
வெண்மை குறைந்து அருகி கருமை கூடிக்கொண்டே வந்தது. லட்சுமியின் வெள்ளை வெளேர் கன்று கூட நிறம் மங்கித் தெரிந்தது. சாணி மெழுகிய முற்றங்கள் இருள் பூசிக் கிடந்தன. இருள் வெகு அருகில் வந்து விட்டதெனும் தொனி ஊர் முழுவதும் துலங்கியது. பறவைகளின் குரலேதும் எழவில்லை. அவசரமாய் கூடடையும் சிறகடிப்புகள் மட்டும் அவ்வப்போது கேட்டன. காற்றில் நீரின் ஈரம் கூடி வந்தது. பின் தூறல். வானிலிருந்து குதித்து காற்றில் அமர்ந்து தரை நெருங்கவும் தாவி மண்ணில் குதித்தன துளிகள். மண்டிக் கிடக்கும் பசுமை மெல்ல நீராடத் துவங்கியது. ஊரின் வெளியே அமைந்த ஏரிநீர் மெல்ல சிலிர்க்கத் துவங்கியது. உச்சி வெயில் நேரம் சூரியனின்றி வெறும் கரும் மேகக் குவைகளுடன் இரவெனக் காட்சியளித்தது. என்ன அதிசயம் என அண்ணாந்து வான் பார்த்தார்கள் சிலர். கோழிகளை ஆடுகளை வேகமாக அடைத்தார்கள் சிலர். தூறலோடு சிலர் வீடடைந்தார்கள். ‘கால காலத்துல வீட்டுக்குப் போனா என்ன.. அதான் மழ உருட்டிகிட்டு வருதுல.. இப்ப பாரு கண்ணுக்குத் தெரியாம துமியாத்தான் இருக்கு.. கைல அங்க இங்க ஒரு பொருக்க பாக்கலாம்.. இன்னும் செத்த நேரந்தான் சடசடசடன்னு புடிச்சிகிடும்’ ஏரிக்கரை ஒட்டிய சிறு குன்றில் அமைந்த சிவன் கோயில் பண்டாரம் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்தார். வழக்கமாக கோயில் முன்னிருக்கும் அரச மரத்தின் கீழ் கூடும் கூட்டம் இன்று வீடடைந்து விட்டது. மரத்தினடியில் அமர்த்து நீர் அருந்தத் தயாராகும் தாகித்த ஏரியையும் விழுந்தடித்து ஓடும் மக்களையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஓடிக்கொண்டிருந்த சிவராசு நின்றார் பண்டாரத்தைக் கண்டதும்,
‘சாமி பாத்தியல.. என்ன இருட்டு இது.. மை பூசிட்ட மாதிரில கருத்து கடக்கு.. மழன்னா இப்பிடியா இருட்டும்’
‘ஆருக்குத் தெரியும்.. மழக்கி மின்ன வீட்டுக்குப் போ’
உச்சி கால பூஜை செய்துவிடலாம் என எழுந்தார். முப்பத்தி இரண்டு படிகள். பதினாறு படிகள் விட்டு சற்று சம தளம். பின் மீண்டும் பதினாறு படிகள். நினைவறிந்த நாள் முதல் அக்கோயில்தான். தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிலர் வந்தபோது, அக்கோயில் ஆயிரமாண்டுகள் பழையது எனக் கணித்தனர். லிங்கம் அதற்கும் பழையது எனக் கணித்தனர். லிங்கம் அலங்காரமெல்லாம் ஆகியிருந்தது. கொஞ்சம் பூவை சாத்திவிட்டு.. கையில் மணியை அலைத்தபடி ஆரத்தி எடுக்கவும், மழை பெருத்து சடசடக்கவும் சரியாக இருந்தது. தீபமொன்றை ஏற்றி கண்ணாடிக் குடுவைக்குள் வைத்தார். ஒரு சுற்றுப் பிரகாரமுள்ள கோயில். மூன்று யானை சுற்றி வரலாம். அவ்வளவு அகலம். கூரையேதுமில்லை சுற்றுப் பிரகாரத்திற்கு. கோயில் மதிலை ஒட்டி உட்புறமாக வரிசையாத் தூண்கள அமைத்து மண்டபம் உண்டு. சுவாமி சன்னதியை விட்டால் அடுத்து அங்குதான் நிழல். சற்று நேரம் சன்னதி வாசலிலேயே அமர்ந்திருந்தார். மழை வலுத்திருந்தது. கருங்கல் தரையில் விழும் ஒலி. வானிலிருந்து யாரோ கோயிலுக்கு முழுக்கு செய்வதாய் நினைத்துக் கொண்டார். அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து படிகளும், கோயிலுக்கு நேரெதிராக நிற்கும் அரச மரமும் தான் தெரிந்தது. எழுந்து கொண்டு,
‘அப்பனும் அம்மையும் சுற்றமும் உறவும் பொன்னும் மணியும்
வேண்டேன் வேண்டேன் பொற்கழல் பாதம் பற்றும்
பேரின்றி வேறொன்றும் வேண்டேன் வேண்டேன்’
எனப் பாடி முடித்தார். ஒரு சட்டியில் இருந்த பொங்கலை எடுத்து நைவேத்யம் செய்தார். பின் தலையில் துண்டை போட்டுக்கொண்டு கோயிலின் ஒரு மூலையில் இருக்கும் மணிக்கு ஓடினார். பத்து முறை மணியை அடித்தார். மழைத் துளிகளைக் கிழித்துக்கொண்டு மணியின் நாதம் பிரவேசித்தது. பின் மதிலை ஒட்டிய மண்டபத்தை ஒட்டியே நடந்து வடமேற்கு மூலையில் இருக்கும் மடைப்பள்ளிக் கதவை மூடினார். பின் மீண்டும் மணியின் அருகிலேயே வந்து அமர்ந்துகொண்டார். அங்கிருந்து அரச மரத்தின் உச்சந்தலையும் மழை துளைத்துக்கொண்டிருக்கும் ஏரியும் தெரிந்தது. திரும்பி சன்னதியைப் பார்த்தார். விளக்கு அணைந்து விட்டிருந்தது. லேசாக தூணில் சாய்ந்து கொண்டு மழையை வேடிக்கை பார்க்கத் துவங்கினார்.
