ஒத்திகைக்கான இடம்

ஜூப்பாவும் தலைப்பாகையுமாக வரிசை வரிசையாக பிள்ளைககள் சுவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். ரைய்யான்களில் குர்ஆன் திறந்திருந்தது. சிலர் முன்னும் பின்னுமாக, சிலர் இடமும் வலமுமாக உடலசைத்து ஓதிக்கொண்டிருந்ததை சாஹிபு துயரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். எந்தப்பக்கமாக தான் ஆடுவது என்பதிலும் சிறு குழப்பம் அவனுக்கு இருந்தது. குர்ஆன் மனனமிடும் வகுப்பு மண்டபத்தை ஓதல் சத்தம் மெலிதாக நிறைத்தது. சாஹிபுக்கு இது முதல் நாள். எவ்வளவு பாடமாக்கியும் ஒன்றும் அவன் மண்டையில் தங்கியதாகத் தெரியவில்லை. என்னதான் முயன்றாலும் ஓட்டை வாளியால் தண்ணீர் இறைப்பது போலத்தான் சாஹிபுக்கிருந்தது. அங்கு மௌலவிமாரின் பிரம்புக்கு இரையாவதைத் தவிர வேறெதுவும் தனக்கு உருப்படியாக நடக்கப் போவதில்லை என அவனுக்குத் தோன்றியது. 

சாஹிபு மதரசாவில் சேர்ந்த வாரத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று அவனைப் பார்ப்பதற்காக மீரான் காக்கா வந்திருந்தார். வெள்ளை ஜூப்பாவும் மயிர் முழுமையாக மழிக்கப்பட்ட தலையில் தொப்பியும் தலைப்பாகையுமாக மகனைக் கண்டபோது மீரான் காக்காவுக்குள் பிரளயமாக மகிழ்ச்சி பொங்கிற்று. தனது வாழ்நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் அவர் திளைத்துச் சிரித்தார். மீரான் காக்காவுக்கு சாஹிபை ஒரு மௌலவியாகப் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இந்தக் கனவு அவருக்குள் எப்படி முளைத்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் மனைவிக்கே அது புதிராக இருந்தது. மிக வெறித்தனமான கனவாக அவருக்குள் அது உறைந்து போனது. அடர்வனத்தில் அடிமரத்ததைப் பற்றிப்படரும் வலுவான கொடி போல அந்தக் கனவு தீராத வேட்கையாக அவருக்குள் கனத்தது. மிம்பர் மேடையில் மிடுக்காக நின்று ஒலிவாங்கி அதிர மார்க்க உபந்நியாசம் செய்யும் மௌலவிமார் மீது சின்ன வயதிலிருந்தே மீரான் காக்காவுக்கு ஒரு கிறக்கம் இருந்ததாக மனைவியிடம் சொல்வார். பள்ளியில் மௌலவிமார் தொழுகை நடத்துவதைப் பார்த்து பரவசமடைந்து சொக்குவார். சாஹிபு பிறந்து சில நாட்களிலேயே “சாஹிபுதான் நம்மட மையத்த தொழுவிக்கனும்” என உணர்ச்சிக் கொந்தளிப்பில் தன் மனைவியின் காதுக்குள் குசுகுசுத்தார். அவர் கண்களில் அப்போது நீர்த்திரையாடியது. 

 தன்னால் ஆக முடியாமல் போன மௌலவி அந்தஸ்தை தன் மகனின் வழியே அடைந்துவிடவே மீரான் காக்கா அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறார் என அவர் மனைவிக்குப் புரிந்தது. நாளடைவில் சாஹிபுக்கும் அது புரிந்தது. வாப்பா அவனுக்கு அப்போதே ஜூப்பா போட்டு அழகு பார்க்க விரும்பினார். ஆனால் சாஹிபுக்கு அந்த ஆடை உடலோடு ஒட்டவில்லை. ஒரு பெருநாளுக்காக அவன் மார்ட்டின் சேர்ட் அணிய விரும்பி அடம்பிடித்தழுதான். ஆசை அவன் கண்களில் பொங்கி வழிந்தது. மீரான் காக்கா வாங்கிக் கொடுக்க ஒரேயடியாக மறுத்துவிட்டார். அந்தப் பெருநாளுக்கு அவனை ஜூப்பாவைக் கொண்டு அலங்கரித்தார். அது அவனுக்குள் ஓர் ஆழமான கீறலாகப் பதிந்தது. ஜூப்பாவை அணிவதற்கே அவனுக்கு வெட்கமாக இருந்தது. பத்து வயதுதான் ஆனால் அப்போதே அவனுக்கு அதன் மீது ஒரு ஒவ்வாமை வந்துவிட்டது. அந்த ஆடையை தனக்குரியதாக அவனால் உணரவே முடியவில்லை. வாப்பாவின் பிடிவாதமான கட்டாயப்படுத்தலால் அவன் அதை அணிய வேண்டியதாயிற்று. அதை அணிந்துகொண்டு நண்பர்களோடு வெளியில் செல்வதற்கு வெட்கப்பட்டான். வீதியில் மறைவாக நோட்டமிட்டு யாரும் இல்லாதபோதே வெளியாகினான். என்னவோ நிர்வாணமாகச் செல்வது போல் அந்த ஆடையில் அசூசையை உணர்ந்தான். சாஹிபால் அந்த ஆடையை உணர்வுபூர்வமாக தன்னுடையதாக நினைக்க முடியாமல் போனது ஏன் என்பதை அவனுக்கே புரியவில்லை. அவனையும் வீடு புரிந்துகொள்ளவில்லை. புரியாமையின் விளையாட்டுத் திடலில் சாஹிபு ஒரு பந்து போல உருண்டு திரிந்தான்.  

