துயர் கூட்டும் நிலவு

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
月みれば
千々に物こそ
悲しけれ
我が身ひとつの
秋にはあらねど

கனா எழுத்துருக்களில்
つきみれば
ちぢにものこそ
かなしけれ
わがみひとつの
あきにはあらねど

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் சிசாதோ

காலம்: கி.பி. 889-923.

இத்தொடரின் 16வது செய்யுளான “நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்” மற்றும் 17வது செய்யுளான “கடவுளும் காணா அதிசயம்” ஆகியவற்றை இயற்றிய புலவர்கள் நரிஹிரா மற்றும் யுக்கிஹிரா ஆகியோரின் சகோதரர் ஒதொந்தோவின் மகன்தான் இப்பாடலை இயற்றிய புலவர் சிசாதோ. ஜப்பானிய இலக்கியத்தில் காலத்தால் அழியாத 36 இடைக்காலக் கவிஞர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றிருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 25 பாடல்கள் உள்ளன. அவற்றில் 10 பாடல்கள் கொக்கின்ஷூ தொகுப்பிலும் மீதம் 15 பாடல்கள் இதரத் தொகுப்புகளிலும் இடம்பெற்றுள்ளன.

இவரது தந்தை ஒதொந்தோ அரசாங்கத்தில் அவ்வளவாக உயரிய பதவிகளை வகிக்காவிட்டாலும் கல்வியிற் சிறந்தவராகவும் சீனமொழியில் கரைகண்டவராகவும் இன்றளவும் அறியப்படுகிறார். சிசாதோவும் சீனமொழி அறிஞராகவும் கன்ஃபூசியஸின் தத்துவங்களைப் பரப்பிய தத்துவஞானியாகவும் இன்று நினைவுகூரப்படுகிறார்.

பாடுபொருள்: துயர நினைவுகளைக் கிளரும் நிலவு.

பாடலின் பொருள்: இந்த இலையுதிர்காலம் எனக்கு மட்டுமானது இல்லை என்றாலும்கூட இன்றைய நிலவு ஆயிரக்கணக்கான துயரங்களை என் இதயத்துள் கிளறுகிறது. 

இந்த எளிய பாடல் சீனமொழிப் பாடல் ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது. இவரது 25 பாடல்களில் பல சீனக் கவிதைகளின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாக இருக்கின்றன. 

சீனாவை டாங் வம்சம் ஆண்டபோது கி.பி 772-846 ல் சீனாவில் வாழ்ந்த கவிஞர் பை ஜுயி என்பவர் ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். குவான் பான்பான் என்றொரு பெண் சீன அமைச்சர் ஜங் யின் என்பவரின் விருப்பத்துக்குரியவராக இருந்திருக்கிறார். அப்பெண்ணும் அமைச்சருக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார். அமைச்சர் இறந்த பின்னும் அவரது மாளிகையிலேயே அப்பெண்ணும் தனியாக வசித்து வந்தார். அப்பெண் பாடியதுபோல் கவிஞர் பை ஜுயி ஒரு பாடலை இயற்றியிருக்கிறார். முழு நிலவொளி வீசும் இந்த இரவில் நான் தனிமையில் முதிர்வயதை அடைவதை இந்த இலையுதிர்காலம் பார்த்துச் செல்கிறது என இருக்கிறது அக்கவிதை.

இப்பாடலிலும் நிலவு, தனிமை, இலையுதிர்காலம் எனப் பல பொருட்கள் பொதுவாக இருக்கின்றன. இலையுதிர்காலம் என்பது துயரைத் தருவது என்பதும் சீனமொழி இலக்கியத்திலிருந்து பெறப்பட்டது என்கிறார்கள். தமிழ் இலக்கியங்கள் இந்த இடத்தில் வேறுபடுகின்றன. தமிழில் பெரும்பொழுதுகள் (பருவங்கள்) 6 குறிப்பிடப்பட்டுள்ளன. இளவேனில்‌ (சித்திரை, வைகாசி), முதுவேனில்‌ (ஆனி, ஆடி), கார்காலம்‌ (ஆவணி, புரட்டாசி), கூதிர்‌ (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) ஆகியன. துயரைக் குறிக்கும் முதற்பொருட்கள் நெய்தலும் பாலையும். இரங்கலின் நிலமான நெய்தலுக்குப் பெரும்பொழுது எதுவும் இல்லாமலும் பிரிவின் நிலமான பாலைக்குக் கோடையும் பின்பனியும் வருதலும் ஜப்பானிய, சீன இலக்கியங்களிலிருந்து வேறாக இருக்கிறது. 

இலையுதிர்கால இரவுகள் நீளமானவை. அதில் வரும் இந்த நிலவோ ஆயிரக்கணக்கான துயர நினைவுகளை என் இதயத்துள் கிளருகிறது. இலையுதிர்காலம் எல்லோருக்குமானதுதான். ஆனால் இந்த நிலவு கிளரும் நினைவுகளோ எனக்கானது மட்டுமே. இப்பாடலில் இதைக் கூறுவது ஆண்பாலா பெண்பாலா என்று வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் பெண்பால் என்றே உரையாசிரியர்கள் பொருள் கொள்கிறார்கள்.

வெண்பா:

வருந்தவே உள்ளதோ உள்ளமும் என்னில்
இருந்தும் கிளரவே தோன்றுமோ – தருநிழல்
நீக்கும் இலையுதிரின் நீள்இரவு தன்னில்
பெருந்துயர் கூட்டும் நிலவு

Series Navigation<< மலைவளி வீழ்த்து தருக்கள்!செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.