அன்னப்பறவை

சுந்தரி அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள். பல நேரங்களில் வேடிக்கை பார்பதை மட்டுந்தான் செய்ய முடிகிறது வாழ்வில். மாலை வானத்தின் கீழ் சிவப்பில் வெள்ளி கோடு போட்டபடி மிதந்து கடந்தது விமானம். விமானங்கள் வானத்தின் செயற்கை மீன்கள். எண்ணற்ற கனவுகளை சுமப்பவர்களை தன் வயிற்றுக்குள் பொத்திக் கொண்டு போய் சேர வேண்டிய இடத்தில் சேர்க்கிறது. சிலருக்கு கனவாகவும் இருக்கிறது. அப்படியான கனவை கலைக்காமல், கனவாகவே பொத்தி பாதுகாத்து கையோடே பத்திரமாய் எடுத்துக் கொண்டு போய் விட்டாள் செண்பகம் ஆச்சி. 

கைபேசி அழைப்பு மணி சுந்தரியை வீட்டுக்குள் வரச்சொல்லிக் கூப்பிட்டது. 

பிரபு அழைத்திருந்தான்.

‘வேளாகட்டியே வாங்கிடவாம்மா? ‘

‘அதையே வாங்கிடுறேன். அதான் டேஸ்ட் நல்லா இருக்கும். ஓகேம்மா பை. வேற எதுவும் வாங்கிட்டு வரணுமா உனக்கு. ‘ சுந்தரி பதில் சொல்வதற்குள் அவனே பதிலை சொல்லி முடித்து, அடுத்த கேள்விக்கு போயிருந்தான்

‘இல்லப்பா வேற எதுவுமில்ல’

‘ஓகேம்மா.பை’

பிரபு இப்படித்தான் அவனே கேள்வி கேட்டு அவனே பதில் சொல்லி கொள்வான் பல நேரங்களில். 

‘அண்ணன் இப்படி தானே கேள்வி கேட்டு, தானே பதில் சொல்லிக்கிறதுக்கு, கூட மாரடிக்க முடியாம, வர போற அண்ணி மண்டைய பிச்சிக்க போறாங்கனு, நான் அம்மாக்கிட்ட நிறைய தடவ சொல்லிருக்கேன். நீங்க என்னென்னா ரொம்ப சாதரணமா சிரிச்சிட்டு இருக்கீங்க’ இரண்டாம் மறுவீடு முடித்து மாமியார் வீட்டுக்கு வந்திருந்த பொழுது, பிரபு ஏதோ ஒரு கேள்வியை அவனே எழுப்பி அவனே பதில் சொல்லி முடிக்க, அதற்கு சுந்தரி ரசித்து சிரித்துக் கொண்டிருந்ததை பொறுக்க மாட்டாமல், நாத்தனார் கமலா கேட்டாள். 

அதற்கும் சுந்தரி மெளன புன்னகையை தான் மிதக்க விட்டாள். 

சாயந்திரமானதும் வெள்ளை புடவையின் சுற்றுக்கட்டை லேசாக தளர்த்தி மீண்டும் இறுக்கி சரி  செய்துவிட்டு முற்றத்து நடையில் வந்து செண்பகம் ஆச்சி கால் நீட்டி அமர்ந்தால், கதை கேட்க அவளை சூழ்ந்து கொள்ளும் அந்த தெருவின் வாண்டுகள் கூட்டம்.

சின்ன பிள்ளைகளுக்கு ஏற்றவாறு என்று எந்த கதையும் தனியாக யோசித்து சொல்லும் பழக்கமெல்லாம் ஆச்சிக்கு இல்லை. 

அந்தந்த நேரத்திற்கு அவள் மனதில் ஓடும் பழைய நினைப்புகளை ஒரு கோர்வையாக கட்டி கோர்த்துக் கொண்டே போவாள். அதுதான் அவள் சொல்லும் கதைகள். மற்ற பிள்ளைகள் எல்லாம் அவள் சொல்லும் வரிகளில் மூழ்கி போக, சுந்தரி மட்டும் வரிக்கு வரி மாறும் ஆச்சியின் முக பாவங்களை படித்துக் கொண்டே வருவாள். 