மீரான் காக்கா ஜூப்பா வாங்கிக் கொடுத்த அந்த பெருநாள் தான் சாஹிபு தனக்கும் ஜூப்பாக்குமிடையிலான இடைவெளியை உணர்வபூர்வமகாத் தெரிந்துகொண்ட நாள். ஆடை உடுத்துவதே வெட்கத்தை மறைக்கத்தானே. இந்த ஆடையில் அவனுக்கு உடல் கூசுவது போலவே இருந்தது. அவன் தந்தைக்கு அதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவனது சங்கடத்தை அவன் வெட்கத்தால் நெளிவதை அவனுக்குள்ளே சுழன்ற வெறுப்பை அதிலிருந்து விடுபடுவதற்கான அவனது தவிப்பை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உம்மாவிடம் சொல்லி அழுதான். 

“உனக்கு வானாட்டி களட்டிப் போடு” என்று லகுவாகச் சொல்லித் தேற்றினாள் உம்மா. ஆனால் அந்த ஆடை அவனை அவ்வளவு இலகுவாக விட்டுச் செல்வதாக இல்லை. அது எப்போதும் அவனோடு ஒட்டிக்கொள்ளும் மாயாஜால ஆடையாக நீட்சி பெற்றுவிட்டது. மீரான் காக்கா சாஹிபை பெருநாள் கழித்து சில நாட்களிலேயே மதரசாவில் கொண்டு சேர்த்துவிட்டார். அன்று அவர் அடைந்திருந்த பரவசமும் பக்தியும் எல்லையற்றுப் பிரவாகித்தது. அந்த நிலையில் அவர் மனைவிக்கு மிக விநோதமானவராகத் தெரிந்தார். “சாஹிபுதான் நம்மட மையத்த தொழுவிப்பான். ஒரு ஹாபிஸ் எலுவது பேர சொர்க்கத்துக்கு கூட்டிப் போவான். மறுமைக்குத் தேர்ரதுதான் மெய். நான் மறுமைக்குத் தேடிடிட்டன். இது அழிஞ்சி போர துனியா..” மீரான் காக்கா தத்துவார்த்தமாக அன்று குழைந்து பேசினார். மகிழ்ச்சிப் பிரளயத்தில் அவர் சஞ்சரிப்பது போன்று அவர் குரல் விகசித்தது. மகன் மௌலவியாக ஓதி வெளியாகிவிட்டதைப் போல புளகாங்கித மிதப்பு அவர் முகம் முழுவதும் நிரம்பி இருந்தது. தனிமையில் சிரிக்கச் செய்தார். தனியாகப் பேசினார். அவரது சின்ன மகளிடம் கூட என்றுமில்லாதவாறு சிரித்துப் பேசினார். அவள் கூட வாப்பாவை விநோதமான மனிதன் ஒருவனைப் பார்ப்பது போலத்தான் அன்று பார்த்தாள். 

சந்திப்புக் கூடத்துக்கு சாஹிபு வெறுப்பாக நடந்து வந்தான். மீரான் காக்காவை நேரே பார்க்க மனமற்றிருந்தான். அவர் நிறையப் பேசினார். அடிக்கடி அவன் தலையைத் தடவினார். சொர்க்கத்தை நினைவுகூர்ந்தார். மறுமையில் தங்களது மீட்பன் அவன்தான் என அவர் உறுதியாக நம்பினார். சாஹிபு தலையைக் கவிழ்த்து மௌனமாக நின்றான். அவரது குட்டிப் பிரசங்கம் அவனுக்கு பிரியமற்றதாக வெற்றுச் சொற்களாக அவன் முன்னே உதிர்ந்துகொண்டிருந்தது. அவன் அவரை சிரத்தையாக செவிமடுக்காமல் எங்கோ வெறித்துக்கொண்டுதான் நின்றான். ஒரு சின்னப்பையனின் உள்ளே இருந்த தவிப்பை மீரான் காக்கா கிஞ்சித்தும் புரியாத பரபரப்பில் மூழ்கிப் போயிருந்தார்.

மாலையில் ஓதல் தொடங்கிவிடும். ஒருநாள் ஓதும் மண்டபத்தில் தனக்கு எதிரே இருந்தவன் திடீரென்று எதையோ விறைத்துப் பார்த்தபடி இருப்பதை சாஹிபு திடீரென்று கண்டான். அவன் கண்களிலோ உடலிலோ எந்த அசைவும் இருக்கவில்லை. ஒரு பையன் கற்சிலையாகிவிட்டதைப் போல் அவனுக்கு அந்தக்கணத்தில் தோன்றியது. சாஹிபு அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். டம் கட்டி உடலை முறுக்கிச் சிவக்கச் செய்திருந்தான். அப்படியே முகம் சிவந்து வந்தது. திடீரென்று கைகளை ஒரு பறவை சிறகடிப்பதைப் போல அசைக்கத் தொடங்கினான். 

