மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பத்தாண்டுகளில் பெண்களின் நாவல் படைப்பு தொடங்கியது. இரண்டாவது பத்தாண்டுகளில் 1910 ல் இருந்து 1920 வரை மல்லவரபு சுப்பம்மா, ‘கலாவதி சரித்திரம்’ (1914), எஸ் சுவர்ணம்மா, ’இந்திரா’ (1916), நாவல்கள் எழுதியதாக ‘நவ்யாந்திர சாகித்ய வீதிகள்’ மூலம் தெரிகிறது. 1916 ல் வி.ஸ்ரீனிவாசம்மா, ‘சேதுபிண்டாரி’ என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் ராஜமகேந்திரவரம் ஸ்ரீமனோரமா முத்ராக்ஷர சாலையில் பிரசுரமானது. வேண்டுகோள் என்ற தலைப்பில் நாவலாசிரியை எழுதிய முன்னுரையைக் கொண்டு சிறு வயதிலிருந்தே அவர் ஆந்திர இலக்கியத்தின் மீது அன்போடு புத்தகங்களை படித்துள்ளார் என்றும் சமகாலத்தில் அதிகமாக வந்த நாவல்களை மிக ஆர்வத்தோடு படித்தபடி முற்காலங்களில் படைப்பிலக்கியம் செய்த பெண்களிடமிருந்து உற்சாகம் பெற்று எழுத்துத் துறையில் நுழைந்தார் என்றும் தெரிகிறது. அதுவரையிலேயே அவர் எழுதிய  ‘ப்ரியான்வேஷணம்’ என்ற நாவலைப் பதிப்பித்த ஸ்ரீலீலாவதி சமாஜம் இந்த நாவலையும் பிரசித்ததாக நன்றியுரையில்  குறிப்பிட்டுள்ளார். சேதுபிண்டாரி நாவலின் இடது பக்கத்தில் லீலாவதி நாவல்கள் என்று இருப்பதைக் காண முடிகிறது.

1812  ஐப்பசி மாதத்தில் நாவலின் கதை ஆரம்பமாகிறது. கிரிஜாபுரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு ஒரு இளைஞன் பிரயாணம் செய்வதாக கதையின் தொடக்கம் அமைந்துள்ளது. கிரிஜாபுரத்திலிருந்து செல்லும் வழியில் சிந்தியா ஹோல்கருடைய அரசாங்க எல்லையில் காடுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்தியா, பேஷ்வா, ஹோல்கர் இவர்களிடையே வம்ச பரம்பரையாக தொடர்ந்து வரும் கலகங்களின் பின்னணியில், உள்ளூர் அரசாள்பவர்களின் உதவியோடு, ‘தக்குர், பண்டாரிகள்’ என்ற இரு கொள்ளைக் கூட்டத்தார் நடத்தும் அட்டூழியங்களை கருப்பொருளாகக் கொண்டு எழுதிய நாவல் இது. அதனால் இது மொழிபெயர்ப்பு நாவலாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் நாவலாசிரியை தன் வேண்டுகோளில் இது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. கதை இந்தூரில் தொடங்கி நிஜாம் ராஷ்டிரத்தில் உள்ள எலிசாபுரத்திலிருந்து விந்திய மலைக் காட்டு பிரதேசங்களின் வழியாக மகாராஷ்டிராவில் உள்ள அமராவதிக்கும், அங்கிருந்து கிருஷ்ணா நதிக்  கரையோரமாக குண்டூரு, கடப்பா, கர்னூல், மீண்டும் நிஜாம் ராஷ்டிரத்திற்கும் வந்து அங்கிருந்து நாக்பூர் வழியாக காட்டு வழியில் வந்து முடிகிறது. தக்கர் மற்றும் பாண்டாரிகளின் படையெடுப்பு, கொள்ளை, இம்சை, பெண்களின் மீது நடந்த வன்முறை, கொள்ளையடித்த செல்வங்களைப் பகிர்ந்து கொள்வது, அவற்றில் தங்கள் பங்கும் இருப்பதால் குற்றங்களை கட்டுப்படுத்தும் உத்தேசமே இல்லாத அரசாங்க அதிகாரிகளின் இயல்பு போன்றவை இந்த நாவலில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. 

