
எங்கள் ஊருக்கு நான்கு தலைமுறைகளாக குரங்குகள் வந்ததில்லை. வீடுகளுக்கு ஓடு மாற்றுபவர்கள் இந்த விஷயத்தைச் சொன்னார்கள். காரணம் என்னவாயிருக்கும் என யோசித்துப் பார்த்தோம். பெரிய தாத்தா எங்களை ஊக்கப்படுத்தினார். ‘’யோசிக்கறது எப்பவுமே நல்ல விஷயம் தான். நூத்துக்கு தொன்னூத்து ஒன்பது யோசனையோட எல்லையில இருக்கும். எல்லைக்கு அப்பால இருக்கற விஷயங்களும் உண்டு. யோசிக்கறவனுக்கு அது தெரியணும்.’’
நாங்கள் சிறுவர்கள். ஆளுக்கு ஓரொரு காரணம் கூறிப் பார்த்துக் கொண்டோம். உண்மையில் எங்கள் வீட்டுப் பெரியவர்கள் அவ்வப்போது இந்த பேச்சு வரும் போது சொல்லும் காரணங்கள். நாங்களாக யோசித்துச் சொன்னது போல சொன்னோம். ஊரில் பழமரங்கள் குறைவு. பிரதான சாலையிலிருந்து ஊரை இணைக்கும் சாலையில் எந்த மரங்களும் இல்லை. மூன்று போகம் எங்குமே நடைமுறையில் இல்லை; இரண்டு போகம் தான். ஆனால் எங்கள் ஊரில் மூன்று போகம் பயிரானது. நதிக்கரையில் எங்கள் ஊர் இல்லை. இந்த காரணங்கள் கூட பல ஆண்டுகளாக பேசப்பட்ட ஒன்று தான். நாங்களும் அதனைப் பேசினோம். இத்தனை யோசித்திருந்தாலும் எங்கள் ஊருக்கு நான்கு தலைமுறைகளாக குரங்குகள் வந்ததில்லை என்பது எங்களுக்கும் ஒரு ஆச்சர்யம் தான். நாங்கள் பன்னிரண்டு பேர் இருந்தோம். எங்களை வளர்த்தது சந்திரா சித்தி என்று சொல்லி விடலாம். எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாருடைய குழந்தைகளையும் வளர்த்தது சித்திதான். எங்களுக்கு அம்மாவிடம் இருக்கும் நெருக்கத்தை விட சித்தியிடம் இருக்கும் நெருக்கம் தான் அதிகம். எந்த விஷயம் என்றாலும் முதல் தகவல் சித்தியிடம் தான் தெரிவிக்கப்படும். குழந்தைகள் நாங்கள் சித்தி மூலமாகத்தான் பெற்றோரிடம் பேசுவோம்.
சித்தி போல ஒரு பெண்ணை பார்க்க முடியாது. அவளிடம் நாங்கள் மொய்ப்போம். எங்களுக்கு உணவூட்டுவதிலிருந்து பாடம் சொல்லிக் கொடுப்பது வரை எல்லாமே சித்திதான். எங்கள் குடும்பத்தின் குழந்தைகள் கூட்டத்தில் பன்னிரண்டு வயதான குழந்தைகளும் உண்டு. இன்னும் பேசத் துவங்காத குழந்தைகளும் உண்டு. ஒரு குழந்தை சித்தியிடம் தன்னை தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்லும். இன்னொரு குழந்தை சித்தியின் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு சித்தி எங்கு சென்றாலும் கூடவே செல்லும். எப்படி சித்தியை எல்லாருக்கும் பிடிக்கிறது என நான் யோசித்ததுண்டு. ஒருமுறை சித்தியிடம் நான் ‘’சித்தி! எனக்கு உலகத்துலயே ஒன்ன மட்டும் தான் பிடிக்கும்’’ என்று கூறினேன். ‘’ உலகம் முழுசும் தெரிஞ்சு போச்சா உனக்கு அதுக்குள்ள’’ என்று சித்தி என் கன்னத்தைக் கிள்ளியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சித்தி வீட்டு வேலைகளைச் செய்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். சித்தி முகம் கடுமையாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. சித்தி யாரையும் அதிர்ந்து பேசி யாரும் கேட்டிருக்க முடியாது. சித்தி ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் பேசியது கிடையாது.
