- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
2000 அம்பலப்புழை
இரண்டு பேரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
நடாஷா நினைத்தும் பார்த்ததில்லை. முப்பத்தைந்து வருடம் கழித்துத் திரும்பி இந்தியா வருவது, ஒரு கனவாகவே எழுந்து, கனவாகவே அவளுக்குள் வாழ்ந்து, அப்படியே மடிந்து போகப் போகிறது என்று அவள் இத்தனை நாள், எப்போதாவது பழைய நினைவுகள் வரும்போது, தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள். அது இல்லையென்று இன்றைய தினம் சொல்கிறது, உரக்க, உருக்கமாக.
“திலீப் நீதானா இது, அட கடவுளே முப்பத்தஞ்சு வருஷமாச்சு நாம சந்திச்சு”
நடாஷா திலீப் ராவ்ஜியின் கையை எடுத்துத் தன் கரங்களுக்கு நடுவே வைத்தபடி, அன்பான இன்னொரு உயிரோடு நட்பும் நெருக்கமும் பாராட்டுவதாக திலீப் ராவ்ஜியின் சிரசில் முத்தமிட்டாள். பூண்டு, வெங்காய வாடை திலீப் மேல் இதமாகக் கவிந்த நிமிடம் அது.
அறுபது கடந்த ஒரு அம்பலப்புழைக் கிழவரும், அதே வயதில் ஸ்தூல சரீர ரஷ்யப் பெண்மணியும் காமமும் காதலும் கடந்து நேசம் செப்பி நின்ற பொழுதை அடிக்கோடிட்டுக் காட்ட ஆலப்புழை-அம்பலப்புழை பிரதேசத்துக்கே உரித்தான அவ்வவ்போது பெய்து காணாமல் போகும் சிறுமழை காற்றில் சாரல் பரத்திப் போனது.
”திலீப் உன் மனைவி எப்படி இருக்கா? எத்தனை பிள்ளைங்க? என்ன செஞ்சிட்டிருக்காங்க? நான் கட்டாயம் பார்க்கணும் அவங்களை”.
”நீ அகல்யாவைப் பார்த்திருக்கியோ நடாஷா?”
அவர் மனம் விட்டு அழுதது அடுத்த ஐந்து நிமிடம் கழித்து. ”நடாஷா உன் பாய்ஃப்ரண்ட் செர்யோஷா இறந்து போனதா தகவல் வந்ததும் நீ பட்ட மனத்துயரமும், நான் அறிவே இல்லாம உன்னோட, உன்னோட உடம்பில் ஆக்கிரமிக்க, முடிஞ்சமட்டும் ஆக்கிரமிக்க எவ்வளவு ஈனத்தனமா நடந்தேன்”.
”செர்யோஷா, ஆக்கிரமிப்பு, அகல்யா இதிலே அகல்யா மட்டும் நினைவு இருக்கு. நான் மாஸ்கோ திரும்பப் போன அன்றைக்கு சொல்லிக்கொள்ள வந்தபோது நீ தான் அறிமுகப் படுத்தினே. எனக்கு அந்த குழந்தை முகம் சிரிப்பு ரெண்டும் நல்லா நினைவு இருக்கு. அப்படியே மனசுலே இருக்கட்டும்”

“செர்யோஷா?”
“அகல்யா. அப்புறம் செர்யோஷா. அவன் இருந்தா இப்போ எழுபது வயசாகி இருக்கும். செய்ய வேறே ஒண்ணும் இல்லாம, கட்சியிலே இருப்பான். நிச்சயம் டூமாவுக்கு அதான் பார்லிமெண்ட், அவனை யாரும் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்க மாட்டாங்க. எழுபது வயசுலே குடும்ப வியாபாரமான வாசனை திரவியம் மொத்தமாக வாங்கி சில்லறையாக விற்றுக்கிட்டிருப்பான். மளிகைக் கடைக்காரன். அவன் வீட்டை நான் அவன் அப்பா கிட்டே இருந்து வாங்கினேன். ப்ரொவிஷன் ஸ்டோரையும் நான் தான் அவன் தம்பி கிட்டே இருந்து வாங்கினது. பீட்டர்ஸ்பெர்க் நகர்லே அந்த வீட்டையும் கீழே கடையையும் நான் தான் பார்த்துக்கொண்டிருக்கேன். செர்யோஷா ஒரு நினைப்பு மாத்திரமாகி முப்பத்தைந்து வருஷமாச்சு. நரகமோ சொர்க்கமோ எங்கேயோ நல்லபடி போயிருக்கட்டும். இல்லாம போயிருந்தாலும் சரிதான்”.
“நீ கல்யாணம் செய்துக்கிட்டது?”
