ஜப்பானிய துளிப்பாக்கள்

ஹைக்கூ – ஒரு சிறு குறிப்பு

ஹைக்கூ (Haiku) என்பது மூன்று சொற்றொடர்களில், முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் எனப் பதினேழு நேரசை நிரையசைகளைக் கொண்டு அமைக்கப்படும் ஜப்பானியக் கவிதை வடிவம். ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பானிய மொழிக்கலவையாகத் தோன்றி, ஹொக்கூ என்று அழைக்கப்பட்டு ஹைக்கை என்று திரிந்து, பிறகு ஹைக்கூ என அழைக்கப் படலாயிற்று. ஜப்பானிய மொழியில் ஹைக்கூ கவிதைகளின் மூன்று சொற்றொடர்களும் ஒரே வரியில் எழுதப்பட்டிருக்க, அதன் ஆங்கில மொழியாக்கம் அனைத்தும் 3 வரிகளில் அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது. 

17_ஆம் நூற்றாண்டில்  மட்சுவோ பாஷோ (Matsuo Bashō) மற்றும் ஊஜிமா ஒனிட்சுரா (Uejima Onitsura) ஆகிய இருவரும் இக்கவிதை வடிவத்திற்கு மெருகூட்ட ஹைக்கூ அதன் தனித்தன்மைக்காகப் பிரபலம் அடைந்தது. தொடர்ந்து ஆங்கில மொழியிலும் பலர் இந்த வடிவத்தைப் பின்பற்றத் தொடங்கினர்.  தற்போது தமிழ், பிற இந்தி ஆயினும் இயற்கையின் நேரடி தரிசனம் அவற்றில் சற்று குறைவென்றே சொல்லப்படுகிறது. தமிழில் ஹைக்கூ கவிதைகள் துளிப்பா, குறும்பா, விடுநிலைப்பா போன்ற பெயர்களால் அறியப்படுகின்றன.    

ஹைக்கூ, எந்த வார்த்தை அலங்காரங்களும் இன்றி மிகக்குறைந்த சொற்களில் நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துபவை. இயற்கையை உள்ளது உள்ளபடி கண்முன் காட்சியாக விரியச் செய்பவை. அகத்திலிருந்து புறத்தையும், புறத்திலிருந்து அகத்தையும் காணச் செய்பவை. 

“பழைய குளம்   

உள்ளே குதிக்கிறது தவளை   

நீரின் ஒலி”

பாஷோவின் உலகப் புகழ் வாய்ந்த  இத்துளிப்பா சொல்ல வருகிற தத்துவமாகப் பார்க்கப்படுவது: ‘பழைய குளம் – உலகம்; உள்ளே குதிக்கிறது தவளை – வாழ்க்கை; நீரின் ஒலி – வாழ்க்கையின் சலனங்களும், அவை அலை அலையாகத் தோன்றி அடங்குவதும்..’! இந்த ஒரு துளிப்பா  ஆங்கிலத்தில் பலரால் பலவிதமாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. ஆக, ஒரு துளிப்பாவை எப்படி எல்லாம் புரிந்து கொள்ள இயலும் என்பதற்கான ஒரு உதாரணமாக மட்டுமே இதை நாம் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.

மட்சுவோ பாஷோ, மஸாவோகா ஷிகி, யொஸா புஸான், கோபயஷி இஸா ஆகியோர் ஜப்பானில் புகழ் பெற்று விளங்கிய ஹைக்கூ கவிஞர்களில் குறிப்பிடத் தக்க நால்வர் எனலாம்.

பெயரில்லாத மலை – மட்சுவோ பாஷோ 

1.
எந்த மரத்தின் மலரிலிருந்து
இந்த நறுமணம் வருகிறது
அறிய இயலாதது.

2.
அவ்வப்போது, நாம் வெளியே செல்வோம்
பனியில் மகிழ்ந்திருக்க.. நான்
வழுக்கி விழும் வரையிலும்.

