
விமான நிலையத்தில் அழைப்பு ஊர்திகளின் வருகைக்குக் காத்திருக்கும் இடம். வெளிறிய நீல நிற ‘பான் ஆம்’ அடையாளத்துடன் ஒரு பெஞ்ச்.
காலை சிற்றுண்டியை ஜீரணித்துவிட்ட நேரம். அவ்வளவாக நடமாட்டம் இல்லை.
இயந்திர ஓசை கேட்டு பெஞ்ச்சில் இருந்து ஒருவர் எழுந்து நிற்கிறார். சராசரி உயரம். மிக எளிமையான, பலமுறை அணிந்த வெள்ளை சட்டையும் கறுப்பு சாம்பலாகிப்போன பான்ட்ஸும். தோளில் ஒரு தோல்பை. இளமையின் பிற்பகுதியைக் காட்டும் முகத்தில் ஆழ்ந்த அமைதி. கண் பார்வை சூழலுடன் ஒன்றி சுற்றிவருகிறது.
ஓசை விலகிச்சென்று அடங்கி விடுகிறது. அவர் உடல் மொழியில் அவசரமோ ஆதங்கமோ தெரியவில்லை.
உயரமும் பருமனும் திரண்ட புஜங்களும் கொண்ட ஒரு இளைஞன் நுழைந்து சற்றுத் தள்ளி நிற்கிறான். சட்டையின் மார்பில் பிருமாண்டமான 10. கால்பந்து ஆட்டக்காரன் என்பது வெளிப்படையாகக் தெரிந்தாலும் முகத்தில் அறிவுக்களை. கல்லூரியில் எல்லா வகுப்புப் பாடங்களையும் முழுமையாகக் கற்றிருக்க வேண்டும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் கால்வைக்கப் போவதின் அறிகுறியாக உடலில் பரபரப்பு. சிறிய பெட்டி குறும் பயணத்தை முடித்தவன் என்பதைக் காட்டுகிறது. புன்னகையைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.
இன்னொருவர் பெட்டிகளும் பைகளும் அடுக்கிய வண்டியை இழுத்து இருவருக்கும் நடுவில் வந்து நிற்கிறார். அப்பழுக்கற்ற வணிக ஆடை. நடுவயதின் நடுப்பகுதி. முகத்தின் பழுப்பு அடர்ந்த தலைமயிரின் வெண்மையைக் கூட்டுகிறது. பண்பட்ட ஆனால் செயற்கை கலந்த நடையும் தோற்றமும். நீண்ட பயணம் முடித்த களைப்புக்குப் பதில் எதிர்பார்ப்பின் பரவசம்.
இன்னும் சில நிமிடங்கள். ஊர்தி வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
நடுவில் நின்றவர் பொறுமை இழந்து அலைபேசியில் பார்க்கிறார்.
“எவ்வளவு நேரம் தான் 285-இல் இந்த ஊபர் நிற்கும்?”
உச்சரிப்பில் பல மொழிகளின் பாதிப்பு. அது குரலுக்கு ஒரு வசீகரத்தைத் தருகிறது.
“காலை நேர நெருக்கடி” என்கிறான் ஆட்டக்காரன்.
“பத்து மணிக்கு ஒரு மிக முக்கியமான சந்திப்பு. இப்போதே ஒன்பதாகப் போகிறது.”
“எனக்கும் 10-மணி 10-நிமிடம் 10-நொடியில் ஒரு முக்கியமான காரியம்.”
“அதென்ன 10:10.10 கணக்கு?”
“நான் ஃப்ளாரிடா பல்கலையின் கால்பந்து…”
“நீ.. க்வார்டர் பாக் ஃபீபோ. உன்னை தலைக்கவசத்துடன் பார்த்தது, அதனால் அடையாளம் தெரியவில்லை.”
“எனக்கு 10 அதிருஷ்ட எண். அதனால் ஃபால்கன் (தொழில்முறை கால்பந்தாட்டக்) குழுவின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட அந்நேரம்.”
“அதன் மதிப்பு நூறு மில்லியன் என்று செய்தித்தாளில் படித்த நினைவு.”
“பத்து ஆண்டுகளுக்கு.”
“ஒரு வருஷம், பத்து மில்லியன்.”
“எல்லாம் பத்து” என்று சிரிக்கிறான்.
