
நாட்டக்குறிஞ்சியில் வேங்கட சுப்பையர் பாடிய ‘பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென்னுள்ளம் பரவசமிகவாகுதே’ என்ற பாடலின் சரணத்தில் ‘கான மயிலாட, மோனக் குயில் பாட’ என்று வரும். முதலில் இதைக் கேட்ட போது, கானக் குயிலும், மோன (அழகிய) மயிலும் என்று தானே இருக்க வேண்டும், மாறுதலாக இருக்கிறதே என நினைத்தேன். அவர் ‘தீக்குள் விரலை வைத்தால், நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா என நந்தலாலாவைப்’ பாடிய பாரதி இனத்தவர் என்று பின்னர் புரிந்து கொண்டேன். இந்த நூற்றாண்டு, ஏன் சென்ற நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் கான மயில் பாட, மோனக் குயிலாட என்று காட்டிவிட்டன/ காட்டியும் வருகின்றன.
ஜனவரி,6, 2021 கண்ணீரோடு, தன்னை, டென்னிஸீ, (Tennessee) நாக்ஸ்வில்லைச் (Knoxville) சேர்ந்த, எலிசபெத் என்று மட்டுமே தன்னை அடையாளப் படுத்திய அந்தப் பெண், “நாங்கள் தலை நகரை முற்றுகையிட்டுள்ளோம்- ஆம்- உள்நாட்டுப் போர் இது. இதற்காகக் காவல் துறை என் முகத்தில் எப்படி அடித்திருக்கிறது, பாருங்கள்.” நீல நிற ட்ரம்ப் கொடி அவர் கழுத்திலிருந்து கடலிற்குச் செல்லும் நில முனை எனத் தொங்கியது. கீச்சகச் (Twitter) செய்தியாகி அவரது காணொளி பரவலாகியது. அந்தக் கலவரத்தில் அவர் கலந்து கொண்டதென்னவோ நிஜம்; வலைத்தளங்களில், சமூக ஊடகங்களில் அதை இயங்கலை நிகழ்வாக, சுடச்சுட பல இலட்சம் பேர் பார்த்தனர். மக்களாட்சி முறையை எதிர்த்து நடந்த இதை வியப்புடன், பயத்துடன், அவநம்பிக்கையுடன், சினத்துடன், சிரிப்புடன் பார்த்த மனிதர்கள், எலிசபெத்தை சமூக ஊடகங்களில் பலவகைகளில் உருமாற்றினர். அவர் இணையத்திற்கான விருந்தானார். இந்த வீடியோவைத் ‘தானியங்கு இசையுடன்’ (Auto-Tune) இணைத்து, சமூக ஊடக விரும்பிகள் தத்தமது படைப்பூக்கத்தைக் காட்டினர். துப்பறியும் (!) நிபுணர்கள் சதி வேலை என்று தம் அறிவுத் திறனைக் காட்டினர்- எலிசபெத் பொய் சொல்லியிருக்கக் கூடும்- அவள் முகத்தில் காவல் துறை கோலால் அடிக்கவில்லை- இந்த உள்ளூர்க் கிளர்ச்சியே புரளி; இப்படியெல்லாம், அரசியல் கட்சி சார்ந்து, இடம் பெறும் ஊடகம் சார்ந்து, பார்ப்போரின் இயல்பு மற்றும் விருப்பம் சார்ந்து சந்தோஷப்படுத்தவோ, வருத்தப்படுத்தவோ ‘மீம்ஸ்கள்’(Memes- போன்மி என்றொரு சொல்லில் தமிழில் அழைக்கப்படுகிறது) வந்தன. தன்னை முழுதும் வெளிப்படுத்தாத அரைகுறைப் பெயருடன் அவர் ஊடகங்களின் நினைவுப் பொருளாகப் புகழ் பெற்றார். அந்த வீடியோ காட்சியின் சூழல் மாற்றப்பட்டு, வேறு ஒன்றுடன் கலக்கப்பட்டு, மறு விநியோகம் செய்யப்பட்டு அனைத்துத் தரப்பிலான அர்த்தத்திற்கும் பயன்பட்டது. தொடப்படும் ஒவ்வொரு கரமும் உருவாக்கும் கலாச்சாரத்தின் வழியே உலவும், ஆசிரியரற்ற, எதிரொலி என ‘மீம்ஸை’ சொல்லலாம். 