
மெய் நிகர்
அடர்ந்த காட்டில்
எங்கோ ஒரு மூலையில்
அவன் தென்படுகிறான்
இப்பொழுது நகரத்தின்
ஒரு வீட்டிலிருக்கும்
அறையில் அவன் இருக்கிறான்
இதைப் பதிவு செய்தவர்களின்
ஆராய்ச்சியில் இருண்டு கதைகள்
ஒரே மாதிரியாகக் கிடைத்தது
கனவு போக மிச்சம்
இருக்கும் நிரூபணத்தில்
இவை சாத்தியமாகியது
மீண்டும் அது கடலிலே
கலந்து போக
வழக்கம் போல்
தனியனாகப் பயணம் செய்தான்
பொன் முட்டையிடும்
வாத்தை அறுத்தவனின்
மிஞ்சிய பேராசை
சாக்கிடையில் விழுந்தது
மெய் நிகர் உலகம்
அவனைக் காப்பாற்றிக்
கரை சேர்த்தது
ஓவியம்
அது ஒரு வரையப்படாத ஓவியம்
குறிப்பிட்ட காலத்தில்
அசையாமல் ஆடாமல்
என்றுபோல் இன்றும் இருந்தது
அந்த ஓவியத்தில்
இருந்த பெண்ணின்
உடையிலிருந்த மலர்கள்
சற்றுமுன் பூத்திருந்தது
அவள் நின்றிருந்த
வாசல் வழி கண்ட முகப்பு
தற்சமயம் ஸ்தூலமாக இல்லை
நினைவுகளின் நீரில்
அவள் முகம் நன்றாக
தெரிய மின்னலின் வலி
அவனுக்கு உதவி செய்தது
ஞாபகத்தின் இண்டு இடுக்குகளில்
அழகிய தருணம்
நட்சத்திரம் போல் மின்னியது
என்றும் அவ்வோவியம் அழியாமல்
ஆற்றின் நீரில்
மிதந்து சென்றது