புல்லரிசிப் பூஞ்சை

சேலம் என்னும் அந்த சிறு அமெரிக்க கிராமத்தில் திடீரென சூனியங்களினால் உண்டாகும் உடல்நலக் கோளாறுகள் தோன்ற ஆரம்பித்திருப்பதாக அனைவரும் நம்பினர். பல விசித்திரமான நோய் அறிகுறிகள் பலருக்கு உருவாகிக்கொண்டிருந்து. பலர் உயிரிழந்தார்கள் பலர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.  

1692ன் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளில் இளம் சிறுமிகளான பெட்டியும் அபிகெய்லும் வலிப்பு, உடல் நடுக்கம், தனக்குத்தானே பேசிக்கொள்வது, திடீரென உச்ச ஸ்தாயியில் அலறுவது என பல அசாதாரணமான இயல்புகளுடன் பித்துப் பிடித்தவர்களைப்போல் நடந்துகொண்ட போது ஊர்மக்கள் அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்து  விட்டதாக நம்பினர். கிராமத்து மருத்துவர் வில்லியமும் அதையே உறுதி செய்தார். 1

அச்சிறுமிகளின் சிறுநீரில் வேகவைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கேக்கை அவர்களே சாப்பிட்டால் அவர்களுக்கு சூனியம் வைத்தவர்களை அடையாளம் காட்டுவார்கள் என ஒரு கருத்து எழுந்த போது அதுவும் நடந்தது. அந்த கேக்கை உண்டபின்னர் பெட்டியும் அபிகாயிலும்  தங்களை சூனியக்காரிகளாக்கிய மூன்று பெண்களை அடையாளம் காட்டினர்.  அம்மூவரும்  உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். தொடர்ந்து அச்சிறுமிகளுக்கு இருந்ததைப்போலவே அறிகுறிகுறிகள்  வேறு சிலருக்கும் தெரியவந்தபோது, கிராமத்தில் இருக்கும் பிற சூனியக்காரர்களையும் தேடும் வேட்டையில் கிராமத்தினர் முழுமூச்சாக இறங்கினர். அத்தைகைய அறிகுறிகள் கொண்டிருந்த  பலர் தாங்கள் சூனியக்காரர்கள் என்று அவர்களே முன்வந்து ஒத்துக்கொண்டார்கள்

1693 மே மாதத்திற்குள் சூனியக்காரர்கள் என்று நம்பப்பட்ட பலர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 25 பேர்கள் இந்த சம்பவங்களிலிருந்து கொல்லப்பட்டனர். மேலும் பல பத்துப் பேர்கள் சிறையில் கொடும் தண்டனை பெற்றனர்.

அந்தோணியின் நெருப்பு நோய்

இதே போன்ற நோய் அறிகுறிகள் பிரான்ஸில் 11 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்கள் எகிப்திய துறவியான  அந்தோணியின் (St. Anthony 251 – 356 CE) தேவாலயத்தில்  குணமாக்கப்பட்டதாலும்,  நோய் அறிகுறிகளில் உடல் எரிச்சலும் இருந்ததால் அந்த குறிப்பிட்ட நோய் ’துறவி அந்தோனியின் நெருப்பு’ அல்லது புனித நெருப்பு என அழைக்கப்பட்டது (St. Anthony’s fire.(SAF),  ignis sacer or, “holy fire”) 2

செல்வந்தர்களின் குடும்பத்தில் பிறந்து தனது 25 வது வயதில் துறவியான அந்தோணி நைல் நதிக்கரையோரம் பல்லாண்டுகள் தனிமைத்தவத்தில் இருந்து கடவுளை தரிசித்து அற்புத சக்திகள் பெற்றவராக அறியப்பட்டவர். அவருக்கென ஒரு தேவாலயம் 1100 ல் பிரான்ஸில் உருவாக்கப்பட்டது. இந்த தேவாலயத்துடன் இணைந்து செயல்பட்ட மருத்துவமனையில்  வழிபட்டால்   எரிச்சல் நோய் குணமாகும் என்னும் நம்பிக்கை அதிகமாகி அந்நோய் கொண்டவர்கள் அங்கே ஆயிரக்கணக்கில் வரத் தொடங்கினர். அவர்களுக்கு சத்தான உணவும் மருந்துகளும் அளிக்கப்பட்டது சிகிச்சை அளித்த துறவிகள்  நீலச்சிலுவை சித்திரம் கொண்ட கருப்பு அங்கி அணிந்திருந்தனர். பலர் குணமாகினர். பலர் உயிரிழந்தனர். பலர் உடலுறுப்புக்களை இழந்தாலும் பிழைத்துக்கொண்டனர்.