1976ல் ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins) என்ற உயிரியலாளர் இச் சொல்லை தன் ‘த செல்ஃபிஷ் ஜீன்’ (The Selfish Gene) என்ற நூலில் பிறப்பித்தார். இப்போது ‘மீம்ஸ்’ என்பவை உருவமும், சிறிய வரிச் செய்தியும் கொண்ட நிகழ்கலைக் கூறுகள்! இவைகள் ஒரு குறிப்பிட்ட வகை- பெரும் உருவங்கள் கொண்டவை- பச்சைத் தவளைகள் உலகத் தலைவர்களாக உலா வந்த மீம்ஸை நினைத்துக் கொள்ளுங்கள்; அப்படித்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை- அவைகள் சொற்றொடர்களாக இருக்கலாம்- ட்ரம்ப் தேசம்; முழக்கங்களாக இருக்கலாம்- (Stop the steal) திருடுவதை நிறுத்து); சைகைகளாக இருக்கலாம் (விரல் மடிப்புகள்) எண்கள், ஹேஷ்டேக் எதுவாக வேண்டுமானாலும்- இது பெரிய பட்டியல்.

இந்த 21ம் நூற்றாண்டில், அரசியல் செய்திகளை தனி நபரோ, குழுவோ பலரைச் சென்றடையும் வகையில் எளிதாகப் பரப்புவதற்கு மீம்ஸும் ஒரு சக்தி வாய்ந்த கருவி. ‘அமெரிகாவை மீண்டும் சிறப்புடையதாகச் செய்யுங்கள்’ (Make America Great Again- MAGA) போன்ற மீம்ஸ்கள், எலிசபெத்தை வாஷிங்டன் டி சியை நோக்கி வரவைத்ததன 1776!ம் இதைப் போன்றதொரு மீம்ஸ்தான். (04/07/1776 அன்று அமெரிக்காவிலிருந்த 13 பிரிட்டிஷ் காலனிகள், சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தின. அதுதான் அமெரிகாவின் சுதந்திர தினம்). இந்த மீம்ஸ்கள் பகிரப்பட்டன, ஊர்வலங்களில் இந்தச் சொற்றொடர்கள் ஒலித்தன; இந்த 2021ம் வருடத்திய ஜனவரி 6-ம் நாளும் புரட்சிக்கான நாளாக அவர்களின் கண்களுக்குத் தெரிந்தது. கொடிகள், இந்தக் குழப்பத்தில் கதைகள் சொல்லின. காமிராவின் முன் எலிசபெத் அழுத போது, அவரது இணைப் புரட்சியாளர்கள், சட்டகத்திற்கு உள்ளே, அமெரிகக் கொடி ஏந்தி, மகா கொடி ஏந்தி, ட்ரம்ப் கொடி ஏந்தி, பரவலாக அறியப்பட்ட கேட்ஸ்டென் (Gadsden) கொடி ஏந்தி வந்தனர். அமெரிகாவின் தேசியக் கொடியை நாம் அறிவோம்; மகா (மேக் அமெரிகா க்ரேட் அகெய்ன்) கொடி என்பது மக்களாட்சி கட்சியினர், நம் அமெரிகப் பொருளாதாரத்தைச் சிதைக்கின்றனர் என்பதைக் குறிப்பது. நீல நிறத்தொரு பூனை ட்ரம்ப் கொடி; கேட்ஸ்டென் கொடி என்பது மஞ்சள் நிறப் பின்னணியில் நச்சுப்பாம்பு (Rattlesnake) ஒன்று தன் மூச்சுக் காற்றால் எச்சரிக்கும் வாசகங்கள் கொண்டது-(Don’t tread on me) “என் பாதையில் குறுக்கிடாதே- என் மீது உன் கால் பதியக் கூடாது” (இந்தக் கொடிக்கு வரலாற்றுப் பின்புலம் உண்டு; கிரிஸ்டோபர் கேட்ஸ்டென் என்பவர் வடிவமைத்தது.)
