வாக்குமூலம் – அத்தியாயம் 9

அவள்

ஒரு நாலு நாளோ ஒரு வாரமோ சடவாரனும்னா, அதுக்கு விட்லாவரம்தான் லாயக்கு. பெரியம்மை வீட்ல போயி இருக்கணும். அவங்க வீட்டு வயல்ல வெளைஞ்ச சம்பா அரிசி, பொடி அரிசியில இட்லி, தோசை, சோறு, கொழுக்கட்டை, அரிசி உப்புமான்னு விதவிதமாச் சாப்பிடலாம். அவுஹ வீட்டுச் சம்பா அரிசிக்குன்னு அப்பிடி ஒரு ருசி. அந்த அரியில என்ன செஞ்சாலும் நல்லா இருக்கும். இப்போ ஜங்ஷன்லேருந்து அனவரதநல்லூர் – விட்லாவரத்துக்கு டவுன் பஸ் போகுதாம். நான் படிக்கிற காலத்துல காலையில, மத்தியானம், சாயந்திரம்னு மூணே மூணு பஸ்தான் இருந்திச்சு. ரொம்பக் கூட்டமாத்தான் இருக்கும். அனவரதநல்லூருக்கும், விட்லாவரத்துக்கும் அந்த பஸ்ஸ விட்டா வேற வழியே கெடையாது.

அனவரதநல்லூரும், விட்லாவரமும் ரெட்டை ஊர்கள். ரெண்டு ஊருக்கும் நடுவுலே வாய்க்கால் ஓடுது. விட்லாவரத்துக்கு மேக்கே, வாய்காலைத் தாண்டுனதும், தரையோட தரையா பதிச்சு வச்ச மாதிரி அகன்று விரிஞ்சு கிடக்கிற பாறை உண்டு. அதிலே அங்கங்கே வட்ட வட்டமா குழிகளை வெட்டி வச்சிருப்பாங்க. அந்தக் குழிகள்லே நெல்லு, கம்பு, சோளம்னு போட்டுக் குத்துவாங்க.

காலையில பெரியம்மை கருப்பட்டிக் காப்பி தருவா. அதைக் குடிச்சிட்டு துண்டு, சோப்பு டப்பா, தொவைக்கிற துணிகளை எல்லாம் எடுத்துட்டு அந்த வளவுக்காரங்களோட முத்தலாங்குறிச்சி ஆத்துக்குப் போவோம். அங்கதான் தாமிரவருணி ஓடுது. வண்டிமலைச்சி அம்மன் கோயில்லேருந்து முத்தலாங்குறிச்சி ஆறு சரியா ஒரு மைல் இருக்கும். ரெண்டு பக்கமும், பச்சைப் பட்டு விரிச்சாப்பல வயக்காடு. நடுவுல ரோடு. ரோடு வளைஞ்சு வளைஞ்சு போயிக்கிட்டே இருக்கும். ஆத்துல ஆளே இருக்காது. சத்தமில்லாமே ஆறு ஓடிக்கிட்டிருக்கும். அக்கரையிலே ஒசரமா வல்லநாட்டு மலை ஆத்துல குளிக்கிறவங்களை வேடிக்கை பாக்கிற மாதிரி நின்னுக்கிட்டிருக்கும்.

பெரியப்பாவுக்கு அந்தப் பத்துல ரெண்டு வயல்களும், வெத்தலைக் கொடிக்காலும் உண்டு. வீட்டுக்குப் பொறத்தால கொடிக்கால்ல வெத்தலைக் கொடி படர்ந்த ஒசர ஒசரமான அகத்திக் கம்புகள் மாட்டுத் தொழுவத்துக்குப் பின்னாலே கட்டுக்கட்டா வாகை மரத்துலே சாத்தியிருக்கும். பெரியம்மை வீட்டிலே பாலும், வெத்தலையும், அகத்திக் கீரையும் சீரழியும். அப்போ கேஸ் ஏது, மண்ணெண்ணை ஏது? எல்லா வீட்டிலேயும் வெறகடுப்புதான். அடுப்புக் கொடியிலே எந்த நேரமும் காப்பித் தண்ணி சூடா இருந்துக்கிட்டே இருக்கும்.