சூனியக்காரர்கள் சூனியம் வைப்பதும், அதனால் உயிரிழப்பவர்களும், கொல்லப்படுபவர்களுமாக இந்நோய் குறித்த மூட நம்பிக்கைகள் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நூற்றண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. 994 ல் பிரான்ஸில் மட்டுமே சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய் அறிகுறிகளுடன் இறந்துபோனார்கள். பிரெஞ்ச் வரலாற்றாய்வாளரான ஃப்ரான்ஷுவா மெஸரே இதை கண்ணுக்கு தெரியாத நெருப்பினால் உருவான பிளேக் என்று குறிப்பிட்டிருந்தார்.( François Eudes de Mézeray)  

கத்தோலிக்க தேவாலயங்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருந்த காலத்தில் இந்த நோய்க்கான காரணம் அறிவியல் பூர்வமாக ஆராயப்படாமல் பாவிகள்  நரகத்துக்குச் செல்லும் வழியாக  மட்டுமே கருதப்பட்டு மதம் சார்ந்த சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டன, 15 ம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் மட்டும் சுமார் 400 தேவாலயங்களுடன் இணைந்த மருத்துவமனைகள் இந்த நோய்க்கென்றே உருவாகி இருந்தன.

 பன்றிக் கொழுப்பில் கலக்கப்பட்ட மூலிகை எண்ணெய் உடலின் மீது தடவப்பட்டும் பல தாவரச்சாறுகள் கலக்கப்பட்ட திராட்சைமது புகட்டப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 14லிருந்து 17 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆப்பிரிக்காவிலும் பிளேக் நடனம் என்ற இந்த வினோதமான நோய் பல்லாயிரக்கணக்கானவர்களைப் பாதித்தது. 

பலர் எலும்புகள் முறிந்து உடையும் வரை, களைத்து இறக்கும் வரை அல்லது பலரால் தடுத்து நிறுத்தப்படும் வரையிலும் நாட்கணக்காக அலறலும் கண்ணீருமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்

பலருக்கு தோலில் சிவப்புப் படை, மயக்கம், பித்து  பார்வையிழப்பு, மற்றும் வலிப்பு ஆகியவை  உண்டானது. 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஃபிளாண்டர்ஸ் முழுவதும் இந்நோய் பரவியது. குறைவான நோய் அறிகுறி கொண்டவர்கள் தெருக்களில் போதையுடன் நடனமிட்டுக்கொண்டிருந்ததால் இந்த அந்தோணியின் நடன நோய், நடனபிளேக் என்றும் அழைக்கப்பட்டது.3. அப்போதுதான்சேலம் கிராமத்தைப்போன்ற பல இடங்களில் இது சூனியம் என்று நம்பப்பட்டு பலநூறுபேர் உயிர் பறிக்கப்பட்டது.

புல்லரிசியும் பூஞ்சையும்-  நெடிய வரலாறு

கி மு 400 – 300 ல் எழுதப்பட்ட பார்ஸி இனமக்களின் புனித நூலில்  கர்ப்பிணிப் பெண்களின் கருவில் குழந்தைகளை கொன்று கர்ப்ப்ப் பைகளையும் அழிக்கும் புற்களைப் பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது

கிமு 1100  ல் சீன மருத்துவ ஏடு ஒன்று  மகப்பேறு சிகிச்சையில் ஒரு பூஞ்சைவிதை உபயோகிக்கப் பட்டதை குறிப்பிட்டிருந்தது . கிமு 600 ஐ சேர்ந்த அசிரியர்களின் களிமண் படிவமொன்றிலும்  பூஞ்சை கொப்புளமொன்றின் மருத்துவ உபயோகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

கிபி 857 ல் தொகுக்கப்பட்ட  Annales Xantenses என்னும்  பண்டைய ஃபிரான்ஸின்  வரலாற்று தொடர் ஆவணங்களில் கெட்டுப்போன ரொட்டியை உண்ட மக்களுக்கு கைகால்கள் இற்று விழும் கொடிய நோயும் உடலெங்கும் எரிச்சல் தரும் கொப்புளங்களும் உண்டானது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்கு பகுதிகளில் கிபி 857ல்  இந்த நோய் பரவியது வரலாய்வாளர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது  

கிருத்துவம் பரவத்துவங்கிய போது மேற்கு ஐரோப்பாவில் பரவிய ஒரு புல்லரிசிப் பூஞ்சை நோய்பற்றிய குறிப்புக்களும்  பிற்பாடு கண்டறியப் பட்டிருக்கின்றன

நீளமான சிக்கலான ஆச்சர்யமூட்டும் இந்த நோயின் வரலாறு  புல்லரிசியின் வரலாற்றுடன் இணைந்திருக்கிறது. ஏழைகளின் தானியம் என அப்போது கருதப்பட்ட   புல்லரிசி ஐரோப்பாவெங்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஹாலந்திலிருந்து ஜெர்மனி வழியாக செக்கோஸ்லோவாக்கியா மற்றும் ஆஸ்திரியா வரை சாகுபடியானது.

