
நமது செல்லப் பிராணிகள் நம்மை நன்றாக அறிந்திருக்கின்றன; நம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றன. நாம் அவற்றிற்கு உணவினை நெகிழித் தட்டுகளில் தருகிறோம் என்றும், அவை எவ்வாறு உருவாகும் என்றும் அவை அறிந்திருக்குமா? வானில் பறக்கும் விமானங்களில் நெகிழி பாகங்கள் உள்ளன என்றும், அந்த நீண்ட வளைந்த வெண் கோடுகள் அவற்றால் ஏற்படுகின்றதென்றும் அவை அறியுமா? அல்லது இப்படியான சிந்தனைகள் உள்ளன என்ற எண்ணங்கள் அவைகளுக்கு ஏற்படுமா? அத்தனை உயரத்தில் பறப்பதால் தான் அவை சிறிதாகத் தோன்றுகிறது என்பதைப் பற்றியாவது? சில கருதுகோள்கள் இருக்கின்றன எனவும், இருக்கக்கூடும் எனவும் நினைப்பதே புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும். நம்முடைய கற்பனைகளின் எல்லைகளைத் தாண்டி இருப்பனவைகளை பற்றி அறிவது எவ்விதம்?
கேள்விகள் பிரசவிக்கும் கேள்விகள்- இந்தக் கட்டுரையில் நாம் பத்து கேள்விகளைப் பற்றி அதனால் என்ன ஏற்படும் என்பதைப் பற்றி சிறிது பார்க்கலாமா? நம் கற்பனையின் வரம்புகளுக்கப்பால் நாம் அறியக் கூடியது என்ன என்ற கேள்வி உயிரியல் சார்ந்த புத்தியையும், உள்ளுணர்வு மற்றும் கருத்துக்களால் உருவாகும் மொழி மற்றும் கணிதம் சார்ந்த அறிவினையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். நமது பௌதீக யதார்த்தத்தை மீறக்கூடிய சாத்தியங்களையும், கணினியில் உருவகிக்கும் எண்ணற்ற உயிரற்றவைகளையும் கூட இந்தக் கேள்வி உள் அடக்கும். நமது தொழில் நுட்பக் குழந்தைகள், அறிவாற்றலால் நம்மை விஞ்சுவதைப் பற்றியும் கூட இக் கேள்வி அமையும். இந்தப் பத்து கேள்விகளால், மனிதனின் ‘தனித்துவம்’ என்பது ஆட்டம் காணும். நம் செல்லப் பிராணிகள் அல்லது ஒற்றைத் திசு உயிரினம் போலத்தான் நாமிருக்கிறோம் என்பதை அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டோம்- அதில் உண்மை உள்ள போதிலும்.
மனித இன வரலாற்றில் அவன் மதியூகத்திற்கான சாட்சியங்கள் மிகுந்து இருக்கின்றன என்றாலும், நாம் இந்தப் பத்துக் கேள்விகளின் மூலம் மாறுபட்ட சித்திரத்தைக் காணப் போகிறோம். நம் மொழி, அறிவியல், கணிதம் இவற்றின் வரைமுறைகளுக்குள் ஒடுங்கும் நம் அறிதல்கள் போதுமானவையா?.
எனவே, தொடர் கேள்விகளில் எளிமையான முதல் கேள்விக்குச் செல்வோம்;
1.சரியாக வரையறுக்கப்படாத புறநிலை அளவீடுகள் சொல்வது, நாம் புத்திசாலிகளா அல்லது முட்டாள்களா?
