ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

(டாக்டர் காத்யாயனி வித்மஹே அறியப்பட்ட ஒர் இலக்கிய விமரிசகர். காகதீயா பல்கலைக் கழகத்தில் தெலுங்கு மொழிப் பேராசிரியராகப் பணியாற்றினார். கணவர் டாக்டர் வெங்கடேஸ்வரலு. தந்தை பேராசிரியர் கேதவரபு ராமகோடி சாஸ்திரியும் இலக்கிய விமரிசகர், தாயார் இந்திரா தேவி. முற்போக்கு எழுத்தாளரான காத்யாயனி வித்மஹே 1955 ல் வாரங்கலில் பிறந்தார். தற்போதும் அங்கேயே வசிக்கிறார். கதை, கவிதை, கட்டுரைகள் என்று இருபது நூல்கள் எழுதியுள்ளார். இவர் பெண்ணியம் மற்றும் மார்க்சிய எழுத்துக்களின் மீது கவனம் செலுத்துகிறார். தெலுங்கு இலக்கியத்தில் இவருடைய சாதனைக்காக 2013ல்  மத்திய சாஹித்திய அகாடமி விருது பெற்றார். 2015 ல் சாகித்திய அகாடமி விருதுகளைத் திரும்பக் கொடுத்தவர்களுள் இவரும் ஒருவர். தற்போது ‘மக்கள் ஜனநாயக மேடை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் செயலாளராக உள்ளார்.)

தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை – முன்னுரை   

நாவல் என்பது 1870 களில் தெலுங்கு இலக்கிய உலகில் சேர்க்கப்பட்ட ஒரு புதிய செயல்முறை.  சூத முனிவர் கதை சொல்பவராகவும் சௌனகாதி முனிவர்கள் கேட்பவராகவும் வளர்ந்த புராண இலக்கியம், சாதாரண மக்களுக்கு உள்ளூர் பண்டிதர்கள் மூலம் கிடைத்த சம்பிரதாயத்திலிருந்து – இடம்பெயர்ந்து நகர வாழ்க்கை வடிவு கொண்ட போது – பலரும் படித்தறிந்து கொள்ளும் இலக்கிய செயல்முறைகளில் நடந்த மாற்றம் கொஞ்சமல்ல.  இலக்கிய உலகின் வாசகர்களாக பெண்கள் கூட இருப்பார்கள் என்ற ஜனநாயகப் புரிதல், நாவல் முயற்சியின் போது வெளிப்பட்டது என்பது அந்த மாற்றத்தில் ஒரு பகுதியே. 

பெண் கல்வி ஆதரவாளர் மற்றுள் பிரசாரகர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு ஒரு நாவலாசிரியராக இருந்ததோடு நாவல் படைப்பை ஊக்குவிப்பதற்கு தன் சிந்தாமணி இதழில் நாவல் போட்டிகளை ஏற்பாடு செய்தார். நாவல்களில் கதையம்சம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். ஆனால் நீதி கூறுவதாக இருக்கக் கூடாது என்று கூறி, மென்மை இல்லாத முரட்டுச் சொற்களோ, பெண்கள் படிக்கக் கூடாத கதை அம்சமோ பயன்படுத்தக் கூடாது என்று அவர் எச்சரித்ததை கவனிக்க முடிகிறது. நாவல்களுக்கு வாசகர்களாக பெண்களை அடையாளம் கண்ட நவீன சமுதாயப் பார்வை, நாவல் எழுத்தாளர்களாக பெண்களை அடையாளம் கண்டு மதிக்கும் பண்பை வளர்த்துக் கொள்ளாதது வியப்பை அளிக்கிறது. 

