மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)

தோல் நிறம்(Skin Color)

ஹிந்துத்துவம், ஹிந்துயிசம், சம்ஸ்கிருதம், வேதம், ஆகியவற்றின் பெருமையை நிலைநாட்ட யாரை எதிர்பார்ப்பது? கோன்ராட் எல்ஸ்ட் என்ற ஐரோப்பியரையும், டேவிட் ஃப்ராலி என்ற அமெரிக்கரையும்.  இதுவா இந்தியர்களின் மனதிலிருந்து வெளியேறும் காலனீயம்? இதுவா சுதேசி மனப்பான்மை? இது வெள்ளையர்களின் அறிவாற்றலுக்கு இந்தியர்கள் அடிபணிவதை வெளிப்படுத்துகிறதா?  அல்லது, இந்தியர்கள் இனஉணர்ச்சியை தாண்டி வந்து விட்டனர் என்பதை குறிக்கிறதா?  ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த அமெரிக்க இந்தியவியலாளர்களோ அல்லது சீன இந்தியவியலாளர்களோ இந்த அளவிற்கு இந்தியர்களின்  உணர்ச்சிகளை  தூண்டுவார்களா எனக் கேட்கத் தோன்றுகிறது. 

நிறத்தின் மேலுள்ள பிடிப்பு,  இந்தியர்களிடையே முழுவதுமாக மறையா விட்டாலும் அரசியல், கலாச்சாரம் இவற்றில் எங்களது பங்கிற்கு அது மட்டுமே காரணமாகாது.  கீழை நாட்டு மரபு எனப்படும் கீழைநாட்டு மொழியியல், அதன் வரலாறு(எனது பட்டப் படிப்புகளில் ஒன்று) ஐரோப்பாவில்தான் உருவாகியது, அதன் சில வேர்கள்மட்டுமே இன்று ஐரோப்பாவில் இருந்தாலும்  . இந்தியாவிலேயே இந்தியாவைப் பற்றிய விரிவான உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்தும் மிகப் பெரிய சக்தியாக உள்ளது. சமீப காலம் வரை, அறிவாளர்கள் வரிசை கிட்டத்தட்ட நூறு விழுக்காடு  வெள்ளை நிறமாகத்தான் இருந்தது. ஏனென்றால், மேற்குப் பல்கலைக் கழகங்களில் வெள்ளையரல்லாத பெரும்பான்மையினரை   பொறியியல், மருத்துவம் போன்ற பதவியும் பணமும்  விரைவில் கிட்டும் துறைகளில்தான் காண முடிந்தது. மானுடவியலிலோ அல்லது   மற்ற குறுந்துறைகளிலோ அல்ல.  சமீப காலத்தில்தான், ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்களின் குழந்தைகள் கீழைநாட்டு மரபு சார்ந்த பகுதிகளில்  நுழைந்துள்ளனர்.  fஉயந்த பதவியில்  அமர்ந்துள்ள டோனிகர், பொல்லாக் போன்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளினால் எரிச்சலடைந்துள்ள  ஹிந்துக்கள்,  அத்தகைய உயர்ந்த பதவியிலுள்ள ஒரு சீன-அமெரிக்கரோ அல்லது இந்திய-அமெரிக்கரோ  சம அளவு ஆர்வத்தை தூண்டும்  ஆய்வுக் கட்டுரைகளை எழுதினால் உற்சாகத்துடன் வரவேற்பார்கள். அதிகாரபூர்வமான வாதங்களில்   மேற்கத்தியர்கள் உபயோகமாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. வெளிநாட்டினர் ஒருதலை பட்சமானவர்கள் அல்ல என்பது ஒன்று. மற்றொன்று, புதிய கலாச்சாரம்தான் அறிவியல் கலாச்சாரம் எனும் நம்பிக்கை. முதல் காரணம், வலுவானதல்ல. இந்திய கலாச்சாரத்தைப் பற்றி பேசுமளவிற்கு அதனருகில் நிற்பவர்கள், வழக்கமாக அக்காலச்சாரத்தை சண்டைக்கிழுக்கும் குழுவுடன்தான்  நட்பு கொள்கின்றனர். எனவே, அக்குழு நபர்களை போலவே அவர்களும் ஒருதலைப்பட்சமானவர்கள்தான். டில்லியிலுள்ள மேற்கத்திய பத்திரிகை நிருபர்கள் அனைவருமே மதச்சார்பற்றவர்களின் சட்டை பைகளுக்குள்ளே இருப்பதால், அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், எதற்கும் அசைந்து கொடுக்காத ஹிந்துயிசத்தினிடம் வெறுப்பை காண்பிக்கின்றனர். இதுதான் நான் கூறும் அதிகாரத்தைப் பற்றிய “ வட்ட வாதம்”(Circular argument). 