சிறு சிந்தனைக்குப் பின் அவன்,
“இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் பிறந்தவர் என் தாத்தா. தன் இளமைக்காலக் கதைகளை அவர் பலமுறை சொல்லக் கேட்டு இருக்கிறேன். அவருடைய தந்தைக்கு நிலக்கரியை குதிரை வண்டியில் வீடுவீடாகக் கொண்டுபோய் கொடுக்கும் வேலை. வருமானத்தில் அதிகம் மிஞ்சியது இல்லை. அதனால் உபரிச் செலவு என்று எதுவும் கிடையாது. காலப்போக்கில் பொருளாதாரம் வளர்ந்து வருமானம் உயர்ந்து அடிப்படைத் தேவைகளின் விலைகள் குறைந்ததும் மக்களிடம் விருப்ப செலவுகளுக்கு நிறைய பணம். அதில் 60 அங்குலத் தொலைக்காட்சி, நூற்றுக்கணக்கான குதிரைத்திறனில் ஊர்திகள், ஐரோப்பிய நதிகளில் படகுப்பயணம்…”
“நீ விளையாடும் அழகை நேரில் ரசிக்க குறைந்த பட்சம் இருநூறு டாலர் டிக்கெட், தொலைக்காட்சியில் அதைப் பார்க்க மாதம் நூறு டாலர் சந்தா.”
“உங்களுடைய ‘நவி மோசஸ் இன்டெர்நாஷனல் மினிஸ்ட்ரி’க்கு வரி செலுத்தாத காணிக்கை.”
“இயேசுவின் வார்த்தைகளை உலகெங்கும் பரப்புகிறேன். அதற்கு உதவுவது அவசியச்செலவு என்றே சொல்லலாம்.”
“உண்மை தான்.”
“‘என்எம்ஐஎம்’மின் ஆண்டு வருமானம் இருபது மில்லியன் டாலராக இருந்தது. சமீபத்தில் காணிக்கைகள் வேகமாகக் குறைந்துவருகின்றன.”
“என் ஒப்பந்தம் நிச்சயம் ஆனதும்…”
“நீ நல்ல பிள்ளை. ஒவ்வொரு ஸ்கோருக்கும் மண்டியிட்டு கடவுளை வணங்குவதில் இருந்தே உன் விசுவாசம் தெரிகிறது.”
“தாங்க்ஸ், டாக்டர் நவி மோசஸ்!”
அலைபேசியுடன் உறவாடி அவர்,
“வேறொரு ஊர்தி உடனே அனுப்பக் கேட்டிருக்கிறேன்.”
மற்றவர் தன்னை மதிக்கவில்லை என நினைக்காது இருக்க நவி வலப்பக்கம் திரும்பி,
“வெகுநேரமாக இங்கே காத்திருக்கிறாயோ?”
“ஒரு மணியாவது இருக்கும்.”
“உனக்குப் பொறுமை தான்.”
“பலருக்குப் பொறுமை சொல்லிக்கொடுக்கிறேன். நானே என் வழியைப் பின்பற்ற வேண்டாமா?”
“ம்ம்.. உன் பெயர்…”
“கைய்ல் வொர்த்.”
அலைபேசியில் தேடி…
“காம்-அ-சூத்ரா (calm-a-sutra). கவர்ச்சிகரமான பெயர். உன் வலைத்தளத்துக்கு பலரை இழுக்கும். அதில் காமசூத்ராவும் உண்டா?” கண்களைச் சிமிட்டுகிறார்.
“உடலுறவில் குற்ற உணர்வையோ வன்செயலையோ கலக்கக்கூடாது என்பதைத்தவிர வேறு அறிவுரை அதில் இடம் பெறாது” என்று கைய்ல் உணர்ச்சி வசப்படாமல் சொல்கிறார்.
நவி படிக்கிறார். “காம்-அ-சூத்ரா. வாழ்க்கையில் நிதானத்தை வளர்க்கும் வழிகள்.”
“அப்படியென்றால் நீ தீபக் சோப்ரா, எக்கார்ட் டோலியின் கும்பலில் ஒருவன். ‘புது ஆன்மீகம்- பழைய குப்பை, பைபிள் எக்காலத்திலும் புதிது’ என்ற புத்தகத்தில் அவர்கள் வண்டவாளங்களை இழுத்துவிட்டு இருக்கிறேன். கிழக்கு மதங்களின் சில மிகச்சாதாரண தத்துவங்களை மேற்கத்திய சோம்பேறிகளுக்குப் பாதி புரிந்து மீதி புரியாமல் எழுதி மில்லியன் கணக்கில் பணம் பண்ணும் பேராசைக் கும்பல். அதெல்லாம் யு-ட்யுபிலும் இருக்கிறது.”