“நிச்சயம் செர்யோஷாவை இல்லை. சோவியத் யூனியன் விழுந்தபோதுதான் அவனோட தம்பியோடு பரிச்சயம் கிடைத்தது. ஆபீஸ்களில் கழிப்பறை சுத்தப்படுத்த காண்ட்ராக்ட் எடுத்திருந்தான் அப்போ. நான் மாஸ்கோவிலே ஒரு சினிமா ஸ்டூடியோவிலே கார்ட்டூன் படங்களுக்கு ரஷ்ய வசனம் எழுதி டாமுக்கும் ஜெரிக்கும் பூனை-எலி பேச்சு வர வழி செஞ்சுட்டிருந்தேன். எங்க ஸ்டூடியோவுக்கும் வரப்போக இருந்தபோது ஹங்கேரியிலே புடாபெஸ்ட் நகரத்திலே நிரந்தரமாகக் குடியேற திட்டம் போட்டுட்டிருந்தான் செர்யோஷாவோட தம்பி. அவன் கூட சிவப்பு சிந்தனையாளன். முகத்திலே தூக்கம் வடியும். அவனும் நானும் கல்யாணம் செஞ்சுக்க முடிவெடுத்தோம். டான்யூப் நதிநீரைக் குடிச்சுக்கிட்டு, புடாபெஸ்ட் யூனிவர்சிடியிலே உத்தியோகம் பார்க்கப் போகலாம்னு நினைச்சேன். வீட்டையும் கடையையும் விற்கப் பேச்சுவார்த்தை ஆரம்பிச்சேன். அவன் முதல்லே போனான். ரெண்டு மாசத்திலே வந்து கூட்டிப் போறேன்னான். அங்கேயே இருந்துட்டான். ஹங்கேரி பொண்ணுங்க அவ்வளவு அழகு. ஆச்சு அவனும் இறந்து போய் இருபத்தஞ்சு வருஷமாச்சு. புடாபெஸ்டில் தான். நான் அந்த வீட்டையும் கடையையும் விற்காததும் பீட்டர்ஸ்பெர்க் நகர்லே யூனிவர்சிட்டி ப்ரொபசர் வேலையை விடாததும் நல்லதாப் போச்சு”.
”நடாஷா, உன் குடும்பம்?”
திலீப் தயங்கித் தயங்கிக் கேட்டான் அவளை.
“நானா? சில இனிப்புப் பழம், சில புளிப்புப் பழம், சில அழுகிய பழம், இன்னும் சில பழுக்காமலேயே உலர்ந்து உதிர்ந்தது. என் பழக்கூடையிலே எல்லாம் உண்டு”.
நடாஷா சிரித்தாள்.
”நான் இங்கே இருந்து போனபோது எங்கப்பாவுக்கு சித்தபிரமை பிடிச்சிருந்தது. அதோடு கூட சென்ட்ரல் கமிட்டியில் சிறப்பாக வேலை பார்த்திருந்தார். அவரை குருஷேவ் எதிர்ப்பாளர்னு சைபீரியா அனுப்பிட்டாங்க. பிரஷ்னேவ் ஆதரவுக்காரர் அவர்னு அப்புறம் கண்டுபிடிச்சாங்க. பிரஷ்னேவுக்கே தனக்கும் ஆதரவாளர்கள் இருக்காங்கன்னு அவ்வளவு தாமதமாகத்தான் தெரியுமாம். அப்பாவை சைபீரியாவில் இருந்து வெளியே அனுப்ப அனுமதி வந்தபோது வெளியே போக மாட்டேனுட்டார் அவர். நான் அதுக்குள்ளே மாஸ்கோ யூனிவர்சிட்டியிலே இந்திய அச்சுத் தொழிலின் பாரம்பரியம் பற்றி இங்கே குறிப்பெடுத்துப் போனதை எல்லாம் வச்சு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். நல்லவேளை என் டாக்டரேட்டை அவங்க தடுக்க முடியலே. இப்போவும் பீட்டர்ஸ்பெர்க், மாஸ்கோவிலே அவ்வப்போது கௌரவ பேராசிரியராக வகுப்பெடுக்கறேன். பொழுது போகாட்ட, பழைய பாணியிலே அப்படியே வச்சிருக்கற வீடு, மளிகைக்கடையிலே போய் நேரத்தை சந்தோஷமா செலவிடறேன். சோவியத் சந்தோஷம் இல்லே இது. ரஷ்ய முதலாளித்துவ சந்தோஷம்”.
அவள் சிரிக்க திலீப் ராவ்ஜியும் கூடச் சேர்ந்து சிரித்தார்.
”எல்லாம் சொன்னே, உன் கல்யாணம், காதல், குழந்தை குட்டி, இதெல்லாம் சொல்லேன் நடாஷா. நாங்க இந்தியர்கள். சினிமாவோ, நாடகமோ, நாவலோ சாங்கோபாங்கமாக இதெல்லாம் தெரிஞ்சாகணும். இல்லேன்னா நாங்களே கற்பனை செய்து கூடச் சேர்த்துப்போம்”.
”நான் நாலு தடவை கல்யாணம் பண்ணி ஒவ்வொரு கல்யாணத்திலே இருந்தும் ரெண்டு வருஷம் கூடத் தாக்குப் பிடிக்காம வெளியே வந்ததும் குளிர்ந்த பியர் குடிச்சுக்கிட்டு சொல்றேன். கூப்பிட்டா வருவே இல்லையா கம்பெனி கொடுக்க? முடிந்தா ஆளுக்கு ஒரு பெக் விஸ்கி உள்ளே. அப்போ சிரிப்பு வெளியே வரும். இப்போ மனசு அழுத்தமும் துக்கமும் மாறி மாறி வரலாம். பிள்ளை, பெண்ணுன்னு ஒருத்தர் கிடையாது எனக்கு. நீ சொல்லு உன்னைப் பத்தி”.
