- 20xx- கதைகள்: முன்னுரை
- இருவேறு உலகங்கள்
- 2084: 1984+100
- 2015: சட்டமும் நியாயமும்
- 2010- மீண்டும் மால்தஸ்
- 2019- ஒரேயொரு டாலர்
- 2016 – எண்கள்
- பிரகாசமான எதிர்காலம்
- நிஜமான வேலை
- அவர் வழியே ஒரு தினுசு
- என்ன பொருத்தம்!
- மிகப்பெரிய அதிசயம்
- அன்புள்ள அன்னைக்கு
- வேலைக்கு ஆள் தேவை
- கோழிக் குஞ்சுகள்
- விலைக்குமேல் விலை
- எதிர்வளர்ச்சி
சொல்வனம் 220-இதழில் வந்த ’20XX கதைகள்: முன்னுரை’யின் தொடர்ச்சியாக இக்கட்டுரை.
இயந்திரப் பொருளாதாரத்தினால் சில தலைமுறைகளாக நம் உடைமைகளின் எண்ணிக்கை அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப நம் வருமானம் பணவீக்கத்தையும் தாண்டி அதிகரித்து இருக்கிறது. நமக்குப் புதுப்புது விருப்பங்கள். அவற்றில் பல அவசியங்களாக மாறிவிட்டன. அவற்றை நிறைவேற்ற புதுப்புது தொழில் நுட்பங்கள். நாளை இன்றைவிட சிறப்பாக இருக்கும் என்பது அரசியல் கோஷம் மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு, சமுதாயத்தின் முக்கிய அங்கம். புதிய தொழில் முயற்சிகளுக்கு அதுவே ஊக்கம். ஊர்திகள் வீடுகள் வாங்குவதற்குத் தேவையான கடன், ஓய்வுக்காலத்தில் உழைப்பில்லா வருமானம், உலகெங்கும் கூடிக்கொண்டே போகும் பங்குச் சந்தைகளின் மதிப்பு போன்ற பணத்தினால் அளக்கக்கூடிய எல்லா பரிமாற்றங்களுக்கும் அது தான் அஸ்திவாரம். அது இல்லை யென்றால் வர்த்தக மற்றும் அரசியல் நிறுவனங்களின் திட்டங்களும் இல்லை.
வளர்ச்சி இல்லாத ஒரு காலமும் வரலாம் என்ற எண்ணமே பலரின் இதயத்தைப் பலவீனப்படுத்தும், மனித உறவுகளை சிதைக்கும், உயர் மட்டத்தினரை நடுங்க வைக்கும்.
பொருளாதார வளர்ச்சியில் ஒரு சில தீயவிளைவுகள் இருக்கலாம். ஆனால், மொத்தத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படியென்றால், இனிமேலும் அதைத் தொடர்வதற்கு ஏன் தடை?
நம்மை உயர்த்திய எல்லா இயந்திரங்களுக்கும் தேவை அகழ்ந்து எடுத்த அடர் சக்தியும் சுத்தமான கனிமங்களும். கடந்த நூறு ஆண்டுகளில் உலகமயமான பொருளாதாரத்தை இயக்கும் சக்தி பத்து மடங்கு (18 × 1012 W ) அதிகரித்து இருக்கிறது. அதே வளர்ச்சி அதே வேகத்தில் அடுத்த நூறு ஆண்டுகளுக்குத் தொடர அதைப்போல இன்னொரு பத்து மடங்கு சக்தி தேவை. அது குறிப்பிட்ட பரிமாணங்கள் கொண்ட பூமியில் சாத்தியம் இல்லை என்பதுடன் அது வேகமாகக் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த உணர்வில் உருவானது மாற்றுப்பொருளாதாரம்.
திடீரென்று ஒரு நாளின் பெரும்பகுதியில் மின்சாரம் வெட்டப்படுகிறது (தற்போது ஸ்ரீலங்காவில்), எரி வாயுவின் ஓட்டம் நின்றுவிடுகிறது (ஐரோப்பாவில் வரும் குளிர்காலத்தில்) என்று வைத்துக்கொள்வோம். அப்போது செய்வதறியாமல் தவிப்பதைத் தவிர்க்க படிப்படியாக அவற்றின் தேவைகளைக் குறைத்து நம்மைத் தயார் செய்வது எதிர்வளர்ச்சி.

