தமிழாக்கம் : நாகரத்தினம் கிருஷ்ணா

பலத்த மழைபோல மேய்ச்சல் நிலமெங்கும் கடுமையான வெயில் பொழிந்துகொண்டிருக்கிறது. பண்ணைகளில் உள்ள மரக் கூட்டங்களுக்கும்; ஆடைகளைந்த பூமியின் வயிற்றில் விரித்துப்போட்ட தடித்த பல நிற கோடுகளைக்கொண்ட பெரிய அங்கியொன்று காற்றில் மெல்ல அசைவதுபோல : ரை, மஞ்சள் நிற கோதுமை, வெளிர் பச்சை ஓட்ஸ், கரும் பச்சை மணப்புல்லென (trèfle) அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த விளை நிலங்களுக்கும் நடுவில்; நீண்டும், அலைபோல ஏற்ற இறக்கத்துடனும் மேய்ச்சல் நிலம்.
அங்கே, மேட்டுப்பாங்கான பகுதியில், படை வீரர்கள் போல வரிசை வரிசையாக பசுமாடுகள். அவை நிலத்தில் படுத்தவண்ணமும், நின்றவண்ணமும் அவ்வப்போது சூரியனின் கூசச் செய்யும் ஒளிகாரணமாக தங்கள் பெரிய கண்களைச் சிமிட்டியபடி மிகப்பெரிய ஏரிபோன்று பரந்துகிடந்த மணப்புற்களை மேய்வதும் அசைபோடுவதுமாக இருக்கின்றன.
இரண்டு பெண்கள், ஒருத்தி தாய் மற்றவள் மகள், இருவரும் முன் பின்னாக, மேய்ச்சல்நிலங்களுக்கிடையில் உண்டாருவாக்கப்பட்டிருந்த குறுகியதொரு பாதையில் படைவீரர்களைப்போல திரண்டிருந்த விலங்குகளை நோக்கி சீரான வேகத்தில் நடந்துகொண்டிருந்தனர்.
பெண்கள் இருவரும் பீப்பாய் வளையமொன்றின் துணை கொண்டு ஆளுக்கு இரண்டு துத்தநாக வாளிகளை, தங்கள் உடலிலிருந்து தள்ளி பிடித்தபடி நடக்க, ஒவ்வொருமுறையும் அவர்கள் பாதத்தை எடுத்து வைக்கிற போதெல்லாம் சூரிய ஒளி உலோகத்தில் பட்டு வெண்ணிற தீப்பிழம்பாக தெறிக்கிறது.
இருவரிடமும் அசாத்திய மௌனம். கறவை மாடுகளிடம் பால் கறக்கச் செல்கிறார்கள். கால்நடைகளை நெருங்கியதும் வாளிகளில் ஒன்றை தரையில் வைத்துவிட்டு, முதல் இரண்டு விலங்குகளை தாயும் மகளும் நெருங்குகிறார்கள். மாடுகளின் விலாக்களில், அவற்றை எழுந்திருக்கச் செய்ய தங்கள் சப்பாத்து கால்களால் உதைக்கிறார்கள், விலங்கு முதலில் தன் முன்கால்களை மெதுவாக ஊன்றிய பின்னர், தொங்கும் சதையுடன்கூடிய மஞ்சள் நிற பால்மடி பாரத்துடன் உள்ள பிட்டத்தை மிகவும் சிரமத்துடன் உயர்த்தி பின்னங்கால்களை ஊன்றி நிற்கிறது.
