
அன்னையை ஆயிரம் கண்கள் (ஸகஸ்ராக்ஷி) கொண்டவள் என்று வணங்குகிறோம். ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாவுகள் இருப்பதாகச் சொல்வார்கள். ‘பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று லலிதா சகஸ்ரநாமம் அன்னையைத் துதிக்கிறது. இவைகள் வெறும் பெயர்கள் மட்டுமல்ல, மொழிகளைக் குறிப்பவையும் கூட. இதில் மொழியியலும் அடங்கியுள்ளது. ரிக் வேதம் கூறும் நான்கு வடிவங்கள் இவை. வாக்கு நான்கு வடிவங்கள் எடுக்கிறதென்றும், அவற்றில் மூன்று மறைந்திருக்க ஒலி வடிவாக ஒன்று மட்டும் வெளிப்படுகிறது என்றும் அந்தத் தொல் வேதம் சொல்கிறது. விழிப்பு, கனவு, ஆழ் நிலை, துரியம் என்ற நான்கையும் இதனுடன் இணைத்தும் லலிதா சகஸ்ர நாமம் பேசுகிறது. பிரக்ஞையின் பரிமாணங்களும், மொழியும் கொள்ளும் இணக்கப் பிணைப்பை இது அழகாகச் சொல்கிறது. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகியவை, மத்யமா, வைகரியால் வெளிப்படும்; துரியம் பஸ்யந்தியால் வெளிப்பட்டு இந்த மூன்று நிலைகளையும் தாங்குகிறது. பரா என்பது பிரும்ம நிலை.
மொழி, சொற்களாகவும், ஒலிக்குறிப்புகளாகவும் இருக்கிறது- இவை அர்த்தம் தருவனவாக இருக்கின்றன. உணர்வுகள், பாவங்கள், ஆகியவை சொற்களால், ஒலிக்குறிப்புகளால் (ஆ!) வெளிப்படுகின்றன. நிறப்பிரிகை போல் ஓர் உணர்வைக் காட்டும் சொற்கள் சொல்வெளிப் பெருக்குகள்.
‘அது’ என்னவென்று தெரியாது- ஆனால், அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை நம் அனைவருக்கும் ஏற்படுகிறதல்லவா? என்னது, தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்வதா? ஆம், அதற்காகத்தானே படிக்கிறோம், விவாதிக்கிறோம், பூசலிடுகிறோம், பதக்கம் பெறுகிறோம். ஆம், அது நாம் அறியாத ஒன்றென்றால், அதை அறிய வேண்டிய அறிவு நம்முள் எப்படி வந்தது? ‘எனக்குத் தெரியாத அந்தத் திறன்/ அறிவினை நான் அறிந்து கொள்வேன்’ என்பதை, அந்த உணர்வைச் சொல்லவும் இந்திய புத்த மதத்தில் ஒரு சொல் இருக்கிறது என்பது எத்தனை அழகு! அந்தச் சொல் anannatannassamitindriya. நம் வாழ்விற்கான முக்கியமான ஒன்றாக அது இருக்கக்கூடும் என்ற பேரார்வத்தைத் தூண்டி, நாம் அறியாத ஒன்றை அறிவதற்கானப் பாதையில் நம்மைச் செலுத்தும் அந்த உணர்விற்கும் பெயர் வைத்த நம் மொழிகள்- சம்ஸ்க்ருதம், பாலி, ப்ராக்ருதி, தமிழ்- எத்தகைய சொற்களஞ்சியங்களாக இருந்திருக்கின்றன.