“டேய் இவென ஜின் புடிச்சிட்றா..” பிள்ளைகள் ஆட்டத்தையும் ஓதலையும் ஒரே சமயத்தில் நிறுத்திக் கொண்டு கத்தினர். இதற்கு முதல் அவன் தனியே பேசிக்கொண்டு திரிந்ததை பிள்ளைகள் கண்டதாக சலசலப்புக் கசிந்தது. சாஹிபு அவனை அச்சமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பையன் முன்கால்கள் ஊனமான பூனையைப் போல் பணிந்து அசைந்து உடலால் நடந்து வந்தான். அவன் கண்கள் சிவந்து மண்டிப்போய் இருந்தது. முகம் மெலிந்து ஒட்டி தாடை எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. சில நாட்களாக அவன் நன்றாக சாப்பிடவில்லை என்றொரு கதையும் கசிந்து வந்தது. சாஹிபு நீண்ட நேரமாக யோசனையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். பெரிய ஹஸரத்திடமிருந்து கொஞ்ச நேரத்திலேயே அவனுக்கு அழைப்பு வந்தது. பெரிய ஹஸரத் எப்படியும் அவனைப் பிடித்த ஜின்னை அடித்தே விரட்டிவிடுவார் என ஒரு பையன் சாஹிபுக்கு விளக்கம் சொன்னான். 

“ஜின்ன நாம பார்க்க ஏலாதா?”

சாஹிபு அந்தப் பையனிடம் கேட்டான்.

“இல்ல..அது நமக்குள்ள காத்துப் போல பூந்துரும்..”

சாஹிபு திடுக்குறுவது போல உடலைச் சிலிர்த்தான். 

“பெரிய ஹஸரத்து மட்டுந்தான் அதெட கதப்பாரு..ஜின்ன பிரம்பால அடிச்சே வெரட்டிடிடுவாரு…” சாஹிபுக்கு பெரிய ஹஸரத் எப்படி ஜின்னை விரட்டுகிறார் எனக் காண ஆசையாக இருந்தது. ஆனால் அவர் கையில் வைத்திருக்கும் பிரம்பு ஜின்னை விடக்கொடியது என்பதில் சாஹிபுக்கு முன் அனுபவம் இருந்தது.

 “ஜின் யாரெப் புடிக்கும்..?” சாஹிபு கேட்டான். 

“நல்லா ஓதாதவங்களப் புடிக்கும்”

“அப்ப என்னெப் புடிக்கலையே..” சாஹிபு அப்பாவியாகச் சொன்னான்.

“நீ கொஞ்சம் கவனமா இருந்துக்க..டொயிலட்லதான் ஜின்னிருக்கும்” பையன் இளநகையுடன் சொன்னான். சாஹிபின் முகத்தில் கலவரம் முளைத்தது. 

அன்றிரவு பிள்ளைகள் உறங்கும் மண்டபத்திலிருந்து ஜின் பிடித்த பையன் அதே வடிவத்தில் உடலால் மெல்ல மெல்ல அசைந்து கதவுப்பக்கமாக ஊர்ந்து செல்வதை மௌனத் துயிலில் மதரசா மூழ்கிக்கிடந்த நள்ளிரவில் சாஹிபு மட்டும் தூக்கம் களைந்து விழித்துப் பார்த்தான். அதுதான் சாஹிபு அவனைக் கடைசியாகப் பார்த்த தருணம். அதன் பிறகு அவன் மதரசாவுக்குத் திரும்பி வரவே இல்லை. அவனை ஜின் எங்கேயோ கொண்டு சென்றுவிட்டதாக மறுநாள் சாஹிபுவிடம் அந்தப் பையன் சொன்னான். சாஹிபு அதை சந்தேகமாக நம்பினான். சாஹிபுக்கு ஜின் பிடித்தவனின் செய்கை பிடித்துப் போனது. மதரசா வெறுத்துப் போனது. தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்கான தகுதி தனக்கு இல்லை என்பதை மதராசாவுக்குப் போன ஒரு சில வாரங்களிலேயே சாஹிபு தெளிவாகப் புரிந்து கொண்டான். தன்னையும் ஜின் பிடித்தால் எவ்வளவு நல்லது என சொல்லிக்கொண்டான். எப்படியாவது இங்கிருந்து தானும் ஓடிச் சென்றுவிட வேண்டும் என மனம் புறுபுறுத்துத் திரிந்தான். வீட்டில் உண்மையைச் சொல்லி தனது பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்கவே அவன் விரும்பினான். இங்கிருந்து தப்பிச் செல்வதற்கான தக்க தருணத்துக்காகக் காத்திருக்கலானான். 

ஒரு தவளை பாய்ந்து செல்வதைப் போல் ஒருநாள் இரவு சாஹிபு மதராசாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் காணாமல் போயிருந்தான். பஸ் ஸ்டான்ட்டில் ஒரு பழைய பெஞ்சில் மிகுதி இரவைக் கடத்தி மறுநாள் அதிகாலையிலேயே ஊருக்குச் செல்ல பஸ் ஏறினான். சாஹிபுவை வீடு வரவேற்க மறுத்தது. சாஹிபு வந்துசேர்ந்த மதியப் பொழுதில் மீரான் காக்கா தான் வழமையாக மீன் விற்கும் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தார். சாஹிபின் தங்கை அந்த நேரத்துக்கு வாப்பா எந்த தெருவில் மீன் விற்பார் என்பதை சரியாகக் கணித்து அங்கே செய்தியைக் கொண்டு சேர்ப்பித்தாள். 