தாயும் மகளும், மலிவுவ்வார் வீட்டுப் பெண்கள். பசுவின் அடிவயிற்றருகே முழங்கால்களை ஊன்றி அமர்ந்து, புடைத்த காம்பை தங்கள் கைவிரல்கள் கொண்டு விரைவாக இழுக்க, ஒவ்வொரு அழுத்தமான இழுவைக்கும் மெல்லிய நூலாக பால் வாளியில் விழுகிறது, நிரம்பும் பாலின் விளிம்பில் மஞ்சள் நுரை. பெண்கள் இருவரும் நீண்ட வரிசையின் முடிவுவரை ஒவ்வொரு கறவை மாடாககச் செல்கிறார்கள். ஒவ்வொரு முறையும்கறந்து முடித்ததும் அந்த மாட்டை மேய்ச்சலுக்கு இன்னமும் உட்படுத்தாமலிருக்கிற புல்வெளி பக்கம் ஓட்டி விடுகிறார்கள்.
பின்னர் பால் நிரம்பிய கனத்த வாளிகளைச் சுமந்த வண்ணம் தாயும் மகளும் முன்னும் பின்னுமாக வந்த வழியே நடக்கிறார்கள்.
தாயைப் பின்தொடர்ந்து வந்த மகள் திடீரென்று நின்று, கையில் பிடித்திருந்த கனத்த வாளியை கீழே வைத்துவிட்டு, உட்கார்ந்து விசும்புகிறாள்.
தனது பின்னால் காலடிசத்தம் இல்லாதிருக்க, சந்தேகித்துத் திரும்பிய தாய்க்கு அதிர்ச்சி
– என்ன ஆச்சு ? என மகளிடம் கேள்வி.
மகளுக்குப் பெயர் செலேஸ்த், நல்ல வளர்த்தி, செம்பட்டை முடி, உடலும் கன்னங்களும் வெயிலில் காய்ந்து அடர்ந்த பழுப்புநிறம் ; முகத்தில் வெயிலில் ஒருநாள் கடுமையாக உழைத்ததின் பலனாக தீச் சொட்டு விழுந்தது போல கன்னங்களில் ஆங்காங்கே புள்ளிகள். இன்று அவள் அடிவாங்கிய குழந்தை போல திடீரென்று மெல்லிய குரலில் முனகிக்கொண்டு விசும்புகிறாள்.
– ரொம்ப கனமா இருக்கு, பால்வாளிகளை தூக்கிக்கொண்டுவர என்னால முடியாது!
மகள் கூறுவதை நம்ப மறுப்பவள்போல பார்த்த தாய், அவளிடம்:
– உனக்கு இன்றைக்கு என்ன ஆச்சு? – என வினவினாள்.
தன் கைப்பிடியிலிருந்த இரண்டு பால் நிரம்பிய வாளிகளையும், தரையில் வைத்துவிட்டு நிலைகுலைந்து சாய்ந்திருந்த மகள், அரையில் கட்டியிருந்த வேலைநேர பாதுகாப்பு உடையில் கண்களைத் துடைத்தவண்ணம்:
– பாரம் அதிகம், தோளை இழுக்கிறது, இனியும் சுமக்க என்னால் முடியாது, என்கிறாள்.
தாய் மூன்றாவது முறையாக, தனது கேள்வியைத் மீண்டும் தொடர்ந்தாள்:
– உனக்கு இன்றைக்கு என்னதான் பிரச்சனை?
மகள்:
– நான் கர்ப்பமென்று நினைக்கிறேன், என்றவள் தொடர்ந்து தேம்பித் தேம்பி அழுதாள்.
தாய்க்காரி அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல், சிலநொடிகள் திகைத்து பிறகு சமாளித்தவள், எதற்காக பாரத்தை சுமந்துகொண்டு மகளிடம் பேச்சு என நினைத்தவள்போல தனது வாளிச் சுமைகளை அவளும் தரையில் வைத்த பின்னர் :
– அசடு, நீ… நீ..கர்ப்பமா இருக்கியா? என்ன உளறல், எப்படி இது சாத்தியம்? எனக்கேட்டாள்.
