பிணை

“ஐயோ, சீக்ரமா வாங்க. பவானி துடிக்கிறாளே, தெய்வமே, என்னத்துக்கு இப்டி ஆட்டிப் படைக்ற.” சாந்தியின் கூச்சலில் வாசலில் தென்கிழக்கு மூலையைத் தோண்டி தான் எடுத்த அந்தப் பதுமையை கையில் வைத்து நடுங்கிக் கொண்டிருந்த கணேசன், அதைச் சட்டென்று உள்ளேயே சிறிது மறைத்துவிட்டு தொழுவத்திற்கு ஓடினான்.

அவன் தோட்டத்தில் ஒரு வாரம் முன்பு பிறந்த பவானி என்ற கன்றுக்குட்டி விலுக்விலுக்கென்று இழுத்துக் கொண்டு தவித்தது. அவனைப் பார்த்தவுடன், சாந்தி, அதன் வைக்கோல் படுக்கையில் இன்னமும் வைக்கோலைப் போட்டு, கோணிகளையும் பரப்பினாள். “ரகு டாக்டரைக் கூப்டுங்க, பரவால்ல, மனுஷ டாக்டரா இருந்தா என்ன? மாடு, கன்னுன்னா இரக்கப்படுவாரு. அப்படியே சீமாச்சுக்கிட்ட சொல்லி கோனானை கூப்டுவரச் சொல்லுங்க. கல்யாணி அழுவுது பாருங்க; கயிறறுத்துக்கிட்டு பாஞ்சிடும். நான் சாம்பிராணி போட்றேன். சீக்கிரமாப் போய்ட்டு வாங்க.”

கணேசனுக்கு நிலையின் தீவிரம் புரிந்தது. காலையிலிருந்தே எத்தனை எத்தனை நிகழ்வுகள் இன்று! தனக்குத்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா? யாரை நோக, யாரைக் கேட்க? அன்று காலை புலரும் போதே அவன் இயல்பிற்கு மாறாகக் கலவையான உணர்ச்சிகளுடன் தான் எழுந்தான்.