 பின்னர் அங்கிருந்து போலந்து மற்றும் ரஷ்யாவிற்கும் புல்லரிசி சாகுபடி பரவியது. மாற்றாக இங்கிலாந்தில் வெறும் 50 ஆயிரம் ஏக்கர்களில் மட்டும் புல்லரிசி சாகுபடியானது அவற்றிலும் 20 ஆயிரம் ஏக்கர்களில் புல்லரிசிப்பயிர் அப்படியே உழுது பசுந்தாள் உரமாக்கப்பட்டது. புல்லரிசிப் பயன்பாடு குறைவாக இருந்ததால் அந்தோணி நோய் தாக்குதலும் அதனாலான உயிரிழப்புகளும் இங்கிலாந்தில் ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே இருந்தது.

1930ல் வெளியான ஒரு அறிவியல் கட்டுரை இந்த விகிதத்தை  போலந்தில் 4:1 என்றால் இங்கிலாந்தில் 100:1 என்று குறிப்பிட்டிருந்தது மேலும்  இங்கிலாந்தை காட்டிலும் ஐரோப்பாவின் காலநிலை புல்லரிசிக்கும் அதில் வளர்ந்த பூஞ்சைக்கும் ஏதுவானதாக இருந்தது 

ஜெர்மனியில் புல்லரிசி கதிர்மணிகளுக்குள் இருக்கும் கருப்பு நிறத்திலிருந்த புல்லரிசி தானியமணிகளை காட்டிலும் சற்றே பெரிய ஸ்க்ளிரோஷியாக்கள் அன்னை தானியம் என்னும் பொருள்படும் Mutterkorn, (‘mother grain’) என  அப்போது அழைக்கப்பட்டன. அந்த விதைகள் பிரசவத்தை எளிதாக்கியதால் அவை அன்னை தெய்வமாகவும் கருதப்பட்டது

16ம் நூற்றாண்டின் இறுதியில் புல்லரிசிக்கு மாற்றாக கோதுமைப் பயிர் சாகுபடி துவங்கியபோது இந்நோய் வெகுவாக குறைந்தது. எனினும் கைவிடப்பட்ட கோதுமைவயல்களில் களைப்பயிராக வளரும் புல்லரிசிப் பயிர்கள் செழித்து வளர்ந்தபோது அவை அறுவடை செய்யப்பட்டு கிராமப்புறங்களில் புல்லரிசி ரொட்டியே பிரதான உணவாக இருந்தது

புல்லரிசியான ரை (rye) மட்டுமே அப்போது ஏழைகளின் உணவாக இருந்தது. கருப்புப் பூஞ்சை நோயினால் தாக்கப்பட்டு தரமற்றவையாக இருந்த கோதுமைகளும் ஏழைகளுக்கு விலை மலிவாக கிடைத்தது. அத்தகைய கருப்புத் துகள்கள் கலந்திருந்த கோதுமையிலும் புல்லரிசிலும் செய்யப்பட்ட ரொட்டிகளை உணவாக எடுத்துக்கொண்டவர்களுக்கு விநோதமான் நோய் அறிகுறிகளும் போதையுணர்வும் எற்பட்டன

பூஞ்சை விதைகலந்த ரொட்டியை உணவாக எடுத்துக்கொள்ளும் வரை நன்றாக இருந்து உணவுக்குபின்னர் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ளும் கிராமப்புறத்தினரைக்குறித்து வேடிக்கையான நாடகங்கள் பல பகுதிகளில் நடந்தன.

1582 ல் ஆடம் (Adam Lonitzer)  முதன் முதலாக  அவரது மூலிகை நூலான  Kräuterbuch ல்  புல்லரிசிக்கதிர்களில் தானியங்களுடன் கலந்து‘ இருக்கும் நீளமான, கருப்பான, கடினமான நெடி அடிக்கும்  விதைபோன்ற பொருள் உள்ளே வெள்ளையாகவும் அதிலிருந்து முளைத்திருக்கும் ஆணிகளைப் போன்றவற்றையும் கொண்டிருக்கிறது. இவ்விதைகளில் சிறியவற்றை மூன்றை கொடுத்தால் பிரசவ வலி விரைவாக உருவாகி மகப்பேறு எளிதில் நடக்கும் என குறிப்பிட்டிருந்தார்

1596 ல் மற்றொரு ஜெர்மன் மருத்துவர் வெண்டெலியன் தீலியஸ் (W. Thelius) இந்த அந்தோணி எரிச்சல் நோய்க்கு   புல்லரிசியை தாக்கும் அதே பூஞ்சை காரணமாக இருக்கலாம் என கருதினார். கருப்பு விதை எனப்படுவது பூஞ்சையின் ஸ்போர்கள் அடங்கிய ஸ்கிளோரிஷியம் என்றுமவர் யூகித்தார். ஆனால் இக்கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்படவில்லை  ஐரோப்பாவின் குளிர்ப்பிரதேசங்களிலும் புல்லரிசி பயிராகும் பகுதிகளிலும் அந்தோணி எரிச்சல் நோய் பரவலாக இருந்தது. புல்லரிசி சாகுபடியே இல்லாத இங்கிலாந்தில் இந்நோய் அரிதாகவே காணப்பட்டது. தீலியஸே  அந்நோய் தானியங்களினால் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள்  குறித்து முதன்முதலில்  எழுதியவர். 