பட்டாசல்ல பெரிய ஊஞ்சல் உண்டு. அதுல உக்காந்து ஆடும்போது ‘களக் களக்’னு தவளக்கொத்து சத்தம் போடும். ஒரு தடவை போயிருந்தப்ப, மச்சிலே குருவி, கூடு கட்டியிருந்திச்சு. அதுக்குத் தொந்தரவா இருந்திரக் கூடாதுன்னு, மச்சிலே மெல்லத்தான் நடக்கணும், கத்திப் பேசக் கூடாதுன்னு பெரியம்மா சொன்னா. ஊரே ரொம்ப அமைதியான ஊருதான். அஞ்சே அஞ்சு தெருதான். எங்கேயாவது கோழி, சேவல் கத்துறது, நாய் குலைக்கிறது கூடத் தெளிவா கேக்கும். சாப்புட்டுட்டு எல்லாரும் சேந்து தாயம் ஆடுவோம். இல்லை பல்லாங்குழி ஆடுவோம். ராத்திரி, பெரியப்பா சீக்கிரமாத் தூங்கிருவா. ஆனா தார்சாவுல நாங்கள்ளாம் நேரம் போறது தெரியாமே தாயம் ஆடிக்கிட்டு இருப்போம். நெலாக் காலத்திலே எல்லாரும் வாசல்ல சேந்து வட்டமா உக்காந்து சாப்பிடுவோம்.

சில நாள் நெலா வெளிச்சத்திலே எல்லாரும் சேந்து கும்மியடிப்போம். இல்லேன்னா ஏதாவது கதை பேசி பொழுதப் போக்குவோம். காலையில ஆத்துக்குப் போறதப் பத்தி ராத்திரியே பேசி வச்சுக்கிடுவோம். என்ன ஒண்ணு, ஊரைச் சுத்தி வயக்காடு இருந்ததாலே கொசுத் தொல்லை தாங்க முடியாது. கை, காலிலே எல்லாம் வேப்பெண்ணையைத் தடவிக்கிட்டு படுப்போம். சுத்து பட்டியிலே எங்கேயும் சினிமா கொட்டகை கெடையாது. சினிமா பாக்கணும்னா ஒண்ணு ஶ்ரீவைகுண்டம் போகணும், இல்ல திருநவேலிக்குத்தான் போகணும். ரேடியோ கூட எல்லா வீட்டிலேயும் கெடையாது. கெடிகாரமும் யார் வீட்டிலேயாவதுதான் இருக்கும். பெரியம்மை வீட்டிலே பட்டாசல்ல சாவி குடுக்கிற பெரிய கடிகாரம் இருந்திச்சு. வளவுக்காரங்க அல்லது தெருக்காரங்க, பஸ்ஸைப் பிடிக்கப் போகணும்னா பெரியம்மை வீட்டிலே வந்துதான் மணி பாத்துட்டுப் போவாங்க. ஊருக்கு கரண்ட் வந்திருந்தாலும் எல்லா வீட்டுலேயும் கரண்ட் இழுக்கலை. சில வீடுகள்ளதான் கரண்ட் இருந்துது. பெரியம்மைக்கிப் பிள்ளை இல்ல. அதனால பரிச்சை நேரத்துல வளவுப் பிள்ளைகள் எல்லாம் பெரியம்மை வீட்டுத் தார்சாவிலே இருந்து படிப்பாங்க.