பெருங்கால அளவில், நம்முடைய மிகச் சிறப்புடைய அறிவாற்றலே மிக மிக மெதுவாகத்தான் வளர்ந்துள்ளது. நம் மூளைகள், புலன் தரும் செய்திகளை குறிப்பிட்ட செயலிகளின் மூலம் செய்கின்றன; அநேகமாக சிந்திப்பதற்கு இடமிருப்பதில்லை. ஏனெனில் அறிவு ஆற்றல் என்பது அதிக விலை கோரும் ஒன்று- பல உடல் உறுப்புகள் மூளையைப் போல அதிக அளவில் சக்தியைக் கேட்பதில்லை. வளர்சிதை மாற்றத்தில், மூளை, குடல் இதயம் ஆகியவை தலா ஒரு அலகு நிறை என எடுத்துக் கொண்டால், மற்ற உறுப்புகள் அதில் குறைந்த பட்சமே கேட்கும். எனவே, திறன் என்பதே வரமும், சாபமுமாக இருக்கிறது.
நம் நரம்பியல் வன்பின்னல்கள் நமக்கு எவ்வாறு சுருக்க அறிமுக அறிவைத் தருகின்றன என்பதைப் பற்றிய முழுப் புரிதல் இன்னமும் ஏற்படவில்லை. ‘மூளை, மனதை எப்படி உருவாக்குகிறது’ என்பதையும் அறியவில்லை. அதிக அறிவு மூளை அடர்த்தியைச் சார, அதற்கான வளர்சிதை மாற்றச் செலவு அதிகமாக, அதனாலேயே குறைந்த பட்ச சுருக்க அறிவோடு முக்கிய நிகழ்வான ஹோமோ சேப்பியனின் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது எனலாம். பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் வேட்டையாடி வாழ்ந்த பின்னரே புதிய கற்காலத்திற்கு நாம் வந்தோம்.
ஆம், இது சரியான முடிவுதானா? நாம் திறன் மிக்கவர்களா இல்லையா என்ற கேள்வி அறிவின் பல அடுக்குகளைச் சார்ந்த ஒன்று. புலன் வழியே புற உலகை நாம் தெரிந்து கொள்வது, பழைய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்திருப்பது, அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றைப் பற்றிய எண்ணங்கள் எல்லாமே நம் அறிவுத் திறத்தால் வருகின்றன. பிற எண்ணற்ற உயிர்களிடம் இருக்கும் சில திறன்கள் நம்மிடமில்லை. உதாரணத்திற்கு நாம் உருவாக்கிய புதிய எண்மக் கணினிகளை எடுத்துக் கொள்ளுங்கள்- நாம் அறியாத எண்ணற்ற வகைகளில் அது செயல்படுகிறதல்லவா? சிலவற்றை அந்த எண்மக் கணினிகளைவிட நாம் சிறப்பாகச் செய்ய முடிந்தாலும், அது ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது.
ஒரு வேளை, நம் கணிதங்கள் யதார்த்தத்தின் ஒரு பகுதியைத் தான் காட்டுகின்றனவோ?
இது தொடர்ந்து மாறும். எண்மங்களால் செறிவூட்டப்பட்ட நம் இன்றைய அறிதலை வருங்கால நிலப்பரப்பில் இருக்கப் போகும் உயிரினங்கள் விஞ்சிவிடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அறிவின் விரிவு என்பது இன்றைய வரலாற்றில் நமக்கான பிரத்யேகமான ஒன்றல்ல; பூமியிலிருக்கும் அனைத்து உயிரினங்களின் கூட்டு அறிவின் சாத்தியங்களை நினைத்துப் பாருங்கள். பல் கோடி ஆண்டுகளில் இந்தக் கூட்டறிவின் திறன்கள் மாற்றம் அடைவதைப் பற்றிய ஒரு வரைபடத்தை கற்பனை செய்வோம். இந்த அறிதிறனை நாம் எப்படி வகுத்துக் கொண்டாலும் சரி, துல்லியமான கால அளவீடுகளை பயன்படுத்தினாலும் சரி, அது காட்டும் போக்கு என்பது நேர்மறைச் சாய்கோடென்ற முடிவிற்கு நாம் வருவோம்.