அனந்தனைப் பற்றியும் கல்பா பற்றியும் சொன்னார் திலீப். அனந்தனின் வரப்போகும் கல்யாணம் பற்றிச் சொல்ல முற்பட்டு இப்போது வேண்டாம் என்று தோன்றச் சொல்லாமல் வைத்தார். கல்பா எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ப்ரபசராக வேலைக்கு சேர்ந்திருப்பதை சொல்ல நடாஷாவுக்கு மகிழ்ச்சி. அவளும் எடின்பரோவில் சோஷியாலஜி கௌரவ ப்ரபசராம்.
“அடுத்த மாதம் எடின்பரோ போகும்போது சந்திக்கிறேன்”.
நடாஷா சொல்லிக் கொண்டு போனவள் நிறுத்தி அறை வாசலில் பொருத்தியிருந்த பாதிக்கதவுக்கு மேல் வாசுவைப் பார்த்தாள்.
”இந்த வாசு உன் மகனா?”
திலீப் ராவ்ஜியை உற்சாகத்தோடு கேட்க, விரைவில் உறவாகப் போகிறான் என்று மட்டும் சொல்லி வைத்தபடி வாசுவை நோக்கினார். வாசு புரிந்து கொண்டதாகப் புன்னகைத்து திலீப் ராவ்ஜியை ஒரு நிமிடம் வெளியே அழைத்தான். உடனே வருவதாகச் சொல்லி திலீப் வேஷ்டி திருத்தியபடி வெளியே போனார்.
”அங்கிள் உங்க மிளகு உற்பத்தியாளர் சங்கத்திலே மாஸ்கோவுக்கு ஏற்றுமதி செய்யறதைப் பத்தி கேட்க வந்தாங்க மேடம். order மதிப்பு அரை மில்லியன் டாலர் கூட இல்லேங்கறதாலே யாரும் சிரத்தை காட்டலே. உங்களுக்கு இந்த மாதிரி விஷயம் எல்லாம் பிடிக்குமேன்னு தான் முன்னாலே சொல்லாம கூட்டி வந்துட்டேன். சாரி அங்கிள், மன்னிக்கணும்” என்றான் வாசு.
“வாசு நீ சரியான காரியம்தான் செஞ்சிருக்கே. நடாஷா எனக்கு முப்பத்தைந்து வருஷ ஃப்ரண்ட். தொலைச்சுட்டு தேடிண்டிருந்தேன். இப்போ தான் கிடைச்சா. இப்போ நாங்கள் வியாபாரம் பேசலே. பழங்கதை தான் பேசிட்டு இருக்கோம். Catching up with each other”.
”ரொம்ப சந்தோஷம் அங்கிள். எக்ஸ்போர்ட் டிரான்ஸாக்ஷனுக்கு நாளை அவங்க ஹோட்டல்லே போய் ஆர்டர் வாங்கிட்டு வந்துடட்டா? உங்க பாட்டத்திலே இருந்தே முழு டெலிவரியையும் பார்த்துக்க முடியும். அங்கிள், அப்புறம் நம்ம தெரிசா ஆண்ட்டி தோட்டத்திலே”.
“தோட்டத்திலே என்ன வாசு?”
“அப்புறம் சொல்றேன். ரொம்ப சுவாரசியமானது”.
வாசு சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல் துள்ளிக் குதித்து ஓடினான். அனந்தனுக்கு எப்படி இந்தப் பையனோடு உறவு வைத்துக்கொள்ள மனத்தில் ஈர்ப்பு வந்திருக்கும்? அது அவனுடைய தனி வெளி. அங்கே எனக்கென்ன இடம் என்ற நினைப்போடு வாசுவையும் அனந்தனையும் பற்றி வேறேதும் யோசிக்காதபடி உள்ளே வந்தார்.
”எல்லாம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா அமைஞ்சுப் போச்சு நடாஷா. இந்த வாசு எனக்கு வேண்டிய குடும்பம். Export Import enabling, cargo and delivery handling.. மிளகு ஏற்றுமதி இறக்குமதி சீர் பண்ணித்தர தரக்கன் குடும்பம் அது. தரக்கன் என்றால் ப்ரோக்கர். யூத மதப் பின்னணி. இருநூறு வருஷம் முன்பு இங்கே வந்த யூதர்களோட குடும்பங்கள் ஐந்து. இப்போ இருபத்தைந்து குடும்பம் உண்டு. அவங்க குடும்பப் பெயர் வஷு அல்லது வாஷ்-ன்னு நினைக்கறேன். ஹீப்ரூலே படைவீரன்னு அர்த்தமாம். இந்தியனாக வாசுன்னு மாத்திக்கிட்டாங்க. வாசு என்பது பகவான் விஷ்ணு”.
நடாஷா சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். வாசுவின் பாட்டி இன்னும் செயலாக இருப்பதாகவும், பழைய யூத கானங்களுக்கும் கதைகளுக்கும் அவளை விட அதாரிட்டி இல்லை என்றும் திலீப் ராவ்ஜி சொல்ல அவளை சந்திக்க ஆர்வம் காட்டினாள் நடாஷா.
”மாஸ்கோவிலே மிளகு எப்படி வியாபாரம் ஆகுது? தேடி வந்து வாங்கறவங்க ரஷ்யர்களா, எக்ஸ்பேட்ரியேட்டாக இந்தியாவில் இருந்து உத்தியோக, வியாபார நிமித்தம் போனவங்களா?”
