
1
பேரமைதியோடு இருக்கும்
அந்த மலைத்தொடர்
பேரமைதிக்குள் பேரமைதியாக
அது அதனையே
கீழ்நோக்கி
செங்குத்தாகச்
செதுக்கிக் கொண்டு
கோட்டைக் கட்டியிருக்கிறது
பள்ளத்தாக்கு கோட்டை
அங்கு ஓடும் பெண்ணாற்று அலையை உளியாகவும்
காற்றைச் சுத்தியலாகவும் உபயோகித்து
பல நூற்றாண்டு காலமாக
நிதானமாக
சிறுக சிறுக
ஒற்றையில் கட்டியிருக்கிறது
கொண்டைக்குருவி அங்கு அதிகமாக இருக்கிறது
அதன் தலையைப் போல வடிப்பதாக நினைத்து
குடைந்தவாறே போனதா தெரியவில்லை
வண்ணத்துப்பூச்சியாகக் கற்பனை செய்துகொண்டு
சிறகுகளாக இரு பக்கமும் குடைந்துகொண்டு
ஆற்றை அதன் மென் உடலாகப் பாவிக்கிறதா எனத் தெரியவில்லை
ஆனால்
ஒரு ஆறு வளைந்து நெளிந்து போவதில் தொடங்கி
ஆற்றின் சிறு உணர்வையும் சிதைக்காமல்
உலகின் எந்தவொரு சிற்பியும் செதுக்கிவிட முடியாத நுட்பத்தோடு
அலை ஓடுவது போலவே
சிற்றலையாய் பேரலையாய்
அதனைக் குடைந்தவாறே போய்
ஆழத்தை நோக்கி
நெடுக
இடைவெளியில்லாமல் செதுக்கப்பட்ட
பலநூறு புராதன கோபுரங்களாக
கோட்டையை எழுப்பியிருக்கிறது
சூரியன் செழுமை கொள்ளும் நேரம்
பொற்கோட்டையாகவும் மிளிரும்
அந்தக் கோட்டைக்குள்
எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும்
அங்கு உலவுவது
ஒன்றே ஒன்றுதான்
பேரமைதியும்
அமைதி கொள்ளும்
பேரமைதி
ஒரு வெண்நிறப் பறவைக் கூட்டம்
வானத்தின் மேல் பறக்காமல்
அந்தப் பள்ளத்தாக்கு கோட்டைக்கு உள்ளாகவே
இனிது இனிதாக
தாழப் பறந்து போகிறது
குறிப்பிட்ட தூரம் போனதும்
ஒத்திசைவோடு
அனைத்தும்
அப்படியே திரும்பி வருகிறது
அப்படியே திரும்பி போகிறது
திரும்பி வருகிறது
திரும்பி போகிறது
பறவைக்கூட்டம் காணாத வானம் இல்லை
அந்தப் பறவைக் கூட்டம்
அங்கே
பேரமைதியாய்
பேரமைதியாய்
காணும் அனைத்தின் மனதாய்
பறந்துகொண்டே இருக்கிறது.
2
அந்த மலைத் தொடர் முழுவதும்
சிறிதும் பெரிதுமாக
நெடுக மலைக் கற்கள் கிடக்கின்றன
அந்த மலைத் தொடரில்
பள்ளத்தாக்கை ஒட்டி
அதே மலைக்கற்களை
சிறிதும் பெரிதுமாக வைத்து
பெம்மாசனி மரபினரால்
பெரிய கோட்டை கட்டப்பட்டிருந்தது
அந்தக் கோட்டை
இப்போது சிதிலமடைந்து
அதிலிருந்த
மலைக்கற்களும்
மலைக்கற்களோடு
மலைக்கற்களாக
தனித்து அறிய முடியாமல் கிடக்கின்றன
பெயர் தெரியாத
ஒரு சாம்பல் நிற பறவை ஒன்று
அந்தக் கற்களை எல்லாம்
ஒன்றோடு ஒன்று
சரியாகப் பொருத்தும்
விளையாட்டை விளையாடுகிறது
ஒவ்வொரு கற்கள் மீதாக
பறந்து போய் உட்கார்ந்து
ஒரு கல்லின் உடைந்த பகுதியோடு
மற்றொரு கல்லின் உடைந்த பகுதியை
ஒப்பிட்டுப் பார்க்கும் அது
இடையேஇடையே
அந்தக் கற்களை விழுங்குமா எனத் தெரியவில்லை
அதன் கழுத்துப் பகுதியில்
மலைக்கற்களைப் போன்றே
பழுப்பு நிறத்தில்
துண்டுதுண்டாக
மீச்சிறு கற்கோடுகள் இருக்கின்றன
அந்தப் பறவைக்கு இணையாக
இன்னொரு சாம்பநிற பறவை வந்து
கற்களைச் சரியாக பொருத்த முயற்சிக்கிறது
இன்னொரு பறவையும் வந்து முயற்சிக்கிறது
இன்னொரு பறவையும் வந்து முயற்சிக்கிறது
காற்று வந்தது
அது எதுவும் யோசிக்காமல்
எல்லாவற்றின் மீதும்
சூறாவளியாக வீசிவிட்டுப் போனது
எந்தக் கற்கள்
எந்தக் கற்களோடு பொருந்திக் கிடந்தது
என்றெல்லாம் பார்க்க முடியவில்லை
நானொரு கல்லோடு பொருந்தியிருந்தேன்
நாணல் ஒன்றும்
ஒரு கல்லோடு பொருந்தியிருந்தது
சாம்பல் நிற பறவை ஒன்றும்
ஒரு கல்லோடு பொருந்தியிருந்தது.
