இந்திய தேசிய பிரிவினையின் போதும், அதற்குப் பிறகும், மக்கள் அனுபவித்த துயரை, பல எழுத்தாளர்கள், நாவல்கள், கதைகள் மற்றும் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தினர்.
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை “அம்ருத் மஹோத்ஸவ்” ஆக கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் முன்னால் இருந்த சவால்களையும், அதில் நாம் கண்டடைந்த வெற்றிகளையும் நினைத்துப் பார்க்கும் நேரமா கவும் இது அமைகிறது. இந்திய பிரிவினை தொடர்பான இலக்கிய படைப்புகளை நாம் கீழ்வரும் பத்திகளின் வாயிலாக அறிய முயற்சிக்கலாம்.

ஹிந்தி
ஜூட்டா ஸச்.
(இரு பகுதிகள்)
எழுதியவர் யஷ்பால். வீரர் பகத்சிங்கின் நண்பரான யஷ் பால், இந்நாவலை இலக்கியத்தையும், அரசியல் சமூகவியலையும் கலந்து எழுதியுள்ளார். பிரிவினைக்கு காரணமான பல விஷயங்களை குறித்து யஷ் பால் இந்த நாவலில் விவரித்துள்ளார்.
தமஸ்
பீஷ்ம் ஸஹானி
யஷ்பாலைப் போலவே, பீஷ்ம ஸஹானியும் ஒரு பஞ்சாபி. ராவல் பிண்டியில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த இவரது குடும்பம், அங்கிருந்து தூக்கி எறியப்பட்ட தென்பதால், பிரிவினை துயரை இவர் தன் கண் முன் கண்டறிந்தவர். 1970 களில, மகாராஷ்டிரா பிவண்டியில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்களும் முஸ்லிம்களும் மரித்ததில், ஆழமாக பாதிக்கப்பட்டு இவர் இந்த நாவலை எழுதினார். இந்த நாவல் பின் நாட்களில் திரைப்படமாகவும் வெளிவந்தது.
ஆதா காவ்
ராஹி மஸூம் ராஸா
பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மற்ற நாவல்களிலி ருந்து வேறுபட்ட இந்த நாவல், உத்திரப் பிரதேசத்தின் காசி பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரது கிராமத்தோடு இவருக்கு இருந்த பிணைப்பை உணர்ச்சி பூர்வமாக பதிவிடுகிறது. இவருக்கு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய தேவை இல்லாத போதிலும், பாகிஸ்தானின் கொள்கை இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து இளைஞர்களை எப்படி பாதித்தது என்பதை, ஒரு முஸ்லிமாக இருந்த போதிலும், தனது நாவலில் ஆழமாக விவரித்துள்ளார்.
குஜராத் பாகிஸ்தான் ஸே குஜராத் ஹிந்துஸ்தான்
க்ருஷ்ணா சோப்தி
மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த குஜராத் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்து, குஜராத் மாநிலத்தின் முன்னாள் சிரோஹி சமஸ்தானத்தின் சிற்றரசனுக்கு கவர்னஸாக பணிபுரிகையில், தனக்கு நேரிட்ட அனுபவங்களை, சோப்தி ,தனது 90 ம் வயதில் நாவலாக எழுதி 2017 இல் வெளியிட்டார்.

பஞ்சாபி
கூன் தே ஸோல்கே
நானக் சிங்
பாகிஸ்தானின் பெஷாவர் மாவட்டத்தில் பிறந்த இவர், பஞ்சாபி இலக்கியத்தின் ஆலமரமாக கருதப்படுகிறார். முன்ஷி பிரேம்சந்தின் சமூக சீர்திருத்த கொள்கைகளால் பெருமளவும் பாதிக்கப்பட்ட இவரது நாவல்களான ஆக் கி கேட் (1948) (நெருப்பு விளையாட்டு மற்றும் கூன் தே ஸோல்கே (1949) (ரத்தத்தில் தோய்ந்த பாடல்கள்) இந்திய பிரிவினையின் போது பஞ்சாப் மாநிலம் சந்தித்த, வார்த்தைகளில் விவரித்து விட முடியாத கொடூரங்களைப் பற்றி பேசுகிறது.
நாகூன் தே மாஸ் (நகமும் சதையும்) கர்த்தார்சிங் துக்கல்
பஞ்சாபின் கிராமப்புறங்களில், நகமும் சதையுமாக வாழ்ந்து வந்த கிராம மக்களை பிரிவினை எப்படி சிதைத்து போட்டது என்பதை இவரது நாவல்கள் பேசுகின்றன. இவரது மற்றுமொரு நாவலான ‘ அப் ந பஸோ யஹ் காவ்’ பிரிவினைக்கு முன் கிராம மக்களிடையே நிலவிய அமைதியையும் பிரிவினை எப்படி அவர்கள் வாழ்க்கையை சிதறிச் சூறாடியது என்பதை பற்றியும் பேசுகிறது.