‘செண்பகம் செண்பகம்ன்னு ஒரு நாளைக்கு ஒம்பத்ரெண்டு தடவை கூப்பிடுவாரு. தினமும் பால் பண்ணைக்கு பால் ஊத்த போறது தானேன்னு, பேசாம வந்து எடுத்திட்டு போக மாட்டாரு. செண்பகம் பால் பண்ணைக்கு போய் குடுத்திட்டு வந்திரவான்னு கேட்பாரு. நான் பதில் சொல்ல முன்னாடி கொடுத்திட்டு வந்திடுறேன்னு  அவரே பதில் சொல்லி முடிச்சிட்டு ஒரு பார்வை பார்த்திட்டு கிளம்பிடுவாரு. தினமும் இப்படி செய்யிறோமேன்னு மனுசனுக்கு சலிச்சும் போகாது. எல்லாத்துக்கும் சொல்லி பாத்துக்க அந்த மனுசனுக்கு நான் துணைக்கு வேணும்.’ இதை சொல்லும் பொழுது ஆச்சியின் முகம் சிவந்து போனது. 

‘எல்லாத்தையும கேட்டு கேட்டு செஞ்சவரு, கேட்காமலேயே மலை ஏறிட்டாரு. பாம்பு கடிச்சிட்டுன்னு, கயித்து கட்டில்ல மல்லாக்க வாரி போட்டு கொண்டாந்தாங்க. அசந்து உறங்குனாப்ல தான் இருந்திச்சு’ சொல்லி முடிக்கையில் மூக்கை சேலை தலைப்பில் லேசாக துடைத்துக் கொண்டாள். குரல் தளதளத்து தாழ்ந்து, கரு விழிகள் விழிநீரில் மிதந்து கொண்டிருந்தது. 

அவளது பழைய நினைவுகள் எப்பொழுதும் நடராஜன் தாத்தாவின் மேன்மைகளை உயர்த்தி பிடிப்பதாக இருந்தது. செண்பகம் ஆச்சியின் நினைவுப் பின்னல்களை மட்டுமே கேட்டிருப்பவர்கள், ஆச்சிக்கும் தாத்தாவும் இடையே அந்நியோனியமான காதல் தம்பதிகள் என்றே நினைத்து கொள்ளக் கூடும். ஆனால் அவர்கள் உறவின் மறுபக்கத்தை, அம்மா பேசுவதில் இருந்து சுந்தரி அரசல் புரசலாக கேட்டிருக்கிறாள்.

நடராஜன் தாத்தாவின் அம்மாவை கூடாத நோய் வந்து தூக்கி போயிருந்தது. தாத்தாவின் அக்காமார்கள், அடுத்த வீட்டுப் பெண்களாக மாறியிருந்தார்கள். வீட்டிற்கு சமையல் செய்ய பெண் பிள்ளை வேண்டும் என்பதற்காக, பதினான்கு வயதில் செண்பகம் ஆச்சி நடராஜ தாத்தாவின் பத்தினியாக்கப்பட்டாள். அட்டியல் நகைகள், சொத்துபத்துகள் என்று அவளை பின் தொடர்ந்து வர தாத்தாவின் சொத்து மதிப்புகள் இன்னும் ஏறியது. 

கல்யாணம் முடிந்த அடுத்த எட்டாவது மாதம், ஆச்சியின் பெரிய மனுஷியான சடங்கு ஊரே அமர்களப்பட நடந்து முடிந்தது. அடுத்த ஆறு வருடங்களுக்கு, மாதமாதம் அடி வாங்கும் சுழற்சியாக நகர்ந்து கொண்டிருந்தது ஆச்சிக்கு. தான் அப்பா ஆக முடியவில்லை என்ற மொத்த வெறுப்பையும் கோபத்தையும் அடிகளும் உதைகளுமாக ஆச்சி மீது இறக்கி கொண்டிருந்தார் தாத்தா. ஏதோ விரக்தியை எப்படியே தீர்த்துக் கொள்கிறேனென்று சொத்து பத்திகளை அழித்து மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தார். ஆச்சி எல்லா வெறுப்பிற்கும் பதிலாக அன்பை தவிர வேறெதையும் தரவில்லை. ஆறு வருட முடிவில் வேலப்பன் ஆச்சியின் வயிற்றைக் குளிர வைத்து, அவளை ஆசுவாச மூச்சுவிட அனுமதித்தான்.

