கசம்

வண்டியின் காது போலிருந்த துவாரத்திற்குள் சாவியிட்டு திருகிய அதிர்ச்சியாலோ என்னவோ, மூன்று நான்கு குலுக்குதலோடு உயிர்பெற்ற “அந்த ஜீப்” காளிகேசம் நோக்கி நகர ஆரம்பித்தது. காலையிலேயே தூவானத் துளிகளை கண்ணீரைப்போல் சிந்திக் கொண்டிருந்தது வானம். மித மிஞ்சிய குளிரால் சாலைகளில் ஆள் அரவம் குறைவாகயிருந்தது. 

ஏப்ரல் மாத கோடை மழையில் கவர்ச்சியாய் நனைந்திருந்தது நிலம். ஈரம் சொட்ட நனைத்திருந்தால் எதுவுமே கவர்ச்சிதான். ஈரம் சொட்ட நனைந்த ஆப்பிள். வெள்ளத் துளிகளை “பருக்களாய்” தாங்கி நிற்கும் ரோஜா. சொட்ட சொட்ட குளித்துக் கரையேறும் விடலைப் பெண், தெப்பக்குளத்தில் நனைந்திருக்கும் தாமரை. மழையில் நனைந்திருக்கும் மிதிவண்டி. என எல்லாமே கவர்ச்சிதான். ஆனால் ஜீப்புக்குள் இருந்த “இருவரும்” இம்மாதிரியான “லௌகீக ரசிப்புகளில்” ஈடுபட முடியாத அளவிற்குப் பரபரப்பாயிருந்தனர். 

சம்பவம் எப்படே நடந்தது?

மத்தியானம் மூணு நாலு மணி வாக்குல சார்…

போலீஸ்காரனுகோ வந்தாச்சா?

முன்சீட்டில் அமர்ந்திருந்த தீயணைப்புநிலைய ஆபீசர் கிருபாகரன் கார் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டே, டிரைவர் முத்துவிடம் பேசிக்கொண்டிருந்தார். 

நெற்றில் இரத்த சிவப்பில் குங்குமம் இட்டிருந்த டிரைவர் முத்து, “ஈட்டிக் கட்டையின்” நிறத்தில் நாட்டுக்கட்டையாயிருந்தான். 

கீரிப்பாறை எஸ்ஐ அங்க தான் இருக்காராம்?

யாரு சண்முகமா?

ஆமா… அவர்தான். 108ல இருந்து கால் வந்ததும், நாலஞ்சு பிசிகளோட அவருதான் முதல்ல ஸ்பாட்டுக்கு போனது… 

பொறவு…

சாதாரண ஆளுன்னு நினைச்சுகிட்டு தண்ணிக்குள்ளயே மேலோட்டமா தேடிட்டு இருந்திருக்காங்க… ராத்திரி ஏழு மணிக்கு அப்புறம்தான் மத்த ரெண்டு பசங்களும் உண்மையை சொல்லியிருக்கானுக…

அது சரி… அதுக்குள்ள இருட்டியிருக்குமே…

ஆமா… தண்ணியில முங்குனது அமைச்சருக்கு மகன் அறிஞ்சதும் எல்லோரும் பரபரப்பாயிட்டாங்க…

நிகழ்வுகளைக் கிரகித்துக் கொண்டே பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தண்ணீரை தொண்டைக்குள் சரித்தார் கிருபாகரன். ஜீப் நகர்ந்துக் கொண்டே இருந்தது.

அமைச்சருக்கு மகன் காட்டுக்குள்ள எதுக்குடே போனான்… 

குடிச்சு கும்மாளம் அடிக்க போயிருப்பான்…

சவம்…குடிக்கதுக்கு… நாட்டுக்குள்ளயா இடம் இல்ல…?

இருந்தாலும் காட்டுல போய் குடிச்ச மாதிரி வருமா… -முத்து மெலிதாகச் சிரித்துக் கொண்டான். 

மனுஷன் நாகரிகம் தேடி நாட்டுக்குள்ள வந்தாலும், குஷி வந்துட்டா காட்டுக்குள்ளதான் ஓடுகானுகோ பார்த்தியா…- தத்துவப் பாணியில் பேசினார் கிருபாகரன்.

குஷியோட காட்டுக்குள்ள வந்தவன்… தண்ணிக்குள்ளயே குப்புற போயிட்டான்…- உண்மையான வருத்தத்தோடு முத்துவும் ஆசுவாசப்பட்டான்.

அதுக்கு வாய்ப்பு ரெம்ப கம்மில்லா டே… 

காட்டருவியில குதிச்சு, உள்ள மாட்டிகிட்டான்னு நினைக்கேன். 

சவம்…விதி முடிஞ்சு போச்சு… யாரு என்ன செய்ய முடியும்.- பரிதாபப்பட்டார் கிருபாகரன்.

விதியா இருந்தாலும்… அருவி கொண்டு போனது பெரிய உசுரல்லா… 

போன உயிருல… சின்னது… பெருசுல்லாம்…என்னது டே… செத்தா… எல்லோரும் சவம்தான்… 

இந்த வருஷம்… இதோட இருவதொன்னு ஆச்சு… இத்தனைக்கும் செத்தவன் நல்ல நீஞ்சல் தெரிஞ்சவனாம்…

கெட்டி கிடக்குற தண்ணியில நீஞ்சல பழகுனவன்…, காட்டாற்று இழுப்புல ஜெயிக்க முடியுமாடே…

உண்மைதான் சார்… அதுவும்அந்த அருவி பாயுற இடம் பயங்கர ஆபத்தாக்கும்…

ஆபத்தான இடம்னு தெரிஞ்ச பொறகும்… பப்ளிக்க எதுக்கு காட்டுக்குள்ள விடுகானுக்கோ… அவனுகளச் சொல்லணும்.