பெரியம்மை என்னையும், அண்ணனையும் எடுத்து வளக்கேன்னு அப்பா கிட்டே கேட்டாள். அப்பா அதுக்குச் சம்மதிக்கலை. “சாந்தியை மட்டுமாவது வளக்கேன்”ன்னு கேட்டுப் பாத்தா. அப்பா முடியவே முடியாதுன்னுட்டா. அதுகப்புறம் விட்லாவரத்துக்கு பெரியம்மை வீட்டுக்கு அடிக்கடி போறது நின்னு போச்சு. அனவரதநல்லூர்ல எட்டாவது வரைக்கியும்தான் இருந்திச்சு. அங்க படிச்சு, வளர்ந்திருந்தா எப்படி இருந்திருப்பேன்னு தெரியலை. லீவு முடிஞ்சு ஊருக்கு வந்தா விட்லாவரத்து ஞாபகமாகவே இருக்கும். நேத்து இவ்வளவு நேரம் அங்க என்ன பண்ணுனேன், சாயந்தரம் என்ன பண்ணுனேன், முந்தாநேத்து என்ன பண்ணுனேன்னு விட்லாவரத்து நெனைப்பாவே இருக்கும். ரொம்பக் கஷ்டமா இருக்கும். ரெண்டு மூணு நாளு இப்பிடி இருக்கும். பிறகு எல்லாம் மாறிரும். இப்பமும் இவ்வளவு வயசுக்கப்புறமும், ரெண்டு பிள்ளை பெத்த பெறகும், ஏதாவது ஊருக்குப் போயிட்டு வந்தா, அந்த ஊரு ஞாபகமாவே இருக்கும். எல்லாருக்கும் இப்படித்தான் இருக்குமான்னு தெரியல. இவுஹ கிட்டக் கேட்டா எனக்கெல்லாம் அந்த மாதிரி ஒண்ணும் தோணலைங்கிறாங்க.

மனசைப் பார்க்க முடியலை. ஆனா அது என்னென்னல்லாம் நெனைக்கிது. நான் மெட்ராசிலே இருக்கேன். ஆனா அது நானூறு மைலுக்கு அப்பால இருக்கிற திருநெல்வேலிய, விட்லாவரத்த, வீரவநல்லூரை அப்படியே சினிமாப் படம் மாதிரி காட்டுது. யார் யாரு கிட்ட எல்லாமோ, எப்பமோ பேசுனது, நடந்தது எல்லாத்தையும் அப்பிடியே நெனச்சு ஞாபகத்துல கொண்டுட்டு வருதே. கடவுள் இந்த மாதிரி பண்ணி வச்சிருக்காரே. இந்த அதிசயத்த என்னன்னு சொல்ல?

நான் எவ்வளவோ சொன்னேன். எனக்கு செல்போன் எல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன். நான் யாருகிட்டப் பேசப் போறேன், எனக்கு எதுக்கு செல்போன்னுன்னேன். இவுஹ கேக்கலை. ஒரு போனை வாங்கிக் கையில குடுத்திட்டாஹ. மத்தியானம் போன் போட்டு, சாப்பிட்டியா? அம்மா, அப்பா எல்லாம் சாப்புட்டாச்சான்னு கேக்காஹ. சாயந்தரம் வீட்டுக்கு வர லேட்டாச்சுன்னா போன்ல கூப்புட்டுச் சொல்லுதாங்க. ரவி, கீதா எல்லாம் வெளியில போயிருந்தா எங்க இருக்காங்கன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட முடியுது. வசதியாத்தான் இருக்குது. ஆனா மாசா மாசம் ரீசார்ஜ் பண்ணனுமாம்ல? கீதா சொல்லுதா, “என்னம்மா நீ? ஒரு போனுக்கே இப்பிடிச் சொல்லுதே?… செல பேரு ரெண்டு போனு மூணு போனுன்னு வச்சிருக்காங்க”ன்னு சொன்னதும் மலைச்சுப் போயிட்டேன். காய்கறி, கேஸ், குளிக்கிற சோப்பு, வாஷிங் மிஷினுக்கு விடுத லிக்விட் சோப்பு, பலசரக்கு, பால், பேப்பர், பத்திரிகை இந்த மாதிரி போனுக்கு ரீசார்ஜ் பண்ணுத செலவும் சேந்துட்டுது.