முதலில், இந்திய மதச்சார்பற்றவர்கள், தங்களுடன் தொடர்புள்ள மேற்கத்திய நிருபர்களுக்கு  இந்திய அரசியல் மதத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை ஊட்டுகின்றனர். இக்கருத்துக்கள, அம்மேற்கத்திய புளுகுணிகள், தங்களது சொந்த கருத்துக்களாக பொதுமக்களிடையே முன்வைக்கும்போது,  அறிவியலில் தேர்ந்த மேற்கத்தியர்களும் தங்களது கருத்துக்களைத்தான் வலுக்கட்டாயமின்றி ஆமோதிக்கின்றனர் என இதே மதச்சார்பற்றவர்கள் பறைசாற்றுகின்றனர். 

மூலோபாயம்(Strategy):

டோனிகர் ,பொல்லாக்  செயல்களுக்குப்  பின்னால் ஏதோ உபாயம் உள்ளது என்றால் எல்ஸ்ட், ஃப்ராலி இருவர் செயலிலும்  உபாயமுள்ளது”     பட்டநாயக் தனது கைகள் சம அளவில் இருப்பதாக எண்ணுகிறாரோ?  டேவிட் அவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் எழுத்தின் பின்னால் அத்தகைய பரிணாமம் உள்ளது எனக் கேட்பது எனக்கே அதிசயமாக உள்ளது. எனது செயல் எதுவுமே புதிய கொள்கைகளாக மாறியதாக நானறியவில்லை.  

“சலுகை பெற்றுள்ள ஹிந்துக்கள் நல்லவர்களாகக்  காட்டிக் கொள்ள வேண்டும் எனும் அவர்களின் உள்ளாசையை இவர்கள் திருப்திப்படுத்துகின்றனர் ‘  டேவிட் அவரது நோக்கத்தை கூறட்டும். (ஹிந்து தர்மத்தின் மீதான அவரது காதல் என நினைக்கிறேன். ஆனால் பட்டநாயக் அது வெகுளித்தனமானது என நினைக்கலாம்). எனது நோக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்;

ஒரு பகுதியை பட்டநாயக்கே சொல்கின்றார்: “19ம் நூற்றாண்டிலிருந்து கீழைநாட்டியலர்கள், மார்க்சீயவாதிகள்  விமர்சனங்களையே கேட்டுப் பழகிய சலுகை ஹிந்துக்கள், மானுடவியலில் திறமை போதாததால்  சரியான எதிர்வாதங்களை ஏவ இயலவில்லை”

அது உண்மைதான். இந்தியாவிலும், புலம்பெயர்ந்த இந்திய இளைஞர்களும் மருத்துவ பொறியியல் துறைகளுள் அவசரப்பட்டு நுழைந்ததனால், அந்த அளவிற்கு புத்திசாலிகளாக இல்லாத மற்றவர்கள் மானுடவியலில் நுழைந்தனர். ஹிந்து ஆர்வலர் அமைப்புகள், அறிவாற்றலில் என்றுமே முதலீடு செய்ததில்லை. சமீப காலமாக, புரிதல் இல்லாத இவ்வுலகத்தில் தங்களது கட்டைவிரலை நுழைப்பதற்காக எடுத்துள்ள அரைவேக்காட்டு முயற்சிகள் பலிக்கவில்லை. மேலும், இடதுசாரிகள் ஆதிக்கம் அதிகமாயுள்ள இத்துறைகள் ஹிந்துக்களுக்கு சாதகமானவர் எனும் அறிகுறியுள்ளவர்களை  அனுமதிப்பதில்லை. எனவே பட்டநாயக்கின் வார்த்தைகள் குறியிலிருந்து முற்றிலும் பிறழவில்லை. என்னால் இயன்ற அளவு எனது பங்களிப்பை அங்கே அளித்துள்ளேன் என நினைத்திருந்தேன். அதாவது, இந்திய வரலாற்றின் சரியான படத்தை வரைந்து காட்டுவதின் வாயிலாக  இடதுசாரிகள் அடுத்த தலைமுறையினரிடையே விஷமத்தனமான அனுமானங்களை எளிதாக புகுத்துவதை தடுக்கலாம் என்பதாகும். 