மதரசாவில் நிறையச் சிறுவர்களை ஜின் கொண்டு போய்விட்டதாக சாஹிபு தன் தங்கையிடம் சொல்லி அவளை தனக்காக வாப்பாவிடம் பரிந்து பேசுமாறு சொன்னான். சாஹிபின் சாட்டுகளுக்கு மீரான் காக்கா செவிகொடுக்கவில்லை. அடுத்த நாளே மீரான் காக்கா சாஹிபை மீண்டும் மதராசவில் கொண்டு போய் விட்டு வந்தார். சாஹிபு உம்மாவிடம் கெஞ்சலாகக் கத்திக்கொண்டே சென்றான். மீரான் காக்காவின் கனவு மனம் இரும்பு போன்று தடித்துப் போயிருந்தது. சாஹிபுவின் கண்ணீருக்கோ கெஞ்சலுக்கோ இடமளிக்க அவரால் முடியவில்லை. சாஹிபின் தங்கை சாஹிபை ஜின் கொண்டு போய்விடுமா என உம்மாவிடம் துக்கத்துடன் கேட்டபடி விசும்பினாள். 

“இது அழியிர துனியா..ஒத்திய பாக்கிற இடந்தா இது.. நீ பயப்படாமப் போ சாயிபு..வாப்பாவயும் உம்மாவயும் சொர்க்கத்துக்கு கொண்டு சேர்க்கிறவன் நீதாங்..” மீரான் காக்காவின் கண்களில் சொர்க்கத்தையே பார்த்து மீண்டது போல திடீரென்று ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது. ஆனால் அந்த இடம் சாஹிபுக்கு நரகமாக அச்சுறுத்தியது. மனம் நசிந்து இழுபட்டது. 

சாஹிபு அடிக்கடி மதரசாவிலிருந்து தப்பி ஓடிவரத் தொடங்கினான். நேராக மதராசாவிலிருந்து தப்பி வீட்டுக்கு வந்து எங்காவது பதுங்கிக் கொள்வான். உம்மா உடனே வாப்பாவுக்கு தகவல் அனுப்புவார். சைக்கிளில் மீன் கட்டிக்கொண்டு ஊர் ஊராக கூவி விற்கும் மீரான் காக்காவுக்கு அவர் அலையும் தெருக்களை அறிந்து அவரது மகள் தகவலைக் கொண்டு சேர்ப்பாள். செய்தி கிடைத்ததும் உடனே மீரான் காக்கா நிலைகுலைந்து குழறுவார். மீன்களை விற்பதில் நாட்டம் இழந்து பதட்டங்கொள்வார். மீன்களைக் கூவி விற்கமுடியாமல் அவர் தொண்டை அடைத்துக் கொள்ளும். மீன் முள்ளொன்றே தொண்டையில் சிக்கிக் கொண்டதைப் போல தளதளப்பார். ஆனாலும் சாஹிபை ஒரு ஆலிமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மீரான் காக்காவை விட்டும் முழுமையாக கரைந்ததே இல்லை. அவன் ஓடிவரும் ஒவ்வொரு முறையும் அவனைத் தாலாத்தி புத்திமதிகள் கூறி சில வாக்குறுதிகளும் வழங்கி அவனை மீண்டும் கொண்டு சேர்த்துவிடுவார். அவனும் தலையை ஆட்டிக்கொண்டு அங்கு போவான். பிறகு சில நாட்களில் சொல்லி வைத்தாற்போல் ஓடி வந்துவிடுவான். சாஹிபு ஒரு கைதி சிறையிலிருந்து தப்புவதைப் போல் ஏன் ஓர் ஆன்மீக மணங்கொழிக்கும் இடத்திலிருந்து தப்பிச் செல்கிறான் என்பதை மீரான் காக்கா ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. 

ம்முறை சாஹிபு மதரசாவுக்குத் திரும்பிச் செல்வதில்லை என்ற ஒரு திட்டத்துடன் தப்பி வந்திருந்தான். இம்முறை மிக மோசமான ஜின்னொன்று அவனையும் பிடித்துவிட்டது. பெரிய ஹஸரத்தால்கூட அவனைப் பிடித்த ஜின்னை ஓட்ட முடியவில்லை. அது மிகக் கெட்ட ஜின் என சாஹிபு சத்தமிட்டான். 

சாஹிபை ஜின் பிடித்த சோகம் வீட்டை சிதைத்தது. மீரான் காக்கா ஒப்பாரி வைத்து கலங்கி அழுதார். சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக சாஹிபு மாறினான். பரிசாரிகளிடமிருந்து விதவிதமான தாயத்துகள் சாஹிபுக்கு கட்டப்பட்டன. மீன் விற்ற பணத்தை எல்லாம் மீரான் காக்கா அவனுக்கே இறைத்தார். 

“மதரசாக்குப் போற களவுல அவன் சும்மா நடிக்கான்” என மௌலவிமார் சொன்னார்கள். “இவன் ஓதமாட்டான் அவன சும்மா உடுங்க” சாஹிபின் உம்மாவும் கடைசியாக சொல்லிப் பார்த்தார். மீரான் காக்கா அசைக்க முடியாத கிறுக்குத்தனத்துடன் பிடிவாதமாக இருந்தார்.

 “என்ட புள்ளய நான் மௌலவியாத்தான் ஆக்குவென்” என திரும்பத் திரும்பச் சொன்னார். சாஹிபு வாப்பாவை எரிக்கும் கண்களால் பார்த்தான். திடீரென்று அருகிலிருந்த வளைந்து நெடுத்திருந்த தென்னையில் தாவி மலமலவென ஏறினான். 