இந்த இயங்குபடத்தின் மையம் இதுதான்- தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அநியாயமாக மறுத்திருக்கிறார்கள்; இந்தச் செய்தி கூட ஒரு மீம்ஸ்தான்- ‘திருட்டை நிறுத்து’ என்ற முழக்கம் பல சமூக ஊடகங்கள், பரிமாற்றங்கள், செய்தி முன்னேகல்கள் மூலமும், டி-ஷர்ட்டில் அதைப் பதிந்து பரவலாகவும், அரசியல் வாதிகளாலும், பல இலட்சக்கணக்கான மக்களாலும் வைரலாகியது. ‘திருட்டை நிறுத்து’ என்ற இந்த இரு வார்த்தைகள், பைடன் சட்டமுறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்ற சிக்கலானக் கருத்தை சுலபமாகச் சொல்லி, டொனால்ட் ட்ரம்ப்பிற்கு, மக்களின் விருப்பத்திற்கெதிராக, அமைப்புகளால் அநீதி இழைக்கப்பட்டது என்ற எண்ணத்தை ஊட்டி, எனவே “மேக் அமெரிகா க்ரேட் அகெய்ன்’ என்ற குழுவில் சேரக் கோரியது.
ஜனவரி 6-ம் தேதி நிகழ்ந்ததைப் பார்த்த அறிஞர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியுற்றனர். இப்படியெல்லாம் நடக்குமா என்ன? இந்த அளவிற்கு ஏன் கீழிறங்கினோம்? அமெரிக்க சமூகத்தில் என்னதான் நடக்கிறது? ஹார்வர்ட் பல்கலை, ஷோரன்ஸ்டைன் (Shorenstein) மையத்தில், ஊடகங்கள், அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகள் பற்றிய ஆராய்சியாளர்களான எங்களுக்கு ‘ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவதைப்’ பற்றிய புரிதல் இருந்ததால், நாங்கள் இதைப் பற்றி வியப்படையவில்லை. 2020ஆண்டு முழுதும், நாங்கள் ஆசிய- எதிர்ப்பான, ‘நாய் விசில்’ (Dog-whistle) போன்ற மீம்சைப் பார்த்தோம். பூகோள –அரசியல் எதிரியான சீனாவை விமர்சிப்பதின் மூலம், பெருந்தொற்றுக் காலத்தில் தன் செயல்முறைகளை விமர்சிப்பவர்களுக்கு ட்ரம்பின் பதிலாக வந்த மீம்ஸ் அது. இந்த மீம்களை கவனித்து வந்தது நாங்கள் மட்டுமில்லை. இணைய ஆராய்ச்சியாளர்கள், பொது சமுதாயக் குழுக்கள், இதழியலாளர்கள், இவைகளையும், பல விளிம்பு நிலைக் குழுக்களையும் நெருக்கமாகக் கவனித்துக் கொண்டுதானிருந்தார்கள். அந்த நாளின் தீங்குகளை எங்களால் கணிக்க முடிந்தது. அது துன்பமே; ஆனால் எதிர்பாராதது அல்ல.