மற்றொரு காரணம், ஏன் எவரெஸ்ட் மலையில் ஏறினீர்கள் என்ற கேள்விக்கு  சர். எட்மண்ட் ஹில்லரி சொன்ன, ‘அது அங்கே இருப்பதால்’ என்ற பதில்தான் என்னுடையதுமாகும். இந்தியாவில் கோலோச்சும் சக்திகள் தங்கள் கயிற்று வித்தைகளை காட்டி  அயோத்தி ஆலயம், ஆரிய படையெடுப்பு போன்ற விவகாரங்களில் எவ்வாறு மக்களை ஏமாளிகளாக்குகின்றனர்  என்பதை பார்த்த பின்,  வெள்ளைக்காரனாகிய எனக்குள்ளிருந்த துணிச்சல் விழித்தெழுந்து இந்தியாவிற்கு சென்று இந்த சூரப்புலிகளை வேட்டையாடு என்றது. இது ஆழ்மனத்தில் நிலவிய சொந்தக் காரணம்  என்றால் ஆழ்ந்து ஆராய்ந்து வெளியெடுத்த  முடிவு, இந்திய அறிவுஜீவிகளின் பொய் பித்தலாட்டங்களுக்கு பதிலடி கொடுத்து வீழ்த்த வேண்டும் என்பதாகும்.

மதமாற்றம்(Conversion):

வெள்ளையரின் தலையில் இந்த வேலையை கட்டுவது ஒரு சுலபமான மாற்று வழி. அதிலும் நம்பிக்கையானவர்களாக இருந்தால் இன்னுமே வசதி. ஃப்ராலி புத்திசாலித்தனமாக தன்னை ஹிந்து என அறிவித்து கொள்வதோடு பண்டிட்.வாமதேவ சாஸ்திரி என்ற பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் ஆகியவற்றில் இவரது புலமையை கண்டு ஹிந்துக்கள் இவரை ஒரு பார்ப்பனராகவே  ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரது மனைவி இந்தியர்;ஒரு “யோகினி”யும் கூட. மாறாக, எல்ஸ்ட் தான் ஹிந்துவல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஏனென்றால், யாரையும்  ஹிந்து மதத்திற்கு “மாற்ற முடியாது” அது பிறப்புடன் இணைந்தது என்பதையும்,  ‘ஹிந்துயிசம் பூகோள அமைப்புடன் ஆழமாக இணைந்த ஒன்று’ என்பதையும் அறிந்தவர். 

மதச்சார்பற்றவர்கள் விருப்பத்துடன் கூறுவது(மேற்கத்தியர்களை     மேற்கோள்  காட்டுவது)  ‘ஹிந்துயிசத்தில் மதமாற்றம் கிடையாது’  அவர்கள் இதை சொல்வதற்கான காரணம், மதபோதகர்கள் ஹிந்துக்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்யும்போது மௌனம் சாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கண்டனம் செய்யப்பட்டவர்கள் ஹிந்துக்கள் என்பதாகும். இதற்கு எதிர்மாறாக, ஹிந்துயிசத்திற்கு மதம் மாறுவது சாத்தியம் என நான் நினைக்கிறேன். முதலாவதாக, வரலாற்றில் பல சமூகங்கள் மொத்தமாக இதை செய்துள்ளன. ஆனால், சமூகங்களுக்குள்ளே இது சாத்தியமில்லை. (ஒரு ஜாட் அல்லது ராஜபுத்திரர் இஸ்லாமியராக மாறினாலும் பல தலைமுறைகளுக்கு அவர் அதே சமூகத்தினராகத்தான் பார்க்கப்படுகிறார். இந்திய முஸ்லிம்கள், இந்துக்களை போல் தங்களிடம் சாதி வேறுபாடுகள் இல்லை என்பதை குத்திக் காண்பிப்பதற்காக இதை மறைப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றனர். ஆனால், பாகிஸ்தானியர்கள் வெளிப்படையாக ‘நான் ஒரு ராஜபுத்திர முஸ்லீம்’ என அடையாளம் காட்டிக் கொள்வர்’) இரண்டாவதாக, கலப்பு திருமணங்களில், மணமக்களை  ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஏற்றுக்கொண்டால் அச்சமூக நபராக அங்கீகரிக்கப்படுவார். 

மற்றும், இன்றைய சூழ்நிலையில், சூறையாடுபவர்களுடன் போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தால்” கர் வாபசி”(இல்லத்திற்கு திரும்புங்கள்) எனும் இயக்கத்தின் மூலம், ஹிந்து மதத்திலிருந்து வெளியேறியவர்களை ஹிந்துக்களாக மறு  மத மாற்றம்  செய்விக்கன்றனர்.இக்கொள்கையை நான்  ஆதரிக்கிறேன்.இத்திட்டம், என்னைப் போன்ற படிப்பாளிகளை நம்பாத கிராம மக்களிடையே நன்றாக செயல் புரிகிறது. அதே சமயம், இஸ்லாமிய திருநூல்களைப் பற்றி நான் எழுதியுள்ளதை படித்து தனது மதப் பழக்குமுறையிலிருந்து விடுபட்டு ஒரு முஸ்லீம் தனது பழைய வீட்டிற்கு திரும்புவாரானால் அது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.

