எங்கு இராமனும் கிருஷ்ணனும் லட்சுமணனும் இருந்தார்களோ எங்கு மீராவின் நாவில் பாடல்கள் ஒலித்தனவோ எங்கு சூர்தாசின் கீர்த்தனைகள் ஒலித்தனவோ எங்கு ராய்தாஸ் பக்தியில் மூழ்கினாரோ எங்கு துளசிதாஸ் இருந்து, இராமகதை ஒலித்ததோ அது என் நாடு, இந்துஸ்தான்! = ரஹ்பர் ஜவ்ன்பூரி

ரஹ்பர் ஜவ்ன்பூரியின் ‘என் நாடு’ (மேரா வதன்) என்னும் நாட்டுப்பற்றுப் பாடலில் மதநல்லிணக்கம்
முதன்மையாக ஒலிக்கும். ஜான்சி ராணி, ரஸியா சுல்தான், அவாதி, இராஜபுத்திரர், வங்காளம், பனாரஸ்
என இந்தியாவின் பெருமைகளைப் பாடும் பாடலில் மதநல்லிணக்கத்தை முன்னிறுத்திப் பாடியது சிறப்பு.
ஷேக் மின்ஹாஜ் அன்சாரி (எ) ரஹ்பர் ஜவ்ன்பூரி உத்தரப்பிரதேசத்திலுள்ள ஜவ்னபூரில் பிறந்தவர். ஆரம்பக்
கல்வியையும் பயிற்சியையும் அங்கு பெற்றார். புகழ்பெற்ற உருது ஆசிரியர் ஷஃபா குவாலியரின்
மாணவர்களுள் முக்கியமானவராக அவர் அறியப்பட்டார். அவருடைய பைகாம்-ஏ-ஹக், உண்மையின்
செய்தி என்னும் இஸ்லாமிய வரலாற்று நூல் உருது இலக்கியத்தில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது.
1953இலிருந்து கவிதைகள் எழுதத் துவங்கிய ஜவ்ன்பூரி, 1956இல் ஜவ்ன்பூரிலிருந்து பணி நிமித்தமாக
போபாலுக்குக் குடிபெயர்ந்தார். மத்தியப்பிரதேசத்தில் புந்தேல்கந்த் பகுதியின் நாட்டுப்புறப் பாடல்
‘அல்ஹா’வை முன்னணிக்குக் கொண்டுவந்து ஆவணப்படுத்துவதற்கு இவர் உழைத்தார்.
ரஹ்பரின் கவிதை வரிகள் சில:
அனைவரின் நம்பகத்தன்மையையும் அறிந்தவன் நான் யாரை வழித்துணையாகக் கொள்வது? (கிஸ் தராஹ் ரக்லூன் சாத் கிசி ஹம்சஃபர் கோ மைன் பெஹ்சான்தா ஹூன் கூப், ஹர் ஏக் மோதபார் கோ மைன்) துயரத்தின் ஒவ்வொரு வீதியிலும் அலைந்து திரிந்து அறிந்துகொண்டேன் ‘ரஹ்பர்’ களிப்பும் பரவசமும் வெகு அருகில்தான் உள்ளனவாம் (ரஹ்பர் நஷத்-ஓ-அய்ஷ் கி மன்ஸில் கரீப் ஹை தாய் கர்ச்சுக்கா ஹூன் கம் கி ஹர் ஏக் ரஹ்குசர்கோ மைன்)
அல்லாமா இக்பால் இராமனை அழைத்த ‘இமாம்-ஏ-ஹிந்த்’ என்னும் வார்த்தையைத் தனது ‘ராம்’
கவிதையில் மறுபதிப்புச் செய்தார். முப்பத்தாறு அடிகள் கொண்ட அந்தக் கவிதை, கீழ்க்காணும் வரிகளைத்
துவக்கமாக்க் கொண்டது.
உண்மையின் நேசத்தின் பிரதிபலிப்பாக இங்கு இருந்தான் இராமன் அமைதியின் சாந்தியின் உத்தரவாதம் இங்கு இருந்தான் இராமன் (ஆயினா-ஏ-குலூஸ்-ஓ-மொஹப்பத் யஹான் தே ராம் அமன் அவுர் ஷாந்தி கி ஸமானத் யஹான் தே ராம்)
இந்துஸ்தானம் இராமனின் வீரத்தால் பெருமிதம் கொள்கிறது, என்று புகழ்பாடும் கவிதை, இராமாயணக்
காட்சியையும் தொட்டுச் செல்கிறது.
சகோதரனுக்காக சிம்மாசன உரிமையை விட்டுக்கொடுத்து பதினான்கு ஆண்டுகள் மனங்களில் ஆட்சிசெய்தான் (பாய் கே ஹக் பே சோடுதியா அப்னா தக்த்-ஓ-ராஜ் கர்தே ரஹே வோ சௌதா பரஸ்தக் திலோன் பே ராஜ்)
இவருடைய ‘நானும் இருந்தேன்’ (ஹம் பி தே) கஜல், வெற்றியுடன் வாழ்ந்த கடந்த காலத்தை அழகியலாக
வடிக்கும்.
பித்தனாக்கிவிடும் இப் பாதையில் வெற்றியுடன் சில நாள் நானும் இருந்தேன் பாலைக்கும் சோலைக்கும் பொருளாகச் சில நாள் நானும் இருந்தேன் இப்போது அனைத்தும் இருளில் மூழ்கியுள்ளன இல்லையெனில் இந்த வானில் நானும் சூரியனாகச் சில நாள் இருந்தேன் (ராஹ்-ஏ-ஜுனூன் மேன் கபி காம் யாப் ஹம் பி தே கபி ஹவாலா-ஏ-தஷ்த்-ஓ-சராப் ஹம் பி தே அந்தேரே ஹோகயே மான்சூப் ஹம்சே அப் வர்னா இஸ் ஆஸ்மான் மே அஃப்தாப் கபி ஹம் பி தே)
ஜனவரி 2022இல் போபாலில் நிகழ்ந்த மதநல்லிணக்க விழாவில் பத்துக்கும் மேற்பட்ட நல்லிணக்க்க்
கவிதைகள் வாசிக்கப்பட்டன. அவை மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றன. அவற்றுள் அல்லாமா
இக்பால், நாசிர் அக்பராபாதி, அமீர் குஸ்ரூ போன்ற கவிஞர்களின் கவிதைகளுடன் ரஹ்பர் ஜவ்ன்பூரியின்
கவிதையும் வாசிக்கப்பட்டது.
கவிஞர் ரஹ்பர் ஜவ்ன்பூரி ஆண்டு 2020 டிசம்பரில் லக்னௌவில் இயற்கை எய்தினார்.
தாங்கள் மொழி மாற்றத் தேர்ந்தெடுக்கும் எல்லா உருதுக் கவிதைகளும் மனதைத் தொடுகின்றன.
மொழியாக்கமும் சிறப்பு.