ஏ பெண்ணே 9

This entry is part 9 of 10 in the series ஏ பெண்ணே

தமிழாக்கம் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி

 போதும். என்னை ரொம்பவும் புகழ்ந்து ஆகாசத்தில் ஏற்றி விடாதே பெண்ணே! நான் நிச்சயம் உங்களுக்கெல்லாம் அம்மா தான்,  அதே சமயம் நான் உங்களிடமிருந்து வேறுபட்டவளும் கூட. நான் நானாக இருக்கிறேன். நான் நீயல்ல,  நீயும் நானல்ல.

அம்மா, தயவுசெய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்!

அம்மா,  எரிச்சலுடன் –

இந்தப் பாராட்டு, கவனிப்பு, அக்கறை இவற்றால் எனக்கு இப்போது எதுவும் ஆகப் போவதில்லை. கேள் பெண்ணே! குழந்தைகள், தாயின் முழு நேரத்தையும் விழுங்கி விடுகிறார்கள்.

அம்மா,  குறைந்தபட்ச சந்தோஷத்தையாவது நீங்கள் எவரிடமிருந்தேனும் பெற்றி ருக்கக்கூடும் இல்லையா?

நான் அதைப் பற்றிப் பேசவில்லை. தாய் உருவாக்குகிறாள். ஊட்டி வளர்த்து குழந்தைகளைப் பெரியவர்களாக்குகிறாள். பிறகு அவளையே ஏன் தியாகம் செய்து விடுகிறார்கள்? பலி கொடுத்து விடுகிறார்கள்? குடும்பம்,  தாயைத் துண்டு துண்டாக்கி,   அவளை இங்கும் அங்குமாக சிதற விடுகிறது. அவள் முழுமையாக இருந்துவிட்டால்,  மறுபடியும் ஆற்றல் பெற்று எழுந்து விடக்கூடும் என்பது தானே காரணம்? தாயை,  பால் சுரக்கும் பசுவை போல அல்லது சேவை புரியும் தாதியை போலவே குடும்பம் நடத்துகிறது. உழைத்துக் கொண்டே இருக்கட்டும். குடும்பத்தாருக்கு தொடர்ந்து வசதிகளைத் தந்து கொண்டே இருக்கட்டும். தாய் இதற்கு மட்டும் தான் தகுதி படைத்தவராக?

அவள் தன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்,  ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை,  அவள் வீட்டு நிர்வாகத்தைத் திறம்படக் கவனிக்கிற காவலாளி மட்டுமே.

சூசன் அம்மாவின் தலைமாட்டிலிருக்கும் விடி விளக்கை ஒளிர விடுகிறாள். அம்மா கண்களை மூடிக் கொள்கிறார்.

நள்ளிரவில், அம்மா, விழித்துக் கொண்டு,

சூசன்,  கடிகாரம் என்ன நேரம் காட்டுகிறது என்று சொல்? இன்னும் இரவு பாக்கி இருக்கிறதா அல்லது பொழுது புலரப் போகிறதா?

இப்போது இரவு இரண்டு மணி அம்மா.

இந்த இரவு நகர்வதைப் போலவே எனக்குத் தோன்றவில்லை. என் தொண்டை வறண்டிருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. வேலை வெட்டி எதுவும் இல்லை. ஏதோ ரயிலைப் பிடிக்க முடியாமல் போய்விடுகிற மாதிரி, 

படுக்கையில் படுத்தப்படியே,  கடந்து போன வருஷங்களை, நினைவில் தாண்டிக் குதித்துக் கொண்டிருக்கிறேன். 

சூசன் அம்மாவுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறாள்.

வீட்டில் கல்கண்டு எங்காவது வைத்திருப்பார்கள் பார்!

இதோ கொண்டு வருகிறேன் அம்மா!

நூறாண்டு காலம் தாங்கும்படியாகத்தான் இந்த உடல் படைக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இந்த எலும்பு மட்டும் முறியாமல் இருந்தால்,  நானும் நன்றாகத்தான் இருந்தேன்.

இதென்ன அம்மா,  நீங்கள் மறுபடியும் துணிக்கட்டை அவிழ்த்து விட்டீர்களே!

