- பாழ்மையினூடே மகோன்னதத்திற்கு: எலியட்டின் பாழ் நிலம்
- வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்
- அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ்
- மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள் – 2
- மகோன்னதத்திற்கான ஆயத்தம்
பாகம் 1
1. ஹாலோ-மென்
எலியட்டின் சர்வதேசப் புகழும் The Waste Land கவிதையும் ஒன்றி இருப்பதால் “வாழ்க்கை குறித்த ஓர் தனிப்பட்ட முக்கியமற்ற பிலாக்கணத்திற்கான வடிகால்… வெறும் சந்தநயமான முணுமுணுப்பு” என்று அவர் அப்பெருங்கவிதையைப் பற்றிய பின்னோக்கிய மதிப்பீட்டொன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். நவம்பர் 1922-லேயே அவர் ரிச்சர்ட் அட்லிங்டனுக்கு எழுதிய கடிதமொன்றில் “‘வேஸ்ட் லாண்’டைப் பொறுத்தவரையில் அது எனக்கு ஓர் நடந்து முடிந்த கதை மட்டுமே, புதிய வடிவத்தையும் பாணியையும் நோக்கி நான் தற்போது போய்க்கொண்டிருக்கிறேன்” என அவர் எழுதினார்.
அது எப்படியிருந்தாலும், வாசகர்களாகிய நாம் அவர் மதிப்பீட்டை ஏற்க வேண்டியதில்லை; த வேஸ்ட் லேண்டிற்கான நம் எதிர்வினைகள் எப்போதுமே சற்றுத் தெளிவற்றதாகவே இருக்காலாம், நாம் ஒரே சமயத்தில் அதை ஒரு தோல்வியாகவும் வெற்றியாகவும் பார்ப்பதால். ஹயாசிந்த் தோட்டத்தில் அது முன்வைத்த பிரச்சினைக்கு யதார்த்தமான தீர்வை அடையத் தவறியதாலேயே அது தோல்வியடைகிறது. ஆனால் கடினமாக ஈட்டப்பட்ட அதன் வெற்றிகள் மறுக்க முடியாதவை.
இங்கு நான், அறியாமலேயே அடிப்படை உணர்வை வழிநடத்தும் அதன் அபாரமான இசைத்திறனைப் பற்றிக் கூட நினைக்கவில்லை. ஒரு கவிஞராக, ஆன்மீகப் பாழ்மையின் குடுகுடுக்கும் எலும்புகளின் கொடூரத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டு “வறண்ட எலும்புகளால் எவருக்கும் கேடு விளைவிக்க இயலாது” என்று உறுதியாக அவற்றிடம் கூற முடிந்ததே அவருக்கு முக்கியமான வெற்றியாக இருந்தது. அதனால்தான் அவரது அடுத்த கவிதையான ஹாலோ மென் (Hollow Men) அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு இந்த மேற்கோளுடன் தொடங்குகிறது: Mistah Kurtz he- dead. ஆனால் குர்ட்ஸோ அக்கவிதையின் மற்றொரு மேற்கோளில் வரும் கய் ஃபாக்ஸோ (A penny for the old Guy) “செயலாற்றி” அதன் மூலமாகச் சாபக்கேட்டைச் “சம்பாதிப்பதாலேயே” தோல்வியுற்றாலும் எலியட்டுக்குக் கவிதையின் முதல் வரிகளில் வரும் வெற்று மனிதர்கள், திணித்த மனிதர்களைவிட மேலானவர்களாக இருந்தார்கள். சாஸ்வதத்திற்கும் ஆச்சேரானின் (Acheron) நீரைக் கடந்தபடி எப்போதுமே நரகத்தைச் சென்றடையாதே, குற்றம் புகழ் இரண்டையுமே வாழ்வில் தவிர்த்த இன்ஃபெர்னோ கவிதையின் மூன்றாவது காண்டத்தில் வரும் நபர்கள், அல்லது “வாழவும் செய்யாது சாகவும் செய்யாது” வாழ்வைக் கடத்தும் வேஸ்ட் லாண்டின் வறண்ட ஆளுமைகளின் மந்தமான நடுத்துவத்தைக் காட்டிலும் அச்சாபக்கேடே மேலானது என்றவர் கருதினார்.
Hollow Men-ஐப் படிக்கும் வாசகர் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால் கவிதை நெடுகிலும் திகிலூட்டி, அச்சுறுத்தி, தோன்றி மறைந்து, மங்கும் அக்கண்களை அர்த்தப்படுத்துவதற்கான பின்னணி அவருக்கு அளிக்கப்படவில்லை என்பதே. பாழ்நிலத்தில் நிஜ வாழ்வனுபவத்தின் ஒரு கீற்றாவது நமக்கு அளிக்கப்பட்டது – ஹையாசிந்த் தோட்டத்தில் நடந்த சம்பவம், மோசமான நரம்புகள் உரையாடல், தட்டச்சர்-கிளார்க் எபிசோட், தேம்ஸ் மகளிர் எபிசோடுகள் இப்படி… அவற்றுடன் நாம் கவிதை மறைவாகச் சுட்டும் இலக்கிய, வரலாற்று விவரங்களுடன் இணைத்து அவற்றைச் சூழ்ந்திருக்கும் விமர்சன தரிசனங்களை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இங்கோ ஆன்மீக மலட்டுத்தனத்தின் நாடகமாக்கல் பிரமையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மாயத்தோற்றமாக, முற்றிலும் நேரடியாக அளிக்கப்படாமல், விடுபடுதல்களுடன் அளிக்கப்படுகிறது. ஹாலோ மென் வெளியீட்டு வரலாற்றின் அனைத்து முன்னோடி விவரங்களையும் (டோரிஸின் கனவுப் பாடல்கள், ஓஃபீரியன் பாடல்கள் மற்றும் பல) வாசகர் சேகரிக்க முடிந்தாலும் ஒரு ஒத்திசைக்கும் சரிதைக் கதையாடலை (நிஜமோ / புனைவோ) கவிதையுடன் இணைத்து அவ்விடுபடல்களை நிரப்ப வாசகருக்குக் கடினமாகவே இருக்கிறது. ஒரு ப்ரிகோலாஜைப் (bricolage) போல் அளிக்கப்பட்டிருக்கும் கவிதையின் இறுதிவடிவத்தை அதன் மேற்கோள்கள், உட்குறிப்புகளைக் கொண்டு அவர் ஓரளவிற்கு ஒருங்கிணையும் பார்வையைக் கட்டமைத்துக்கொள்ள் வேண்டும்.
