- வாக்குமூலம் – அத்தியாயம் 1
- வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்
- வாக்குமூலம் – அத்தியாயம் 3
- வாக்குமூலம் – அத்தியாயம் 4
- வாக்குமூலம் – அத்தியாயம் 5
- வாக்குமூலம் – அத்தியாயம் 6
- வாக்குமூலம் – அத்தியாயம் 7
- வாக்குமூலம் – அத்தியாயம் 8
- வாக்குமூலம் – அத்தியாயம் 9
- வாக்குமூலம் – அத்தியாயம் 10
- வாக்குமூலம் – அத்தியாயம் 11
- வாக்குமூலம் – 12
- வாக்குமூலம் – அத்தியாயம் – 13
- வாக்குமூலம் – அத்தியாயம் 14
- வாக்குமூலம் – அத்தியாயம் 15
- இறுதி வாக்குமூலம்
அவன்
கண்ணதாசன் பத்திரிகை அலுவலகம் பிரான்சிஸ் ஜோசப் தெருவில் இருந்தது. அதை முதல் போட்டு நடத்தியவர் ராமச்சந்திர ரெட்டியார். கண்ணதாசன் தவிர பிலிமாலயா என்ற சினிமா பத்திரிகையும், ஒரு தெலுங்கு சினிமா பத்திரிகை உள்பட சிறுவர் பத்திரிகை ஒன்றையும் ரெட்டியார் நடத்தி வந்தார். கண்ணதாசன் ஏற்கெனவே ஒரு முறை, சில வருடங்களுக்கு முன் மகாலிங்கபுரம் லேடி மாதவன் நாயர் தெருவிலிருந்து வெளிவந்து நின்றிருந்தது. இப்போது ரெண்டாவது தடவையாக அது வெளிவந்தது. ராமச்சந்திர ரெட்டியார் ஒரு பழைய அம்பாஸிடர் கார் வைத்திருந்தார். அந்தக் குறுகலான தெருவில் அதை கம்பீரமாக ஓட்டி வருவார்.
1973 ஜூனில் சென்னை வந்த எனக்கு தி.க.சி., கந்தர்வன் மூலம் கண்ணதாசனில் 150 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. திருநெல்வேலியில் ஆரம்பித்த இலக்கிய, சினிமா மயக்கம் விடவில்லை. கண்ணதாசனும் இலக்கிய (கலையும் உண்டு) பத்திரிகையாக இருந்தது என் சிறகுகளை அடித்துப் பறக்க உதவியது. மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ. பில்டிங்கில் கூட்டம் போட வேண்டுமானால் 25 ரூபாய் இருந்தால் போதும். கூட்ட அறையின் வாடகை 25 ரூபாய்தான். மூன்று அறைகள் வாடகைக்கு இருந்தன. அனேகமாக சனி, ஞாயிறுகளில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். ஞானக்கூத்தன் எல்லா கூட்டங்களுக்கும் வந்துவிடுவார். தி.க.சி.யும் தவறாமல் வந்துவிடுவார்கள்.

பிரக்ஞை பத்திரிகை தி.நகரிலிருந்து வந்தது. அம்பை, ரவிசங்கர், வீராச்சாமி என்ற ரங்கராஜன், பாரவி எல்லாம் ரவிசங்கரின் மகாலெட்சுமி தெரு வீட்டுக்கு வருவார்கள். அதுதான் பிரக்ஞை ஆபீஸாக இருந்தது. ரெண்டு தெரு தள்ளி தாமோதர ரெட்டி தெருவில் அசோகமித்திரன் இருந்தார். கிருஷ்ணவேணி தியேட்டரை ஒட்டியிருந்த இந்தியா காபி ஹவுஸில் பிரம்பு கூடை நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். ஆளுக்கு ஒரு காபியை வாங்கிக் குடித்துவிட்டு மணிக்கணக்கில் கதையடித்துக் கொண்டிருப்போம். அசோகமித்திரன், வீட்டில், மேலே சட்டையில்லாமல் வெறும் வேட்டியுடன் இருப்பார். அவர் வீட்டு வராந்தாவிலும் பேசிக் கொண்டிருப்போம். ரவி, ராமகிருஷ்ணன், முத்துக்குமார் எல்லாம் பள்ளிக்கூடம் போகிறவர்களாக இருந்தார்கள்.
பிரக்ஞை ஆபீஸில் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவோம். Blaze என்ற அட்வர்டைஸிங் கம்பெனி எடுத்த ஒன்றிரண்டு ஹிந்திப் படங்களை ஷியாம் பெனகல் இயக்கினார். அவருடைய ஆங்கூர், நிஸாந்த்தை எல்லாம் பார்த்துவிட்டு மதிமயங்கிக் கிடந்தோம். எஸ்.வி. ராஜதுரை எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். அது வேறு மூளையில் போதையை ஏற்றியிருந்தது.