ஆமாம் அவிழ்த்து விட்டேன். எது கட்டப் பட்டிருந்ததோ, அதைத்தானே அவிழ்த்தேன்.

சூசன் அம்மாவை திரும்பிப் படுக்க வைத்து,  காயத்தை துடைத்துக் கட்டு போடுகிறாள்.

சூசன்,  நான் சொல்வதைக் கேள். இப்போது காயத்தைத் திறந்தே விட்டுவிடு.

இல்லை அம்மா. தோல் உரிந்து சீழ் பிடிக்க ஆரம்பித்து விடும்.

என்ன அபத்தமாகப் பேசுகிறாய்! எனக்கு எவ்வளவு வலி வேதனை இருக்கிறது என்பது எனக்கு தெரியாதா என்ன? நான் ஒரு கவசமும் அணிந்து கொண்டிருக்கவில்லை. நான் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறேன்.

சூசன், வண்டி போய்விட்டதா?

எந்த வண்டி அம்மா?

சூசன், நீ உன் கடமையைச் சரிவரச் செய்வதேயில்லை. மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய். இந்த வீட்டில் நீ எத்தனை மாதங்களாக இருக்கிறாய்! வண்டி எப்போது வரும், எப்போது போகும் என்று உனக்குத் தெரியாதா?

அம்மா,  ஸ்டேஷன் இங்கிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கிறது!

நான் ஸ்டேஷனை பற்றி பேசவில்லை. வண்டி முதலில் காலியான பால் புட்டிகளை எடுத்துச் செல்ல வரும். பிறகு பால் நிரம்பிய புட்டிகளை இறக்கி வைத்து விட்டுப் போகும்.

சூசன் ஃபிளாஸ்கை எடுக்கிறாள்.

அம்மா பால் குடிக்கிறீர்களா அல்லது காம்ப்ளான் கலந்து தரட்டுமா?

வேண்டாம். எனக்கு ஒன்றும் வேண்டாம். நீ என்னை அக்காவின் அறைக்கு அழைத்துச் செல்.

நான் அக்காவிடம் கேட்டு விட்டு வருகிறேன்.

கேட்டுவிட்டு வருகிறாயா? அந்த அறையும், என் வீட்டைச் சேர்ந்ததுதான். என்னை கையாலாகாதவளாக நினைக்க வைக்காதே. என்னை முதலில் பூஜை அறைக்கு அழைத்துச் செல். பிறகு அக்காவின் அறைக்கு அழைத்துச் செல்!

சூசன் அம்மாவைத் தூக்கிக் கொள்கிறாள்.

மகள்,  காலடி ஓசை கேட்டு கண் விழிக்கிறாள்.

சூசன்,  என்ன செய்கிறாய்? அம்மா,  இந்த நேரத்தில் நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

நீ இன்னும் தூங்கவில்லையா? பெண்ணே,  உன்னோடு உன் அறையில் படுத்துக்கொண்டு, கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பதில், உனக்கு ஏதும் ஆட்சேபனையில்லையே?

இல்லை அம்மா!

மகள், அம்மாவுக்காக கட்டிலின் மீது குஷன்களை வைக்கிறாள்.

சூசன்,  அம்மாவை நிதானமாக இறக்கி உட்கார வை.  உட்கார வசதியாக இருக்கிறதா அம்மா?

ஏதேனும் புதிதாக ஆரம்பித்திருக்கிறாயா நீ?

இல்லை அம்மா. இன்னும் முடிவுறாத ஒன்று மீதம் இருந்தது. அதைத் தொட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

இனிமேல் அதிகம் யோசிக்காதே. என்ன மீதம் இருக்கிறதோ, அதை முடிக்க முயற்சி செய். காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த வேலையைக் குறைவாக மதிப்பிடாதே. பெண்ணே இதுவும் புதிதாக படைப்பதற்கு ஒப்பானது தான். மற்ற எதையும் விட சிறியதில்லை. உயிரின் ஆதி ஊற்று, ஆயிரம் பாதைகள் கொண்டது. எந்தப் பாதை வழியாகவும்,  எந்தத் திசையிலும் அது பெருகக்கூடும்.