சந்தேகமின்றி, மீண்டும் மீண்டும் வரும் கண்களே கவிதையின் புதிர்களை அவிழ்ப்பதற்கான ஒரு திறவுகோலாகும். பாழ்நிலத்தின் ஹையாசிந்த் தோட்டத்தில் “பார்வை தவறியதை” நாம் நினைவுகூர்கிறோம். அக்கவிதையில் விழைவின் மரணம் விழைபொருளின் ஆதர்சமாக்கலாக உருமாற்றப்படுகிறது; அதைக்காட்டிலும் உயர்வான ஒன்றை எட்டுவதற்கு அதன் இழப்பு தேவைப்படுகிறது என்பதுபோல். கன்னி மேரி வழிபாட்டுமுறைக்கு (நான்காம் பாகத்தின் நிரந்தர நட்சத்திரம், மல்டிஃபோலியேட் ரோஸ்) டான்டே அவரை ஆதர்சப்படுத்துவதற்கு முன்பே பியட்ரிஸ் இறந்துவிட்டார், ஆனால் ஹையாசிந்த் தோட்டத்துப் பெண்ணோ இன்னும் உயிருடன், இன்னும் காத்திருந்தபடி, காதல் துறப்பால் வஞ்சிக்கப்பட்டதை இன்னமும் வருந்திக் கொண்டிருக்கிறார். துரோகம் செய்யப்பட்டு பின்னர் ஆதர்சப்படுத்தப்பட்ட மற்றவர்களின் அசலான துன்பங்களை அப்பட்டமாக உணர்ந்துகொள்வது கவிஞரின் ஆளுமையில் ஒரு புதிய உணர்வை அறிமுகப்படுத்துகிறது. இவ்வுணர்வு இயல்பாகவே உடனழைத்துவரும் குற்றவுணர்வைத் தணிப்பது கடினமாகவே இருக்கிறது. ஆகவேதான் இரண்டாம் பாகத்தின் ஆரம்ப வரிகளின் தயக்கமும், தவிர்த்தலும்:
Eyes I dare not meet in dreams
In death’s dream kingdom …
Let me also wear
Such deliberate disguises
Rat’s coat, crowskin, crossed staves
In a field
Behaving as the wind behaves
No nearer-
டிவைன் காமெடியில், பியட்ரிஸ் சொர்க்கத்திலிருந்து இறங்கி, சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு முன் ஆத்மா பரிசுத்தப்படுத்தப்படும் இடமான பர்கேட்டரி மலையில் டான்டேவைச் சந்திக்கும்போது பியட்ரிஸ்சின் கண்கள் டான்டே இழைத்த துரோகத்திற்காக அவரைக் கண்டிக்கின்றன. குற்றம்சாட்டும் அக்கண்கள் அபாரமாக பிரமிக்கச்செய்யும் வகையில் உருமாற்றப்பட்டுச் சொர்க்கத்தின் தரிசனத்தை டான்டேயிற்கு அளிப்பதற்குமுன் குற்றவுணர்வெனும் கடப்புச் சடங்கை ஏற்கவேண்டியிருக்கிறது. வாழ்நாள் முழுதும் டான்டேமீது கொண்டிருந்த பற்றிலிருந்து எலியட் கடைந்தெடுத்ததை அவர் வார்த்தைகளிலே சுருக்கிக் கூற வேண்டுமானால்: “மனித அன்பு என்பது அதைக்காட்டிலும் உயர்ந்த அன்பினால் மட்டுமே விளக்கப்பட்டு நியாயப்படுத்தப்படுகிறது, இல்லையெனில் அது வெறும் விலங்குகளின் எளிய புணர்ச்சிக்கு சமம்.” உணர்வுகளுக்குக் “கட்டமைப்பையும் வரையறையையும்” அளிக்க டான்டேயின் “உணர்திறன் ஒழுங்கமைப்பு” முறைமை எலியட்டிற்கு முக்கியமானதாக இருந்தது. இதுவே கவிதையை ஐந்து இராஜ்ஜியங்களாகப் பிரிக்கிறது: இழந்த இராஜ்ஜியங்களின் உடைந்த தாடை, மரணத்தின் கனவு இராஜ்யம், மரணத்தின் அந்தி இராஜ்யம், மரணத்தின் “மற்ற இராஜ்யம்” மற்றும் “இராஜ்யம் உம்முடையதே” என்று பிரார்த்தனையில் உணர்ந்து அடையப்படும் அறுதியான பேரின்ப ராஜ்யம்.