தெலுங்கில் நாவல் செயல்முறையை எடுத்து வந்தார்களே தவிர, ஆரம்ப காலங்களில் அதனை எந்தப் பெயரால் அழைப்பது என்பதை அறிந்திருக்கவில்லை. சில நாட்கள் அதற்கு முன்னால் அறிந்திருந்த பிரபந்தம் என்ற இலக்கிய வடிவின் சிறப்பைக் கூறும் உரைநடைச் செய்யுள் என்ற பொருளில் ‘வசனப் பிரபந்தம்’ என்று அழைத்தார்கள். கந்துகூரி வீரேசலிங்கம், ‘ராஜசேகர சரித்திரம்’ என்ற நாவலுக்கு விமரிசனம் எழுதுகையில், ‘காசீபட்ட ப்ரஹ்மய்ய சாஸ்த்ரியின் நவல’ என்ற பெயரை பயன்படுத்தினார். புதிய என்ற பொருள் படும் ‘நவ’ என்ற சொல்லின் ஆதாரத்தோடு  நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அருகாமையில் விளங்கும் ‘நவல’ என்ற சொல், அன்று முதல், நாவல் என்ற முயற்சியின் தெலுங்குப் பெயராக நிலைபெற்றது. ‘நவல’ என்பது தேசியச் சொல். ‘பெண்’ என்பது அதன் பொருள். 

உலகில் பாதிப் பேர் பெண்கள் என்றாலும் சமுதாயம், பொருளாதாரம், அரசியல், இலக்கியம், கலாசாரம் ஆகிய துறைகள் அனைத்திலும் அவர்கள் ஓரங்கட்டப்பட்டவர்கள். அதனால்தான் தெலுங்கு மொழியில் ‘நவல’ (நாவல்) பிறந்த முப்பதாண்டு காலத்திற்குப் பிறகுதான் பெண்கள் நாவல் எழுதத் தொடங்கினார்கள். தொடங்கிய பின்னரும் கூட இலக்கிய வரலாற்றில் அவர்களின் பெயர் அரிதாகவே பதிவு செய்யப்பட்டது. அதிலும் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். பரிசீலனை, ஆய்வு போன்றவை குறைவே. தெலுங்கில் இலக்கிய வரலாறு வீரேசலிங்கம் பந்துலுவின் காலத்திலேயே தொடங்கப்பட்டாலும் அவை பிரதானமாக கவிதை வரலாறுகளே. 1971 வரை தெலுங்கு நாவல் இலக்கிய வரலாறு எழுதப்படவில்லை.

‘மொதலி நாகபூஷண சர்மா’ எழுதிய ‘நவலா விகாசம்’ (1971) அவற்றில் முதன்மையானது. அதில் மொழிபெயர்ப்பு நாவல் எழுத்தாளர்களாக குரிப்பிடப்பபட்ட, 1900-20 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த நாவல் எழுத்தாளர்களில் மூவர் பெண்கள். 1955-70 இடைப்பட்ட கால எழுத்தாளர்களாக ‘இல்லிந்தல சரஸ்வதி தேவி’ யோடு தொடங்கி பத்தொன்பது பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன. மாலதி சந்தூர், லதா, ரங்கநாயகம்மா, த்விவேதுல விசாலாக்ஷி, கோடூரி கௌசல்யா தேவி, யத்தனபூடி சுலோச்சனா ராணி, ஆனந்த ராமம் போன்றவர்களின் படைப்புகளைப் பற்றி அங்கங்கே குறிப்பிட்டார்கள். வரலாற்று நாவல் எழுத்தாளராக ஒரு பெண்ணின் பெயர் தென்படுகிறது. அதாவது நூறாண்டு நாவல் இலக்கிய வரலாற்றில் இருபத்து மூன்று (3+19+1) பெண்களின் பெயர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

‘பொட்டபாடி வேங்கட குடும்பாராவு’ எழுதிய ‘ஆந்திர நவலா பரிணாமம்’ (1973) என்பது  தெலுங்கு நாவல் இலக்கிய வரலாற்றில் கிடைக்கும் இரண்டாவது ஆய்வு. மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களில் சத்தியநாதம்மாவோடு கூட புலகுர்த்த லக்ஷ்மி நரசமாம்பாவின் பெயர் சில விவரங்களோடு இதில் பதிவாகி உள்ளது. இதில் மல்லாதி வசுந்தரா எழுதிய ‘தஞ்சாவூரு பதனம்’ என்ற நாவல் விரிவான வகையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பிற பெண் எழுத்தாளர்களின் பெயர்கள் இல்லாமல் போனதற்கு அது அவருடைய சித்தாந்த நூலின் முதல் தொகுதி என்பது காரணமாக இருக்கலாம். அடுத்த தொகுதியை அவர் வெளியிடவில்லை.  