அம்மா, ஒரு நொடி கழித்து,

படுக்கையில் படுத்தவாறே யோசித்துக் கொண்டிருக்கையில்,  எனக்குத் தோன்றியது என்னவென்றால்,  இரவும் பகலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதைப் போல, தாயும் மகளும் கூட தனித்தனி அடையாளமாக பிரிந்துவிடுகிறார்கள். பழைய அறை தானே என்று அடையாளம் காண முற்பட்டேன். இப்போது என்னுடைய அறையில் தான் இருக்கிறேன். இதே உலகத்தில். எழுந்து போய்  என் மகளை  ஏன் பார்த்து விட்டு வரக்கூடாது என்று நினைத்தேன்! உடனே எழுந்து வந்தேன்! இதற்கு சூசன் ஒப்புக் கொள்ளவே இல்லை.

அம்மா புன்னகைக்கிறார்.

மனதில் நினைத்ததைச் செய்ய முடிவது என்பதே பெரும் வரப் பிரசாதம்தான். நான் போன பிறகு நீ என்னை அதிகம் நினைத்துக் கொள்ளாதே. எவ்வளவு தேவையோ அவ்வளவு  நினைவு கூர்ந்தால் மட்டும் போதும். நான் போனதும் நீ சில நாட்கள் எங்காவது வெளியே போய்விட்டு வா. களைத்துப் போயிருக்கிறாய்!

நீண்ட மௌனம்.

சூசனை வேலையில் தொடர விடுவாய் தானே?

இல்லை அம்மா.

சமையல்காரன்? அவனும் போய்விடுவான் இல்லையா?

இருவரில் எவரேனும் ஒருவரேனும் நிறுத்திக் கொள்.

மிகவும் சிரமமாகிவிடும்.

குளிர்சாதன பெட்டியில் காய்கறிகள் பால்,  தயிர்,  பனீர் இருந்தால் அதிக சிரமம் இல்லை. சமைப்பதிலும் பரிமாறுவதிலும் நேரம் செலவழிவது தெரியாது.

ஆமாம்!

மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று நீயும் யோசித்து வைத்திருப்பாய்! எந்த வேலையாக இருப்பினும், அதற்கான நேரம் கடந்து விட்டது பெண்ணே! தனியாக எப்படி சமாளிக்கப் போகிறாயோ!

எப்படி முடிகிறதோ,  அப்படிச் செய்துகொள்ள வேண்டியதுதான், அம்மா.

அம்மா, சற்றே குழப்பத்துடன் –

யோசித்துப் பார்த்தால், நீ விரும்பினால் உன்னால் என்னதான் செய்ய முடியாது! 

சிறியதோ பெரியதோ,  உன்னால்  செய்ய முடியாதது என எதுவுமே இல்லை!

மகள்,  அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஒரு போதும் உன்னுடைய அடிப்படை விருப்பத்துக்கு எதிராகப் போக முயற்சிக்காதே!

அம்மா,  சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் ஏதாவது நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.

என்னிடமிருந்து யாருக்கும் ரத்தினங்களோ, நகைகளோ, பசுக்களோ, குதிரைகளோ, அல்லது நிலங்களோ கிடைக்கப் போவதில்லை. வெறும் அறிவுரை மட்டும் தான். பெண்ணே,  குலத்தின் தலைமைப் பொறுப்பு பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. சாஸ்திரப்படி உன் சகோதரன் தான் பகடி அணிந்து கொள்வான். குடும்பத்தின் கொடி மருமகளின் கையில்.