அன்று உச்சிகால பூஜையின் போது வலுத்த மழை உச்சஸ்தாயி குறையாமல் நீண்டு கொண்டே சென்றது. ஊருக்குள் மழையோடு மழையாக விறகு கூட்டி சமையல் ஆனதும் சாப்பிட்டுவிட்டு மழையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பேச்சுக்குக்கூட வீட்டை விட்டு வெளி வர முடியவில்லை. பஞ்சாயத்துக் கூடத்தில் பெரியவர்கள் இளையவர்கள் என அந்த மழைக்கும் விழுந்தடித்து ஓடி வந்தனர். வீடடையாத சில ஆடுகளும் அவர்களோடு கிடந்தன.
‘ஏய் ராசப்பா.. மழ’ கண்ணை உருட்டி ம் ஹூம் என வலது இடமாய் தலையை ஆட்டி ‘நிக்கிறாப்ல தெரியல’ என்ற மூர்த்தி சிறு சிரிப்புடன் ராசப்பனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
‘வானம் அறுந்துல விழுது’
‘இது நிக்காது பாத்துக்க’ என்றபடி தரையில் துண்டை விரித்தார் மூர்த்தி. மாலை சாயரட்சை முடிந்து சிவன் கோயில் மணி கேட்டபோது லேசாக கவலை எழுந்தது ராசப்பனுக்கு. வீட்டுக்கு கிளம்புறேன் என்று தலையில் முக்காடிட்டபடி ஓடத்துவங்கியவர் பாதியில் திரும்பி ஏரியை நோக்கி ஓடினார். ஏரியிலிருந்து பிரியும் வாய்காலைக் கடக்கும் பாலத்திற்கு முன் வலது புறமாக திரும்பினால் சிவன் கோயில். படியேறி உள்ளே நுழைந்தார். கோபுரத்தின் கீழேயே நின்றபடி சன்னதி சாத்தியிருப்பதைப் பார்த்தார்.சுற்று மண்டபத்தைப் பார்த்தார். பண்டாரம் தன்னைத்தான் பார்துக்கொண்டிருந்தார். மதிலை ஒட்டிய மண்டபம் தரையிலிருந்து ஒரு ஆள் உயரம். படி வரைக்கும் ஓடாமல் கையால் தம் கட்டி ஏறினார்.
‘ஏன் மழைல கெடந்து இப்டி வார’
‘இல்ல சாமி சாப்ட்டியளான்னு கேக்கணுமுன்னு வந்தேன்’
‘காலைல வெச்ச பொங்கல் இருந்துச்சு சாப்டேன்’
‘ராத்திரிக்கு’
‘ராத்திரிக்கு சாப்டறதில்ல.. ரெண்டு வேளதான் ஒணவு’
‘சரிங்க சாமி அப்ப நான் கெளம்புறேன்’
உட்கார் என்பது போல் கைகாட்ட ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டான் ராசப்பன்.
‘என் அப்பா சொல்றதுண்டு.. அவரும் கோயில் பண்டாரமாத்தான் இருந்தாரு.. அவரோட அப்பா சொன்னதா சொல்வாரு.. என் தாத்தாவுக்கு பதினஞ்சு வயசிருக்கப்ப.. நூறு வருஷம் முன்னாடி இருக்கலாம்.. மழ அடிச்சு தீத்துதாம்.. ஏரி கர ஒடஞ்சு.. ஊரெல்லாம் தண்ணி.. கோயிலோட முப்பத்திரெண்டு படியையும் தாண்டி கோயிலுக்குள்ள நீர் வந்துச்சாம்.. மழை ஆரம்பிக்கிறதுக்கு மின்ன வெளக்கு அணஞ்சு அணஞ்சு போச்சாம்.. இந்த மணி கூட அறுந்து விழுந்ததா சொல்வாங்க.. ஊர் சனமெல்லாம் கோயில்லதான் கெடந்திருக்கு ஒரு வாரத்துக்கு.. என் தாத்தா சகுனத்த பாத்ததுமே ஊர்ல இருக்க அரிசி சோறு வெளச்ச பூராத்தையும் மடப்பள்ளீல வெக்க சொல்லிட்டாறாம்.. காஞ்ச வெறகு ஒரு மாட்டு வண்டி சேத்துக்கிட்டாங்களாம்… அப்டி சமாளிச்சதா கத…’
‘என் பாட்டி சொல்ல கேட்டுருக்கேன் சாமீ.. ஆனா இப்ப ஏன் அத சொல்றீங்க’
‘சொன்னேன்’
சற்று அமைதியாய் அமர்ந்திருந்துவிட்டு ராசப்பன் எழுந்து ஓடினான். பஞ்சாயத்து கட்டிடத்தில் யாருமில்லை.
