
வயது எழுபது, எனினும் முதுமையின் சாயலை சிறிதும் காட்டிக் கொள்ளாத தேகம்; பார்வை வீதியிலும் விட்டத்திலுமாக தவணை முறையில் தடம் மாறிக் கொண்டிருக்கின்றது. நடைகூடத்தில் போட்டிருந்த நாற்காலியில் இரு கைகைளையும் தலைக்குக் கொடுத்திருந்தார்; கால்களை மாத்திரம் அவ்வப்போது, ஒன்றின்மேல் ஒன்றாக போடுவதும், பின்னர் கீழிறக்கி வைப்பதுமாக இருக்கிறார். ஈசிச்சேர் அருகே தமிழ் தினசரிகள் இரண்டு, ஒன்று நேற்றைய தேதியிட்டது. « உங்களைப்பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது », எனத் தெரிவித்து அவருடைய வாசகர் ஒருவர் கொடுத்துவிட்டுச் சென்றது, மற்றொன்று இன்றைய தினசரி.
கண்கள் வீதியில் வீட்டெதிரில் நிற்கும் வேப்ப மரத்தின் மீது சென்றன. மஸ்லின் ஆடையில் மென்காற்று, நடனக்காரிபோல சுழன்று சுழன்று அலை அலையாக அதன் கிளைகளில் இளைப்பாறுவதுபோல அமர்ந்து பின்னர் எழுந்தோடுகின்றன. வேம்பின் மெல்லிய கொம்புகள் மெய்சிலிர்த்து, நடனமாடும் காற்றுப்பெண்மீது பூ மாரிப் பொழிவதுபோல பூக்களை உதிர்க்கின்றன. அவருடைய ‘அவள்’ இருந்தால் படியிறங்கி வீதியின் மறுபக்கம் சென்று காத்திருந்து, உதிரும் பூக்களை மடியில்வாங்கி வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் அடுப்பில் வாணலை வைத்து உளுந்தம் பருப்பை வறுத்து, அதனுடன் தேங்காய்த் துருவலையும், வேப்பம் பூவையும் சேர்த்து, வதக்கி ஆற வைத்து. சூடு ஆறியதும் மிக்ஸியில் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, வேப்பம் பூ துவையல் தயாரித்தாளென்றால் அன்று இவருக்கு ஒரு பிடி தயிர் சாதம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக இறங்கும்.
அதிகாலையில் நான்கைந்து மணிக்கே விழிப்பு வந்தபோது, புரண்டு புரண்டு அவளைப்பற்றிய நினைவுகளில் மூழ்கி, அசைபோட்டது போதாதென்று, ஆறு ஆறரைக்கு முன்கூடத்தில் போட்டிருக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். மனைவி இல்லையென்று ஆன பிறகு பெருவாரியான நாட்களில் சாய்வு நாற்காலியைவிட்டு அவசியம் ஏற்பட்டாலொழிய எழுந்திருப்பதில்லை. அதிலமர்ந்தபடியோ, படுத்தபடியோ, நாளின்மீது சூரியன் நிகழ்த்தும் அத்தனை மந்திர ஜாலங்களிலும் – சூரியன், சூரியன் அழைத்துவரும் காலை, முற்பகல், சூரியனற்ற பிற்பகல், மெல்ல மெல்ல பகல் நீர்த்து இரவு மாயப் போர்வையாக தடித்து அனைத்தையும் மூடும் வரை – தினம் தினம் பார்க்கிற காட்சிதானே என்கிற அலுப்பின்றி அவற்றில் லயித்திருப்பார். இடைபட்ட நேரங்களில் இறந்த அவருடைய மனைவியின் ஞாபகங்களோடு சாப்பிட இலை தைப்பதுபோல அவற்றோடு அவசரகதியில் சம்பவங்களைக் கோர்ப்பார் .