மலிவ்வுவார் குடும்பமென்றால் அப்பகுதியில் பிரசித்தம், சொத்துள்ள விவசாயக் குடும்பம் : பணம், வசதி, குறையற்ற வாழ்க்கை, மரியாதை, சாமர்த்தியம்,செல்வாக்கு அத்தனையும் இருந்தன.
இளம்பெண் செலேஸ்த்திடமிருந்து பதில் திக்கித் திக்கி வந்தது:
– எனக்கென்னவோ, அப்படித்தான் தோணுது.
பயந்து போன தாய், வாடியமுகமும், விழிகளில் கண்ணீருமாக நிற்கும் மகளைச் சில நொடிகள் பார்த்தாள்:
– நீ…. நீ என்ன சொல்ற கர்ப்பமா, தடிக்கழுதை, எங்க வாங்கிவந்த?
செலேஸ்த், என்ன சொலவதென்று தெரியாமல் உணர்சிவேகத்தில் உடல் நடுங்க மெல்லிய குரலில்:
– வேற எங்க, போலித் குதிரைவண்டியிலதான் இப்படி ஆயுப்போச்சு.
வயதான தாய், மகள் தெரிவித்ததை புரிந்து கொள்ள முயன்றாள், குதிரைவண்டிலென்றால் எப்படி, என யூகிக்க முயன்றாள், தன் மகளுக்கு இப்படியொரு காரியத்தை யார் செய்திருக்க முடியும், என யோனையில் ஆழ்ந்தாள். செய்த பையன், பெரிய பணக்காரனாகவும் இருந்து, செல்வாக்கும் இருந்ததெனில் சிக்கலில்லை, இணக்கமாக ஒரு முடிவு காணமுடியும். தற்போதைக்கு முழுமையாக உறுதிபடுத்த இயலாததொரு பிரச்சனைதான், தவிர இதுபோன்ற சங்கடம் நாட்டில் முதன்முறையாக தன் மகளுக்கு மட்டும் வந்திருக்கிறதென்றும் சொல்ல முடியாது, இருந்தும் ஊரில் தங்கள் குடும்பத்திற்கென்றிருக்கிற அந்தஸ்து ஒரு பக்கம், ஊர் என்ன பேசும் என்பது இன்னொருபக்கம், இவற்றையெல்லாம் எண்ணிபார்த்தபோது தாயை நிலைகுலையச் செய்தது.
மீண்டும் மகளிடம்:
– உன்னை இந்த நெலமைக்கு ஆளாக்கியதுயார், சொல்லித் தொலையேன்? எனக் கத்தினாள்.
இனியும் சொல்லவேண்டியதை ஒளிப்பதால் எவ்வித பமனுமில்லையென மகள் செலேஸ்த் நினைத்திருக்கவேண்டும், இருந்தும் தடுமாற்றத்துடனேயே வார்த்தைகள் வந்தன:
– குதிரைவண்டிக்காரன் போலித் இருக்கிறானில்லையா, அவந்தான். அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்.
மகள் கூறி முடித்த மறுகணம் மிதமிஞ்சிய கோபத்துடன், துணியாலான குல்லாய் தலையிலிருந்து விழுந்ததைக்கூட பொருட்படுத்தாது மகள் மீது பாய்ந்து தாய் மலிவ்வுவார் வெறித்தனமாக அவளைத் தாக்கத் தொடங்கினாள்,
தாய் தலையில், முதுகில், உடம்பெங்கும் விரல்களை மடக்கி மகள்மீது குத்துக்களை விட, மகள் செலேஸ்த்திற்கு வாளிகள் இரண்டிற்குமிடையில் விழுந்துக் கிடந்ததால், இரண்டுகைகளையும் கொண்டு முகத்தை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
அங்கிருந்த மாடுகள் மொத்தமும், வியப்பிற்குள்ளாகி மேய்ச்சலை நிறுத்திக்கொண்டு தலையைத் திருப்பின; தங்கள் பெரிய கண்களால் நடப்பதைப் பார்த்தன. அக்கூட்டத்தில் கடைசியாக நின்ற ஒரு பசுமாடு மட்டும் உயர்த்திய தலையை பெண்கள் பக்கம் நீட்டி ‘ம்மே’ எனக் கத்தியது.