லாக்கர் சாவி என் அலமாரியில் இருக்கிறது. மேல்தட்டில் உள்ள வட்ட வடிவமான டப்பியில் தேடினால் கிடைக்கும். பெண்ணே,  முன்பு,  என்னிடம் தங்கம் கிலோ கணக்கில் இருந்தது. இப்போது சில கிராம்களே எஞ்சி இருக்கும். தேவை ஏற்பட்ட போதெல்லாம் உபயோகப்படுத்தியாயிற்று. நான் என் கைப்பட உயில் எழுதி வைத்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியும். உன் சகோதர சகோதரிகளுக்கு அதை காண்பித்துவிடு. மருமகளுக்குத் தனக்கென தனியாக லாக்கர் இருக்கிறது. அவளுடைய சொத்துக்கள்,  அவளுடைய லாக்கரில் பத்திரமாக இருக்கின்றன. விடைபெறுகையில், மாமியாருடைய பரிசுகள்,  அவளைச் சேராவிட்டால் நான் தேவி பவானியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வேன். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் நினைப்பது போல, எந்த குடும்பத்திலும் சொத்துகள் அவ்வளவு அதிகமாக இருப்பதில்லை. யாருக்கு,  எவ்வளவு, ஏன், எல்லா வீட்டிலும் ஒரே கதை தான். வீட்டுக்கு வீடு வாசற்படி தான். உறவினர்கள் நடுவே கண்டிப்பாக இத்தகைய பேச்செல்லாம் எழத்தான் செய்யும். யாருடனும் எந்த வாக்குவாதத்திலும் சிக்கிக் கொள்ளாதே. மற்றவர்கள் அனைவரும் தத்தம் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டி ருக்கிறார்கள். நீ மட்டும் தான் எல்லா வட்டத்திலிருந்தும் வெளியே நிற்கிறாய். கண்டிப்பாக நீ தனியாகத்தான் நிற்பாய்.

மகள்,  சிகரெட்டை பற்ற வைத்துக் கொள்கிறாள்.

சிரித்தபடியே,

அம்மா உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போல இருந்தால்,  ஒரு சிகரெட் பிடிக்கிறீர்களா?

என் முதுகு பக்கம் தலையணையை வைத்து என் தலையை கொஞ்சம் உயரமாக வைக்க வேண்டும்.

இதிலென்ன கஷ்டம்!

அம்மா, சிகரெட் புகைத்தபடியே –

பெண்ணே,  மனம் எதைச் செய்யச் சொல்கிறதோ,  அதைச் செய்ய வேண்டும். நல்ல வேளை நான் இங்கு உன் அறையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். வந்திராவிட்டால், அங்கு இருட்டிலேயே தவித்துக் கொண்டிருந்திருப்பேன்.

மகள், வேடிக்கையாக-

அம்மா உங்களை படுக்கையிலிருந்து  தூக்குவது மிகவும் கடினம். சூசன் சொன்னதில் தவறில்லை.

ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு  வர வேண்டும், அவ்வளவுதானே. நானே விரும்பினால் கூட உன்னை பார்ப்பதற்காக இனித் திரும்பி வர முடியாது,  இல்லையா?

ஆமாம் அம்மா.

பல நொடிகள் புகையில் கரைகின்றன. பெண்ணே,  உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா?

கேளுங்கள் அம்மா.

இந்த ஃப்ளாட் யார் பெயரில் இருக்கிறது?

நான் இல்லாமல் போகும்போது,  உங்கள் பெயரில் அம்மா.

அப்படி என்றால், நான், உனக்கு இதை கொடுத்துவிட்டுப் போகப்போகிறேன் இல்லையா?

இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

அம்மா, வித்தியாசமான குரலில் –

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது சிரிக்கிற விஷயம் இல்லை. அழ வேண்டிய விஷயம்.

சிரிப்பை அழுகையாக மாற்றிக் கொள்ள வேண்டிய அளவுக்கு இது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அம்மா.

யோசிக்கத் தேவை இல்லாத அளவுக்கு இது அத்தனை சிறிய விஷயமும் இல்லை. நான் உன்னில் என்னைப் பார்க்கிறேன். பார்ப்பதற்கு நாம் இருவரும் ஏறத்தாழ ஒன்று போல இருந்தாலும், உன் குணம் முற்றிலும் உன் அப்பா வழிக் குடும்பத்துடையது.

அம்மா,  அது நல்லதா அல்லது பழுதா?

நல்லதும் இல்லை, பழுதும் இல்லை, பெண்ணே!

இப்படிச் சொல்லி நீங்கள் ஒரு சந்தேகத்தை உண்டாக்கி விட்டீர்கள். உங்கள் பேச்சு எதையும் தீர்மானமாக நிறுவவில்லை.

