- பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1
- பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2
- பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள்
தமிழாக்கம்: மைத்ரேயன்

சனிக்கிழமை, மார்ச் 24.
மாலை 7.13 மணி.
“ஸாரி, ஸாரி, ஸாரி,” என்றவாறே அவருடைய இசைக் கூடத்தின் இரட்டைக் கதவுகளோடு மல்லாடி விட்டு சாரா நுழைகிறாள்- முதல் கதவு வெளிப்புறம் திறப்பது, இரண்டாவது உள்நோக்கித் திறக்கும். “எங்கள் காரை நிறுத்த இடம் தேடிப் பிடிக்கவே யுகக்கணக்காச்சு, அப்புறம் பார்த்தால், அங்கேயிருந்து இந்தக் கட்டடம் எத்தனை மைல் தூரம்.” உள்ளே நுழையும்போது ஒரு பெடல் பெட்டி, கான்வஸ் தோள்பை, தன் பணப்பை எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் தடுமாறியபடி அவள் வருகிறாள். அவள் பின்னே வருகிற சிறுமி எதுவும் சுமக்கவில்லை. “அலீஸா உட்கார்,” என்கிறாள். பின், சிறுமி உட்கார்ந்தாளா என்று கவனியாமல், பெட்டியை, தோள்பையை, பணப்பையைக் கீழே வைக்கிறாள், முன்னால் நகர்ந்து அவனை ஒரு முறை துரிதமாக அணைக்கிறாள், அது வாசனைத் திரவியத்தின் இருப்பைக் காட்டிக் கொடுக்கிறது.
“ஆல்பெர்ட் ஒம்,” என்றவள், சற்றுப் பின்னே நகர்ந்து அவரை எடை போடுவது போல பார்க்கிறாள்.
“ஸாஷா ஸில்பர்,” என்கிறார் அவர், ஆனால் அவள் வந்ததை அவரால் இன்னமும் நம்ப முடியவில்லை.
“அது இப்ப மூர். ஸாஷா மூர். அனாதி காலத்திலேருந்தே நான் ஸாஷா ஸில்பரா இருக்கல்லை!”அவள் சிரிக்கிறாள்.
அந்தச் சிரிப்பு.
“எத்தனை நாளாச்சு, ஆல்பெர்ட்? மிலியன் வருஷமாயிருக்குமா?”
“வர ஜூன்ல இருபத்திரண்டு வருஷமாகியிருக்கும்.”
“இருபத்திரண்டு வருஷங்களா,” அவளும் திரும்பச் சொல்கிறாள், பிறகு சன்னமாக, “ஆமாம், இருக்கும்.”
இயல்பாக மறுவினை செய்யத் திணறும் ஆல்பெர்ட், மௌனமாக இருக்கிறார். இது மிகவுமே அதிகப்படி. ஸாஷாவும், அவளுடைய நினைவுகளும், இரண்டாக அறைக்குள் நுழைந்து விட்டது போலவும், எங்கே பார்வையைச் செலுத்துவது என்று புரியாதது போலவும் உணரும் ஆல்பெர்ட்டால் தன்னை அங்கு பொருத்திக் கொள்ள முடியவில்லை. அவர் உடனே நினைவு கூர்ந்தபடி, அவளுடைய சற்றே வினோதமான உடல் சைகைகளைக் காணவும் செய்கிறார். காவியப் பாடலைப் பாராயணம் செய்வது போன்ற, கவனம் பிசகிய அவளுடைய பேச்சுமுறையில் விழும் சொற்கள்: யுகங்கள், மைல்கள், அனாதி காலம். சிரித்தபடியே மன்னிப்புக் கோரும் அவள் வழக்கம். எப்போதுமே சிரித்துக் கொண்டே மன்னிப்புக் கோரும் விதம்.
“அப்ப,” ஒரு கணம் கழித்து அவள் துவங்குகிறாள்.
“அப்ப.
“இது வந்து… என்ன சொல்ல… நான் என்ன சொல்ல வரேன்னா,” என்று தடுமாறுகிறாள், பிறகு அர்த்தத்தைக் கொணர முயல்வதை நிறுத்திக் கொள்கிறாள். “ஏயப்பா,” தன் தலையைச் சிறிதே வேகமாக ஆட்டியபடி சொல்கிறாள்.
ஈகொர் ஸோர்கினைப் பற்றிய அவருடைய நினைவுகளில் அவள் ஒரு பகுதி. ஸோர்கின் அவருடைய முன்னாள் ஆசிரியர், கடைசி ஆசிரியரும் கூட. நகரின் மேற்குப் பகுதியின் மேல் பகுதியிலிருந்த இசைக் கூடத்தில் அந்த பாண்டித்ய வகுப்புகள் நடந்தன. இவரின் பதினெட்டு, பத்தொன்பதாவது வயதுகள். வாழ்வின் அந்தக் கட்டம்.
