யாரைக் கேட்பது என்பதைக் கடைசிவரை யோசிக்காமலே இருந்துவிட்டோம். ஐயர் அவசரப்படுத்துகிறார். முகூர்த்தநேரம் தீரப் போகிறதாம். பவித்ரா சட்டென்று சுசியின் பின்னால் வந்து நின்றாள். முன்னமே என்னை ’அண்ணா’ என்று கூப்பிடுகிறவள்தான். நிஜமாகவே அப்படிக் கருதுகிறாள் என்பதைத் தெரிவிக்கிற தருணமாய் ஆகிவிட்டது. என் கண்ணில் துளிர்த்த நீரை வெளித் தெரியாமல் அடக்கிக்கொள்ள அவ்வளவு சிரமப்பட்டேன். உதட்டை இறுக்கிக் கட்டுப்படுத்த முயல்கிறேன்; முதுகில் பரிவாய் ஒரு கை வருடியது – சட்டென்று உடைந்து விசித்துவிட்டேன். என்னைச் சுற்றிலும் நல்லவர்களாகப் பார்த்துப்பார்த்துப் பதியம் போட்டு வைத்திருக்கிறது வாழ்க்கை. நானானால், வேரடியில் குழம்பிய சேற்றுடனே இருந்து தொலைத்திருக்கிறேன்…
வீடியோவில் பார்க்கும்போதுதான் தெரிந்தது – என்னை வருடியது கோமதியுடைய கணவரின் கை. ஐயோ, அந்த ஒரு கணத்தில் உலகம்தான் எவ்வளவு பிரகாசமாய் இருந்தது! சும்மா கடனேயென்று தபாலில் பத்திரிகை அனுப்பி வைத்ததற்கு, கணவரும் மனைவியும் நேரில் வந்து நிற்பார்கள் என்றே நான் எதிர்பார்க்கவில்லை. வெள்ளி விளக்கைக் கொடுத்து வாழ்த்தியது போதாதென்று, இதோ, ஆறுதலும் வழங்கியிருக்கிறார்.
முன்போல அவர்கள் வீட்டுக்குப் போகாமல் இருந்தது எப்பேர்ப்பட்ட தவறு என்று கூசியது. போகாமல் இருந்ததன் காரணத்தை நினைத்தபோது இன்னும் கூச்சமாய் இருந்தது.
அதற்கு முன்னால் சம்பத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். நண்பன் என்றால் அப்படி இருக்க வேண்டும். இதற்குமேல் ஏதும் சொன்னால் பிதற்ற ஆரம்பித்துவிடுவேன். ஒரேயொரு சம்பவத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
என் கல்யாண வீடியோவைப் பார்க்கும்போதெல்லாம், அதில் பதிவாகாத ஒரு தருணம் எனக்குத் தவறாமல் நினைவுவரும். முதல் இரவு அறைக்கு என்னை முன்னாலேயே போய்க் காத்திருக்கச் சொன்னார்கள். நானும் போய்விட்டேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் சுசித்ராவும் வந்துவிட்டாள். அந்த இடைவெளிக்குள் என் மனம் முழுக்க நிரம்பியிருந்த காட்சி அத்தனை உத்தமமானதல்ல.
கோமதியின் திருமணத்தன்று இரவில் நான் சம்பத்துடன்தான் சென்று தங்கினேன். அவனுடைய தகப்பனார் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். மூச்சு விடுவதற்கு நிகராகப் புகை பிடிப்பவர். சம்பத்துக்குத் திருமணமாகிவிட்டால் தேவைப்படும் என்று மாடியில் ஒரு போர்ஷன் எழும்பிவந்த நேரம். வாசலில் குவித்த மணலில் அவர்கள் குடும்பமும் நானும் உட்கார்ந்திருந்தோம். அக்கம்பக்கம் வீடுகள் அதிகம் வந்திராத புறநகர்ப்பகுதி. சம்பத்தின் அம்மா அவனைப் பாடச் சொன்னாள்.