வெகு தொலைவில் பம்பை முழங்குவது கேட்டது. பொற்பனையான் புறப்பாடு போலிருக்கிறது என்று நினைத்த கணேசன் திரும்பி வீட்டின் உட்புறம் பார்த்தான். தலையில் கட்டிய துண்டுடன் அவன் மனைவி சமைத்துக் கொண்டிருந்தாள். ஈரத் தலையைக் காய வைத்து சேர்த்துக் கட்டிய பிறகு எதையும் செய் என்று அவன் எத்தனையோ முறை சொல்லிவிட்டான். அவள் பழக்கம் அவளுக்கு. இன்னமும் அனு எழுந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. நேற்று இரவு கொஞ்சமாகவா குழந்தை சிரமப்பட்டாள்? எத்தனை உயிர்த்துடிப்பான பதினான்கு வயதுப் பெண். எங்கிருந்து வந்தது இந்த நோய்? திடீர் திடீரென்று மயங்கி சரிந்து விழுகிறாள். ஈ சி ஜி, ஈ ஈ ஜி, ஸ்கேன் உட்பட அனைத்து டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்தாகி விட்டது. என்னவென்று புரிபடவில்லை. மந்திரம், தந்திரம், நவக்கிரஹ ஹோமம், குல தெய்வம், கிராம தெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாவற்றிற்கும் செய் நேர்த்தி செய்தாகி விட்டது. அவள் எதற்கோ பயந்திருக்கிறாள் என்று சிலர் சொன்னதன் பேரில் மன நோய் மருத்துவரிடமும் சிகிச்சை எடுத்தார்கள். ஒன்றும் பலனில்லை. சாப்பிடுவது, தூங்குவது எல்லாம் அரைகுறை. எப்போது மயங்கி விழுவாள் என்பது தெரியாததால் பள்ளிக்கும் அனுப்ப முடியவில்லை. வீட்டில் ஏதோ படிக்கிறாள். ஆனால், பரிட்சைக்கு அனுப்ப முடியவில்லை. இப்படியே போனால் முடிவுதான் என்ன? பன்னிரண்டு வயது வரை ஒரு குறையுமில்லையே; அவள் முதன் முதலில் மயங்கி விழுந்த போது  நடிக்கிறாள் என்றே அவன் நினைத்தான். அவன் மனைவி ‘ஐயோ, உக்காந்திருக்கேளே, அவளுக்கு என்னமோ ஆச்சு’ என்று அலறிய பிறகுதான் அவன் ஓடி வந்து நாடியைப் பிடித்துப் பார்த்தான். அது தாறு மாறாக எகிறி அடித்தது. அன்று ஆரம்பித்த மருத்துவப் பயணங்கள், கவலைகள், பணப் பிரச்சனைகள், அவள் ஒரே பெண்ணாகப் போய்விட்டாளே, நமக்குப் பிறகு யார் கவனிப்பார்கள் என்ற வேதனை. வீட்டில் சிரிப்பில்லை, வேடிக்கையில்லை, இயந்திரத்தனமாக மூவரும் இருக்கும் நிலை சகிக்கவில்லை. அவன் மனைவி பேசுவதேயில்லை; வெறித்த பார்வையுடன் பூஜையறையில் இருக்கும் சாமி படங்களைப் பார்ப்பாள். தேம்பி அழுவாள், அப்புறம் சமையலறையில் தஞ்சம். எப்போதாவது அனுவைப் பாடச் சொல்வாள், அதற்கு நேரம் காலமில்லை. அவளும் சந்தோஷமாக ஆரம்பித்துவிட்டு பாதியில் நிறுத்துவாள். ஒரு மாதிரி சிரிப்பாள். டக்கென்று படுத்துக் கொண்டு விடுவாள். அவள் செயல்களுக்கு அர்த்தம் புரியவில்லை. அவள் வியாதி இன்னதென்று தெரியவில்லை. அரசல் புரசலாக அவளைப் ‘பைத்தியம்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர் அக்கம் பக்கத்தார்.

கணேசன் நீண்ட பெருமூச்சு விட்டான். முந்தா நாள் பொற்பனையானுக்குக் கொடை கேட்டு வந்த போது அவனுக்குச் சலிப்பாக இருந்தது. ஆனால், ஊரின் காவல் தெய்வம். அதை விட்டுவிட முடியாது. பெற்றுக் கொண்ட நிர்வாகி சொன்னார் :”ஐயா, உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது. வழக்கமான பாதைல கால்வாய் எடுக்கறாங்க. அத்தால ஐயன் இந்த ரோட்ல வருவாரு. கொழந்த குட்டியோட பாக்கலாம் பாருங்க.” என்றார்.

காலையிலேயே பவனி ஆரம்பித்துவிட்டது போல இருக்கிறது. அனுவையும் எழுப்பி தரிசிக்க வைக்க வேண்டும். மலங்க மலங்க விழித்த அவள் விறுவிறுவென்று பல் தேய்த்து, முகம் அலம்பி, தலை கோதி, சாந்துப் பொட்டும், விபூதியுமாய் வந்த போது இவள் இப்படியே பளிச்சென்று குத்து விளக்காக இருந்து விடக்கூடாதா என்று அவன் மனம் ஏங்கியது. அவன் மனைவி சாந்தியும் புன்னகையுடன் அவர்களுடன் வாயிலுக்கு வந்தாள்.