அங்க கோவில் இருக்குல்லா… செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அன்னைக்கு பூஜையும் உண்டு… கோவில அடைக்க முடியாதுல்லா?

அதுசரி… இப்ப பாரு… இருபத்தொரு பேரையும் சாமிதான் கோவத்துல கொன்னுட்டுனு கதைவிடுவானுகோ…- மெலிதானச் சிரிப்போடு பேசினார் கிருபாகரன்.

இதைக் கேட்ட முத்து எதுவும் பேசவில்லை… 

தடிக்காரன்கோணத்தை தாண்டிய ஜீப் கீரிப்பாறை வனச்சரகத்தில் நுழைந்தது. பின்பு வலப்புறம் வைக்கப்பட்டிருந்த “காளிகேசம் செல்வதற்கான வழி” – என்ற அறிவிப்பு பலகை காட்டிய திசையில் நகர்ந்தது. சிறிய தார்சாலை. இரு மருங்கிலும் சிறிதும் பெரிதுமாய் நெருக்கமான மரங்கள் அடர்ந்த வனப்பகுதி. வனப்பேச்சியின் கருணையினால் காடுமுழுவதும் பச்சை பசேலென மேடு பள்ளங்களாக விரிந்திருந்தது. காலை இள வெயில் பட்டு பச்சைக்கு நடுவே சில மஞ்சள் நிற தீற்றல்களும் பார்வைக்குள் சிக்கியது. பூத்துக் குலுங்கிய சுக்குநாறி புல் உட்பட அனைத்து தாவர இலைகளும் காலைக் குளிருக்கு வியர்த்து, மேனி துடைக்காமலிருந்தது. மயிர் பற்றுடைய பருவப் பெண்ணின் கூந்தலென இருபக்கமும் அடர்ந்த புதர் பூண்டுகள். விதவிதமான பெரிய மரங்கள். ஆங்காங்கே இன்னதென்று தெரியாமல் ஒலி எழுப்பும் விலங்கினங்கள். அதிகமாக வெயில் பட வாய்ப்பில்லாத “தார் ரோடு” நேராக இல்லாமல் மண்புழுவின் உடலைப் போல் வளைந்து நெளிந்து நீண்டு கொண்டிருந்தது.

ஜீப்பின் வட்டுக்களை தொடர்ந்து திருப்பிக் கொண்டிருந்த முத்துவிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தார் கிருபாகரன்.

என்னடே… சாமிய பத்தி பேசுனதும் கப், சிப்னு ஆயிட்ட… உங்க சாமிய சொன்னதும் கோவம் வந்திட்டோ…

முத்து எதுவுமே பேச வில்லை.

சும்ம சொல்லுடே… – கிருபாகரன் உசுப்பினார்.

காளிகேசம் அம்மன் இந்த காட்டுக்கே அம்மைலா… அம்மைக்கு எல்லோரையும் காக்க மட்டும்தான் தெரியும்… – கொஞ்சம் மந்தகாசமாகப் பேசினான் முத்து.

காக்குற தெய்வத்துக்கு காலடியிலதான… இவ்வளவு உயிரும் போயிருக்குடே…- கிண்டலோடு பேசினார் கிருபாகரன்.

இல்ல சார்… இவனுக குடிச்சிட்டு, தண்ணில விழுந்து செத்ததுக்கு… தெய்வம் என்ன செய்யும்…

குடிச்சவனுகள விடு… அந்த இருபத்தொரு பேருல… சும்ம ஜாலியா குளிக்க வந்த பொம்பளைகளும் ஆறேழு உண்டுல்லா… 

அதுகளுக்கு விதி இங்கன வந்து முடியணும்னு இருக்கு… எல்லாத்துக்கும் ஒரு காரணம் காரியம் இருக்கும்லா…

என்ன காரண காரியமோ… இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, “தெய்வம்” மக்கள காப்பாத்த வேண்டாமா டே?

காக்குறது மட்டுமே தெய்வத்தோட வேலை இல்ல சார்… நேரம் வரும்போது அழிக்கிறதும் தெய்வம்தான்…

அப்பம்… தெய்வம்தான் அழிக்குதுன்னு சொல்லுக…

இல்ல சார்… நேரம் காலம் பொறுத்து… தெய்வம் “அழிக்கவும்” செய்யும்னு சொல்லுகேன்…

கிருபாகரன் பெரிதாகச் சிரித்தார். 

முத்துவும் லேசாகச் சிரித்தான். 

பேச்சு சுவாரஸ்யம் இருவருக்குள்ளும் கனமாகத் தொற்றிக் கொண்டது.

நீ… ஆளு ஒருமாதிரின்னு… சிஐ சொன்னாரு… உண்மைதான்டே… உன் பேச்சிலேயே தெரியுது… 

அப்டிலாம் இல்ல சார்… எங்க “அச்சன்” தான் இதெல்லாம் சொன்னது… 

யாரு… உன் அப்பாவா?

ஆமா… சார்… 

உங்க “காணிஇன மக்கள்” இப்பவும் இந்த காட்டுக்குள்ள இருக்கீங்கள்ளா…- ஏதோ ஒரு யோசனையோடு கேட்டார் கிருபாகரன்.