ஏற்கெனவே தி.க.சி.யுடன் சோவியத் கல்சுரல் சென்டரில் ரஷ்யத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அடூர் கோபாலகிருஷ்ணனின் சுயம்வரத்தை ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் சோவியத் கல்சுரல் சென்டரில்தான் பார்த்தேன். அமெரிக்கன் எம்பஸி, அலியான்ஸ் பிரான்ஸிஸ் என்று எம்பஸிக்களில் சினிமாக்களைப் பார்த்தேன். சீட்டு ஆடுவது, கிரிக்கெட் ஆடுவது, பாட்டுக் கேட்பது, நாடகம் பார்ப்பது மாதிரி இலக்கியம் படிப்பதும், உலக சினிமாக்களைப் பார்ப்பதும் ஒரு போதைதான். சீட்டு ஆடுகிறவன், குடிக்கிறவன் திரும்பத் திரும்ப அதையே செய்கிறான். வாழ்க்கையே திரும்பச் செய்வதுதான். உணர்ச்சிகரமாக இருக்க சிறுகதை, நாவல் படிப்பதும், சினிமா பார்ப்பதும் உதவின. 150 ரூபாய் சம்பளத்தில் சாப்பிட்டு, உடைகளுக்குச் செலவிட்டு, தி.க.சி. வீட்டில் அல்லது யாராவது நண்பனில் அறையில் தங்கிக்கொண்டு உணர்ச்சிகரமாகவும் இருந்தேன். புஸ்தகம், சினிமா என்ற போதையில் ஆழ்ந்து கிடந்தேன். என்னைப் போலத்தான் சிறு பத்திரிகை உலக நண்பர்களும் இவற்றிலேயே மூழ்கித் திளைத்தனர். இதுவே உலகம் என்றிருந்தோம்.
கோவை ஈஸ்வரன் ‘மனிதன்’ என்ற சிகப்பு புரட்சிகரப் பத்திரிகையை நடத்தினார். வேணுகோபால் சிவந்த சிந்தனையை நடத்தினார். தெ. சண்முகம் உதயம், பிரச்னை போன்ற பத்திரிகைகளை நடத்தினார். இவை எல்லாம் மார்க்ஸிய நம்பிக்கை கொண்ட பத்திரிகைகள். 1970, 1980களில் நிறைய இடதுசாரிப் பத்திரிகைகள் வந்தன. நிறைய இளைஞர்கள் மார்க்ஸியம் படித்தனர். நானும் படித்தேன். இந்த 2022-ல் இவை எல்லாம் காணாமல் போய்விட்டன. உலகத்துல என்னென்னவோ பேசுறாங்க, எழுதுறாங்க. கடவுள் உண்டு, இல்லைன்னு கட்சி கட்டிப் பேசுறாங்க. கடவுளை நம்பறவங்கதான் அதிகமா இருக்கிறாங்க. தமிழ்நாட்டிலே பெரியார் கடவுள் மறுப்பு பிரசாரம் செய்தார். ஆனா இப்போ எல்லா கோவில்கள்லேயும் நல்ல நாள், விசேஷ நாளுன்னா ஒரே கூட்டமா இருக்கு. பெரியார் சொன்னது எல்லார் கிட்டேயும் பரவலையா, இல்லை அவர் சொன்னதை யாரும் சட்டை பண்ணலயா? முறையிட ஒரு இடம், ஒரு ஆள் தேவைப்படுது. சாப்பிடுதது, தூங்குதது மாதிரி கடவுளும் அத்தியாவசியத் தேவை. சாதாரண ஜனங்கள் எதையும் அலசி ஆராஞ்சு பார்க்கிறதில்லை. மனசுக்குத் தோணியதைப் பேசுறாங்க, செய்றாங்க. ரொம்ப ஏன், எதுக்குன்னு மண்டைய ஒடைச்சுக்கிறது இல்ல. பொழப்புக்கு ஏதோ ஒரு வேலை. குடும்பம், வம்ச விருத்தி, முதுமை, மரணம்ன்னு சர்வசாதாரணமா முடிஞ்சு போயிடறாங்க. சாதாரண வாழ்வு வாழ்ந்தோம்ன்னு கூட அவங்க நெனைக்கிறது இல்லை. அசாதாரணமா தோற்றம் தருகிற அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், ஆன்மீகப் பிரமுகர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவங்க பின்னாலே காலங்காலமா போய்க்கிட்டே இருக்காங்க. சோழ ராஜா, பாண்டிய ராஜாக்கள், தேவாரம் பாடி ஊர் ஊராப் போன நாயன்மார்கள், சமீபத்திலே காந்தி, நேரு, திலகர், பட்டேல், காமராஜ், ராஜாஜி, அண்ணாதுரை, கருணாநிதி, ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சாய்பாபா, ரமணர்ன்னு யாரையாவது அரசியல், ஆன்மீகவாதிகளைச் சுத்திக் கூட்டம் கூடுது. இதெல்லாம் சாப்பாடு, தூக்கம் மாதிரி மனுஷனுக்குத் தேவையா இருக்கு.