தின் துனியா
சுரேந்தர் சிங் நருலா
இந்த நாவல், பிரிவினையின் போது நகரங்களில் நிலவி வந்த சமூக, அரசியல், பொருளாதார, இலக்கிய சூழல் பற்றியும் எப்படி அது ஒரே இரவில் ஆட்டம் கண்டது என்பதை குறித்தும் பேசுகிறது.
பிஞ்சர்
அம்ருதா ப்ரீதம்
ப்ரீத்தத்தின் நாவல் பிரிவினையை பெண்களின் பார்வையிலிருந்து அணுகுகிறது. கடத்திச் செல்லப்பட்ட பெண்கள் படும் பாட்டையும் பிறகு அவர்கள் தம் குடும்பத்தோடு இணைய நினைக்கையில், “குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியபடியால்” விரட்டப்படுவதை குறித்தும் இந்த நாவல் பேசுகிறது.
டூடன் வாலா கூ
சோஹன் சிங் சீதல்
இந்த நாவல் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருந்த நிஜமான அன்பையும், புரிதலையும், பிரிவினைக்குப் பிறகு அது எப்படி மாறியது என்பதையும் பற்றி பேசுகிறது.
ஜதோன் ஸவேர் ஹோய்
நிரஞ்சன் சிங் தஸ்னீம்
பரபரப்பு நிறைந்த 40 களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இரண்டு மதங்களுக்கு இடையே நிகழ்ந்த காதல்களை குறித்தும் பிரிவினை அக் காதல்களை எப்படி கலைத்துப் போட்டது என்பதைக் குறித்தும் பேசுகிறது.

ஆங்கிலம்
Train to Pakistan
Kushwant Singh
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கற்பனை கிராமமான மனோமஞ்சிரா கிராமத்தை பின்னனியாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல், பிரிவினைக்கு முன் மக்களிடையே இருந்த அன்பையும், பிரிவினை குறித்த வதந்திகளும், உண்மையான பிரிவினை நிகழ்வுகளும் எப்படி இரு மதங்களை சிதைத்தன என்பதைக் குறித்து விரிவாகப் பேசுகிறது.
Midnight’s children
Salman Rushdie
பிரிவினை குறித்ததாக இந்த நாவலை கருத முடியாவிட்டாலும், ஆசிரியரின் பெற்றோரும் அவர்களது பெற்றோரும் பிரிவினை காரணமாக அனுபவித்த துயரங்களையும் பிரிவினையை தொடர்ந்து சம்பவித்த கலவரங்களையும் பற்றி பேசுகிறது.
The shadow lines
Amitava Ghosh
பிரிவினையை குறித்து பேசா விட்டாலும், லண்டன் டாக்கா மற்றும் கொல்கத்தாவை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல், உடைந்த குடும்பம் ஒன்றின் ஊமை ஓலங்களையும், குடும்பத்தின் மீது விழுந்த நீண்ட பிரிவினை நிழல் குறித்தும் பேசுகிறது.
Clear light of Day
Anita Desai
பழைய தில்லியை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல், பிரிவினையின் காரணமாக குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பங்களையும் விரிசல்களையும் குறித்து பேசுகிறது.
Ice candy man
Bapsi Sidhwa
இளம் வயது பெண்ணொருத்தியின் பார்வையின் வாயிலாக எழுதப்பட்ட இந்த நாவல், 1940 களின் லாஹோரை பின்னணியாகக் கொண்டு, பிரிவினையோடு நேரடி தொடர்பும் அதை அடுத்து நடந்த கலவரங்களை குறித்தும் பேசுகிறது.
Sunlight on a broken column
Attis Hossain
இந்த சுயசரிதை வடிவிலான நாவல், பிரிவினையை குறித்து அதிகம் பேச விட்டாலும், 1947 க்கு பிறகு நடந்த நிகழ்வுகளை கோடிட்டு காட்டுகிறது.
இவற்றைத் தவிர, கீழ்கண்ட நாவல்களும் பிரிவினையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவை.
- முகுல் கேசவனின் “Looking through the glass”
- Shauna Singh Baldwin ன் “What the body remembers”
- Manohar Malgaonkar ன் “A bend in the Ganges”
- Manju Kapoor’s “Difficult daughters”
போன்ற நாவல்களும் பிரிவினை மற்றும் அதை அடுத்த கலவரங்களை குறித்தும் அவை ஏற்படுத்திய சீரழிவுகளை குறித்தும் பேசுகின்றன.