சகதேவராவு, தக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவனுடைய மைத்துனி லக்ஷ்மி பாய். அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அவள் காதலித்ததோ ராவோஜியை. சகதேவராவு அவளை தூக்கிச் செல்வதும் அவள் அவனுடைய சிறையிலிருந்து தப்பித்து காட்டுவாசிகளின் துணையோடு அவனைத் தாக்குவதும் அவர்களிடம் பிடிபட்ட ராவோஜி ராவை காப்பாற்றுவதும் இந்தக் கதையில் ஒரு கிளை. 

சகதேவராவால் சிறைபிடிக்கப்பட்ட மித்ரவர்மா என்ற வியாபாரியின் மகள் பிரியம்பதா சகதேவராவை எதிர்க்கிறாள் என்பது நாவலின் இன்னொரு கிளை. பிண்டாரிகளின் தலைவன் சேதுமர்தனனின் பெயரைக் கொண்டு இந்த நாவல்     சேதுபிண்டாரி என்றானது.

ராவோஜியும், ஆண் வேடத்தில் இருந்த லட்சுமிபாயும் சகதேவராவிடமிருந்து சேதுபிண்டாரியைக் காப்பாற்றுவது ஒரு அம்சம். பிரியம்வதா என்ன ஆனாள்,  சேதுபிண்டாரி எதனால் நாவலின் கரு பொருளுக்கு மையமானான் என்பதைக் கூறும் கதைப்பகுதி இரண்டாவது பாகத்தில் இருந்திருக்கலாம். நாவலில் முதல் பாகம் மட்டுமே இப்போது கிடைக்கிறது. ஸ்ரீனிவாசம்மாவின் வரலாற்று அறிவு, சரித்திரப் பார்வை, பூகோள அறிவு, காடுகளைப் பற்றிய புரிதல் போன்றவை இந்த நாவலில் அழகாக வெளிப்படுகின்றன.