அதை அவரால் இப்போதும் பார்க்க முடிந்தது. யாரும் பயன்படுத்தாத அந்த அபாரமான பளிங்காலான மாடிப்படிகள், தீ பரவுதலைத் தடுக்கவென்று பொருத்தப்பட்ட கதவுகளுக்குப் பின்னே இருந்த, மடக்கி மடக்கிக் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகளில் ஓட்டமாக ஓடி ஏறி இறங்குவதையெ எல்லாரும் விரும்பிச் செய்தார்கள். அவர்கள் எல்லாருமே எப்போதும் ஓடிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. அப்படி என்ன அவசரம்? மேல்தளத்துக்கு அங்கிருந்த ஒரு ரகசியப் பாதை. துறவி மடத்துச் சிறு அறைகள் போல இருந்த பயிற்சி அறைகள். படிகளின் பக்கவாட்டுக் கைப்பிடிகளின் மீது பல்லாண்டுகளாக மறுபடி மறுபடி பூசியதால் அடுக்கடுக்காகப் படிந்த கருப்பு நிறப் பூச்சு, நீராவியால் உஷ்ணப்படுத்தப்பட்ட அந்தக் கட்டடத்தால் மென்மையாகச் சூடுபடுத்தப்பட்ட பூச்சு, நம் கட்டைவிரல் நகத்தை அழுத்தினால் அர்த்தசந்திர வடிவத்தில் சுவடைக் காட்டும்.
அவர் அந்தப் பண்டிதரின் வகுப்புகளை நினைவு கூர்ந்தார், ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அவை நடத்தப்பட்டன. அவரும், அவருடைய நண்பர்களும் 501 என்று இலக்கமிட்ட கதவின் முன், வெளியே உட்கார்ந்து காத்திருப்பார்கள். ஆமாம், அவர்கள் எப்படி இருந்தனர் என்பதைச் சுட்ட அந்தச் சொல் பயன்பட்டது. நண்பர்கள். ஸாஷா ஸில்பர்; பெஞ்சிரோ நக்கமூரா; ஜோ டோர்ரெஸ். சில சமயம், அவர்கள் அந்தக் கூடத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த இசைக்கருவிகளுக்கான வலுவான தாங்கிகளால் பாதி மறைக்கப்பட்டு அமர்ந்திருக்கையில், ஸாஷா அவளுடைய தலையை அவரது தோள்மீது சிறிது நேரம் சாய்த்திருப்பாள். இது அவர் மனதில் சிறு கலக்கத்தை விட்டுச் செல்லத் தவறியதில்லை. ஆனால், அவள் பலரின் தோள்கள் மீது இப்படித் தலை சாய்த்து அமர்ந்திருக்கிறாள்- பென், ஜோ ஆகியோரும் இதில் உண்டு. அவளுக்கு அப்படி உடலால் நம்பிக்கை தெரிவிக்கும் வழக்கம் படிந்திருந்தது.
501 ஆம் அறையின் கதவு ஒருவழியாக இறுதியில் திறந்த பின், அவர்கள் அந்த அறையில் நுழைகையில், அடைசலான, ஏதோ புகைக்குழாயிலிருந்து வரும் முடைவளிமா போன்ற நெடியை உணர்வார்கள், ஆனால் அவர்கள் யாரும் ஸோர்கின் அப்படி ஒரு புகைக்குழாயைப் புகைத்ததைப் பார்த்ததில்லை. அந்த நெடி அவர்களுக்கு இன்னும் புரியாத விஷயங்கள் பல இருந்தன என்பதை உணர்த்தும். அவர்களுடைய ஆசான், வகுப்பில் பங்கெடுக்க வந்தவர்களில் ஐந்து பேர்களை, ஒவ்வொருவராகத் தன்னிடம் அழைத்து, மற்றவர்களுக்கு வாசிக்கச் சொல்வார்: பல்வேறு திசைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பியானோ மாணவர்கள் அங்கு வந்திருந்தனர்- இண்டியானா மாநிலத்திலிருந்து பெய்ஜிங் வரை பரந்த தேர்வு அது. ஒவ்வொருவரின் நிகழ்த்தலுக்குப் பிறகும், விமர்சனத்துக்காகச் சிறிது நேரம் ஒதுக்கப்படும். விமர்சனம் தெளிவாக விரித்துரைக்கப்பட்டு, கறாராக, நுணுகி நோக்கிய தெளிவோடு கொடுக்கப்படும். பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுகளில் இருந்ததால், தமக்குள் கொள்ளும் அதே தீர்க்கமான விமர்சனத்தை, அவர்களால் ஒருவருக்கொருவரிடமும் பரிமாறிக் கொள்ள முடிந்தது. எதிர்காலத்துக்காக அவர்களால் காத்திருக்க முடியவில்லை.
முந்தைய சனிக்கிழமை, மார்ச் 17 அன்று, பயிற்சிக் கூடத்தின் தொலைபேசி மணி அடித்தது – அப்போதுதான், ஆறு மணிக்கு அவரிடம் கற்க வரும் லியான் லியாங், “மூன்லைட்” ஸொனாட்டாவின், மொத்தம் உள்ள 603 ஆஸ்டினாட்டோ ட்ரிப்லெட்ஸ்களில் முதலாவதை வாசிக்கத் துவங்கினான். லியான் எல்லாருக்கும் தெரிந்த ஒரு சாஹித்தியத்தை வாசிப்பதைத் தடுக்க அவர் முயன்றிருந்தார், ஆனால் திருமதி லியொங் அதைத்தான் வலியுறுத்தினார். அவருக்கு அதன் சந்த இசை எப்போதுமே பிடித்த ஒன்றாக இருந்தது என்று அவர் சொன்னார்.