இப்பூஞ்சையின் முதல் சித்திரம் தாவரவியலாளர் கஸ்பா(ர்) போன் (Gaspard Bauhin) என்பவரின் Theatrum Botanicum  என்னும் நூலில் 1658 இல் வெளியானது.

1670ல் பிரெஞ்ச் மருத்துவர்  தூய்லியே (Thuillier) புல்லரிசியையும் பூஞ்சைத்தொற்றுகொண்டிருக்கும் கோதுமைகளையும் உண்ணும் கிராமத்தினருக்கு வரும் அந்த நோய் தரமான கோதுமைகளை உண்ணும் நகரத்தாருக்கு வருவதில்லை என்பதைக் கண்டறிந்து  தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி   பூஞ்சையால் பாதிக்கப்பட்ட புல்லரிசி ரொட்டியை உண்பதால் இந்த அறிகுறிகள் வருகிறதென்று கண்டறிந்தார் ஆனால் கிராம மக்கள் ரொட்டியில் இருக்கும் சிறு கருப்பு தூசி நோயை உருவாக்கும் என்பதை முற்றிலுமாக நிராகரித்தார்கள்

1676 ல் டெனிஸ் (Denis Dodart) என்பவர்   French Royal Academy of Sciencesக்கு  பூஞ்சைநோய் தாக்கிய தானியங்களிலிருந்து உருவாகும் கொடிய நோயைக் குறித்து கடிதம் எழுதியிருந்தார் . அதற்கு அடுத்த வருடம் இவரே எர்கட் என்னும் சொல்லையும் முதன் முதலில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். எனினும் எர்கடிசம் என்று இந்த நோய்த்தாக்குதல் குறிப்பிடப்பட்டது 1853ல் தான்

எர்கட் எனும் சொல் பண்டைய பிரெஞ்ச் சொல்லான argot  என்னும் கோழிக்கால் பிசிறினைக்குறிக்கும் சொல்லிலிருந்து  அதே போலிருக்கும் ஸ்கிளிரோஷியத்தை குறிக்க பயன்பட்டது. 

 நுண்ணோக்கி கண்டறியப்பட்டு நுண்ணுயிரியல் என்னும் அறிவியல் துறையின் பொற்காலமென்று கருதப்பட்ட 17 மற்றும் 18 ம் நூற்றாண்டில் இந்நோய் குறித்து பல ஆய்வுகள் முனைப்புடன் நடந்தன .

1791. மருத்துவரும் இயற்கையாளரும் கவிஞருமாகிய எராஸ்மஸ் டார்வின் தனது  நீள் கவிதையான The Botanic Garden ல் இந்த எர்கட் பூஞ்சையை கருப்பு விஷம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Shield the young harvest from devouring blight,

The smut’s dark poison and the mildew white,

Deep-rooted mould and ergot’s horn uncouth,

And break the canker’s desolating tooth. – Part I Canto IV (lines 511–4)

கவிதையின் அடிக்குறிப்பாக ஃபிரான்ஸில் அதிகமும் இங்கிலாந்தில் அரிதாகவும் காணப்படும்  புல்லரிசி நோய்க்கு காரணமானது அதன் கருப்பு விதை என்பதையும் டார்வின் குறிப்பிட்டிருக்கிறார்

க்ளாட் மற்றும் பேரன் ஆகியோர் 1711 மற்றும்   1764ல் (Claude Joseph Geoffroy & Baron Freiherr von Münchhausen) இது ஒரு பூஞ்சைக்காளான் தொற்றாக இருக்கலாம் என்று அறிவித்தார்கள்.

1808 ல் நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் ஜான் ஸ்டேர்ன்ஸ் (John Stearns, ) நியூயார்க்கின் மருத்துவ சஞ்சிகையில்  ’’மகப்பேற்றை எளிதாக்கும் பிரசவப்பொடி’’ என்னும் பிரபல கட்டுரையை வெளியிட்டார். (An account of the pulvis parturiens, a remedy for quickening childbirth). அக்கட்டுரையில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கவேண்டிய கருக்குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தில்லாத மருந்தின் அளவுகளை  துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

நியூயார்க்கின் மற்றொரு மருந்தாளுனர் சாமுவேல்   1809ல்  (Samuel Akerley) எர்கட் பூஞ்சைச்சாறு கருக்கலைப்புக்கும், மாதவிடாய் துவக்கத்திற்கும் பயன்படுவதை விவரித்து கட்டுரை எழுதியிருந்தார்

1813,ல் ஆலிவர் பிரெஸ்காட்  (Oliver Prescott )எழுதிய எர்கட் பூஞ்சையின் இயற்கை வரலாறும் மருத்துவ பயன்களும் என்னும் கட்டுரை மிக பிரபலமாகி  பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது அதன் பிறகு அந்த பிரசவப் பொடியின் உபயோகம் வேகமாக பிற இடங்களுக்கும் பரவியது.