மரியா ஹெய்ம் (Maria Heim) என்ற மத தத்துவ போதனையாளர் ஆம்ஹெர்ஸ்ட் (Amherest) கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிகிறார். Words for the Heart (இதயத்திற்கான சொற்கள்) என்ற தன்னுடைய சமீபத்திய நூலில், நமது மூன்று செம்மொழிகளில்,( சம்ஸ்க்ருதம், பாலி, ப்ராக்ருதி) ‘உணர்வு போன்ற’ 177 வார்த்தைகளைத் அவர் தொகுத்திருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்ட ‘எனக்குத் தெரியாத ஒன்று என்ற அறிவு ஏற்படும் உந்துதல்’ anannatannassamitindriya. ஏன் அவர் ‘உணர்வினைப் போன்ற’ என்று சொல்கிறார்? ஏனெனில் ஆங்கில மொழிச் சொல்லான ‘எமோஷன்’ (Emotion) முழுமையாக இல்லாததும், உணர்வு நிலைகளை அது வெவ்வேறு வார்த்தைகளால் விளக்காததும் காரணங்கள். இருநூறு வருடங்களாக இருக்கும் மொழி தானே அது. பல செம்மொழிகளிடமிருந்து பல சொற்களை ஏற்றுக்கொண்டு இன்று வணிக மொழியாக கோலோச்சுகிறது. லா ச ரா சொல்வது போல் ‘நெருப்பு’ என்ற சொல்லும்போதே அந்த உணர்வுகள் எழும்ப வேண்டாமா? ‘அக்னி குஞ்சு’ என்று எட்டயபுரக் கவிஞர் சொல்கையில் எத்தனை நுட்ப உணர்வுகள்! அனுபவங்களில் கண்டு கொள்ளும் தத்துவச் சாற்றை, துல்லிய இரசமெனச் செய்து, அவற்றின் பகுப்புகளுக்கு இடம் கொடுத்தவை செம்மொழிகள். இத்தகைய சொற்கள் நமக்குக் காட்டும் சித்திரங்கள்- வானக் கூரையின் கீழ் அவரவர் அனுபவங்களின் வாயிலாக, அனுபவக் கூறாகவே நமக்குக் கிட்டுகின்றன. ‘எமோஷன்- உணர்வு’ என்ற பதங்களைப் பயன்படுத்தாமலே, மக்கள் தங்கள் அனுபவங்களைக் கொண்டு அவற்றைப் புரிந்து கொண்டுதானே வாழ்ந்தனர்? நாம் உணர்வதை, அறிந்து கொள்ள மாற்றுக்கள் உள்ளனவா என்று சிந்தித்த 3000 ஆண்டுகளுக்கு மேலான செம்மொழிகள் ஓரு கொடையல்லவா?
புராதன இந்தியாவில் சொற்கருவூலம் என்பது சொற்கள், கவிதைகள், தத்துவச் சிந்தனைகளின் தொகுப்பு. 5-ம் நூற்றாண்டில், இரண்டாம் சந்திரகுப்தரின் அரசவையில் இடம் பெற்றிருந்த பேரறிஞர் அமரசிம்மா, வாழ்வின் ஒவ்வொரு கால நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு ஒத்த உணர்வினைச் சுட்டும் சொல்லகராதி ஒன்றை வடிவமைத்தார். அமரகோஷம் என்பது அதன் பெயர்- மூன்று பாகங்களாக அமைக்கப்பட்டது. இதற்கு ‘நாமலிங்க அனுஷாசனா’ என்ற பெயரும் உண்டு. மனதில் பதியும் வண்ணம், இசை நயத்தோடு அமைக்கப்பட்டுள்ள நூல் அது. இவருக்கும் முன்பாகவே மொழி ஆய்வு நடை பெற்று வந்திருக்கிறது; அதைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால், அவை இன்று கிடைக்கவில்லை. புலவர்கள் கொண்டாடிய அமரகோஷம் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கிறது- ஏழாம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பாக சீனாவிற்கும், பாலி மொழியில் இலங்கைக்கும், இடைக்காலத்தில் வடக்கில் திபெத்திற்கும், 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொழியாக்கம் செய்யப்பட்டு யுரோப்பிற்கும் சென்றுள்ளது. மரியா ஹெய்ம் சொல்கிறார்- “என் அகராதியை, அமரசிம்மரைப் போல நான் செய்யவில்லை. அவர் ‘உணர்வுகளை’ சொற்களால் சுட்டியவர்- அவைகளே பொருளையும் தந்துவிடும். நான் ‘எமோஷன்’ என்ற வார்த்தையை எடுத்து என் நூலில் தந்துள்ளேன்.”