பெண்ணே,  உன்னுடைய தனித்த பயணத்தில், நீ எதை நிறுவப் பார்க்கிறாய்? சேர்ந்து வாழ்கையில்,  சில வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடுகின்றன. சில எஞ்சி நின்று விடுகின்றன. தனித்து நிற்கையில்,  எதுவும் எஞ்சுவதும் இல்லை,  வெள்ளத்தில் அடித்துக் கொண்டு செல்வதும் இல்லை. கேட்டுக் கொண்டிருக்கிறாயா?

ஆமாம் அம்மா

பெண்ணே,  குடும்பத்தின்  உள்ளேயும், குடும்பத்தைச் சுற்றியும் தான் நமது கர்ம பூமி விரிந்து கிடக்கிறது. இங்கிருந்து தான்,  பெண்,  தன்னையும் மற்றவர்களையும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள். தாயான பிறகு அவள் கடந்த காலம், நிகழ் காலம்,  எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் வாழ்கிறாள். குடும்பம் என்கிற பந்தத்தில் நீ சிக்காததால், தனித்து வாழ்கிறாய்.

அப்படியானால்,  மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் அம்மா?

தத்தம் கூடுகளை கட்டுவதிலும், அவற்றைப் பேணி பராமரித்துக் காப்பதிலுமே எந்நேரமும் ஈடுபட்டிருக்கிறார்கள். பெண்ணே,  நீ இந்த வீட்டிற்காகச் செய்தவற்றுக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. அம்மாவின் ஆசிகள் மட்டுமே நிற்கும்.

சூசன்,  வாயிற் கதவருகே நின்று எட்டிப் பார்த்து –

அம்மாவை இப்போது அந்த அறைக்குக் கூட்டி சென்று விடலாமா என்று கேட்கிறாள்.

சூசன்,  அம்மா சற்று நேரம் இங்கேயே படுத்திருக்கட்டும். ஒரு காரியம் செய் – குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீர் ஐஸ்கட்டி,  எலுமிச்சம் பழம் மற்றும் ஒரு கிளாசை இங்கு வைத்து விட்டு போ. நீ சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொள். தேவைப்பட்டால் நான் உன்னை எழுப்புகிறேன்.

சூசன் மேஜையின் மீது ட்ரேயை வைக்கிறாள்.

பெண்ணே,  உன்னுடைய அறை நிறைந்து இருக்கிறது.

அம்மா, அது நீங்கள் இங்கு இருப்பதனால்.

மகள் எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஐஸ் கட்டியை போட்டு கிளாசை நிரப்புகிறாள். அம்மா மகளை கண் கொட்டாமல் பார்க்கிறார். மகள்,  அம்மாவின் தலைமாட்டில், குஷனை அவருக்கு வசதியாக சரி செய்கிறாள்.

அம்மா உங்களால் கிளாஸை பிடித்துக் கொள்ள முடியுமா?

முடியும். பிடித்துக் கொள்வேன்.

எடுத்துக் கொள்ளுங்கள் அம்மா! சியர்ஸ்!

அம்மா தலையசைத்தபடியே ஒரு மிடறு விழுங்குகிறார்.

பெண்ணே,  நாம் எப்போதாவது, எங்காவது கண்டிப்பாக சந்திப்போம். ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வோம். இவ்வளவு பெரிய உலகம் இது. இங்கு தவறேதும் நிகழ வாய்ப்பில்லை. தாயும் மகளும் எங்கிருந்தாலும், யாராகப் பிறந்திருந்தாலும், அவர்கள்  எப்போதும் தாயும்  மகளாகவுமே இருப்பார்கள். இந்த உலகம் இருக்கும் வரை.

மகள், அழுகையை அடக்கிக் கொண்டு, வெகு நேரம் வரை அம்மாவைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். வெகு நேரம் வரை கையிலிருக்கும் கிளாசை வெறித்துக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் மீதம் இருப்பதை ஒரே மடக்கில் குடித்துவிட்டு,  கிளாசை திரும்பவும் நிரப்பிக் கொள்கிறாள்.

***

Series Navigation<< ஏ பெண்ணே – 8ஏ பெண்ணே 10 >>

2 Replies to “ஏ பெண்ணே 9”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.