எவ்வளவு நேரம் மகளை அடிக்கமுடியும், தாய்க்கு மூச்சு வாங்கியது. மூச்சிரைப்பை சீராக்கிகொள்ள சிறிது நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். உண்மையில் என்னதான் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பி:
– யாருன்னு சொன்ன, ‘போலித்’ என்பவனா, நடந்திருக்கக் கூடாது, ஆனாலும் நடந்துட்டுது, சரி, உன்னால எப்படி அதுவும் ஒரு குதிரை வண்டிக்காரனோட, புத்தியில்ல! என்ன மாயமந்திரம் செஞ்சான் நீ விழுந்துட்ட, துப்புகெட்ட கழுதை?- எனமகளைப் பார்த்து மறுபடியும் சத்தம்போட்டாள்.
செலேஸ்த், எழுந்திருக்க இயலாமல் இன்னமும் பூமியில் கிடந்தாள், தூசிதும்புகளுக்கிடையில் முணுமுணுத்தாள்:
– குதிரை வண்டிக்கு, நான் கட்டணம் நான் கொடுக்கிறதில்லை!
நொர்மாந்தி(Normandie) பகுதியைச்சேர்ந்த வயதான தாய்க்கு விஷயம் இலேசாக புரிந்தது.
*****
ஒவ்வொரு வாரமும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில், கிராமச் சந்தைக்கு தங்கள் பண்ணையின் பறவைகளையும், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் முட்டைகளையும் விற்பனைக்கென்று மகள் செலேஸ்த் எடுத்துச் செல்வாள்.
காலையில் ஏழுமணிக்கெல்லாம் இரண்டு பெரிய பிரம்புக் கூடைகளைக் கைகளில் பிடித்துக்கொண்டு புறப்பட்டுவிடுவாள். ஒன்றில் பால் சார்ந்த பொருட்களும், மற்றதில் பறவைகளும் இருக்கும். பிரதான சாலையில் ஈவ்வெத்தோ (Yvetot) குதிரை வண்டிகள் நிறுத்தத்தில் காத்திருக்கவேண்டும். நிறுத்தத்தை அடைந்ததும், விற்பனைப் பொருள்களுள்ள கூடைகள் இரண்டையும் கீழே வைத்துவிட்டு, சாலையிலிருந்து ஒதுங்கிய தாழ்வானப் பகுதியில் காத்திருப்பாள். அச்சமயம் குட்டையான கூரான அலகுகளைக்கொண்ட கோழிகளும்; அகலமான, தட்டையான அலகுகளையுடைய வாத்துகளும் தங்கள் தலையைக் கூடையின் பிரம்புப் பின்னல்களின் இடைவெளியில் நிறுத்தி சிறுபிள்ளைத்தனமாக வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும்.
அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. தடதடவென்று ஒலியெழுப்பியபடி அக்குதிரைவண்டிவரும் – மஞ்சள்வண்ண பெட்டியின் தலையில் ஒரு கருப்பு நிற தோல் தொப்பியை வைத்தது போன்ற தோற்றத்தில் இருக்கும். பூட்டிய வெள்ளை குதிரை சிறு துள்ளலுடன் நிறுத்தப்பட, குதிரை வண்டியும் தன் பின்புறம் குலுங்க நிற்கும். கனத்த சரீரம் பெரியவயிறு; முகமும் கழுத்தும் செங்கல் நிறம்; வெயிலில் வெந்தும், காற்றில் பொசுங்கியும், அடைமழையில் நனைந்தும், சாராய மயக்கத்திலும் இருப்பவன்தான் குதிரைவண்டிக்காரனான போலித். ஆனால் எப்போதும் கேலியும் கிண்டலுமாக இருக்கிற கொண்டாட்டமான வாலிபன். செலேஸ்த்தை கண்டமறுகணம் சற்று தொலைவிலேயே, தன்னுடைய சாட்டையைச் சொடுக்கியபடி உரத்தக் குரலில்: “வணக்கம், செலேஸ்த்,, சௌக்கியமா ? எனக் கேட்பது வழக்கம்.