அவன் அவ்வளவு நன்றாகப் பாடுவான் என்பதே அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும். பேசும் குரலுக்கும் பாடும் குரலுக்கும் சம்பந்தமேயில்லை – அதைத்தான் கள்ளக்குரல் என்பார்களோ. உண்மையில், சம்பத் பேசுவதுதான் கள்ளக்குரல்; பாடுவது சொந்தக்குரல் என்று பட்டது எனக்கு. எம்க்கேட்டி பாகவதர், நாகூர் ஹனீஃபா பாடல்களை உரத்த குரலில் பாடினான். ’என் ஜீவப்ரியே… ஸ்யாமளா’ என்று ஓங்கி எடுக்கிறான். நான் நடுங்கத் தொடங்கினேன். பொன்னு அங்க்கிள் என்னிடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினார். நான் தயங்கினேன்.
எடுத்துக்க தொரே. நீ ஸ்மோக்கர்ன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும். சும்மா எடுத்துக்க.
என்றார். அந்தக் குரலும், பாடலின் பின்னணியும், அவசரமாய் வெளிவிட்டபோது கண்ணில் அடித்துவிட்ட சிகரெட் புகையும் என களகளவென்று கண்ணீர் வழிய ஆரம்பித்தது. நல்லவேளை, இருட்டு நன்கு கவிந்துவிட்டிருந்தது. அவர்களுக்கு முதுகைக் காட்டி உட்கார்ந்திருந்தேன்…
கோமதி தம்பதி திருச்சியில் குடியமர்ந்தார்கள். எனக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. பெண் பார்க்கவென்று மதுரைக்கு ஒருமுறையும், திருநெல்வேலி ஒருமுறையும் போய்த் திரும்பியபோது, குடும்பத்தைவிட்டுப் பிரிந்து நான் மட்டும் திருச்சியில் ஒரு நடை இறங்கிவிட்டே சென்னை வந்தேன்.
அவர்கள் வீடு அத்தனை நறுவிசாக இருக்கும். நான் போய் நுழைந்ததிலிருந்து வெளியேறும்வரை கோமதி என்னோடு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பாள். அவள் கணவர் சமையலறையில் நின்று எங்கள் மூவருக்கும் டிஃபன் தயார் செய்வார். இடையில் ஒருமுறை கொல்லைப்புறம் சென்று மாலைவேளைச் சடங்கு செய்துவிட்டு வருவார். சந்தியாவந்தனம் என்று பெயர் சொன்னாள் கோமதி. அவருடைய நல்லெண்ணம் என்னை முள்ளாய்க் குத்தும்.
ஊருக்குத் திரும்பி வரும்போது எனக்குள் எழும் ஆற்றாமையைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. அவளுடைய வாழ்க்கை நல்லவிதமாக அமைந்தது எனக்கு இவ்வளவு தொந்தரவாக மாறும் என்று நினைத்தே பார்த்ததில்லையா, என்மீது எனக்கே வெறுப்பு ஊறும். வாஸ்தவத்தில் இப்படியொரு ஈனப்பிறவியாய் இருப்பதால்தான் என் தேவதையைத் தவறவிட்டேன் என்று குமைவேன். இரண்டாம் முறை போனபோது, நெய்மணக்கும் மாலாடை என் கையில் அழுத்தி அவள் சேதி சொன்னாள். சொல்லாவிட்டாலும் எனக்கே தெரிந்திருக்கும். அந்தமுறை, விரையும் ரயிலின் தனிமையில், புடைத்த வயிறு கண்முன் எழுந்து விரசமான சித்திரங்களை எனக்குள் பிதுக்கித் தள்ளியது…
அப்புறம் கோமதியை ஒரே முறைதான் சந்தித்தேன். என் திருமணத்தன்று. சம்பத் – பவித்ரா திருமணத்தின்போது, இல்லாத வேலை ஒன்றை முன்னிட்டு, தவிர்க்க முடியாமல் ஹைதராபாத் போவதாகச் சொல்லி, பொள்ளாச்சிக்குப் போய்விட்டேன்.