திலீப் ராவ்ஜி ஆர்வத்தோடு விசாரித்தார். வியாபாரம் படிந்து வரும் மகிழ்ச்சி இல்லை அது. நடாஷாவோடு கொச்சியிலும் ஆலப்புழையிலும் நடாஷோவோடு அச்சு யந்திரப் பழமை பார்க்க, பேச பரபரப்பாக இயங்கிய பழைய நாட்கள் நினைக்கவே மனதுக்கு இதமானவை.
இங்கேயே உட்கார்ந்து பேசுவதை விட நடந்தபடி பேசலாமே என்றாள் நடாஷா. சரிதான் என்று திலீப் ராவ்ஜி வாசு தலை அரைக்கதவுக்கு மேல் தெரிய உள்ளே அழைத்தார். வாசு கையில் கார்ச் சாவியைக் கொடுத்து காரை வீட்டில் கொண்டு போய் விட்டு, பரமன் தாத்தாவிடம் சாவியைக் கொடுத்து விட முடியுமா என்று தயக்கத்தோடு கேட்டார் அவர்.
“ஐயோ மதாம்மா அவ்வளவு வேண்டப்பட்டவர்கள் அப்படீன்னு தெரிஞ்சிருந்தா நான் அவங்களை இன்னும் நல்லா கவனிச்சிருப்பேனே” என்று தயக்கம் உற்சாகமாகச் சொன்னான் வாசு.
“கூடுதல் கவனம் வேறே எதுவும் வேண்டாம் வாசு. ஆளுக்கு ஒரு குடை கொடு. போதும்” என்றார். வாசு ஓடிப்போய் இரண்டு புது மடக்கு குடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.
“என்ன எல்லாம் மாறி இருக்கோ, மழை திடீர்னு வர்றதும், அடிச்சு பெய்யறதும், நிக்கறதும், ஊமை வெய்யில் அடிக்கறதும் அடுத்த தூறல் மழை வந்து எட்டிப் பார்க்கவுமாக அதுமட்டும் எப்போதும் நிரந்தரம் தான்” என்றார் திலீப் ராவ்ஜி. விரித்துப் பிடித்த இரண்டு குடைகள் வாசலில் காற்றில் ஆடின.
தெருவில் இறங்கி நடந்தபோது தான் திலீப் ராவ்ஜிக்கு அந்தக் காரியத்தில் இருக்கப்பட்ட சிரமம் புலப்பட்டது.
“நடாஷா இந்த வீதி நினைவு இருக்கா?”
ஆலப்புழைக்கு ஆய்வு சம்பந்தமாக யாரையாவது சந்திக்கப் போக ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் வந்த வீதி இது.
தெரு முழுக்கத் தோண்டிப் போட்டு அங்கங்கே மரப்பலகை வைத்து இரண்டு மண்குவியலுக்கு நடுவே போய்வர ஏற்பாடு செய்திருப்பதை திலீப் ராவ்ஜி காட்ட நடாஷா சொன்னாள் – ஓ இந்த மரப்பலகை பாலங்கள் இன்னும் இருக்கா? ஆலப்புழையிலும் கொச்சியிலும் கூட கடை வீதியில் மழை பெய்த அப்புறம் இந்தப் பலகைகள் ஒவ்வொன்றாக தெருவில் சகதிக்கு மேலே வந்து உட்காருமே”.
“முப்பத்தைந்து இல்லை, இன்னும் ஐம்பது வருடம் போனாலும் இந்தத் தெருவும் அண்டை அயலும் மாறப் போவதில்லை” என்றார் திலீப்.
“ஆலப்புழையிலா இங்கேயா நான் தங்கியிருந்த ஹோட்டல்? நட்சத்திர ஓட்டல் ஒன்றும் இல்லைதான். ஆனால் அங்கே ஊதுபத்தி கொளுத்தி வைத்திருப்பதும், வாசலில் குவியலாகக் கிடக்கும் செருப்புகளும் மேஜை நாற்காலி போட்டு சதா கழுத்துப்பட்டி அணிந்து உட்கார்ந்திருக்கும் ஹோட்டல் மேனேஜரும் நினைவு வருது” என்றபடி ஒரு மரப் பாலம் கடந்து திலீப் ராவ்ஜியோடு வந்து சேர்ந்தது அதே பழைய ஹோட்டல் தான்.
கழுத்துப்பட்டியோடு அந்த நட்சத்திரமில்லாத ஹோட்டல் ரிசப்ஷனின் அதே மேனேஜர் கிழன்று போய் உட்கார்ந்திருந்தவர், திலீப் ராவ்ஜியை குறும்பாகப் பார்த்த பார்வையில் ’இன்னும் ரஷ்யாக்காரி பிரேமம் மாறலியா ராவ்ஜி அதுவும் ரெண்டு பேரும் மெனொபாஸ் வந்த அறுபது எட்செட்ரா வயசுப் புள்ளிகள்’ என்ற நினைப்பு எழுதியிருந்தது.
திலீப் அடக்க முடியாமல் சிரிக்க. நடாஷா எப்படியோ அந்த அபத்தம் சரியானபடி அர்த்தமாக அவளும் வாசல் மேஜையில் ஓங்கித் தட்டிச் சிரித்தாள். கிழவரான மேனேஜர் மெய்யெல்லாம் பதறி தான் ஏதோ கண்ணசைவோ கையசைவோ இவர்களை அவமதிப்பதுபோல் செய்திருப்பதால் சிரித்தபடி கழுத்தை அறுக்க மதாம்மா சாப்பாட்டு ரெஸ்ட்ராண்ட் அதிபர் ராவ்ஜியை இத்தனை வருடம் கழித்துக் கூட்டி வந்திருக்கார் என்று தோன்றியிருக்கலாம்.