3.
மற்றுமொரு வருடம் சென்றது
ஒரு பயணியின் நிழல் என் தலையில்
வைக்கோல் செருப்புகள் என் காலில்.

4.
கோடைப் புற்கள்
எஞ்சியிருப்பதெல்லாம்
போர்வீரனின் கனவுகள்.

5.
வசந்த காலம்
பெயர் இல்லாத மலை
முகத்திரை அணிந்திருக்கிறது காலைப் பனியில்.

6.
இலையுதிர்க்காலத் தொடக்கம்
கடல், மரகத நெற்பயிர்
இரண்டும் ஒரே பச்சையில்.

7.
மின்னலின் ஒளிப்பாய்ச்சல்
இருளை ஊடுருவிச் செல்கிறது
நாரையின் அலறல்.

8.
எனது பழைய புற்குடிசை
தற்போது வசிக்கப்படுகிறது மற்றொரு தலைமுறையால்
அலங்கரிக்கப்பட்டிருக்கிறது பொம்மைகளால்.


  1. என்னை அப்படியேப் பின்பற்றாதீர்கள்
    அது முலாம்பழத்தின் இரு பாதிகளைப் போல
    சலிப்பைத் தருகிறது.

மட்சுவோ பஷோ (1644 -1694) புகழ் பெற்ற ஜப்பானின் எடோ காலத்துக்கவிஞர். இவரது வாழ்க்கைக் காலத்திலேயே “ஹைக்காய் னொ ரெங்கா”  என்னும் கவிதை வடிவத்தில் பெயர் பெற்றவராக விளங்கினார். சுருக்கமானவையும் தெளிவானவையுமாகக் கொண்டாடப்படும் ஹைக்கூ கவிதைகளில் வல்லுனராக இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு ஹைக்கூ கவிதைகளின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். ஜென் தத்துவத்தில் எழுதப்பட்டமுதல் ஹைக்கூ கவிதை இவருடையதே என்றும் கூறப்படுகிறது. ஆசிரியராகத் தொழில் புரிந்த இவரது கவிதைகள் ஜப்பானில் நினைவுச் சின்னங்களிலும், மரபு சார்ந்த இடங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

இலக்கியத் துறையினரின் சமூக மற்றும் நகர் சார்ந்த வாழ்க்கை முறையைப் புறந்தள்ளி, எழுதுவதற்கான அகத்தூண்டலைப் பெற நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தவர். இவர் பெற்ற நேரடி அனுபவங்களே இவரது கவிதைகளில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம். காட்சிகளையும் உணர்வுகளையும் எளிமையான கூறுகளில் அடக்கியவர்.

**

நான் புத்தரைப் பிரார்த்திக்கும் பொழுதுகளில்.. 

– கோபயஷி இஸா 

1.
நான் புத்தரைப் பிரார்த்திக்கும் பொழுதுகளில் எல்லாம்
கொன்று கொண்டேயிருக்கிறேன்
கொசுக்களை.

2.
பூச்சிகளிலும் கூட
சிலவற்றால் பாட முடிகிறது
சிலவற்றால் முடிவதில்லை.

3.
என் காதருகில் கொசு
என்னை செவிடன் என
நினைக்கிறானா?

4.
மாலை நிலவின் கீழே
இடுப்புவரை துகிலுரிக்கப்பட்டு
நத்தை.

5.
தேம்பி அழாதீர்கள், பூச்சிகளே –
காதலர்களே, நட்சத்திரங்களுக்கும் கூட
பிரிவு நிச்சயம்.

6.
நான் மென்மையாகத் தொடுகின்ற எல்லாமே,
ஐயகோ
முட்புதரைப் போல் குத்துகின்றன.

7.
குளிர்காலத் தனிமை –
கேட்டுக் கொண்டிருக்கிறேன், அந்த மாலையில்
மலையில் பொழியும் மழையை.