3
வயலாகிப் போன
அந்த மலைத் தொடர் முழுதும்
பழுப்பு நிறத்திலான சூரியகாந்தி பூக்கள்
நிமிர்ந்து நிமிர்ந்து
சூரியனையே கூர்நோக்கும்
அந்தப் பூக்கள்
கொஞ்சம்
அதிகமாகவே
அசல் தன்மையானவை
பறிக்க முடியாத அளவு
சூரியனாகவும் சுடும்.
4
அங்கு
அப்படித்தான்
முதலில் வீடு கட்டியிருக்கிறார்கள்
எங்கும்
போகாத மலை
எங்கும் போவதற்காக
வாய்ப்பதைப் பயன்படுத்தி
அதன் மேல்
அதன் கற்களை நிரப்பி வைத்து
காத்திருந்திருக்கிறது
அங்கு
யாரோ ஒருவன்
முதலில் வந்திருக்கிறான்
அவன் வந்தபோது
ஒரு பறவை
பறந்து பறந்து வந்து
சுள்ளிகளைப் பொறுக்கிப் போய்
மரக்கிளையில்
அடுக்கி அடுக்கி
கூடு கட்டியிருக்கிறது
அவனும்
அதைப் பார்த்து
மலைக்கற்களைப் பொறுக்கி
பொருந்தும் வாகில்
அடுக்கி அடுக்கி
விளையாட ஆரம்பித்திருக்கிறான்
அது கூடு போல இருந்திருக்கிறது
பிறகு
அதுவே வீடாகவும் மாறியிருக்கிறது
இப்போதும்
அங்கு
அந்த முதல் மனிதன் கட்டிய
அதே நுட்பத்திலேயே
கற்களைப் பொருந்தும் வாகில்
அடுக்கி அடுக்கி
கூட்டில் சுள்ளிகள்
அதனதன்
நீளத்துக்கேற்ப
முன்னும் பின்னுமாக நீட்டிக் கொண்டிருப்பதுபோல
வீடு கட்டுகிறார்கள்
மலைக்கற்கள் அல்லாது
சதுரமாக இருக்கும்
கடப்பா கற்களை வைத்து
வீடு கட்டியிருப்பவர்களும்
அதே நுட்பத்தில்
சுள்ளிகளை அடுக்குவதுபோல
கூடாக
வீட்டைக் கட்டியிருக்கிறார்கள்
மலையின் கற்கள்
பறவை
சுள்ளி
முதல் மனிதன்
எல்லாம் சேர்ந்து இட்ட முட்டையின்
வழிவழி நுட்பம்
இன்னும்
அங்கு பொரிந்து கொண்டிருக்கிறது.
5
ஏறும் போது
கனத்த தோற்றத்தில்
இறுக்கமாகவும்
அழுத்தமாகவும் இருக்கும் மலை
இறங்கும்போது
குழந்தையாகி விடுகிறது
அதையும்
தூக்கிக் கொண்டு போகச் சொல்லி அடம்பிடிக்கிறது
மலைக்கெல்லாம்
பெரிய மலையான
மூளையும்
ஒன்றும் சொல்வதில்லை
‘சரி வா’ என்று
தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது.
ஏறும் போது
கனத்த தோற்றத்தில்
இறுக்கமாகவும்
அழுத்தமாகவும் இருக்கும் வாழ்க்கை
இறக்ககும்போது
குழந்தையாகி விடுகிறது
அதையும்
தூக்கிக் கொண்டு போகச் சொல்லி அடம்பிடிக்கிறது