அதன்பிறகு, யாரும் காரணம் கேட்காமல், யாரிடமும் நானாகச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லாமல் கோமதியிடமிருந்து நகர்ந்துவிட்டேன். அவளானால், இதோ கனவில் வந்து என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்…
மூன்றுபேரும் ஆய்த எழுத்தின் புள்ளிகள் மாதிரி என்னைச் சூழ்ந்து நின்றார்கள். இன்னது பேசினோம் என்று நினைவில்லை. ஆனால், சிரித்துச்சிரித்துப் பேசுகிறோம். கோமதி அனாவசியமாய் என்னைத் தொட்டுத்தொட்டுப் பேசுகிறாள். மணமானவள் என்பதால் அவளைத் தொடத் தயக்கமாய் இருக்கிறது எனக்கு. சூட்சுமமாக அவள் கணவர் எங்கோ இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. பவித்ராவும் சம்பத்தும் ஒருவரையொருவர் உரசிக்கொண்டு நிற்பதைப் பார்க்கப் பொறாமையாய் இருக்கிறது. இருவர் வீட்டிலும் சம்மதித்துவிட்டார்கள் என்பதுவேறு தெரியுமா, பொறாமை இன்னமும் அதிகரிக்கிறது.
இதற்கிடையில் ரயில் கூவுகிறது. இப்போதுதான் கவனிக்கிறேன், அது செங்கல்பட்டு போகும் ரயில். நான் போகவேண்டியது எதிர்த்திசையில். கோமதியானால்,
தாஸு, நீ இந்தப் பெட்டிலெ ஏறிக்க.
என்றவாறு கிளம்புகிறாள். என் பார்வையில் தெரியும் கேள்வியைக் கவனித்தவள் மாதிரி,
எனக்கு இஞ்சின்லெதான் ரிஸர்வேஷன் கிடைச்சது.
என்று சொல்லியபடி, ஓட்ட நடையில் எஞ்சினை நோக்கி வேகமெடுக்கிறாள். ஆச்சரியங்கள் தேனீக்கூட்டம்போல என்னை மொய்க்கின்றன. மின்சார ரயிலில் ரிஸர்வேஷன் ஏது? அதில் கரி எஞ்சின் ஏன் மாட்டியிருக்கிறது? பயணிகளை அதில் ஏற்றிக்கொள்வார்களா? எரியும் கரியின் உஷ்ணத்தை, கரிப் புகையை, எப்படித் தாங்குவாள் இவள்? ஏற்கனவே கறுப்பு, இன்னும் கறுத்துவிட மாட்டாளா? அனல் தகிக்குமே, பொசுங்கிவிடமாட்டாளா, பாவம்? சரி மற்ற இருவரும் என்ன செய்யப்போகிறார்கள்?
கனவில் திரும்பிப் பார்த்த அந்தக் கணத்தை இப்போது நினைத்தாலும் அடிவயிறு பதறுகிறது.
சம்பத் ரத்தக் குளத்தில் குப்புறக் கிடக்கிறான். ஒற்றைக்காலால் அவனைச் சுற்றிச்சுற்றி வந்து அலறுகிறாள் பவித்ரா.
அதைக் காணச் சகியாமலா, கோமதி ஓடிச் சென்று ஏறிவிட்டதாலா, ரயில் நகரத் தொடங்கிவிட்டதாலா, இவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்று நாளை யாராவது விசாரிக்க வந்தால், ‘என்ன நடந்ததென்றே தெரியாது’ என்று சொன்னால் நம்பமாட்டார்களே என்ற தவிப்பா – எதுவோ உந்தியதில், எனக்கு நேரே இருந்த பெட்டியில் சென்று தாவி ஏறினேன்.
ஆனால், கனவில் நிகழ்ந்த தினத்தின் ஆச்சரியங்கள் அத்தோடு முடியவில்லை.
