கல்விக் கடனும், 2022 ஆம் ஆண்டின் அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலும்

அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களில் வாக்காளர்களை அதிகம் கவர்ந்தது நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் மருத்துவ காப்பீடு மற்றும் உயர்கல்விக்கான செலவுத் திட்டங்களைப் பற்றின பைடன் அரசின் திட்டங்கள் தான். இச்செலவுகள் இரண்டும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பதால் தேர்தலின் மையப்புள்ளியாகவும் கல்லூரி மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் கட்டணத்தால் கல்லூரிக்கல்வி என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருப்பதும் இந்நிலையை மாற்ற தேசிய, மாநில, கல்லூரி அளவில் பல இலவச நிதிச்சலுகைகள் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தற்போது கடன் வாங்கினால் மட்டுமே கல்வியைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது என்பது தான் நிதர்சனம். இதில் தேசிய, மாநில அரசுகளின் பங்கு என்ன? இந்த நிலையை எப்படி மாற்றப் போகிறார்கள் என்பது தொடர் விவாதமாகவே இருந்து வருகிறது.

நான்கு ஆண்டு இளங்கலை கல்விக் கட்டணங்களின் கல்லூரிச் செலவை ஈடுகட்ட உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஃபெடரல் கல்விக்கடன்கள் உதவுகிறது. கல்வித்துறையின் வில்லியம் டி. ஃபோர்டு ஃபெடரல் நேரடிக் கடன் திட்டத்தின் மூலம் நிலையான வட்டி விகிதங்களுடன் நான்கு வகையான ஃபெடரல் மாணவர் கடன்கள் வழங்கப்படுகின்றன.

இந்த மாணவர் கடன்களுக்கு விண்ணப்பிக்க, ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஃபெடரல் மாணவர் உதவிக்கான (FAFSA) இலவச விண்ணப்பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் கல்விக்கடன்களைப் பெறுவதற்கு சில அடிப்படைத் தகுதிகளை வரையறுத்துளார்கள். தகுதி பெற்றிருந்தால் கல்லூரி நிர்வாகமே எந்தக் கடன்களுக்கு மாணவர்கள் எவ்வளவு தொகையைப் பெறுவார்கள் என்பதை அவர்களுடைய FAFSA தகவல்களின் மூலம் தீர்மானித்து நிதி உதவி கடிதத்தின் மூலம் அறிவித்து விடுகிறது.

இதைத்தவிர வேறு சில விதிமுறைகளுடன் தனியார் மாணவர் கடன்களைப் பெறும் வசதிகளும் உள்ளன. கல்வித் துறையின் கடன் மன்னிப்பு திட்டங்களுக்கு தனியார் கடன்கள் தகுதியற்றவை. இதனால் அவசியம் இருந்தால் மட்டுமே தனியார் கடன்களை மாணவர்கள் நாடுவார்கள்.

இந்தக் கடன்களையெல்லாம் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறியவுடன் பத்து வருடத்திற்குள் திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் வசூலிக்கத் தொடங்குவார்கள். இதைத்தவிர வேறு பல வகையிலும் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வசதிகள் உள்ளன. முதலில் குறைவாக செலுத்தி பின்பு படிப்படியாக அதிகரிக்கும் திட்டம். இது பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். வருமானம் சார்ந்த திருப்பிச் செலுத்துதல் திட்டத்தில் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தி காலக்கெடுவின் முடிவில் மீதமுள்ள கடன் ரத்து செய்யப்படும். நீட்டிக்கப்பட்ட திருப்பிச் செலுத்துதல் திட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு நிலையான தொகையைச் செலுத்தியும் இறுதியில் மீதமுள்ள பணத்திற்கு கடன் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. இது ஒரு சிறந்த வழி அல்ல என்பதால் பலரும் இத்திட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை.


மாநில மற்றும் தனியார் கல்லூரிகளின் செலவுகளை கல்விக்கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். பல நிபந்தனைகளுடன் ஃபெடரல் இலவச நிதி, கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. வருட வருமானம் $60,000க்கும் குறைவாக ஈட்டும் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு ‘பெல் கிராண்ட்’ (PELL Grant) எனப்படும் ஃபெடரல் இலவச நிதிஉதவி வழங்கப்படும். இதன் பயனாளர்களில் 71% கறுப்பினத்தவரும் 65% லட்டினோ இனத்தவரும் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டு கல்லூரிச்செலவில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை ஈடுகட்டிய இந்த கிராண்ட் தற்போது மூன்றில் ஒரு பங்கை மட்டுமே ஈடுகட்டுகிறது. இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் பட்டம் பெற விரும்பினால் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. கல்வித்துறையின் பகுப்பாய்வின்படி, கடன்கள் வாங்கி கல்லூரிக்குச் செல்லும் இளங்கலை மாணவர் படிப்பை முடிக்கையில் குறைந்தது $25,000 கடனுடன் கல்லூரியை விட்டு வெளியே வருகிறார். பட்டம் பெற்ற நாளில் இருந்து கடனை அடைக்கப் போராடுவதால் எதிர்கால திட்டங்களான வீடு வாங்குவது, ஓய்வூதியத்திற்கான பணத்தை ஒதுக்கி வைப்பது, சிறு தொழில்களைத் தொடங்குவது போன்றவை பாதிக்கப்படுகிறது.