1916 லேயே வேமூரி ஆண்டாளம்மாள் எழுதிய  ‘கமலினி’ நாவல் வெளிவந்தது. ஆனந்தா முத்ராலயத்தின் பதிப்பகத்தாரான ஆர் வெங்கடேஸ்வர் அண்ட் கம்பெனி இதனை வெளியிட்டது. ராமாராயணிங்கார் இதற்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதியுள்ளார். இவர் காளஹஸ்தி ஜமீன்தார். பானகல் அரசராக புகழ்பெற்றவர். ஜஸ்டிஸ் பார்ட்டியின் தலைவர். அனைத்தையும் விட அடக்கப்பட்ட வர்க்கங்களின் சுதந்திரத்திற்காக உதவியவர். அதனால்தான் இருக்கலாம், கமலினி நாவலுக்கு அவர் முன்னுரை எழுதியுள்ளார். இலக்கியம் படைக்கும் சாமர்த்தியம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று எண்ணுவது கூடாது என்கிறார் இவர். இந்திய இலக்கிய உலகில் பெண்களின் இலக்கிய சம்பிரதாயத்தை பற்றி எடுத்துக் கூறுவதோடு அல்லாமல், சுவர்ணம்மா என்ற பெண்மணி நாவல்கள் எழுதிய விஷயத்தைக் குறிப்பிட்டு அவருடைய நாவல்கள் பாடநூல்களாக உள்ள விஷயத்தையும் நினைவுபடுத்துகிறார். ஆண்டாளம்மா, ராவ்பகதூர் ஆழ்வார் செட்டியின் மனைவி என்றும் நாவலில் கதையை அழகாக அமைத்துள்ளார் என்றும் சரள சுந்தரமான மொழி நடையும், தேசிய சம்பிரதாயங்களும் நாவலில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். முக்கியமாக வனப் பகுதிக் காட்சிகளை வெளிப்படுத்துவதில் அவருடைய திறமை வெளிப்படுகிறது என்றும், கணவரோடு சேர்ந்து கொச்சின் காடுகளில் வாழ்ந்த அனுபவத்தை நன்றாக பயன்படுத்தி உள்ளார் என்றும் மெச்சிக்கொள்கிறார். இந்தியப் பெண்கள் அவருடைய வழியில் இலக்கிய விவசாயம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். பூமிகா என்ற பெயரில் எழுதிய முன்னுரையில் நாவலாசிரியை இந்த நாவலைப் பூர்த்தி செய்வதில் கிடைத்த உற்சாகத்தைக் கூறி தன் எழுத்துக்களில் தப்புகள் இருந்தால் மன்னித்து நல்லவற்றை ஏற்று ஆதரவு அளிக்குமாறு வாசகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரிஜாதநகரத்தின் இளவரசன் மனோகரன் பல முயற்சிகள் செய்து குமுதினியைத் திருமணம் செய்து தன் நகரத்திற்கு அழைத்து வரும்போது அவர்களைக் கொல்வதற்கு அனுப்பப்பட்ட வீரேசம் நட்பாக நடித்து அவர்களோடு அலைகிறான். அப்போது அவர்களிடையே இருக்கும் அன்பைப் பார்த்து, கொல்வதற்கு மனம் ஒப்பாமல் அவர்களைப் பிரிப்பதற்கு முயற்சிப்பது, அதன்படி செய்வது, குமுதினியைக் காப்பாற்றி கோவிந்தம்மா தன் வீட்டில் அடைக்கலம் கொடுப்பது, அங்கு அவள் மாடுகளை மேய்த்து வீட்டு வேலை செய்து காலம் கழிப்பது, அவளுக்காக தேடித்தேடி வேதனை அனுபவித்த மனோகரனுக்கு, தான் காதலித்த புருஷனை தேடிக் கொண்டு செல்லும் ஒரு பெண் தென்படுவது, மேலும் பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து இறுதியில் குமுதினியும் மனோகரும் சந்திப்பதாக இந்த நாவல் முடிகிறது. வலிந்து வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு பாலிய விவாகம், முதியவரை விவாகம் செய்வது போன்ற சமூகத்தின் தீய வழக்கங்களைப் பற்றி பெண்களின் எதிர்ப்புக் குரலை பதிவு செய்வது இந்த நாவலில் உள்ள சிறப்பு.

1917 ல் இரண்டு நாவல்கள் வந்தன. ஒன்று  ‘காஞ்சனபல்லி கனகாம்பா’ (காஞ்சனபல்லி கனகம்மா என்று கூட கூறுவர்) எழுதியவர் அமிர்தவல்லி. இரண்டாவது வேங்கட செல்லாயம்மா எழுதியவர் வித்யாவதி.  ‘அமிர்தவல்லி’  நாவலை எம் ஆர் கிருஷ்ணாராவ் அண்ட் கம்பெனி பிரசுரித்தது. மன்னேபல்லி  ராமகிருஷ்ணாராவு எழுதிய தலையங்க வேண்டுகோள் மூலம் இந்த நாவல், தமிழில் பண்டித நடேச சாஸ்திரி எழுதிய திக்கற்ற இரு சிறுமிகள் (The two orphans on the terrible adventure) என்ற  நாவலின் மொழிபெயர்ப்பு என்றும் மதராஸில் துரைகள் நடத்திய பிராமண விதவைகள் சரணாலயத்தில் ஸ்கூல் ஃபைனல் பரிட்சைக்கு படித்து வந்த கனகாம்பாள் இந்த நாவலை எழுதினார் என்றும், அவர் விஞ்ஞான சந்திரிகா மண்டலி  வைத்த பரிட்சையில் பரிசு பெற்றார் என்றும் தெரிகிறது. மொழிபெயர்ப்பு இனிமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நீதி கற்பிப்பதாகவும் இருப்பதாகவும் உவமைகளில் கற்பனைத் திறன் வெளிப்படுகிறது என்றும் புகழ்கிறார்.