எதிர்வளர்ச்சி என்கிற வாசகம் அண்மைக்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியலிலும் சமுதாய உணர்விலும் எந்தப் புதிய கொள்கையும் ஒரு நாளில் ஒரு ஆளின் வழியாக உருவாவது இல்லை. சிறுசிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து ஒரு நதி பாய்வதுபோல, ஒருசில முன்னோடிகள் வழிகாட்ட, அவர்களைத் தொடர்ந்து பலர் விவரங்களும் ஆதாரங்களும் சேர்க்க ஒரு புதிய பாதை அமைகிறது.
பால் ஏர்லிக்கின் ‘பாபுலேஷன் பாம்’ (1968-இல்) யு.எஸ்.ஸில் பரபரப்பை உண்டாக்கினாலும், புத்தகத்தின் குறைகளில் எக்ஸ்பொனென்ஷியல் வேகத்தில் பெருகும் மக்கள்தொகை உலகின் தாங்கும் சத்தியைத் தகர்த்துவிடும் என்ற அதன் அடிப்படை வாதம் அடிபட்டுப்போனது. அதே காலக்கட்டத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு வழிகளைப் பரப்ப முயன்ற சுகாதார மந்திரி (மக்கள்தொகை ஆய்வாளர்) டாக்டர் ஸ்ரீபதி சந்திரசேகரை, பசுமைப்புரட்சி கொடுத்த மிதப்பில் இந்தியா மறந்துபோனது.
எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த ‘த லிமிட்ஸ் டு க்ரோத்’ உணர்ச்சிகளுக்கு இடம் தராத ஒரு அறிவியல் முயற்சி. அதன் உட்கருத்து பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கும் எல்லைகள் உண்டு, நடைமுறையில் இருக்கும் இயக்கங்களில் மாற்றம் இல்லாவிட்டால் அவற்றை விரைவில் தொட்டுவிடுவோம், பிறகு வீழ்ச்சி. எவ்வளவு உலக வளம் இருந்தாலும் எல்லாருடைய ஆசைகளையும் நிறைவேற்ற அது போதாது என்பதை உணரத்த ‘த லிமிட்ஸ் டு க்ரோத்’ பயன்படுத்திய கணினி நிரல்களும், புள்ளி விவரங்களும், வரைபடங்களும் கூட அவசியம் இல்லை.
சிறிய ப்ரிட்டிஷ் தீவின் ஏகாதிபத்திய பொருளாதாரம் உலகமக்கள் மேல் ஏற்றிய சுமை. மாபெரும் இந்தியாவும் அவ்வழியைப் பின்பற்றினால் முழு உலகமும் வெட்டுக்கிளி தாக்கிய நிலம்போல வெறுமையாகிப் போகும். – மகாத்மா காந்தி (1928)
அடுத்தபடியாகக் குறிப்பிடவேண்டிய மாமனிதர் ஜியார்ஜெஸ்கு-ரோகன். ருமேனியாவில் பிறந்து வளர்ந்து, ஐரோப்பாவில் அறிவுசேர்த்து யூ.எஸ். வந்த ஒப்பற்ற சிந்தனைவாதி. 1950-இல் இருந்து 1976 வரை வான்டர்பில்ட் பல்கலையில் பேராசிரியாகப் பணிசெய்தது அக்கல்விக்கூடம் செய்த அதிருஷ்டம். அவர் பெருமையை மற்றவர்கள் உணராதது நம் எல்லாருக்குமே தூரதிருஷ்டம்.
தெர்மோடைனாமிக்ஸின் தராசில் பொருளாதாரத்தை நிறுத்தியவர் அவர். சக்தியை மட்டும் அண்டவெளியுடன் பரிமாறிக்கொள்ளும் பூமி ஒரு மூடிய அமைப்பு. அதில் பயன்தரும் சக்தியையும் கனி வளங்களையும் பயனற்ற வெப்பமாக, நுகர்பொருட்களாக, கடைசியில் கழிவுப்பொருட்களாக மாற்றும் இயந்திரப்பொருளாதாரம் இயற்கையின் விதிகளை மீற முடியாது என்பது அவர் எழுதிய புத்தகங்களின் சாரம். அதை ஓரளவு புரிந்துகொண்டவர் ஜிம்மி கார்டர் .
நாம் சுவாசிக்கும் காற்றும், அருந்தும் நீரும், பயிர் விளைக்கும் நிலமும்தான் நம்முடைய விலைமதிப்பிட முடியாத சொத்துக்கள். – ஜிம்மி கார்டர்
அவர் 1980-தேர்தலில் அடைந்த படுதோல்வி மனிதனை உயரப்போகும் மலைப்பாதையில் பிடித்துத் தள்ளியது. இப்போது சிகரத்தின் உச்சி தெரிகிறது. வேகத்தைக் குறைக்காமல் அதன் விளிம்பையும் தாண்டி ‘வைலி காயோட்டி’ போல நாம் பாதாளத்தில் விழலாம். இல்லை, நிதானமாக மரங்களின் கிளைகளைப் பிடித்து உடலில் சிராய்ப்புகளுடன் இறங்கி தரையைத் தொடலாம்.