அவள் இருந்தபோது மணக்க மணக்க, கைவிரல் பதத்துடன், சரியாக ஆறு மணிக்கு ஒரு காப்பி கிடைக்கும். இந்த மூன்றில் எந்த ஒன்றில் தவறு நேர்ந்தாலும், இவரால் சகித்துக் கொள்ள முடியாது.விசிறி முகத்தில் அடிப்பார். ‘அவள்’ இடமிருந்து எவ்வித பதிலும் வராது, அண்மைக் காலம்வரை சிறு சிறு முணுமுணுப்பைக்கூட கேட்டதில்லை. இடுப்பில் சொருகிய முந்தானையை எடுத்து முகத்தை அபிஷேகம் செய்தபின், மூக்கின் நுனியில் சொட்டிக்கொண்டிருக்கும் திரவத்தை அழுந்த துடைத்துக்கொண்டே, முதன் முதல் பெண்பார்க்க அவள் வீட்டிற்குச் சென்றபோது எப்படி நடந்தாளோ அப்படி கால்களைப் பாந்தமாக எடுத்துவைத்து சுவரில் மோதி கீழே தரையில் புரண்டபடி அசையும் தம்ளரைக் குனிந்து கையில் எடுந்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்றால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இன்னொரு கப் காப்பி ஈசிச்சேர் அருகே வந்து உட்காரும்.
இன்றைய தமிழின் மூத்த படைப்பாளி என்கிற பெயர் வாங்கியிருக்கிறார். ஒருவித மரியாதை நிமித்தம் அவரைப் பலரும் பார்க்க வருகிறார்கள் என்பதை நன்றாக அறிந்தும் இருக்கிறார், இருந்தும் ஒருநாள் மனைவியிடம் விளையாட்டாக, :
– எனக்கென்னவோ என்னைப் பார்க்கும் சாக்கில் உன்னுடைய காப்பியை குடிக்கத்தான் நம் வீட்டுக்கு வராங்களோண்ணு நினைக்கிறேன், எனக்குக் கொடுப்பதுபோல அவர்களுக்குக் காப்பி போட்டுத் தராதே ! என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.
எனச் சிரித்துக்கொண்டே தெரிவித்ததுண்டு. உதடுகளைப் பிரிக்காமல், பக்கவாட்டில் அவை சற்று இழுபட முகம் மொத்தமும் தசை நார்கள் உதவியுடன் வெளிப்படுத்துகிற மகிழ்ச்சியொன்றே அவள் அதற்குத் தரும் பதில்.
அவள் இல்லையென்றான பிறகு, கடந்த சில கிழமைகளாக உள்ளூர் இலக்கிய அன்பர் ஒருவர் ஏற்பாடு செய்த வேலைக்கார அம்மாள் வரும் நேரத்தை பொறுத்து (ஒன்பது மணிக்கு வரவேண்டும்) காப்பி என்ற பெயரில் ஒரு பானம் கிடைக்கும். வாயருகே கொண்டு செல்ல மூக்கை கடிப்பதுபோல வரும் துர்நாற்றத்துடனான அந்த பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு, தரையில் வைத்துவிடுவார். அப்பெண்மணியும் « நீ குடித்தாலென்ன குடிக்காவிட்டால் எனக்கென்ன, காலையில் காப்பிப் போடணும், பாத்திர பண்டண்த்தை துலக்கணும், வீட்டைப் பெருக்கணும், அழுக்குத் துணியிருந்தா துவைக்கணும், வாங்கிவைத்த காய்கறிகளில் என்ன மிச்சமிருக்கிறதோ அதைக்கொண்டு சமைக்கணும். பன்னிரண்டு மணிக்கெல்லாம் நான் வீடு திரும்பணும் » என்றிருப்பவள்.