ஆமா சார்… போன தலைமுறைல எங்க குடும்பம் காடெறங்கிட்டோம்… இப்பவும் எங்க ஆட்கள் கொஞ்சபேரு உள்ளார இருக்காங்க… 

காட்டை விட்டு வந்தாலும்… “ஊறுன நம்பிக்கை” – விட்டு உன்னால வரமுடியலை…பார்த்தியா டே… 

நம்பிக்கை ஏற்படுறதே… நடந்த சில சம்பவங்களால்தான சார்… பிரபஞ்சசக்தி… நமக்கு கொடுக்கிறத மனப்பூர்வமா ஏற்கணும்னு சொல்றேன்… அவ்வளவுதான்… 

ஓ… அப்ப… சாமி நம்மள கொன்னாலும் ஏத்துக்கிடணும்னு சொல்லுக…அப்படித்தானே…

கண்டிப்பா… ஆனா இந்த இறப்புங்கிறதும் “ஒரு முடிவு” இல்லையே… 

முடிவு இல்லைனா…?

அது ஒரு தொடர்நிலைனு சொல்லுகேன்…

என்ன எளவு நிலையோ…?

சாவுங்கிறது… முடிவு இல்லை சார்… 

அப்ப… நேத்தைக்கு செத்தவன், இன்னைக்கும் அருவிக்குள்ள இருப்பான்னு சொல்லுகியா…

அகால மரணம் அடைஞ்சவங்க, உடம்பில்லாம சிலகாலம் இந்த உலகத்துல உலவுறதா சொல்றாங்க… 

யாரு?

என்னோட முன்னோர்கள்…

சாமியார்கள்னு சொல்லு… 

அவங்க யாரும் சாமியாருங்க இல்ல… இயற்கையை கடவுளை கும்புடுற மனுசங்க… காடேறிங்க… 

கிருபாகரனுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. 

சில நிமிட அமைதிக்கு பிறகு, பட்டென்று கேட்டார்.

இப்ப “அந்த பையன்” அங்க இருப்பான்னு சொல்லுகியா? இல்லங்கிறயா?

அது அவனோட கருமத்தை பொறுத்தது…

புரியலையே?

செத்தவன் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்தது சார்… இன்னைக்கு மனுசனா இருக்கிறவன்தான், செய்த விதிப்பலன் மூலமா உடம்பை கடந்து “தெய்வமா” மாறுறான்…

நீயெல்லாம் “ஆஸ்ரமம்” ஆரம்பிச்சன்னா, எங்கேயோ போயிருவ…- வெடித்து சிரித்துக்கொண்டே கூறினார் கிருபாகரன்.

முத்து சிரித்தான். 

கிருபாகரன் மீண்டும் இடைமறித்து, ஆனா… இப்பவும் சொல்லுகேன்… நடந்த இத்தனை இறப்புக்கும் இந்த ஊரு “அந்த சாமியைத்தான்” குறைச் சொல்லும்… பாத்துக்கோ… 

முத்து மீண்டும் அமைதியானான். 

அவனுக்குள் ஏதோ சொற்கள் வருவதும், பின்பு பிறழ்வதுமாகவும் இருந்தது. சிரமப்பட்டு எச்சிலை விழுங்கிக் கொண்டான்.”எல்லார் வாழ்க்கையிலும் இதை உணர்கிற ஒரு நொடி வரும் சார்….” அந்த நேரத்துல எல்லாருக்கும் எல்லாம் விளங்கும்…’- அவன் கொஞ்சம் சிரமத்தோடு, தத்துவம் சார்ந்து பேசியதாகத் கிருபாகரனுக்குத் தோன்றியது. 

வார்த்தைகளை பிரயோகிக்கையில் அவன் முக அடுக்குகளில் “தசைத்துடிப்புக்களை” காண முடிந்தது. முதன்முறையாக கிருபாகரனுக்குள் லேசாக பயம் தட்டுபட்டது. முத்து சலனமேதுமின்றி வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, வேண்டுமென்றே கிருபாகரன் பேச்சை மாற்றினார்.

இப்பம்…. சம்பவ இடத்துல… ஊருப்பட்ட கூட்டம் இருக்குமே?

ஆழமான ஒரு பெருமூச்சுக்குப் பின் முத்துவும் பேச ஆரம்பித்தான்.

நியூஸ் காரங்க கொஞ்ச பேரும், அமைச்சருக்கு சொந்த காரங்க சிலரும் வந்திருக்கதா பிசி சொன்னாரு… பாதுகாப்பு காரணமா அமைச்சர் வர வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்… அது தவிர ரிசர்வ் போலீசுல இருந்து நிறைய ஆட்களும் ராத்திரியே போயிட்டாங்களாம்… 

அவனுக எல்லாம் தேடி களைச்சு இப்பம் நம்மள வரச் சொல்லியிருக்கானுகளா?

இல்ல… அவனுகளுக்கப்புறம் பாரஸ்ட் டிபார்ட்மெண்டல இருந்தும் தேடியிருக்காங்க?

யாரு… பால்துரையா?

ஆமா… அவருக்க டீம்மும் தேடி பார்த்து கிடைக்காம, கடைசியில உங்க பேரை அவரு சொல்லியிருக்காரு?

ஓ … அதுனாலதான் ஜே.டி ய காலைல லைனுக்கு வந்துட்டாரா…

ஆமா… நாமளும் கண்டு பிடிக்கலைன்னா “தீயணைப்பு துறைக்கே” கேவலம்…

கண்டு பிடிக்கலாம்டே… உங்க மூட்டுக்காணிட்ட சொல்லியாச்சுல்லா…

வெளுப்பத்துலேயே சொல்லியாச்சு சார் … ஆளு அனுப்புரேன்னு சொல்லியிருக்காரு… இந்நேரம் வந்திருப்பானுகோ… 

அவனுகதான் சரி… காடறிஞ்ச அவனுகதான் வேலையை சுளுவா முடிக்க முடியும். முத்து மெதுவாகச் சிரித்தான்.