ஒன்றன் பின் ஒன்றாக கூடைகளை அவனிடம் அவள் நீட்ட, அவன் வண்டியின் மேற் தளத்தில் வைப்பான்; பின்னர் அவள் படிப்பலகையை எட்டுவதற்கு காலை உயர்த்தி வைப்பாள், அத்தருணத்தில் பின்கால் சதைப் பகுதியையும் அணிந்துள்ள நீலநிற காலுறையையும் காட்டிக்கொண்டுதான் ஏறவேண்டியிருக்கும்.
வண்டியில் அவள் ஏறுகிற ஒவ்வொரு முறையும், அவன் தவறாமல் நகைச்சுவையாக சொல்வதை அன்றும் திரும்பக் கூறுவான் : – என்ன ஆச்சரியம், இளைச்சமாதிரி தெரியலையே, என்பான். அதை ஏதோ வேடிக்கையாக எடுத்துக்கொண்டு அவளும் கலகலவென்று சிரிப்பாள்.
பின்னர் அவன் “போடா செல்லமே!” எனக் குதிரையை அதட்ட, மெலிந்த குதிரையும் சற்று வேகமாக நடக்கத் தொடங்கும். செலேஸ்த், தன் சட்டைப்பையில் அடிவரை துழாவி, சில்லறைப் பையை எடுத்து மெல்ல, பத்து ‘சூ’க்களை(Sou) -அதாவது அரை ஃபிராங்- கையில் எடுப்பாள், அதில் ஆறு ‘சூ’ அவளுக்குரிய கட்டணம், மீதியுள்ள நான்கு ‘சூ‘ கூடைககளுக்கு. அவற்றை குதிரைவண்டியை ஓட்டிக்கொண்டிருந்த போலீத் வசம், அவன் தோளுக்கு மேலாக கையை நீட்டிக் கொடுக்க வேண்டியிருக்கும். பணத்தை பெற்றுக்கொண்ள்ளும் போலித்:
– அப்போ, இன்றைக்கும் பகடி விளையாட்டுக்குச் சாத்தியமில்லைன்னு சொல்லு? என்று கூறி சிரிப்பான், அச்சிரிப்பில் பாசாங்கிருக்காது. பின்னர் அவளை நோக்கித் திரும்பி சில நொடிகள் நிதானமாக ரசிப்பதும் அவன் வழக்கம்.
மூன்று கிலோமீட்டர் சாலைக்கு ஒவ்வொரு முறையும் அரை ஃபிராங் கொடுப்பதென்பது அவளைப் பொறுத்தவரை பெரிய செலவு. மேலும் கையில் பணம் இல்லாத நேரத்தில், பயணக் கட்டணத்தை செலுத்தும்வகையறியாது கையைப் பிசைந்துகொண்டு கூடுதலாக தவிக்கவேண்டியிருந்து.
ஒரு நாள், பணம் கொடுக்கும்போது, அவனிடம் கேட்டாள்:
– அடிக்கடி தங்கள் வாகனத்தை உபயோகிக்கும் என்னைப்போன்ற நல்லவளிடம் நீங்கள் ஆறு ‘சூ ‘ மட்டுமே கட்டணம் வாங்கவேண்டும், அதுதான் நியாயம் என்றாள்.
அவன் சிரித்தான் :
– வெறும் ஆறு ‘சூ’ தானா ? நீ உண்மையில் அதை விட கூடுதல் பெறுமதி உள்ளவள் தெரியுமா, என்றான்.