இன்றைய உலகில் அனைத்தும் பட்டியலிடப்பட்டும், பொருளகராதி எனத் தொகுக்கப்பட்டும் இருப்பதால், இந்த முயற்சியை நவீன தொழிலமைப்பு என்றும் பார்க்கலாம். டிகார்ட் (Descartes), பால் எக்மேன் (Paul Ekman), டார்வின் (Darwin) போன்ற மேதைகள் அடிப்படையான ஆறேழு உணர்வுகளைக் குறிப்பிட்டாலும், அவை எந்த ஆறு அல்லது ஏழு என்பதில் அவர்கள் ஒத்துப் போகவில்லை. மனித உணர்ச்சிகளின் நூல் என்ற புத்தகத்தில், டிஃபனி வாட் ஸ்மித் (Tiffany Watt Smith) பல மொழிகளிலிருந்து 156 உணர்வு சார்ந்த வார்த்தைகளைத் தொகுத்துத் தருகிறார். இவர்களைப் போன்றவர்கள், சுருக்கமாகச் சொல்வதை விட நெருக்கமாக உணர்வுகளைச் சொல்பவர்கள். பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து பெறப்படும் வார்த்தைகள், மனித அனுபவங்களை அருமையாகவும், துல்லியமாகவும் சொல்கின்றன என்ற கருத்தை அவர் அழுத்தமாகச் சொல்கிறார். இலக்கியம், புராணம், தத்துவம், மதம், அரசியல், அழகியல், ஒழுக்கவியல், மருத்துவம் ஆகியத் துறைகளில் இந்தியாவின் செம்மொழிகளில் உள்ள சொற்கள் ஆங்கிலம் பேசும் மக்களிடையே செழிப்பான மொழியாற்றலை ஏற்படுத்தும்.
ஆங்கிலம் பேசுபவர்கள் பலர் அறிந்த உணர்வாக இருந்தாலும், அழகான, அர்த்தம் நிறைந்த சொற்களின் மூலம் அதை வெளிப்படுத்துவது இந்தியச் செம்மொழிகள். சினத்தில் தான் எத்தனை வகைமையக் காட்டுகிறது மஹாபாரதம். நீறு பூத்த நெருப்பாக பாஞ்சாலியின் கனல், வெடித்துச் சிதறும் காட்டுத் தீயென பீமனின் கோபாவேசம்- இவை இரண்டிற்கும் இடையிலான பார்த்தனின் சினம்; ஊமையின் மொழியாக உள்ளே துளிர்க்கும் நகுல சகதேவர்களின் ஆற்றாமை- ஒவ்வொன்றும் காட்டப்படுகிறது- அதன் மூலம் உணர்த்தப்படுகிறது. ஹாசா (Hasa) என்ற களிப்பு கூட பல வகையில் சொல்லப்படுகிறது. புன்னகையாக, மகிழ்வாக, உருண்டு புரண்டு சிரிப்பதாக, சிரிப்பில் கண்களில் நீர் திரண்டு தளும்பவதாக, அருகில் இருப்போரை தன்னை மறந்து முதுகில் தட்டிச் சிரிப்பதாக, அதையே நினைத்துக் கொண்டு தனக்குத்தானே இரசித்து, இரசித்து மகிழ்வதாக! பற்களைக் காட்டாமல், திறந்த கண்களில், உயர்த்திய கன்னங்களில் எழும் புன்னகை; பிறகு சிறிய ஒலியுடன் துவங்கி, அதிகமாகையில் கண்களும், கன்னங்களும் சுருங்க, முகத்தில் ஒளி வீச, பரவும் பெரும் நகைப்பு; சிரிப்பு மேலும் தொடர்ந்தால், தோள்பட்டைகள் குலுங்கும்; இதற்கு அடுத்ததாக கண்கள் ஈரமாகும்; கொப்பளிக்கும் பெரும் உற்சாகச் சிரிப்பு அதிக சத்தத்துடன் வெளியாகி பார்ப்பவர்க்களுக்கு முதலில் திகைப்பைத் தந்து பின்னர் அவர்களையும் சிரிப்பில் இணைத்துவிடும்.