இந்தச் சுமையைச் சிறிது குறைக்க அதிபர் பைடன் ‘மாணவர் கடன் நிவாரணத்தை’ சில நிபந்தனைகளுடன் ஆகஸ்ட் 24, 2022 அன்று அறிவித்தார். இதன் மூலமாக கல்வித்துறை வழங்கிய கடன்களுடன் பெல் கிராண்ட் பெறுபவர்களுக்கு $20,000 வரையிலும், பெல் கிராண்ட் பெறாதவர்களுக்கு $10,000 வரையிலும் கடன் ரத்து செய்யப்படும். கடன் வாங்குபவர்களின் தனிநபர் குடும்ப வருட வருமானம் $125,000 அல்லது மொத்த குடும்ப வருமானம் $250,000க்கு குறைவாக இருந்தால் மட்டுமே இந்த நிவாரணத்திற்குத் தகுதி பெறுவார்கள். இதனால் 2 கோடி மக்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. நான்கு கோடிக்கும் மேலானோர் பயனடைவர். மேலும், கடனை அடைக்க மாத வருமானத்தில் செலுத்தும் தற்போதைய தொகையில் பாதியை மட்டும் செலுத்தும் வகையில் திட்ட மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்விக்கடன் வாங்கியவர்கள் இலாப நோக்கற்ற நிறுவனத்தில், இராணுவத்தில்,தேசிய, மாநில, பழங்குடியினர் அல்லது உள்ளூர் அரசாங்கத்தில் பணிபுரிந்திருந்தால் ‘பொதுச்சேவை கடன் மன்னிப்பு’ (PSLF) திட்டதின் மூலமும் கணிசமான தொகையைத் தள்ளுபடி செய்யும் திட்டங்களும் நடைமுறைக்கு வந்துள்ளது.

எதிர்கால மாணவர்களையும் வரி செலுத்துவோரையும் பாதுகாக்கவும் கல்லூரியின் செலவைக் குறைக்கவும், கல்விக்கட்டணத்தை உயர்த்தும்போது கல்வி நிறுவனங்களே அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் புதிய முயற்சிகளையும் இந்த நிவாரண திட்டத்தில் இணைத்திருப்பது சிறப்பு. அதை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கொரோனா காலத்தில் மாணவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக பைடன் அரசு நிறுத்தியிருந்ததை டிசம்பர் 31, 2022 வரை நீட்டிப்பு செய்துள்ளார்கள்.

அமெரிக்காவில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இரண்டு வருடங்களில் அஸோஸியேட் டிகிரியையும் நான்கு வருடங்களில் இளங்கலைப் படிப்பையும் படிக்கும் வகையில் மாநிலங்கள் நிர்வகிக்கும் மாநில கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள்/நிறுவனங்கள், சமூக கல்லூரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளது. வெவ்வேறு கல்விப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெவ்வேறு கல்லூரிகள் அல்லது பள்ளிகள் பல்கலை வளாகத்திற்குள்ளேயே உள்ளன. மத்திய அரசு கல்வி நிலையங்களை நேரடியாக நிர்வகிப்பதில்லை. ஆனால் மாணவர்களுக்கான கல்வி நிதி, கடன்களை கல்லூரி மூலமாக வழங்குகிறது. அமெரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான தனியார் கல்லூரிகள் கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்தது. பல்வேறு மதப் பிரிவுகளும் பல கல்லூரிகளை நிர்வகிக்கிறது. அதிக சர்வதேச மாணவர்களைக் கொண்ட முதல் இருபது அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் 13 மாநில கல்லூரிகள் மற்றும் ஏழு தனியார் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற நாடுகளை விட அமெரிக்காவில் மட்டும் கல்லூரிப்படிப்பிற்கு ஏன் செலவுகள் அதிகமாக இருக்கிறது?

பள்ளிப்படிப்பு மட்டுமே அலுவலுக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தகுதியாக என்றிருந்த நிலை மாறி இன்று நான்கு வருட கல்லூரிப் படிப்பு மாறியுள்ளதால் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. கல்வி நிலையங்களுக்கு அரசு வழங்கும் நிதி குறைந்து கல்லூரிகளின் நிர்வாகச் செலவு அதிகரித்துள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதியின் வசதி வாய்ப்புகள், கல்லூரி பராமரிப்பு, ஆய்வுக்கூடங்கள், வகுப்பறைகள், ஆசிரியர்களின் ஊதியம், விளையாட்டுத்துறை செலவுகள் அனைத்தும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தில் பிரதிபலிக்கிறது. 1980களில் இருந்து தனியார் கல்லூரிகளின் கட்டணம் 129 சதவிகிதமும் மாநில அரசுக்கல்லூரிகளில் 213 சதவிகிதமும் உயர்ந்துள்ளதாக காலேஜ் போர்டின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ‘சிஎன்பிசி’ வெளியிட்டுள்ளது. கல்லூரிகள் ஒவ்வொன்றும் நிறுவனங்களைப் போல் செயல்பட்டு வருவதும் மாணவர்களைக் கவர கையாளும் உத்திகளும் வசதி வாய்ப்புகளும் தான் பெரும்பாலான கட்டண உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.