ஆனால்  1822 ல் மருத்துவர் டேவிட்(  David Hosack ) பிரசவப் பொடியின் உபயோகத்தால் நியூயார்க்கில் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டு போவதை ஆதாரங்களுடன் நிரூபித்தார் அதன் அடிப்படையில் விசாரணைக்குழுவொன்று ஏற்படுத்தப்பட்டு பிரசவ பொடி எனப்து உண்மையில் மரணப் பொடி அதை  பிரசவங்களுக்கென உபயோக்கூகடாது மகப்பேற்றுக்கு பின்னரான குருதியிழப்புக்கு மட்டுமே உபயோகிக்கவேண்டும் என  அறிவிக்கப்பட்டது

எனினும் எர்கட் தயாரிப்புக்கள் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவெங்கும் பரவலாக உபயோகத்தில் இருந்தது

1850 ல் லூயிஸ் ரெனி  (Louis Rene Tulanse) என்னும் பூஞ்சையியலளர் இப்பூஞ்சையின் முழு வாழ்க்கை சுழற்சியையும் வெளியிட்டார். 1853 ல் லூயிஸ் ரெனி இப்பூஞ்சை பண்டைய காலத்தில் மகப்பேறு சிகிச்சையில் பயன்பட்டதற்கான குறிப்புக்களையும் தேடிக் கண்டறிந்தார். 19 ம் நூற்றாண்டின் இறுதியில் உருவான அமெரிக்க மருத்துவ ஏடுகளில் எர்கட் பூஞ்சையின் விதைபோன்ற கருப்புப்பொருளை பொடித்து சிறிய அளவில் அளிக்கையில் கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை விரைவாக சுருங்கி விரிந்து குழந்தை பிறப்பிற்கான நேரம் வெகுவாக குறைவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 1856ல் பிரெஞ்ச் தாவரவியலாளர் துரியன் (Durien) செயற்கையாக  புல்லரிசி மலர்களில் எர்கட் பூஞ்சைத் தொற்றை உருவாக்கி கிளாவிசெப்ஸின் நோயுண்டாக்கும் திறனை ஆதாரங்களுடன் நிரூபித்தபோதுதான் நூற்றாண்டுகளாக நீடித்திருந்த சூனிய மர்மம் முற்றிலும் விலகியது.

1969ல் மனிதர்களுக்கு ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளை குறித்த தனது  The Day of St Anthony’s Fire என்னும் நூலில் ஜான் கிராண்ட்   (John Grant Fuller)  இந்நிகழ்வுகள் குறித்து  விரிவாக எழுதியிருக்கிறார். 

19 ம் நூற்றாண்டின் இறுதியில் எர்கட் வேதிபொருட்கள் மருத்துவத்துறையில் மிக முக்கிய பங்காற்றுபவைகளாக அறியப்பட்டிருந்தன. புல்லரிசி வயல்களில் கிளாவிசெப்ஸ் பூஞ்சையின் வித்துக்களை தூவி  ஒரு ஏக்கருக்கு 500கிலோ ஸ்கிளிரோஷியம் வரை சாகுபடி செய்யப்பட்டு மருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது

அக்காலகட்டத்தில் புல்லரிசியின் விலையைவிட இருபது மடங்கு அதிக விலைக்கு எர்கட் கருப்பு விதைகள் விற்கப்பட்டன

 1789ல் நடந்த பிரஞ்சுப் புரட்சிக்கும் கூட கடும் பஞ்சத்தினால் தானியங்கள் கிடைக்காமல்  புல்லரிசியை உணவாகக் கொண்ட விவசாயிகளின் வன்முறைக்கு  அந்த அக்கருப்பு விதையின் வேதிப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று  பின்னர் பல வரலாற்றாய்வாளர்கள் கருதினர்

 பூஞ்சை நோய் 

எர்கட் பூஞ்சை நோய் கிளாவிசெப்ஸ் பர்பூரியா (Claviceps purpurea ) என்னும் பூஞ்சையினால் 400க்கும் அதிகமான புல் வகைகளில் உண்டாகிறது. இவற்றில் ரை எனப்படும் புல்லரிசியே அதிகம் பாதிக்கப்படும் புல் வகை. கிளாவிசெப்ஸின் 40 சிற்றினங்களில் பர்பூரியா பலவகையான புல் வகைகளின் மலர்களின் சூலகங்களை மட்டும் தொற்றும் பூஞ்சையாக இருக்கிறது

கிளாவி-செப்ஸ் என்றால் ஆணி-தலை என்று கிரேக்க மொழியில் பொருள் இதன் ஸ்க்ளிரோஷியாவிலிருந்து முளைக்கும் வித்துக்கள் சிறு ஆணிகளை போலிருப்பதாலும் ஸ்கிளிரோஷியாவின் நிறம் கருப்பு கலந்த ஊதா என்பதாலும் இதன் அறிவியல் பெயர் கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்றிருக்கிறது. 