ஒரேயொரு இருக்கைதான் காலியாய் இருக்கிறது. அவசரமாய் அதில் சென்று அமர்ந்தபிறகுதான் பார்க்கிறேன் – அருகில் இருப்பவர் ஹரிஹரன். கோமதியின் கணவரேதான். பக்கத்தில் இருப்பவரிடம்,
தாஸ் சார் தங்கமான மனுஷன். என் ஒய்ஃபோட கொலீக். எனக்கு நல்ல ஃப்ரண்ட். இந்தப்பக்கம் ஈஸ்ட் தாம்பரத்திலே ஒரு வீடு கட்டியிருக்கார் பாருங்க, அதுமாதிரியெல்லாம் கட்டணும்னே யாருக்கும் தோணாது. அவ்வளவு அருமையான வீடு…
என்று பரிவோடு என் முதுகைத் தடவியபடி சொல்கிறார். தீப்பிழம்புபோல ஜொலிக்கும் நெற்றியில், குழைத்துப் பூசிய விபூதிக் கோடுகள். முன்னங்கைகளிலும்தான். அலுவலகம்விட்டு வருகிறவர் எப்படி இந்தக் கோலத்தில் இருக்கிறார்…
இந்த இடத்தில்தான் விழிப்புத் தட்டியது. அதன் தர்க்கம் பிடிபடவே மாட்டேனென்கிறது. உயிர் நண்பன் செத்துக்கிடக்கும்போது வராத விழிப்பு, சாத்வீகமான ஒரு கணத்தில் ஏன் வந்தது?
வியர்த்து விறுவிறுத்து விழித்த பிறகும், எஞ்சினில் ஏறியவள் என்ன ஆனாள் என்ற கேள்வி திரும்பத்திரும்ப என்மீது மோதி, அல்லாடினேன். ஏதோ ஒரு கணத்தில் மூச்சும் மூத்திரமும் முட்டி, விழித்துவிட்டேன். தலைமாட்டில் வைத்திருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தேன், அட ஆண்டவனே, விடிவதற்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறதே…
இவ்வளவும் சொல்லிவிட்டு, நான் ஏன் படுக்கையில் கிடக்கிறேன் என்பதைச் சொல்லாமல் விடலாமா. முதுகுத்தண்டில் அடிபட்டு, பிழைத்ததே மறுபிழைப்பு. இடுப்புக்குக் கீழே உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. சிறுநீரும் மலமும்கூட என் அறிதலுக்கு அப்பாற்பட்டுத்தான் வெளியேறுகின்றன. சின்னக் குழந்தைகளுக்குப்போல, பெரியவர்களுக்கான டயப்பர் மாட்டிவிடுகிறாள் சுசித்ரா. தாயாய்த் தாரமாய்த் தாசியாய்த் தாதியாய் என்று யாரோ அடுக்குமொழிக் கவிஞர் எழுதியதை எப்போதோ வாசித்திருக்கிறேன். புளுகுகிறார் என்று சந்தேகமும் பட்டிருக்கிறேன். அந்தச் சொல்லடுக்கின் வாழும்சான்றுடன் வாழக் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷப்படுவதா, பட்ட மரம் மாதிரிச் சட்டடியாய் வீழ்ந்து கிடக்கிறேனே என்று வேதனைப்படுவதா.
ஆனால், எனக்காவது அடி மட்டும்தான். பவித்ராவுக்கு ஒரு காலை அகற்ற வேண்டியதாகிவிட்டது. சம்பத் உலகைவிட்டே போய்விட்டான். மூன்றுபேரும் ஒரே விபத்தில்தான் சிக்கினோம். இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதிலும் கோமதிக்குத் தொடர்புண்டு என்பதுதான். துரதிர்ஷ்டமா, விசித்திரமா…
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. எட்டு மணி இருக்கும். சம்பத்தின் கார் வாசலில் வந்து நின்றது. அவன் முகம் பரபரப்பாய் இருந்தது. தாவி மாடியேறி வந்தான்.
தாஸு ஒடனெ கெளம்புடா.