அதென்னது சந்தம்? லியான் தன் விரல்களை உயர்த்தி, இறக்கி பியானோவின் விசைகளைத் தட்டும்போது ஆல்பெர்ட் சில சமயங்களில் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். அந்த சாஹித்தியத்தின் அருமையே அதில் எந்த சந்த இசையும் இல்லை என்பதுதானே! அது சந்தங்களின் சிறுபிள்ளைத்தனத்தையெல்லாம் தாண்டிப் போயிருந்ததுதான்! ஆர்பெஜியோக்களாக வாசிக்கப்பட்ட லிடியன் தொகுப்புகளுக்கு மாற்றாகச் சில கணங்கள் இசை எதிரோட்டங்களை வைத்து ஒரு தாக்கத்தைக் கொணர்கிறது! சந்த இசையாமே! பாடிப் பாருங்கள், முடிகிறதா பார்க்கலாம்! ஆ-ஹா! அதில் சந்த இசை எதுவும் இல்லை என்று அவர் உறுதி கொடுத்தார்.
அவர் வாழ்வில் ஒரு கட்டம் இருந்தது, அப்போது இந்த எண்ணங்களை உரக்கவே சொல்லி இருப்பார். ஆனால் பிறர் மனத்தைப் புண்படுத்தாமல் எப்படி இருப்பதென அவர் கற்றுக் கொண்டிருந்தார், இன்னமும் கற்றுக் கொண்டுதான் வருகிறார். இப்போது அவரிடம் சில செயல்முறைகள் இருந்தன. அவர் ட்ரிப்லெட்களை எண்ணுவார். 603 என்ற எண்ணைத் தவிர வேறெதாவது வந்தால் அது வரவேற்கப்பட்ட கவனத் திருப்பம், லியோனை அந்த சாஹித்தியத்தை மறுபடி வாசிக்கச் சொல்வார். ஆனால், இன்னுமொரு தடவை இப்படி ‘நல்ல’தனமாக வாசிக்கப்படும் இசைச் சுரத்தைக் கேட்கவோ, அல்லது யாருடனாவது தொடர்பு கொள்வதோ தனக்கு இயலாது என்று சில கணங்களில் அவருக்குத் தோன்றும்.
வகுப்பு முடிந்த போது, அந்தப் பள்ளியின் தொலைபேசியில் செய்தி வந்திருப்பதைச் சுட்டும் விளக்கு விட்டு விட்டு மின்னுவதைப் பார்த்தார், அந்தத் தொலைபேசி இடையில் ஒலித்து அழைத்ததை நினைவு கொண்டார். அவரைச் சனிக்கிழமையன்று யார் கூப்பிடுவார்கள்? அவர் சாத்தியமான நபர்களை எண்ணிப் பார்த்து ஒதுக்கினார். பல்கலையிலிருந்து வழக்கமாக வரும் அழைப்பாக இருக்காது- வார இறுதியில் அது சாத்தியமில்லை. அவருடைய சக ஆசிரியர்களாக இராது. யாராவது நண்பராக இருக்கலாம்.
அவர் செய்தியை ஒலிக்க விட்டார்.
மௌனம், பிறகு ஒரு மெல்லிய சிரிப்பு, பிறகு ஒரு ‘ஹெல்லோ? ஹெல்லோ, ஹாய், ஆல்பெர்ட்? ஆல்பெர்ட் ஒம்?”
அவர் ஸ்தம்பித்து நின்றார்.
“இது யாருன்னு உங்களால ஊகிக்க முடிகிறதா?”
அவளுடைய வெளிறிய முகம் அவருக்கு நினைவிலிருந்தது, கூர்மையான நாசி, அவள் சிரித்தபோது அது சிறிது வளைந்த கொக்கி போலாகும், எலும்பு போன்ற விரல்கள். ஸ்லிப் ஆடைகளை அலட்சியமாக அவள் அணிந்த விதம், அவை மிகப் பெரியதாக இருக்கும்போது தோள்பட்டை நாடாக்களை அவள் முடிச்சுப் போட்டுக் கொண்ட விதம், அவற்றையும் போர் வீரர்கள் அணியும் தடித்த பூட்ஸோடுதான் அவள் அணிவாள். அந்த மெல்லிய வழவழப்பான துணியின் அடியில் அவளுடைய சிறு முலைகள் கள்ளமற்ற விதமாக அசையும். அவளுடைய மெல்லிய மணிக்கட்டுகளில் கலந்து கட்டி வளையல்களை அணிவாள் – சில தோலால் ஆனவை, சில ரப்பர் வளையங்கள், சில கல் பதித்தவை, ஒன்று ஜிப்பரைப் போல இருக்கும் – எதுவும் தனியே அது மட்டுமாக அழகாக இராது, ஆனால் எல்லாமாகச் சேர்ந்தால் வெளிப்பாட்டுத் திறனோடு காணும்.
வேறென்ன அவருக்கு நினைவு வந்தது? அவளுக்கு இந்தத் தலைமுடி இருந்தது, வெளிர் மஞ்சளும், பழுப்புமாகக் கலந்த முடி, அதுவோ…. அடர்த்தியாக, காடாக வளர்ந்திருக்கும். ஒரு முடிச் சுருளைப் பற்றி, எத்தனை தூரம் அது போகுமோ அத்தனை தூரம் இழுப்பது அவளுக்கு ஒரு பழக்கம். சில சமயம் அது இரண்டு, மூன்று பங்கு நீளம் கூட நீட்டி இழுக்கப்படும், விட்டதும் அது மறுபடி ஒரு குதிப்போடு சுருண்டு சுருங்கிக் கொள்ளும். அவள் இதை எந்த மகிழ்ச்சியும் இல்லாது, கவனமில்லாமல் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அவர் அவளைக் கவனிப்பார், அவளுடைய உடலின் மற்ற நுட்பச் செயல்களைப் பற்றிச் சிறுவியப்பு கொண்டிருந்தார். அந்த நுட்பச் செயல்களோ பார்வைக்கு எளிதில் புலப்படாதவை.
