தமிழாக்கம் : அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
எப்படி வராமலிருக்கும்?
அவள் என் முதல் குழந்தை, என் நெற்றித் திலகம் அல்லவா! என் புகுந்த வீட்டில் பையன்கள் அதிகம். இவள் பிறந்ததும் எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
அம்மா, உங்களுடைய கடைசி மகளைப் பற்றிச் சொல்லுங்கள்.
மிகவும் புத்திசாலி தான். ஆனால் கோபம் மட்டும் வந்துவிட்டதென்றால், பிறகு அவளை சமாதானப்படுத்துவது மிகக் கடினம். எதற்கும் இளக மாட்டாள். பெற்றோர்கள்தான் தம் குறைகளையும் நிறைகளையும் குழந்தைகளுக்கு கடத்துகிறார்கள். எந்த மண்ணால் வனையப்ப்படுகிறார்களோ, எங்கு வளர்கிறார்களோ, அந்த மண்ணின் குணம் அவர்கள் மீதும் படிந்துவிடுகிறது.
வாசலில் யாரோ வந்திருக்கிறார்கள். சூசன், போய் பார். கண்டிப்பாக என் மகனாகத் தான் இருக்கும்.
வாசலில் யாருமே இல்லை அம்மா.

மறுபடியும் போய் பார், என் மூத்த பேத்தி பிரபா வந்திருப்பாள். அவள் தன் அப்பாவைப் போல. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பாள். நீ என் சிறிய பேத்தி மீராவியும் பார்த்திருக்கிறாய் அல்லவா சூசன்? மிகவும் அழகாக இருப்பாள். பாட்டியை பார்க்க அடிக்கடி வந்து போவாள்.அதெல்லாம் இருக்கட்டும், நீ இப்போது ஈரத்துணியால் என் உடம்பையும் கழுத்தையும் துடைத்துவிடு சூசன், முடியின் பாரத்தை என் கழுத்தால் தாங்க முடியவில்லை.
மகள், திரும்பி வந்ததும்,
அம்மா நீங்கள் இப்போது சற்று தெளிவாக இருக்கிறீர்கள். முடி கூட அழகாக வெட்டப்பட்டிருக்கிறது.
நீ வெளியே போய்விட்டு வந்திருக்கிறாய் அல்லவா? அந்த மகிழ்ச்சியில் தான், உனக்கு என் முகம் பளிச்சென்று இருப்பது போல தோன்றுகிறது.
இல்லை அம்மா. சிறியதாக வெட்டப்பட்ட முடி, உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
இந்த யோசனை முன்பே ஏன் தோன்றவில்லை? முன்பே முடியை சிறியதாக வெட்டியிருந்தால் மிகவும் வசதியாக இருந்திருக்கும். இப்போது பாரமில்லாமல் லேசாக இருக்கிறது. முன்பெல்லாம், புதிதாக திருமணமாகி வந்த மணமகளின் முடி, இறுக்கமாக பின்னப்பட்டிருக்கும். உலகின் சட்டதிட்டங்கள் அனைத்தும் மணமகளின் முடியை ஒட்டியே கட்டமைக்கப் பட்டிருப்பது போல. நான் திருமணமாகி புக்ககம் வந்ததும், உன் அப்பா, கிடைத்த முதல் வாய்ப்பிலேயே, என்னிடம், முடியை இப்படி இறுகப்பின்னிக் கொண்டி ருக்கிறாயே, இது உனக்கு கஷ்டமாக இல்லையா, தலை பாரமாக இல்லையா என்று கேட்டார். எனக்கு தளர ஒற்றைப் பின்னல் பின்னிக்கொள்ளத்தான் பிடிக்கும், ஆனால் என்ன செய்வது, இப்படி இறுகப் பின்னிக் கட்டிக்கொள்வதுதானே வழக்கம் என்று பதிலளித்தேன். அதற்கு உன் அப்பா, ‘ இந்த வீட்டில் மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை. நீ உன் விருப்பப்படி, உனக்கு எப்படி வசதியோ அப்படி இருக்கலாம். மனதுக்குப் பிடித்தவற்றை பயமேதுமின்றி செய்யலாம்’ என புரிய வைத்தார்.
அம்மா, அதைக் கேட்டு நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
மிகவும் சந்தோஷமாக இருந்தது. எந்தக் கவலையும் இன்றி வாழ்க்கை சுலபமாகக் கழித்து விடும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. உன் அப்பா சாத்வீகமான குணம் கொண்டவர். ஒழுக்கம் நிறைந்தவர். தேவையற்ற தடைகள் எதையும் என் மீது விதித்ததி ல்லை. ஆனால், குடும்பப் பழக்க வழக்கங்களை, கூட்டவோ குறைக்கவோ அல்லது அவற்றில் மாறுதல் செய்யவோ ஒருபோதும் அனுமதித்ததில்லை. இந்த ஒரு விஷயத்தில் அவர் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.
அம்மா, இதுவும் ஒரு வகையான வறட்டுப் பிடிவாதம் தானே!