வண்டியின் ஜன்னலில் “தொடர்ந்து நிற்கும் மதில் சுவர்” போல செம் பாறைகள் மற்றும் கரும் பாறைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இடையிடையே மரங்களின் வேர்கள் அடங்கிய புதர்கள். மூன்று நான்கு ஆட்கள் உயரத்திற்கு “வனம்” சாலையின் வலப்புறத்தை முழுவதுமாய் சூழ்ந்திருந்தது. சாலையின் மறுபகுதி அதே பச்சையோடு பின்பக்கமாய் சாய்ந்திருந்தது. பசுமை முடியும் இடத்தில் தெளிவான கண்ணாடியென “பழையாறு” புதிய தண்ணீரோடு ஓடிக்கொண்டிருந்தது. யாரோ கைபிடித்து உருட்டியது போன்ற “உருண்ட பாறைகள்” ஆறு முழுவதும் வெவ்வேறு அளவுகளில் ஆங்காங்கே காணக் கிடைத்தன. ஏற்றங்களில் திணறிய ஜீப் வண்டி, முக்குவதுபோல் “புகை கக்கி” வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. வீரப்புலி வனப்பகுதிக்குள் நுழைந்து காளிகேசம் அருவியை அடைய 40 நிமிடங்கள் ஆகியிருந்தது. 

அடர்வனத்தின் மையப்பகுதியிலிருந்து “காளிகேசம் அம்மன் கோவில்”. கோயிலைச் சுற்றிலும் தேக்கம் பூக்களும், பன்னீர் பூக்களும் பரப்பும் மணம். வனப்பேச்சி, கரும்மாண்டி தேவி, அப்பாண்டி தேவதை, ஆயிரவல்லி, வனகாளி, சோலஞ்சியம்மன் என பலபெயர்கள் அவளுக்கு. பழமை மாறாத சிறியகோவில். கோவில் வளாகத்தில் பூவும், பிஞ்சுமாய் காய்த்துக் குலுங்கும் வேப்பமரங்கள். தொட்டு அடுத்து இரைச்சலுறும் இயந்திரமென “காட்டருவி” கொட்டும் சப்தம். 

அதனை சூழ்ந்து கரும் பசுமையுடன் கூடிய அமானுஷ்யமாய் விரிந்திருந்தது வனம். கொடும் காட்டை வகிடெடுத்து ரெண்டாகக் கிழிப்பதைப் போல் பளிங்குத் தண்ணீரோடு காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது. தண்ணிக்குள் நீரோட்டத்திற்கு எதிராக புழங்கும் “மீன் கூட்டங்களை” மேலிருந்தே பார்க்க முடிந்தது. தண்ணீரில் மனிதர்களின் காலைக் கண்டால் அவர்கள் இடும் உணவிற்காக மீன் கூட்டங்கள் கால்களைச் சுற்றி வளைத்தது.

ஆற்றைக் கடந்து அருவிக்கு அருகில் ஜீப்பை நிறுத்தினார் கிருபாகரன். ஏற்கனவே பேசி வைத்த படி முத்து இறங்கியதும், காட்டுக்குள் வேறொரு பக்கமாய் நடந்தான்.

சட்டுனு வாடே … – கிருபாகரன் அதட்டினார்.

“போட்டாணி குகைக்கு அடுத்த கலுங்குல இருக்குறானுகளாம்”- என்று கூறிக் கொண்டே காணியின இளைஞர்களை அழைப்பதற்காக காட்டுக்குள் இறங்கி மரங்களுக்குள் மறைந்தான் முத்து. 

நடந்த அசௌகரியத்தின் அடையாளமாய் சில அரசு வாகனங்களை சாலை விளிம்பிலேயே காணமுடிந்தது. 

கிருபாகரன் அருவியை நோக்கி முன்னேறினார். காட்டின் குளிர்ச்சி கிருபாகரனுக்கு பல “கிளர்ச்சி எண்ணங்களை” உண்டாக்கியது. காடு அப்படித்தான். மனிதர்களை ஆவலாய் உள்ளிழுத்து இதமான உணர்ச்சிகளோடு “உள்ளார்ந்து” உறவாடும்.

மழையில் நனைந்த சருகுகள் நடக்க நடக்க “சகதிகளாக” மாறிக் கொண்டிருந்தன. அருவியின் இரைச்சல் பெரும் சப்தமாய் காதுக்குள் விழத்தொடங்கியது. குறிப்பிட்ட சில நபர்களைத் தவிர மற்ற எல்லோரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். அமைச்சரின் காரியதரிசி ஒருவர் அங்கிருந்த சில அதிகாரிகளை அதட்டிக் கொண்டிருந்தார். இடையிடையே போன் வரும்போது யாரிடமோ பவ்வியமாகப் பேசிக் கொண்டிருந்தார். புதிதாக வந்த கிருபாகரனை எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள். அமைச்சரின் மகனோடு வந்த இரண்டு நண்பர்களும் தூக்கமில்லாத கண்களோடு களைப்பாயிருந்தனர். பணம் கொடுக்கும் “வனப்பு” அவர்கள் மேனியெங்கும். ஆடம்பரம் கொடுக்கும் “ஏளனம்” அவர்களின் பேச்செங்கும். நடந்த நிகழ்வுகளால் கொஞ்சம் பயந்திருப்பது மாதிரியும் தெரிந்தது. போலீஸ் பார்மாலிட்டீஸ் முடிந்த காரணத்தினால் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தனர். 