**
சித்திக்குத் திருமணம் நிச்சயம் ஆனது.
ஊருக்குள்ளேயே இருந்த உறவுக்காரக் குடும்பத்தில் தான் கல்யாணம் செய்து கொடுத்தார்கள். அப்போது எனக்கு ஏழு வயது.
நாங்கள் குழந்தைகள் வழக்கம் போல் சித்தியுடன் தான் இருந்தோம். வளர்ந்தோம். சித்தி எங்களுக்கு இங்கிலீஷ் சொல்லித் தருவாள். எங்கள் எல்லாருக்கும் பாடத்தில் டெஸ்ட் வைப்பாள். மார்க் போடுவாள். அவள் எழுதும் எண்கள் அத்தனை அழகு கொண்டிருக்கும். ‘’உன் கையெழுத்து எப்படி சித்தி இவ்வளவு அழகா இருக்கு?’’ என்று ஒருமுறை கேட்டேன்.
‘’அதாவது கண்ணு’’ என்று சித்தி ஆரம்பித்தாள். ஆண் குழந்தைகளை கண்ணு என்பாள். பெண் குழந்தைகளை செல்லம் என்பாள்.
‘’கடவுள் ஒருநாள் ஒரு மீட்டிங் போட்டார். அதுல நம்ம கிராமத்துல கிறுக்கி கிறுக்கி எழுதப் போற குழந்தைகள் தான் அதிகமா பொறக்கப் போறாங்க. அவங்க தெளிவான கையெழுத்து எப்படி இருக்கும்னு பாக்கவாவது செய்யணும். அப்ப தான் பிற்காலத்துல கொஞ்சமாவது சரியாவாங்க. அதனால அவங்களுக்கு யாரு பாடம் சொல்லிக் கொடுக்கறாங்களோ அவங்க கையெழுத்து தெளிவா இருக்கணும்னு முடிவு பண்ணி என் தலையில உன் கையெழுத்து தெளிவா இருக்கட்டும்னு எழுதி அனுப்பி வச்சுட்டார்’’
சித்தி நேரில் இருந்து பார்த்தது போல் தான் கதை சொல்வாள்.
அவள் கர்ப்பமாக இருந்த போது நாங்கள் அவளைச் சூழ்ந்திருந்தோம். சித்தி சித்தப்பாவிடம் ‘’லேசா வலிக்கற மாதிரி இருக்குங்க’’ என்று சொன்ன போது நானும் உடனிருந்தேன். இரட்டைப் பெண் குழந்தைகள். இரண்டு குழந்தைகளும் சித்தியைப் போலவே இருந்தன.
**
சித்தப்பா மிகவும் இனிமையான மனிதர்.
எங்கள் எல்லாருக்கும் டவுனில் ஸ்வீட் கடையிலிருந்து சோன் பப்டி வாங்கி வந்து தருவார். அவருடைய காரில் எங்கள் எல்லாரையும் கூட்டிக் கொண்டு சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். சினிமா பார்க்கும் அன்றைக்கு இரவு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சோளாபூரி வாங்கித் தருவார். சித்தப்பாவுடனும் சித்தியுடனும் செலவிட்ட அந்த பொழுதுகள் மறக்க முடியாதவை.
**
நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம்.
சுண்ணாம்புக் குச்சியால் சிலேட்டில் எங்களை அட்சரங்களை எழுத வைத்த சித்தியிடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத பேனா பெற்றுக் கொண்டு தேர்வு எழுதச் சென்றோம்.
**
சித்தப்பா ஒருநாள் காணாமல் போனார். எங்கெங்கெல்லாமோ தேடினார்கள். ஒரு பயனும் இல்லை.
சித்தி துளி கூட கலங்கவில்லை. உறுதியாக இருந்தாள்.