வீடு மாதிரி, பள்ளிக்கூடம் தேவை, காலேஜ் தேவை, வாகனங்கள் தேவை, உணவு பயிரிட நிலம் தேவை, கோவில், மசூதி, சர்ச்கள் எல்லாம் வேணும். வியாபாரம் வேணும், தொழில் வேணும், நீர்நிலைகள் வேணும், காடு, மலை எல்லாம் வேணும். ஆனா, இலக்கியம் நவீன சினிமா எந்தளவுக்குத் தேவை? சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கோபாலன் இவங்களோட இசை எல்லாம் ரொம்ப பேருக்கு தேவைப்படாம இருக்கலாம். ஆனா இதுக்கும் உலகத்திலே இடம் இருக்கு.
மீனாட்சியம்மன் கோவில்ல, பழனி கோயில்ல, நாகூர் தர்காவிலே, வேளாங்கண்ணி சர்ச்சிலே பூஜை, தொழுகை, ஜெபம் இவற்றை நடத்தறவங்க காலமெல்லாம் அதையே திரும்பத் திரும்பச் செய்கிற மாதிரிதான் இந்தச் சிறு பத்திரிகைகளை நடத்துகிறவங்களும் திரும்பத் திரும்ப நடத்த வர்றாங்க. புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனியெல்லாம் தங்களோட தடத்தை அழுத்தமா பதிச்சிட்டுப் போயிருக்காங்க. இப்போ எழுதறவங்க கிட்டே, நல்ல மொழி நடையே இல்லை. வறட்டுத்தனமா எழுதுறாங்க. அவங்களோட இலக்கியமே வறட்டுத்தனமா இருக்குது. உணர்ச்சி, இளக்கம், அழகு இதெல்லாம் இல்லாமே போயிட்டுது.
நவீன சினிமாங்கிறதும் பல சமயங்களிலே வறட்டுத்தனமாத்தான் இருக்குது. நெறைய ஐடியா இருக்குது. ஆனா கவித்துவமான விவரிப்பு இல்லை. நான்லீனியர் எழுத்து மாதிரி சினிமாவிலும் நான்லீனியர் விவரிப்பு இருக்குது. உணர்ச்சியை விட்டு அறிவுத் தளத்துக்கு அல்லது தொழில்நுட்பத் தளத்துக்கு எழுத்து, சினிமா இரண்டுமே போயிட்டுது.
தாயப்பன்: “ஏன் ஒனக்கு எழுத்து, சினிமாவை விட்டா வேற ஒண்ணும் தெரியாதா?”
நான்: “பத்திரிகை பத்தித் தெரியுமே…”
தாயப்பன்: “அதுவும் எழுத்து சம்பந்தப்பட்டது தானே அப்பா. மீடியாவிலேயே டி.வி. வந்து சக்கைப் போடு போடுதே.”
“டி.வி.யும் எண்டர்டெய்ன்மெண்ட் தானே தாயப்பா?”
“நியூஸ் சேனல், விவாதங்கள் இதெல்லாம் எண்டர்டெய்ன்மெண்ட்டா?” என்று கேட்டான் தாயப்பன்.
“சொல்லப்போனா எல்லாமே கேளிக்கைதான். அரசியலைப் பத்திப் படிக்கிறது, தெரிஞ்சுக்கிறது, பேசறது எல்லாம் கூட ஒரு கேளிக்கைக்காகத்தான். நேரப் போக்குக்காகத்தான்.”
“சினிமா, பத்திரிகை, கவிதை, கதை, டி.வி., அரசியல் இதெல்லாம் சமுதாயத்தைப் பத்தி இல்லியா?”
“சமுதாயம், யதார்த்தம் இதெல்லாம் எல்லாத்திலேயும் இருக்கு. ஆனா பொழுதுபோக்காத்தான் இதையெல்லாம் கன்ஸ்யூம் பண்றோம்.”
“கவர்மெண்ட் என்ன பண்ணுது? ஊர் ஒலகத்துல என்ன நடக்குதுங்கிறதெல்லாம் மனுச வாழ்க்கைக்கு உதவலையா?” என்று ஆணித்தரமாகக் கேட்டான் தாயப்பன்.