‘எங்க இவ்ளோ நேரம் கூட்டிகிட்டு.. எங்க போனது?’ என்றாள்.
‘பண்டாரத்த பாத்துட்டு வாரேன்’
‘சாமி என்ன பண்ணுது’
‘ரெண்டு வேளதான் சாப்பாடாமே சாமிக்கு’
‘ஆமா அது தெரியாதா’
தலையை துவட்டியபடி ‘என்ன இப்டி மழ பெய்தே’ என்றான்.
‘உச்சிகால பூஜைக்கு முன்னாடி ஆரம்பிச்சது. ஓயக்காணும். கொஞ்சமும் சடசடப்பு குறையல.. வீட்டுக்குள்ள தர்ர்ர்ர்ர்ர்ருண்ணு இந்த சத்தத்துல தலவலியே வந்திடும் போலருக்கு’
சாப்பிட்டுப் படுத்தார்கள். ஊர் அடங்கி விட்டது. ஊரை அப்படியே அடியோடு பிய்த்துபோக இறுக்கும் உள்ளங்கையைப் போல மழை இரங்கிக்கொண்டிருந்தது. வெட்டி மறையும் மின்னலில் ஊர் மழையில் பளபளத்துக் கிடப்பது தெரிந்தது. நுழைவாயில் கோபுரக் கலசமும் சன்னதியின் மேலிருக்கும் ஒற்றைக் கலசமும் மின்னலில் ஒளிர்ந்தடங்கியது. மாடுகளின் கழுத்து மணிச் சத்தம் மழையினூடே மெலிதாகக் கேட்டது. துளியும் மழை குறையவில்லை. கருத்த வான் கடலெனக் கிடந்தது. நீரெல்லாம் சரித்துதான் ஓய்வேன் எனும் சபதத்தோடு. இரவையும் காலையையும் பிரிக்கும் கோடு அழிக்கப்பட்டிருந்தது. பறவை கூடடைவதுபோல் பகல் இரவுக்குள் பொதிந்துகொண்டது. வெறும் இருள்.
உஷத் கால பூஜை முடித்து சன்னதி வாசலோரம் அமர்ந்துகொண்டு முந்தைய தினம் போலவே இன்றும் மழையைப் பார்த்தார் பண்டாரம். மழை ஆரம்பத்தில் கொடுக்கும் குதூகலம் வடிந்து விட்டது. வெயில்தான் சரி. வெயிலைப் போல மழை விடாது பொழிந்தால் ஆகாது. அறுவடை முடிந்து ஒரு மாதம் கூட ஆகாததால் வயல் செல்லும் வேலையும் இல்லை. வீட்டிற்குள்ளேயே அடங்கிவிட்டனர் மக்கள். இரண்டாவது நாள் மாலை ராசப்பனின் முகத்தில் கவலை நன்றாகவே ஆடியது. சாயரட்சை முடிந்து மணி சத்தம் தூரத்தில் கேட்டது. பண்டாரம் மணியை அடிக்க அடிக்க மணி நாதம் மழைக்குள் விழுந்தடித்து ஓடிவருவதாய் நினைத்துக்கொண்டான். ஊர்ப்பெரியவரான கந்தசாமியாரைப் பார்க்க வேண்டும் என நினத்தான். வீட்டில் சொல்லிவிட்டு மழையோடு விழுந்து ஓடினான். மேலத் தெருவில் முதல் வீடு. ஓடிச் சென்று திண்ணையில் அமர்ந்தான். அவர் மனைவிதான் இருந்தார்,
‘வாப்பா’
‘எங்க, மாமா இல்லையா’
‘எங்கையோ ஓடுனாரு கைல ஒரு பைய எடுத்துகிட்டு’
பேசிக்கொண்டிருக்கையிலேயே மழையில் முழுக்க நனைந்து திண்ணைக்கு ஏறினார் கந்தசாமியார்.
‘ஏய் ராசப்பா வா மாப்ள… ஒன்னத்தான் பாக்கனும்னு நெனச்சிட்டே இருந்தேன்… என்ன மழைய்யா இது.. எனக்கு கவலயா போச்சு’
‘அதேதான் மாமா எனக்கும். எங்க போய்ட்டு ஓடியாறீங்க’
‘எல்லையம்மன் கோயிலுக்கும் சிவன் கோயிலுக்கும் போய்ட்டு வரேன்..வெளக்கு போட்டுட்டு வரேன்,.,, பண்டாரம் இருந்தாரு, பாத்து பேசினதும் கொஞ்சம் நிதானம் சிக்குச்சு’
‘அவருக்கு சாப்பாடு..’