இருந்தாலும் நான் பல குருமார்கள் அழைப்பு விடுத்த பின்னும் ஹிந்துவாக மாறவில்லை. ஸம்ஸ்கிருத பெயரையும் தேர்ந்தெடுக்கவில்லை. இதை நான் ஃப்ராலி தேர்ந்தெடுத்த வழியை குற்றம் சொல்வதாக நினைக்க வேண்டாம். 

ஃப்ராலி, வேத கலாச்சாரம் உலகத்திற்கே பொதுவானது;எனவே அனைத்து மானிடர்களுக்கும்  திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும் பிராம்மணனுக்கான தகுதிகள் தனக்கிருப்பதாக காட்டிக்கொண்டதின் மூலமாகவும் தனக்கிருந்த தடங்கல்களை சமாளித்து விட்டார். இவ்வாறு ஹிந்துவாக மாறிய அனைத்து வெள்ளையர்களும் தங்களை பார்ப்பனராகவோ க்ஷத்திரியராகவோதான் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வைசியராகவோ சூத்திரராகவோ அல்ல. வர்ணம் வேலை பகுப்பிற்காக செய்யப்பட்டது என்ற ஆய்விற்கு இதுவா அடையாளம்? 

சாஸ்திரி என்ற பார்ப்பன அடைப்பெயர் ஃப்ராலிக்கு கொடுக்கப்பட்டது. அவராக எடுத்துக்கொண்டதல்ல. வர்ணத்திற்கான பாரம்பரிய பொருட்படி நான் ஒரு சூத்திரனாகத்தான்  கருதப்படுவேன். அதிலொன்றும் தவறில்லை. எனது சுவிட்சர்லாந்து நண்பர் (வேதிய சோஷலிசவாதி,சுவாமி அக்னிவேஷ்) பல வருடங்கள் ரிஷிகேஷ் ஆசிரமவாசியாக இருந்ததினால் சூத்திரானந்தா (மகிழ்ச்சியான சூத்திரன்) என்ற பெயரிட்டுக் கொண்டுள்ளார்.  பெருமை மிக்க ஹிந்துக்களில் எனக்கு பிடித்தமானவர் சாந்த்.ரவிதாஸ் ஆவார். இவர் வாரணாசியின்  எல்லைப்புறத்தில் வாழ்ந்த சக்கிலியர்.(செருப்புத் தொழிலாளி). எனக்குமே  ஹிந்துயிசத்தின் எல்லைப்பகுதியில்தான் நீங்கள் இடமளிப்பீர்கள். 

சமயவாதம்:

நான் பங்கெடுத்த வரலாற்று வாதங்களைப் பற்றிய துல்லியமான கணிப்பு எனக்கு முகஸ்துதி செய்வது போல் தோன்றுகிறது. “எல்ஸ்ட் அயோத்தியை குறித்து அதிகஅளவு ஆய்வுகளின் வாயிலாக பாபிரி மஸ்ஜித் முன்னர் ஹிந்து ஆலயம் இருந்த இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளார். முஸ்லீம் அரசர்களின் விக்கிரக உடைப்புகளை மதச்சார்பற்றதாக மாற்றப் பார்க்கும் ரிச்சர்ட் ஈட்டன் போன்ற அறிஞர்களின் கருத்துக்களுக்கு எதிராக வலுவான சவால்களை முன் வைத்துள்ளார்.  நவீன வரலாற்று ஆய்வுகளில் வழக்கமாக சொல்லப்படுவது ஹிந்து ஆலயங்களை முஸ்லிம் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல் ஹிந்து அரசர்களும் தங்களுடைய அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக ஹிந்து ஆலயங்களை நிர்மூலம் செய்தனர் என்பதாகும். ஹிந்து மதத்தை அழித்து இஸ்லாமிய மதத்தை நிறுவுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் அவர்கள் மதமே காரணம்  என  ஹிந்துக்கள்  நினைவில் இருத்திக் கூறியதையும் முஸ்லிம்கள் புத்தகங்களில் வடித்துள்ளதையும்  இவ்வாய்வுகள் அறவே புறக்கணிக்கின்றன. இதை கூறினால் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு எனநினைப்பார்களோ என மேற்கத்திய கல்வித்துறையினர் கவலைப்படுகின்றனர்.  இந்துக்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தினால் இவர்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை. இக்கண்ணோட்டத்தை எதிர்ப்பதற்கான தீவனத்தை  எல்ஸ்ட் அளிக்கிறார்.” 