கைய்ல் நிதானமாக,
“தீபக் சோப்ரா பற்றி அதிகம் தெரியாது. எக்கார்ட் டோலியின் ஒருசில அறிவுரைகளை நான் பயன்படுத்தினாலும், என் பாதை வேறு. அது தரை மட்டத்திலேயே இருக்கும். தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமனநிலையில் எதிர்கொள்வது தான் என் குறிக்கோள். அதற்கு பொருட்களின் பௌதிகப் பரிமாணங்களுடன் அவற்றின் பரஸ்பர உறவுகள் பற்றிய விழிப்புணர்வு எப்போதும் நமக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பணம், பதவி, அதிகாரம், புலன்களின் சந்தோஷம் இவை தான் வாழ்க்கையின் பொருள் என்று நின்றுவிடுவோம்.”
“பெரிய பெரிய வார்த்தைகளாகப் போடுகிறாய். போகட்டும். வலைத்தளம் எப்படிப் போகிறது?”
“அதில் யார் வேண்டுமானாலும் நுழையலாம், விளம்பரம் கிடையாது. வாடிக்கையான ஆதரவாளர்கள் வழியாக…”
“மாதம் இரண்டாயிரம் டாலர்.”
“தேறும்.”
“அத்துடன்…”
“மனஅமைதியை வளர்க்கும் தியானப் பயிற்சிக்கு முகாம் நடத்துவதில் கொஞ்சம் வருமானம். இன்று மாலையில் இருந்து (வடக்கே) மாரியெட்டாவில் ஒரு வார முகாம் நடக்கப்போகிறது. அதற்குத்தான் வந்தேன்.”
“ஃபீபோ சொன்னது போல் அதிகப்படி பணம் மிஞ்சினால் அதை இப்படியெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கலாம்.”
அவன் அவர்களுக்கு முன்னால் வந்து,
“மிஸ்டர் வொர்த் மாரியெட்டா போக வேண்டும். ஃபால்கன் அலுவலகமும் மாரியெட்டாவில் மோசஸ் மினிஸ்ட்ரிக்கு எதிரில் இருக்கிறது. என்ன சௌகரியம்! எனக்காக ஊபர் லிமோசின் வரும். அதில் மூவரும் ராஜமரியாதையுடன் போவோம்.”
“தாங்க்ஸ் ஃபீபோ! ஆனால் (கிழக்கே) ஸ்டோன் மௌன்ட்டனில் ஒரு முக்கியமான சந்திப்பு காத்திருக்கிறது. அதை முடித்த பிறகுதான் மற்றதெல்லாம்.”
அவனுடன் பயணிக்க மற்றவர் புன்னகையில் ஒப்புதல் தெரிவிக்கவே அவன்,
“மிஸ்டர் வொர்த்! முகாமின் விவரங்கள் கொடுத்தால் நான் வர முயற்சிப்பேன்.”
அவர் கைப்பையில் இருந்து ஒரு வர்ணக்காகிதத்தை எடுத்து ஃபீபோவிடம் கொடுக்கிறார்.
“தாங்க்ஸ்!”
“நீ தரையில் லோடஸ் போஸில் உட்கார வேண்டும் என்பதில்லை” என்று சிரிப்புடன் சொல்கிறார்.
“அப்படியென்றால் நிச்சயமாக வருவேன். கவனக்குவிப்பும் நிதானமும் விளையாட்டில் உதவும்.”
அதில் நவிக்கு அவ்வளவாக ஒப்புதல் இல்லை என்று அவருடைய முகக்குறிப்பில் தெரிகிறது. ஃபீபோவை கைய்லின் பிடியில் இருந்து விடுவிக்க,
“காம்-அ-சூத்ராவுக்கு எப்படி ஐடியா கிடைத்தது?”