உருது
ஆக் கா தரியா
குர்ரத்துலைன் ஹைதர்
இந்திய துணை கண்டத்தின் பிரிவினையைப் பற்றி பேசும் முக்கியமான நாவல்களில் இதுவும் ஒன்று. இரு நாடுகளின் 2000 வருடங்களுக்கும் மேலான சமூக கலாச்சார வரலாற்று பின்னணிகளை விரிவாக விவரித்து பேசுகிறது இந் நாவல்.
ஆங்கன்
கதீஜா மஸ்தூர்
ஆக் கா தரியா வைப்போலவே, இந்த நாவலும் இரு நாடுகளின் கலாச்சார வரலாற்றை பற்றி விவரித்தபோதிலும், பிரிவினையைப் பற்றி தணிந்த குரலிலேயே பேசுகிறது. சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்களை குறித்து பேசும் இந் நாவல், அரசியல் மாற்றங்கள் எப்படி குடும்பங்களை தாக்கின என்பது குறித்தும் பேசுகிறது.
கத்தார்
க்ருஷ்ண சந்தர்
1947 க்குப் பிறகு எழுதப்பட்ட இந்த நாவல், அதிகம் பேசப்படாத போதிலும் பிரிவினை குறித்து எழுதப்பட்ட நாவல்களில் மிகவும் முக்கியமானது.
உதாஸ் நஸ்லேன்
அப்துல்லா உசேன்
இந்த நாவல் பிரிவினையை குறித்து எழுதப்பட்ட உருது நாவல்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பஞ்சாபின் கிராமப்புற மக்களின் துயரத்தையும் இழப்பையும் மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் இந்த நாவல், நவீன மற்றும் தற்கால உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. .
பெங்காலி
அகுன் பாகி ( the fire bird) by Hasan Azizul Haq
தயாமொயீர் கதா ( a story long long ago) by Sunanda Sikhdar
இந்த இரு நாவல்களும் பிரிவினைக்கு முன்பான வரலாற்றையும், பிரிவினைக்கு பின் நடந்த நிகழ்வுகளையும் நினைவு கூர்கின்றன.
இபார் கங்கா ஒபார் கங்கா
(Epar Ganga Opar Ganga) by
Jyotirmoy Devi
இந்த நாவல், பிரிவினை குறித்தும் அதை யடுத்து நிகழ்ந்த இட மாற்றம் குறித்தும், மக்கள், குறிப்பாக பெண்கள், அனுபவித்த சித்திரவதைகள் குறித்தும் பேசுகிறது.
சிந்தி நாவல்கள்
- பக்கியாரா (Pakhiara)
- வலரக்கான் (Valarakhan)
- விச்சரியா (Vichiriya) : (Birds separated from their flock) : Gobind Malhi
ஆசிரியர் தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த நாவலை எழுதியுள்ளார். கதையின் நாயகன், தன் முழு குடும்பமும் பிரிவினையின் போது கிராமத்தை விட்டு வெளியேறிய போதும், அவர் தான் வாழ்ந்த சிந்த் பகுதியை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே உயிர் துறக்கிறார். பிரிவின் வலியை பேசும் இந்த நாவல், சிந்தி மொழியில் எழுதப்பட்ட சிறந்த நாவலாக கருதப்படுகிறது.
ஹிந்தி மற்றும் உருது மொழியை போலவே, சிந்தி மொழியிலும் பிரிவினை மற்றும் அதை யடுத்த பயங்கரவாதத்தால் மக்கள் அனுபவித்த வேதனை குறித்தும் பல சிறந்த சிறுகதைகள்எழுதப்பட்டுள்ளன. சதாஹத் ஹசன் மந்தோ, ராஜேந்தர் சிங் பேதி, க்வாஜா அஹமத் அப்பாஸ், குர்ரத்துலைன் ஹைதர், போன்றோரும், இன்ன பலரும் உலகத் தரம் வாய்ந்த பல சிறுகதைக ளை படைத்துள்ளனர்.
மேற்கூறிய புத்தகங்கள் குறித்த விவரங்கள் முழுமையானவை அல்ல. இவை தவிர மற்ற வேறு பல புத்தகங்களும், பிரிவினை குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கக்கூடும். அனைத்தையும் இங்கு பட்டியலிடுவது சாத்தியம் இல்லை என்பதால் அவற்றைப் பற்றி பேசவில்லை.