ஜனவரி 6ல் தலைநகரில் நடந்தது, மீம்ஸ் போரின் சிதறல்களே. மிகைவாதத்தையும், சீற்றத்தையும் நாணயங்களாகக் கொண்டு, வேகத்திற்கும், பல்விரிவு ஆற்றலுக்கும் சிறப்புக் கொடுத்து, தங்கள் கட்டுமானத்தாலும், விசேஷ சலுகைகளாலும், மீம்ஸ் கலாசாரப் போர்களை வேகப்படுத்துவதும், ஆழப்படுத்துவதும் இயங்கலைத் தளங்களே; உலக அனுபவங்களை இது தட்டையாக்குகிறது; அன்பு, புரிதல், பொறுமை இவற்றை இச் செயல் நீக்கிவிடுகிறது. ஒரு செயல் திட்டத்துடன் இயங்கலையில் இடம் பெறும் இது, வெற்றி பெற்று கவனிக்கப்பட்டதென்றால், அதைப் பின் தொடர்வோர், அதைப் போல மற்றொன்றைச் சமைக்க விரும்புவோர், தாங்கள் யார் எனக் காட்ட, தங்கள் சார்பு நிலையைச் சொல்ல, யார் அல்லது எதற்கு தாங்கள் எதிரி என இயம்ப, இந்த ஊடகத்தைப் போல உதவுவது வேறொன்றில்லை.
பத்தாண்டுக் கால மீமீப் (தமிழில் இருவகைகளாக இது சொல்லப்படுகிறது- மீம்ஸ், மீமீ) போர்களுக்கு, மக்களை கிளர்ச்சியுறச் செய்யும் சக்தி இருப்பதை உணர்ந்த ஒரு தோற்ற ஜனாதிபதி கீச்சிட்டார்- (ஜனவரி 6-ல் பெரும் புரட்சிப் போராட்டம்; அங்கே வாருங்கள்; வலிமையுள்ளதாக இருக்கும்.) இது மக்களாட்சி முறைக்கு எதிரான ஒன்றில் பங்கு பெறுமாறு பொது மக்களுக்கு அறைகூவியது. மக்கள் திரண்டனர். கலகம் தோற்றது- பைடன் தலைவரானார். ஆனால், இப்படி ஒரு கலவரம் நடந்ததென்பதே, இயங்கலையில் நடக்கும் போர்களின் வெற்றி எனச் சொல்லலாம். நிகர்நிலை குழுக்களின் பலத்தை, ஜனவரி 6, நிஜ உலகிற்குக் காட்டியது.
இந்தக் கணக்கீட்டின்படி, இந்த வெற்றிகரமான மீம்ஸ் போர்கள், சென்ற பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலை வடிவமைத்து வந்திருக்கின்றன; ஆனால், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களின் வாழ்க்கையும் சிதைந்திருக்கிறது. ஆக்ரோஷமான போராளிகள் குற்றச்சாட்டுக்களை, சிறை தண்டனையை, திவாலாகும் நிலையை, குடும்பத்தை, தங்கள் பெருமிதங்களை இழக்கும் அவலத்தை இப்போது சந்தித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் கருத்து, மீம்ஸ் வடிவில் வெளிப்பட்ட கருத்து, நம் சமூகத்தின் குருதியில் புனலாகப் பாய்ந்து கொண்டுள்ளது. Learn to Code, It’s about Ethics in Journalism, Race is Real, It’s Ok to be white, Critical Race Theory, Let’s go Brandon, Blue Lives Matter, A Deep State Operates extra legally inside the US Govt. இவையெல்லாம் கவர்ச்சிகரமாக மக்களை ஈர்த்தன. பெரும்பாலானவை வெள்ளைத் தோலின் மேன்மையைப் பறை சாற்றும் வண்ணம் எழுதப்பட்டவை. இதில் மிக வியப்பிற்குரியது இரு விஷயங்கள்- ஒன்று இதழியல் துறையின் தார்மீகத்தைப் பற்றிப் பேசுவது (It’s about Ethics in Journalism) – துல்லியம், உண்மை, சுதந்திரம், சார்பறாத் தன்மை, மனித நேயம், பொறுப்பேற்றல் என்பவை இதழியலில் அறங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், அந்த அறங்களை மீறித்தான், மீம்ஸ்களை வெளியிட்டார்கள். மற்றொன்று ‘டீப் ஸ்டேட்’ பற்றிய பரப்புரைகள். (A Deep State Operates extra legally inside the US Govt.