ஏ பெண்ணே – 8

This entry is part 8 of 10 in the series ஏ பெண்ணே

தமிழாக்கம் : அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

அம்மா தனக்குத்தானே –

நான் இவளை கருவுற்றிருந்த போது,  எப்போதும், எதையோ இழந்தவள் போலவும்,  எங்கோ தொலைந்து போனவள் போலவும், மிகவும் தனிமையாகவும் உணர்ந்தேன். ஏன் அப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. நாள் முழுக்க புழுதி படிந்த பாதைகளில் நடந்து கொண்டே இருக்கவேண்டும் போலத் தோன்றும். எனக்குள் நெடி துயர்ந்த பைன் மரம் ஒன்று வளர்ந்து கொண்டிருப்பதை போலத் தோன்றும். அதுதான் வளர்ந்து பிறந்தது. நான் பெற்றது ஒரு மரத்தை தான். காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. இன்னமும் ஆடிக்கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. இவளை குளிர்ச்சியானவள் என  ஒருபோதும் எண்ணி விடாதே. இவளுடைய நாடி நரம்புகளிலெல்லாம் நெருப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படித்தான் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாளோ!

சூசன், மணி அடிக்கிறது பார். யாரோ வந்திருக்கிறார்கள். என்னுடைய பேரன் பேத்தியாகத்தான் இருக்கும்.

அம்மா,  அவர்கள் தங்களுடைய தாத்தா பாட்டி வீட்டுக்கு போயிருக்கிறார்கள்.

ஆம். தங்களுடைய அம்மாவழிப் பாட்டியின் மனதை மகிழ்விப்பதற்காக இருக்கும். நான் இந்த உலகத்திலிருந்து சீக்கிரமே போய்விடப்போவதாக நினைத்து என் சம்பந்தியம்மாள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு ஆறுதல் சொல்வதற்காக அங்கே போயிருப்பார்கள். சூசன்,  நீ என்னுடைய பேரனை பார்த்திருக்கிறாய் இல்லையா? அவன் அச்சு அசல் தன்னுடைய தாத்தாவைப் போல. அவனது நடை உடை பாவனை எல்லாமே தாத்தாவைப் போலத்தான். கைகளை அசைத்துப் பேசுவது,  உணவு விருப்பங்கள் எல்லாமே தாத்தாவை போலத் தான்.

அம்மா கண்ணயர்கிறார்.

கண் திறந்ததும், அறையின் நாலா பக்கமும், எதையோ அடையாளம் காண முயற்சிப்பது போல பார்வையை ஓட விடுகிறார். கட்டில் அருகே நின்று கொண்டிருக்கும் மகளைப் பார்த்துக் கோபமாக-

யாரடி நீ?  இறுக்கமான முகத்துடன் உள்ளே நுழைந்து, துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைப் போல, ஒரே நொடியில் வெளியேறி விடுகிறாய்! உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன். உன் அப்பாவின் மறு உருவம் நீ! ஆனால், அவரிடம் ஆணவம் என்பது துளி கூட இல்லை. உன்னுடைய மண்டையிலோ அதை மூட்டையாகக் கட்டித் திணித்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், நீ யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.

மகள் ஓசைப்படாமல் அறையை விட்டு வெளியேறுகிறாள்.

சூசன், அலமாரியில் ஒரு உண்டியல் இருக்கும் பார். என்னுடைய மகள் வயிற்றுப் பேத்தியுடையது. அதை எங்காவது தொலைத்து விடாதே. அலமாரிக் கொக்கியில் பட்டு நூல்கண்டைத் தொங்கவிட்டிருக்கிறேன். என் பேத்திக்காக நான் பொம்மை செய்து கொண்டிருக்கிறேன். பட்டு நூலை உபயோகித்து பொம்மைக்கு முடி ஒட்டவைத்து பின்னலிடப் போகிறேன். நீ நூல்கண்டை சிடுக்காக்கி விடாதே. இந்த ஜன்னல் கதவுகள் ஏன் ஒன்றோடு ஒன்று அடித்துக் கொள்கின்றன? அங்கே பறந்து கொண்டிருக்கிற புடவை தலைப்பு யாருடையது? ஓ! அது என்னுடைய துப்பட்டா தான். இறுகப் பிடித்துக் கொள். இல்லாவிட்டால், அடிக்கிற புயலில் அது பறந்து விடும்.

சூசன், அக்காவை அழைத்து வருகிறாள்.

இருவரும் குனிந்து அம்மாவைப் பார்க்கிறார்கள்.

தூங்கிக் கொண்டிருக்கிறார். ஆழ்ந்த உறக்கம்.

சூசன், நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள். நான் அம்மாவின் அருகே உட்கார்ந்து கொள்கிறேன்.

அம்மா, விழித்துக் கொண்டு, கோபம் நிறைந்த குரலில்,

சூசன்,  எங்கே போய்விட்டாய்? 

என் படுக்கை விரிப்புகளை மாற்று. ஈரமாகிவிட்டன.