இவ்விடத்தில், வரலாற்றை மாற்றி எழுதுபவர்கள்  வரிசையிலிருந்து நான் ஒதுங்குகிறேன். ‘எல்ஸ்ட் ,ஃப்ராலி இருவருமே  ‘இந்தியாதான் ஆரிய இனத்திற்கும் சம்ஸ்க்ரித மொழிக்கும் தாயகம்.; இந்தியாதான் உலக நாகரீகத்தின் உறைவிடம் என்ற கருத்திற்கு  ஆதரவாக வலுவான வாதம் செய்கின்றனர். 

‘ ஹிந்துயிசத்தைப் பற்றிய அறிவு மிக ஆழமானதாக இருந்தாலும், எல்ஸ்ட், ஃப்ராலி , டோனிகர், பொல்லாக், அனைவருமே ஹிந்துக்களுக்கே உரித்தான, “பழையன கழிதலும் புதியன புகுதலும்”  என்ற பெண்மைக்குரிய கொள்கையில் நம்பிக்கையற்றவர்களாக  உள்ளனர். . மாறாக, எல்ஸ்ட்டும், ஃப்ராலியும் காலனீயர்கள் செய்த நீதிக்கு புறமான காரியங்களை மீண்டும் மீண்டும் இந்தியர்களின்  கவனத்திற்கு கொண்டு வருவதின் மூலம் மக்களை உசுப்பி சண்டையிட வைக்கின்றனர். இத்தகைய வன்முறை போக்கு மேற்கத்திய சிந்தனைத் தரத்தின் முத்திரை. இது ஆண்மைத்தனமாக கருதப்படுகிறது. இவர்களை போலவே,  டோனிகரும் பொல்லாக்கும்   ஹிந்துயிசத்தின் கவர்ச்சிகரமான ஆன்மிகம்,  இந்து சமூகம் சாதியையைப் பற்றிய உண்மைகளிலிருந்து திசை திருப்பக் கூடாது என்பதை வாசகர்களிடம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனர் ‘. 

அடேயப்பா! மனிதர்களை தூர நின்று மனோபகுப்பாய்வு செய்வது பட்டநாயக்கிற்கு கடினமான வேலையாக இருந்திருக்க வேண்டும். பண்பாடுகளை ஆணென்றும் பெண்ணென்றும் பிரிக்கும் பிதற்றல் எனக்குப் புரியவில்லை. ஆரியப்  படையெடுப்பைப் பற்றிய வாக்குவாதம் ஒருமனதாக தீர்மானிக்கப்படவில்லை என்பதால் அதில் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் எனும் அவாவினால்  அல்ல. பாபிரி மஸ்ஜித் கட்டப்பட்ட இடத்தில் ஹிந்து ஆலயம் இருந்தது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட பின் நான் அதைப் பற்றி பேசுவதில்லை. 

மாறாக, இஸ்லாமிய காலனீயர்கள் செய்த அட்டூழியம் உண்மை மட்டுமல்லாமல் அதன் விளைவுகள் இன்றும் ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளாகத் தொடர்கின்றது..( முஸ்லிம்கள் பெரும்பான்மையான மாகாணங்களில் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை  அட்டகாசங்கள், ஹிந்துக்களை பாகுபடுத்தும்  அரசியலமைப்பு சட்டம்). கவலைக்கிடமான இவ்விவகாரங்களை தவிர்ப்பதற்கு இது சரியான தருணமல்ல. இது தற்போதுள்ள உண்மை நிலவரத்தைப் பற்றிய கண்ணோட்டம். புராணங்களில் இதற்கான புதிய விளக்கத்தை தேட முடியாது.

இது போலவே, டோனிகரும் பொல்லாக்கும் அவர்கள் போரிடும்  காரணங்களுக்காக  தீவிரமாக உழைக்கின்றனர்  என நினைக்கிறேன்.  அவ்வாறிருந்தால், அவர்கள் கையிலெடுத்துள்ள விவகாரங்கள் மிகப் பெரியவை. குறுகிய காலகட்டத்தில் தீர்வு காண முடியாதவை. அவர்கள் இறக்கும் நாள் வரை தொடரக்  கூடியவை. மக்கள் தாங்கள் செல்லும் பாதையை மாற்றிக் கொள்வதற்கான சுதந்திரம் உள்ளது. ஆனால், முழு மூச்சுடன் ஆரம்பித்த பணியை முடிவதற்கு முன்னரே கை விடுவது உத்தமமானதல்ல. இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்த பி. ஆர். அம்பேத்கர், எஸ். ஆர். கோயல் போன்றவர்கள் தாங்கள் உழைத்த காரியங்கள் எதையும்  பாதியில் கை விட்டதாக தெரியவில்லை.  எந்நேரமும் எக்காரியத்தையும் கைவிடலாம் என்பது சரியல்ல.  