போலீஸ் எஸ் ஐ சண்முகம் எப்படியும் பெரிய தொகையை அடித்திருப்பாரென கிருபாகரனுக்கு தோன்றியது. “கேஸ் மூலமா பணம் பாக்குறது அவனுகோ, பொணத்தை எடுக்கத்துக்கு மட்டும் நம்மள கூப்பிடுகானுக்கோ” – கிருபாகரனின் மனதிற்குள் “விதண்டாவாத சிந்தனை” ஓடியது. ஏற்கனவே தேடிக்களைத்த போலீஸ் நபர்களோடு கிருபாகரன் மேலும் சில விஷயங்களை விவாதித்தார். எம்பியும் ஒருமுறை நேரடியாக கிருபாகரனுடன் போனில் பேசினார். இரு பணக்கார வீட்டு இளைஞர்களும் சண்முகத்திடம் விடைபெற்றுக் கொண்டு காரில் கிளம்பினர். 

காலை வெயில் சுள்ளென்று அடிக்கத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல அங்கிருந்த அனைவரிடமும் நடந்த விஷயத்தின் வீரியத்தை கிருபாகரன் தெளிவாக விளக்கினார்.

நாம எல்லாரும் நினைக்கிற மாதிரி இந்த காளிகேசம் அருவி பள்ளத்துல விழுந்து, மேலெழும்பி ஆறாக ஓடுவது இல்ல. தண்ணி விழுறதே ஆத்தோட “ஊத்து” உற்பத்தி ஆகுற முன்னூறு அடி ஆழமுள்ள கிணத்துலதான். விஷயம் தெரியாதவங்க உள்ள சாடும்போது, இழுப்புல கீழ போய் இடுக்குல மாட்டிக்கிடுவாங்க … நல்ல நீஞ்சல் தெரிஞ்சவங்களாலும் சாதாரணமா மேல வரமுடியாது. பாறை இடுக்குல மாட்டிக்கிட்டே சாகவேண்டியதுதான். ஆழத்துல மாட்டுன பாடியை எடுக்குறதும் கஷ்டமான காரியம். இறந்தஉடல் நாள்பட சிதைந்து தண்ணியோட துணுக்குகளா கலக்குமே தவிர, மேல வராது… அப்படியும் எடுக்கணும்னா… இந்த காட்டுல பூர்வக் குடியா இருக்குற மக்களால்தான் அதை பண்ண முடியும் – என்று கிருபாகரன் சொல்லி முடிக்கும் நேரத்தில் காட்டுக்குள்ளிருந்து முத்துவும் அந்த இரண்டு காணியின இளைஞர்களும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அவ்விடம் விட்டு எல்லோரையும் நகரச் சொல்லிவிட்டு, வந்தவர்களிடம் கிருபாகரன் பேச ஆரம்பித்தார்.

சின்ன வயசு பையன்… உள்ள போயி பத்து பனிரெண்டு மணியாச்சி… பாடி தண்ணீல ஊறி உப்பியிருக்கும்… சட்டுனு வேலையை முடிக்கணும்… 

நோக்காம் சாரே… தேவி அம்மையை தொழுதிட்டு கசத்துல இறங்காம்…- என்று கூறி உடைகளை களைய ஆரம்பித்து, கையோடு தேக்கிலையில் கொண்டு வந்திருந்த மரவள்ளிக் கிழங்கு பொதியலை எடுத்துக்கொண்டு, இளைஞர்கள் கோவில் நோக்கி நகர ஆரம்பித்தனர். 

கிருபாகரன் முத்துவை நோக்கி, என்னடே… இதெல்லாம்..செத்த பிரேதத்தை எடுக்கதுக்மா… சாமிட்ட அனுமதி கேட்கணும்… – எரிச்சல் பட்டுக் கொண்டார்.

இது வழக்கம்தான் சார்… அவனுக வசம் வாக்குல விட்டுருங்க… கொண்டு வந்த கிழங்கை சாமிக்கு படைச்சிட்டு இப்பம் வந்திருவானுக்கோ… – முத்து எப்படியோ சமாளித்தான்.

வந்தவர்கள் விலகிச் செல்வதை கவனித்த அமைச்சரின் காரியதரிசி வேகமாய் ஓடிவந்து என்னவென்று கேட்டார்.

ஏதோ பூஜை செய்யணுமாம்…- என்று முத்து சொல்ல, கேட்ட அவர் முகமும் அஷ்டகோணலாய் மாறியது. 

வேறு வழியில்லாமல் எல்லோரும் காத்திருக்கத் தொடங்கினர். பத்து, பதினைந்து நிமிடங்களில் பூஜை முடித்து இருவரும் திரும்பி வந்தனர். இருவரின் உடம்பிலும் திருநீற்று தீட்டல்கள் தென்பட்டன. கையிலிருந்த அவித்த மரவள்ளிக்கிழங்கை ஒரு குவியல் எடுத்து, வான் நோக்கி நீட்டி, சில நிமிட பிராத்தனைக்குப் பின் நீருக்குள் எறிந்தனர். எல்லோரும் அவர்கள் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆற்றில் விழுந்த உணவுக்கு மீன்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. ஒரு சிறு மீன் கூட உணவை கொத்த வில்லை. எல்லோருக்கும் ஆச்சர்யம் மேலோங்கியது.