‘அரிசி காய்கறி கொஞ்சம் போட்டு குடுத்துட்டு வரேன்… ராசப்பா சொல்றது தெளிவா கேட்டுக்க… ஊருல இருக்க அரிசி, தானியம் எல்லாம் கோயிலுக்கு போய் ஆவனும். சிவன் கோயில் இருக்குறதுதான் மேடு பாத்துக்க, அடுத்து எல்லையம்மன் கோயில் இருக்குறது ஒரு மேடு.. ஆனா சிவன் கோயில்ல மடப்பள்ளி இருக்கு.. மதில் சொவர ஒட்டி மண்டபம் இருக்கு. மண்டபத்தூண ஒட்டி துணி கட்டிவிட்டா மழைதண்ணி அடிக்காம சனம் படுத்துக்கும்.. என்ன முழிக்கிற… சிவன உட்டா வேற என்ன கதி நமக்கு’
‘மாமா ஊர காலி பண்ணி போற அளவா ஆயிடுச்சு’
‘ஆமா மாப்ள.. ஏரிய பாத்தியா இல்லியா..’
‘இல்ல மாமா’
‘வா போவோம்’
‘ஏங்க என்ன அந்த புள்ளையையும் கூப்பிடுறீங்க.. என்ன கிறுக்கா ஒங்களுக்கு’
‘பங்கஜம் சும்மா இரு சித்த.. ராசு ஏரிய பாக்கட்டும் அப்புறம் தெரியும்.. அது எல்லாத்தையும் விடு.. பண்டாரம் சொன்னத்த சொல்றேனே.. நம்ம நெலமெல்லாம் இருக்குறது மேட்டுப் பகுதில.. ஊர்லேந்து நூறு மைலு தள்ளி போனாத்தான் ஆறு.. அதுக்குத்தான் அந்த காலத்துல எங்க பாத்தாலும் ஏரிய வெட்டுனான் ராசாக்கள்ளாம்… ஏரி நெறைக்க மழ.. அவ்வளவுதான் நாம பாத்தது.. பேஞ்சா எப்டி பேயும்.. ஒரு அரை மணி நேரம் பெய்யுமா மழ.. அப்டி பேஞ்சாலே செமத்தியான மழன்னு சொல்லிட்டு திரியும் மக்க.. அந்த மழயத்தான் இந்த நெலம் தாங்கும்… இப்ப பெய்யிதே மழ.. யாரு என்னன்னு அறிஞ்சா.. என் தாத்தா சொல்ல கேட்டிருக்கேன் ஊருக்குள்ள வெள்ளம் வந்த கதைய.. நூறு வருஷமா வானும் மண்ணும் எல்ல மீறாம் இருந்துச்சு… இப்ப மீறுனுச்சுனா? மீறுரது மீறாததெல்லாம் நம்ம கணக்குதான… சாஸ்தி தண்ணி இருக்கு எங்கிட்ட உன்கிட்டத்தான் கொடுப்பேன்னு வானம் கொட்டுது.. மண்ணு வாங்கி ஏரியெல்லாம் நெரப்பி.. மண்ணெல்லாம் குளிர வெச்சு.. அப்றம் மெல்ல ஆவியா மேல கொடுக்குது.. இது அதுக கணக்கு.. சாமி கணக்கு,.. அத கணிக்க மனுஷனால முடியாது,… நாளைக்கே மழ நின்னாலும் நின்னதுதான்.. ஆனா தானியம் பூரா கோயிலுக்கு போறதுதான் நல்லது’ என்று முடித்தார்.
ராசு பெருமூச்சுவிட்டான். தலையில் ஒரு சாக்கை போட்டுக்கொண்டு ராசுவுக்கு ஒரு சாக்கு கொடுத்தார். இருவரும் மழையில் விழுந்து ஓடினார்கள் ஏரியை நோக்கி. இவர்கள் ஓடுவதைப் பார்த்து சிவராசுவும் மூர்த்தியும் இவர்கள் பின்னே ஓடிவந்தார்கள். ஏரியைப் பார்த்த போது ராசப்பன் இன்னதென்று புரியாமல் நின்றான். வாய்க்காலில் நீர் விழுந்தடித்து ஓடியது. ஏரி பொங்கி மேலெழுந்திருந்தது. ஏரியின் தூரத்து மறு கரையில் தெரியும் குன்று மழைத்தாரையில் மறைந்திருந்தது. காற்றுக்கு மழை சிறு ஓட்டம் எடுக்கையில் இரு மழைத்திரைகளுக்கு நடுவே தோன்றி மறைந்தது குன்று. வாய்க்காலும் நிரம்பி ஓட, எப்பொழுது வேண்டுமானாலும் நீர் ஊர் நோக்கித் திரும்பும் எனப் பட்டது.
ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீடென விஷயம் வேகமாய்ப் பரவியது. ஊரின் ஆண்கள் எல்லாம் மாட்டு வண்டியில் தானிய மூட்டைகளை ஏற்றினர். வெளிச்சமில்லாத கும்மிருட்டு. கண்கள் இருளுக்குப் பழகி அறிந்த ஒளியில்தான் ஒட்டு மொத்த வேலையும் நடந்தேறியது. சிலர் குடும்பமாய் கோயிலுக்கு வந்து விட்டனர். இரவு வெகு நேரமானது அவரவர் வீட்டில் அடங்க. உஷத்கால பூஜை நடக்கும் வேளையில் ஊரின் முகப்பில் இருக்கும் இல்லத்திற்குள் நீர் புகுந்தது.பின் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நீர் மெல்ல நிறைந்து நிலைப்படி வரை தேங்கி நின்று, ஒன்றிரண்டு துளிகளாய் உள்நுழைந்து பின் திவலைகளாய் தாவிக்குதித்து பின் பிரவாகமாய் வீட்டிற்குள் நிறைந்தது. கெண்டைக்கால் நீர் வந்த போதே எல்லோரும் கோயில் நோக்கி நகர்ந்தனர். சிவன் கோயிலின் மதிலை ஒட்டிய சுற்று மண்டபம் முழுதும் மக்கள் நிறைந்து விட்டிருந்தனர். இன்னும் மக்கள் வந்து கொண்டிருந்தனர். ராசப்பனும் சிவராசுவும் வருபவர்களை இடம் பிரித்து வைத்தனர். மூர்த்தி இளம்பிள்ளைகள் பெண்டுகள் உதவியோடு ஊருக்கே சமைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். சிறு சலசலப்பு ஏற்பட்டபோது பண்டாரத்தோடு கந்தாசாமி பேசிக்கொண்டிருந்தார். ராசப்பன் ஓடி வந்து,
‘மாமா எடம் பத்தல.. தகராறு ஆயிடும் போல இருக்கு’
பண்டாரம் ‘கந்தா நீ போனாத்தான் சரி வரும் போ’ என்றார்.
கந்தசாமி அங்கு வந்த போது ஒரு கூட்டம் கூடியிருந்தது.
கூட்டத்தை கையமர்த்தி ‘இங்க பாருங்க இங்க எடமில்ல.. எல்லையம்மனும் மேட்டுலதான் இருக்கு… அங்க போக வேண்டியதுதான் மித்த சனங்க..’
‘அரிசியெல்லாம் இங்கைல இருக்கு,.. அங்க மடப்பள்ளி கெடையாது..’
‘சரிதான்,..’
‘அரிசிய பிரிச்சு குடுத்து விடுங்க.. மொதல்ல எல்லா அரிசியையும் ஒன்னா ஏன் கலந்தீங்க..’
‘இல்லா நாதா, இங்கபார் பேசிட்டே போகாத.. நான் எல்லாத்தையும் பண்டாரத்துகிட்ட பேசி முடிவெடுத்திருக்கேன்..’
‘நீங்க ஆரு முடிவு சொல்ல’
‘நான்தான் சொல்லுவேன்.. வேற யாரு சொல்றது… எல்லா அரிசியும் இங்க மடப்பள்ளீல இருக்கும்… யாருது எவ்வளவுங்குற கணக்கு கெடையாது.. சாப்பாடு தயாராகி வரும்.. வயசானவங்க மாசமா இருக்க பொம்பளைங்க கொழந்தைங்களுக்கு மூணு வேள சாப்பாடு மிச்ச ஆளுகளுக்கு ரெண்டு வேளதான் சாப்பாடு.. என் குடும்பம் ஒங்களோட எல்லையம்மன் கோயில்ல வந்து இருக்கும்.. ஒங்களுக்கு சாப்பாடு கொண்டாந்து சேக்க வேண்டியது என் பொறுப்பு’
சொல்லி முடிக்கவும் உச்சிகால ஆராதனை ஆகவும் சரியாக இருந்தது.. சிவனே எனும் ஏக்கக் குரல்களும் கைகளால் கன்னத்தில் அடித்துக்கொள்ளும் ஒலியும் கோயிலை நிறைத்தது.
கோயிலில் தங்குவது அவ்வளவு எளிதாக இல்லை. நீர் பல இடங்களில் உள் தெரித்தது. ஆனால் எப்படியோ கிடைத்த இடத்தில் படுத்தோ அமர்ந்தோ கூட உறங்கினார்கள். சுற்று மண்டபத்தை விட்டு இரங்க முடியாது. மழைதானே நனைந்தால் போகிறது என சிலர் இறங்கி வேலை செய்தனர். மழை மட்டும் குறைந்த பாடில்லை. மழைச்சத்தம் காதுகளுக்கு பழகி விட்டிருந்தது. மடப்பள்ளியை ஒட்டி வேகவேகமாய் ஒரு கொட்டகை போடப்பட்டு பசுக்களும் ஆடுகளும் நிற்கவைக்கப்பட்டன. குழந்தைகள் கர்ப்பிணிகளுக்கு மட்டும் பால். மெல்ல எல்லையம்மன் கோயிலும் நிரம்பியது. உணவு இங்கிருந்து பரிசலில் கொண்டு செல்லப்பட்டது. முக்காடிட்டபடி ராசப்பனும் சிவராசுவும்தான் கொண்டு சென்றார்கள். வீடுகளில் ஜன்னல் வரை நீர் ஏறிவிட்டிருந்தது. மூர்த்திதான் சுற்று மண்டபத்தின் மீதேறி பின் கோயில் மதில் மேல் ஏறி நோக்கினார். வெறும் நீர். இரண்டு கோயிலையும் நீர் சூழ்ந்திருந்தது. வீடுகளின் கூரை மட்டும்தான் தெரிந்தது.