விடை பெறுமுன் கொடுத்த சூடு(Parting Shots):

சொன்னது நல்லது என வைத்துக் கொள்வோம். வாலில்தான் விஷம் என்பது போல் போகுமுன் பட்டநாயக்  கூறியுள்ள சுடுசொற்களை  கண்டிப்பாக ஆட்சேபிக்கிறேன். “ எனவே, இரண்டு கட்சிகளும் ஹிந்துக்களுடைய புண்ணை  சீழ் பிடித்ததாகவே வைத்துள்ளது. இருவருமே நீதி எனும் களிம்பை தருகின்றனர். இந்த மேற்கத்திய அணுகுமுறை இந்திய அரசியலில்  கொந்தளிப்பை ஏற்படுத்துவதாகவும்  இவர்களுக்கு லாபகரமான வியாபாரமாகவும் உள்ளது.  

அயோத்தியில் ஹிந்து ஆலயத்தைப் பற்றிய சந்தேகத்தை கிளப்பியவர்கள்  இந்தியா  முழுவதிலும் அதை சர்ச்சைக்குரிய விஷயமாக உருவாக்கி (பங்களாதேஷ், யுனைடெட் கிங்டம் போன்ற இடங்களில் உள்ள ஹிந்து சமூகங்களிடமும் கூட) ஆறிய புண்ணை கிளறி விட்டு சீழ் பிடிக்க வைத்தனர். வரலாற்று நடப்பை சரியாக படம் பிடித்து கோட்பாட்டின் பின்புலத்தையும் தேடி எடுத்தவர்கள்தான் எதிர்பதமாக நடந்து கொண்டனர்.இதையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தவர்கள், பின்னவர்கள் அடைந்த சரியான முடிவுகளை புறக்கணித்ததால்  புண் சீழ் பிடிப்பதற்கு அவர்களும் காரணமாக இருந்துள்ளனர். 

சந்தேகத்தை கிளப்பியவர்களுக்கு எதிராக பேசியவர்களை   மேலை நாட்டு மானுடவியல் துறைகளும்  இந்திய மதச் சார்பற்ற நிறுவனங்களும் தீண்டாததையும் ஒதுக்கித் தள்ளியதையும் பார்த்தவர்களுக்குதான்  தெரியும் அவர்கள் பட்ட பாடு. அதை லாபகரமானது எனக் கூறுவது கண்டனத்திற்கும் கீழ்ப்பட்டதாகும். லாபம் எனது நோக்கமாக இருந்திருந்தால் நான் எதிர்க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டும்.

‘இருவருமே,  இந்தியர்களின் பன்முகத்தன்மையைப் பற்றிய எண்ணத்தையும்,  ஒருமைப்பாட்டை நிராகரிப்பதையும் பல முரண்பாடான படிநிலைகள் உள்ள பல கட்டமைப்புகள் ஒரே சமயத்தில் இயங்குவதை  ஏற்றுக் கொண்டுள்ளதையும் பயபக்தியோடு  அணுகுவதில்லை’. இது முற்றிலும் தவறு. என்னை பொறுத்தவரை நான் உறுதியாகக் கூறுவது என்னுடைய விமரிசனங்களெல்லாம் பன்முகத்தன்மையை அடக்க விரும்பும் மதங்களையும் கோட்பாடுகளையும் குறி வைத்தே செய்யப்பட்டுள்ளது. 

புராணக் கதையாசிரியர் சொல்கிறார்: ‘டோனிகரும் பொல்லாக்கும் கிரேக்க புராணங்களின் பாணியில் பாசிச அசுரர்களுடன் போரிடும் தேவர்களாக தங்களை நியமித்துக் கொண்டுள்ளனர். எல்ஸ்ட்டும் ஃபிராலியுமோ, ஆபிரகாமிக் புராணப்  பாணியில், காலனீயர்களின் அடிமைத்தளையில் கட்டுண்டுகிடக்கும் இந்தியர்களை வேதம் வாக்களித்துள்ள பிரதேசத்திற்கு இட்டுச் செல்லும் தீர்க்கதரிசிகளாக நியமித்துக் கொண்டுள்ளனர்’.