“டையை அவிழுங்க” என்றார் திலீப் அவரைப் பார்த்து. ”ரிலாக்ஸ்ட் ஆக இருங்களேன்” என்றாள் நடாஷா. இரண்டு பேரும் சிரித்து அவருக்குக் கையாட்டி வெளியே இறங்கினார்கள்.
ஜான் கிட்டாவய்யர் சைவ உணவகம் நியான் விளக்குப் போட்ட பெரிய பெயர்ப் பலகை அழைக்க, நடாஷா திலீப் ராவ்ஜியை ஆர்வத்தோடு பார்த்தாள்.
“மசாலா தோசை, உனக்கு பிடிச்ச சவுத் இந்தியன் டிஃபன். சாப்பிடலாம் வா. இது சுத்தமான ஓட்டல். உணவும் வயிற்றைப் பாதிக்காது. நல்லாவும் இருக்கும். என்னோட ஹோட்டல் தான் இது”.
திலீப் ராவ்ஜி உற்சாகமாகச் சொல்ல, வாவ் என்றாள் நடாஷா.
“என்ன எல்லாம் இத்தனை வருஷம் சாப்பிடலியோ அதெல்லாம் இங்கே இன்னிக்கு தின்ன வேண்டியதுதான்” என்று உற்சாகமாகப் படி ஏறினாள் நடாஷா.
திலீப் நடந்து வருவதைப் பார்த்து கேஷ் கவுண்டரில் இருந்த காசாளர்கள் தொடங்கி, ஆர்டர் எடுக்கும் பெண்கள், டேக் அவே நிர்வகிக்கும் பெண்கள் என்று பரபரப்பாக வணக்கம் சொல்லி கூடவே ஒரு அடி நடந்தார்கள்.
“சும்மாதான் ரொம்ப வருஷமா பார்க்காத சிநேகிதி, மாஸ்கோவிலிருந்து வந்திருக்காங்க. மசால் தோசை சாப்பிடலாம் வான்னு கூட்டி வந்தேன். அதிலே ஈடுபாடு அதிகம்” என்ற திலீப்பிடம் ”சார், சாயந்திரம் தான் தாத்தாவுக்கு ஸ்பெஷல் நெய் ரவா ட்ரைப்ரூட் மசாலா தோசை அனுப்பினேன். மேடத்துக்கு அதே போடச் சொல்லட்டுமா என்று உற்சாகமாக அறிவித்த பெண் சொன்ன தோசை, ட்ரைப்ரூட் இல்லாமல் உடனே சாப்பிடணும் என்றாள் நடாஷா.
”மாடியில் ஏர்கண்டிஷன் ஹால் இருக்கு அங்கே போய் சாப்பிடலாம்” என்றார் திலிப்.
“வேணாம், இந்தக் கூட்டத்தில் இருந்தே சத்தத்துக்கு நடுவே ஸ்பெஷல் தோசை சாப்பிடுவோம். அந்தக் காலத்தில் அப்படித்தான் சாப்பிட்டேன்” என்று துணி விரித்த பெரிய மேஜைக்கு அருகே புது நாற்காலிகள் இரண்டு இடப்பட்டு நடாஷாவுக்கு வரவேற்பு நல்கப்பட்டது.
ஸ்பெஷல் வெங்காய நெய் ரவா மசாலா என்று தடங்கல் இல்லாமல் பெயரை சரியாக உச்சரித்த மகிழ்ச்சியில் ஊவென்று சீழ்க்கை அடித்த நடாஷாவை திலீப்பையும் ஓட்டல் உபசாரகர்கள் தவிர வேறு யாரும் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.
“வீட்டில் வேறே யார் இருக்காங்க?” என்று திலீப் ராவ்ஜியை விசாரித்தாள் நடாஷா. எங்கப்பா என்றார் அவர். நூற்றுப் பத்து வயசு என்றார் அடுத்து.
கையில் பிய்த்து எடுத்த தோசையை தட்டில் வைத்து விட்டு ”incredible அதெப்படி சாத்தியம்?” என்றாள் நடாஷா. ”அதுவும் அவர் நாற்பது வருடம் முன்னால் ஒரு விமானத்தில் தில்லியில் இருந்து பம்பாய் வந்து கொண்டிருந்தபோது காணாமல் போய் போன வாரம் திரும்பி வந்திருக்கார்”.
திலீப் சாதாரணமாகச் சொல்ல, நடாஷா உடனே கூறினாள் –
“எங்க அப்பாவும் கூட சித்தப்பிரமையாலே பாதிக்கப்பட்டார்னு சொன்னேன் இல்லையா? டூமா போகிற வழியிலே காணாமல் போய் முப்பது வருஷம் கழிச்சு போன மாதம் திரும்பி வந்தார். ஆனால் அவர் மனநலம் முழுக்க இழந்து யார் கண்ணிலும் படாமல் சைபீரியாவின் இருள் பிரதேச மனநல மருத்துவ மனைகளிலே காட்டுத்தனமான சிகிச்சை எடுக்க வைக்கப்பட்டார். போன மாதம் யார் சொன்னாங்களோ அவருக்கு எல்லாம் சரியாச்சுன்னு அனுப்பி வச்சுட்டாங்க. திரும்பி வரமாட்டேன்னு பிடிவாதம். தொண்டு கிழவரைக் குண்டுக்கட்டா கொண்டு வந்து போட்டுட்டாங்க. வந்ததிலே இருந்து யாரோடயும் பேசாமா காப்பி காப்பி காப்பி என்று கேட்டு வாங்கிக் குடிச்சுக்கிட்டே இருந்தார். தேவதைகள் லெனினோடு ஆடிக்கிட்டிருக்காங்க என்று எழுந்து சுவரைப் பார்த்துக் கைதட்டியபோது குழைந்து விழுந்து இறந்து போனார். அது போன மாதம் கடைசி தினத்தில்”.
