சிக்கிம் – பயணக் கவிதைகள்

1.

தீஸ்தா

தீஸ்தாவைப் பிடித்துக்கொண்டு
ஏறினோம்.
ஜன்னல் கட்டங்களாக நதி
வண்டியுடன் ஓடிக்கொண்டிருந்தது.
நுரைத்துக் களிக்கும்
இளம் பச்சை வெள்ளம்.
ஏற ஏற வளர்ந்துகொண்டே
சென்ற மலை நிமிர்விலிருந்து
தாரையாய் வழியும் அருவிகள்.
நீர் கண்படும் வரை
முளைத்து வந்தன
கிராமங்கள்.

2.

காலா பத்தர்

கிராமங்கள் முடிந்த
ஒரு திருப்பத்திலிருந்துதான்
சென்றோம்,
அரவமில்லாத மலைப் பாதை.
பரந்திருந்த பள்ளத்தாக்கு
சுற்றியும் சரிந்திருந்த
கருங்கல் பாறை
பூஞ்சை மலர்ந்ததுபோல
புதுப் பனி விரிப்பு.
அங்கு, மலையுச்சியில்
பயணிகள் பார்வையிடத்தில்
வாகனங்களுக்கிடையே
சேற்றின் மேல்
தேனீர் கடை விரித்திருந்தனர்.

3.

குருடொங்மார் ஏரி

குருவின் கோல் பட்டு
உருகிய நீர், மீண்டும்
உறையவில்லை.
புல் முளைக்கவியலாத
உயரத்தில் பனித்த ஏரி.
கடந்த சில நாட்களில் மட்டும்
எத்தனையாவதோ முறையாக
வந்திருந்த ஓட்டுனர்
வண்டியில் காத்திருந்தார்.
நிலவுத் தரையில்
இறங்குவதுபோல
மெதுவாய் கால்பதித்து,
நடுக்கும் ஏரிகாற்றில்
மூச்சிரைக்கப் பார்த்திருந்தேன்,
அங்கு கூடியிருந்த
குருவிகளை.
அருகிருந்த கோயிலும்
பிரார்த்தனைக் கொடிகளும்
சலசலத்துக்கொண்டிருந்தன.

4.

யும்-தாங் பள்ளத்தாக்கு

கவிழ்ந்த சிமிழ் மலர் பாதை வழியே
இள நீல பூக்கள் படரத் தொடங்கிய
கோடையின் பொன்னிற காலையில்
இமய மலை முகடுகள் புடைச்சூழ
சென்றடைந்தோம்.
சுற்றுலா சந்தைக்கும்
மினுங்கும் கீற்றோடை நோக்கி
சரியும் யும்-தாங் பள்ளத்தாக்கிற்கும்
இடையே,
பெண்கள் ஒதுக்கிட வரிசையில் –
உதிக்கும் செஞ்சிவப்பு,
அப்பெண்ணின் அழகாய் வளைந்த
நெற்றியில்.

5.

ஜுலுக் நோக்கி..

மேலிருந்து கயிறு
இறக்கியதுபோன்ற பாதை.
மேகங்களிலிருந்து மிதந்து
இறங்கிய வண்டியிலிருந்து,
அடுத்த முடுக்கு வரைதான் தெரிந்தது.
எத்தனை தூரம் இறங்கி வந்தோம்,
புரியவில்லை.
வேண்டுதலில் திறந்துகொண்டது
மீண்டும் ஒரு சுவர்க்கம்.
திரை தெளிந்து,
சிறு மரக்க்கொட்டகை.
சிவனும் உமையும் போல
வயிறு நிரப்பி
வழியனுப்பினர்.
இந்த சுற்றுலா பருவத்தில்,
அவர்களின் குடியிருப்பு அங்கே.

(புகைப்படங்கள் – ச.அனுக்ரஹா)

2 Replies to “சிக்கிம் – பயணக் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.