அன்று சாயரட்சை நடந்த போது மக்கள் முண்டி மோதி தரிசித்தார்கள். சில பெண்கள் அழுதார்கள். இரவுக்கு அரிசிக் கஞ்சியும் கொஞ்சம் ஊறுகாயும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. ஓயாது மண்டபத்தை சுற்றி ஓடிய குழந்தைகளை அடக்கினார்கள். ராசப்பனின் கைமகவுக்கு காய்ச்சல் எடுத்தது. அன்றிரவுக்கெல்லாம் நன்றாய் உடல் கொதித்தது. குழந்தை எப்பொழுதோ அழுகையை நிறுத்தி விட்டிருந்தது. வைத்தியர் பார்த்து சூரணம் கொடுத்தால் பொதும். ஆனால் வைத்தியர் பக்கத்து ஊர். நடந்தால் ஒரு மணி நேரமெடுக்கும். என்ன செய்வது என புரியாமல் திகைத்தனர். சாயும் காலமே துணிந்து பக்கத்து ஊர் சென்றிருக்க வேண்டும் என்றனர் சிலர். பரிசலில் எப்படி எடுத்துச் செல்வது. மூர்த்தி பரிசலில் நான்கு கட்டைகளை தூண் போல் நிறுத்தி பத்தாயத்தின் ஒரு பகுதியை கூரை போல் அமைத்தார். இடுக்குகளை அரக்கு வைத்து அடைத்தார். ராசப்பா நீ இரு நான் போய்க்கிறேன் என்று மூர்த்தியே கிளம்பினார். மூர்த்தி, தாய், குழந்தை அதற்குமேல் வேண்டாம் என முடிவானது. பத்துப்படிகள் வரை நீர் ஏறிவிட்டிருந்தது. எல்லோரும் ஒரு சாக்கை போட்டுக்கொண்டு படியில் நிற்க பரிசலை அருகிழுத்து மூர்த்தி பிடித்துக்கொள்ள தாய் கையில் மகவோடு ஏறிக்கொண்டாள். கந்தசாமி ஆன முட்டும் தள்ளிக் கொடுத்தார். அரிக்கேன் விளக்கொன்றை கூரையோடு மாட்டிவிட்டு துடுப்பிழுத்தார் மூர்த்தி. இரண்டு பக்கமும் சாலையோரம் நிற்கும் மரங்களை கணக்குப் பண்ணி பொய்விடலாமென்று.
‘மூர்த்தி பாத்துயா’ என்றான் ராசப்பன்.
‘சொல்லணுமா இதெல்லாம்.. ஒன்னும் ஆகாது நாங்க வந்திருவோம்..’ பரிசல் மெல்ல சென்று மறைந்தது. கையில் மகவுடன் தாய் அவ்வப்போது திரும்பி கரையைப் பார்த்தாள். ஆனால் மூர்த்தி வேகமாக துடுப்பு வலித்தார் திரும்பி நோக்க நேரமில்லாமல்.
மீண்டும் எல்லோரும் கோயிலுக்குள் ஒடுங்கினர். மணியைச் சுற்றி கந்தசாமி ராசப்பன், சிவராசு, பண்டாரம் அமர்ந்திருந்தனர். மணி பதினொன்னு இருக்குமா என யாரோ கேட்பது கேட்டது. அங்கங்கு சிலர் பேசும் கலைசலான ஒலி. பூச்சிகளின் சப்தமெல்லாம் உண்டு விழுங்கி அன்று எழுந்து நின்றது மழையின் சோ ஒலி. பண்டாரம் தொண்டையை செருமிக் கொண்டு பாடத்துவங்கினார்,
‘வைத்த நிதி, பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்பொடு இறப்பு என்னும்
‘சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தூம்பி
நோய் உற்று மூத்து நான் தாய்விட்ட கன்றாய் இங்கு இருந்து
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம்,
தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத்
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தூம்பி.’
கந்தசாமி ‘நாய் உற்ற செல்வம்’ என இரண்டு முறை சொல்லிக்கொண்டு பெருமூச்சுவிட்டார். கணீரென எழுந்த குரலில் பாடிக்கொண்டே சென்றார் பண்டாரம். மழையோடு மழையாக அந்த குரலும் சேர்ந்து கொண்டது. ராசப்பன் அவர் பாடுவதைக் கேட்க கேட்க அழுது வைத்தான்.
அடுத்த நாள் உஷத்கால பூஜையின் மணிச்சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்து கொண்டனர். கோயில் வாசல் கதவைத் திறந்த போது நீர் மேலேறி விட்டிருந்தது. இன்னும் நாலு படிகள்தான் பாக்கி. கதவைத் திறந்தவன் ‘அச்சோ தண்ணி கோயிலுக்குள்ள வந்திருச்சே’ என்றதைத் தொடர்ந்து ஒரே கூச்சலும் குழப்பமுமாய் கிடந்தது. கந்தசாமிதான் கையமர்த்தி ‘இருங்க இருங்க பாத்துக்கலாம்’ என்றார்.