செல் போன் ஆப்புல என்னென்ன வெல்லாமோ இருக்கு. கூகுள்ல என்ன கேட்டாலும் பதில் சொல்லுது. யூ டியூப்புலயும் கிருபானந்தவாரியார் பேச்சு, சுகி சிவம் பேச்சு, பழைய சினிமாப் படங்கள், பாட்டுக்கள், கந்த சஷ்டி கவசம், ஆதித்ய இருதயம், விதவிதமா சமைக்கிறதைப் பத்தின்னு என்னென்னல்லாமோ குமிஞ்சு கெடக்கு. டி.வி.யில இருக்கிற மாதிரி போன்லயும் இருக்கு. ஒலகத்துல என்ன நடந்தாலும் ஒடனே போன்ல பார்த்துத் தெரிஞ்சிக்கிட முடியுது. இதுக்குப் பண்ணுத செலவு, ரீசார்ஜ் போடுறதெல்லாம் பெரிசாத் தெரியலை. ஞாயமான செலவுன்னுதான் தோணுது. ஆனா இந்த கீதாவும், ரவியும் எப்பம் பாத்தாலும் கையில போனை வச்சுக்கிட்டே இருக்கதுதான் பிடிக்கலை. சாப்பிடும் போது கூட போனை நோண்டிக்கிட்டே இருக்காங்க. ரோட்டுல யாரைப் பாத்தாலும் குனிஞ்சு போனைப் பாத்துக்கிட்டேதான் போறாங்க. இதெல்லாம் நல்லதுக்கா கெட்டதுக்கான்னே தெரியலை. எது, என்ன நடந்தாலும் ஒலகத்தோடதான நாமளும் போக வேண்டியதிருக்கு.

நாங்கள்லாம் அந்தக் காலத்துல பொறந்த நாள் கொண்டாடுனதே இல்லை. இப்பம் எழுவது வயசானவங்களுக்குக் கூட பொறந்த நாளு கொண்டாடுதாங்க. பெரிய தலைவர்களுக்கு, நேரு, காந்தி மாதிரி ஆட்களுக்குத்தான் பொறந்த நாள் கொண்டாடுவாங்க. இப்பம் சின்னவங்க பெரியவங்கன்னு எல்லாரும்லா கொண்டாடுதாங்க. நாம பொறந்து எதைச் சாதிச்சிட்டோம்ன்னு பொறந்த நாளைக் கொண்டாடுதாங்கன்னு தெரியலை. இந்த ஒலகத்துல பொறந்ததே ஒரு சாதனைன்னு நெனைச்சுக் கொண்டாடுதாங்களோ, என்னவோ? யாரு கண்டா? ஆயிரக் கணக்கிலே பணத்தச் செலவு பண்ணிக் கொண்டாடுகிறதைப் பார்த்தா மலைப்பா இருக்கு. என்னத்தைச் சொல்ல, எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. ஆனாலும் இவுஹ பொறந்த நாள் கொண்டாடும்போது தானும் ஆளோடு ஆளா நிக்க வேண்டியது இருக்கு. இதுல எல்லாம் சம்மந்தம் இல்லன்னு தூர வெலகி நின்னாலும் யாரு விடுதா? எங்க மாமா, அத்தைக்கே இம்புட்டு வயசான பொறவும் பொறந்த நாளு கொண்டாடனும்ன்னு ஆச இருக்கு. பெறவு என்னத்தச் சொல்ல? ரவியோட அப்பாவுக்கு இதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா நேர்லயோ, போன்லயோ வாழ்த்துச் சொன்னா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. என்ன செய்யிறது ஒலக நடமொற இப்படி இருக்குன்னு சொல்வாங்க..

இந்தக் காலத்துல எதைத்தான் கொண்டாடலை? பரிச்சையிலே பாஸாகிட்டா கொண்டாடுதாங்க. ரஜினிகாந்த், அஜித் படத்துக்கு டிக்கெட் கெடச்சா கூடக் கொண்டாடு வாங்களாம்ல… ரவிதான் சொல்லுதான். இந்தக் கொண்டாட்டம் ஏள – பணக்காரங்கன்னு இல்ல. எல்லாரையும் புடுச்சு ஆட்டுது. ஆனா செல பழைய ஆட்கள் இதுல எல்லாம் பட்டுக்கிடாம இருக்கத்தான் செய்யிறாங்க.