- அங்கீகாரமற்றதும், இரகசியமானதுமான அதிகார மையத்தின் வலைப் பின்னல்கள் என ஆழ் அரசை வரையறை செய்கிறார்கள்.) இரகசியக் காப்பு ஆவணங்களையும், வகைப்படுத்தப் பட்டுள்ள கோப்புகளையும் முன்னாள் அதிபரின் மார் எ லாகோ (Mar-a-Lago) கடற்கரை உல்லாச வீட்டிலிருந்து கையகப்படுத்தியிருக்கிறது கூட்டாட்சிப் பணியின் ஆய்வுத் துறை (FBI). அவர் இத்தகைய கோப்புகளும், ஆவணங்களும் உள்ள பெட்டிகளை தன் வெளி நாட்டுப் பயணங்களில் உடன் எடுத்துச் சென்றார் என்றும் கூறப்படுகிறது. இது தேசத் துரோகம் என்றும், இதனால், அமெரிக்காவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
சமூக ஊடகங்கள் கலாச்சாரப் போர்களைத் தொடங்கவில்லை; கீரை எப்படி பாப் ஐக்கு (Popeye) வலுவூட்டியதோ, அதைப்போலவே இந்தக் கலாச்சாரப் போர்களுக்கு சமூக ஊடகங்கள் தெம்பளித்தன. பல்லாயிரக் கணக்கானவர்களிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்ல வானொலி திடீரென்று தேவையில்லாமல் போய் விட்டது. உங்களுக்குத் தேவையெல்லாம் உணர்வினைத் தூண்டி, சீற்றத்தை உடனடியாக வெளிப்படுத்தும் ஒரு ‘ட்வீட்’ அல்லது, முகநூல் செயலியில் உணர்ச்சிகளைத் தூண்டும் வண்ணம் இடம் பெறும் ஒரு விஷயம். உள்ளங்கைகளில் உலகத்தைக் கொண்டு வருகின்றன சமூக ஊடகங்கள். தங்களை ஒத்தவர்களை உள் நாட்டிலும், அயல் நாட்டிலும் இனம் காணவும், குழுவாகக் கூட்டுச் சேரவும் அவை இத்தகைய போராளிகளுக்கு உதவுகின்றன. அவர்களின் கருத்துக்கள் அங்கே ஊட்டத்துடன் வளர்கின்றன.
நம் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளைப் பயன்படுத்தி நம்மால் அரசியல் மீம்ஸ்களை அனுப்ப முடிகிறது; ஆனால், ஏன் நாம் இதைப் பகிர்கிறோம் என்பதைப் பண்பாடு சொல்கிறது. மீம்ஸ்கள் உள் குழு, வெளிக்குழு என அமைகின்றன.(அவை நகைச்சுவை- ஒரு வகையில்) அந்தச் செய்திகளால் நீங்கள் அதிர்கிறீர்களா, அல்லது அதற்கு இயைபுடையவராக இருக்கிறீர்களா அல்லது குழப்பமடைந்து விட்டீர்களா என்பதைப் பொறுத்து உள்ளே- வெளியே ஆட்டம் இருக்கும். பண்பாட்டு அடையாளத்தை மீம்ஸ்கள் எளிதாக்குகின்றன. ஏற்கெனவே உள்ள வழி முறைகள், நம்பிக்கைகளைக் கையாண்டு, அவைகளுக்கு ஒரு திடீர் அதிர்ச்சி மதிப்பையோ அல்லது அதன் சிக்கல் கூறுகளையோ மிக எளிதான வழிகளில் சொல்லும் மீம்ஸ்கள் அதிகமாக எதிரொலிக்கப்படுகின்றன. காலப் போக்கில், விளிம்பு நிலையிலுள்ள அரசியல் கருத்துக்களை மைய ஓட்டத்துடன் இணைப்பதற்கு (பகிரப்படும்) மீம்ஸ்கள் சரியான கருவிகள். இதை நாங்கள் ‘கம்பியிலிருந்து, களைகளுக்கு’ (From Wires to Weeds) என அழைக்கிறோம். இதில் கம்பி என்பது சமூக ஊடகங்கள்- களை என்பது உலகம். கம்பிப் பரிவர்த்தனைகள், நிஜ உலகின் நடத்தையைப் பாதிக்கின்றன. களத்திலிருந்து முதலில் பதர்களை களஞ்சியத்தில் சேர்க்கிறார்கள்; தானியங்கள் வெயிலிலும், மழையிலும் இருக்கின்றன.