அன்று உச்சிகால பூஜை செய்தபோது கோயிலுக்குள் நீர் புகுந்தது. ‘முப்பத்திரெண்டு படின்னாலும் அவ்வளவு ஒசரமில்லைல அதான்’ என்றார் கந்தசாமி. சிவராசு எல்லையம்மன் கோயிலுக்கு பரிசலில் போனான். அங்கும் அதே நிலைமை. மக்கள் பதறி நின்றனர்.
கந்தசாமிகூட சற்றுப் பதற்றமாகக் காணப்பட்டார். பண்டாரம் ஒருவரே அமைதியாக இருந்தவர். அவர் நாளில் எம்மாற்றமும் இல்லாமல் இருந்தது. அன்று சாயரட்சையின் போது நீர் கோயில் சுற்றுப் பிரகாரத்துக்குள் நன்றாக ஏறிவிட்டிருந்தது. கால்நடைகள் அடிமாற்றி நின்றன.
‘ஆடுங்களுக்கு கழுத்து வரைக்கும் ஏறிட்டுன்னா மேல ஏத்திக்கலாம்’ என்றார் கந்தசாமி.
அன்றிரவு உணவு சிவனுக்கு நைவேத்யம் செய்தபின் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. அன்றிரவே கால்நடைகள் எல்லாவற்றையும் சுற்றுப் பிரகாரத்திலிருந்து மண்டபத்துக்குள் ஏற்றிக்கொண்டனர்.
பண்டாரம் அன்றும் பாடினார், ஆனால் ஒரே பாடலை ஏழு முறை வெவ்வேறு விதமாக,
‘மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய் தான் தவிர்ந்து உன்னைப் “போற்றி சய சய போற்றி” என்னும்
கைதான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.’
அன்றிரவே மண்டபத்துக்குள் நீர் வந்துவிடும் என்பது கந்தசாமியின் கணக்கு. பண்டாரத்திடம் சொன்னார்.
‘சரி. படுத்து தூங்கு. அப்டி வந்தா நாளைக்கு இன்னும் வேல இருக்கும்.. ஒழுங்கா தூங்கு’ என்றார்.
கந்தசாமி உறங்கவில்லை. அருகில் ராசப்பன் அமர்ந்திருந்தார். நீர் ஏறி ஏறி வந்தது. எப்போது உறக்கம் கவ்வியது எனத் தெரியவில்லை.
வைகறையில் பண்டாரம் எழுந்து கொண்ட போது மழைச் சத்தம் இல்லாததை உணர்ந்தார். ‘சிவ சிவ’ என்றபடி மழை நீர் நிறைந்த அண்டாவிலிருந்து தலைக்கு ஊற்றிக்கொண்டார். அண்ணாந்து வானம் பார்த்தார், நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை, வளப் பெரும் காட்சி’ எனப் பாடினார். நீரில் இறங்கி நீந்தி சன்னதி அடைந்தார்.
அன்று பத்தாம் நாள். மழை நின்றிருப்பது எல்லோருக்கும் ஒரு நிம்மதியை அளித்தது. ஆனாலும் திக்கற்ற ஒரு உணர்வுடன்தான் மக்கள் இருந்தனர். அன்று காலை உணவு ஆனது. சூரியன் இன்னும் காணவில்லை. பூமி தோன்றியதிலிருந்து அதுவே முதல் முறை பத்து நாள் சூரியன் இல்லாமல் இருப்பது என குழந்தைகளுக்கு கதை சொன்னான் சிவராசு. அன்று மதியம் லேசாக மீண்டும் மழை பெய்தது. ஆனால் நின்றுவிட்டது. கந்தசாமி உற்சாகமாய் ‘அவ்ளதான் நம்ம ஊர் மழ.. பெய்யும் விட்டுடும்.. இனி ஒன்னுமில்ல’ என்றார். உசுரு ஏதும் போகல என்பதில் நிம்மதி என நினைத்த போது அவருக்கு ராசப்பனின் குழந்தை நினைவுக்கு வந்தது.
பண்டாரம் அன்று சொன்னார் ‘இன்னும் பத்து நாள் கோயில்லதான் இருந்தாகனும்.. உக்காந்த எடத்துல உக்காந்துகெடக்கணும்.. மழ நிக்கவும்தான் சீக்கு வரும்… கொள்ளை நோய் வரும்… நிதானிச்சுக்கணும் கந்தசாமி.. நோய விட்டோம்.. மழைக்கு போகாத உசுரு நோய்ல போய்டும்… இன்னும் கடம முடியல கேட்டுக்க’ என்றார்.
‘சரி சாமி’ என்று தலையாட்டினார் கந்தசாமி.
‘மஞ்சள கரச்சு மொதல்ல கோயிலுகுல்ள இருக்க தண்ணீல ஊத்த சொல்லு’ என்றார்.