1974 ல் புல்லாபொட்ல வெங்கடேஸ்வரலு எழுதிய ‘தெலுகு நவலா சாகித்ய விகாசமு’ வெளிவந்தது. ‘தெலுங்கு நாவலின் பொற்கால சங்கராந்தியை முத்துக்களால் ஆன ரங்கோலியால் அழகு படுத்திய பெண் எழுத்தாளர்கள்’ என்ற தொடரின் கீழ் ஐம்பது பக்கங்களில் ஐம்பது பெண் எழுத்தாளர்களின் நாவல்களை விமரிசித்து இதில் சற்று விவரமாக எழுதப்பட்டுள்ளது. 1990 ல் வந்த ‘தெலுங்கு நவலானுசீலனம்’, முதிகண்டி சுஜாதாரெட்டியின் படைப்பு. இதில் நான்கைந்து பேரைத் தவிர, பெண் எழுத்தாளர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

உண்மையில் 1960 களில் நாவல் எழுத்துத் துறையில் பெண்களின் வருகை அதிகமானது. அதற்கு, படித்த மத்தியதர வர்க்கத்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாதல், நகரமயமாதல், பத்திரிகைத் துறை விரிவாக்கம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று காரணமாக இருக்கலாம். எதுவானாலும் 1970 களில் நாவல் என்றால் அது பெண்களின் இலக்கியச் செயல் என்று கூறும் அளவிற்கு நிலைபெற்று விட்டது. அந்தச் சூழ்நிலை பற்றிய அக்கறையோடோ அல்லது ஆர்வத்தோடோ வெளிவரும் நகைச்சுவைத் துணுக்குகளைக் கூட பார்க்க முடிந்தது. மனைவியை பிரசவ அறைக்கு அனுப்பிவிட்டு  குழந்தை பிறந்த செய்திக்காக வராண்டாவில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் கணவனிடம் மருத்துவமனையின் நர்ஸ் வந்து உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறுவதற்கு பதிலாக நாவல் எழுத்தாளர் பிறந்திருக்கிறார் என்று கூறுவது போல் கார்ட்டூன்கள் வெளிவந்தன. அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டு  வேலை செய்வது பற்றி குறைத்து மதிப்பிட்ட ஆண் ஆதிக்க  கலாச்சாரத்தின் விரிவாக்கமாக, நாவல் என்பது பெண்களின் செயல்முறை என்று  குறைந்த மதிப்பீட்டுக்கு உரித்தாக்குவது கூட நடந்தது. 

இந்தப் பின்னணியில்  பெண்கள் ஏன் நாவல் எழுதினார்கள்? அதில் என்ன எழுதினார்கள்? எதைக் குறி வைத்து எழுதினார்கள்? எவ்வாறு எழுதினார்கள்? நாவல் செயல்முறை மூலம் சமுதாயத்தில் அவர்கள் செய்த  உரையாடலின் சாரம் என்ன? அதன் பயன் என்ன? கருப்பொருளின் விரிவாக்கத்தில் அவர்களுடைய பங்களிப்பு என்ன? தெலுங்கு நாவல் வளர்ச்சி என்னும் வரலாற்றில் அவர்களுடைய இடம் என்ன?  என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அறிய வேண்டுமென்றால்,  தெலுங்கில் வந்த பெண்களின் நாவல் வரலாற்றை எழுத வேண்டிய தேவை உள்ளது.

 சமூக சீர்திருத்த இயக்கத்தின்  ஒரு பகுதியாக பெண் கல்வி வளர்ச்சிக்காக நடந்த முயற்சி, பெண்களுடைய படைப்பு மற்றும் விமர்சன சக்திகளின் வளர்ச்சிக்குக் காரணமானது. அந்த வளர்ச்சி, சமுதாய மற்றும் இலக்கிய துறையில் வருகின்ற புதிய மாற்றங்களின் பக்கமாக அவர்களின் பார்வையைத் திரும்பியது. அவ்வப்போது தோன்றிய பல்வேறு பதிப்பகங்கள் மூலம் விரிவாக வெளியிடப்பட்டு வந்த நாவல்களால் உற்சாகமடைந்து மேலும் பல பெண்களும் அந்த செயல்முறையில் முயற்சிகள் செய்வதற்கு ஆர்வம் காட்டினார்கள். 