தன்னுடைய குரல் அஞ்சலில் விடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அவர் அழைத்தபோது, மறுபுறம் தொலைபேசி மணி பலமுறை அடித்தது, பிறகே ஒரு பெண்ணின் பொறுமையிழந்த குரல் கேட்டது, “யெஸ்?”
“இது ஆல்பெர்ட் ஒம்,” என்றார் அவர், “உங்கள் அழைப்புக்குப் பதிலழைப்பு இது.”
“ஆல்பெர்ட் யாரு?”
அது தவறான எண். அவர் எண்களில் இப்படித் தவறிழைத்ததே இல்லை.
மறுபடி ஒரு முறை கூப்பிட்டார், ஆனால் அப்படிச் செய்யும்போதே, அவருக்குள் கொஞ்சம் வெறுப்புணர்வு எழுந்திருந்தது. ஏனென்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அழைப்பில் பிழை செய்தது அவர்தான். இந்த முறை, ஒரு முறை மணி அடித்ததுமே, மறுபுறம் யாரோ எடுத்தார்கள்.
“ஹாய், ஹெல்லோ?”
அந்தக் குரலை என்று கூட இல்லை, அது ஒலித்த முறையை அவர் உடனே தெரிந்து கொண்டார். அந்தக் குரலின் மூச்சிழந்த தன்மை, அதில் மறை சுட்டலாக இருந்த சிரிப்பும், நரம்பிறுக்கமும். அவள் அப்போது என்ன உணர்ந்தாளோ அதை அப்படியே வெளிக்காட்டுவது என்ற ஒரு நிரந்தர நிகழ்த்தல். இந்த குணத்தை எப்போதுமே அவர் அதிசயமானதாகப் பார்த்திருந்தார்.
“இது ஸாஷாவா?” அவர் கேட்டார்.
“ஆல்பெர்ட்?”
அந்த இசைக் கல்லூரியின் வலைத் தளத்தில், முன்னாள் மாணவர்களுக்கான பக்கத்திலிருந்து அவரை அவள் கண்டு பிடித்திருந்தாள். அவர் அந்தத் தீவில் அத்தனை தூரம் வெளியே போய், ஹாஃப்ஸ்ட்ரா பல்கலையில் போதித்தார் என்பதை அறிந்து முதலில் அவளுக்கு வியப்பு எழுந்தது. அவளுடைய முதல் யோசனை, ஆல்பெர்ட் ஒம்? இசை ஆசிரியராகவா? ஆனால் பிறகு அவள், இசை நிகழ்ச்சிகளில் வாசிப்பதை விட கல்லூரியில் போதிப்பது எத்தனையோ மேலானது என்று எண்ணினாள். எவ்வளவு பயணங்கள்! யாரால் ஆகும்? குடும்பத்துக்கு எத்தனை துன்பம் அதால்? அதாவது- இதை முன்முடிவாகக் கொண்டதற்கு அவளை மன்னிக்க வேண்டும். அவர் திருமணமானவரா? அவருக்குக் குடும்பம் இருக்கிறதா?
“நான் விவாகரத்து செய்தாயிற்று,” அவர் சொன்னார்.
“ஆ.”
“அது ஆகி ஏழு வருடங்களாயிற்று. அவள் பெயர் காரென் ஃப்ரிக். வாஷிங்டன் மாநிலத்தில், வால்லா வாலா நகரில் அவளைச் சந்தித்தேன். விட்மேன் கல்லூரியில் அப்போது போதித்துக் கொண்டிருந்தேன். அவள் இசைத் துறையில் இல்லை.”
“அதைக் கேட்க நான் வருந்துகிறேன். விவாக ரத்தைச் சொல்கிறேன்.”
“சரிதான். நாங்கள் பதினெட்டு மாதங்கள் மண வாழ்க்கையில் இருந்தோம், பிறகு எங்களிடையே பொருத்தமில்லை என்று ஒத்துக் கொண்டோம்.”
அதை அவ்வளவுதான் உண்மையாக அவரால் சொல்ல முடிந்தது. தன்னுடைய மணமுறிவைப் புரிந்து கொள்வது அவருக்கு மிகக் கடினமாக இருந்தது, அதை விட, ஒரு காலகட்டத்தில் தன் விருப்பங்களை, தினசரிப் பழக்கவழக்கங்களை இன்னொரு நபருக்காக மாற்றி அமைத்துக் கொள்ளத் தயாராகத் தான் இருந்தோம் என்பதை ஏற்பது இப்போது அவருக்கு துன்பமாக இருந்தது. அவள் பாதி கவனத்தோடு கேட்கும் வானொலி நிகழ்ச்சிகள். அவள் கட்டாயப்படுத்தி நடத்திய உரையாடல்கள். வருடங்கள் கடக்கையில், அந்த மணமுறிவைத் தனக்கு தான் விசுவாசமாக இருந்தமை என்று அவர் பார்க்கத் தொடங்கி இருந்தார். உண்மையில், தான் மணம் புரிந்திருந்தவன் என்பதை நினைவு கொள்வது அவருக்கு வியப்பூட்டுவதாகக் கூட ஆகி இருந்தது.