இரு வழிகளில் இது நடை பெறும்; ஒரு வழி சுலபமானது- இந்தக் குறிக்கோளிற்காகத் திரளுங்கள் என்று ஒருவர் இணைய ஊடகங்களில் சொல்ல, அதற்காக மனிதர்கள் திரள்கிறார்கள். மற்றோர் வழி சிக்கலானது. இணைய ஊடகத்தில் ஒருவர் சொல்ல, சமுதாய அரங்கில் அது நிகழ்வாக ஆகுதல்- இதில் கவனிக்கத்தக்க ஒன்று நிகழலாம்- வன்முறை, கலவரம் போன்றவை- உடனே ஊடகங்களின் கவனம் நிகழ்வின் மீது திரும்பும்- அதைத் தொடர்ந்து பேச்சுக்கள், நிகழ்நிலை செயல்பாடுகள்- இதன் தொடர்ச்சியாக புது நிகழ்வு, மீண்டும் ஊடக வெளிச்சம், ‘உலகம் அறிய விரும்புகிறது’ என்ற கூச்சலுடன் வாதப்பிரதிவாதங்கள், ‘உலகம் ஒன்றும் இருட்டிலில்லை’ என்று மாற்று வாதப்பிரதிவாதங்கள், அதன் விளைவாக மீண்டும் ஒரு சமுதாய நிகழ்வு- இந்தச் சுழலுக்கு முடிவேது? இதைதான் ‘மீமீப் போர்கள்’ எனச் சொல்கிறோம்.
2020-ல் நடந்த அமெரிக்கத் தேர்தலில், இந்த மீம்ஸ்களின் வலிமையை நன்கு அறிந்திருந்த உள் நாட்டு அரசியல்வாதிகள், தங்கள் கருத்துக்களை ‘கம்பியிலிருந்து களைக்கு’ எடுத்துச் சென்று மக்களாட்சிக்கு எதிராகப் பயன்படுத்த முடியும், எனக் காட்டினார்கள். அரசாளப் பயன்படுத்தும் வியூகமாகவும், பிரச்சாரமாகவும் மீம்ஸ் போர்களை முழுதும் அங்கீகரித்த முதலாமவர் தலைவர் ட்ரம்ப் அவர்கள் தான். தனக்குச் சாதகமான மீம்ஸ்களை, மீள மீளக் கீச்சிட்டார்; வந்தனை செய்யும் மீம்ஸ் போராளிகளின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டார், 4சேனில் (4chan) வடிவமைக்கப்பட்ட மீம்ஸ்களை தன்னுடைய பிரச்சாரங்களில் பயன்படுத்தினார், ‘மீமீ போர்களின் தளபதியாக’ நடந்து கொண்டார். இந்தப் பட்டம் அவரது அணுக்கத் தொண்டர்கள் (அவரது மகன் டொனால்ட்- ஜூனியர் உட்பட) தமக்குத்தாமே சூட்டிக் கொண்டது. ஜனவரி 6 காலையில் அவர் தனது உரையில் பல மீமீக்களை (அமெரிகா முதலில், சீனக் கிருமி போன்றவை) இணைத்துக் கோர்த்து, முடிவில், கூட்டத்தினரைப் பார்த்து தலை நகருக்குச் செல்லுங்கள் என்றார். ‘நாம் உக்கிரமாகப் போராடுவோம்; இல்லையெனில், நமக்கென்று இந்த நாடு இருக்காது’ என்று உணர்ச்சிகளைத் தூண்டினார். மீமீக்கள், அமெரிகாவின் உண்மை அரசியலை நிகழ்த்த முடியுமென்றும், பெரும் அணியைத் திரட்டி செயல்பட வைக்கமுடியுமென்றும் அவர் நிரூபித்தார். பயம், வன்முறை, ஆக்கிரமிப்பு இவற்றைச் சீராக மக்களுக்குச் செலுத்தினால், அது ஒரு தேசத்தை அழிவை நோக்கி கொண்டு சென்றுவிடக் கூடுமல்லவா? மதவெறி, இன வெறி, அபத்தங்கள் பல மீமீக்களில் இடம் பெறுகின்றன. அவைகளுக்கு மனதில் சலனத்தை உருவாக்கும் சக்திகள் உண்டு.