‘வேஸ்ட் லாண்டி’ல் விழைவின் தோல்வியைக் குறித்த சிந்தனை இருந்தது. அதன் விமர்சனப் பார்வை கொடூரமான பாழ்நிலங்களைத் தருவித்துக் கொண்டபின், அவற்றை ஏற்று அத்தோல்வியைக் கடப்புச் சடங்காக ஆதர்சப்படுத்துவதால் தனிப்பட்ட ஓர் சுயத்திற்கான முழுதாக இல்லையென்றாலும் ஓரளவிற்கேனும் ஒருவிதமான விடுதலையை ஈட்டுகிறது. இங்கும்கூட கொடூரங்கள் நேரடியாகவே எதிர்கொள்ளப் படுகின்றன:
This is the dead land
this is cactus land
Here the stone images
Are raised…
இங்கும் அவை எளிமையாக ஏற்கப்படுகின்றன, The eyes are not here / There are no eyes என்பது பாழ்நிலத்தின் “But there is no water” வரியின் மறுமொழிதலே. உணர்வின்மையைக் குறித்த விமர்சனமும் அவ்வின்மையின் ஆதர்சப்படுத்தலும் இக்கவிதையிலும் காணக் கிடைக்கின்றன:
Lips that would kiss
Form prayers to broken stone
முந்தைய கவிதைகளின் அனுபவத்தைக் குறித்த அவதானிப்புகளிலும் அதன் ஆதர்சப்படுத்தல்களிலும் எலியட் அவர் கட்டுரைகளில் வலியுறுத்திய “சமயம் சார்ந்த புரிந்துணர்வு” வெளிப்படவில்லை. ஹாலோ மென் காலகட்டத்திலிருந்து எலியட்டின் கவிதை அவ்வுணர்வை இறைமையால் வழிநடத்தப்படும் ஒழுங்குடனும், நிரந்தர நட்சத்திரத்துடனும், பல்லிலைகளைக் கொண்ட (மல்டிஃபோலியேட்) ரோசுடனும் இணைக்க முயலும். அதாவது, கவிதை என்பது நிதர்சனத்தைக் காட்டிலும் மேலானதொரு மெய்மையை அடைவதற்கான ஒரு உத்தி என்பதுபோல்.
நம் பக்திக் கவிஞர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதைச் செய்து பார்த்திருக்கிறார்கள் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். அவர்களுக்கு முன் வந்த காதல் கவிதை மரபை முழுவதையுமே குறியீடாகப் பயன்படுத்தி அதைக்கொண்டு பக்தியெனும் உயர்வான உணர்வொழுங்கை அவர்கள் சுட்டினார்கள். எனவேதான்,
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை-
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாராஅளவை, நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே
என்ற குறுந்தொகையின் 66-வது பாடல்
மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி பொரு கடல் சூழ்
தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்
கலந்தார் வரவு எதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவேஎன்ற திருவிருத்தத்தின் 68-வது பாடலாக உருமாறுகிறது.
ஆனால் Hollow Men இப்புதிய உணர்வொழுங்கின் விதைகளை விதைக்க மட்டுமே செய்கிறது. எலியட்டின் பிற்காலக் கவிதைகளே அவ்விதைகளிலிருந்து உயிர்த்தெழும் பயிரை அறுவடை செய்யும். அதற்குத் தேவையான முழுமையான கவிதையொழுங்கு இன்னும் உருவாக்கப்படவில்லை. எனவேதான் அப்பிரார்த்தனையின் உடைசல் உணர்வு, எனவேதான் அப்பிரார்த்தனை கம்பீரமாக முழங்கப்படாமல் சன்னமாகத் தேம்பப்படுகிறது:
For Thine is
Life is
For thine is the
This is the way the way the world ends
This is the way the way the world ends
This is the way the way the world ends
Not with a bang but a whimper.
***

2. ஆஷ்-வெட்னெஸ்டே
தனது பாழ்நிலத்தின் வெறுமையிலிருந்துத் தப்பி வெளியே வருவதற்கான ஓர் வழியாக “religious comprehension” எனும் இம்மதம் சார்ந்த புரிதலுக்குத் “திரும்புவதை” தன் அடுத்த பெருங்கவிதையான திருநீற்றுப் புதனில் எலியட் முயன்று பார்த்தார். ஆகமத்தின் பழைய ஏற்பாடு, கத்தோலிக்கப் பொது வழிபாட்டுமுறை மற்றும் கிறிஸ்தவக் கவிதைப் பாரம்பரியம் (குறிப்பாக எலியட் “கத்தோலிக்க விரக்தியின் தத்துவம்” என்று வரையறுத்த) டான்டேயின் வீட்டா நுவாவா – Vita Nuova இவற்றுடன் பின்புலமற்ற தனிப்பட்ட அனுபவங்களும், கிறித்துவ இறையியலும் இணைக்கப்படுவதால் கவிதை குறிப்பிடும் வகையில் கடினமாக உள்ளது.