இர்றா இர்றா. ஏன் இவ்வளவு பதட்டம். இரு, டீ போடச் சொல்றேன். சுசீ, சுசீ… இங்கெ பாரு, யாரு வந்துருக்காங்க ன்னு…
முட்டாப் பயலே. ஒடனே கெளம்புடா. ஹரி தவறிட்டார்றா…
எனக்கு அந்தப் பெயர் சரியாக மனத்தில் ஊன்றவில்லை. அது வெளிப்படையாய்த் தெரிந்துவிட்டது போல.
ஏ லூஸு. நம்ம கோமதி புருசண்டா.
உடனடியாய் எனக்குள் எழுந்த உணர்வுக்கு அடையாளம் சொல்ல முடியாது. காருக்குள் காத்திருந்த பவித்ராவுக்கு என்னைப் பார்த்தவுடன் உதடு கோணி, கண் முட்டியது.
திருச்சியில் பார்த்ததைத்தான் ஏற்கனவே சொன்னேனே. இரண்டு முறை போயிருந்த வீடுதான் என்றாலும், வருஷக்கணக்காக ஆகிவிட்டதால், வீட்டின் முகப்பில் சென்று சேர்ந்தபிறகும்கூட அந்த வீடுதான் என்பது எனக்குத் தெரியவில்லை. கண்ணாடிப் பேழைக்குள் மல்லாந்து கிடந்த தீப்பிழம்பைப் பார்த்தபோது என் மனம் சுத்தமாக மரத்திருந்தது.
திரும்பி வரும்போது கிட்டத்தட்ட இரவாகிவிட்டது. ஏதேதோ பேசிக்கொண்டு வந்தோம். ஹரிஹரன், ராத்திரி தூங்கப்போனவர் காலையில் எழுந்திருக்கவில்லை என்பதைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருடைய சுபாவத்துக்கு மிகப் பொருத்தமாக சுமுகமான மரணம். என்ன, இன்னும் பத்திருபது வருடங்களுக்குப் பிறகு நடந்திருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும்…
அவர்கள் இருவரும் முன்னாலும், நான் பின்னாலும் உட்கார்ந்திருந்தோம். ஏனென்றே தெரியாத மௌனம் காருக்குள் நிரம்பியது. அவரவருக்குள் நிரம்பியிருக்கும் ஹரிஹர பிம்பங்களின் சலனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோமோ என்று இப்போது தோன்றுகிறது…. திடீரென்று கனத்த குரலில் சம்பத் கூப்பிட்டான்:
தாஸு…
சொல்லுடா.
ஒண்ணு சொல்லட்டுமா?
சொல்லு.
ஷாக்காயிறக் கூடாது.
அட, சொல்லுடா. ரொம்பத்தான் பயம் காட்டுறே.
கோமதிக்கும் ஒனக்கும் இருந்த அஃபேர் விஷயம் ஹரிக்குத் தெரியும், தெரியுமா?
என்னடா சொல்றே!?
அதனாலதான் சொன்னேன், ஷாக்காயிறாதேன்னு. இந்தக் கூறுகெட்டவ ஹனிமூன் போனப்ப நம்மளெப் பத்தியெல்லாம் சொல்லியிருக்கா. ஒன்னைப் பத்தியும்தான். அந்த எக்மோர் சமாசாரத்தையும் சொன்னாளாம். அந்த மனுஷன் ’அடடே, அப்பிடியா நடந்துச்சு!’ன்னு சிரிச்சாராம்.
நான் பொசுங்கினால்கூடப் பரவாயில்லை; மல்லாந்து கிடந்த தீப்பிழம்பை அப்போதே ஆவி சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. இரண்டு முறை திருச்சிக்குப் போனதும் மின்னல்வேகத்தில் எனக்குள் ஓடின. நான் சுசியின் கழுத்தில் தாலிகட்டிய தருணமும்தான்.
அப்பறம் இன்னோண்ணு…
இந்த இடத்தில் காரோட்டும் அவனது இடது கையை பவித்ரா இறுக்கிப் பிடிப்பது தெரிந்தது. எதையோ சொல்ல வேண்டாம் என்கிறாளோ. அவன் கேட்பதாய்த் தெரியவில்லை. எதிரில் வரும் வண்டிகளின் வெளிச்சத்தில் முகம் தீவிரமாகிவிட்டிருப்பது தெரிந்தது.