இளைஞர்கள் இருவரிடமும் சிறு தயக்கம் தோன்றியது.

அம்மைக்கு அனுமதி… கிட்டலையாக்கும்… இன்னும் கொஞ்சம் தாமசிச்சு பார்ப்போம் சாரே…- ஒருமித்த கூறலாய் இருவரும் கூறலாயினர்.

கூடியிருந்தவங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 

திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

கிருபாகரனுக்கு லேசான எரிச்சல் வந்தது.

தம்பி… நிலைமை தெரியாம பேசாதீங்க… இப்பவே ரெம்ப நேரம் ஆயிட்டு… உங்க மூட்டுக்காணிட்ட வேணும்னா நான் பேசுறேன்…

அம்மையிட அனுமதியில்லாது நெங்களுக்கு பற்றில்ல சாரே …- அவர்கள் சொல்லில் உறுதி தெரிந்தது.

தம்பி… அதுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்ல… சொன்ன வேலையை பாருங்க…

சார்… செமிக்கணும்… வேறோ ஏதோ பிசகு உண்டு… அது கொண்டானு இப்போல் அனுமதி கிட்டியில்லா – இருவரும் வெகுவாக மறுதலித்தனர்.

கிருபாகரனுக்கு எரிச்சலாய் வந்தது. அதிகார கோபமுகத்தை அவர்களிடம் காட்டத் தொடங்கினார். அவர்கள் லேசாக பயந்தனர். முத்துவும் இடைப்பட்டு சமாதானத்திற்கு முயன்றான். சிலநிமிட வாக்கு வாதத்திற்கு பிறகு கசத்திற்குள் இறங்க அரைகுறையாய் இருவரும் சம்மதித்தனர். 

நீண்ட கயிறை தோளில் மாட்டிக்கொண்டு நீருக்குள் இறங்கினர்.நீண்ட குழாய் போன்ற பெரிய மூங்கில் கழியின் கீழ்புறத்தில் செருகப்பட்டிருந்த சிறிய மூங்கில் கம்பொன்றை, காற்றுக்காக வாயில் பற்றியபடி இளைஞர்கள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர் . வெறும் மூங்கில் முனை மட்டும் தண்ணிக்கு மேல் தெரிந்தது. சுற்றியிருந்த அனைவரிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெளியே தெரிந்த மூங்கிலைச் சுற்றி, நீர்குமிழிகள் கொப்பளித்துக் கொண்டிருந்தன.

ஆறேழு நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணிக்குள்ளிருந்து இருவரும் வெறும் கையோடு வெளிப்பட்டனர். அதைப்பார்த்து சுற்றியிருந்தவர்கள் படபடப்பாக, இருவரையும் தனியாக அழைத்து முத்துவும் கிருபாகரனும் பேச ஆரம்பித்தனர்.

சாரே… நெங்களு பரஞ்சில்ல… காரியம் பிசகானுன்னு… 

என்னாச்சு… விஷயத்தை சொல்லுங்க…

கசத்திண்ட அடியில ரெண்டு பிரேதங்கள் உண்டு சாரே… 

கசையடி வாங்கிய ஆட்டுக்குட்டியென நடுங்கினார் கிருபாகரன்.

அதுல ஒண்ணு பெண்குட்டியான்னு… – என அடுத்த பேரதிர்ச்சியையும் இளைஞர்கள் வீசினர். 

கேட்ட வார்த்தைகளின் வீரியத்தில் கிருபாகரனும் முத்துவும் “சகலமும்” அதிர்ந்தனர். கிருபாகரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்களின் முகக் குறிப்பை உணர்ந்த அமைச்சரின் காரியதரிசியும், எஸ் ஐ சண்முகமும் மிக வேகமாக அருகில் வந்தனர். உள்ளே இரண்டு பிணங்கள் இருப்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று மன்றாடினர். கிருபாகரனுக்கு கோபம் தலைக்கேறியது. முத்து பேயறைந்தது போல் பேசாமலிருந்தான். தூரத்திலிருந்து சிலபேர்கள் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாமென்று கூறிக்கொண்டே இருந்தனர். நிலைமை விபரீதமாய் தொடர, சரியாக அவர்கள் தலைக்கு மேல காட்டுப்பருந்தொன்று சிறகசைக்காமல் பறந்து கொண்டிருந்தது. 

அமைச்சரின் மகன் ஒரு பெண்ணோடும், இரண்டு நண்பர்களோடும் காட்டுக்குள் வந்ததாகவும், அருவியில் குளிக்கையில் “இந்த விபத்து” ஏற்பட்டு விட்டதாகவும் அவர்கள் நடந்தவைகளை விவரித்தனர். கூட இருந்த இரண்டு நண்பர்களும் இவ்விஷயத்தை ஏற்கனவே கூறிவிட்டதாகவும் கூறினர். ஒரு பெண்ணோடு தன் மகன் இறந்த செய்தி வர, அமைச்சருக்கு விருப்பம் இல்லை என்றனர். அந்த பெண் இங்கு வந்தது வேறு யாருக்கும் தெரியாதென உறுதி கூறினர். எல்லா விஷயங்களும் கிருபாகரனுக்கு கொஞ்சம் தெளிவாகப் புரிந்தது. அருவியின் ஆழத்திலிருந்து ஆணின் பிணத்தை மட்டும் எடுத்தால் போதுமென, மீண்டும் மீண்டும் கெஞ்சினர். இதற்காக எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சரின் காரியதரிசி பெரிதாக வாக்களித்தார். 