கவிதை எப்போதும் மாறியபடியே, அதன் துருவங்ளை நெருங்கியும் விலகியும், அதாவது புலனினின்பம் அல்லது அதன் துறத்தலின் வழியே கடவுளின் சித்தத்தை ஏற்றுக்கொள்தல், விழைவு அல்லது நம்பிக்கை என்ற துருவங்களுக்கிடையே ஊசலாடியபடி அதன் உரைப்போனை ஒரு விதமான இறுக்கத்தில் வைத்திருக்கிற்து. ஆரம்ப வரிகள் turn என்ற கவிதையிலும் வாழ்க்கையிலும் திருப்பத்தைக் குறிக்கும் சொல்லுடன் தொடங்குவது க்வீடோ காவல்காண்டியின் பலாட்டா கவிதையின் பிரசித்தி பெற்ற ஆரம்ப வரிகளை நினைவுறுத்துகிறது. “Because I hope not ever to return” என்று தொடங்கும் அவ்வரிகளில் அன்பிற்குரியவளை எப்போதும் போற்றுவதாக அவளுக்கு உறுதிமொழி அளிக்கும் வழியில் க்வீடோ தன் ஆன்மாவைக் கவிதையில் தூதுவராக அனுப்புகிறார். ஆஷ்-வெட்னெஸ்டே கவிதையின் பிந்தைய பகுதிகளின் தலைப்புகள்: Salutation, Som De L’Escalina (படிக்கட்டின் உச்சத்தில்), Vestita di Color di Fiamma (சுடர் நிறத்தில் ஆடையணிந்து…) க்வீடோவைப் போன்ற முன்னோடிகளுக்குக் கவிதை கடன்பட்டிருப்பதை வெளிப்படையாகவே சுட்டுகின்றன.
கடவுளின் பக்கம் “திரும்புவதற்காக” பியட்ரிஸ் குறித்த தன் காதலை ஆதர்சப்படுத்தி பூமியில் அக்காதலின் வெற்றிக்கான நம்பிக்கையைத் துறக்கும் டான்டேவைப் போல் அல்லாது க்வீடோவிற்குக் கடப்பிற்கான ஆழ்நிலை அபிலாஷைகளேதும் இல்லாததால் அவரது காதல் உலகில் உறுதியாக வேரூன்றி நிற்கிறது. தொடக்க வரிகள் லான்சலாட் ஆண்ட்ரூஸ் பதினேழாம் நூற்றாண்டில் பிரசங்கித்த புகழ்பெற்ற ஆஷ்-வெட்னஸ்டே பிரசங்கத்தையும் மறைமுகமாகச் சுட்டுகின்றன. பருவங்களை நன்கறிந்த உயிரினங்களெல்லாம (மனிதன் விதிவிலக்கு) தக்க பருவத்தில் திரும்பி வருவதைப் போல் “அனைத்துமே இப்போது “திரும்புவதால்” நாமும் இத்தருணத்தை கடவுளிடம் திரும்புவதற்காகப் பயன்படுத்துவோம்” என்று அப்பிரசங்கம் அறிவுறுத்துகிறது. “திருப்பம்” என்பதின் அனைத்து சூட்சும அர்த்தங்களைச் சார்ந்தே கவிதை கட்டமைக்கப்படிருக்கிறது. இச்சூட்சும உத்தி பல்பொருட்தன்மையின் தெளிவின்மையையும் தயக்கத்தையும் உடனழைத்து வருகிறது, அடுத்த வரி முதல் வரியின் ஸ்திரமான இயாம்பிக் பெண்டாமீட்டரில் நிலைத்து நிற்கத் தயங்குவது போல்…
Because I do not hope to turn again
Because I do not hope
Because I do not hope to turn
திட்டமிட்டே எதிர்மறைகளைக் குவித்து கவிதை முன்னேறுகிறது – do not hope, no longer strive, why should I mourn இத்யாதி. மரம், பூ, வசந்தம் போன்றவற்றைக் கொண்டு வசீகரித்து தன் வழக்கமான இராஜ்ஜியத்தின் வலிமையை நிலைநாட்டும் (the power of the usual reign) ஹயாசிந்த் தோட்டத்துக்குத் திரும்ப விழையும் நினைவின் ஆசைகாட்டல்களிலிருந்து மனதை விருப்புறுதியுடன் “திருப்புவதற்காகவே” இவை பயன்படுகின்றன. பாழ்நிலத்தின் இறுதியில் “காதலில் மரித்துக் கொண்டிருக்கும்” கவிஞர் அக்காதலைச் சுத்திகரிக்கும் கடப்புச் சடங்காக ஏற்கனவே உருமாற்றிவிட்டார். தற்காலிக ஆட்சி செலுத்தவல்ல (the one veritable transitory power) பூமிக்குரிய அன்பு அவருக்கானதல்ல என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். தற்காலிகமானது, ஏனெனில் அது ஒரு குறிப்பிட்ட நேரத்துடனும் ஒரு குறிப்பிட்ட இடத்துடனும் பிணைக்கப்பட்டு, புவியியல் கட்டுப்பாடுகளை மீற முடியாது, எல்லா காலத்திற்கும் எல்லா இடங்களுக்கும் உண்மையாக இருக்க முடியாததால், நித்தியமாக இல்லாததால். உலகிற்குரிய அன்பின் மேன்மைபடுத்தப்பட்ட (ஆனால் இன்னமும் உலகத்தில் வேறூன்றி நிற்கும்) வடிவத்தில் க்வீடோவைப் போல் அவரால் தொடர்ந்து தகித்திருக்க முடியாது. எனவேதான் பாலைவனமாகிவிட்ட ஹையாசிந்த் தோட்டத்திலிருந்து அதைக்காட்டிலும் ஆன்மீகமான மேய்ச்சல் நிலங்களுக்கு “திரும்பும்” நிர்பந்தம். ஆனால் இது அவருக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கிறது:
I rejoice that things are as they are and
I renounce the blessed face
And renounce the voice
Because I cannot hope to turn again
Consequently I rejoice, having to construct something
Upon which to rejoice
ஆனால் நம்பிக்கை கொள்வது ஒரு விஷயம், அந்நம்பிக்கையில் நிலைத்து அதை வெற்றிபெறச் செய்வதென்னவோ முற்றிலும் வேறு விஷயமாக இருக்கிறது. புதிய நம்பிக்கை இறக்கைகளுக்கு அடியே உயர்தலுக்குத் தேவையான காற்றோட்டம் இல்லை என்பதையும் அவர் உணர்கிறார்:
Because these wings are no longer wings to fly
But merely vans to beat the air
பழையதைத் துறந்து, புதியதில் நிலைகொள்ள முடியாது, ” என் இரு விருப்புறுதிகள், ஒன்று புதியது மற்றொன்று பழையது, ஒன்று சரீரமானது மற்றொன்று ஆன்மீகமானது, இரண்டும் என்னுள் போராடுகின்றன; அவற்றின் பிணக்கில் என் ஆன்மா அழிகிறது” என்று தன் ஒப்புதல் வாக்குமூலங்களில் புலம்பிய புனித அகஸ்டீனின் கையறுநிலையில் அவர் இருக்கிறார். இருதலைக் கொள்ளி எறும்பின் பதற்றத்துடன், முதல் பகுதி அமெரிக்கக் கால்பந்து மொழியில் கூறுவதானால், கடவுள் விட்ட வழி என்று ஏறியப்படும் பந்துபோல் அசலான Hail Mary ஒன்றில் முடிவடைகிறது:
Pray for us sinners now and at the hour of our death
Pray for us now and at the hour of our death.
கவிதையின் இரண்டாம் பகுதி Lady என்று விளிக்கப்படும் பிராட்டியுடன் தொடங்குகிறது. அவள் “கன்னி மேரிக்கு தியானத்தில் வந்தனம் செய்பவள்” “மௌனம் காக்கும் பிராட்டி” என்று பிந்தைய வரிகள் அறிவிக்கும். வெள்ளைச் சிறுத்தைகள் டான்டேயின் சிறுத்தைக் குறியீட்டின் தலைகீழ் படிமம். டான்டேயில் அவை நாம் சற்று முன் கவிதையில் எதிர்கொண்ட சிற்றின்பத்தின் “வழக்கமான ஆட்சியாக” அடையாளம் செய்யப்பட்டால், இங்கு அவை டான்டே அச்சிற்றின்பம் குடிகொண்டிருக்கும் உறுப்புகள் என்று நம்பிய, கால்கள், நெஞ்சு, கல்லீரல் மற்றும் கபாலத்திலிருந்து அச்சிற்றின்பத்திற்கான விழைவை அழித்தொழிப்பதற்காகச் செயல்படுகின்றன. ஆனால், எலும்பிலிருந்து சதை அகற்றப்பட்டாலும் முதற்பகுதியின் சந்தேகங்கள் தொடர்கின்றன; மஜ்ஜையின் வேதனை, எலும்புக்கூட்டின் குளிர்வலிப்பு, எலும்பின் காய்ச்சல் இவை எல்லாம் உண்மையில் போக்கக்கூடியவையா அல்லது அவை நிலைக்குமா? சிற்றின்பத்தின் உந்துதல்களில்லாது எலும்பால் வாழமுடியுமா? போன்ற சந்தேகங்கள். எலும்புகளின் பள்ளத்தாக்கில் எசெக்கியலின் பயணம், இஸ்ரேலின் புத்துயிர்ப்பிற்கான முன்னறிவிப்பு போன்ற விவிலியச் சுட்டுதல்களும் இங்கு உட்கிடையாக அமைந்திருக்கிறதென்பது வெளிப்படை. எனவேதான் “to construct something Upon which to rejoice” என்ற முதல் பகுதியின் நம்பிக்கையைச் செயல்படுத்துவதற்காகப் புலனின்பத்தின் கடும் துறப்பைக் கவிதை ஒரு பாதையாகத் தேர்வுசெய்கிறது:
……………..And I who am here dissembled
Proffer my deeds to oblivion, and my love
To the posterity of the desert and the fruit of the gourd.
It is this which recovers
My guts the strings of my eyes and the indigestible portions
Which the leopards reject.