“உன்ட தலயில தேங்காயப் போட்டுடுவன்” சாஹிபின் ஜின் மீரான் காக்காவை எரித்துப் பார்த்து எச்சரித்தது. மீரான் காக்கா “மகனே” என அலறிக்கொண்டு அவன் பின்னாலேயே மரத்தில் தாவி ஏறி அவனை கீழிறக்கினார். 

சாஹிபு சில நாட்களில் குணமானான். அவனைப் பிடித்த கெட்ட ஜின் அவனைவிட்டும் இறங்கிச் சென்றுவிட்டது என எல்லோரும் நம்பினார்கள்.

“எந்தெத் தாயத்துக்கு இறங்கிப் போயிச்சோ..எல்லாம் ரப்புட கிருப..” மீரான் காக்கா மகிழ்ச்சி பொங்க முணுமுணுத்தார்.

“இனி சாயிப மதரசாவுல கொண்டு விடலாம். ஜின் அவென வுட்டுப் பெயித்து..” மீரான் காக்கா திருப்தியுடன் சொல்லிக் கொண்டு கடைத் தெருப்பக்கமாக இறங்கிச் சென்றார். அவர் சென்று கொஞ்ச நேரந்தான் ஆகி இருக்கும். சாஹிபின் ஜின் திடீரென்று மூர்க்கத்துடன் அவனுக்குள் திரும்பி வந்தது. இம்முறை தூஷண வார்த்தைகள் பேசியது. சாஹிபை அங்குமிங்கும் தூக்கி எறிந்தது. சாஹிபை சுவற்றோடு மோதியது. தரையில் தலையை வேகமாக முட்டியது. உம்மா கதறிக் கொண்டு சாஹிபைக் கட்டியணைக்கப் பார்த்தாள். அது காற்றுப்போல அவள் கைகளுக்குள் சிக்காமல் தாப்புக் காட்டியது. இது மகாகெட்ட ஜின் என அவள் பயந்து நடுங்கினாள். “என்ட புள்ளய வுட்டுடு…” அவள் கதறிய சத்தத்தால் சனங்கள் மெல்லக் குழுமினர்.  

”உம் புருஷன சும்மா இரிக்கச் சொல்லு” ஜின் உம்மாவைப் பார்த்து எச்சரிக்கும் தொனியில் உறுமியது. வாப்பாவைக் கூட்டி வர தங்கை பறந்தடித்துச் சென்றாள். சாஹிபு கிணற்றுக் கொட்டில் தாவி ஏறினான். கிணற்றுக் கொட்டில் வளைந்து வளைந்து ஆடினான். சமநிலை தடுமாறி இடறப் பார்த்தான். கூட்டம் கிணற்றை வளைத்துக் கொண்டது. சடுதியாக மீரான் காக்கா சைக்கிளில் வரும் காட்சி சாஹிபின் கண்களுக்கு தென்பட்டது. 

“அல்லாஹூ அக்பர்“ என கூட்டம் அதிரும்படியான முழக்கம் ஒன்றை அப்போது சாஹிபு எழுப்பினான். கூட்டமே சற்று அதிர்ந்து அடங்கிப் போனது. 

“சாயிப புடிச்சிருக்கிறது இஸ்லாமான ஜின்” என கூட்டத்தில் நின்ற கிழவி ஒருத்தி சொல்லிக் கொண்டு பின்வாங்கினாள். 

“நான் சொர்க்கத்துக்குப் போறேன்..” சாஹிபு கைகளை மேலே உயர்த்திச் சொன்னான். மீரான் காக்கா தன்னை நெருங்கிய கணத்தில் திடீரென்று கிணற்றுக்குள் குதித்தான். பின்னால் மீரான் காக்காவும் கிணற்றுக்குள் பாய்ந்தார். 

சாஹிபு ஐந்துவேளையும் தொழுவதற்காக பள்ளிக்குச் சென்று வந்தான். அங்கே சிறுவர்களுக்கு அவன் ஒரு வேடிக்கைப் பொருளாக மாறினான். அவன் கதையைக் கேட்டு சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோரும் சிரிக்கத் தொடங்கினர். அவ்வப்போது விதவிதமான சாகசங்களும் காட்டத்தொடங்கினான். அனது ஜின்தான் அதை எல்லாம் செய்வதாக சிறுவர்கள் நம்பினார்கள். 

அன்று சாஹிபு தலையை முழுமையாக மொட்டையடித்திருந்தான். தன் உருவத்துக்கு சற்றும் பொருந்தாத ஒரு பெரிய முழுக்கைச் சட்டையும் தன் கால்களை விடவும் நீளமான கால்சட்டையும் அணிந்து விநோதமான தோற்றத்திலிருந்தான். கால்சட்டை அவனது கரண்டைக் கால்களை விட்டும் சற்று மேலேறி நிற்கும் விதமாக அதை வளைவாக மடித்திருந்தான். வெடிப்புகள் விழுந்த மிகப்பழைய பெல்ட் ஒன்றால் அதை இடுப்புடன் சேர்த்து இறுகக் கட்டியிருந்தான். சேர்ட்டின் முன்பாகம் முழுக்க கால்சட்டையின் உள்ளே இருந்தது. பின்பக்கம் வெளியே வந்திருந்தது. கைகள் இரண்டையும் சுற்றி சிறகுகள் போன்று துணியாலும் காகிதங்களாலும் கட்டி ஒரு விசித்திரப் பறவை போன்று தோன்றினான். மூசாப்பு ஆதத்தின் பெரிய மதிலில் ஏறி அதிலிருந்து அவனது கழிப்பறையின் பிளட்டுக்குத் தாவி ஏறி பிளட்டின் விளிம்புக்கு கைகளை விரித்தபடி வந்து நின்றான். இப்போது பறவையைப் போல் தன் இரண்டு கைகளையும் விரித்து மேலும் கீழுமாகப் அசைத்தான். அது ஒரு பறவை தன் இறக்கைகளை காற்றில் அசைப்பதைப் போல் இருந்தது. காற்று மெலிதாக சலசலப்பின்றி வீசிக்கொண்டிருந்தது. சூழல் நிசப்தம் இழந்தது. தன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய தடியை மைக்போன்று தன் முகத்துக்கு நேரே நீட்டிப் பிடித்தபடி உடல் அதிர அறிவிப்புச் செய்தான்.