நினைவுகளில் மூழ்கினார். அவள்’ இறந்த நாளிலிருந்து இப்படித்தான் பழைய ஞாபகங்களில் புதைந்துபோகிறார். அதை ஒரு தவம்போல ஐம்புலன்களையும் ஒடுக்கிச் செய்வார். சராசரியாக இரண்டுநிமிடங்களில் ஆரம்பித்து, “அய்யா இருக்கீங்களா?” எனக் கேட்டு, இலக்கிய அன்பர்கள் மேனகைகளாக குறுக்கிடாதிருப்பின் தவம் கலைய இரண்டுமணி நேரம் கூட ஆகலாம். காற்று மெல்ல முன் கதவைக் கடந்து ஆடையின்றிருந்த மார்பையும் முகத்தையும் தொட்டு விலகிக்கொண்டது. காற்றின்மேல் கோபப் பட்டவர்போல உச்சுக்கொட்டினார். வீதியில் உறுமிக்கொண்டுபோன இரு சக்கர வாகனம் மீண்டும் நனவுலகத்திற்கு அழைத்து வர, கண்கள் வெயிலில் பதிந்தன : வீதியின் மறுபக்கம் தழைத்திருந்த வேப்பமரமும் அதில் உட்கார்ந்திருந்த இரண்டு காகங்களும், நாக்கைத் தொங்கப்போட்டு ஓடிக்கொண்டிருந்த நாயும், குழதையைத் தோளில் போட்டுக்கொண்டு மஞ்சள்புடவை, ஆரஞ்சு நிற சீட்டி இரவிக்கையென இடதுகாலை அழுந்த ஊன்றி விந்தி விந்தி நடந்துபோன பெண்மணியும் வெள்ளிச் சரிகைபோல வேய்ந்திருந்த வெயிலில் பளபளத்தனர், முன்வாசலில் குவிந்த வெயில் பெரிய டிராகன்போல நாவை நீட்டி இவரை நக்க ஆரம்பித்தது. வெகு தூரத்தில், ஒலிபெருக்கியில் « பழம் நீ அப்பா ! » என்ற பாடல். அவள் விரும்பிக் கேட்கிற பாடல். திருமணமான புதிதில் எனக்குப் பிடித்த பாடல் எது தெரியுமா எனக்கேட்டு, « மன்மத லீலையை வென்றாருண்டோ ? » என அவள் காதில் மெல்ல முணுமுணுத்ததும், அவள் நாணத்துடன் சமையற்கட்டுக்குள் ஓடி மறைந்ததும் நினைவுக்கு வந்தன.
இன்று நேற்றல்ல, ஐம்பது ஆண்டுகால மணவாழ்க்கை. அவருடைய ‘அவள்’ தன்னுடையவர் சராசரி எழுத்தாளரல்ல என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தாள். சாமர்த்தியமாக காய் நகர்த்த தெரிந்தவர். எங்கோ ஊர் பேர் தெரியாத கிராமத்தில் பிறந்து இன்று நாடறிந்த படைப்பாளி எனப் பெயரெடுத்திருப்பது எழுத்தால் மட்டுமே சாதிக்கின்ற விஷயமல்ல. அவரைத் தேடிக்கொண்டு தெற்கே கன்னியாகுமரிலிருந்து வடக்கே சென்னை வரை ; தமிழ் வாழ்கன்னு கோஷம் போடற ஆசாமியிலிருந்து, தமிழ்நாட்டில் நாளைய முதலமைச்சர் ஆகனுங்கிற கனவுல வாழற நடிகர்கள் வரை தேடி வரத்தான் செய்தார்கள். இருந்தாலும் சிறிது நம்மைக் குறித்தும் யோசிக்க வேண்டுமில்லையா ? என்ற ஆதங்கத்தில் ஒரு முறை அவள் கேட்டது நினைவுக்கு வந்தது.
– ஈஸிசேரை கொஞ்சம் தள்ளிப்போட்டு உட்காரக் கூடாதா, செத்த நேரத்துல வெயில் வீட்டுக்குள்ள நொழைஞ்சு உங்களை வழக்கம்போல தீச்சுடணும்னு, கங்கணம், கட்டிக்கொண்டிருக்கிறது, முன்னெல்லாம் பத்ரிக்கையிலேயே கருப்பு வெள்ளையிலே படம் போடுவாங்க, தவிர எப்பனாச்சும் ஒருமுறைதான உங்க படம் பேப்பர்ல வரும். இப்ப தினம் தினம் ஒங்க படத்தைப் போடறாங்க, அதுவும் கலர்ல போடறாங்க. அதுல கொஞ்சம் பளிச்சுனு நீங்க இருக்கவேண்டாமா ?
– போடி பைத்தியக்காரி அவங்க என் கூட படம் எடுத்துக்கிறது என்னைக் காட்ட அல்ல அவர்களுக்கு முகவரி எழுதிக்க. நாற்பது வருஷமா எழுதறேன், எனக்கு இது தெரியாதா ? நான் மருத்துவமனை பெட்டுல படுத்திருந்தாகூடா பக்கத்துல நிண்ணு படம் எடுத்துக்க ஆசைபடறான், நான் பிணமா விழுந்தா கூட என் பக்கத்துல நின்னு படம் எடுத்துப்பாங்க. நடிகர்களைவிடு, இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோக் கூட இப்படியொரு அதிர்ஷ்டமில்லை. எடுத்துட்டுப் போகட்டும், யார் யாரோ எங்கூட படம் எடுத்துகிட்டாலும் நான் ஒருத்தன்தான் எல்லோருடனும் இருக்கேன். ஆக உண்மையில் பளிச்சுனு இருக்கிறது இதுல யாரு ? அவங்க இல்லை, நாந்தான்.