8.
கடைசி முறை என நினைக்கிறேன்
என் தந்தையின் முகத்திலிருந்து
ஈக்களை ஓட்டுகிறேன்.

9.
நீங்கள் பிறந்ததும் ஒரு குளியல்
நீங்கள் இறந்ததும் ஒரு குளியல்,
என்னவொரு மூடச்செயல்.
*

கோபயஷி இஸா (1763 – 1828) ஜப்பானின் மிகப் புகழ் வாய்ந்த நான்கு ஹைக்கூ கவிஞர்களில் ஒருவர். ஜப்பானின் ஷினானோ பகுதியில் காஷிவபோரோ எனும் ஊரில் பிறந்தவர். கோபயாஷி யடாரோ, கோபயாஷி நொபுயுகி எனவும் அறியப்பட்டவர். இறுதியில் ‘ஒரு கோப்பைத் தேநீர்’ எனும் பொருள் கொண்ட  ‘இஸா’ எனும் புனைப்பெயரை வைத்துக் கொண்டார்.

ஹைக்கூ கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவர் எழுதிய இருபதாயித்திற்கும் மேலான ஹைக்கூ கவிதைகள் இன்றைய நாள் வரையிலும்  ஒரு பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளது. சித்திரங்கள் வரைவதிலும் வல்லவர்.

இஸாவின் தந்தை ஒரு விவசாயி. மூன்று வயதாக இருக்கும் போதே தாயை இழந்தார். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இவர் சந்தித்த இன்னல்களுக்கு ஆரம்பமாக இருந்திருக்கிறது தாயின் மரணம். தந்தை மறுமணம் செய்து கொள்ள, மாற்றாந்தாய் மூலமாக ஒரு சகோதரன் பிறந்தார். இஸா தன் பாட்டியால் வளர்க்கப்பட்டார். இவருக்கு 14 வயதாகையில் அன்பு செலுத்திய பாட்டியும் காலமாகி விட சொந்த வீட்டில் தனிமையாய் உணர்ந்தார். உற்சாகமற்ற சிறுவனாய் ஊருக்குள் வயல்களில் சுற்றித் திரிந்தார். இவரது போக்கு மாற்றாந்தாய்க்குப் பிடிக்காமல் போனது. 15 வயதில் தந்தையால் எடோ நகருக்கு பிழைப்பைத் தேடிக் கொள்ளுமாறு அனுப்பப்பட்டார். 

அடுத்த 10 வருடங்களுக்கு அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றிய சரியான தகவல்கள் இருக்கவில்லை. அதன் பின் ஜப்பானின் பல இடங்களுக்கும் பயணித்து தன் எழுத்தால் புகழ் பெற்றார். 1801_ஆம் ஆண்டு தந்தை காலமான போது சொந்த ஊருக்குத் திரும்பி மாற்றாந்தாய் மற்றும் சகோதரனுடன் தகராறு செய்து சொத்தில் ஒரு பகுதியைப் பெற்றார்.  “ என் தந்தையின் கடைசி நாட்கள்” என  தந்தையைப் பற்றி இவர் எழுதிய டைரிக் குறிப்புகள், “இஸாவின் தந்தையுடைய கடைசி நாட்கள்” என்ற பெயரில் இன்றும் முக்கியப் படைப்பாக அறியப்பட்டு வருகிறது.

இவர் வாழ்க்கையில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோகங்களாக அமைந்து போயின, காஷிவபோரோவில் இவரது முதல் மனைவி மற்றும் 3 குழந்தைகளின் அடுத்தடுத்த மரணங்கள், தோல்வியில் முடிந்த இரண்டாவது திருமணம், வீடு எரிந்து சாம்பலான சம்பவம், மற்றும் மகிழ்ச்சியைத் தராத மூன்றாவது திருமணம்.