“பதின்பருவத்தில் பொதுவாக பெற்றோர்களின் பழக்கங்களும் அறிவுரைகளும் குழந்தைகளுக்கு எரிச்சலைத் தரும். என் விஷயத்தில் என் அப்பாவின் தினப்படி முனகல். ‘சம்பளம் பத்தவில்லை, பணக்காரர்கள் செல்வத்தைச் சுருட்டிக்கொண்டு விடுகிறார்கள். அரசியல்வாதிகள் நிர்வாகத்தினர் பக்கம்.’ இப்படி. ஒருநாள், பொறுக்கமுடியாமல் வீட்டுச் செலவுகளின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அத்தியாவசிய செலவுகள் போக மீதிப் பணத்தை செலவழிக்குமுன் அதன் அளவுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதா? என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் பயணம் போவோம். டிஸ்னி உலகம் இல்லை லாஸ் வேகாஸ். பத்தாயிரம் டாலர் பறந்து போய்விடும். முழுநேரமும் ஓயாத மனத்தாங்கல், சிறு தடங்கலுக்கும் வருத்தம், திரும்பி வந்ததும் ஏமாற்றம். அதை ஒதுக்கினேன். அம்மாவின் சிகரெட் பழக்கத்தை நிறுத்தினேன். புது ஊர்தி வாங்குவதற்கு பதில் பழையதை ரிப்பேர் செய்ய கற்றுக்கொண்டேன். அதிலிருந்து…”
“அறிவுரை வியாபாரம் ஆரம்பித்தது.”
“நடைமுறையில் நான் அறிந்த உண்மைகளை மட்டுமே.”
நவி அலைபேசியில் தேடி…
“ஆகா! கண்டுபிடித்துவிட்டேன். ‘க்றிஸ்டியன் வீக்’கில் வந்தது. படிக்கிறேன் கேள்!”
“எல்லா மதங்களும் தனி மனிதன் தன்னை அறிந்துகொள்ள வேண்டும், தன்னலம் மறக்க வேண்டும் என்ற நோக்கில் தான் ஆரம்பித்தன. ஆனால், காலப்போக்கில் நம்பிக்கை, பாவ புண்ணியம், அரசியல் சார்பு என்று திசைமாறிவிட்டன. நிறுவப்பட்ட மதங்கள் கணக்கில்லாத செல்வங்கள் சேர்த்து, கடவுளை ஒரு சர்வாதிகாரியாக சித்தரித்து, அறிவியல் வளர்ச்சியை எதிர்த்து, சுதந்திர சிந்தனையை தீய செயலாக மாற்றிவிட்டன.”
“இது நீ எழுதியது தானே.
“ஆமாம். அதில் என்ன தவறு?”
“உன்னைப்போன்ற ஆட்கள் எங்களை மறைமுகமாகப் பழித்ததால் தான் ஏசுவின் சேவைக்கு காணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்று இதில் காட்டி இருக்கிறார்கள்.”
“அதற்கு நிஜமான காரணம் சொல்கிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளில் சமுதாயத்தின் மேல்மட்டத்தினர் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கியதால் விலைவாசி உயர்ந்த அளவுக்கு வருமானம் வளரல்லை. அதனால் ஃபீபோ தாத்தாவின் இளமைக்காலம் மறுபடி வந்திருக்கிறது. உங்கள் சேவைக்குக் கொடுக்க ஆசைப்பட்டாலும் மக்களிடம் அதிகப்படி பணம் கிடையாது.”
“அதற்குத்தான் ட்ரம்ப். அவர் மறுபடி பதவிக்கு வந்ததும் பழையபடி மக்கள் கையில் நிறைய டாலர் புழங்கும்.”
“இந்த விலைவாசி உயர்வு நிரந்தரம் என்பது ஒரு பொருளியலாளரின் கருத்து.”
“(பைபிள்) கடவுள் நினைத்தால் எந்த பொருளாதாரக் கொள்கையும் நொடியில் மாற்றிவிடலாம்.”
ஆதரவுக்கு நவி ஃபீபோ பக்கம் பார்க்கிறார். அவன் பார்வை எங்கோ தொலைவில்.
நீண்ட மௌனம். அதைக் குலைக்க பல இடங்களில் நசுங்கி வர்ணம் போன ஒரு ஓல்ட்ஸ்மொபைல் வந்து நிற்கிறது.
“ஆகா! கடைசியில் ஒரு ஊர்தி!”
“சே! என்ன பழசு!”
“நன்றாக ஓடுமாக இருக்கும்.”
“எப்படியோ இந்த இடத்தை விட்டுத் தொலைந்தால் போதும்.”
காரில் இருந்து டிரைவர் இறங்குகிறான். வளரும் நாடுகளின் போலிஸ்காரர் போல காக்கி சீருடையும் அலட்சியப்போக்கும்.