நான் மூணாவது, நாலாவது படிக்கிறப்போ கோயில் சப்பரத்துக்கெல்லாம் சீரியல் செட் பல்புகளப் போட்டு அலங்காரமெல்லாம் பண்ணுதாங்க, அப்போ பூ, பச்சை இலைகளாலேதான். அந்த அலங்காரங்களை வெள்ளை சாத்தி, பச்சை சாத்தின்னு சொல்லுவாங்க. ஒரே மல்லிகை, பிச்சி, வெள்ளை அரளி, பன்னீர் பூக்களாலே மட்டுமே அலங்காரம் பண்ணியிருந்தா வெள்ளை சாத்தின்னு சொல்லுவாங்க. மருக்கொழுந்து, பன்னீர் இலைன்னு பச்சை இலைகளாலே அலங்காரம் செய்திருந்தா பச்சை சாத்தின்னு சொல்லுவாங்க. அந்த அழகைச் சொல்லி முடியாது. சப்பரத்துக்கு முன்னாலே கேஸ் லைட்களும், தீப்பந்தங்களும்தான் இருக்கும். இப்போ சீரியல் செட் லைட் எல்லாம் போட்டு ஜெகஜோதியா இருக்கு. காலப்போக்குல எல்லாம் மாறிட்டுது. சாமியும் இதை ஏத்துக்கிட்டுது.

அப்போ பேருகாலமே வீட்டிலேதான் நடக்கும். கொசவந்தட்டித் தெரு அத்தை, கொன்னாவரத்துச் சித்திக்கி எல்லாம் வீட்டுல மருத்துவச்சிய வச்சுதான் பேருகாலம் பார்த்தாங்க. கொன்னாவரத்துச் சித்திக்கி மத்தியானத்துல இருந்தே வலி ஆரம்பிச்சிட்டுது. கொரவர் தெருவுல இருந்து மரியம்மைதான் வந்திருந்து பேருகாலம் பார்த்தா. ராத்திரி ஏழெட்டு மணி வரை பிள்ளையே பொறக்கலை. எல்லாரும் ராத்திரி சாப்பாடு சாப்புட்டுட்டுப் படுத்திட்டோம். மரியம்மை அவ வீட்டுக்கே போகலை. பிள்ளைத்தாச்சி பக்கத்துலயே வெத்தலையப் போட்டு அதக்கிக்கிட்டுப் படுத்துக் கெடந்தா. நடு ராத்திரி ரெண்டு மணிக்கோ என்னம்போ பிள்ளை பொறந்துதாம். மரியம்மைக்கி வெத்தலை, பாக்கு, பழம், பத்து ரூவா எல்லாம் வச்சு அம்மை குடுத்தா. எங்க தெருவுல யார் வீட்டுல பேருகாலம்ன்னாலும் மரியம்மையைக் கூப்பிட ஆளு விட்டுருவாங்க. அவளும் நேரங்காலம் பாக்காம கூடவே இருந்து பேருகாலத்தை நல்லபடியா முடிச்சிட்டுதான் போவா.

இப்பம் எந்தப் பேருகாலம் வீட்டுல நடக்குது? எல்லாம் ஆசுப்பத்திரிதான். ஜாதகம் எல்லாம் பார்த்து, அந்த நட்சத்திரத்துப்படி பேருகாலம் நடக்கணும்ன்னு சிசேரியன் கூடப் பண்ணிக்கிடுதாங்களாம். அப்போ எல்லாம் பிள்ளை பெத்தா ‘பச்ச ஒடம்பு, பச்ச ஒடம்பு’ன்னு சொல்லி, ஏழெட்டு நாள் எந்திரிக்கவே விடமாட்டாங்க. இப்போ பேருகாலம் ஆன மறுநாளே வீட்டுக்குப் போகலாம்னு சொல்லுதாங்க. ஆயுதம் போட்டு (சிசேரியன்) பிள்ளையை எடுத்தாத்தான் கூடுதலா ரெண்டு மூணு நாளு இருக்க வேண்டியது வரும். கல்யாணம் ஆகி வருஷக் கணக்கா பிள்ளை இல்லாமே இருந்ததெல்லாம் போயி, கல்யாணம் ஆன பத்தாவது மாசமே பிள்ளையைப் பெத்துக்கிடுத காலமா ஆயிரிச்சு. சில பேரு கல்யாணம் ஆகும்போதே ரெண்டு மாசம், மூணு மாசம் கர்ப்பமா இருக்காங்கன்னுல்லாம் சொல்லுதாங்க. கலி முத்திச் போச்சு. வேறென்னத்தைச் சொல்ல?

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் 8வாக்குமூலம் – அத்தியாயம் 10 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.