எந்தக் காலத்திலும், குறிப்பிட்ட உட்சபட்ச அறிவு, அது எந்த உயிரியுடன் நாம் இணைத்து நினைத்தாலும், சுருங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்வோம். இந்தப் பூ உலகம் குறிப்பிட்ட சில அறிதிறன்களை எப்போதுமே இழக்கவில்லை. அனைத்து உயிரினங்களின் அறிதிறன் வீச்சும், வகைமையும் அதிகரித்து வந்துள்ளன. வாழ்க்கை, திறன் வயப்பட்டதாக இருக்கிறது- பல வழிகளில் திறன் வாழ்வில் இடம்பெறுகிறது. இந்தப் போக்கை நாம் அவதானித்து அதை எதிர்காலத்தில் பொருத்துவோம் என்றால், நாளை நம்மைவிட மேம்பட்ட அறிதிறன் உயிரிகளின் சாத்தியங்கள் அதிகம் என்று உணர்வோம். நாம் நம் அறிவைப் பற்றிய தற்பெருமையில் இருந்தாலும், எதிர்காலத்தில் நாம் அல்லது அப்போது பூவுலகில் இருக்கும் உயிரிகள் நம்மைவிட மேம்பட்ட அறிவு கொண்டவையாக இருக்கும்.
இந்த முடிவெல்லாம் சரிதான்- ஆனாலும், நம்முடைய கூட்டுத் திறனைப் பற்றி சற்று அருகே நெருங்கி பார்ப்போம். ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் கூட்டுத்திறனறிவு மெதுவாகவும், சீராகவும் வளர்ந்து வந்தது. திடீரென்று அதில் ஒரு அசுர வேகப் பாய்ச்சல்- ஹோமோ சேப்பியன் நிகழ்வு- தத்துவம், கலை, அறிவியல் என அனைத்திலும் நவீனம். அந்த அசுர வேக நிகழ்வில், நம் மூதாதையான ஹோமினின்களை விட நாம் மேம்பட்டு இன்னமும் அத்தகையதோர் நிகழ்வில் இருப்பதாகத் தோன்றுகிறது.
2. நம் ஹோமினின் முன்னோர்களின் அறிதிறனிற்கும், இன்றைய நவீன அறிவியலாளர்கள், கலைஞர்கள், தத்துவவாதிகளின் அறிதிறனிற்கும் இடையே பெரும் பள்ளம் இருப்பதாக ஏன் தோன்றுகிறது?
தரநிலை துகள் இயற்பியல் (Standard Model of particle physics), 1சைதினின் முழுமையற்றதைப் பற்றிய தேற்றம் (Chaitin’s incompleteness theorem), ஜென் சொல்லும் 2‘காளை மேய்த்தல்’ (2Zen parable ‘Ten Verses on Oxherding’). இவைகளின் மூலம் நாம் பெற்ற பலன் தான் என்ன? இத்தகைய திறன்களுக்கே நமக்கு சக்தி தேவையாகிறதே?
இதில் பிடிப்பு ஏற்படுவதற்கு, நாம் உலகப் பொதுவான அறிதிறன்களான அறிவியல், மற்றும் கணிதம் பற்றி சற்று புரிந்து கொள்ள வேண்டும். கணிதம், அறிவியல் நமது செயற்கை அங்கமாக, அச்சு இயந்திரம் முதல், செயற்கை நுண்ணறிவு வரை நம்மை வளர்த்திருக்கின்றன. தொழில் நுட்பமும், கலாச்சாரமும் இந்த வளர்ச்சியை பரவலாக்கி மேலும் கவர்கின்றன. பரந்துபட்ட அறிவும், கலாச்சார, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு பெருமளவில் உதவியுள்ளது. மரபணு வகைமைகளால் வளர்ந்த அறிதிறனை விட, இந்த அறிவியல், கணிதம், கலாச்சாரம், தொழில் நுட்பம் இவற்றின் உள்ளாடல்கள் நம் அறிதிறனை பெருமளவில் வளர்த்திருக்கின்றன. இதை ஒரு ‘வளையமாக’ உருவகிக்கலாம். இந்த ‘வளையம்’ கூட நம் ஹோமினின் மூதாதையருக்கும், இன்றைய போக்கிற்கும் இடையேயுள்ள பள்ளத்திற்கு ஒரு காரணமாகலாம்.