எல்லையம்மன் கோயிலில் பாதி மக்கள் இருந்தனர். மழை நின்றதிலிருந்து மூன்றாம் நாள் சூரியனின் முதல் கதிர் பட்டு அம்மனின் மூக்குத்தி ஒளிர்ந்தது. பங்கஜம் தலைமேல் கை உயர்த்தி கும்பிட்டாள். சிவன் கோயில் கோபுரத்தின் நிழல் நீரில் விழுந்தது. அன்று உச்சிவேளை பூஜைக்கு அடுக்கு தீபம் காட்டினார், சுற்றுப் பிரகார நீர் வடிந்து விட்டிருந்தது. மக்கள் முண்டியடித்து தரிசித்தனர்.
சூரியன் தகிக்க வேண்டிய காலம்தான் அது. தகித்தது. நோய்த்தொற்று ஏதுமில்லை. மழை நின்றதிலிருந்து பன்னிரெண்டு நாள், மொத்தம் இருபத்து இரண்டு நாள் அவ்வூர் இரு கோயிலில் அண்டி உயிர்வாழ்ந்தது. நீர் முழுவதுமாய் வடிந்து விட்டிருந்தது. ராசப்பன் இடுப்பளவு நீர் இருந்த போதே நடந்தே தன் மனைவியை மகவை மூர்த்தியை தேடிக்கொண்டு சென்றான். பக்கத்து ஊரிலும் வெள்ளம். மக்கள் அங்கிருந்த வீரபெருமாள் ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தனர். அவ்வூர் இருப்பது மேலும் மேட்டுப் பகுதி என்பதால் நீர் வேகமாய் வடிந்து விட்டிருந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் தன் மனைவியை குழந்தையைக் கண்டான். குழந்தை நலமாக இருந்தது. மூர்த்தி வந்த முதல் நாளே ‘என்ன எடுத்துக்க கொழந்தைய உட்டுருன்னு’ ஊர் எல்லைக்காளியிடம் வேண்டிக்கொண்டதாகவும் பின் சுரம் கண்டு இரண்டு நாள் முன்புதான் இறந்து போனதாகவும் சொன்னாள். அவ்வூரில் தொற்று நோய் பரவத் துவங்கியிருந்தது. அவர்கள் நடந்தே ஊர் திரும்பினர்.
வீடுகள் செப்பனிடப்பட்டுக்கொண்டே இருந்தது. கையில் தானியம் இருந்தது. சமையலை இரண்டாகப் பிரித்து விட்டார் கந்தசாமி. பின் ஊருக்குள் ஐந்து இடங்களில் உணவு தயாரானது. ‘வீடுங்க சரியாகுற வரயில பொது சமையல்தான் சொல்லிட்டேன்’ என்றார் கந்தசாமி.
ஒரு வழியாக ஏரி தன் நூறாண்டுத் தாகத்தை மேலெல்லாம் நீர் வழிய அருந்தி முடித்து ஓய்ந்தது. நீர் ஏரிக்கரைக்குள் அடங்கியது. எங்கும் சேறாய்க்கிடந்து பின் காய்ந்து வெடித்து மண்ணானது. ‘வீட்டுச் சமையல் ஆரம்பிக்கலாம்’ என மீத அரிசி பிரித்துக் கொடுக்கப்பட்டது. எல்லாம் தன்னிலை மீண்ட நாளில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஒரு சிறுவன் ஊருக்குள் வந்தான். சிவன் கோயிலில் பண்டாரத்துடன் ஒட்டிக்கொண்டான். பண்டாரம் அவனுக்கு இரண்டு வெள்ளத்தின் கதைகளையும் சொன்னார். திருவாசகம் பாடிக்கொண்டே அங்கு வளர்ந்தான் சின்னப் பண்டாரம்.
பண்டாரம் இறந்த போது அவருக்கு நூற்றி ஒன்பது வயது. கந்தசாமி இறந்து இருவது வருடம் மேலாகிவிட்டிருந்தது. ராசப்பனின் பேரக்குழந்தைகளுக்கு மணமாகியிருந்தது. சின்னப் பண்டாரம் உடலெல்லாம் திருநீறு பூசி நெஞ்சு வரை தாடி வளர்த்திருந்தார். பண்டாரத்தை விடவும் இவர் நன்றாகப் பாடுவதாய் ஊர் மக்கள் பேசிக்கொண்டனர்.
அன்றொருநாள் உச்சிவேலை பூஜைக்கு கொஞ்ச நேரமே இருக்கையில் வானம் வெண்மை அருகி கருமை கூடியது. உச்சிகாலப் பூஜையோடு வலுத்த மழை நீண்டுகொண்டது இரவுக்குள். இரவு படுக்கும்முன் மழையையும் சற்று நேரம் ஏரியையும் பார்த்துக்கொண்டிருந்த சின்னப் பண்டாரம் பாடத் துவங்கினார்,
‘நாயின் கடையன் கடல் கண்டும் கதி அடையாதான்
சொல்லின் பிழை ஆற்றும் வினையின் பிழை
நஞ்சினும் கொடிய நெஞ்சின் பிழை
கோடி கோடி அண்டமென விரிந்தோன்தனை நினையாப் பிழை
கதியில்லை எனக்கே கதியில்லை எனக்கே
பிறப்பறு பிறப்பறு’