இல்லை, நான் அதை அவர் கடைபிடித்த ஒழுங்காகவும், பழக்கமாகவும் தான் பார்த்தேன். உன்னுடைய தாத்தாவின் முதிர்ச்சியும் அவர் கடைபிடித்த ஒழுங்கு முறைகளும் மிகவும் வியக்கத் தக்கவை. இந்த விஷயத்தில் தந்தை மகன் இருவருமே தராசின் இரு தட்டுகளைப் போல, கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருந்தார்கள். அதிக எடையுமி ல்லை; அதேசமயம் லேசாகவும் இல்லை. சமத்துவம் என்றால் என்ன என்பதை நான் இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் அறிந்து கொண்டேன். இந்த குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடு எதுவுமில்லை. நான் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள் பெண்ணே! அதிர்ஷ்டவசமாக, நீ அப்படி பாகுபடுத்திப் பார்ப்பவர்களின் குடும்பத்தில் பிறக்கவில்லை.
அம்மா, உங்கள் பிறந்த வீட்டில், அதாவது என் அம்மா வழி தாத்தா வீட்டில் என்ன வழக்கம்?
அது போகட்டும் விட்டுவிடு. இரு குடும்பங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது சரியானதல்ல.
தயவுசெய்து சொல்லுங்களேன்.
பெண்ணே, உன் அம்மா வழி தாத்தா வீட்டில் அன்பு, பாசம், செல்லம் கொடுப்பது இவற்றிலெல்லாம் எந்த குறையும் இல்லை. சாப்பிட, உடுத்திக்கொள்ள, விளையாட நிறைய இருந்தன. எனினும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு அழுத்தமான கோடு கிழிக்கப்பட்டிருந்தது. கடைசி நாட்களில், உன் தாத்தா நோய்வாய்ப்பட்டிருந்த போது, நானும் என் சகோதரிகளும், மாறி மாறிச் சென்று, அவரோடு தங்கி யிருந்தோம். ஆனால் அவர் எப்போதும் குரல் கொடுத்து அழைத்ததென்னவோ தன் மகனைத் தான். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மகன் மீது மட்டும் ஏன் இத்தனை கண்மூடித்தனமான பாசம்!
அத்தகைய தருணங்களில், எதுவும் நினைவில் இருப்பதில்லை பெண்ணே! எல்லாமே தேய்ந்து போய்விடுகிறது.
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? இரு, கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
என் சகோதரனை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தார். நானும் என் சகோதரிகளும், வேதம் கற்றவர்களிடமிருந்தும், மௌல்வியிடமிருந்தும் மட்டுமே படித்தோம். எனக்கும் என் சகோதரனைப் போல படிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால், நான் இந்நேரம் என்னவெல்லாம் பெற்றிருப்பேன் என்று கொஞ்சம் யோசித்துப் பார். நானும் என் குழந்தைகளும் எப்படியெல்லாம் வளர் ந்திருப்போம்! பெண்கள் சலிப்பு தரும் கடின வேலைகளுக்காக வே வளர்க்கப்படுகிறார்கள் என்பதே உண்மை நிலை – உன் சகோதரன் படித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பால் கொடுத்துவிட்டு வா. அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான், இந்த கம்பளியை போர்த்திவிட்டு வா. சீக்கிரம் உன் சகோதரனுக்கு சாப்பாடு பரிமாறு. அவனுக்குப் பசி தாங்காது. உன் சகோதரன் சாப்பிட்டாயிற்று. இப்போது நீயும் சாப்பிடு.
அம்மா சற்று நேரம் அமைதியாக இருக்கிறார்.
சூசன் அருகில் சென்று, குனிந்து, என்ன ஆயிற்று என கேட்கிறாள்.
அம்மா, ஒடுங்கிய குரலில்,
என் கண்கள் எரிகின்றன. கண்களை புகை சூழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை!
மகள் வேகமாக சமையலறைக்கு சென்று திரும்பி வருகிறாள்.
என் கண்களின் மீது யாரோ பனியைத் தடவுவது போல தோன்றுகிறது.
அம்மா, இதைத் தடவிக் கொள்ளுங்கள். கொஞ்சம் எரிச்சல் குறையும்.
என்ன இது?
பாலேடு அம்மா.
என் அருகே வா.
என் கண்களின் எரிச்சலை குறைத்து குளிர்ச்சியை தருகிறாயே, இதேபோன்ற குளிர்ச்சியை நீ எப்போதாவது அனுபவித்தி ருக்கிறாயா. அம்மாவிடம் மறைக்காமல் உண்மையைச் சொல்.
இல்லை அம்மா.
வெகுநேரம் வரை அறையில் மௌனம் கவிழ்ந்திருக்கிறது.
திடீரென, அம்மா, தூக்கத்திலிருந்து விழித்தவள் போல,
பவுர்ணமி எப்போது என்று தெரியவில்லை. அமாவாசை என்று வந்தது என்று கொஞ்சம் பார்த்து சொல்! நான் கேட்பது உன் காதில் விழுகிறதா?
மகள், அரைகுறை ஆர்வத்துடன்,
எனக்கு திதிகளை பற்றி எதுவும் தெரியாது அம்மா என்கிறாள்.
அதனால்தான் இந்த மூட்டையை உன் தோள்களில் நீ சுமந்து கொண்டிருக்கிறாய். இதை தூக்கி எறிந்து விடு. நேரத்தை சாம்பலாய் கருகி வீணாக விடாதே. இப்போதேனும் சுதாரித்துக் கொள். இறங்குமுகம் தொடங்கிவிட்டது.
மகள் அறையைவிட்டு வெளியே செல்கிறாள்.
சூஸன் அம்மாவுக்கு க்ளுகோஸ் கொடுக்கிறாள்.
(தொடரும்)