“சரி,” என்றாள் ஸாஷா, மறுபடியும் உற்சாகம் கொண்டவளாகத் தெரிந்தாள். “இப்பல்லாம் எல்லாருமே விவாகரத்து செய்யறாங்க, இல்லை மறுமணம் செஞ்சுக்கறாங்க. மறுமணம் செஞ்சப்பறம் மறுபடியும் விவாகரத்து பண்றாங்க, ஆ… இது நடுவயசுக் கோளாறா இருக்கணும். க்ரெக்- அவர் என்னோட கணவர்- அவரும் நானும் இப்ப இருபது வருஷங்களைத் தாண்டிக்கிட்டிருக்கோம்…”
அப்படி என்றால் அவள் பட்டப் படிப்பு முடிந்த சுருக்கில் மணம் செய்து கொண்டிருக்க வேண்டும். இருபத்தி இரண்டு, இருபத்தி மூன்று வயதிலிருக்குமா?
“……சிலசமயம் அவரைப் பார்க்கிறப்ப நான் நினைப்பேன்: நீங்கதான் யாரு?”
தான் சொன்னது ஒரு ஜோக் என்று அவருக்குப் புரியும்படி அவள் சிரிக்கிறாள். அந்த ஜோக்கில் ஏதோ ஒன்று மிகவும் பழகியதாகப் பட்டது, அப்படியே ஸாஷாவாக இருந்தது. அவளோடு சேர்ந்து சிரிக்கவோ அல்லது அவளைப் பார்த்துச் சிரிக்கவோ ஓர் அழைப்பு போலத் தெரிந்தது. இந்த மாதிரி சிறு சமாளிப்புகளுடன் உரையாடல்களில் நுழைவதை அவள் எப்படி முன்பும் செய்வாள் என்பதை அவருக்கு நினைவூட்டியது.
வருகிற சனிக்கிழமையில் சந்திக்க அவர்கள் ஏற்பாடு செய்து கொண்டார்கள், இருபத்து நான்காம் தேதி, லியானின் வகுப்பு முடிந்த பிறகு. ஏழு மணிக்கு. அவள் தன் மகளை அழைத்து வருவாள். அதற்காகத்தான் அவள் கூப்பிட்டிருந்தாள். தன் மகளுக்கு ஒரு புது பியானோ ஆசிரியரைக் கண்டு பிடிக்கத்தான். அவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் பேசினார்கள், அது அனேகமாக எப்படி இங்கே வந்து போவது என்பது பற்றி, அந்த விவரங்களை அவர் கொடுத்தார். கல்லூரி வளாகத்துக்குள் வந்த பிறகு எப்படி எங்கே காரை நிறுத்துவது என்று சொன்னார். கார் நிறுத்தக் கட்டணம் வசூலிக்கும் எந்திரங்கள் பணம் மட்டும்தான் ஏற்றுக் கொள்வன, ஆனால் சனிக்கிழமைகளில் அவை வேலை செய்யாது என்று தெரிவித்தார்.
அவள் சொன்னாள், “நீங்க மாறவேயில்லைன்னு எனக்குத் தெரியறது.”
“இப்படிச் சொல்றதுக்கு என்ன அர்த்தம்?”
“ஓ, ஒண்ணுமில்லை,” என்றாள், மறுபடி சிரித்தாள். இவ்வளவோ, இத்தனை விதமாகவோ சிரித்தவர்களை அவர் முன்பின் பார்த்ததில்லை.
“அப்புறம் ஆல்பெர்ட்,” திடீரென்று கூர்மையுடன் விளித்தாள், ”இன்னொரு விஷயம்.”
அவர் காத்திருந்தார். அவள் பணம் கொடுப்பதைப் பற்றிப் பேச்செடுத்தால், அதை மறுப்பதாக அவர் முடிவு செய்திருந்தார்.
“என்னோட அலீஸா. அவள்… அவள்….”
அலீஸா யார்? ஓ, சரி சரி, அலீஸா அவளுடைய மகள்.
“ஆனா ஒண்ணு பாருங்க?” என்று திடீரென்று எழுந்த உறுதிப்பாட்டோடு ஸாஷா பேசினாள்.
“விடுங்க. நீங்களே அதைப் பார்க்கப் போறீங்க. சனிக்கிழமை ஏழுமணிக்குன்னுதானே சொன்னீங்க? அது வரைக்கும் என்னால பொறுத்திருக்க முடியாது போல இருக்கு. இது ரொம்ப நல்லதா இருக்கும் – புரியுதில்லையா, உங்களை மறுபடி சந்திச்சு எல்லாம் தெரிஞ்சுக்கப் போறதச் சொல்றேன்.”