அருவித்தண்ணீரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் கிருபாகரன். கோபமும் குழப்பமும் அவருக்குள் நிறைந்திருந்தது. அருவியையும், கோவிலையும் அடுத்தடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். எந்நாளும் காலையில் தான் கண்விழிக்கும் செல்ல மகளின் அழகு முகம் தீடிரென அவர் நினைவுக்கு வந்தது. 

கோபம் மீண்டும் தலைக்கேற “இந்த அநியாயத்தை என்னால பண்ண முடியாது…” – என்று சப்தமிட்டார். 

நடந்தது “விபத்து” என்ற நிலையில் அந்த பெண்ணின் வீட்டுக்குதெரியப்படுத்தி, அப்பெண்ணின் உடலையாவது அப்பெற்றோர்களுக்கு கொடுக்கலாமே…- என்றார். 

என்ன காரணத்தினாலோ என்னவோ, இருவரும் அதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள வில்லை. ஏதேதோ காரணம் கூறினர். அவர்களிடம் பேச பேச கிருபாகரனின் மனதில் ஏராளமான சந்தேகங்கள் உருவாகின. பெண்ணின் உடல் வெளியே வரக்கூடாது என்பதில் அவர்கள் மிக மிக உறுதியாக இருந்தனர். அவர்கள் ஏதோ ஒன்றை தன்னிடம் மறைப்பது கிருபாகரனுக்கு தெளிவாகப் புரிந்தது. 

தூரத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த முத்து, கைகளைப் பின்னி காட்டாற்றையே நோக்கிக் கொண்டிருந்தான்.

நேரம் செல்ல செல்ல பல இடங்களிலிருந்து அதிகாரத் தொனியில் மிரட்டல்கள் வரத் தொடங்கின. அரைமணிநேர இடைவெளியில் ஏழெட்டு “அதிகார அழைப்புகளை” தொலைபேசியில் கடந்திருந்தார் கிருபாகரன். நடந்தது யாருக்கும் தெரியவேண்டாமென முத்துவுக்கும் “கனமான கட்டளைகள்” பிறப்பிக்கப்பட்டிருந்தன. நேரம் மதியம் மூன்றை கடந்து கொண்டிருந்தது. வானம் மழைவரும் அறிகுறியோடு “கருக்கத்” தொடங்கியது. கூடவே வானில் அந்த காட்டுப் பருந்தும் தொடர்ந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது.  

மனதை கல்லாக்கிக் கொண்டு செயலில் இறங்கத் தொடங்கினார் கிருபாகரன். அடுத்த ஒருமணி நேரத்தில் உப்பி பருத்திருந்த அமைச்சரின் மகன் சடலமாக வெளியேவர, வெளியே காத்திருந்த கூட்டங்கள் “வாயிலும், வயிற்றிலும்” அடித்துக்கொண்டது. பத்திரிக்கை நபர்கள் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தனர். எஸ் ஐ சண்முகம் எல்லோரையும் மட்டுப்படுத்தினார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து, உடலோடு நகர “கூட்டம்” அங்கிருந்து நகரத் தொடங்கியது. 

“அரசியல் களேபரங்கள்” முடிந்து, மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் அருவிக்கரையில் கிருபாகரன், முத்து, அந்த இரண்டு இளைஞர்களைத் தவிர வேறெந்த மனிதத் தலைகளும் இல்லை. கிருபாகரனின் மனதிற்குள் என்னவோ ஓடிக்கொண்டிருந்தது. அமைதியாகவே இருந்தார். பொங்கி பாயும் அருவியையும், கால் நனைக்கும் ஆற்றுத் தண்ணீரையும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார். “இதயத்துடிப்பு” காதில் கேட்கும் அளவிற்கு ஒரு பதட்டம் இருந்து கொண்டிருந்தது. நால்வரும் மிகக் களைப்பாயிருந்தனர். 

சுற்றிலும் மெலிதாய் இருள் கவ்வ ஆரம்பித்தது.களைப்பு மிகுதியில் கோவிலுக்கருகில் சென்று சிறிது நேரம் உட்கார்ந்தனர். இருட்டின் கருப்பு காடு முழுவதும் பரவத் தொடங்கியது. “கொடும் பசி” நால்வரின் வயிற்றுக்குள்ளும் உருளையாய் உருண்டு கொண்டிருந்தது. ஏதோ ஒரு ஹோட்டலில் இருந்த வந்திருந்த சாப்பாடு பாலித்தீன் கவரில் ஆற்றோரமாய் வைக்கப்பட்டிருந்தது. முத்து அதனை எடுத்து எல்லோருக்கும் கொடுக்க நால்வரும் சாப்பிடத் தொடங்கினர். 