கட்டுன புருசன் பொறங்கையாலெ ஒதறித் தள்ளீட்டான். அந்தக் கூறுகெட்ட செல்வராஜ் எப்பிடிக் கேனத்தனமாப் பனிஷ் பண்ணுனான் பாத்தியா.
அதெச் சொல்லு! அவெங்கிட்டெப் போய் எவனோ ஒருத்தன் கோத்துவுட்ருக்காம் பாரு…
சொல்லிவிட்டு, வெளியில் விரையும் இருட்டை வெறித்தேன். அத்துடன் அந்த உரையாடல் முடிந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும். மூன்றுபேரின் தலையெழுத்து சம்பத்தின் நாக்கில் நாற்காலிபோட்டு அமர்ந்திருந்ததுபோல.
அந்த நாய் சிரிக்கும்னு நெனச்சு நாந்தாண்டா சொல்லித் தொலெச்சேன். கிறுக்குப்பய பளி வாங்கிட்டான். என்னத்தெச் சொல்லு, ஆஃபீஸர்த் தாயளி என்னைக்கும் ஆஃபீஸராத்தான் இருப்பான்.
அவன் கழுத்தைப் பின்னாலிருந்து இறுக்கி நெரிக்கவேண்டும் என்று ஆவேசம் மீறியது. வண்டியை நிறுத்தச் சொல்லி அந்த அத்துவானக் காட்டில் இறங்கிவிட வேண்டும் என்று வெறி ஏறியது. என்னிடமிருந்து பதில் வரவில்லையே என்று திரும்பினானோ, திடீரென்று மனம் எடையிழந்ததில் ஸ்டீயரிங்கிலிருந்து பிடி உழண்டதோ… படுவேகமாக எங்களை நெருங்கிய பிரகாசம் இடிபோல மோதியது… எங்கள் கார் அப்பளமாக நொறுங்கி சுமார் ஐம்பது மீட்டர் இழுபட்டது என்று செய்தித்தாளில் போட்டிருந்ததாம்…
படுக்கையிலேயேதான் பல் துலக்குவது. கொப்புளிக்க ஒரு குவளையும் துப்புவதற்கு ஒரு கோப்பையும் என்று வேலை முடியும்போது என் படுக்கைக்குக் கீழே குளியலறைத் தரைபோல ஈரமாகி விடும். அப்போது கைபேசி ஒலித்தது. பவித்ராவின் எண். ஆனால், பேசியது அவளில்லை; அவளுடைய மகன்.
குட்மாணிங். சொல்லுப்பா ராம்ஜீ.
அங்க்கிள், கோமதி ஆண்ட்டி நேத்து ராத்திரி காலமாயிட்டாங்க. அம்மா உங்ககிட்டெச் சொல்லச் சொன்னாங்க.
இன்னும் நாலைந்து வாக்கியம் விசாரிக்க ஆசையாய்த்தான் இருந்தது. இந்த நாள் இளைஞர்கள் என்னைப்போன்ற கிழவர்களிடம் அத்தனை ஆசையாய்ப் பேசுவதில்லை. அப்புறம், காரணம் தெரிந்து என்ன செய்துவிடப் போகிறேன். நாடடங்குக் கால மரணம் வேறு; காரணத்தை யூகிப்பது கடினமா என்ன. அதிகம் அவஸ்தைப்படாமல் போயிருந்தால் சரிதான். எப்படியும், இன்றைக்கேவோ, இன்னொரு நாளோ பவித்ரா பேச வாய்ப்பிருக்கிறது. அவளிடம் கேட்டுக்கொள்ளலாம்…
ஆனால், கனவுகள் வெறும் கனவுகள் மட்டுமே அல்ல என்று அப்போது எனக்குத் தோன்றியதால்தான் இவ்வளவும் சொன்னேன்.
*** *** ***