அவளும் விடாப்பிடியாக:
– ஆமாம் ஆறு சூ. உனக்கு அதனாலே பெரிய நஷடமில்லை, மாதத்திற்கு இரண்டு பிராங்குகள் இல்லையென்றாகும், அவ்வளவுதான் -என்றாள்.
குதிரையை தட்டி விரட்டிக்கொண்டே அவன் உரத்த குரலில்:
– இங்கே பாரு, நான் கொஞ்சம் ஜாலியான ஆள், நீ மாத்திரம் ஒரே ஒரு முறை பகடிவிளையாட்டுக்குச் சம்மதம் சொல், ஒரு ‘சூ’ கூட செலவில்லாமல் உன்னை அழைத்து போவேன்- என்றான்.
அவளும் சூதுவாதின்றி அவனிடம்:
– என்ன சொல்றீங்க, எனக்குப் புரியலை? என்றாள்.
அவன் தொடர்ந்து வேடிக்கையும் விளையாட்டுமாக ஏதேதோ சொல்லிக் கொண்டு சிரிக்க, இருமவும் செய்தான் .
– ஒரே ஒரு பகடி விளையாட்டு, பையனுக்கும் பெண்ணுக்குமான பகடி விளையாட்டு, கச்சேரிக்கு ரெண்டுபேர் போதும், பக்க வாத்தியங்கள் வேண்டாம், தயாரா? என்றன் அவளிடம்.
அவள் புரிந்துகொண்டு, வெட்கப்பட்டாள். பின்னர்:
– எனக்கு இந்த விளையாட்டெல்லாம் சரிவராது போலித், என்றாள் .
அவளுடைய பதிலுக்குப் பிறகும் மாற்றமேதும் உண்டா என்றால் இல்லை, தவிர அதற்குப்பின் ஒவ்வொரு நாளும் அவனுடைய கேலியும் கிண்டலும் கூடினதே அன்றி குறையவில்லை:
– ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள், பையனும் பெண்ணுமாக ஆடவேண்டிய பகடி விளையாட்டிற்கு நீ சம்மதிக்கத்தான் போற, எனக்குத் தெரியும், என்றான்.
அன்றிலிருந்து, ஒவ்வொரு முறையும் குதிரை வண்டிக்கு அவள் பணம் செலுத்தும்போது, அவன்:
– அப்போ, பகடி விளையாட்டு இன்றைக்கும் இல்லையா? எனக்கூறுவதை வழக்கமாக்கிக் கொண்டான். இவ்விஷயத்தில் அவனுக்குச் சமமாக அவளும் கிண்டலாக பதிலளிக்க ஆரம்பித்தாள்:
– ஆமாம், இன்றைக்கில்லை, சனிக்கிழமை வச்சுக்கலாம், ஆனால் இந்த முறை நிச்சயம்! – என்பாள்.
அவன்:
– சரி, சனிக்கிழமைய, நல்லது, என்பான் சத்தமாக.
ஒருநாள் மனதில் கூட்டிக் கழித்துபார்த்தாள், இப்பிரச்சனை இரண்டு வருடங்கள் நீடித்திருக்கிறது. அவள் இதுவரை போலித் துக்கு நாற்பத்தெட்டு பிராங்குகள் கொடுத்திருக்கிறாள். மேலும் பண்ணைக் காட்டில் நாற்பத்தெட்டு பிராங்குகள் என்பது மரத்தில்ல காய்ப்பதில்லை. இப்படி இன்னும் இரண்டு வருடங்களைச் சேர்த்தால், கிட்டத்தட்ட நூறு பிராங்குகள்.