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்..சகல ஜமாஅத்தாருக்கும் மீராலெவ்வை முகம்மது சாஹிபு ஆகிய நான் அறியத் தரும் விடயமாவது, நமது கண்மணியாம் நாயகம் அவர்கள் அல்லாவை ஹிஜ்ரத் சென்று நேரடியாகப் பார்த்து வந்ததைப் போல நானும் இப்போது உங்கள் முன்னிலையிலேயே இந்தப் பட்டப்பகலிலேயே தட்டத் தனியே விண்ணுலகத்துக்கு ஹிஜ்ரத் சென்று அல்லாஹ்வைப் பார்த்து பேசி விட்டு வரப் போகிறேன். எனவே ஓரிரு நாட்களுக்கு இந்த மண்ணுலகில் அடியேனை யாரும் காண முடியாது. நான் செல்வது மக்களின் பிரச்சினைகளை ரப்புடன் அளவளாவுவதற்குத்தான்.” கைகளை காற்றில் அசைத்தபடியே சொல்லிக்கொண்டிருந்தான். 

இப்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பது கிட்டத்தட்ட புரிந்துவிட்டது. பேசி முடித்ததும் தடியைக் கீழே வீசினான். கைகளை உயர்த்தி மௌனமாக பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். அப்போது கூட்டத்திலிருந்தவர்கள் சலசலக்கத் தொடங்கினர். 

“டேய் பைத்தியாரா இறங்குடா..உழுந்து முகறயப் பேத்துக்காதடா..?” தடித்த ஆண் குரல்களும், மென்மையான பெண் குரல்களும் விட்டு விட்டு எழுந்தபடி இருந்தன. சிறுவர்கள் ஒரு கண்கொள்ளாக் காட்சியைப் பார்ப்பது போன்ற ஆர்வத்துடன் சாஹிபையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றனர். பக்கத்து தெருவிலிருந்தும் சிறுவர்கள் வந்து குழுமிக் கொண்டிருந்தனர். சாஹிபின் தந்தை மீரான் காக்காவுக்கும் கூட்டத்திலிருந்து தகவல் கொண்டு செல்லப்பட்டது. அவர் ஆஜராவதற்குள் சாஹிபு விண்ணுலகுக்குப் பறந்து விடுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தான். பறவை ஒன்று இறக்கைகளை விரிப்பது போன்று சற்றுக் குனிந்து உடலைத் தூக்கி கைகளை அசைத்தபடி “அல்லாஹூஅக்பர்” என இடியின் ஓங்காரத்தோடு மூன்று முறை முழங்கினான். மூன்றாவது முழக்கம் அடங்கு முன்னமே திடீரென்று அங்கிருந்து வான்நோக்கிப் பாய்ந்து சிறகுகளைப் போன்று கைகளை சடசடவென காற்றில் வேகமாக அடித்தான்.

சற்றைக்கெல்லாம் அவன் அந்தப் பிளட்டில் இருக்கவில்லை. சிறுவர்கள் வானத்தைப் பார்த்தார்கள். அங்கும் அவன் இல்லை. பலத்த ஓசையொன்று வீதியிலிருந்து முளைத்தெழுந்தது. சாஹிபு கிறவல் வீதியில் முகங்குப்புற விழுந்து கிடந்தான். பலத்த அடி எழுந்திருக்க முடியாமல் சில கணங்கள் நிலத்தில் உருண்டு கொண்டே முனகினான். கூட்டத்தில் சிரிப்பொலி வெடித்துப் பறந்தது. மீரான் காக்கா இன்னும் வந்து சேரவில்லை. சாஹிபைத் தூக்குவதற்கு கூட்டத்திலிருந்து இரண்டு பேர் முன்னேறப் பார்த்தனர். அவர்களை அருகே வரவேண்டாம் என சாஹிபு கைகளால் சைகை செய்தான். முழங்கையிலும், கால்களிலுமிருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. முறுகி முறுகி நெளிந்தான். கீழே கிடந்த தடியை மெல்லக் குத்தி சுதாரித்து எழுந்தான். தடியை மைக் போன்று தன் முகத்துக்கு நேரே திரும்பவும் நீட்டிப் பிடித்தான். சூழலின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு மீண்டும் அறிவிக்கத் தொடங்கினான். இப்போது சொற்கள் உடைந்து குரலின் ஓங்காரம் தணிந்திருந்தது. விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதவனைப் போல ஒரு செயற்கையான மிடுக்கை உடலில் வரவழைத்திருந்தான். விண்ணுலகுக்குச் செல்லுமளவுக்கு அவன் ஈமான் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்ற தன் நம்பிக்கையை உரத்து அறிவித்தான். ஜமாஅத்தார் அனைவரும் கலைந்து செல்லுமாறும் இது வெறும் ஒத்திகைக்கான இடம்தான் என தொடர்ந்தும் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். கூட்டம் மீண்டும் கலகலத்துச் சிரித்தது. 