இஸாவின் பல கவிதைகள் உலகின் மிகச் சிறிய ஜந்துக்களான கொசுக்கள், வவ்வால்கள், பூனைகள் ஆகியவற்றைப் பற்றியதாக, சோகத்தின் சாயத்தைப் பூசிக் கொண்டவையாக, மனிதர்களின் நடத்தையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துபவையாக இருப்பதைக் காணலாம்.

~oOo~

சிகப்புப்தட்டான்பூச்சி 

– கிகாகு

1. 

பார்வையிழந்த குழந்தை

தன் அம்மாவின் வழிகாட்டலில்

ரசிக்கிறான் செர்ரி மலர்களை.

2.

அரிசி உருண்டை அலங்காரங்கள்

எலியின் கண்களில்

யோஷினோ மலை.

3.

புளிக்கும் செர்ரி

அதில் இறக்கைகளைச் சேர்க்க

சிகப்புப் தட்டான்பூச்சி.

4.

வடிசாற்றுக் குடுவைக்குள்

மூங்கில் தொப்பியிலிருந்து மழைத்துளிகள்

நெல் நாற்றுகளின் அறுவடை.

5. 

ஃப்யூஜியில் பனி,

மதுக்கடையில், 

எஞ்சியுள்ளன ஈக்கள்.

6.

வருடம் தொடங்குகிறது!

என் வீடு முழுவதிலும், 

நட்சத்திரங்கள் நிறைந்த வானின் செல்வம்.

7.

எடோவில் வசந்தகாலம்

கோயில் மணி விற்காமல்

ஒரு நாள் கழிந்ததில்லை.

8.

பிரகாசமான நிலவு 

பாயின் மேல்

பைன் மரக் கிளையின் நிழல்கள்.

9.

தண்ணீரில் பிரதிபலிப்பு

குறுக்கே பறக்கும் அணில்

விஸ்டெரியாவின் மேலங்கி.

(wisteria – ஜப்பான் நாட்டில் பூச்சொரியும் ஒரு தாவர வகை)

*

டகரை கிகாகு (1660-1707):  ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான இவர், மட்சுவோ பாஷோவின் சீடர்களில் நன்கு அறியப்பட்ட ஒருவர் ஆவார். எடோ நகரத்தில் (இன்றைய டோக்கியோ) இவரது தந்தை ஒரு மருத்துவராக இருந்தார். ஆனால் தந்தையின் வழியில் செல்ல விரும்பாது தொழில்முறை ஹைக்கூ கவிஞராக இருக்கவே கிகாகு விரும்பினார். இவரது கவிதைகள் அவற்றின் நகைச்சுவைத் திறனுக்காகவும் கடினமான கட்டமைப்புக்காகவும் அறியப்பட்டவை. 

பாஷோ, குறிப்பாகத் தனது கடைசிக் காலத்தில், தனது கவிதைகளில் கிராமப் புறத்தைக் கலைநயத்துடன் காட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் கிகாகு நகர்ப்புற வாழ்வை முன்னிலைப் படுத்தியதுடன் அது வாய்ப்பளித்த  நம்பவியலாத காட்சிகளைக் கவிதைகள் ஆக்கினார். எளிதில் புரியாத, புரிந்திட அதிக பிரயத்தனத்தைக் கோரும், வார்த்தை விளையாட்டுகளையும் குறியீடுகளையும் கொண்ட, முற்றிலும் வேறான இருகாட்சிகளை இணைத்தளிப்பது போன்ற கவிதைகளைப் படைத்தார். அவர் இறந்த தருணத்தில், எடோவின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எடோ நகரம் (இன்றைய டோக்கியோ) அந்த சமயத்தில் ஒரு மில்லியன் மக்கட்தொகையுடன் உலகின் மிகப் பெரிய நகரமாகத் திகழ்ந்ததும் குறிப்பிடத் தக்கது.

**

துளிப்பாக்கள்; கவிஞர்கள் பற்றியக் குறிப்புகளின் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

**

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.