‘’அவருக்கு எங்கயோ போகணும்னு தோணியிருக்கு. அதான் போயிருக்கார். நிச்சயம் திரும்ப வருவார்’’
சித்தி இதையே தான் திரும்ப திரும்ப சொன்னாள். எங்கள் அம்மாக்கள் அழுதனர். சித்தி துளி கண்ணீர் கூட சிந்தவில்லை.
ஒருமுறை சித்தி தனியாக இருந்த போது நான் கேட்டேன்.
‘’நம்மள ஹோட்டலுக்கு அழச்சுட்டுப் போவாரே சித்தி. சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவாரே. நம்ம எல்லார் மேலயும் ரொம்ப பிரியமா இருப்பாரே சித்தி. ஏன் நம்மள விட்டு போய்ட்டார்?’’
சித்தி என்னை பிரியமாகப் பார்த்தாள்.
‘’உனக்கு ஞாபகம் இருக்கா? நீ சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்ட. உன்கிட்ட எல்லாரும் என்ன சொன்னாங்க. இந்த தெருவுக்குள்ளயே ஓட்டு. மெயின் ரோட்டுக்குப் போயிடாத. பஸ் லாரி வரும்னு சொன்னாங்க. ஆனா நீ போன. இப்ப மெயின் ரோட்டுலயும் சைக்கிள் ஓட்ட தெரிஞ்சுகிட்ட. உன்னக் காணலையேன்னு உன்னோட அம்மா தவிச்சுப் போவாங்க. அந்த மாதிரி தான் இப்ப நாம சித்தப்பா காணலைன்னு தவிச்சுட்டு இருக்கோம். அவர் நிச்சயமா திரும்பி வருவார்’’
சித்தி சொன்னதை நான் அப்படியே அம்மாவிடம் சொன்னேன்.
‘’அவ தலையில என்ன எழுதி வச்சுருக்கானோ கடவுள்’’ அம்மா சொன்னாள்.
**
ஆறு மாதம் கழித்து ஊரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிராமம் ஒன்றில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் ஒன்றில் சாமியார் ஒருத்தருடைய சீடராக சித்தப்பா இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. சாமியார் எப்போதும் மௌனத்தில் இருப்பவர் என்றும் சொன்னார்கள். எங்கள் ஊர்க்காரர் ஒருவர் அந்த ஊருக்குச் சென்ற போது சித்தப்பா அங்கே இருப்பதைப் பார்த்து அந்த ஊர்க்காரர்களிடம் விசாரித்திருக்கிறார். சாமியார் பல ஆண்டுகளாக ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்து கொண்டு இருப்பவர் என்றும் உடனிருப்பவர் சில மாதங்களாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். புதிதாக வந்திருப்பவர் ஊர் மக்களிடம் தானியங்களைப் பிச்சையாகப் பெற்று தினமும் உணவு தயாரித்து அன்னதானம் செய்வதாகவும் சொன்னார்கள். சொந்தக்காரர்கள் எல்லாம் போய் பார்த்தார்கள். சித்தப்பா வர மறுத்து விட்டார் என்று சொன்னார்கள்.
சித்தி சித்தப்பாவைப் பார்க்க செல்லவில்லை.
‘’அவர் நிச்சயமா திரும்பி வருவார்’’ என்று மட்டும் சொன்னார்.
**
நான் சித்தியிடம் சொன்னேன்.
‘’நீ போய் பார்த்தா சித்தப்பா நம்ம கூட வந்திடுவாரு சித்தி’’
‘’அவசியம் இல்ல கண்ணு. ஆஞ்சநேயர் ஒரு பொண்ணோட கஷ்டத்தைப் போக்கணும்னு தானே சமுத்திரத்தைத் தாண்டினார். அவரைக் கும்பிடற ஒருத்தருக்கு பெண்ணோட கஷ்டம் தெரியும்’’
**
மேலும் இரண்டரை ஆண்டுகள் கடந்தன.
முழுக்க முழுக்க விவசாயத்தை சித்தி தான் பார்த்துக் கொள்கிறாள். நாங்கள் அவளுக்கு உதவுவோம். இரண்டு வேலி நிலம். எல்லாம் கிரமமாக நடந்து கொண்டிருந்தது.