அந்த முறையில் வந்த முதல் தெலுங்கு பெண் நாவல் சுதக்ஷிணா சரித்திரம். எழுதியவர் ஜெயந்தி சூரம்மா. 1906 ல் வந்த இந்த நாவல் ஆண்கள் எழுதிய ரங்கராஜ சரித்திரம், ராஜசேகர சரித்திரம் போன்ற முதல் தெலுங்கு நாவல்களின் பெயர்கள் போலவே இருந்ததை கவனிக்கலாம்.

இங்கிருந்து தொடங்கி 1930 வரை வந்த பெண்கள் எழுதிய நாவல்களைப் பற்றி அந்தக் கால பத்திரிகைகளில் வந்த நூல் மதிப்புரை, முன்னுரை, பீடிகை  போன்ற   தொகுப்புகள் மூலமும் கட்டுரைகள், இலக்கிய வரலாறுகள் முதலியவற்றின் மூலமும் தெரிய வருகிறதே தவிர அவை பற்றி வேறு எங்கும் கிடைக்கவில்லை.

அதற்காக 1930க்கு பின் பெண்கள் எழுதிய நாவல்கள் அனைத்தும் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது. ஆனால்  ஒன்று இரண்டாவது கிடைக்கின்றன. 1947க்கு பின் அவற்றின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வந்தது. பெண்கள் எழுதிய நாவல்களின் வரலாற்றை 1905 லிருந்து 1929 வரை தொடக்கநிலை என்றும் 1930ல் இருந்து 1947 வரை வளர்ச்சி நிலை என்றும் 1950ல் இருந்து விரிவாக்க நிலை என்றும் குறிப்பிடலாம். 

1950ல் இருந்து பெண்கள்  எழுதிய நாவல் வரலாற்றின் பத்தாண்டு கால எல்லையை அதாவது ஒரு தசாப்தத்தை பிரமாணமாக எடுத்துக்கொள்வோம். அந்தக் காலத்தில்  பிரத்தியேகமாக இருந்த இயல்புகளைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாளரின் முயற்சியையும் மதிப்பிடுவது இந்த கட்டுரைத் தொடரின் நோக்கம். 

பகுதி – 1

தெலுங்கு நாவல்களின் ஆரம்ப யுகம் (1872–1900) கடந்து, மொழிபெயர்ப்பு யுகத்தில்  

(1900-1920) அடி எடுத்து வைத்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 1906 ல் ஜெயந்தி சூரம்மா எழுதிய சுதக்ஷிணா சரித்திரம் நாவல் வெளிவந்தது. ஆண் எழுத்தாளர்கள் ரங்கராஜ சரித்திரம், ராஜசேகர சரித்திரம் போன்ற ஆண்களின் வாழ்க்கை வரலாறுகளை நாவல்களாக வெளிக் கொணர்ந்தது போல், பெண்களின் வாழ்க்கை வரலாறும் வந்தது. இது இலக்கியத்துறையில் பெண்களின் பிரவேசத்தால் வந்த ஒரு திருப்பம். சுதிக்ஷிணா, ரகுவம்சத்தின் மூல புருஷனான திலீபனின் மனைவி. ஜெயந்தி சூரம்மா, ரகுவை பெற்ற தாயாரான சுதிக்ஷிணாவை கதாநாயகியாகக் கொண்டு புராண நாவல் எழுதி இருக்கிறாரோ அல்லது அந்தப் பெயரில் ஒரு பெண் கதாநாயகியை கற்பனை செய்து சமூக நாவல் எழுதி இருக்கிறாரோ தெரியவில்லை.

ஜெயந்தி சூரம்மாவைத் தொடர்ந்து நாவல் எழுதுவதற்கு முன்வந்த இருவரில் தேவமணி சத்யநாதன் எழுதிய ‘லலிதா’ சமூக நாவல் (பொதிலி நாகராஜு – ராயலசீமா நவல முதல் படி – ஒரு அத்தியாயம், 2015). க்ருபாபாயி சத்யநாதம்மா எழுதிய கமலாம்பா என்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல், கிறிஸ்தவ மிஷனரிகளின் தாக்கத்தால் கல்வி கற்ற பெண்கள் நாவல் எழுத்தாளர்களாக தலையெடுத்த சந்தர்ப்பம் அது. லலிதா 1908ல் வெளிவந்தது. கமலாம்பா 1990ல் வந்தது. சரிதம், சரித்திரம் என்ற சொற்களை விட்டு விட்டாலும் இவையும் ஒரு பெண் கதாநாயகியின் வாழ்க்கை வளர்ச்சியை சித்தரிக்கும் நாவல்களாக இருந்தன என்பதை கவனிக்கலாம்.. கிறிஸ்தவ மதப் பிரச்சாரமே லட்சியமாக ‘கமலா’ என்ற ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கமலாம்பா என்ற இந்த நாவலை கிறிஸ்டியன் லிட்ரரி சொசைட்டி வெளியிட்டது. லலிதா, பெண்கள் எழுதிய தெலுங்கு நாவல்களில் முதல் சமூக நாவல். 

சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் பலமாக உள்ள நாவல் இது. அனந்தபுரம் மாவட்டம் தர்மவரத்தைச் சேர்ந்த தேவமணி சத்யநாதம்மா, இந்த நாவலின் கதையை விஜயநகரத்தில் தொடங்கி, பெள்ளாரி, ராஜமண்ட்ரி வழியாக நடத்துவித்து, பள்ளாரியில் முடிக்கிறார். கதை நடந்த காலத்தில் பதிநான்கு   வயது நிரம்பிய லலிதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களை இந்த அகதி விவரிக்கிறது.

தந்தை சோமநாதுடு போர்வீரராக உத்தியோகத்தில் இருந்த போதும், செய்த ஆர்ப்பாட்டங்களால் எரிச்சல் அடைந்த காட்டுவாசிகள் லலிதாவை தூக்கிக் கொண்டு செல்லும்போது ஹரிதாஸ் என்ற இளைஞன் காப்பாற்றுவதும் அத்தை மகன் மாமன் மகள் உறவுள்ள அவர்கள் இருவரிடையே காதல் ஏற்படுவதும் இதில் ஒரு அம்சம். ஏற்கனவே குடிகாரனான தந்தை, பெரிய மகளும் மனைவியும் இறந்து போனதால் மேலும் குடித்துக் குடித்து வேலையை இழந்து வீட்டை விட்டு வெளியேறுவது, தம்பிகள் இருவரும் வயிற்றுப் பசிக்கு வழியில்லாமல் ஊரை விட்டுப் போவது, ஊரில் இளைஞர்களின் தொல்லையைத் தாங்க முடியாமல் லலிதா அத்தை மகனைத் தேடி பள்ளாரிக்குச் செல்வது, அவனுடைய அறிவுரைப்படி ராஜமண்ட்ரியில் ஆசிரியர் பணியில் ஈடுபடுவது,  அனாதையாக அலைந்து கொண்டிருந்த தந்தையை வரவழைத்து ஆதரிப்பது, தந்தையால் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு அத்தை மகன் மூலம் தீர்வு காண்பது, அவனுடன் திருமணத்திற்கு சூழ்நிலைகளை அனுகூலமாக்கிக் கொள்வது போன்ற சம்பவங்களின் வரிசையோடு வளர்கிறது இந்தக் கதை. சமூக சீர்திருத்த இயக்கம் போதிக்கும் அம்சங்களோடு, பெண் கல்வி, மதுவிலக்கு என்ற  இரண்டு அம்சங்களை நோக்கமாகக் கொண்டு கருவை வடிவமைத்திருப்பது இந்தக் கதையின் சிறப்பு.

1908ல் பெண்கள் கல்வியறிவு பெற்றதோடு கூட வேலைக்கும் சென்று, தாம் பெற்ற அறிவுத்திறனை தம் இன மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் நிலையைப் பற்றி தேவமணி சத்யநாதன் கண்ட கனவின் வெளிப்பாடாக இந்த நாவலைக் கூறலாம். பாலிய விவாகம் வழக்கமாக இருந்த அந்த நாளைய சமுதாயத்தில் பதினான்கு வயது வந்த லலிதா திருமணமாகாமல் இருந்ததால் பிராமணரல்லாத பிற சமூகத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம். அதனால்தான் அவளுக்கு படிக்க நேரம் கிடைத்தது. வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. தனி ஒரு பெண்ணாக லலிதா எதிர்கொண்ட ஒரு பிரச்சனை, காதலிக்கும்படியும் திருமணம் செய்து கொள்ளும்படியும் அல்லது கொன்று விடுவேன் என்றும் ஒரு இளைஞன்  கொடுக்கும் அழுத்தம. இந்த நாட்களில் இந்த விதமான அழுத்தம் பெண்களின் மீது ஆசிட் ஊற்றுவதும் கொலை செய்வதுமாக அதிக அளவில் தொடர்வதைப்    பார்க்கிறோம். வீட்டைத் தாண்டி வெளியில் வருவதும் தன் காலில் தான் நிற்பதும் தன் சம்பாத்தியத்தில் தான் சுதந்திரமாக இருப்பதுமான பெண்களின் வாழ்க்கையை குறிப்பிட்டதோடு, அந்த கிராமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எச்சரிப்பதும் தேவமணியின் உன்னிப்பான முன்னோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. 