சூசன் அம்மாவை துடைத்து சுத்தம் செய்தபின், படுக்கை விரிப்புகளை மாற்றுகிறாள்.

ஆழ்ந்த நீண்ட உறக்கத்திற்கு பிறகு,  அம்மா,  பதறியபடி எழுந்திருக்கிறார்.

ரயில் வண்டி சத்தம் கேட்கிறதா உனக்கு? ஸ்டேஷன்  தூரத்தில் இருக்கிறது. ஆனாலும்,  இன்ஜினின் தடதடக்கும் சத்தம், இங்கு வரை வந்து,  என் நெஞ்சுக்குள் புகுந்து புறப்படுகிறது.

மகள், அம்மாவின் தலை முடியை மென்மையாகக் கோதி விடுகிறாள்.

உன் அப்பா, இறப்பதற்கு முந்தைய நாட்களில், விடி காலை நான்கு மணி ரயில் சத்தம் கேட்டு, பதறியடித்து எழுந்து உட்கார்ந்து கொள்வார். நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். அவரிடம் எதுவும் கேட்டதில்லை.  என்ன கேட்பது? ஒருநாள் இரவு,  இதே போன்ற நடுங்க வைக்கிற சத்தத்தைக் கேட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டார். தலையணையில் முழங்கையைப் பதித்தபடி, என் பக்கம் குனிந்து, ‘இந்தச் சத்தம் உனக்கு கேட்கிறதா? இது எனனை சோகமாக்கி விடுகிறது’ என்றார். நான் மௌனமாக இருந்தேன். நான் அவரிடம் என்ன சொல்லியிருக்க முடியும்? பயணம் முடியும் தருவாயில் இருக்கும்போது, என்னென்னவெல்லாம் மனக்கதவை தட்டிப் பார்க்கும் என்று எப்படி சொல்ல முடியும்? இறந்த காலத்தில் அனுபவித்த சுகங்கள் எல்லாம் கூட்டமாகச் சேர்ந்துகொண்டு,   கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கத் தூண்டினாலும், ஆத்மா,  விராட சொரூபத்தை நோக்கியே செல்கிறது. பழையபடி.

மகள்,  போர்வையைச் சரி செய்கிற சாக்கில்,  அம்மாவின் மணிக்கட்டைத் தொடுகிறாள்.

அம்மா, மென்மையான குரலில்,

இப்போதைக்கு இந்த கிழவி உயிரோடுதான் இருக்கிறாள்.போ,   நீ போய் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்.

மகள்,  கூச்சத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்க்கிற வகையில்,

அம்மா,  நான் எனக்கு காப்பி போட்டுக் கொள்ளப் போகிறேன். உங்களுக்கும் போடட்டுமா?

வேண்டாம். ஏதாவது சாப்பிடக் கொடுப்பதாக இருந்தால்,  பழங்கள் கொடு,  போதும்.

மாம்பழமா, ஆலு புகாரா, பழமா? எது வேண்டும்?

மாம்பழமே கொடு. பெயரைப் போன்றே அதன் குணமும். பெண்ணே,  உன் அக்கா, மிகவும் அழகாக பழம் நறுக்கித் தருவாள். மாம்பழத்தை இரு துண்டுகளாக நறுக்குவாள்.  சதைப்பற்றை, முள் கரண்டியால் வெட்டி எடுத்து, அதன் மீது பாலேட்டை தூவுவாள். கண் மனம் இரண்டுமே சுவையால் நிறைந்துவிடும்.

நீங்கள் தான் அவருக்கு இதையெல்லாம் கற்றுத் தந்திருப்பீர்கள்!

இல்லை,  அந்த நறுவிசு,  நேர்த்தியெல்லாம் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. எங்கள் வீட்டுப் பழக்கம் கிடையாது.

மகள், சிரிப்புடன், 

இப்போது திடீரென உங்கள் வீடு – எங்கள் வீடு என்கிற பேச்சு எங்கே எழுந்தது?

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? பெண்ணானவள், புகுந்த வீட்டில் வேர் விட ஆரம்பிக்கும்போது, பிறந்த வீட்டை, மனதின் பின்புறம் தள்ளி வைத்து விடுகிறாள். உன் அம்மாவையே பாரேன். வாழ்க்கையே முடிந்து போய்விட்ட சமயத்தில்,  இப்போது அதையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அம்மா,  இப்போதுதான் யாரிடமும் எந்த வித கருத்து வேறுபாடும் ஏற்பட வாய்ப்பில்லையே. இப்போது ஏன் போட்டி மனப்பான்மை தோன்றுகிறது உங்கள் மனதில்?

வெறுமனே வாயை மெல்ல அவல் தான் இவையெல்லாம். இதைப் பற்றி எல்லாம் யோசிக்கவோ பேசவோ எங்க நேரம் இருந்தது? இப்போது இப்படி படுத்துக் கொண்டிருக்கையில்,  இரு குடும்பங்களின் வண்ணங்கள், வித்தியாசமாகவும் தெளிவாகவும் தெரிகின்றன.

அம்மா, தராசின் எந்த தட்டில் எடை  அதிகம்?