அமிர்தவல்லி, பச்சையப்ப முதலியாரின் இரண்டாம் மனைவி. அவளுக்கும் அது இரண்டாவது திருமணம். ஏற்கனவே அவளுக்கு அம்பிகாபதி என்று ஒரு மகன் உள்ளான். பச்சையப்பா மூலம் பிறந்த புதல்வி பாலலதா. இந்த நாவல், ஒரு தாத்தா இரு சிறுமிகளோடு ஊராச்சி என்ற ஊருக்குச் செல்வதாகத் தொடங்குகிறது. அந்தச் சிறுமிகளில் பெரியவள் பெயர் ராதா. சிறியவள் அலமேலு. அலமு என்று செல்லமாக அழைப்பார்கள். வந்த அன்று இரவே தீ விபத்தில் குடிசை பற்றி எரிந்து தாத்தா மரணிக்கிறார். சிறுமிகள் இருவரும் அனாதைகளாக ஊரை விட்டுச் செல்லும்போது வழியில் ஒரு பெண் இவர்களை மோசம் செய்து திருடிகளாக போலீசாரிடம் சிக்க வைத்து கோர்ட்டில் நிறுத்துகிறாள். ஜட்ஜ், அவர்களை நிரபராதிகளாக அறிவித்து தங்கும் வசதியோடு கூடிய ஒரு பள்ளிக்கு அனுப்புகிறார். 

அங்கு வந்த, பணக்காரப் பெண்மணி கனகவல்லி, ராதையை வளர்ப்பதற்கு அழைத்துச் செல்ல விரும்புவது, தங்கையை விட்டு வரமாட்டேன் என்ற ராதா பதிலளிப்பது, கனகவல்லி அகங்காரத்தோடு பேசுவது, கனகவல்லியோடு கூட வந்த தனகோடி என்ற பெண்மணி, சிறுமிகளுக்கு நல்ல கல்வி கற்பித்து சொந்தக் காலில் நிற்கும்படி செய்ய வேண்டும் என்று எண்ணி வைரம் பதித்த ஒட்டியாணம் செய்வதற்காக தான் சேர்த்து வைத்த இருபத்தைந்தாயிரம் ரூபாய்களை அதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று தன் கணவரிடம் கூறுவது,  மனைவியின் நல்ல புத்திக்கு மகிழ்ந்து அந்த இரு சிறுமிகளையும் கோயம்புத்தூரில் உள்ள பள்ளிக்கு அனுப்புவது வரை இந்த நாவலின் முதல் கட்டம். படிப்பிலும் சங்கீதத்திலும் பத்தாண்டுகள் கழிந்தபின், அங்கு படிப்பதற்காக வந்து நட்பான பாலலதாவோடு, ராதா ஊராச்சிக்குச் செல்கிறாள். அலமு, காமாட்சி முதலியார் வீட்டுப் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதற்காக கள்ளிக்காட்டுக்கு செல்கிறாள். இவ்வாறு பல திருப்பங்களோடு கதை வேகமாக பயணிக்கிறது. 