இந்த புல்லரிசி பூஞ்சை நோய் கனடா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் பரவலாக இருந்தது  (இப்பொழுதும் குறைவான வீரியத்துடன் இருக்கிறது). இந்தியாவில் இந்த பூஞ்சை தாக்குதல் அரிதாகவே நிகழ்ந்துள்ளது இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மும்பையிலும் கர்நாடகத்திலும் சோளப் பயிர்களில் இந்நோய் கண்டறியப்பட்டது.

எர்கட் பூஞ்சைத்தாக்குதலால் கோதுமை பார்லி சோளம் போன்றவகைகளின்  மகசூல் குறைகிறது என்பதைவிட இந்த பூஞ்சையில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆல்கலாய்டுகள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உண்டாக்கும் நோய்களாலும் அந்த ஆல்கலாய்டுகளின் மருத்துவப்பயன்களாலும் இப்பூஞ்சை முக்கியத்துவம் பெறுகிறது 

இப்போது இதன் ஸ்கிளிரோஷியாவிலிருக்கும் முக்கியமான ஆல்கலாய்டுகளுக்கென புல்லரிசியில் இப்பூஞ்சைத் தொற்று செயற்கையாக உண்டாக்கப்பட்டு இந்த ஆல்கலாய்டுகள் சேகரிக்கப்படுகின்றன. 

இப்பூஞ்சையை குறித்து அறியாத  நூற்றாண்டுகளில்தான் சூனியக்காரர்கள் என்று பல்லாயிரம் அப்பாவிகள் கொலை செய்யப் பட்டிருந்தனர்.

எர்கட் பூஞ்சைத்தொற்று எர்கட்டிசம் (Ergotism) எனப்படுகின்றது

கிளாவிசெப்ஸ் பர்பூரியா  நோய்ச்சுழற்சி

புல்லரிசியின் மலர்க்கொத்துக்களில் படியும் கிளாவிசெப்ஸ் பூஞ்சை வித்துக்கள் மலரின் சூலகங்களில் வளர்ந்து  வித்துக்கள் அடங்கியுள்ள சிறு மணிகளான ஸ்கிளிரோஷியங்கள் மண்ணில் உதிர்கின்றன.   குளிர்காலங்களில்  இவை நிலத்தில் காத்திருந்து அடுத்த பயிர் வளருகையில் அதிலும்  பூஞ்சை வித்துக்கள்  தொற்றி குடைக்காளானைப்போல   புல்லரிசிப்பயிரின் சூலகங்களில்வளர்ந்து பரவி அதன் வித்துக்களனைத்தும்  மீண்டும் சிறு கருப்பு கதிர்மணி போன்ற வடிவங்களில் ஸ்கிளிரோஷியாவாக உருவாகிறது. அக்கருப்பு மணிகள் புல்லரிசி கதிரில் அரிசிமணியைக்காட்டிலும் சற்றே நீளமாக இருக்கும். அவற்றின் மருத்துவப்பயன்கள் முன்பே மக்களிடத்தில் பிரபலமாகி இருந்தாலும் அதன் அளவு கூடும்போது நோயும் பித்தும் உடலெரிச்சலும் வருவதை அதற்கு முன்பு யாரும் அறிந்திருக்கவில்லை

மனிதர்களில் எர்கட் நோய்

எர்கட் பூஞ்சை நோய் மனிதர்களை இரு விதங்களில் பாதிக்கிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் தொற்று gangrene  என்னும் தசை அழிவையும் மத்திய நரம்பு மண்டலத்தில் உண்டாகும் தொற்று போதை, பித்து, வெறி, வலிப்பு, உடல் எரிச்சல் போன்றவற்றையும் உண்டாக்குகிறது

எர்கட் மருந்துகள்4

உலகின் மிகப் பழமையானதும் கொடியதுமான இந்த ரொட்டிப் பூஞ்சை நோய் என்னும் எர்காடிசம் மருத்துவ உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகள் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

 1820ல் அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகவே எர்கட்  ஆல்கலாய்டுகள் இருந்தன.1820 லிருந்து 1905 க்குள் 200க்கும் அதிகமான வேதிப்பொருட்களும் ergotamine, ergometrine  ergokryptine   உள்ளிட  12 ஆல்கலாய்டுகளும்  இந்தப் பூஞ்சையிலிருந்து  மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.  இவற்றுடன் போலி ஆல்கலாய்டுகள் எனப்படும்  ergotoxine, ergotinine, ergosterene. ஆகியவையும் கண்டறியப்பட்டன. பிரெஞ்ச் வேதியியலாளர்  டேன்ரெட் (Charles Tanret) தன் வாழ்க்கையில் 20 வருடங்களை எர்கட் பூஞ்சை ஆல்கலாய்டுகளை கண்டுபிடிப்பதிலேயே செலவிட்டார். தூய ஆல்கலாய்டுகளை  இனம் கண்டார்.

