சாஹிர் லூதியான்வி

This entry is part 10 of 12 in the series கவிதை காண்பது

நீ இந்துவாகப் போவதில்லை
முஸ்லிமாகப் போவதில்லை
நீ மனிதனின் வாரிசு
மனிதனாகப் போகிறாய்

சாஹிர் லூதியான்வி

பாடல் இடம்பெற்ற திரைப்படம் ‘தூல் கா ஃப்ஹூல்’.

கவிஞர் சாஹிர் லூதியான்வியின் இயற்பெயர் அப்துல் ஹயி ஃபஸல் மொஹம்மத். லூதியானாவில் பிறந்து லாகூருக்குச் சென்று பின் மும்பைக்கு வந்தவர்.

இந்தித் திரைப்படங்களில் இடம்பெற்ற பக்திப் பாடல்களுள் ‘நயா ராஸ்தா’ திரைப்படத்தில் இடம்பெற்ற பக்திப் பாடல், ‘ஈஷ்வர் அல்லாஹ் தேரே நாம்’ பாடலுக்கு முக்கியமான இடம் உண்டு. ஸ்ரீலக்ஷ்மணாச்சார்யாவின் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பக்தி இசையில் மகாத்மா காந்தியின் ‘ஈஷ்வர் அல்லாஹ் தேரே நாம்’ சேர்க்கப்பட்டது. அந்த அடியை முதல் அடியாகக் கொண்டு நயா ராஸ்தாவின் ஈஷ்வர் அல்லாஹ் தேரே நாம் பாடல் எழுதப்பட்டது. பாடலை எழுதியவர் சாஹிர் லூதியான்வி.

இந்த முதலடியைக் கொண்டு ‘அல்லாஹ் தேரோ நாம் ஈஷ்வர் தேரோ நாம்’ என்னும் இன்னொரு பக்திப் பாடலையும் சாஹிர் லூதியான்வி ‘ஹம் தோனோ’ என்னும் திரைப்படத்தில் எழுதியிருக்கிறார்.

சாஹிர் இரண்டு முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றவர். இந்திப் பாடல்களை அறிந்தவர்கள் ‘கபி கபி மேரே தில்மேன் கயால் ஆத்தா ஹை’ (எப்பொழுதாவது நினைக்கிறேன்) பாடலை அறிந்திருப்பார்கள். அது கபி கபி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். சாஹிர் அந்தப் பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். தாஜ் மஹால் திரைப்படத்தின் ‘ஜோ வாதா கியா வோ நிபானா படேகா’ (தந்த வாக்கினைக் காப்பாற்ற வேண்டும்) பாடலுக்கும் விருது பெற்றார்.

திரைப்பாடல்களில் இசைக்கு வரிகளா வரிகளுக்கு இசையா என்னும் பட்டிமன்றம் காலங்காலமாக நிகழ்கிறது. சாஹிர் தனது வரிகளுக்கு இசை அமைக்கப்படுவதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் எஸ்.டி. பர்மனுக்குக்கும் அவருடன் மனக்கசப்பு உண்டானது. ஒரு காலகட்டத்தில் தனது பாடலைப் பாடும் லதா மங்கேஷ்கருக்குத் தரப்படும் தொகையைவிட தனக்கு ஒரு ரூபாய் அதிகமாகத் தரவேண்டும் எனப் பிடிவாதமாகச் சொல்லியுள்ளார்.

சாஹிரின் இளமைக்காலம் சுவாரசியமான திருப்பங்களைக் கண்டுள்ளது. லூதியானாவில் கல்லூரிக் காலத்தில் உடன் பயிலும் மாணவியிடம் காதல் வயப்பட்டதால் அவருடைய ‘இளங்கலை’ கல்லூரிப் படிப்பு தடைப்பட்டது. அதன் பின்னர் அவர் எழுதிய காதல் கவிதைகள் பேசப்பட்டன. 1944இல் அவர் வெளியிட்ட ‘தல்கியான்’ (கசப்பு) கவிதைப் புத்தகம் வெளியிடப்பட்டவுடன் விற்றுத் தீர்ந்த்தாம். லூதியானாவிலிருந்து லாஹூருக்குக் குடிபெயர்ந்து அங்கும் அவரால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியவில்லை. அவருடைய அரசியல் நிலைபாடுகளின் காரணமாக கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டார்.