கேட்கவே பரிதாபமாக இருக்கு என்றார் திலீப் ராவ்ஜி. மறுபடி தோசையின் சுவையில் அமிழ்ந்தாள் நடாஷா.
”மாஸ்கோவிலே இந்திய உணவு கிடைக்குமா என்று விசாரித்தார் திலீப் ராவ்ஜி.
”நார்த் இண்டியன் மகாராஜா ஐட்டம் எல்லாம் கிடைக்கறது. சவுத் இந்தியன் அதுவும் நீ இங்கே பழக்கம் பண்ணி விட்டியே பொங்கல், இட்டலி, தோசை, வடை இதெல்லாம் கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம். சொல்லப்போனா நான் இங்கே வந்ததே என்னோட ஒரு சவுத் இண்டியன் வெஜிடேரியன் ஓட்டல் கஸ்டமருக்குத்தான். அவர் கொஞ்ச நாளாக பொங்கல்லேயும் வடையிலும் அப்படியே உடைக்காமல் வாசனை, காரம் கூட்ட மிளகு போடுவார். அதுவே அவர் ஹோட்டல் ஸ்பெஷலிட்டி. இப்போ ரெண்டு மாசமா திடீர்னு மிளகு எல்லாம் சமைத்த அப்புறம் புளிப்பு இல்லே இனிப்பா தட்டுப்படுதாம். அதுனாலேயே மிளகு வேண்டாம்னு வச்சிருக்காராம். எத்தனை நாள் வேண்டாம்னு வைக்கறது. கேக்கற கஸ்டமர்களுக்கு சேர்க்காட்ட வருமானம் இல்லேன்னார். அதான் பெப்பர் சப்ளை இங்கே இருந்து ஆரம்பிக்கலாமான்னு யோசனை”.
”இப்போ எங்கே இருந்து வாங்கறீங்க” திலீப் கேட்டார்.
“இந்தோனேஷியாவில் இருந்து வாங்கறது. சைஸும் பெரிசு. என்னை மாதிரி புஷ்டியான மிளகு. விலையும் கொள்ளை மலிவு அதான் அங்கே பெரிய ஆர்டர் கொடுத்து தொடர்ந்து வாங்கிட்டு இருக்கோம். மிளகு வாங்கினா ஏலக்காய் 20% விலையிலே தள்ளுபடி”.
”அங்கே இருக்கற இந்தியக் குடும்பம் இதே கம்ப்ளெயிண்ட் சொல்றாங்களா?” திலீப் கேட்டார்.
“இல்லே அவங்க யாருக்கும் இது எப்படி இருக்குன்னு நின்னு உட்கார்ந்து சாப்பிட்டு ஃபோன் பண்ணி கம்ப்ளெயின் பண்ண நேரம் இல்லே. அவங்க எல்லாம் ஒண்ணு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர், network இஞ்சினியர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஐந்து பேர் இருக்கறவங்க. இல்லே சிறு குடும்பம், கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலை பார்க்கறவங்க”.
திலீப் ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னார் – ”வேறே ஏதோ குறுக்கு விவசாயமாக, cross breed ஆகியிருக்கும். மிளகு கொடி படர்ந்த மரம் அல்லது தரையிலே பக்கத்துலே வளர்ந்த பயிர் இதுலே ஏதாவது கலந்து ருசியை மாத்தி இருக்கும். சர்க்கரைவள்ளி பயிர் பண்ணியிருக்கா அந்த தோட்டத்திலே? அப்போ மிளகும் இனிக்கும். வள்ளிக்கிழங்கும் உரைக்கும். நானா இருந்தா, அந்தத் தோட்டத்திலே மிளகு கொடி சார்ந்து படர, மரம், வேறே புதர்ச்செடி, கிழங்குச் செடி எதுவும் வேணாம்னு எடுத்து விட்டுட்டு, மரப் பிளாச்சுப் பட்டையை அடிச்சு நிறுத்தி பின்பலம் கொடுத்திருப்பேன். அப்படியும் பிரச்சனை இருந்தால் மிளகு சாகுபடியை வேறே நிலத்துக்கு எடுத்துப் போயிருப்பேன்” என்றார்.
நடாஷா மூக்குக் கண்ணாடியைக் கழற்றி சாப்பாட்டுத் தாலத்துக்குப் பக்கம் வைத்தாள். ட்ஷ்யூ பேப்பரை உறையிலிருந்து மெல்ல எடுத்து ஒதிகொலன் வாசனையை ஒரு நிமிடம் நாசியில் உள்ளிழுத்து அனுபவித்தாள்.