ஆயின், இந்த ‘வளையம்’ புத்தம் புதிதான அறிதிறத்தினை நமக்குத் தந்துள்ளதா என்பது தெளிவாக இல்லை. அது அப்படிச் செய்ய முடியாது. இந்த ‘வளையத்தின்’ தொடக்கத்தில் நம்மிடமிருந்த அறிதிறன்களே எதிர்கால கணிதத்திற்கும், அறிவியலுக்குமான ஒரு தடையாகக் கூட இருக்கக் கூடும். எனவே, நம் ஹோமினின் மூதாதையருக்கும், நவீன மனிதனுக்குமிடையேயான பள்ளத்தை வேறொரு கோணத்தில் அணுக வேண்டும். ஒருக்கால், பள்ளமில்லையோ, சிறு இடைவெளிதானோ? சாத்திய அறிவிலுள்ள சிறு வேற்றுமை என்பதுதான் பொருத்தமான புரிதலாக இருக்குமோ?
பௌதீக யதார்த்தத்தின் இயற்கையை கையகப்படுத்துவதில் நமது கணிதம் “எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது!” என்று ஹங்கேரிய- அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளரான யுஜீன் விக்னர் (Eugene Wigner) ‘இயற்கை அறிவியலில் கணிதத்தின் அதீதங்கள்- 1960’ (‘The Unreasonable Effectiveness of Mathematics in the Natural Sciences’) என்று எழுதினார். கணிதம் அந்த அளவிற்குச் செயல்பாட்டுத் திறன் கொண்ட ஒன்றல்ல என்பது அவரது கேள்விக்கான பதிலாக இருக்கலாம். உண்மையின் சிறு கீற்றை மட்டுமே கணிதம் காட்டுமோ என்னவோ? கணிதம் ஆற்றலுள்ள ஒன்றாக நமக்குத் தோன்றுவதற்கு அது காட்டும் அச் சிறு பளபளப்பே நம் பார்வைக் கோணங்களில் இடம் பெறுவதும் காரணமாக இருக்கலாம்- நாம் சிந்திப்பதின் எல்லைகள் இதை மீறக் கூடிய ஒன்றாகக் கூட நாம் எண்ணுவதில்லை.
உயிர் வாழ்தலின் பொருட்டு நம் முன்னோர்கள் கொண்டிருந்த திறன்களை விட, நம் இணைந்த கூட்டறிவுப் பெருகுதல் தரும் நம் அறிதிறன்கள் ஏன் அருமையாக இல்லை என்ற கேள்வி ஆர்வம் தரும் ஒன்றாகும். உண்மையை புரிந்து கொள்ளவதற்கான குறைந்தபட்சத் திறனாவது இப்படிப் பெருகிய நம்மிடத்தில் உள்ளதா என்பதும் ஒரு கேள்விதான்.
3. நாம் இப்போது அறியும் பௌதீக உண்மைகளின் எல்லைகளை மீறி விரிக்கும் வகையில், நம்முடைய பரந்துபட்ட கூட்டறிவு புதிய கணிதம், அறிவியல் ஆகியவற்றைப் பிறப்பிக்குமா? அல்லது நம்மிடையே உள்ள படிவங்களையே வளர்க்கும் ஒன்றாகத்தான் நம்மால் இயங்கமுடியுமா?