“நான் முதலில். ஸ்டோன் மௌன்ட்டனில் என்னை சந்திக்கத் துடிக்கும் ஒரு முக்கியமான நபர்.”
“என் பல மில்லியன் டாலர் ஒப்பந்தம் தள்ளிப்போகக் கூடாது.”
“மூணு பேரையும் கூட்டிப்போக வந்திருக்கிறேன்.”
“என்னை முதலில் இறக்கிவிட வேண்டும். ஒரு முக்கியமான-”
“சைலன்ஸ்! நான் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டும்!”
மற்ற இருவரும் கைய்லைப் பின்பற்றி அமைதி மேற்கொள்ள…
“ஸ்லீபி ஸ்ப்ரிங் பண்ணையில் சோளப்பயிரை அறுவடை செய்ய ஆள் தேவை. இங்கே மூன்று பேர் இருப்பதைத் தெரிந்து உங்களை அழைத்துப்போக வந்திருக்கிறேன். அங்கே போனதும் கொடுப்பதைத் தின்றுவிட்டு வயலில் வேலை. அது முடிந்ததும் உங்களை விருப்பப்பட்ட இடங்களுக்கு அழைத்துப் போவேன்.”
“பண்ணை எங்கே?”
“மேற்கே. அரை மணியில் போய்விடலாம்.”
“நான் தயார். நண்பர்களின் பண்ணைகளில் பலமுறை வேலை செய்திருக்கிறேன்.”
“சரியாக 10:10.10-க்கு வேலையை ஆரம்பிக்க முடியுமா?”
“முடியும்.”
“நானும் வருகிறேன். ஃபால்கன்ஸ் கொடுத்துவைத்தது அவ்வளவு தான்.”
“ஃபீபோ! நீ உயரத்தில் இருக்கும் சோளக்கதிர்களைப் பறி! நான் கீழே பார்த்துக் கொள்கிறேன்.”
“அப்படியே, கோச்!”
காரின் கதவுகளை க்ரீச்சுடன் திறந்து ஃபீபோ முன்னாலும் கைய்ல் பின்னாலும் அமர்ந்து அவற்றைக் கரகர ஓசையில் சாத்திக்கொள்கிறார்கள்.
“கிழக்கே ஸ்டோன் மௌன்ட்டனில் என்னை இறக்கிவிட்டு…”
“அதற்கு நேரம் இல்லை. வாயை மூடிக்கொண்டு வந்து உட்கார்!”
காரின் பின்புறம் வைக்க, தள்ளு வண்டியில் இருந்த பையை அவன் எடுக்கிறான்.
“தொடதே!” என்று கூச்சல். “நான் ‘நவி மோசஸ் பன்னாட்டு மினிஸ்ட்ரி’யின் ப்ரெசிடென்ட். என் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஒரு மில்லியன் டாலர். இந்தியாவிலும் சரி, இங்கேயும் சரி நான் கை அசைத்தது இல்லை. வீட்டைப் பெருக்கவும், சமைக்கவும், சாமான்களை என் இடத்திற்கே கொண்டு தரவும் ஆட்கள். நான் போகும் இடங்களில் என் தேவைகளைக் கவனிக்கப் பணிப்பெண்கள். அப்படி இருக்கும்போது, என்னை அதிகாரம் செய்ய நீ யார்? சொத்தைப்பயல். நீ இல்லாவிட்டால் என்ன, நான் சந்திக்க வேண்டிய முக்கியமான நபர் என்னை அழைத்துப் போவார்.”
எடுத்த பையைத் தரையில் எறிகிறான்.
“கடந்த சில மணி நேரத்தில் உலகம் தலைகீழாய் மாறிவிட்டது என்று உனக்குத் தெரியாது.” தொடர்ந்து அலட்சிய “குட் லக்!”
ஊர்தி உறுமலுடன் நகர்கிறது.
அதைப் பார்த்து, “சும்மா பயமுறுத்தாதே!” என்று நவி கத்துகிறார். பிறகு அலைபேசியில் அந்த முக்கியமான நபரை அழைக்கிறார். “ஏ குட்டி! விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குழைவான குரலில் தகவலைப் பதித்துவிட்டு பதிலை எதிர்பார்த்து பெஞ்சில் அமர்கிறார்.
காற்று கூட அசையவில்லை.
***