டேன்ரெட் (Tanret) 1875ல் படிகங்களாக எர்கட் பூஞ்சையின் வேதிப்பொருட்களை முதன்முதலில் பிரித்தெடுத்தார். அது எர்கட்டினைன் எனப்பட்டது.

 இந்த பூஞ்சையின் மிக முக்கியமான் 4 ஆல்கலாய்டுகளான , ergotinine, ergotoxine, ergotamine மற்றும் ergotaminine, ஆகியவற்றை S. Smith , G. M. Timmis ஆகியோர் பிரித்தெடுத்தனர்.

1900 த்தில் எர்கட் ஒரு வேதிக்குழப்பமென்றே விஞ்ஞானிகளால் கருதப் பட்டது.  இதில் அடங்கி இருக்கும் பலவகையான வேதிப்பொருட்களை பிரிதெடுக்க பலவகையான முயற்சிகள் நடந்து தோல்வியடைந்து கொண்டிருந்தன. ஹென்ரி என்னும் ஒரு மருந்து தயாரிப்பாளர் குறிப்பிட்ட வேதியியலாளர்கள் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக இந்த பூஞ்சையின் நோயை குறித்து ஆராய அழைத்தார். அக்குழுவில் ஜார்ஜ் பெர்கர். கார்,  ஆர்தர் எவின்ஸ் மற்றும் ஹெரால் ட்யூல்டி ஆகியோர் இருந்தனர்.  (George Barger, Arthur Ewins,Dr. F. H. Carr & Harold Dudley) 

பார்ஜர் மற்றும் கார் (Prof. Barger  Dr. F. H. Carr) 1906 ல்  எர்கோடாக்ஸினை (ergotoxine ) பிரித்தெடுத்தார்கள். இக்குழுவினர் இவற்றை மட்டுமல்லாது அசிட்டைல் கோலைன், ஹிஸ்டமைன், மற்றும் திராமைன் ஆகிவற்றையும் கண்டுபிடித்தனர். எர்கட் பூஞ்சையில் பலர் வருடக்கணக்காக ஆய்வு செய்தார்கள் எனினும் Henry Dale, George Barger  Arthur Ewins , Arthur Stoll  மற்றும் Albert Hofmann ஆகியோரின் பங்களிப்பு மிக இன்றியமையாதது.இந்த குழுவினரின் மிக முக்கிய கண்டுபிடிப்பான எர்கோமெட்ரின் (Ergometrine)   மகப்பேறுக்கு பின்னரான குருதியிழப்பு மரணங்களை இன்றளவும் தடுத்துக் கொண்டிருக்கிறது. 1917ல் ஆர்தர் ஸ்டோல் (Stoll) மற்றுமவரது குழுவினர் இணைந்து  மைக்ரேனுக்கு சிகிச்சையளிக்கும் எர்கட்டமைன் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகளை  இப்பூஞ்சையில் இருந்து பிரித்தெடுத்தனர்.   எர்கட்டமைன் (Ergotamine) மைக்ரேன் என்னும் தலை நோய்க்கு மருந்தாகிறது. 

எல் எஸ் டி

மாயக்காட்சிகள், போதை  மற்றும் இல்பொருள் தோற்றம் அளிக்கும்  போதை மருந்தான (LSD, Lysergic acid diethylamide),லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைட், எல்எஸ் டி என்பதும் 1938 ல் ஆல்பர்ட் ஹாஃப்மனால் இந்த ரொட்டிப்பூஞ்சையிலிருந்து கிடைத்த  எர்கோட்டமைனிலிருந்து உருவாக்கப்பட்டது.  அது உருவாக்கப்பட்டபோது அதன் போதைப்பண்புகள் அறிந்திருக்கப்படவில்லை.

எல்எஸ்டி உருவாக்கப்பட்ட 5 வருடங்களுக்கு பிறகு April 19, 1943ல்  அதன் போதையூட்டும் பண்புகள் ஹாஃப்மன் அந்த வேதிப்பொருளை  தற்செயலாக சிறிதளவு உட்கொண்டபோதுதான் தெரியவந்தது. 

சுவிட்ஸர்லாந்தின் ண்டோஸ் மருந்துநிறுவனம் (Sandoz Laboratories) 1947லிருந்து எல்எஸ்டியை  பிளவுண்ட புத்தி நோய் எனப்படும் ‘ஸ்கிட்ஸோஃப்ரெனியா’வுக்கு சிகிச்சையளிக்கவும், குற்றவாளிகளுக்கான, மது அடிமைகளுக்கான சிகிச்சைக்கான மருந்தென்றும் விளம்பரப்படுத்தி சந்தைக்கு கொண்டு வந்தது. 