1980களில் கல்லூரிக்கட்டணம் ஒரு வருடத்திற்கு $3,400 என்றிருந்த நிலை இன்று சராசரியாக $23,000க்கிற்கும் அதிகமாக உள்ளது. மாணவர்களுக்கு கடன் மற்றும் நிதி உதவியை அரசும் கல்லூரிகளும் வழங்குவதால் கல்லூரிகளும் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே வருகின்றன. இதில் உள்ளூர் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் வெளிமாநில மாணவர்களுக்கு அதிக கட்டணம் என்ற பாகுபாடுகளும் உண்டு. மாணவர்களுக்கான அரசு நிதி ஒதுக்கீடு குறையும் பொழுது தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வெளி மாநில, வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்வதாக கல்லூரிகளின் மேல் குற்றச்சாட்டுகளும் உண்டு.

பைடன் அரசின் கல்விக்கடன் நிவாரணத்தால் பயனடைபவர்கள் பெரும்பாலும் கறுப்பினத்தவர் குறிப்பாக பெண்கள், கல்லூரிப்படிப்பை தொடர முடியாமல் பட்டம் பெறாதவர்கள், வருட வருமானம் $75,000க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் என ஆக்ஸியோஸின் சமீபத்திய ஆய்வு வெளியிட்டுள்ளது. தற்போதைய முன்மொழிவு 10 ஆண்டுகளில் $240 பில்லியன் செலவாகும் என்று வெள்ளை மாளிகை மதிப்பிட்டுள்ள நிலையில், வார்ட்டன் ஸ்கூல் $517 பில்லியன் வரை செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. இத்திட்டத்தை எதிர்ப்பவர்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான். இத்திட்டத்திற்கான நிதியை அரசு எங்கிருந்து பெறப்போகிறது என்பதே. மக்களின் வரிப்பணத்துடன் வெள்ளை அமெரிக்கர்களுக்குச் சாதகமான இலவச திட்டங்களை சீர்திருத்தி பெரும் நிதி நிறுவனங்களிடமிருந்து வரி வசூலித்தால் மட்டுமே இந்த திட்டம் சாத்தியப்படும். அதற்கு இரு கட்சிகளின் ஒத்துழைப்பும் மிக அவசியம். இல்லையென்றால் வரி கட்டும் நடுத்தர வர்க்கமே அதிகம் பாதிக்கப்படும்.

அதிபர் பைடனின் தேர்தல் வாக்குறுதியில் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதையும் ரத்து செய்யும் திட்டம் என்பது தற்போது $10,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி அதுவும் நிபந்தனைக்குட்டபட்ட இந்த அறிவிப்பு ஏமாற்றமாக இருந்தாலும் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. “இதற்கு முன்பு கடனை அடைத்தவர்களுக்கு பைடன் அரசு செய்யும் துரோகம்” என்று ட்ரம்பும் “நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர ஆளும் கட்சியினர் எடுத்திருக்கும் நடவடிக்கை” என குடியரசுக்கட்சியினரும் எதிர்ப்பைத் தெரிவித்து பைடன் அரசின் மேல் வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார்கள். குடியரசுக்கட்சியினர் ஆளும் சில மாநிலங்கள் இந்த கடன் ரத்து தொகையை வருமானமாக கருதி வரி விதிக்கப் போவதாக அறிவித்து மக்களைத் திகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது!

ஆறு முறை திவாலாகி $287மில்லியன் கடன் மன்னிப்பு பெற்றவர் ட்ரம்ப்.  இதற்கு முன்பு பெரும் செல்வந்தர்கள், எண்ணெய் நிறுவனங்கள், கார் உற்பத்தியாளர்கள், கொரோனா தொற்றுப்பரவல் காலத்தில் PPP(Paycheck Protection Program) Loanஆல் கடன் நிவாரணம் பெற்று தற்போது எதிர்ப்பு தெரிவிக்கும் குடியரசுக்கட்சியினரை “செல்வந்தர்களுக்கு துணை செல்லும் கட்சி” என பெர்னி சாண்டர்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

Text

Description automatically generated

கல்வியில் முன்னேறிய சமுதாயங்களில் வேலையின்மை, வறுமை, குற்ற விகிதங்கள் குறைந்து காணப்படும். வசதி இருப்பவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலை மாறி சமுதாயத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் மக்களின் நன்மைக்காக மாணவர் கடன் மன்னிப்புக்கு நிதியளித்து நியாயமான, வளமான, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க இரு கட்சிகளும் முன் வரவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.