இந்த நிலமையில் எதற்காக இப்பிரச்சனையை தள்ளிப் போடுவதென்று நினைத்தோ என்னவோ, குதிரைவண்டியில் அவர்கள் தனியாக இருக்க நேர்ந்த ஒரு நாள், அவன் தனது வழக்கப்படி :
– இன்றைக்கும் பகடி விளையாட்டு இல்லை, அப்படித்தானே? என்றபோது
– உங்கள் விருப்பப்படி நடக்கட்டும், என்பது அவளுடைய பதிலாக இருந்தது.
அவனிடம் துளியும் ஆச்சரியங்களில்லை, குதிரைவண்டியின் இருக்கையை நோக்கித் தாவிச் சென்றவன், மிகவும் குதூகலமாக:
– அப்போ ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா எனகேட்டுவிட்டு, ஒரு நாள் இப்படி விளையாட வருவன்னு எனக்குத் தெரியும், என்றான்.
வெள்ளைக் கிழட்டுக் குதிரை கொச்சைநடைபோட்டு மிகவும் மெதுவாக நகர்ந்தது. இன்னும் சொல்லபோனால், குதிரை வண்டிக்குள்ளிருந்து : “நடடா செல்லம், ஓடடா ராஜா “ என அவ்வப்போது பிறப்பிக்கப்படும் கட்டளைகளை காதில் வாங்காது, அது நின்ற இடத்திலேயே அடவு பிடிப்பதுபோல தோன்றியது,
தான் கர்ப்பமாக இருப்பதை செலேஸ்த் உணர மூன்று மாதங்கள் ஆயின.
*****
நடந்தது அவ்வளவையும் தன் தாயிடம் வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவித்தாள். வயதான தாய்க்கு முகம் வெளிரியது, கடுங்கோபத்துடன் மகளிடம்:
– இருக்கட்டும், என்ன விலை முடிஞ்சுது, கட்டணம் செலுத்தியிருந்தா எவ்வளவு கொடுத்திருப்ப?
செலேஸ்த் பதிலளித்தாள்:
-நாலு மாசம், எட்டு பிராங் ஆச்சு, உறுதியாக சொல்லமுடியும்.
பட்டிக் காட்டுக் கிழத்திற்கு மகளிடத்தில் மூர்க்கத்தனமாக கோபம். வெறிதனமாக மகள் மீது மீண்டும் பாய்ந்தாள் ஆத்திரம் தீர, மூச்சிரைக்கத் தொடங்கும்வரை மகளை அடித்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ, எழுந்தவள் :
– சரி அவனிடம் என்ன சொன்ன, நீ கர்ப்பமென்று வாய் திறந்திருப்பியா?
– இல்லை, நிச்சயமா இதுவரை எதுவும் சொல்லலை.
– ஏன் எதுவும் சொல்லலை?
– சொன்னா, நான் செலுத்தாத கட்டணத்தை திரும்பக் கேப்பான்.
வயதான பெண்மணி சில நொடிகள் யோசித்தாள். கீழே வைத்திருந்த தன்னுடைய பால் நிரம்பிய வாளிகளிரண்டையும் எடுத்துக்கொண்டாள்:
– போகலாம் எழுந்திரு! வழக்கமான பாரம்தானே ? என பெண்ணுக்குத் தெம்பூட்டிள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு மகளிடம் :
– உன்னுடைய கர்ப்பத்திற்கான அறிகுறிகள் வெளியில் தெரியும்வரை, அவனிடம் எதுவும் சொல்லாதே, ஏழெட்டு மாதக் கட்டணச் செலவு பணம் நமக்கு மிச்சமாகும் புரிஞ்சுதா?
செலேஸ்த், எழுந்துகொண்டாள், ஆனாலும் அழுகையை நிறுத்தவில்லை, தலை கலைந்திருந்தது, கன்னங்கள் இரண்டும் ஊதியிருந்தன. மெல்ல நடக்கத் தொடங்கியவள்:
– அவனிடம் மூச்சுவிட மாட்டேன், எனக்குத் தெரியாதா , என்று முணுமுணுக்கிறாள்..