கொடும் காட்டின் பெரும் மவுனம் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தது. அருவியின் இரைச்சல் மிகத்தெளிவாக கேட்பதுபோல் ஒரு தோணல். அந்த இரைச்சல் எதிரே இருக்கும் தேவிஅம்மையின் “ஆவேச கர்ஜனையாகக்” கிருபாகரனுக்குத் தோன்றியது. உருட்டிய சோற்றை அளைந்து, ஏதோ ஒன்றை சிந்தித்துக் கொண்டே இருந்தார் கிருபாகரன். ஒரு பருக்கை கூட அவரால் சாப்பிட முடியவில்லை. விரக்தியில் சோற்றை எடுத்து எதேச்சையாய் ஆற்றுக்குள் வீசினார் கிருபாகரன். கூட்டம் கூட்டமாய் வேக வேகமாய் மீன்கள் அதனை கொத்த ஆரம்பித்தன. ஏதோ ஒரு “கணிப்பு” கிருபாகரனுக்குள் பொறி போல். வேகமாய் திரும்பி கோவில் கருவறையில் வீற்றிருந்த தேவியை நோக்கினார். ஒரு நொடிக்குள் வீசிய சிறு அழுத்தக் காற்றில் “வேப்பம்பூக்கள்” சில உதிர்ந்து தண்ணீரில் கலந்தன. தேவியை நோக்கிய பார்வை நிலையிலேயே முத்துவும் இருந்தான். இளைஞர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர். மனித சப்தங்கள் இல்லாத மலையோசைகள் நிரம்பியிருந்தது. யாரும் எதிர்பார்க்காத நொடியில் வீல்ல்ல்… லென்றுஒரு சப்தம். தெய்வத்தின் “கெவிளி” போல் அந்த பருந்தின் அலறல். எல்லோரும் குரல் வந்த திசையில் திரும்பி பார்க்க, உயரத்தில் பறந்திருந்த பருந்து கோவிலுக்கு எதிரே இருந்த புங்கை மரத்தில் அடைந்திருந்தது. 

நேரமோ இருட்டிக்கொண்டிருந்தது. யோசித்து, ஏதோ ஒரு முடிவோடு முத்துவிடம் சில விஷயங்களை கூறலானார் கிருபாகரன். அடுத்த அரை மணி நேரத்தில் இளைஞர்கள் இருவரும் அந்த பெண்ணின் சடலத்தை வெளியே எடுத்திருந்தனர். எடுத்த சடலத்தை வாழையிலையில் பொதிந்து, சில கிலோ மீட்டர்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று, ஜீப்பின் பின் புறத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீயிட்டு எரிக்கத் தொடங்கினர். 

ஈரம் சொட்டிய “உடல்” நெருப்பைச் சுவைத்து கருக்கத் தொடங்கியது. தீயின் நாவுகள் மஞ்சளும் சிவப்புமாய் மேலெழும்பின. ஆனால் காற்றில் மட்டும் தேக்கம் பூக்களின் வாசம். சில நேரம் வேப்பம் பூக்களின் வாசமும். யாருக்கும் எதுவும் விளங்கவில்லை. பிணமெரியும் நாற்றம் அவர்கள் நாசிக்கு உறைக்கவே இல்லை. நால்வரும் உணர்ச்சி ததும்பி நின்றிருந்தனர். எரியும் சுவாலையை நோக்க நோக்க ஒரு நிறைவு வந்தது. அந்த இரண்டு இளைஞர்கள் மட்டும் எரியும் சிதையை கை கூப்பி வணங்கத் தொடங்கினர்.

திடீரென, இதோ இந்த காட்டுக்குள் எரிந்து கொண்டிருப்பவளை, இப்பெண்ணின் பெற்றோர்கள் தேட ஆரம்பித்து இருப்பார்கள் என்றும் கிருபாகரனுக்குத் தோன்றியது. அதன் தொடர்ச்சியாய் இறக்கி வைக்க முடியாத “ஒரு பெரும் பாரம்” அவர் மனதிற்குள் குடிகொண்டது. அம்மாதிரியான விரக்தியிலேயே முத்துவும் இருப்பதாகத் தோன்றியது.அதற்கு மேல் இருவராலும் அங்கு நிற்க முடியவில்லை. 

இளைஞர்கள் இருவருக்கும் தேவையான பணத்தை கொடுத்து விட்டு, ஜீப்பிலேறி, இருவரும் காட்டைவிட்டு தங்கள் வீட்டை நோக்கி பயணமாயினர். சரியாக கோவிலை தாண்டும் நேரத்தில் பருந்திடமிருந்து மீண்டும் ஒரு “கெவிளி”. ஜீப் மிக நிதானமாக நகர்ந்து கொண்டிருக்க, தடிக்காரன்கோணம் தாண்டுவது வரை இருவரும் பேசிக் கொள்ளவே வில்லை. 

காட்டுக்குள் மஞ்சள் ஒளியை பீச்சியபடி வாகனம் நகர்ந்து கொண்டே இருந்தது. உள்ளே இருந்தவர்களின் எண்ண ஓட்டங்களில் ஒரு துளி அசைவில்லை.

தெய்வம் உண்மையிலேயே… இருக்காடே… – தொண்டையைச் செருமிக்கொண்டே தீடிரென கேட்டார் கிருபாகரன்.

இல்லையா பின்ன… – என்று ஜீப்பின் பின்புறக் கண்ணாடியை கவனிக்கச் சொன்னான் முத்து. அவன் கண்கள் கலங்கியிருந்தது. காட்டுக்குள் அவர்கள் உருவாக்கிய தீயின் ஸ்வாலைலிருந்து மேலெழும்பிய புகை ஆவேசமாய் வானில் கலந்து கொண்டிருந்தது. காற்றில் கரைந்த புகையில் “அப்பெண்ணின் உருவத்தை” கிருபாகரனால் உணர முடிந்தது. 

அதற்குமேல் அவர் பின்புறம் பார்க்கவில்லை. 

தலையைத் திரும்பிக் கொண்டார். 

கண்மூடி “ஜீப்” இருக்கையில் மெதுவாக சாய்ந்து கொண்டார். 

இருந்தும் “இறந்தவர்கள்தான் தெய்வமாக மாறுவார்களா?” – என்ற சந்தேகம் மட்டும் அவருக்குள் அழுத்தமாய் நிலைகொண்டது.

– தெரிசை சிவா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.