
பிள்ளையாரை அமர வைத்துக்
கொணரவே ஒரு பலகை உண்டு
அப்பாவிடம்.
சைக்கிளை அப்பா தள்ளிவர
காரியரில் வருவார் பிள்ளையார்.
துரத்தி வரும் குறத்திகளிடம்
எருக்குமாலை குடை..
பண்டிகையின் பின் நின்ற
நுண்பொருளியல் புரிந்தது
பின்னொரு நாளில்
அகவல் ஓசையுடன்
அம்மா
பிடித்த மோதகம்
தட்டிய
வடையின் வாசம்
நாளின் நிறத்தையும்
மாற்றும்
பூஜை முடிந்து சாப்பிட்டு
எழுந்து மறுபடி
பூரணத்தை மட்டும்
சாப்பிட
கடந்து போகும்
இன்னொரு
சதுர்த்தி ..
பண்டிகை முடிந்தபின்
கடலோ குளமோ போகமாட்டார்
எங்கள் பிள்ளையார்..
பரணில் சரணடைவார்..
ஏதோவொரு பொங்கலில்
மொத்தமாக மாமரத்தடியில்
மண்ணில் கரைவார்
மழை வந்ததும்..
பிறிதொரு நாளில்
மறுபடியும்
வருவார்
பிள்ளையார்..
அமர்ந்து வர சைக்கிளும்
வாங்கி வர அப்பாவும்
மோதகம் செய்ய
அம்மாவும் தான்
இனி இல்லை..