இன்னொரு விஷயம் கூட உள்ளது. குழந்தைகளிடம் பொறுப்போடு நடக்காத தந்தையாக இருந்தும் குழந்தைகளின் வாழ்க்கையை நிர்ணயிப்பாராக தன் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார்.  குடிகாரனாகவும் வேலையை இழந்தவராகவும் குழந்தைகளை அவர்களின் விதிக்கு விட்டு விட்டவராகவும் இருந்த சோமநாதுடு, மகளின் பாதுகாப்பில்  நிலைபெற்றபின் அவள் யாரை திருமணம் செய்து கொள்வது என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஹரிதாசைக் காதலித்த விஷயத்தைக் கூறி அவனைத் தவிர வேற யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறும் மகளைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் போகிறார்.  மகளுக்குத் தொல்லை கொடுப்பதற்காக கோர்ட்டில் ஒரு கேஸ் கூட போடுகிறார். பெண்கள் படித்து வேலை செய்து வந்தாலும் எதிர்கொள்ள வேண்டிய குடும்பப்  பெரியதனம் பற்றிய எச்சரிக்கையை இவ்விதமாக நாவலின் கருப்பொருளில் ஒரு பகுதியாகக் காட்டுகிறார் தேவமணி.

சோமநாதனின் வீழ்ச்சிக்குக் காரணமாக மது அருந்தும் தீய பழக்கத்தைச் சுட்டிக் காட்டி மனிதனின் விவேகத்தையும், குடும்ப வளர்ச்சியையும் அழிக்கும் கள் அருந்தும் பழக்கத்தின் மீதான எதிர்ப்பு இந்த நாவல் முழுவதும் பரவி உள்ளதைக் காண முடிகிறது. கள் குடிக்கும் பழக்கத்தை வளர்த்து போஷிக்கும் மது வியாபார கலாச்சாரத்தின் தீய விளைவுகளை இன்றைய சமுதாயமும் அனுபவிக்கிறது. அதன் காரணமாக நாவல் படைப்பு ஆரம்ப வரிகளிலேயே சுயமரியாதை வாழ்க்கைக்கான ஆசையையும் அதற்கு இடையூறாக உள்ள அமைப்புகளின் மீதான எதிர்ப்புக் குரலையும் பெண்கள் தெரிவிப்பதை லலிதா நாவலில் காண்கிறோம்.

இருபதாவது நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் பெண்களின் நாவல் படைப்பு தொடங்கியது. இரண்டாவது பத்தாண்டுகளில் (1910 -1920) மல்லவரப்பு சுப்பம்மா ‘களாவதி சரித்திரம்’ (1914), எஸ் ஸ்வர்ணம்மா ‘இந்திரா’ (1916), வி  ஸ்ரீனிவாசம்மா ‘ப்ரியான்வேஷணமு’, ‘சீது பிண்டாரி’ போன்ற நாவல்களை எழுதியதாக ‘நவ்யாந்திர சாகித்ய வீதுலு’ மூலம் தெரிகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து கொண்டவரான மாகண்டி அன்னபூர்ணா 1917 ல் எழுதிய ‘சீதாராமமு’ என்ற நாவல் கிடைத்தால் அவருடைய தனிமனித ஆளுமை எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்று அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். 1918 லேயே ‘ரூபவதி’ என்ற நாவலை எழுதி அல்லூரி வேங்கடசீதம்மா படைப்புலகில் அடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த நாவல் 1926ல் தான் அச்சானது. ‘உபய பாஷா பிரவீணா’ என்பது அவருடைய கல்வித் தகுதி. ‘கவிதா விஷாரதா’ என்பது அவருடைய விருது. சிலகமர்த்தி லட்சுமி நரசிம்மம் பந்தலு எழுதிய ‘ராஜஸ்தான் களாவளி’ என்ற நூலில் உள்ள மூக்கல ராணா சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ராஜபுத்திர அரச வம்சத்தைச் சேர்ந்த ரூபவதியை கதாநாயகியாக்கி சீதம்மா இந்த நாவலை எழுதியுள்ளார். 1/16 கிரௌன் சைஸில் 212 பக்கங்களில் வந்த இந்த வரலாற்று நாவல் 1983ல் சில மாற்றங்களோடு மீண்டும் அச்சானது. மதராஸ் மாநில பாட புத்தகக் கமிட்டியின் ஒப்புதலை பெற்று மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமாக இந்த புத்தகம் விளங்கியது. அவர் ராதா மாதவமு என்ற 313 பக்கங்கள் கொண்ட சமூக நாவலையும் எழுதி உள்ளார். ஆனால் இரண்டும் இப்போது கிடைக்கவில்லை.