அவருக்கென்று ஒரு வாழ்முறை இருந்தது. அனேக நாட்களில் காலையில் விழிக்கும்போது, எழுந்திருப்பது என்பது தனக்குத் தானே காட்டும் மரியாதை என்று உணர்ந்தார். அவருடைய படுக்கையைச் சீர் செய்வது சுலபம்- ஒரே ஒரு மேல் விரிப்புதான். அவருடைய காலை உணவு: வாட்டப்பட்டு, பூண்டுப் பொடி தூவப்பட்ட இரு ரொட்டித் துண்டங்கள், ஒரு குடுவை வெதுவெதுப்பான நீரில் கலந்த ஒரு மேசைக்கரண்டி சிலியம் துகள்கள். அனேக நாட்களில், இதன் பிறகு காலைக் கடன் கழிப்பு. பிறகு, மூன்று மணிகள் கட்டுப்பாட்டோடு, ஸ்டைன்வே S மாடல் பியானோவை வாசிப்பார். அது அவரது சிறு பிராயத்துப் பியானோ, அத்தனை பெரியதாக இருந்ததால், அவருடைய பெற்றோரின் சாப்பாட்டு மேஜை இருந்த இடத்தை அது ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. (அவருடைய அம்மா அமர்ந்து கேட்க ஒரு நாற்காலியைப் பயன்படுத்தினார்.) சில நேரம், வாசிக்கும்போது அவருக்கு வேறுபாட்டுக்கு ஏதாவது திறப்பு கிட்டும். கைவிரல்களை விசைகள் மீது அமர்த்துவதில் சிறு மாறுதல்களைச் செய்வார். ஓர் ஊகத்தின் உந்தலில், காலால் அழுத்தும் விசைகளில் ஓர் அரை விசையிலிருந்து ஒரு துடிப்பு விசைக்கு மாற்றத் தோன்றும். இரவுக்கான பி- ஃப்ளாட் மைனர் இசை அளவில், ஏதோ மென்மையாக ஆனால் மெதுவாக இசைப்பதில், எளிதில் வசப்படாத தரத்தைப் பற்ற முடியும். சிறியதான, கருவியின் பயன்பாட்டில் கொண்ட விடுவிப்புகளை வாழ்வை மீண்டும் பற்றிக் கொள்ளும் செயல்களாகவே அவர் பார்த்திருந்தார்.
அவருடைய பயிற்சிகளுக்குப் பிறகு, கிழக்கே இரு வெளிச்செல்லும் வழிகள் தள்ளி இருந்த நார்தர்ன் ஸ்டேட் பார்க்வேயில் சென்று ஹாஃப்ஸ்ட்ரா பல்கலையை அடைவார், அங்கு அவர் பல்கலை மாணவர்களை வார நாட்களிலும், தனிப்பட்ட முறையில் கற்க வரும் மாணவர்களை வார இறுதி நாட்களிலும் சந்தித்துச் சொல்லிக் கொடுத்தார். அவருடைய பல்கலை மாணவர்கள் யாரும் அசாதாரணமானவர்களில்லை; அப்படி இருந்தால் அவர்கள் மான்ஹாட்டனில் இருந்த இசைப் பல்கலையில் சேர்ந்திருப்பார்கள். தனியாராக வரும் இளம் மாணவர்களில் பிரகாசிக்கும் திறன் உள்ளவர்கள் கிட்டுவார்கள். அவர்கள் சில திறன்களைக் காட்டியிருந்தவர்கள், தங்களுக்கு உள்ளூரில் போதித்த ஆசிரியர்களிடம் இருக்கும் குறைகளைக் கண்டு பிடித்திருந்தவர்கள், அதனால்தான் அந்த மாணவர்களின் அம்மாக்கள் ஹாஃப்ஸ்ட்ரா வளாகத்துக்கு தங்கள் கார்களை ஓட்டி வந்தனர், அவரிடம் ஒட்டப்படாத வெள்ளைக் காகித உறைகளில் அவருக்கான கட்டணத்தைக் கொடுத்தனர். இந்த மாணவர்களில் சிலர் அத்தனை மோசமில்லை. ஆனால், அவர் தனக்கே உண்மையைப் பேசுவதாக இருந்தால்- அப்படித்தான் அவரால் இருக்க முடிந்தது என்பதும் இருந்தது- அவர் அந்த மாணவர்களின் தரம் பற்றித் தயக்கப்படத்தான் வேண்டி வந்தது. மோட்ஸார்ட்டைப் பிழையின்றியோ, மோசமில்லை என்று சொல்லும்படியாகவோ இன்னொரு தடவை யாராவது வாசிப்பதால் என்ன பிரயோசனம்? சரி, நன்றாக இருக்கிறது என்று சொல்லும்படியாகவே அந்த வாசிப்பு இருந்தால்தான் என்ன? அல்லது முன்னேற்றம் தெரிகிறது என்று சொல்லும்படியாக இருந்தால்தான் என்ன பயன்?
(அல்லது ப்ராம்ஸ் டி மைனரை ஒரு தடவை வாசித்து, அந்த வாசிப்பு ‘அலசிப் பார்த்ததாக இருந்தது,’ ‘உள்ளொளி கொடுப்பதாக இருந்தது,’ மேலும் ‘சில கணங்களில் பரிமாணங்களைக் கடந்தது,’ என்று ஒரு நிகழ்ச்சியைப் பற்றி நியூயார்க் டைம்ஸ், ஜூன் 9, 1999 செய்தித்தாளில் ஒரே பத்தியில் வான் க்ளைபர்ன் பியானோ இசைப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களின் வாசிப்புகளைப் பற்றி எழுதியதால்தான் என்ன பயன்?)
அனேக நாட்களில் அவர் அறை எண் 322 இல், இறக்கைபோல விரிந்த முதுகு கொண்ட, தோலால் ஆன ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். மாணவர்கள் வாசிக்கத் தொடங்கும்போது இருகைகளின் விரல்களை நீட்டிச் சேர்த்து உருவாக்கிய கோணத்தைத் தன் மூக்கெலும்பின் உச்சியில் பொருத்தி, கண்களை மூடிக் கொண்டு கேட்பார். சில நேரம் அந்த பாஹ் அல்லது பீதோவன் சாஹித்தியங்களின் பக்கங்களில் குறிப்பு எழுதுவார், “72 இல் மெட்ரோநோம்.” “உன் விரல் நகங்களை வெட்டு.” “ஷ்ஜீக் என்பது ஒரு நடனம், அணிவகுப்பு நடைக்கு இசை இல்லை.”