அவருடைய நண்பர் ஒருவர் ‘விடுதலையின் பாதையில்’ என ஒரு திரைப்படத்தை எடுப்பதாகவும் அதில் பாடல்கள் எழுத மும்பைக்கு வரவேண்டும் என்றும் சாஹிருக்குத் தகவல் வருகிறது. மும்பைக்கு வந்த சாஹிருக்கு எஸ்.டி. பர்மனுடன் தொடர்பு உண்டாகிறது. 1951இல் எஸ்.டி. பர்மனுக்கு சாஹிர் லூதியான்வி எழுதிய ‘தண்டி ஹவாயேன் லெஹ்ராக்கே ஆயே / ருத் ஹை ஜவான் தும்கோ யஹான் கைசே புல்லாயேன்’ (குளிர்க் காற்று அலையெழுப்பி வந்தது / பருவம் இளமை இங்கே உன்னை எப்படி அழைத்தது) பாடல் வெளியாகிறது. அதன் பின்னர் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் சாஹிர் பணியாற்றியுள்ளார்.

‘ஏ தில் தும் பின் கஹீன் லக்தா நஹீன்’ (நீயில்லாமல் என் நெஞ்சுக்கு எதுவும் இல்லை),

‘மேரே தில் மே ஆஜ் க்யா ஹை’ (என் இதயத்தில் இன்று என்ன உள்ளது),

‘தும் அகர் சாத் தேனே கா வாதா கரோ’ (நீ என்னுடன் இருப்பதற்கு உறுதியளித்தால்),

‘ஜோ வாதா கியா வோ நிபானா படேகா’ (தந்த வாக்கினைக் காப்பாற்ற வேண்டும்)

ஆகிய காதல் பாடல்களை இந்தித் திரைக்கு எழுதிய அவர் தன் காதலில் வெற்றிபெறவில்லை. கல்லூரிக்காலத்திலும், புகழ்பெற்ற கவிஞனான பின்னும் சாஹிர் லூதியான்வியின் காதல் திருமணம் வரையில் செல்லவில்லை.

தன்னுடைய காதலி சுதா மல்ஹோத்ராவுக்காக அவர், ‘சலோ ஏக் பார் ஃபிர்சே அஜ்னபி பன்ஜாயேன் ஹம் தோனோன்’ (வா, மீண்டும் ஒருமுறை நாம் அறிமுகமில்லாதவர்களாக மாறிவிடுவோம்) பாடலை எழுதியதாகச் சொல்வதுண்டு.

சாஹிர் லூதியான்விக்கு 1971இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1973இல் ‘சோவியத் நேரு விருது’ அவருடைய புத்தகத்துக்காக வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தின் இலக்கிய விருதும் வழங்கப்பட்டது.

பாடல் வரிகளுக்குதான் இசை, லதா மங்கேஷ்கரை விடவும் ஒரு ரூபாய் அதிகம் தரவேண்டும் இப்படியாக இந்தித் திரைப்பாடலில் கவிஞர் சாஹிர் லூதியான்வியின் கோரிக்கைகள் சற்று அதிகமாகத் தோன்றினாலும், பாடலாசிரியர்கள் அனைவரும் என்றும் நினைக்கும்படி ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்து வெற்றியும் பெற்றுள்ளார். விவித பாரதியில் பாடல் ஒலிக்கும்போது பாடலாசிரியரின் பெயரையும் கண்டிப்பாகச் சொல்லவெண்டும் என்னும் கோரிக்கை அது.

சாஹிர் லூதியான்வி 1980ம் ஆண்டு, தன்னுடைய 59வது வயதில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

Series Navigation<<  ரஹ்பர் ஜவ்ன்பூரிஷகீல் பதாயுனி >>

One Reply to “சாஹிர் லூதியான்வி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.