அமிர்தவல்லியின் சதியால் சிறு வயதிலேயே பச்சையப்ப முதலியாரிடம் இருந்து பிரிக்கப்பட்ட அவருடைய முதல் மனைவி அம்புஜத்தின் பிள்ளைகள் – அலங்காரம், ரங்கம், ராதா, அலமு என்பது தெரிகிறது. காவேரி நதியில் தள்ளப்பட்ட அந்த குழந்தைகளைக் காப்பாற்றிய முதியவர், தன் இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்றும் தனக்குப் பிறகு அந்த பிள்ளைகள் அனாதைகளாகக் கூடாது என்றும் ஊராச்சிக்கு அழைத்துச் செல்வதும், அந்த இரவே தீப்பிடித்த குடிசையில் எரிந்து போவதும். அவரோடு கூட பச்சையப்ப முதலியாரின் அந்தரங்க காரியதரிசியாக இருந்த அருண்நாத் கொலை செய்யப்படுவதும், இவற்றின் பின்னால் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனைத் திருமணம் செய்ய வேண்டிய குந்தலா, அமிர்தவல்லியின் குழந்தைகளுக்கு டீச்சராக வருகிறாள். இப்படியாக கதை உணர்ச்சி பூர்வமாகத் தொடர்கிறது. மருத்துவத்துக்காக தூரதேசம் சென்ற பச்சையப்பா திரும்ப வந்து காமாட்சி முதலியார் வீட்டில் அலமேலுவை பார்த்து, தன் மனைவி அம்புஜத்தைப் போலவே இருப்பதைக் கண்டறிந்து தீர விசாரிக்கையில் பல விஷயங்கள் வெளிப்படுகின்றன. பச்சையப்ப முதலியாரின் செல்வம் அனைத்தும் தன் பெண்ணுக்கு மட்டுமே சேர வேண்டும் என்பதற்காக அவருடைய முதல் மனைவியின் குழந்தைகளைக் கொல்லுவதற்காக குடிசையில் நெருப்பு வைத்தது மற்றும் அமிர்தலதா செய்த முயற்சிகள், குழந்தைகளின் நிலை பற்றி அறிந்த அருண்நாத்தைக் கூட கொல்வது, அனைத்தும் சேர்ந்து இறுதியில கணவனின் முன்னால் குற்றவாளியாக அவளை நிறுத்தின. குந்தலா, அவளைக் கொன்று தன் பகையை தீர்த்துக் கொள்வதோடு நாவல் முடிவுக்கு வருகிறது. அமிர்தவல்லியின் முதல் கணவரின் மகன் அம்பிகாபதியை அலமேலுவும், பச்சையப்பாவின் அத்தை மகள் பாகீரதியின் மகன் பசுபதியை ராதாவும், பினாகபாணியை பாலலதாவும்  திருமணம் செய்வது இறுதி கட்டம். மிகவும் சாகசத்தோடு கூட பிரச்சனைகளை எதிர் கொண்டு வாழ்க்கையில் வென்ற ராதாவும் அலமுவும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். காதலித்து திருமணம் செய்ய முன்வந்த இளைஞனின் துர்மரணத்திற்குக் காரணமானவரை அடையாளம் கண்டு பழி தீர்ப்பது வரை பிடிவாதமாக உயிரோடு இருந்த குந்தலா மற்றுமொரு எடுத்துக்காட்டு. பெண்கள் எவ்வாறு இருக்கக் கூடாது என்று காட்டுவதற்கு தேர்ந்தெடுத்த அடையாளம் அமிர்தவல்லி. அவளுடைய பெயரை இந்த நாவலுக்கு தலைப்பாக வைத்தது கொஞ்சம் விசித்திரமாகவே தெரிகிறது. எது எப்படியானாலும், “இந்த அற்புதக் கதையை படிக்க தொடங்கினால் இறுதிவரை படிக்கத் தோன்றுகிறது. உற்சாகத்தோடு பயணிக்க வைத்து இதயத்தை ஈர்க்கிறது” என்று தலையங்க வேண்டுகோளில் சுபோதினி கிரந்தமாலா எடிட்டர் மன்னெனேபல்லி ராமகிருஷ்ணராவு எழுதிய சொற்கள் அத்தனையும் உண்மை.

1917 லேயே வந்த வித்யாவதி நாவலை எழுதிய வேங்கட செல்லாயம்மா, ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். ராயவரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீமேரி முத்ராக்ஷர சாலையில் இந்த நாவல் பிரசுரமானது. வித்யாவதியின் கணவன் பிற பெண்களின் மோகத்திற்கு ஆளாகி தீயவழியில் செல்கிறான். அவனை எவ்வாறு காப்பாற்றிக் கொள்கிறாள் மனைவி என்பதை விவரிப்பது இந்த நாவலின் நோக்கம். 

பிஏ படித்த இளைஞனான மாதவன், கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி, பெற்றோருக்கும், புதிதாக குடித்தனம் செய்ய வந்த மனைவிக்கும் துயரம் அளிப்பவனாக இருகிறான். உயிருக்கே ஆபத்து வரும் நேரத்தில் ஆண் வேடத்தில் சென்று அவனைக் கண்டுபிடித்து துணையாக வந்து மனைவி அவனைக் காப்பாற்றுவதும், மனம் திருந்திய மாதவன் மேல்படிப்புக்காக மனைவியோடு சேர்ந்து மதராசு பிரயாணம் செல்வதும் இதில் உள்ள கதைப் பொருள். 