அவர் சந்தோஷமாகவும் இல்லை, துயரப்படவும் இல்லை. அதாவது, அவர் மகிழ்ச்சி இழந்தவராக இல்லை.
ஆனால் ஸாஷா கூப்பிட்ட பிறகு, அன்றைய காலைப் பயிற்சிகள் சிரத்தையற்றும், நிம்மதி தராததாகவும் இருப்பதாகக் கண்டார். தேவையின்றி எழுந்து கொண்டிருந்தார். முன் கதவைத் திறந்து, வெளியே சாய்ந்து நோக்கினார், ஏதோ தனக்கு வர வேண்டிய பாக்கேஜ் வந்து விட்டதா எனப் பார்க்கிறவர் போல. பிறகு சமையலறை. கழிப்பறை. தன் பயிற்சிக் கூடமாக மாற்றி இருந்த முன்னறை என்று திரிந்தார்.
ஏதாவது இனிப்பாகச் சாப்பிட வேண்டும்போல ஆசை வரவும், கிருஸ்த்மஸுக்கு யாரோ மாணவர் கொடுத்த கொடைவா சாக்லெட்களடங்கிய ஒரு பெட்டியை உயரே ஒரு அலமாரித் தட்டில் கண்டெடுத்தார். காய்கறிகளை வெட்ட உதவும் ஒரு சிறு பலகையையும், சீவுவதற்குப் பயன்படும் கத்தி ஒன்றையும் வெளியே எடுத்தார். சாக்லெட்டின் மீது கத்தியால அழுத்தி வெட்டுமுன்னர், கத்தியை இப்படியும் அப்படியும் நகர்த்தி அலைத்தார், பிறகு ஓரிடத்தில் இலேசாகப் பொருத்தினார். எதனுள்ளும் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதைத் தன் வாய்க்குள் போடுவது அவருக்கு ஏற்காது. கத்தி இறங்கி, சாக்லேட்டுக்குள் காரமெல் இருப்பதைக் காட்டியது. ஒரு பாதித் துண்டை எடுத்து அதைத் தின்றார். அதைத் தின்னும்போதே, சிலர் அந்த சாக்லேட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமலே அந்த சாக்லேட் முழுவதையும் குருட்டுத்தனமாக வாயிலிட்டுத் தின்று விடுவார்கள் என்று நினைக்கவும் அவர் உடலில் நடுக்கம் பரவியது.
பாலுறவு. அதைப் பற்றி என்ன இப்போது? அவருக்குத் தான் ஏன் தற்காப்பு நிலைக்குப் போனோம் என்று தெரியவில்லை. அவர் ஒன்றும் கன்னி கழியாத இளைஞன் இல்லை. அவருக்கு அனுபவம் இருந்தது. அந்த அனுபவங்களால் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டிருந்தார், தன் நுண்ணுணர்வுகளுக்கு ஒத்துப் போகும் வகையில் எப்படித் தன் மனத்தை ஒருமுகப்படுத்துவது என்று தெரிந்து கொண்டிருந்தார். பல நேரம், உடலுறவு கொள்கையில், தன் மனத்தில் பதியாத எதையோ தான் உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக அவர் கண்டார்: முலைக்காம்புகளைச் சுற்றி இருந்த சிறு வீக்கங்கள், மேல் உதட்டில் இருந்த மெல்லிய முடி போன்றன அவை. ஒரு முறை அவள் அவர் மீது படர்ந்திருந்த போது, அவளுடைய உடலின் மேல் பகுதியை காரென் தன் கரங்களால் தாங்கிக் கொண்டிருந்ததால், தன்னுடைய கால் விரல்களைச் சொடுக்கெடுத்தார். அப்போது அவர் முகத்தில் இருந்த ஒரு உணர்ச்சி- அது என்னவாக இருந்ததோ- அவளை அப்படியே நிறுத்தி விட்டு, எட்டிக் கை நீட்டி படுக்கையின் மேல் பரப்பிய மெல்லிய போர்வையை எடுத்துத் திறந்திருந்த தன் முலைகளை மூடிக் கொள்ளச் செய்திருந்தது.
பிறகு அவள் அவரிடம் அதைப் பற்றிப் பேச விரும்பினாள். அவருக்கு எதனால் அருவருப்பு வந்திருந்தது? ஏதாவது ஓர் ஒலியா? அல்லது வாடையா? உடலின் நிலையா? அவருக்கு மன அழுத்தம் இருக்கிறதா? ஒரு நாள், அது என்ன என்பது தெளிவு என்று சொன்னாள். அவள்தான் அது, இல்லையா. ஒத்துக் கொண்டு விடுங்கள். அவருக்கு அவள் வசீகரமாக இல்லை.
இதில் இருந்த சவாலைப் புரிந்து கொள்ளுமளவுக்காவது அவர் ஒரு கணவனாக இருந்தார். ஆனால் அந்த சவாலை எப்படி எதிர் கொள்வது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. உண்மையாகச் சொல்வதானால், பாதை அத்தனை தெளிவாக இல்லை என்றுதான் அவர் நினைத்தார். அந்தச் சொல்:“வசீகரமாக.” அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதும், நாம் எப்படி ஒருவரை ‘வசீகரமாக’ இருப்பவர் என்றோ, அப்படி இல்லாதவர் என்றோ பார்க்கிறோம் என்பதும் அவருக்கு ஒருபோதும் புரிந்ததில்லை. தன்னளவில் அவர் அழகு என்பதன் பொதுவான அளவை எதனாலும் பாதிக்கப்பட்டதில்லை. பெரிய மார்பகங்கள். கிண்ணென்று இருக்கும் கால், கைகள். ‘அழகான’ முகம். அவை எல்லாம் – என்ன. காட்சி வடிவக் கலைகள்.