அந்நிறுவனம்  எல்எஸ்டியை ஆராய்ச்சியாளர்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவியது. 1963ல் சண்டோஸ் நிறூவனத்தின் எல்எஸ்டிக்கான் உரிமம் காலாவதியான பின்பு அதனை வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. எல்எஸ்டி பயன்பாடு 1968 அக்டோபரிலிருந்து சட்டவிரோதம் என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது

.25 கிலோ எர்கட்டமைன் டார்டரேட்டிலிருந்து 6 கிலோ தூய எல்எஸ்டி படிகங்களாக கிடைக்கிறது.  “Microdots’’ எனப்படும் நுண் மாத்திரைகளாகவும், “window panes”  ’ஜன்னல் சதுரங்கள்’ என்னும் பெயரில் ஜெலாட்டின் சதுரங்களாகவும் சமயங்களில் உறிஞ்சும் தாள்களில் நனைக்கப்பட்டும் கூட எல்எஸ்டி விற்பனையாகிறது. அரிதாக திரவ நிலையிலும் கிடைக்கும் எல் எஸ் டி  எந்த வடிவில் கிடைத்தாலும் உபயோகிப்பவர்களை  யதார்த்த உலகிலிருந்து உடனடியாக  துண்டித்துவிடும் என்பது உண்மை

எல்எஸ்டியின் மிகக்குறைந்த அளவே மிக அதிக போதை உண்டாக்குமென்பதாலும், நிறமற்ற, மணமற்ற இதன் பண்புகளாலும் பிற போதை மருந்துகளைக்காட்டிலும் இதுவே கள்ளச்சந்தை வணிகத்தில் அதிக புழக்கத்தில் இருக்கிறது.

பயிர்ப்பூஞ்சை நோய்

இப்பூஞ்சை தாக்குதல் இப்போதும் ஆங்காங்கே தானியப்பயிர்களில் தென்பட்டுக்கொண்டிருக்கிறது. சமீப காலங்களில் ஏற்பட்ட எர்கட் பூஞ்சை தொற்று

  • 1975ல் இந்தியாவில்
  • 1977ல் எத்தியோப்பியாவில்
  • 1987ல் ஆஸ்திரேலியாவில்
  • 1996 அமெரிக்காவில்
  • 1999 பிரேஸிலில்

எர்கட் மருந்துகள் இப்போது

இப்பூஞ்சையை போன்ற பல்வேறு  இயற்கைப் பொருட்களின் கண்டுபிடிப்புக்கள்   மனிதர்களுக்கான சிகிச்சைகளில்  தங்களது செல்வாக்கை செலுத்திய  விஷயங்களால்  நிரம்பியுள்ளது உலக மருத்துவ வரலாறு  .

இப்போது அறியப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான  பூஞ்சை இனங்களில் எர்கட் ரொட்டிப்பூஞ்சையான கிளாவிசெப்ஸைபோல மருந்தியல்,  மகப்பேறியல், உளவியல் மற்றும் நரம்பியல் துறைகளில் மிக முக்கியமான சிகிச்சைகளுக்கு பயனாகும் மருந்துகள் அளிக்கும் பூஞ்சை வேறெதுவும் இல்லை

எர்கட்டிலிருந்து எல்.எஸ்.டி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிச்சேர்மங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன  

பல ஆண்டுகளாக மருத்துவத் துறையில் விஞ்ஞானம் எத்தகைய முன்னேற்றம் அடைந்திருந்தாலும், நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல முக்கியமான மருந்துகளின் முதன்மை ஆதாரமாக புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளைத் தரும் நித்தியகல்யாணி, இதயநோய்களை குணப்படுத்தும் டிஜிட்டாலிஸ் போன்ற தாவரங்களும்,  கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முதன்மை பாக்டீரீயா கொல்லியாக இருக்கும் பெனிசிலின் மற்றும் ரொட்டிப்பூஞ்சையான கிளாவிசெப்ஸ் போன்றவைகளும்  உள்ளன .

பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தின் பெரும்பகுதி இன்னும் இன்றியமையாத மருந்துகளின் கண்டுபிடிப்புக்காக பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.   இயற்கையின் எண்ணற்ற  ரகசியங்களை கண்டறியும் பாதைகளில் எர்கட் மருந்துகளை போன்ற பல்லாயிரம் தூங்கும் இயற்கை அழகிகள் நாம் அவற்றை தொட்டெழுப்பவேண்டிக் காத்திருக்கின்றன.

***

உசாத்துணை:

  1. https://kids.nationalgeographic.com/history/article/salem-witch-trials
  1. https://www.grunge.com/322595/st-anthonys-fire-the-tragic-illness-that-plagued-history/
  2. https://tudorsdynasty.com/dance-to-death-an-introduction-to-ergotism-in-the-renaissance-guest-post/#:~:text=It%20is%20not%20known%20what%20caused%20the%20Dancing,ground%20to%20make%20flour%2C%20then%20baked%20into%20bread.
  3. https://en.wikipedia.org/wiki/Category:Ergot_alkaloids
  4. எர்கட் நோயைக்குறித்த காணொளி: https://youtu.be/ielb0C1JYsw

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.