இத்தகைய சொல் உணர்வுக் கோர்வையை 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் போஜன் இன்னமும் துல்லியமாகச் செய்தார். தன்னுடைய இலக்கிய அழகியல் நூலில் அவர் ஈர்ப்பின் தன்மையை விவரிக்கிறார். பொதுவான அன்பிற்கும், மிகவும் விரும்பும் ஆழமான நேசத்திற்கும் இடையேயுள்ள நுட்பங்களையும், சிற்சில வேறுபாடுகளையும் எடுத்துச் சொல்கிறார். குறைந்த பட்சம் 64 வகைகளில், மனிதர்கள் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்படுவதை பட்டியல் இடுகிறார். மனிதர்கள், அவர்களது சூழ்நிலைகள், வெவ்வேறு நிலையிலுள்ளவர்கள் ஆகியவற்றின் அளவுகோல்களின் படி இந்த ஈர்ப்பை மேலும் பகுக்கிறார். இவைகளை முன்னர் சொன்ன 64 வகைகளால் பெருக்கும் போது 12,228 நுட்பமான சாத்தியக் கூறுகளை அவர் காண்பிக்கிறார். லீஸா ஃபெல்ட்மான் பாரெட் (Lisa Feldman Barrett) என்ற நரம்பியல் அறிவியலாளர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், உணர்வுகளின் சிறு மணிகளையும் நம்மால் ஒலிக்க முடியுமென்றால், அதன் மூலம் நாம் அறிந்து கொள்வதை மேம்படுத்தி அழகான, அறிவான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், போஜ ராஜரைச் சரணடையலாம்.
சில மனக்கிளர்ச்சிகளை விவரிக்கும் இந்தியச் சொற்களுக்கு நேரடியான ஆங்கிலச் சொற்கள் இல்லை- அவற்றை பேசும் வழிகளாலேதான் ஆங்கிலத்தில் பொருள் கொள்ள முடிகிறது. வட இந்தியாவில் கரும்புலி சரகங்களில், திறந்த வெளியை நாடிய முந்தைய வேத குருமார்கள், தங்கள் நிலையை ‘அம்ஹாஸ்’ ( Amhas-இறுக்கமான இடம் தரும் வேதனை) என்று சுட்டினார்கள். (இப்போது என்றால் கஷ்டமாக இருக்கிறது என்று பொதுவில் சொல்லிவிடுவோம்). பௌத்தர்கள், ‘அனுமோதனா’ (Anumodana) என்ற மதக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்- அது பிறர் மகிழும் ஒரு செயலில், பங்கேற்பாளர் மட்டுமின்றி பார்ப்பவர்களும் மகிழும் ஒரு உன்னதம். தற்பெருமை அகந்தையால் உருவாகிறது; அதைப் போக்க ‘ஒமனா’ (Omana) என்ற சொல்லைக் குறிப்பிட்டு பௌத்தர்கள் “இல்லையில்லை, இது தன்னடக்கமில்லை, நான் கீழானவன், வெறுக்கத்தக்கவன் “ என்று தன்னைப் பற்றிய பெருமிதங்களை அகற்றுகிறார்கள்.
வருத்தங்களோ, குற்ற உணர்வோ மனிதனை நிலைகுலையச் செய்கின்றன. அதிலிருந்து விடுபடுவது, நம் மனத் திருப்திக்கு அவசியம். தேரவாத பௌத்தம் ‘பமோஜ்ஜா’ (Pamojja) என்ற சொல்லால் குற்ற உணர்வை வென்று, வாழ்வில் பெரும் மகிழ்ச்சியை அடைவதைச் சொல்கிறார்கள். பாவங்கள் அகன்ற, சரியான நடத்தைக்கு இட்டுச் செல்லும் அந்த சந்தோஷத்தைச் சொல்ல தனி வார்த்தை! மகிழ்ச்சி, அமைதி, கவனக்குவிப்பு ஆகியவை தெளிந்த ஞானத்தை அடைய உதவும் படிக்கட்டுகள்.