என்னுடைய ‘காயகல்பம்’ என்கிற நாவலில் ‘டிக்ரோத்’ என்கிற நூலுக்கு ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னலி’ன் விமரிசனம்… இப்படியொரு தாக்குதல் நிஜமாகவே அதில் வந்திருக்கலாம்.
ஒரு கொள்கையை வேறொரு நிலைநிறுத்தப்பட்ட தத்துவத்தின் எதிர் என்று அழைப்பதே அதற்குப் பலவீனம். கிறித்துவத்துக்கு எதிரான (கடவுள்) அவநம்பிக்கை (ஏ-தீயிஸ்ம்) அர்த்தமற்றது என ரிச்சர்ட் டாகின்ஸின் வாதங்களைப் படிப்பவர்களுக்கு தெரியவரும். (பொருளாதார) எதிர்-வளர்ச்சியும் (டி-க்ரோத்) அப்படி ஒன்று. பொருளாதாரம் என்றாலே வளர்வது அதன் இயற்கைக்குணம். அதற்கு மாறான ஒரு நிதியமைப்பு எப்படி இருக்க முடியும்? டி-க்ரோத் விவரிக்கும் சமுதாயத்தின் சோகமான இலக்கணங்கள்.
தனிமனிதனின் உரிமையாக இல்லாமல் எல்லாரும் பகிர்ந்தகொள்ளும் அறிவு, கருவிகள், புழங்கும் இடங்கள்.
குறைந்த வேலைநேரம், குறைந்த வருமானம்.
பதவி உயர்வு இல்லாத தொழில் வாழ்க்கை.
பலரும் பங்குகொள்வதால் சராசரியான கலை இலக்கியம் மற்றும் விளையாட்டுப்போட்டிகள்.
புதிய நுகர்பொருட்கள் இல்லை, அவற்றின் பெருமைகளை விளக்கும் விளம்பரங்களும் இல்லை.
பொருளாதார வளர்ச்சி நவீன உலகின் இதயத்துடிப்பு. பொருள்கள் நம்மை வளமாக்குவது மட்டுமல்ல, நம் வாய்ப்புகளையும் பெருக்குகின்றன. முன்காலத்தில் அரசர்கள் மட்டுமே அனுபவித்த ஆடம்பரம் இக்காலத்தில் பொதுமக்களின் ஆனந்தம்.
உலகப்போருக்குப்பின் வந்த முப்பது ஆண்டுகளில் நடந்த பொருளாதார வளர்ச்சி, சூழலியலாளர்களின் குறுக்கீடு இல்லாமல், அதே வேகத்தில் தொடர்ந்து இருந்தால்… இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகப்படியாக 30 000 டாலர். அப்பணத்தை எப்படியெல்லாம் செலவழிக்கலாம்? இன்னும் சொகுசான ஊர்தி, சௌகரியமான பெரிய வீடு, பூமியின் வரைபடத்தில் பார்க்கும் இடங்களுக்கு எல்லாம் பயணங்கள்.
இதற்கு மாறாக டி-க்ரோத் காட்டும் உலகம் மனித முன்னேற்றத்தின் மயானம்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இயற்கை வளங்களின் ஓட்டத்தைக் குறைக்கும் முயற்சிக்கு பொருளாதார சுருக்கம், பணப்பரிமாற்றங்களில் தாழ்வு, விருப்ப செலவுகளில் இறக்கம் என்று ஏற்கனவே வழக்கில் இருக்கும் பெயர்கள் பொருத்தமாகப் படலாம். ஆனால், அவை கட்டாயத்தினால் நிகழ்பவை. பொருளாதாரப் பெருக்கத்தில் சிறு தடுமாற்றம். அதைத் தாண்டியதும், அதனால் நேர்ந்த இழப்புக்கும் சேர்த்துவைத்து, அடுத்த வளர்ச்சிக்கட்டம்.
எதிர்வளர்ச்சி அப்படிப்பட்டது இல்லை. அது திட்டமிட்டு மேற்கொள்ளும் துறவு. அதன் முடிவில் இன்னொரு ஏற்றம் காத்துநிற்காது. அங்கே…
மனிதன் இயற்கையின் ஒரு அங்கம் என்கிற மதம்.
ஒரு நிலப்பரப்பில் அதன் தாங்கும் சக்தியைவிடக் குறைவான மக்கள்.