நல்ல போர் என்பது கிரேக்கர்கள் நடத்தியது மட்டும்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால்  நால்வருமே எங்களது செயலை ஒரு நல்ல போராகத்தான் கருதுகிறோம். கடவுளின் பிரதிநிதிகளிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. எனவே தீர்க்கதரிசி என்ற அடைமொழியை  மறந்து விடலாம். டேவிட் ஃபிராலி தொலை நோக்கு பார்வையுடையவர் எனவே அவர் வேண்டுமானால் தீர்க்கதரிசியாக இருக்கக் கூடும். ஆனால், அவருமே தன்னை அவ்வாறு பார்ப்பதாக தெரியவில்லை. நான் குறிப்பிட்ட தவறுகளை மட்டும்தான் பார்க்கிறேன், நான் ஒரு சிவப்பு பென்சிலை கையில் வைத்துள்ள  பள்ளிஆசிரியர். தவறுகளை  திருத்துவதின் மூலம் அவர்கள் வாக்களிக்கப்பட்ட இடத்தை அடைவார்கள் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் நான் அத்தகைய தூரப் பார்வையுடையவன் அல்ல. .நான் எதிர்பார்ப்பது தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. துப்புரவு பணியாற்றுபவர்களின்  ஜாதிதான் எனக்கு பொருந்தும் என நினைக்கிறேன். 

மேலும், ‘ஒரு பெரிய பீடத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதென்பது  இரண்டு குறிக்கோள்களுக்கும் பொதுவானது. விமரிசனங்களை இரண்டு கட்சிகளுமே ஒரே விதமாகத்தான் எதிர்கொள்கின்றன. தவறாக புரிந்து கொள்ளப்பட்ட  வீரர்களாகவோ அல்லது தியாகிகளாகவோ தங்களை வருணித்து பின்பற்றுவோரை உசுப்பி விடுகின்றனர். டோனிகரும் பொல்லாக்கும்   உத்வேகமுடைய ஆர்வலர்-கல்வியாளர்கள் கொண்ட படையையே ஏற்படுத்தி உள்ளனர். இவர்களனைவரும் ,தாங்கள் அபாயகரமான தலைவர்கள், அறிவாளிகள் எனக் கருதுபவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களிலோ ஏன், அமெரிக்க மண்ணிலோ  கூட  கால் வைக்கக் கூடாது என  மனுக்களில் கையெழுத்திட்டு அனுப்புகின்றனர்’: சுப்பிரமணியம் சுவாமி, நரேந்திர மோடி, ராஜிவ் மல்ஹோத்ரா போன்றவர்களும்   தருமப் பண்பாட்டு நிறுவனம்  போன்ற நிறுவனங்களும் இதில் அடங்கும்.   இந்திய ஆய்வியலாளர்கள் சமூகம்  பேச்சு சுதந்திரத்தின் மேல் காட்டும் அக்கறை எல்லோருக்குமான சுதந்திரம் அல்ல. இத்துடன்  ஃபிராலிக்கும் மேற்கூறிய வார்த்தைகளுக்குமுள்ள ஒற்றுமை நின்று விட்டது. 

‘மாற்றுக் கருத்துக்களுக்கு இங்கே இடம் கிடையாது. ஒரு கட்சியுடன் ஒத்துப்  போனால்  பகுத்தறிவுள்ள அறிவியல் அறிஞராக அவர் மதிக்கப்படுவார். அதே நபர் அக்கட்சியுடன் ஒத்துப் போகவில்லையென்றால் பாசிஸ்ட் அல்லது இனவெறியாளர் என இகழப்படுவார் ‘. ஃபிராலியும் நானும் எழுதியது ஆயிரத்திற்கும் மேலான பக்கங்களிருக்கும். அப்பக்கங்களில் யாராவது ஒருவர் எங்கள் மேல் பட்டநாயக் குத்தியுள்ள முத்திரையை நிரூபிப்பது போலான ஒரு வரியை சுட்டிக்காட்டினால் குறியீடாக ஒரு ரூபாய் கொடுக்கத் தயாராயுள்ளேன். மாறாக, என்னுடன் கருத்து வேறுபாடுள்ளவர்களின் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என பல பக்கங்களில் எழுதியுள்ளேன், முக்கியமாக டோனிகர் 

உட்பட. இதற்கு ஒன்றும் பெரிய தகுதி தேவையில்லை. விலக்கப்பட்டவர்களில் ஒரு இலக்காக பல முறை இருந்துள்ளதால் கருத்து சுதந்திரம் அனைவரது உரிமை என முழங்குவது எனக்கு மிகச் சுலபமாக உள்ளது.

ஒரு வாக்குவாதத்தில் இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசமில்லை என்பது போல் தன்னை நடுவில் நிறுத்திக் கொண்டு முடிவில் இரண்டு கட்சிகளின் வாதத்தை விட தனது வாதமே சிறந்தது என்பதை நிரூபிப்பதற்கான   அணுகுமுறை இங்கு கையாளப்படுகிறது. இது லாபகரமான தோரணையாக இருக்கலாம் ஆனால் சோம்பேறித்தனமானது. ஏனென்றால் இரண்டு கட்சிகள் சொல்வதையும் செய்வதையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இங்கு இல்லை. 