”திலீப், கடைக்கு வந்து சுக்கும் மிளகும் நூறு க்ராம் வாங்கப் போறவனுக்கு எந்த வயல்லே எப்போ யார் பயிர் பண்ணினதுன்னு தெரிஞ்சுக்கறதே தேவையில்லாத தகவல். நல்ல சரக்கா கொடுக்க இன்னும் கொஞ்சம் விலை தரணும் என்று வச்சுட்டா போதும். நீ என் பீட்டர்ஸ்பெர்க் கடைக்கும் மாஸ்கோ கடைக்கும் விளாடிவொஸ்டாக் கடைக்கும் மிளகு, ஏலம், கிராம்பு, லவங்கம் ஒரே ஆர்டரா எடுத்துக்க. பிரிச்சு அனுப்பிடு. இருக்கப்பட்ட காண்ட்ராக்ட் அடுத்த மாசம் ஒண்ணாம் தேதி முடிவுக்கு வருது. அப்புறம் உன் காண்ட்ராக்ட் போட்டுக்கலாம். எப்படியும் அரை மில்லியன் யு.எஸ்.டாலர் வரும் மதிப்பு”.
அம்பலப்புழையில் ஒரு கிழவர் மற்ற கிழவர்களையும், வாடிக்கையாளராக ஒரு அறுபதுக்காரி ரஷ்யப் பெண்ணையும் புது வியாபாரத்துக்காக தயார்ப்படுத்தி ஐம்பது லட்சம் டாலர் காண்ட்ராக்ட் வரப் போகிறது. கிழவர்களை யாரும் எள்ளி நகையாட வேண்டாம். அனந்தனுக்குத் தெரியும். வாசுவுக்கும் தெரியட்டும். திலீப்புக்கு மனம் நிறைந்து இருந்தது. எங்கிருந்தோ திரும்பி வந்த நடாஷாவை நன்றியோடு பார்த்தார் அவர்.
ஆகாரம் பண்ணி முடித்து நேரம் பார்த்தால் ராத்திரி எட்டரை மணி.
“நடாஷா, நான் உன்னை உங்க ஹோட்டல்லே கொண்டு விட்டுடறேன்” என்றார் திலீப். தெருவில் அந்த நேரத்திலும் கூட்டம்.
“எந்தினாணு அவிடெ திரக்கு?” என்று விசாரிக்க ”சாரதாம்ம வீட்டுலே ஏதோ மேஜிக்காம்” என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விழுந்தடித்து ஓடினான் கேட்கப்பட்டவன்.
எதிரேதான் சாரதா வீடு. இங்கிலாந்து போயிருந்து, அங்கிருந்து தில்லி வழியாக இன்றைக்குத்தான் வந்திருக்க வேண்டும். பார்த்துட்டு போகலாம். நடாஷாவையும் கூட்டிக் கொண்டு வாசல் படி ஏறினார் திலீப் ராவ்ஜி.
வீடு முழுக்க நல்ல மிளகு வாசனை. வாசலில் க்ரோட்டன்ஸ் வைத்திருக்கும் சிறு தோட்டத்தில் முழுக்க கொடிவிட்டுப் படர்ந்திருந்த மிளகும் அதே போல் நல்ல வாசனை பரத்திக் கொண்டிருந்தது.வாசலில் பிஷாரடி நின்றிருந்தார்.
”சாவக்காட்டு வயசன் புளிச்ச காடியை அமிர்தம்னு குடிச்சுட்டு துப்பின இடம் இது. அந்த மண்ணுக்கு திடீர் திடீர்னு அபூர்வ குணம் காணும். இப்போ வீட்டையே பிடிச்சு இறுக்கறதா மிளகு வள்ளி pepper creeper ஷணத்துக்கு ஷணம் கூடிண்டே போறது” என்றார் அவர் திலீபை பார்த்து.
“பீஜம் கண்டு பிடிச்சு வெட்டினா போதும்” என்றபடி வாசல் படிக்குக் கீழே பார்க்கச் சொல்லி யாருக்கோ கட்டளை இட்டுக் கொண்டிருந்தார். சாரதா தெரிசா வீட்டுப் பணிப்பெண் சுகிர்தா அந்தக் கட்டளையை ஏற்று வாங்கி வேறு ஒரு கூட்டத்திடம் தெரிவிக்க பச்சையும் ஈரமும் கருத்த உள்வேருமாக பீஜம் தட்டுப்பட்டது. அப்புறம் மிளகுக் கொடிகள் பற்றுவிட்டு விழத் தொடங்கின.
பிஷாரடி பிறகு பார்க்கலாம் என்று திலீப் ராவ்ஜியிடம் சைகை செய்து விட்டு இறங்கிப் போனார்.
தெரிசாவின் வேலைக்காரப் பெண் சுகிர்தா கிரீச்சிடும் குரல் வாய்த்தவள், கீச்சிட்டாள்- ”போங்க போங்க இங்கே என்ன ஆடிக்கிட்டா இருக்காங்க”.
அவுத்துப் போட்டுட்டு ஆட்டம் என்று யாரோ கூட்டிச் சேர்த்தார்கள். உடனடி சிரிப்பு உருண்டு அலையாக எழுந்து வந்தது. சுகிர்தா பற்று விலகி வீழும் மிளகுக் கொடியில் பறித்தெடுத்த ஒரு மிளகை வாயிலிட்டு மென்றாள். உடனே பசுமாடு பேசுவது போன்ற குரலில் அவள் எல்லோரையும் கலைந்து போகச் சொன்னாள். அது இங்க்லீஷில் இருந்தது.