“இப்புடி உழுந்தும் இவெனுக்கு பைத்தியம் தெளியலையா“ என பெண்கள் பக்கமிருந்து பேச்சுகள் அடிபட்டன. அவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் தக்பீர் முழங்கிக்கொண்டிருந்தான். அவன் நெற்றியில் கட்டியிருந்த பச்சை நிறப்பட்டி படபடவென காற்றில் அசைந்து ஓசை எழுப்பியது. அதன் ஓசை ஒரு மெல்லிய இசைபோல பிரவாகித்து அந்த சூழலை நிறைத்தது. அவன் உடுப்பில் பூசியிருந்த அத்தர் வாசமும் காற்றில் கரைந்தது. திடீரென்று உருவேறியவனைப் போல் ஆடத் தொடங்கினான். சூஃபிகளின் நடனம் போன்று உக்கிரமான ஆட்டமாக அது வலுப்பெற்றது. நெற்றியில் கட்டியிருந்த பச்சைப் பட்டியை அவிழ்த்து கைகளில் சுற்றிக் கொண்டு சுழன்றான். இப்போது அவன் மொட்டைத் தலையில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறித்தன. வானம் முழங்கும் குரலில் ஓர் அரபுப் பாடலை அவன் பாடினான். அந்தப் பாடல் சத்தம் கேட்டே இரண்டு ஊர் அளவுக்கு கூட்டம் திரண்டு வந்தது. சிறு சிறு வட்டங்களில் தன் குழப்பத்தை வெளிப்படுத்தி வந்த சாஹிபு அன்று ஒரே நாளில் ஊர் முழுவதும் அறியப்பட்டான். 

“நம்மட சாயிபு. மீரான் காக்காட மகன். மதரசாக்குப் போய் மூள கொளம்பிட்டாம்..”

சாஹிபைப் பற்றிய விபரங்கள் அங்கு பகிரப்படத் தொடங்கியபோது மீரான் காக்கா வந்து சேர்ந்தார். சாஹிபை மிரட்சியாகப் பார்த்தார். அவன் அப்போதும் ஆடிக்கொண்டே இருந்தான். அவர் கண்களில் இருந்த நம்பிக்கையும் கனவும் கிட்டத்தட்ட தூர்ந்து போயிருந்தது. அவனை அரவணைத்து அழைத்துச் செல்ல அவர் படாதபாடு படவேண்டியிருந்தது. சாஹிபு தொடர்ந்தும் “ஜமாஅத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். இது ஒத்திகைக்கான இடம் மட்டுமே” என சத்தமாக அறிவித்துக் கொண்டே நடந்தான். புதினம் பார்க்க வந்த சனங்கள் கலைய மனமற்று அவனது அடுத்த நாடகத்தைப் பார்க்கவே உள்ளூர விரும்பினர். ஆனால் மீரான் காக்காவின் முகத்தில் படர்ந்த வலி சனத்தைக் கொஞ்சம் நெருடியது.

ஒரு மாதிரியாக அவனை மீரான் காக்கா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார்.  

சில நாட்களில் சாஹிபு மீண்டும் குணமடைந்துவிட்டதற்கான அறிகுறிகளை மீரான் காக்கா தெளிவாகக் கண்டார். மீண்டும் அவனை மதரசாவுக்கு அனுப்பும் முடிவை அவர் எடுத்தார். “வெள்ளிக் கெலம ராவு சொல்றன் நல்லதுதான் நடக்கும் நாளெய்க்கு சாயிப கல்முனக்குடில ஒரு நல்ல மதராசா இருக்காம். அங்க சேர்த்துடப் போறன். அங்க போனா மறா அவங்க வுடமாட்டங்களாம். கொஞ்ச நாளைல எல்லாம் சரியாயிடும் என்டு அபுசாலி அசரத்து சொல்றாரு..நான் காலைல ஒரு இடத்த போவம் என்டு ஆளக் கூட்டிட்டுப் போரன்” மீரான் காக்கா மனைவியிடம் இரகசியமாகச் சொன்னார். அவள் சும்மா சாட்டுக்குத் தலையசைத்து மௌனமானாள். சாஹிபு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். மீரான் காக்கா சாஹிபின் உடுப்புகள், குர்ஆன்களை எல்லாம் ஏற்கனவே அந்த மதரசாவுக்கு அனுப்பி விட்டிருந்தார். ஆளைக் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் வேலையாக மிச்சம் இருந்தது. 

வெள்ளிக்கிழமை. காலை ஆறரை மணிக்கெல்லாம் மீரான் காக்கா எழுந்துவிட்டார். சாஹிபை எழுப்பிவிட அறைக்குள் போனார். சாஹிபை அங்கு காணவில்லை. கொஞ்சம் கலவரமானார். “சாஹிபு எங்க?” 