இதன் முன் வடிவத்தை தன் கட்டுரைத் தொகுப்பு நூலான ‘சாத்தியமான உலகங்கள்’ (Possible Worlds) என்பதில், ஆங்கில அறிவியலாளரான ஜான் பர்டன் சேன்டெர்சன் ஹால்டேன் (John Burdon Sanderson Haldane) கேட்டார். “என் சந்தேகம் என்னவென்றால், இந்த உலகம் நாம் நினைப்பதை விட விசித்திரமான ஒன்று, அது மட்டுமல்ல, நாம் நினைக்கக்கூடிய சாத்தியங்களையும் மீறி விசித்திரமானது.” அதைத் தொடர்ந்து பல வருடங்கள் பல வார்த்தைகளால் பலர் இதைச் சொல்லி வந்தனர். ஆனாலும், அவர்கள் இதை மேலே எடுத்துச் செல்லவில்லை. தங்கள் காலத்தில் இருந்த அறிவியல் திறன்களின் போதாமையால்தான் தங்களால் ‘நாம் நினைப்பதை விட இந்த உலகம் விசித்திரங்களைக் கொண்டிருப்பதைச்’ சொல்ல முடியாமல் போயிற்று என அவர்கள் நினைத்தார்களே தவிர, நம் மலர்ந்த அறிவில் இயற்கையாக உள்ள எல்லைகளால் தான் அப்படி நடக்கிறது என சிந்திக்கவில்லை. ஹால்டேன் சொன்னார்- ‘மாறுபட்ட பார்வைகள் மூலம் இந்த பௌதீக உண்மைகளை அறிய முடியும். விளையாட்டுத்தனமாக, மனித அறிவில்லாமல், நான் இப்போது பார்க்கும் “இருத்தலை” ஒரு நாள் மனிதன் உண்மையாகவே செய்வான்.’
தொடர்ந்த பத்தாண்டுகளில், இந்தக் கேள்விகள் பெரும்பாலும் கல்வி இலக்கியத்தில் இடம் பெற்றன- உணர்வுகளின் கடினங்கள், (‘hard problem of consciousness’) உடல்- மனது தொடர்பு (‘mind-body problem’) போன்றவை. கிருமிகள், தாவரங்கள், பூச்சிகள், ஆக்டபஸ் ஆகியவற்றின் உணர்வு நிலை அறிவு நிலை சார்ந்த ஆய்வுகள் அவற்றின் பிரக்ஞை, மனம்(!) இவைகளை முன்னெடுக்கின்றன.
நம்மை உருவகப்படுத்துவது அத்தனை முக்கியமான ஒன்றல்ல.
உணர்வு நிலைகளின் தன்மையை அறியும் பொருட்டு இதையெல்லாம் செய்வதாகச் சொன்னாலும், பெரும்பாலானவை முறை சாராதவை, அழுத்தமற்றவை. நம் இன்றைய அறிதலின் எல்லையை மீற இயலுமா என்பதை மிகத் தீவிரமாகக் கேட்டுக் கொள்ள வேண்டும், அணுக வேண்டும். இப்போது மீண்டும் உலா வரும் இந்தக் கூற்றைக் கேளுங்கள்- நம் உலகமே, கூரிய, மேம்பட்ட அறிவுள்ள வேற்றுக்கிரக வாசிகளின் கணினி உருவகமாக இருக்கக்கூடும். இந்தக் கருத்தை முடிவில்லாமல் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வேற்றுக்கிரகவாசிகளையும் விட சிறந்த அறிவு மிக்கவர்கள் இந்த வேற்றுக்கிரகவாசிகளின் உலகை கணினி உருவகத்தால் அமைத்திருக்க வேண்டும்- இப்படியே முடிவில்லாமல் பல படிநிலை அறிவாளிகளை நாம் கற்பித்துக் கொண்டே செல்லலாம்- இதற்கு முடிவேது?