அவரை ஜெயிக்கிறது சுலபமில்லைன்னு அவருடைய ‘அவளு’க்குத் தெரியாதா என்ன. இருந்தும் கேட்பாள். கேள்வியைகூட அவரைத் தவிர பிறருக்கு கேட்டுவிடக்கூடாது என்பதுபோல, பல்லி சத்தம்போல மெதுவாக கேட்டிருக்கிறாள். அவரிடம் கேட்டு அவர் சொல்லும் பதில்களில் வார்த்தைகள் குலுங்குவதையும் அவை எழுப்பும் நவரசத்தையும் அவற்றின் அர்த்தத்தையும் கேட்டு சந்தோஷப்படவே அடிக்கடி இப்படி ஏதாவது கேள்விகளை எழுப்புகிறேன் என ஒரு முறை கூறியிருக்கிறாள்.
அறுபதுகளில் தாய் மாமன் மகள் என்ற உரிமையில், சுற்றத்தார் ஊர் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் இவருடைய மூன்று முடிச்சை தலை குனிந்து ஏற்று, இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக அங்கே இங்கேயென கிராமம் கிராமமாகப் பந்தாடப் பட்டபோதும், ராமனிருக்குமிடம் அயோத்தியென ஊர் ஊராக இவரை பின் தொடர்ந்து வந்தவள். பிறகொரு நாள், « என்னுடைய கதை பத்திரிகையில் வந்திருக்குதுபார் ! » என அவளுடைய கை முழம் அளவு நீளமாக இருந்த பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டிக் காட்டியபோது, அவளுடைய புருவங்கள் உயர்ந்து, முன்வகிடில் வைத்திருந்த குங்குமம் உதிர நெற்றியில் சுருக்கங்கங்கள் மண்புழுக்களாக நெளிய, ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் சேர்த்தார்போல பிடித்து முகத்தில் ஆடிய கேசத்தை காது மடல்களில் ஒதுக்கியது கண்கொள்ளா காட்சி. அக்காட்சியை ஏதாவதொரு சிறுகதையொன்றில் சேர்க்கும் கனவும் அவருக்குள் இருக்கிறது.
இத்தனை நேரமாக உள்ளூர் அன்பர்கள் இரண்டொருவர் வந்து பார்த்திருக்கவேண்டும். மணி எட்டாகப் போகிறது ஒருவரும் வரவில்லை. வேலைக்காரி வர மணி ஒன்பதாகும். உடம்பு கன கனவென்றிருந்தது, யாராவது வந்தால் ஒரு மாத்திரை வாங்கிவரச் சொல்லலாம். காப்பிக் குடிக்கவேண்டும் போலிருந்தது. அவள் இல்லாத தனிமை முட்கம்பிபோல அவரைச் சுற்றிக்கொண்டு வதைக்கிறது. இரத்தம் பீரிட பலமுறை கதறி இருக்கிறார் « இரக்கமற்ற பாவி ! » என வாய்விட்டுக் கத்தினார். வீதியில் போன இரு சிறுவர்கள் அச்சத்துடன் இவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு கால்களை எட்டிவைத்து நடக்கிறார்கள். அவள், இவர் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் இருந்திருக்கிறாள்.காப்பி கொடுக்கிறவளாக ; உணவு வேளைளில்.மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நித்திரைகொள்ளலாம் எனப்போகிறபோது இவருக்கு முன்பாக படுக்கையை சரி செய்துகொண்டிருப்பவளாக ; உள்ளூர் மனிதர்கள், வெளியூர் மனிதர்களென இவரைச் சந்திக்க இலக்கிய அபிமானிகள் வருகிறபோது, அடுத்த சில நொடிகளில் இவர் அருகில் வந்து நின்று வந்தவர்களை வரவேற்றுவிட்டு காப்பிபோட, மோர் எடுத்துவர அல்லது தண்ணீர் கொண்டுவர என்று முகங்களின் தேவை அறிந்து செயல்படுவாள். இவர் பேசும்போது முதிர்வயது சிலவற்றை நினைவுகூரத் தயங்குகிறபோது அவற்றை எடுத்துக் கொடுப்பாள். இலக்கிய விழாக்களில் முன்வரிசையில் அமர்ந்து சந்தோஷப்பட்டிருக்கிறாள். அவளுடைய பக்குவத்தில் வெந்தயக் குழம்பு, முருங்கைக் காய் சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல், இறால் குழம்பு, நெத்திலி வறுவல், மிளகு இரசம், அவல் பாயாசம், சீடை, தட்டை ருசிகண்ட நாக்கு, இன்று வேலைக்காரி செய்தாலும், இலக்கிய அன்பர்கள் பரிதாபப் பட்டு வீடு தேடி எதையாவது கொண்டுவந்தாலும், சீந்துவதில்லை, பசிக்கு சாப்பிடுகிறாரே அன்றி ருசிக்குச் சாப்பிடுவதில்லை.