மனைவியும் அவருமாக சாஹிபைத் தேடத் தொடங்கினர். முதலில் வீடு, அக்கம் பக்கம், சொந்தபந்தம் என தேடுதல் தீவிரமாகியது. சாஹிபு எங்கும் காணப்படவில்லை. தேடல் முடிந்து மீரான் காக்கா களைத்துப் போனார். மெல்ல அவருக்குள்ளிருந்து ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. சாஹிபு எங்கே போனான் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவன் எந்தத் தடயங்களையும் விட்டுச் செல்லவுமில்லை. ஜின் அவனைக் கொண்டு போய்விடும் என சாஹிபு சொன்னதை தங்கை நினைந்து அழுதாள். 

அவனைப் பற்றி விசாரிப்பதற்கு அவனுக்கு நண்பர்கள் இருக்கவில்லை. சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக மட்டுமே அவன் சில நாட்கள் இருந்தான். பள்ளிவாயலில் சிறுவர்கள் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருப்பான். சிறுவர்கள் யாரிடமும் அவன் எதுவும் சொல்லாமலே சென்றிருந்தான். 

மீரான் காக்கா நாட்டிலுள்ள எல்லா மதரசாக்களிலும் சென்று தேடத் தொடங்கினார். தொழிலைக் கைவிட்டார். சாஹிபின் உம்மாவே குடும்பத்தைச் சுமக்க வேண்டியதாயிற்று. மீரான் காக்கா மாதக் கணக்கில் வீட்டை விட்டு வெளியேறி மகனைத் தேடுவதையே தொழிலாக்கிக் கொண்டார். ஆனால்  சாஹிபை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஊர் அவன் விண்ணுலகுக்குச் சென்றுவிட்டதாகவே பேசிக் கொண்டது. ஆனால் மீரான் காக்கா மட்டும் அவன் எங்கோ ஒரு மதரசாவில் ஓதச் சென்றுவிட்டதாகவும் அவரது இறந்த உடலைத் தொழுவிக்கும் அந்த நாளில் அவன் திரும்பி வருவான் எனவும் நம்பினார். சொர்க்கத்துக்கு அவரைக்கொண்டு செல்ல அவன் திரும்பி வருவான் என அரற்றினார்.

மீரான் காக்காவை திடீரென்று முதுமை விழுங்கிக் கொண்டது. களைத்து உடல் சோர்ந்து மெலிந்தார். “இது ஒத்திகைக்கான இடம் மட்டுமே” என அவர் உதடுகள் அநிச்சையாக முணுமுணுத்தன. 

சாஹிபு காணாமல்போன வௌ்ளிக்கிழமையன்று மீரான் காக்கா தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். தன் உருவத்துக்கு சற்றும் பொருந்தாத ஒரு பெரிய முழுக்கை ஜூப்பாவொன்றை அணிந்து கொண்டார். கைகள் இரண்டையும் சுற்றி சிறகுகள் போன்று துணியாலும் காகிதங்களாலும் கட்டி ஒரு விசித்திரப் பறவை போன்று தோன்றினார். மூசாப்பு ஆதத்தின் பெரிய மதிலில் ஏறி அதிலிருந்து அவனது கழிவறைப் பிளட்டுக்குத் தாவி ஏறியதும் பிளட்டின் விளிம்புக்கு கைகளை விரித்தபடி வந்து நின்றார். இப்போது பறவையைப் போல் தன் இரண்டு கைகளையும் விரித்து விரித்து மேலும் கீழுமாகப் அசைத்தார். அது ஒரு பறவை தன் இறக்கைகளை காற்றில் அசைப்பதைப் போல் இருந்தது. 

தன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய தடியை மைக்போன்று தன் முகத்துக்கு நேரே நீட்டிப் பிடித்தபடி உடல் அதிர அறிவிப்புச் செய்தார்.

“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்..சகல ஜமாஅத்தாருக்கும் சேகு லெவ்வை மீராலெவ்வை ஆகிய நான் அறியத் தரும் விடயமாவது, நமது கண்மணியாம் நாயகம் அவர்கள். அல்லாஹ்வை ஹிஜ்ரத் சென்று நேரடியாகப் பார்த்து வந்ததைப் போல நானும் இப்போது உங்கள் முன்னிலையிலேயே இந்தப் பட்டப்பகலிலேயே விண்ணுலகத்துக்கு ஹிஜ்ரத் சென்று அல்லாவைப் பார்த்து பேசி விட்டு வரப் போகிறேன். எனவே ஓரிரு நாட்களுக்கு இந்த மண்ணுலகில் அடியேனை யாரும் காண முடியாது. நான் செல்வது மக்களின் பிரச்சனைகளை ரப்புடன் அளவாளவுவதற்குத்தான்.”  கைகளை காற்றில் அசைத்தபடியே சொல்லிக்கொண்டிருந்தார். கூட்டம் சரமாரியாகக் கூடத் தொடங்கியது. 

 “அல்லாஹூ அக்பர்” என ஓங்காரமாக முழங்கியபடி விண்ணுலகை நோக்கிப் பாய்ந்தார்.

சில நொடிகளில், சூழல் நிசப்தம் இழந்ததை அவரால் உணர முடியவில்லை. 

000

தேவையானால் பயன்படுத்தலாம்

பதவிளக்கம்

ரப்பு – கடவுள்

துன்யா- உலகம்

ஜூப்பா- ஆண்கள் அணியும் ஆளுயர ஆடை 

ரைய்யான்- குர்ஆன் வைத்து ஓதும் பலகை

ஈமான்-நம்பிக்கை

ஹிஜ்ரத்-விண்ணுலக யாத்திரை

மைய்யத்து- இறந்த உடல்

ஹாபிஸ்- குர்ஆனை மனனம் செய்தவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.