1905 ல் வங்காளப் பிரிவினையை எதிர்த்த வந்தே மாதரம் போராட்டத்தில தேசிய உணர்ச்சிகள் மேலெழுந்த சந்தர்ப்பத்தில் பங்கின் சந்திரர், ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களின் படைப்புகள் வங்க மொழியிலிருந்து தெலுங்குக்கு வரத்  தொடங்கின. அதே சமயத்தில் வங்காளத்திலிருந்து துப்பறியும் நாவல்கள் அதிக அளவில் தெலுங்கில் வந்தது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆந்திர பிரசாரிணி, வேகுசுக்க கிரந்தமாலா போன்றவை அவற்றை தாராளமாக வெளியிட்டன. 

அவற்றை ‘நிரூபக நாவல்கள்’ என்று அழைத்தனர். இந்த நிரூபக நாவல்களைப் படைப்பதில் பெண்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

‘சீரம சுபத்ராயாம்பா’ என்ற பெண் எழுத்தாளர், ஒரு பிரஞ்சு நாவலை அனுசரித்து 1926-27 ல் ‘ஜாகிலமு’ என்ற நாவலை எழுதினார். அவருடைய வழியில் நிரூபக நாவல்களின் படைப்பிற்கு முன்வந்த மற்றொருவர் பூலவர்த்தி கமலாதேவி. இவர் எழுதிய நிரூபக நாவல்களில் மீர்ஜாம்லாவும் ஒன்று (1929). விக்டோரியா க்ராஸ், புளிந்த கன்யா என்ற நாவல்கள் மட்டுமின்றி, குமுத்வதி என்ற வரலாற்று நாவலையும், விஜயபாஸ்கர விஜயம் (1929) என்ற சமூக நாவலையும் கூட அவர் எழுதினார்.

கணவர் எத்தனை அலட்சியப்படுத்தினாலும், பிற பெண்கள் மீது மோகத்தோடு எத்தனை இக்கட்டுகளை ஏற்படுத்தினாலும் பொறுத்துக் கொண்டு வாழ்வதில் பெண்களின் வாழ்க்கை சிறக்கிறது என்பதை நிரூபிக்கும் கருப்பொருளோடு எழுதப்பட்ட இந்த நாவல்களில் அவ்வாறு வாழ்வதில்தான் பெண்கள் மேம்படுகிறார்கள் என்ற கருத்தும், அவ்வாறு வாழ்வதே மானத்தோடு வாழ்வதாகும் என்ற கருத்தும் உள்ளூடாக காணப்படுகிறது. இவ்விதம் 1906 முதல் 1929க்கு இடைப்பட்ட இருபத்து மூன்று ஆண்டுகாலத்தில் பெண்களின் நாவல்கள் பதினைந்துக்கு மேல் காணப்படவில்லை.

***

குறிப்பு: இந்த ஆக்கம் தெலுங்கு மொழியில் நெச்செலி என்ற பெயர் கொண்ட ஓர் இணைய இதழில் தொடராக இதே சமயம் வெளி வருகிறது. தெலுங்குப் பத்திரிகைக்கான சுட்டி இதோ: https://www.neccheli.com/

(தொடரும்)

Series Navigationமல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.