மிகச் சமீப எதிர்காலத்தில் நாம் கூட அகிலத்தை உருவகப்படுத்தி அதை பிரக்ஞை நிறைந்த உயிரிகளால் நிரப்பலாம். அவைகளும் கூட இந்த உருவகத்தில் ஈடுபட்டு, அதன் விளைவால் விளையும் மற்றொரு உருவகத்தில் மேலும் தொடர்ந்து……. இந்தத் தொடரியில் ஒவ்வொன்றும் தன்னை விட சற்றுக் கீழான நிலையில் ஒன்றை உருவகம் செய்கிறதல்லவா? இந்தத் தொடரியில் நாமும் இருப்போம்.
அப்படியான உருவக உலகில் நாம் இருக்கிறோமா, அல்லது அப்படியில்லையா என்பது ஒன்றும் மகத்தான வினா அல்ல. சில உலகங்களில் நாம் உருவகத்திலும், சிலவற்றில் அப்படியில்லாமலும் இருக்கிறோம். ஒரு வாதத்திற்காக அப்படியான உருவக உலகில் நாம் இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இது நம்மை அடுத்த கேள்விக்கு அழைத்துச் செல்கிறது.
4. கணினி உருவகமான ஒன்று, தன்னை அவ்விதம் உருவகித்த துல்லியமான மேம்பட்ட கணினியின் உருவகத்தை இயக்க முடியுமா?
இல்லை என்பது பதிலானால், நாம் இந்த உலகைப் பற்றி என்ன சிந்தித்தாலும், அது, இந்தத் தொடரியின் மேல் நிலையிலுள்ள சிக்கலான உருவகம் செய்யும் திறன் படைத்தோர் (மேம்பட்ட கணினியாகக் கூட) அறிந்துள்ளவற்றின் ஒரு துணைக்குழுவாக மட்டுமே தானிருக்குமில்லையா? நாம் கற்பனை செய்ய முடிவதைக் காட்டிலும் ஆழமான அடுக்குகள் உண்மையில் இருக்கின்றன என்பதை இது காட்டுகிறது.
இந்தக் கேள்விக்கு சரியான அல்லது பொருத்தமான பதில் வேண்டுமெனில் ‘உருவகம்’ மற்றும் ‘கணினி’ பற்றிய வரைமுறைகள் தேவை. முறையான கணினி அறிவியல், எத்தனையோ கோட்பாடுகளைச் சொன்னாலும், எத்தனையோ வரைமுறைகளை அளித்தாலும், இந்தக் கேள்விக்கான பதில் ‘இல்லை’ என்பதே. நம்முடைய அறிதிறன் எல்லைக்கு உட்பட்டது என்ற கோட்பாட்டிலிருந்து ஒரடி பின்னே செல்வோம். இந்தக் கோட்பாடுகள் கணிதத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசுபவை; நம் கணிதத் திறனிற்கும், கருத்துகளுக்கும் உதாரணமாக உள்ளவை. உண்மையை முழுதுமாக அறியும் அறிவிற்கு எல்லைகள் உள்ளன என்றே சொல்பவை. கணிதத்தின் மற்ற அம்சங்கள்?
(தொடரும்)
1செழிப்பான, நிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணித தேற்றத்தில் பெரும் எண்ணாக இருப்பதை ‘பெ’ என்று குறிப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்- இதில் ‘கோமகோரொ (K) சிக்கலுக்கு உட்பட்ட எந்தத் தேற்றத்தையும், செயலி மொழியையும் எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து, ‘அ’ என்ற எண்ணைக் கையாண்டு “K(அ) >பெ” என்று இந்தத் தேற்றத்திற்கு உட்பட்டு அதை நிறுவ முடியாது
2பத்து பாடல்களில் எருமையைக் குறியீடாகக் கொண்டு வாழ்க்கை தரிசனத்தை கண்டடைதல்.
உசாவி: https://aeon.co/essays/ten-questions-about-the-hard-limits-of-human-intelligence?utm_term
David H Wolpert’s‘ latest book: The Energetics of Computing in Life and Machines (2019).
One Reply to “அறிதலின் எல்லைகள்- பகுதி 1”