கவிதையின் இயக்கம் ஆசீர்வதிக்கப்பட்ட முகத்திலிருந்து (blessed face) இடைத்தரகர் பெண்மணிக்கும் (Lady) அவரிடமிருந்து கன்னிக்கும் (Virgin) நகரும் விருப்புறுதியின் முயற்சியைச் சுட்டுவதாக உள்ளது. இது நன்மையிலிருந்து சௌந்தர்யத்திற்கும் அதிலிருந்து பிரகாசத்திற்கும் உயரும் சாய்மானத்தில் நுட்பமாகப் பிரதிபலிக்கப்படுகிறது. ஆனால் அவ்வுயர்வின் சாய்வு விகிதம் கடினமாகவே இருக்கிறது ஏனெனில் பிரசங்கம் கூறுவது போல், “விழைவு தோல்வியுறுகையில் வெட்டுக்கிளிகூட ஒரு பாரமாக” இருக்கிறது. எனவேதான் அம்முரண்படும் பக்க அணிமைகள் (calm-distressed, torn-whole இத்யாதி) முடிக்க முடியாததை முடிக்க முனையும் முயற்சிகள், “அனைத்துக் காதலுமே முடிவுறும்” பாலைவனத்தில் “பேச்சற்ற சொல் அவதரிக்கும்” தோட்டத்தை மீட்பதற்கான விழைவுகள்…
The single Rose
Is now the Garden
Where all loves end
Terminate torment
Of love unsatisfied
The greater torment
Of love satisfied
Ash-Wednesday இன் அச்சிடப்பட்ட பதிப்புகளில் ஒன்று அவரது மனைவி விவியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பதை நினைவுகூர்கையில் இரண்டாம் பகுதியின் கடைசி சரண வரியின் வேதனையைக் கூர்மையாக உணர்கிறோம்: “We are glad to be scattered, we did little good to each other,”. ஆனால் பாலைவனமும் ஓர் மரபுப் பெறுகையே என்று விருப்புறுதி கற்பிதம் செய்துகொள்கிறது. எலியட் மிகவுமே மெச்சிய, ஆஷ்-வெட்னஸ்டே கவிதையைப் பெரிதும் பாதித்த, செயிண்ட் ஜான் ஆஃப் த க்ராஸின் வார்த்தைகளில் சொல்வதானால் அது “அதன் மறைமை, பரந்தமை மற்றும் தனிமையைப் பொருட்டு மகிழ்வூட்டுவதாகவும், இனிமையாகவும், உற்சாகமளிப்பதாகவும் இருக்கிறது.”
கவிதையின் மூன்றாம் பகுதி தெய்வீக ஆதர்சத்திற்குத் “திரும்புவதில்” இருக்கும் சிரமத்தைக் குறித்த சோர்வளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமே. படிக்கட்டுகள் கிறிஸ்தவ மறைஞானத்தின் ஆன்மீக ஏற்றத்தைக் குறிக்கலாம். புதிய ஆன்மீக நிலையில் இன்னமும் விடாப்பிடியாக நிலைக்கும் பழையதின் நினைவு இப்போது வலிந்து முன்வைக்கப்படும் எதிர்மறைப் படிமங்களால் கொடூரமாக்கப்படுகிறது:
Damp, jaggèd, like an old man’s mouth drivelling, beyond
repair,
Or the toothed gullet of an aged shark
என்பது கவிதையில் நாம் இதுவரையில் லயித்த இசைத்தன்மையுடன் சற்றும் ஒவ்வாமல் நாராசமாக ஒலிக்கிறது. வலிந்து முன்வைக்கப்படும் பாலியல் சுட்டுதல்களுக்கும் அதே கதிதான் (slotted window bellied like the figs’s fruit, antique flute …), ஆனால் கடந்த காலத்தைப் பயனற்றதாகக் காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் மீறி அக்கடந்த காலம் அற்புதமான இரண்டு வரிகளில் உணர்ந்த அனுபவத்தின் உடனடித்தன்மையுடன் மிளிர்கிறது:
Blown hair is sweet, brown hair over the mouth blown,
Lilac and brown hair;
இது வெறும் கவனச்சிதறல் என்று உடனடியாக நிராகரிக்கப்பட்டாலும், துறக்கும் நெஞ்சத்தை இன்னமும் தூண்டுவதற்கான வலிமை அதனிடம் இருக்கிறது. எனவேதான் ஒப்புதல் வாக்குமூலம் போன்றதோர் முடிவு:
Lord, I am not worthy
Lord, I am not worthy
but speak the word only.
ஆஷ்-வெட்னஸ்டேயின் நான்காம் பகுதி வேஸ்ட் லாண்டின் Who is the third who walks always beside you? பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால் அதன் இசை இப்போது சுத்திகரிக்கப்பட்டு ஓர் தெய்வீகமான பாசுரத்தைப் போல் ஒலிக்கிறது. கீழுலகிலிருந்து மேலுலகுக்கு உயரும் இவ்வூசலாடலில் வார்த்தைகள் மீளுரைக்கப்படுகின்றன. ஆங்கிலக் கவிதை உச்சங்களில் ஒன்று இங்கு நமக்களிப்படுகிறது, அவ்வுச்சத்தில் எலியட்டின் தலைசிறந்த விளக்கவுரையாளரான டேவிட் மூடியின் வார்த்தைகளில் கூறுவதானால் “அசலான அனுபவம் குறியீடாக அளிக்கப்பட்ட பின்னர், விழையப்படும் ஆதர்ச உலகை உருவாக்கும் பொருட்டு அக்குறியீட்டின் சுட்டுதல்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.”