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா? இந்தியர்களும் இயங்கலையின் மூளைச்சலவைகளுக்கு உட்பட்டவரே. பொதுச் சுவர்களில் இரவோடிரவாக முளைக்கும் வாசகங்கள், கேலி உருக்கள் அந்தக் காலத்து மீம்ஸ். இன்று யாரும் யாரையும் எதுவும் சொல்லலாம். மிக்க செல்வாக்குள்ளவர்களும், நீதித்துறையைச் சேர்ந்தவர்களும் மான நஷ்ட வழக்கு, அவமதிப்பு வழக்கு போட முடியும்; மற்றவர்கள்? சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘நீயா, நானா?’ நிகழ்வில் ஒரு பெண் சொன்னார்- “படிக்கத் தெரியாத என் கணவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் மகளின் மதிப்பெண் பட்டியலைப் பார்ப்பார். என்ன புரியப் போகிறது அவருக்கு?” அந்த நிகழ்ச்சியில் அவர் கணவரும் உடனிருந்தார். நம் மீம் ஹீரோக்கள் அந்தப் பெண்ணை ஒரு வழி செய்து விட்டனர். அவர் கணவர் இயங்கலையில் தோன்றி கண்ணீருடன் சொன்னார்- “நான் படிக்கவில்லை; அதனால், ஆசையாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். எங்களிடையே இத்தகைய கேலிப் பேச்சுக்கள் சகஜம். நான் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு ‘டயாலிசஸ்’ ஒவ்வொரு வாரமும் செய்து கொள்கிறேன்; அதற்கே ரூ 20-25 ஆயிரங்கள் ஒவ்வொரு மாதமும் என் மனைவிதான் அலுத்துக் கொள்ளாமல் செலவு செய்கிறார்; வேலைக்குப் போகிறார். எங்கள் மகளைப் படிக்க வைக்கிறார். அவரை கீழ்த்தரமாக இனியேனும் பேசாதீர்கள்.” அதே நிகழ்வில் ஒரு கணவர் சொன்னார்- “பாத்திரங்கள் கழுவுவதற்காக, என் வீட்டு வேலைகளுக்காக, என் மனைவியை வேலைக்குப் போக வேண்டாம் என்று நிறுத்தி விட்டேன்.” ஒரு மீம் கூட இதற்காக வரவில்லை!
சிரிப்பு வருது, வருத்தம் வருது, சிரிக்கச் சிரிக்க வருத்தம் கூடுது; சின்ன மனுஷன், பெரிய மனுஷன் நடப்பைப் பார்த்து இரண்டும் வருது.

உசாத்துணை
- How Memes Led to an Insurrection: A president who understood the power of memes was able to send thousands of people into battle against democracy itself. By Joan Donovan, Emily Dreyfuss, and Brian Friedberg
- நூல்: Meme Wars: The Untold Story of the Online Battles Upending Democracy in America.
உத்ரா