சாரதா தெரிசா கூட்டத்தைப் பார்க்காமல் திலீப் வந்திருப்பதைக் கூடப் பார்க்காமல் வீட்டுக்குள் போய் கதவைச் சார்த்தி விளக்குகளை அணைத்து விட்டு நித்திரை போய்விட்டாள். மிளகுக்கொடி மறுபடி காம்பவுன்ட் சுவரில் நீண்டு படருமா என்று காத்திருந்த சிலர் மனமே இல்லாமல் புறப்பட்டுப் போனார்கள். சுகிர்தாவை மறுபடி பசுமாட்டுக் குரலில் பேச வைக்க அவளை அவர்கள் தேட, அந்தப் பெண் இறங்கி வீட்டுக்குப் போயிருந்தாள்.
“நாளைக்கு உனக்கு சாரதாம்மாவை பரிச்சயப்படுத்தி வைக்கறேன்” என்றபடி திலீப் ராவ்ஜி நடாஷாவை அழைத்துக்கொண்டு அடுத்த தெரு திரும்ப, நடாஷா தங்கியிருந்த ஹோட்டல் ஸ்ரீகிருஷ்ணா வெளிச்சத்தின் நடுவே பிரகாசித்திருந்தது.
அவனை அறைக்கு வரச் சொன்னாள் நடாஷா.
“ஒரு பியர் சாப்பிட்டுப் போ என்னோட உட்கார்ந்து. இன்னிக்கு நல்லா ரிலாக்ஸ் பண்ணுவோம் வா”
பார் மூடி இருப்பாங்க என்றார் திலீப் கைக்கடியாரத்தைப் பார்த்தபடி. ”நோ ப்ராப்ளம், ரூம் சர்வீஸ் கொண்டு வருவாங்க கூப்பிட்டு விட்டா” என்றாள் நடாஷா.
நடாஷா சொல்லியபடி டெலிபோனில் குளிர்ந்த பியருக்கு ஆர்டர் செய்தாள்.
”டயாபடீசும், ரத்த அழுத்தமும் இருக்கட்டும். நாளைக்குக் கூடுதல் மருந்து எடுத்துக்கொள்வோம்” என்று தீர்மானித்து அந்த மூன்று நட்சத்திர ஓட்டலின் விசாலமான அறையில் இருவரும் அகல்யாவைப் பற்றியும் செர்யோஷாவைப் பற்றியும் செர்யோஷாவின் தம்பி புக்கின் பற்றியும் அதுவும் இதுவும் தகவல் பரிமாறிக் கொண்டார்கள்.
அடுத்த பியருக்கு ஆர்டர் செய்தபோது ஜின்னும், ரம்மும் கூடவே சேர்த்துச் சொன்னாள் நடாஷா. கொண்டு வந்து கொடுத்த ஹோட்டல் பையன் ஜான் கிட்டாவய்யர் சைவ உணவுச்சாலையில் வேலை பார்த்திருந்தவன் என்பதால் திலீப் ராவ்ஜிக்கு அந்த ராத்திரிப் பொழுதில் சல்யூட் வைத்தான்.
“அட நான் சல்யூட் பண்ண விட்டுட்டேனே” என்று நடாஷா திலீப்பின் தலையைத் திருப்பி, அவன் உதட்டில் முத்தமிட்டாள். எதிர்பாராத சினிமாக் காட்சி பார்க்கக் கிடைத்த பையன் தயங்கி நின்றான். என்ன, வயசானவர்கள் காதல். இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்து விடும். முழுக்க காணக் கிடைக்குமோ என்ற நப்பாசை அவன் நிற்பில் தெரிந்தது.
சரி நீ போ என்று திலீப் ராவ்ஜி அவனை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே அனுப்பி வைத்தார். அவன் போனதும் திலீப் ராவ்ஜியை தன் மடியில் சாய்த்து மறுபடி முத்தமிட்டாள் அவள்.
”இதுக்கு அப்புறம் என்ன?” என்று திலீப் ராவ்ஜி கேட்டுவிட்டு சிரிக்க, ”இந்த வயசுலே இதுக்கு அப்புறம் வேறே வேணுமா, இதுவே போதாதா?” என்றாள் நடாஷா. என்றால் வா, எங்கே முடியும்னு பார்க்கலாம். இன்னிக்கு ரிலாக்ஸ் பண்ற நாள் என்றபடி அவனை வாரியெடுத்து கை இரண்டில் சுமந்து படுக்கையில் போட்டு அருகில் கிடந்தாள். கண்கள் மூடியிருந்தன
திலீப் சட்டைப் பையில் ஏதோ சத்தம். பைக்குள் எப்படியோ போயிருந்த தெரிசா தோட்டத்து மிளகுக் கொடி ஒன்று மெல்ல சட்டைப் பையில் இருந்து எட்டிப் பார்த்து இறங்கி, படுக்கையின் குறுக்கே ஓடிச் சுவரில் படர ஆரம்பித்தது. அகல்யாவுக்கு நீ பண்றது பிடிக்கலே. வேண்டாம் என்றது மனசு.
திலீப் ராவ்ஜி எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியேற வாசலில் இன்னும் நின்றிருந்த பையன் அவரையே பார்த்தபடி இருந்தான்.
மிளகுச் செடி வெளிச்சுவருக்குப் படர்ந்திருப்பதை யாரும் பார்க்கவில்லை.
***