சில விருப்பங்களை புறந்தள்ள முடியாது- பெண், தான் கர்ப்பமுறக் கொள்ளும் ஆசை அவற்றில் ஒன்று- சில நோயாளிகள் கேட்பதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. ‘தோஹதா’ (Dohadha) என்ற சொல் இந்த உணர்வைக் காட்டுகிறது. முற்பிறவி வினைகளால் இத்தகைய ஆசைகள் ஏற்படுகின்றன என்று பலக் கதைகள் உள்ளன- அசாதாரணமாகக் கர்ப்பம் அடைய விழையும் பெண், அல்லது இன்னமும் பிறக்காத அந்தக் குழந்தையின் பிறவி வாசனை- எதுவென்று நாம் அறியோம்- ஆனால், இவைகளையும் அகராதி சொல்கிறது. இப்படிப்பட்ட தோஹதாவால் பீடிக்கப்பட்ட ஒரு அரசி, அரசரான தன் கணவனின் வலது முட்டியிலிருந்து இரத்தத்தைப் பருக ஆசைப்படுகிறாள்- அவரும் சம்மதிக்கிறார். அப்போது பிறந்திராத அந்த சிசு, தன் பிறப்பிற்குப் பிறகு, தந்தைக் கொலைஞரானான் என்று பௌத்த வரலாறு சொல்கிறது. பிம்பிசாரன் என்ற மகத அரசனிடத்தில் அவன் மகனால் அழிவு உண்டாகலாமென்றும், எனவே அவனை அரண்மனையில் வளர்க்க வேண்டாமென்றும் பெரியவர்கள் சொல்கிறார்கள். மன்னன் அதைக் கேட்கவில்லை. அந்த மகன் அஜாதசத்ரு என வளர்ந்து தன் தந்தையைச் சிறையில் அடைத்து சிம்மாசனத்தைக் கைபற்றுகிறான். தான் இன்று வரை உயிரோடு இருப்பதற்கு தந்தைதான் காரணம் என்று அறிந்து கொண்ட அஜாதசத்ரு, அவரை விடுவிக்க வருகிறான்; ஆனால், பிம்பிசாரன், மகன் தன்னைக் கொல்ல வருகிறான், அந்தப் பாவம் அவனைச் சேரவேண்டாமென்று மோதிரத்தில் பதுக்கிய விஷத்தைக் குடித்து உயிர் துறக்கிறான்.
‘சமத்காரம்’ (Chamathkaram) என்றால் என்னவென்று தெரியுமா? அழகான, ஆன்மீகமான ஒரு நிகழ்ச்சியில், உணர்வுப் பாய்ச்சலில் இரு உதடுகளுக்கிடையே புகுந்து வெளி வரும் காற்றின் ஒலி! இசை நிகழ்ச்சிகளில், பேருரைகளில் நாம் வெளிப்படுத்தும் ஒன்றுதானே இது. இனிய கீதம், அருமையான இலக்கியம் நம் முன்னால் நிகழ்கையில் அழகு ஒலிக்கத்தானே வேண்டும்? இத்தகு சாத்தியங்கள் நம்முள், நாம் அறியாததைத் தேடும் தாக்கத்தை ஏற்படுத்துமல்லவா? இதை விட வேறென்ன வேண்டும்?
உலக இயக்கத்தை ஆடலரசனின் நடனம் என்பார்கள். முத்துத் தாண்டவர் ‘ஆடிக் கொண்டார்’ என்ற பாடலில் அவன் ஆடலை இப்படி வர்ணிக்கிறார்
‘ஆர நவமணி மாலைகளாட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த் தொடையாட
சிதம்பரத் தேராட
பேரணி வேதியர் தில்லை மூவாயிரம்
பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே- ஆடிக் கொண்டார்
மாலைகள், நாகம், தூக்கியத் திருவடி, தேர், பூசகர்கள், காளியின் எதிர் நடனம் என்று பல்வகை ஆடலைக் காணீரோ?
மரியா ஹெய்ம் அவர்களின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
https://sanskritdocuments.org/sanskrit/amarakosha/ அமரகோஷத்தின் சில பகுதிகள் இங்கே கிட்டும்.