பாதை மாறிய நமது புராண கதாசிரியர், தீடிரென ஒரு குண்டை போடுகிறார்; ‘ஹிந்துத்துவ கொள்கையினால் ஆட்டிப் படைக்கப்படும் வெள்ளை மாவீரர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சிலுவைப் போரை நடத்துகின்றனர். எதிராளிகளை மனிதாபிமானம் அற்றவர்களாக காட்டப் பார்க்கின்றனர்’.  இவரது பீரங்கித் தாக்குதலை இனி சமாளிக்க முடியாது என ஒப்புக் கொள்கிறேன். ‘உரையாடலுக்கு உரித்தான பாணியை புறக்கணித்தலைப் பற்றி கூறும்போது இவர் தன்னைத்தானே  குறிப்பிட்டுக் கொள்கிறார் என நினைக்கிறேன். 

தவறு!

இருந்தாலும், பட்டநாயக்கின் முடிவுரையைப் பற்றி எனக்கு மனஸ்தாபம் இல்லை. ‘நாம் உண்மையாகவே காலனிய  மனப்பான்மையை விட்டொழித்து காந்தீய அல்லது ஆர்.எஸ்.எஸ். சுதேசிகளாக மாற வேண்டுமென்றால் முதலில் நமது தாழ்வு மனப்பான்மையுடைய மனப்பாங்கிலிருந்து மீண்டு வர வேண்டும். பேரினவாதத்திற்கு ஆளாகாமல், இந்தியர்களாகிய நம்மிடம், எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், ஹிந்துயிசம், சம்ஸ்க்ருதம், வேதங்கள் ஆகியவற்றை பற்றியோ அவை இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று  எடுத்துக்கூறவோ  ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் நமக்கு தேவையில்லை’. 

நல்லது! இப்பிரச்சினையை இவ்வாறு முன்வைக்கும்போது, தாழ்வு மனப்பான்மையையும் மற்றவர்களை நம்பியிருப்பதையும் நீக்குவதை நான் மனமார வரவேற்கிறேன். அதனால்தான் இந்தியர்களுக்கு டோனிகரின் காம உணர்ச்சிகளை கிளப்பும் மொழிகளோ பொல்லாக்கின் அரசியல் ராமாயணமோ அம்முறைகளை உள்வாங்கிக் கொண்டு எழுதப்பட்டுள்ள மறைந்த ராமானுஜம், பட்டநாயக்கின் படைப்புகளுமோ, மோசமானவை, தேவையற்றவை என்கிறேன்.  பெருமைக்குரிய  இவ்வறிஞர்கள் வெள்ளையர்கள் என்பதாலோ  மேலைநாட்டினர் என்பதாலோ, இந்திய ஆய்வியலாளர்கள் என்பதாலோ அல்ல. அவர்களது கருத்துக்கள் தவறானவை என்பதனால் மட்டுமே. 

அவ்வப்போது தவறு ஏற்படுவது பெரிதல்ல. அதிர்ஷ்டவசமாக, நம்மோடு உரையாடும் நண்பர்கள் வார்த்தை எனும்  சிவப்பு பென்சிலை உபயோகித்து  அதை சரி செய்து விடுவர். விஷால் அகர்வால், டோனிகரின் தடை செய்யப்பட்டாலும்  தடைசெய்யப்படாத  புத்தகத்திலுள்ள எண்ணற்ற தவறுகளை சரி செய்து ஒரு புத்தகத்தையே வெளியிட்டுள்ளார்.. நான் ஒரு முழு மாநாட்டில் கலந்து கொண்டு ஸம்ஸ்க்ருதத்தைப் பற்றிய பொல்லாக்கின் தவறான கருத்துக்களை சரி செய்துள்ளேன். இது உலகத்தையோ, இந்தியாவில் ஒரு சிறு பகுதியையோ, இந்தியாவிலுள்ள சிறுபான்மை ஹிந்துக்களையோ கூட காப்பாற்றப் போவதில்லை. இருந்தாலும், உண்மையற்றவைகளுக்கு நடுவில் வாழவில்லை எனும் சுத்தமான எண்ணம் மகிழ்ச்சிகரமான ஒன்று. அவை சில சமயங்களில்  பொய்களாகவும் பல் சமயங்களில் தவறுகளாகவும் இருக்கலாம்.  புராணங்கள் என்பது வேறொரு விஷயம். இதற்குள் வராது.

(தொடரும்)

(* Published on Pragyata.com, 16 February 2017)

துணை நூல்கள்:

*** Pattanaik,Devdutt,’From Macaulay to Frawley,from Doniger to Elst: Why do many Indians need White Saviours?’ Scroll.in24 December 2016, accessed 31 January 2019,https://scroll.in/artile/824732/from-macaulay-to-frawley-from-doniger-to-elst-why-do-many-indians-need-white-saviours)

Series Navigation<< மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.