விளைநிலத்தின் நைட்ரஜனுக்கு மக்கவைத்த கழிவுப்பொருட்களும், பாக்டீரியாவும்
இயற்கை வளங்களை நிலத்தடிக் குப்பைகளாக மாற்றி மொத்த உற்பத்தியை வளர்க்கும் பொருளாதாரம் இராது.
தனிமனிதர்கள், குடும்பங்கள், குலங்கள், சமுதாயங்கள் – இவற்றிடையே போட்டிக்குப் பதில் ஒத்துழைப்பு.
மனித அளவிலான பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள்.
மக்கள் நேரடியாகப் பங்குகொள்ளும் அரசியல்.
குப்பை கொட்டும் வேலைகளோ, நாட்டின் உற்பத்தியைப் பங்கு பிரிக்கும் தொழில்களோ இராது.
இயற்கையில் கிடைக்கும் பொருட்களால் உருவாக்கப்பட்டு சூரியவொளி காற்று நீரோட்டம் வழங்கும் சக்தியில் இயங்கும் இயந்திரங்கள்.
சிறு மூலதனத்தில் வணிக முயற்சிகள்.
எதிர்வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து அதை ஒரு இயக்கமாக ஆரம்பித்த பெருமை லியான் நகரத்துக்கு. அந்த இயக்கம் ஃப்ரான்ஸின் பிற பகுதிகளுக்கும், மேற்கு ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் பரவி, கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு அறிவியல் துறையாக வளர்ந்து இருக்கிறது. அதை ஆதரித்து யு.எஸ்.ஸிலும் ஒன்றிரண்டு குரல்கள் கேட்கின்றன.
முடிவு பற்றிய நிச்சயமான எண்ணங்கள் இருந்தாலும் அதை அடைவது சுலபமல்ல என்பது அந்த இயக்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சொகுசான சொந்த ஊர்திகளுக்குப் பதில் மற்றவர்களுடன் இடித்துப்பயணிக்கும் பேருந்துகள், இதமான அலுவலகத்தில் மின்திரையைப் பார்த்து விரல்களை மட்டும் அசைக்கும் வேலைகளுக்குப் பதில் வெயிலில் வேர்வை சிந்தும் தொழில்கள், புறநகர் கோட்டை இல்லங்களுக்குப் பதில் கூட்டுக்குடித்தனங்கள் என்று வாழ்க்கைமுறைகளில் பல பழைய புதிய மாற்றங்கள் காத்திருக்கின்றன. இவற்றால் நான்கு குதிரை வீரர்களின் வருகையைத் தவிர்க்க முடியுமா?
வறுமைக்கு வறுமை போல எதிர்வளர்ச்சியும் செழித்து வளரட்டும்!
உசாத்துணை:
- The Limits to Growth. D.H. Meadows, D.L. Meadows, J. Randers. 1972.
- From Bioeconomics to Degrowth: Georgescu-Roegen’s New Economics in Eight Essays. 2011.
- The Future is Degrowth. M. Schmelzer, A. Vetter, A. Vansintjan. 2022.
- Tools for Conviviality. Ivan Illich. 1973.
இக்கட்டுரையை எழுதி முடித்ததும் கவி கா. மு. ஷெரிஃப் இயற்றிய இப்பாடல் நினைவுக்கு வந்தது.
ஆடவேணும் பாடவேணும் இன்பமாக – தினம் ஆணும் பெண்ணும் கூடவேணும் கும்பலாக பாடுபட்ட அலுப்பு திரும் ஆட்டம் ஆடினால் நல்ல பசியும் கூட பறந்து போகும் பாட்டு பாடினால் பெரும் பணத்தை சேர்த்ததில்லை துன்பமும் இல்லை பெரிய படிப்பும் படிச்சதில்லை குழப்பமும் இல்லை அரும்பாடு தினம் படவும் அஞ்சுவதில்லை வாழ்வில் கெஞ்சுவதில்லை காசு மிஞ்சுவதில்லை உழைக்காமல் உண்பதில்லை அஜீரணம் இல்லை நாங்கள் ஊரை நாட்டை ஏய்ப்பதில்லை பணம் காசு இல்லை மலை மலையாய் ஆசையில்லை மோசடி இல்லை நாளும் மாற்றி மாற்றி காதல் ஜோடி சேருவதே இல்லை எல்லாரும் ஏழை இங்கே பேதமை இல்லை எல்லாரும் உழைப்பவங்க துன்பமே இல்லை எல்லாரும் தொழிலாளி சுரண்டலும் இல்லை சொல்லு பிரண்டதும் இல்லை சுகத்தைக் கண்டதுமில்லை