நாயன ஒலி, உடுக்கை சத்தம், உறுமி மேளம், கொம்பூதும் பாராக்கள், சங்கு ஒலித்துக் கொண்டே பின் தொடர்பவர்கள்; குருத்தோலையில் பொற்பனையானின் சிறிய களிமண் படிவத்தை வைத்து அதற்கு சந்தனமும், குங்குமமிட்டு ஒற்றை எலுமிச்சையைப் பாதத்தில் வைத்து பச்சையாடை அணிந்த ஆண்களும், பெண்களுமாக எடுத்துச் சென்றனர். ‘இப்படி ஒரு வேண்டுதலா?’ என்று சாந்தி ஆச்சர்யத்துடன் கேட்டாள். “நானே இப்போத் தான் பாக்கறேன்” என்றவன் தேர், உச்சியில் கொடியோடு திருப்பத்தில் வருவதைப் பார்த்தான். சிறிய தேர். சாரதியின் இடத்தில் பூதம் போன்ற தோற்றமுடைய ஒன்று, இரட்டைக் குதிரைகளை ஓட்டிச் செல்வதான அமைப்பு. உள்ளே பொற்பனையான் தங்க ஜரிகை சுற்றப்பட்ட பனைத் தண்டு இடது கையிலும், உறையிலிருந்து உருவப்பட்ட நீள் கத்தி வலது கையிலுமாக நின்று கொண்டிருந்தார். கரிய பெரிய விழிகள், வெண்படலத்தில் அதிகச் சிவப்பு ஜொலித்தது. நீலப் பட்டாடை இடையில். அதுகூட குடியானவர்கள் தார் பாய்ச்சிக் கட்டிக் கொள்ளும் கோலத்தில் இருந்தது. அகன்ற மார்பும், திரண்ட தோளும், குறுகிய இடையும், வலுவான தொடைகளும், பனைக் குலைகளிடையே பதிந்த பாதமுமாக அவர் பவனி வந்து கொண்டிருந்தார். கணேசனின் வீட்டை நெருங்கியது தேர். அதன் தட்டிலிருந்து பூசாரி போன்ற ஒருவர் திடீரென்று கீழே குதித்தார். குதித்த வேகத்தில் சுழன்றாடத் தொடங்கினார். உறுமி மேளம் தாள கதியை மாற்றி ஒலித்தது. தேரின் முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அப்படியே திரும்பி நின்று விட்டார்கள். சந்தனத்தையும், விபூதியையும், குங்குமத்தையும், பனை ஓலைகளையும் ஆடுபவர் மீது தலைமைப் பூசாரி போன்றிருந்தவர் தூவிக் கொண்டேயிருந்தார். ஒரு துள்ளுத் துள்ளி சாமியாடி கணேசனின் கைகளைப் பற்றி இழுத்தார். நிலை குலைந்த அவன் அந்த வேகத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறினான். அனு அசைவேதும் காட்டாமல் நின்றாள். அவன் மனைவி அலறினாள்.

“பனையான் சொல்றேன் கேட்டுக்கடா; உன் வீட்ல உயிர் பலி நடக்கப் போகுது. உன் தாத்தா செஞ்ச செய்வின உனக்கே திரும்பி உங்குடும்பத்துக் குருத்தக் கேக்குது. நீ யாரயாச்சும் கூட்டியாந்து வாசல்ல தெங்கிழக்கு மூலைல இருக்கற பாவைய எடு. அத்தைக் கொண்டு சுடுகாட்ல பொதைச்சு நாப்பது நாள் பாலூத்து. வெள்ளிக் கிண்ணத்ல பால் பாயாசம் செஞ்சு நாப்பத்தி ஓராம் நாள் குடும்பத்தோட என்ன வந்து கும்பிடு. பனங்கள்ளு படைக்கணும் அத்தோட. என்ன செய்றியா? செய்யறியாடா, பரதேசி, நீ செய்வ, நீ செய்வ”