“உதவுது. ஆனா, இது எல்லாம் தகவலா, தமாஷ் மாதிரி நமக்குள்ளே போகுது… சமயம் வரும்போது அந்தத் தகவல்கள், விபரங்களைப் பயன்படுத்திக் கிடறோம்.”
“வெள்ளம், நெருப்பு, விபத்துக்களிலே எவ்வளவோ பேர் திடீர்னு செத்துப் போறாங்க. இது எல்லாம் கேளிக்கையையா தருது?… உங்க வீட்டிலே ஏதாவது சாவு நடந்தா அது பொழுதுபோக்கா,, கேளிக்கையா, எண்டர்டெய்ன்மெண்ட்டா?”
“என்னோட அப்பா இறந்த செய்தியைக் கேட்டதும், அப்பாவைப் பத்தின ஞாபகங்கள்தான் வந்தன. வெளி உலக மரணங்களை வெறும் செய்தியா தெரிஞ்சுக்கிட்டு, அதை கடந்து போயிருதோம். என்னுடைய அப்பா, அம்மா இல்லாத வெறுமை, நினைவுகள் இருக்கு. ஆனா அது என்னை அமுக்கிறலை. எல்லா மரணங்களையும், வாழ்க்கைத் தோல்விகளையும் தாண்டி வாழத்தானே செய்யிறோம். அதெல்லாம் கடைசியிலே வெறும் தகவலா, திரும்ப நெனைச்சுப் பாக்கிற சம்பவங்களா இருக்குது. படித்த நாவலை, பார்த்த சினிமாவை திரும்பப் படிச்சா, திரும்பப் பார்த்தா எப்படி இருக்குமோ அப்படித்தான் ஆகிப்போயிருது.”
“சரி… சரி… ரொம்ப மயிரைப் பிளக்கிற மாதிரி ஆராயாதே.”
“இல்லே… நீ கேட்டதாலே சொன்னேன்.”
“நீ எப்பவுமே ஸீரியஸாத்தான் பேசுறே.”
“என் கேரக்டர் அதுவா இருக்கலாம்.”
எங்க பத்திரிகை ஆபீஸிலே சரஸ்வதி பூஜைய வருஷா வருஷம் நடத்துவாங்க. சின்ன வயசிலே திருநெல்வேலி டவுன் போலீஸ் ஸ்டேஷன்லே துப்பாக்கிக்கெல்லாம் பூப்போட்டு, பொட்டு வெச்சு அவல் பொரியோட கொண்டாடுனதப் பார்க்கப் போயிருக்கேன். ரயில்வே ஸ்டேஷன்ல இஞ்ஜினுக்குப் பொட்டு வச்சு, ரெண்டு பக்கமும் வாழை கட்டியிருப்பாங்க. கண்ணதாசன்ல இருந்தபோது முதலாளி ராமச்சந்திர ரெட்டியார் எல்லாருக்கும் அன்னைக்கு போனஸ் தருவாரு. ரீட்டா, ஆர்ட்டிஸ்ட் முகில் இவங்கெல்லாம் கிறிஸ்தவங்க. ஆனா அவங்களுக்கும் அவரு அன்னைக்கித்தான் போனஸ் குடுப்பாரு.
தாதன்கொளத்துல எனக்கு சரஸ்வதி பூஜை அன்னைக்கித்தான் படிப்புச் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சாங்க. எங்க ஊருல ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான். வேதக் கோயில் காம்பவுண்டுக்குள்ள இருந்திச்சு. அந்த ஸ்கூல்ல எல்லா டீச்சர்களும் வேதக்காரங்கதான். ஹெட்மாஸ்டர் எங்க வீட்டுக்கு வந்து, என்னை அவரோட மடியிலே உக்காரவச்சு, தாம்பாளத்துல பரப்பி இருந்த பச்சரிசியிலே என் விரலைப் புடிச்சு எழுதினாரு. திருநவேலியிலேருந்து மூக்காண்டி மாமா, அத்தை எல்லாம் அன்னைக்கு வந்திருந்தாங்க. மூக்காண்டி மாமா எப்பவும் ஜிப்பாதான் போடுவா. அந்த அஞ்சு வயசுல நடந்தது இன்னைக்கும் ஞாபகம் இருக்குது. புதுமைப்பித்தனோட ஜிப்பா கழுத்துப் படத்தப் பார்க்கும்போது மூக்காண்டி மாமா ஞாபகம்தான் வரும். ஆனா, மூக்காண்டி மாமா கண்ணாடி போட்டிருப்பா.
(தொடரும்)