Who walked between the violet and the violet
Who walked between
The various ranks of varied green
Going in white and blue, in Mary’s colour,
Talking of trivial things
In ignorance and knowledge of eternal dolour
Who moved among the others as they walked,
Who then made strong the fountains and made fresh the springs
Sovegna Vos என்று முடியும் அச்சரணம் நம்மை ப்ரூஃப்ராக்கிற்கும் அது மேற்கோள் காட்டும் டான்டேயின் ஆர்நாட் டானியலிற்கும் அழைத்துச் சென்று ஃபிடில்கள், குழல்கள் போன்ற பழைய புலனின்பத் தூண்டுதல்களின் கழிதலையும் மடிந்த ஒலியாலான தரிசனத்தில் புதியதின் தோற்றத்தையும் “ஆழ்ந்து கவனிக்கும்படி” வாசகர்களை அறிவுறுத்துகிறது. பர்கேடோரியோவில் பியட்ரிஸ் குறித்த, எலியட் மிகவுமே மெச்சிய, டான்டேயின் தரிசனமே இங்கு வேறு வார்த்தைகளில் மீட்கப்படுகிறது, “அதை முற்றிலும் உள்வாங்கி, பெரிதாக்கி மேலும் அர்த்தமூட்டும் புதிய உணர்விலும், புதிய சூழலிலும் மீட்கப்படும் பழைய வேட்கையின் புத்துயிர்ப்பு.” நம் பக்திக் கவிகள் செய்தது போல் பழைய தாளத்தைப் புதிய பாடலில் மீட்டெடுப்பது:
One who moves in the time between sleep and waking, wearing
White light folded, sheathing about her, folded.
The new years walk, restoring
Through a bright cloud of tears, the years, restoring
With a new verse the ancient rhyme. Redeem
The time…
ஆனால் கவிதையால் தரிசனத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஒளிரும் வெள்ளொளி இப்போது மீண்டும் “மௌனச் சகோதரியாக” மங்கிவிடுகிறது. நாம் மீண்டும் குழல்கள் வகையறா நிரம்பியிருக்கும் தோட்டத்தின் புலனின்பச் சுட்டுதல்களில் இருத்தப்படுகிறோம். மீட்சி விழையப்பட்டாலும் கவிதை உரைப்போனின் மூச்சறுதலையும் பின்னுலகில் அவனது இரட்சிப்பையும் தீர்மானிக்கும் கடவுளின் சுவாசத்தால்தான் அது சாத்தியப்படுகிறது; யூ மரத்தின் (Yew tree) மரணம், மறுபிறப்புச் சுட்டுதல்கள் இதைத் தான் வலியுறுத்துகின்றன. அதுவரையில் அப்பேரானந்தத்திலிருந்து “நாடுகடத்தப்பட்டிருக்கும்” உரைப்போன் கீழே அவன் சரீர வாழ்வைத் தொடர்ந்தாக வேண்டும். எனவேதான் அந்நாடுகடத்தலிற்குப் பின் “திருவயிற்றின் கனியை” உறுதியளிக்கும் ரோமன் கத்தோலிக்கக் கிருபை தயாபத்து ஜெபத்துடன் (Salve Regina) இப்பகுதி முடிகிறது:
The token of the word unheard, unspoken
Till the wind shake a thousand whispers from the yew
And after this our exile.
உரைக்கப்படாத வார்த்தையின் மௌனம் எவ்வாறு பேசி மாளாத உலகின் அமளியில் மூழ்கடிக்கப்படுகிறது என்பதையும் உலகின் சுழலும் சத்தத்திற்கு எதிராக கடவுளின் வார்த்தையை நிறுவுவதுமே ஐந்தாம் பாகத்தின் சாராம்சம்.
Where shall the word be found, where will the word
Resound? Not here, there is not enough silence
Not on the sea or on the islands, not
On the mainland, in the desert or the rain land,
For those who walk in darkness
Both in the day time and in the night time
The right time and the right place are not here
காலத்தில் சிக்குண்டிருக்கும் சரீர உலகத்தை மட்டம் தட்டுவதுபோல் கிறிஸ்தவ திருப்பலியில் கிறிஸ்து தன் மக்களைக் கண்டிக்கும் வார்த்தைகள் ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் அளிக்கப்படுகின்றன: O my people, what have I done unto thee? சந்தேகத்தின் நிலைப்பும், கடவுளில் உய்க்கும் மீட்சியை அருளும் தவத்தை முழுமையாகவும் நிபந்தனைகளின்றியும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும், தோட்டத்தில் பாலைவனத்தைக் கண்டடைவதும்,. எப்போதுமே பாலைவனத்தில் தோட்டத்திற்காக ஏங்குவதுமே இங்கு கண்டிக்கப்படுகின்றன:
… terrified and cannot surrender
And affirm before the world and deny between the rocks
பாழ் நிலம் என்பது நவீன உலகம் மட்டுமல்ல. எலியட்டைப் பொறுத்தவரையில் ஆதிபாவத்தை (ஆப்பிள்-விதை) மறுப்பதால் மீட்சிக்கான சாத்தியங்களை இழந்திருக்கும் தற்காலிகமான சரீர உலகம் முழுவதுமே மீட்கமுடியாத அளவுக்குப் பழிக்கப்பட்டிருக்கிறது. கவிஞன் அவன் தரிசனத்துடன் மீண்டும் இணைய இயற்கையில் அவன் வாழ்க்கை முடிந்தாக வேண்டும், மரணத்தின் கரைகளை (கடைசி பாலைவனம்) அவன் கடந்தாக வேண்டும்.
In the last desert before the last blue rocks
The desert in the garden the garden in the desert
Of drouth, spitting from the mouth the withered apple-seed.
O my people.
ஆஷ்-வெட்னஸ்டேயின் இறுதிப் பகுதி அதன் தொடக்கத்துடன் இணையும் வகையில் அத்தொடக்கத்தின் மூன்று because களை மூன்று Although களாக உருமாற்றுகிறது, சிற்றினபத்துக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஊசலாடும் விருப்புறுதியின் அலைவு திரிவுகளையும் மீறி கடவுளின் கிருபையால் அதன் இலக்கை அதனால் இன்னமும் எட்ட முடியும் என்பதுபோல்… ஆனால் புலன்களில் சாளரங்கள் நினைவின் சிறகுகளில் நம்மை சிற்றின்பச் சாகரத்துக்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றன. அக்கடலின் கிரானைட் கரைகளில் உயர விழையும் சிறகுகள் சிதைக்கப்படுகின்றன. ஆயினும் (although?) சிதைக்கப்படாத சிறகுகள் இறையருளால் (Bless me Father) சாத்தியப்படலாம்.