ஆடியவர் அவன் கைகளை விட்டு விட்டார். அவன் இன்னமும் நடுங்கினான். அவர் மூர்ச்சையுற்று விழுந்தும் விட்டார். யாரோ பனை விசிறியால் அவருக்கு விசிறினார். ஒரு அம்மாள் பானகம் கரைத்துக் கொண்டுவந்து அவருக்குக் குடிக்கத் தந்தார். ‘கொழு மோர் காச்சிக் கொடு உன் ஆம்படையானுக்கு; பயந்திருக்கிறார் பாரு’ என்று சாந்தியிடம் சொன்னார் அந்த அம்மா. “இவர்களெல்லாம் யார், இதென்ன இப்படி ஒரு நிகழ்ச்சி” என மனது அல்லாடியது கணேசனுக்கு. உடலே வியர்வையால் போர்த்தியதைப் போல ஆடிய அந்த மனிதர் சிறிது நேரத்தில் தெளிவாக எழுந்து நடந்து போனார். தேர் அவன் வீட்டைத் தாண்டிப் போய்விட்டது.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. செய்வினை, பாவை, பனங்கள்ளு, சுடுகாடு ..… தலை சுற்றியது. உயிர்ப்பலி என்று ஏதோ சொன்னார். இளங்குருத்து என்றாரே, ஐயோ, அனுவா?

அவனால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவனுக்கு என்ன தெரியும்? யாரைப் பார்ப்பான்? யார் இதற்கெல்லாம் உதவி செய்வார்கள்? பேசாமல் நாமே அந்தத் தென்கிழக்கு மூலையைத் தோண்டிப் பார்க்கலாமா? ஆனால், அவர் யாரையாவது வைத்துத் தோண்டச் சொன்னாரே? இதைச் செய்வதற்கு யார் முன் வருவார்கள்? இதற்குள் ஊரில் ‘செய்வினை. பாவை’ என்ற செய்தி கண் காது வைத்துப் பரவியிருக்கும். ஆம், நானே தோண்டுகிறேன், என் பாவம் அல்லது என் தலைமுறைப் பாவம் என்னைப் பொசுக்கட்டும். அதுதான் சரி. பாவை கண்ணில் பட்டால் அந்தச் சாமியாடி சொன்னதெல்லாம் உண்மை. அவன் கடப்பாறையைக் கொண்டு முதல் அடி போடுகையில் வீட்டை அனாவசியமாக இடிக்கிறோம் என்றும் தோன்றியது. ஆனால், அனு.. அவள் சரியாக வேண்டும், உயிரோடும் இருக்க வேண்டும், இப்போது இடித்தால் என்ன, பின்னர் பூசி விடலாம்.

சச்சதுரமாக இடித்துக் கொண்டே வந்தான். வியர்வை ஆறாகப் பெருகியது. மதிய சூரியன் தகித்தது. அவன் கண்ணிற்குத் தெரியாத எதிரியுடன் மோதுகிறான்; அவனா, நானா பார்த்துவிடுவது என்ற எண்ணம் ஒரு புறம், அறிவிற்கு உட்பட்டுத்தான் இதைச் செய்கிறோமா என்ற எண்ணம் மறுபுறம் அவனை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. அவன் கை ஓய்ந்து கடைசி அடி அடிக்கையில் உலோகத்தின் மீது மோதும் ஒரு ஒலி கேட்டது. மண்ணுக்குள் கிடந்த நிர்வாண ஆணுருவம் வாயைக் கோணலாக்கி, கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு நின்றது. அதை எடுக்கப் பயந்தவன், அப்படியே விட்டுவிடலாமா என நினைத்தான். அதற்கு ஏதேனும் பூஜை செய்ய வேண்டுமோ என எண்ணியவன், “இங்க பார், என் மனசறிஞ்சு நா தப்பு ஏதும் பண்ணதில்ல. அனுவ விட்டுடு. சாமியாடி சொன்ன மாரி நான் சுடுகாட்டுல உனக்கு பால் ஊத்தறேன்” என்று கைகளில் ஏந்திக் கொண்டான்.

இத்தனையும் நினைவில் சுழல அவன் ரகு டாக்டருடன் வீட்டிற்குள் வந்தான். கோனான் கன்றைப் பரிசோதித்துக் கொண்டிருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.