1880 களில் பரவலாக இருந்த சாராய வியாபாரம் பற்றி அறிந்து ஜோதிபாபுலே, கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். குரஜாட அப்பாராவு, ‘கன்யாசுல்கம்’ நாடகத்தில் சாராயக்  கடைகளின் காட்சியைக் காட்டி, வெள்ளைக்காரனின் சாராய வழிமுறையை கடுமையாக விமரிசித்தார். உண்மையில் அதற்குச் சமமாக பாரத தேசத்தின் பணக்கார வர்க்கம் கஞ்சா மற்றும் அபின் வியாபாரத்தில் முதலீடு செய்து மேலும் வளர்ந்து வந்தாலும் அதனை ஒரு ஒழுக்கக் கேடான விஷயமாக யாரும் இலக்கியத்தில் எடுத்துக் கூறவில்லை. அப்படிப்பட்ட சமயத்தில் செல்லாயம்மா கஞ்சா பழக்கத்தை ஒரு பிரச்சினையாக நாவலில் எழுதியது சிறப்பாக உள்ளது. கஞ்சாவுக்கு அடிமையாவது, அது ஏற்படுத்தும் பணம் சம்பாதிக்கும் வழிகள்,  புதியவர்களையும் அந்த பழக்கத்திற்கு ஊக்கமூட்டுவதாக செய்வது, வீட்டில் உள்ளவர்களின் கண்ணை மறைக்கும் அளவுக்குத் துணிவது – இவையனைத்தும்  மனிதனின் இயல்பில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. மாதவனின் பாத்திரத்தைச் சித்திரிப்பதில் செல்லாயம்மா இதனை நன்றாக எடுத்துக்காட்டியுள்ளார். ஆண்கள் இதுபோன்ற பழக்கங்களுக்கு உள்ளாகும் போது அவற்றின் தாக்குதல் பெண்களின் மீது எத்தனை அழுத்தத்தை கொண்டு வரும் என்று காட்டுவது செல்லாயம்மா செய்த மற்றும் ஒரு செயல். மாதவனின் தாய்க்கும் ஊரில் உள்ள பெண்களுக்கும் இடையே இரண்டு முறை நாவலாசிரியை ஏற்படுத்திய உரையாடல் காட்சிகள் அதற்கு உதாரணம். பெண்களின் இடையே ஒருவருக்கொருவர் நட்பான சூழ்நிலையையும், மாமியார்  மருமகளிடையே சினேகத்தையும் அன்பையும் சகஜமான விஷயங்களாக சித்திரிப்பதன் மூலம் செல்லாயம்மா இந்த நாவலில் ‘பெண்களுக்குப் பெண்களே எதிரி’ என்று தலைமுறைகளாக வரும் எண்ணத்தைத் திருப்பி அடித்து, ஆண்களின் தீய பழக்கங்களால் பெண்கள் எப்போதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார். ஆனால், நாவலின் முடிவில் மட்டும் அத்தகைய ஆண்களை நல்லவர்களாக மாற்றிக்கொள்வது என்பது பெண்களின் பொறுப்பு என்றும் ஆண்கள் தமக்கு எத்தனை கஷ்டம் கொடுத்தாலும் எதுவும் கூறாமல் பதிவிரதையாக இருந்தால்தான் பெண்கள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்றும் விரிவாக எடுத்துச் சொல்கிறார்.

(தொடரும்)

***

குறிப்பு: இந்த ஆக்கம் தெலுங்கு மொழியில் நெச்செலி என்ற பெயர் கொண்ட ஓர் இணைய இதழில் தொடராக இதே சமயம் வெளி வருகிறது. தெலுங்குப் பத்திரிகைக்கான சுட்டி இதோ: https://www.neccheli.com/

Series Navigation<< ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்புலவர்த்தி கமலாவதி தேவி எழுதிய ‘குமுத்வதி’ வரலாற்று நாவல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.