Bless me father) though I do not wish to wish these things
From the wide window towards the granite shore
The white sails still fly seaward, seaward flying
Unbroken wings
புலனின்ப நினைவின் உயர்ந்தெழும் இசை எவ்வளவு நெகிழ்வூட்டுவதாக இருக்கிறதென்றால், இழந்தவை மனதில் நிஜமாக்கப்படும் அளவிற்கும் – இழந்த இளஞ்சிவப்பு, இழந்த கடற் குரல்கள், இழந்த கடல் மணம் இவையெல்லாம் இசையின் உச்சத்தில் ஒத்திசைந்து காடையின் கரைதலையும் ஆள்காட்டி குருவியின் சுழற்சியையும் மீட்டெடுக்கின்றன. ஆனால் தயங்கும் விருப்புறுதி இசையை ஒரு விதமான dying fall- லுடன் நிறைவு செய்ய வரும்புவதால் அவற்றை “வெற்று உருவங்களாக” மட்டுப்படுத்துகிறது:
And the lost heart stiffens and rejoices
In the lost lilac and the lost sea voices
And the weak spirit quickens to rebel
For the bent golden-rod and the lost sea smell
Quickens to recover
The cry of quail and the whirling plover
And the blind eye creates
The empty forms between the ivory gates
“இருந்தவை”, “இருக்கக்கூடியவை” “இருக்க வேண்டியவை” குறித்த தரிசனங்கள் ஒன்றையொன்று குறுக்குவெட்டிக் கொள்கின்றன (where three dreams cross / Between blue rocks). இயற்கையின் யூ மரங்களிலிருந்து உலுக்கப்பட்ட குரல்களுக்கு மரணத்தின் யூ மரங்கள் பதிலளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஆனால் பற்றின்மையும் அமைதிகாணா உலகில் ஓர் அசைவிலா அமைதியான மையமுமே இங்கு நாடப்படுகின்றன. இதைத் தவத்தின் கடும் துறவறத்தால் மட்டுமே அடைய முடியும் என்பதைக் கவிதை உணர்ந்து கொள்கிறது. விழையும் விருப்புறுதி சரணடந்து கவிதை பிரார்த்தனையாக வேண்டும், கிட்டத்தட்ட ஒரு பாசுரமாக. வேண்டுகோளின் விடுத்தலுக்கும் அதன் செவித்தலுக்கும் இடையே விரியும் இடைவெளியைக் கவிதைப் பத்திகளின் இடைவெளியைக் கொண்டு உருவரீதியாக நமக்கு உணர்த்துகிறது. தவத்தின் தீவிரத்தைக் கொண்டே அவ்விடைவெளி கடக்கப்படவேண்டும்.
Teach us to sit still
Even among these rocks,
Our peace in His will
And even among these rocks
Sister, mother
And spirit of the river, spirit of the sea,
Suffer me not to be separatedAnd let my cry come unto Thee.
ஆஷ்-வெட்னெஸ்டே ஒரு குறிப்பிட்ட ஆன்மா அதன் நம்பிகை உலகின் வரம்பிற்குள் போராடித் தத்தளிப்பதை விவரிக்கும் நெகிழ்வூட்டும் ஆவணமாகும். புலன்களின் தாழ்ந்த கனவிற்கும் நம்பிக்கையின் உயர்ந்த கனவிற்கும் இடையே ஊசலாடும் அந்த ஆன்மாவின் முடிவிலா அலைக்கழிப்பைப் பதிவு செய்வதில் அது வெளிப்படுத்தும் கொடூரமான நேர்மையே அதன் அற்புதமான இசைக்கு ஜெபத்தின் மோனநிலையை அளிக்கிறது. ஆங்கிலக் கவிதையைக் குறித்த 2072 கவிதை வரிகளில் எழுதப்பட்ட அவரது Essay on Rime கட்டுரையில் கார்ல் ஷபீரோவின் மதிப்பீட்டுடன் நாமும் உடன்படுகிறோம்:
When it appears, the study of music
of Ash-Wednesday should compel the minds of all
Poets: for in a hundred years no poem
Has sung itself so exquisitely well.
————–
நம்பி கிருஷ்ணன், September 2022.
மூலநூல்கள் / மேலும் படிக்க:
- Eliot, T.S, Collected Poems 1909-1962, Harcourt Brace, 1991
- Eliot, T.S, Selected Prose of T.S. Eliot, Harcourt Brace, 1975
- Moody, A. David, Thomas Stearns Eliot poet, Cambridge, 1979
- Jain, Manju, A Critical Reading of the Selected Poems of T.S. Eliot, Oxford India, 1991
- Smith Grover, TS Eliot’s Poetry & Plays, University of Chicago Press, 1971
- Spender, Stephen, T.S. Eliot, Penguin, 1975
இத் தொடரின் நான்கு கட்டுரைகளும் மேதைமையில் மிளிர்பவை. உள் வாங்கிக் கொள்ள திருப்பித் திருப்பி வாசிக்கப்பட வேண்டியவை. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். நன்றி.