ரொம்பவும் கர்வப்பட்டுக் கொள்ளாதே பெண்ணே. என் பிறந்த வீட்டுப் பெருமைகளும், எதற்கும் குறைந்தது இல்லை.

அதே கிளையிலிருந்து பிறந்து வளர்ந்தவர்தானே நீங்களும்! மொத்த வீட்டையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்து,  திறமையாக நிர்வாகம் செய்தீர்களே!

இல்லையடி! உன் குடும்பம் யாரோடும் அவ்வளவு சுலபமாக கலந்துவிடாது. எல்லாருடைய நற்குணங்களை யும் விழுங்கிவிடும்.

அப்படிச் சொல்லாதீர்கள் அம்மா! உங்களின் ஒரு குரலுக்கு இந்த குடும்பம் கட்டுப்பட்டு தானே இருந்தது!

எது எப்படி இருந்த போதிலும்,  உன் குடும்பத்தில் சந்தோஷமான மற்றும் வருத்தப்பட வைக்கும் நிகழ்வுகள் எல்லா திசைகளிலும்  பரவித்தான் இருந்தன. உன் குடும்பத்தார் எதைப் பார்க்கிறார்கள்,  என்ன யோசிக்கிறார்கள் என்று என்னால் ஒருபோதும் கணிக்க முடிந்ததில்லை. எப்போதும் தமக்குள்ளேயே ஆழ்ந்து கிடந்தார்கள்.

அம்மா,  நாங்கள் எல்லோரும் உங்களுக்கு அப்படியா தோன்றுகிறோம்?

பின் வேறு எப்படி? எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தானே தோன்றுவீர்கள்?

நீங்கள் எப்போதும் அப்படித்தான் இருந்தீர்கள். பெண்ணே, என் பிறந்த வீடும் இதற்கு கொஞ்சமும் சளைத்ததில்லை. ஆனால்,  அவர்கள் உங்களைப் போல,  தங்களைத் தலையில் சுமந்து கொண்டு திரிந்ததில்லை. உன் வீட்டினர்,  ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எப்போதும் தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

அம்மா, ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்?

என்னைப் பேச விடு. இந்த கணக்கு வழக்கையெ ல்லாம் தீர்க்கவென்று மறுபடியும் வரப்போகிறேனா என்ன? திருமணமாகி,  குடும்ப பந்தத்தில் கால் வைக்கும் பெண், மத்தால் கடையப்படுகிற தயிரைப்போல, பல்வேறு அனுபவங்களால் கடைந்தெடுக்கப்படுகிறாள். அவை எந்த பூகம்பத்தை விடவும் குறைந்ததல்ல. பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே காரணத்தாலும் கட்டாயத்தாலும்,  அவள் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்கிறாள்.

அம்மா, நீங்கள் மறுபடியும் இதே குடும்பத்திற்கு வர நேரிட்டால்,   எப்படி உணர்வீர்கள்?

அம்மா,  மகளை முதலில் கோபமாக முறைத்து பார்த்துவிட்டு, பிறகு சிரிக்கிறார்.

அடி! இந்த குடும்பத்தின் மூத்த கிழவி நான். என்னை கீழே அனுப்புவதற்கு முன் யாராவது என்னிடம் முதலிலேயே கேட்பார்களேயானால், நான் கட்டாயம் இந்த குடும்பத்திற்குத் தான் திரும்ப வருவேன். இந்த வீட்டில் உனது மூதாதையர்கள் சேமித்து வைத்த பண்பாடும் கலாச்சாரமும் இருக்கிறது. நான் உருவாக்கிய குடும்பமும் இங்கு பாதுகாப்பாக இருக்கிறது. இப்படி இருக்கையில்,  நான் ஏன் வேறு வீட்டுக் கதவை நாடி போகப் போகிறேன்?

மகள்,  தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்த போதிலும்,  அம்மாவின் நெற்றியில் மென்மையாக முத்தமிடுகிறாள்.

எவ்வளவோ வருடங்களாக இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால்,  சமீப காலமாகத்தான்,  இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததற்கு,  ஏதாவது உருப்படியாக செய்திருக்கலாமே என்கிற எண்ணம் அடிக்கடி வருகிறது. இவ்வளவு பெரிய உலகத்தையேனும் சுற்றிப் பார்த்திருக்கலாம். ஆனால் குடும்பக் கவலைகளிலும் பொறுப்புகளிலும் உழன்றே,  வாழ்க்கை முடிந்து விட்டது.

அம்மா நீங்கள் எவ்வளவோ செய்து முடித்து விட்டீர்கள். முழு குடும்பத்தையும் கட்டி காத்து, ஒவ்வொருவரையும் தங்கள் கால்களில் நிற்க வைத்திருக்கிறீர்கள். குடும்பத்தை கட்டுக்கோப்பாக, சிறப்பாக உருவாக்கி இருக்கிறீர்கள்.

(தொடரும்)

Series Navigation<< ஏ பெண்ணே – 7ஏ பெண்ணே 9 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.