பிறகு, அவரை விட்டுப் பிரிந்து கொஞ்ச நாட்கள் கழித்து, காரென் இறுதியான ஒரு கணிப்போடு வந்தாள். இல்லை, என்றாள். அவர் அவளுக்கு இதைச் செய்ய அவள் விடப் போவதில்லை. தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக அவளே நினைத்துக் கொள்ளும்படி அவர் செய்ய அவள் விடப் போவதில்லை. நிஜத்தில் அது அவரிடம்தான் இருந்தது. அவரிடம் ஏதோ குறை- ஆழ்ந்த குறை- இருக்கிறது. உண்மையைச் சொன்னால், அவள் அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்டாள். அவர் ஏதோ மாதிரி….ஏதோ…. அது என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். அவள் இனிமேல் இதைச் செய்யப் போவதும் இல்லை. தன் வாழ்வை அவளுக்கு வாழ வேண்டி இருக்கிறது. சந்தோஷமாக இருங்கள்.
தன் விவாஹரத்துக்குப் பிறகு, அவர் இன்னுமே அடமாக ஆனார். தன் நாற்பதுகளில் நுழையும்போது, நான் யாராக இருந்தேனோ அதுதான் நான் என்று முடிவு செய்தார். அவர் இனி மாற மாட்டார். தன்னுடைய தன்மையை அவர் சோதிப்புக்கு உட்படுத்தப் போவதில்லை, தான் யாரென்று பரீட்சை செய்யப்போவதுமில்லை. தன்னிடம் என்ன பழுது இருக்கிறது என்று அவர் யோசித்துக் குழம்பப் போவதில்லை (அவளுக்கு என்ன தைரியம் அப்படிப் பேச?) உடலுறவு என்ற செயலைப் பொறுத்து, தன் இந்திரிய வெளிப்பாடு தனிமையில் நடப்பதுதான் சிறந்தது என்று உணரத் தலைப்பட்டார், குடல் கழிவு வெளியேற்றம் போல, அதுவும் ஒரு நோக்கத்தை அடையும் செயல் திறன் அவ்வளவுதான்.
தன் வாய்க்குள் மிருதுவான மேலண்ணத்தில் ஒட்டி இருந்த மீதிப் பாதி சாக்லேட்டைக் கீழே தள்ளினார், தொண்டையில் தசைகள் அந்தச் செயலுக்கு மறுவினை தெரிவிக்கும் வகையில் சுருங்கியதைக் கவனித்தார், நன்றாக விழுங்கினார். காரெனைப் பற்றி அவர் யோசித்துப் பலவருடங்களாகி இருந்தன. பின், இப்போது போய் ஏன் அவளைப் பற்றி யோசிக்க வேண்டும்?
…
(தொடரும்)
பின்குறிப்பு
யூன் சோய் இந்த உச்சரிப்பு இங்கிலிஷ் மொழிப்படியான உச்சரிப்பு. கதாசிரியர் அமெரிக்காவாசி. இங்கிலிஷ் மொழியில் அவர் பெயர் Yoon Choi என்று எழுதப்படுகிறது. அவருடைய பிரசுரகர் இந்தப் பெயரை யூன் சோய் என்று உச்சரிக்கலாம் எனச் சொல்கிறதாகத் தெரிகிறது. கொரிய மக்கள் தம் மொழியில் செய் யுன் என்று உச்சரிப்பார்கள், ஏனெனில் ச்சேய் என்பது குடும்பப் பெயர். யுன் என்பது தனி நபரின் சொந்தப் பெயர். கொரிய மொழியில் குடும்பப் பெயர் முதலிலும், சொந்தப் பெயர் அடுத்தும் வரும். தவிர கொரிய மொழியில் நீட்டப்பட்ட உயிரெழுத்துகள் இல்லையாம். அதாவது ஏ, ஓ, ஊ, ஈ போன்றன இல்லை. மாறாக எ, இ, ஒ, உ என்பன மட்டுமே உண்டு என்று தெரிகிறது. அதனால் யூன் இல்லை, யுன். ஆனால் ச்சேய் என்று வழங்கணுமா, ச்செய் என்பதுதான் சரியா எனத் தெரியவில்லை.
இங்கிலிஷில் இரண்டும் மாறி வருகின்றன. 1) சொந்தப் பெயர் முதலிலும், குடும்பப் பெயர் அடுத்தும் வரும். 2) உயிரெழுத்துகளில் நெடில், குறில் இரண்டும் உண்டு. இங்கு இங்கிலிஷ் வழக்கத்தில் பெயரைக் கொடுத்திருக்கிறேன், காரணம் புத்தகத்தில் அவர் இங்கிலிஷ் வழக்கப்படியான பெயரைத்தான் கொடுக்கிறார். கொரிய மக்களிடம் பேசுகையில் இந்த ஆசிரியர் பற்றிப் பேசினால் ச்செய் யுன் என்று உச்சரித்தால் அவர்களுக்கு உடனே புரியலாம். மேலும் இவர் கொரிய வம்சாவளி அமெரிக்கர். கதைகளும் இங்கிலிஷில்தான் எழுதப்பட்டிருக்கின்றன.