சித்தப்பா ஒருநாள் வீடு திரும்பினார்.
**
ஆஞ்சநேயர் கோவிலில் இருந்த சாமியார் சித்தியாகி விட்டார் என்று சொன்னார்கள்.
சித்தப்பா மிகவும் உற்சாகமாக தெளிவாக இருந்தார். மூன்று ஆண்டுகள் இல்லாமல் போனது அவர் ஞாபகத்தில் இருந்ததா என்பதே தெரியவில்லை.
வந்த மூன்றே நாளில் எங்கள் எல்லாரையும் சினிமாவுக்கு அழைத்துச் சென்றார். சித்தி எல்லாவற்றையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘’நீ என்ன இன்னும் சினிமாவுக்கு கிளம்பாம இருக்க. நீ இல்லாம எப்ப நாங்க சினிமாவுக்கு போயிருக்கோம்?’’ என்று சித்தியிடம் கேட்டார் சித்தப்பா. அன்று சித்தி ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்ததாக எனக்குத் தோன்றியது. அன்றும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். சித்தியும் சித்தப்பாவும் சோளாபூரி சாப்பிட்டார்கள். நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு ஆர்டர் செய்தோம்.
சித்தி மீண்டும் கர்ப்பமானாள்.
**
ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
சித்தப்பா புதிதாக ஒரு தொழில் ஆரம்பித்தார். பழைய கார்களை வாங்கி புதுப்பித்து விற்பனை செய்யும் தொழில் . அவருக்குப் பழக்கமில்லை. ஆனால் கார்கள் குறித்து முழுமையான விபரம் அவருக்குத் தெரிந்திருந்தது. தொழில் மிகச் சிறப்பாக நடந்தது. ஏற்கனவே இருந்த இரண்டு வேலி நிலத்துடன் மேலும் இரண்டு வேலி நிலம் வாங்கிச் சேர்த்தார்.
**
ஒரு நாள் சித்தப்பா லேசாக நெஞ்சு வலிப்பதைப் போல் இருப்பதாகச் சொன்னார்.
டிரைவர் வண்டியை ஓட்டினார். நான் டிரைவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். சித்தியும் சித்தப்பாவும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக டிரைவர் காரை இயக்கினார். டவுனில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு சென்று கொண்டிருந்தோம்.
‘’சந்திரா ! என்ன மன்னிச்சுடு. நான் உனக்கு நிறைய கஷ்டம் கொடுத்திட்டன்’’
சித்தி சித்தப்பாவை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
‘’நான் மூணு வருஷம் இல்லாதது பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்கலையே?’’
சித்தி சித்தப்பாவின் நெஞ்சை தடவி விட்டுக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர்.
ஹாஸ்பிட்டலில் சேர்த்து ஒரு மணி நேரத்தில் சித்தப்பாவின் உயிர் அவர் உடலிலிருந்து பிரிந்து போனது.
சொந்தக்காரர்கள் எல்லாரும் ஹாஸ்பிட்டலில் குழுமி விட்டார்கள். சித்தப்பாவின் உடலை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினோம்.
**
வீட்டின் கதவை சித்திதான் திறந்தாள்.
வீட்டினுள்ளே சென்ற போது ஹாலில் இரண்டு குரங்குகள் அமர்ந்திருந்தன. ஓடு வழியாக வந்து முற்றத்தில் இறங்கியிருக்கின்றன. அசையாமல் ஒரே இடத்தில் இருந்தன. கழியை எடுத்து பயமுறுத்தப் பார்த்தோம். அவை நகரவேயில்லை. சித்தி அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டாள். சித்தப்பா உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வரை அங்கேயே இருந்தன. பின்னர் சித்தப்பா வீட்டுத் தோட்டத்தில் தங்கியிருக்கத் தொடங்கின. சில நாட்கள் கழித்து மேலும் சில குரங்குகள் வந்து அவற்றுடன் இணைந்து கொண்டன.
சித்தி தினமும் அவற்றுக்கு வாழைப்பழங்களை உணவாகத் தருகிறாள்.
*****
interesting