– சாகித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கிட்டீங்க அடுத்து ஏதோ ஞான பீட விருதாமே, கிடைச்சுடுமில்லையா ? உங்களுக்கு கிடைக்காம வேற யாருக்கு கிடைக்கும், இரண்டு நாளைக்கு முன்ன செங்கல்பட்டிலிருந்து வந்த தம்பி நோபெல் பரிசெல்லாம் உங்களுக்குக் கிடைச்சிருக்கணும்னு சூம் மீட்டிங்கிலே பேசுச்சுன்னு சொன்னீங்களே !
– அவங்க என்மீது வைத்திருக்கிற அன்பு பேருல ஏதோ சொல்றாங்க. அரசியல்வாதிகள், நடிகர்கள்னு என் வீடு தேடி வருவதே, பிறருக்குக் கிடைக்காத விருதுதான். பார்ப்போம்.
தலையில் ஏதோ எறும்புகள் ஊர்வதுபோல பரபரப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். வெயில் பாதங்களைத் தின்று கொண்டிருந்தது. மணி காலை ஒன்பது. வேலைக்காரி வருவதாக இல்லை. பால் இருக்கிறது, காப்பிப் பொடியும் இருக்கிறது. அப்படியே அவள் நேரத்திக்கு வந்து காப்பிப் போட்டாலும் வாயில் வைக்க சகிப்பதில்லை. மெள்ள இருகைகளையும் சாய்வு நாற்காலி கைப்பிடியில் ஊன்றி எழுந்தார். மெள்ள அடுப்படியை நோக்கி நடந்தார்.
அடுப்படிக்கு முன்பாக அந்த அறை இருந்தது. பூட்டி இருந்தது. அவரை தனிமையில் நிறுத்திவிட்டு கொரோனாவில் இறந்துபோன ‘அவளை’ அந்த அறையில்தான் வைத்திருக்கிறார். வேலைக்காரி பெருக்கிச் சுத்தம் செய்ய பிற பகுதிகளுக்கு அனுமதியுண்டு, அந்த அறைக்கு மட்டும் அனுமதியில்லை. « சாவியைக் கொடுங்க, பெருக்குகிறேன் » என ஒரு முறை இறுமுறை அல்ல பலமுறை கேட்டு வேலைக்காரிக்கும் அலுத்துவிட்டது. ‘அவள்’ அந்த வீட்டிலிருந்தால்தான் அவருக்கு எதுவும் ஓடும். அவருடைய உயிர்ச்சிமிழ் அவளிடம் தான் இருக்கிறது, மற்றவர்களுக்கு அது புரியாது. நண்பர்களிடத்தில் மனைவி கோலியனூருக்கு மகள் வீட்டிற்குச் சென்றிருப்பதாகச் சொல்லிகொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் பழைய நினைவுகளில் துண்டு விழுகிறபோது அதை இட்டு நிரப்ப யாருமற்ற நேரங்களில் அவள் வேண்டும். பூட்டில் சாவியை நுழைத்துத் திருப்ப, ….ம் திறப்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, எரிச்சலுடன் காலால் உதைக்கிறார்.
– ஏங்க காப்பி கலந்து வச்சிருக்கேன், என்ன யோசனை ?
தலையைத் திருப்ப, எதிரே «அவள் ». அவர் மனைவி.
– மணி என்ன ?
– ஆறாகபோகுது. காற்றடிக்குது, அது ஆறி அவலாகறதுக்குள்ள குடிச்சுடுங்க. மறுபடியும் போட வீட்டில் காப்பித் தூள், சர்க்கரை எதுவுமில்லை. காலங்காத்தால அப்படியென்ன யோசனை.
– ஒரு நல்ல கதை மனசுல ஓடுச்சி, வேறொண்ணுமில்லை.