கொண்டு வந்த எல்லாவற்றையும் இழந்து விட்டு, வெறும் மஞ்ச கயிறோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதற்காக நியாயமாக இருக்க வேண்டிய நெருடல்கள் எதையும் காட்டாமல்,  வாழ்க்கையில் இருந்த நன்மைகளை மட்டுமே பிரித்து பிடித்து,  வாழ்க்கையை நகர்த்த தெரிந்திருந்தது ஆச்சிக்கு. அந்த இயல்பு தான் எப்பொழுதும் அவள் முகத்தில் பிரகாசத்தை படர வைத்திருந்தது. 

செண்பகம் ஆச்சி வைக்கும் மீன் குழம்பு ருசியும் மணமும், அந்த சுற்று வட்டாரத்தில் யாருக்கும் வராது.

ஆச்சியின் மீன் குழம்பிற்கு முதல் அடிமை பூனை நடராஜன் தாத்தா தான். 

சீரகமும், கருவேப்பிலையும் குறைந்த சூட்டில் எண்ணெய் இல்லாமல் வரட்டு வதக்கு வதக்குவாள். கருவேப்பிலை அதன் பச்சையை இழந்து இலவசமாக துண டுபட்டிருக்கும்.துளி கருகலும் இருக்காது. அதை மாற்றி விட்டு அதே சட்டியில் எண்ணெய் ஊற்றுவாள். உள்ளங்கையில் ஏந்தி ஊத்தினாற் போல ஒரு அளவில் நிற்கும் எண்ணெய். அதில் இஞ்சி, பூண்டு, சின்ன உள்ளி, தக்காளி எல்லாம் போட்டு வதக்கி , அதோடு ஏற்கனவே வதக்கி வைத்த கருவேப்பிலை சீரகமும் சேர்த்து அறைத்து வைப்பாள். அடுத்து எல்லாவற்றையும் வதக்கின சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம் நறுக்கின பல்லாரியை போட்டு பொன் நிறத்திற்கு வதக்கி, செங்கல் நிறத்திற்கும், காப்பி பொடி நிறத்திற்கும் மத்தியமான நிறத்தில் இருக்கும் அரைப்பைக் கொட்டி, புளி கரச்சல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க விடுவாள். கொஞ்சம் நேரம் போக குமிழி போடும் குழம்பில் மீனை எடுத்து போடுவாள்.ஒவ்வொரு மீன் போடும் போதும் கண்ணால் அளந்த ஒரு இடைவெளியோடே போடுவாள்.இப்படி செண்பகம் ஆச்சி குழம்பு வைத்து இறக்க அந்த தெருவுக்கே மணக்கும். மணக்குற குழம்பு ருசிக்காது என்கிற விதிக்கெல்லாம் அப்பாற்பட்டது அவள் வைக்கும் குழம்பு. அதில் மணத்திற்கும் மேலான ருசி இருக்கும். 

அந்த சுற்றுவட்டாரத்தில் எல்லோரும் தேங்காய் அறைத்து ஊற்றி மீன்குழம்பு வைக்க, செண்பகம் ஆச்சி மட்டும் தேங்காய் இல்லாமல் இப்படி வேறு தினுசில் வைப்பவளாக இருந்தாள்.சுந்தரியின் அம்மா அதனை கருவாட்டு குழம்பு வைக்கிற பக்குவம் மாதிரி இருக்கிறதென்பாள். 

‘நாரோயிலுக்கு கெட்டுபட்டு வந்தாலும் திருநவேலிக்காரி திருநவேலிக்காரிதான.மீனு கூட தேங்காய் சேக்கிறதெல்லாம் எங்க பழக்கத்தில் இல்ல’ என்பாள் செண்பகம் ஆச்சி

‘கிழக்ககாரங்க மீன் குழம்பு’ மற்றவர்கள் ஆச்சியின் குழம்பை அப்படித்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். 

குளத்தை தூர்வாரும் இடத்தில் போய் நாள் முழுக்க காவல் கிடந்து சுந்தரியின் அப்பா வாங்கி கொண்டு வந்த துடிப்பான மீனை அவர் புறவாசலில் கிடந்த பதிந்த கல்லில் போட்டு உயிர் வாங்கி கொண்டிருக்க, தெரு வாண்டுகள் வேடிக்கை பார்க்க சூழ்ந்து நின்றன. 

‘ஏய் பிள்ளேலா, என்னத்த அங்க வாய்பாப்பு. ஓடுங்கட்டி வீட்டுக்கு’ செண்பகம் ஆச்சி போட்ட சத்தத்தில் கூட்டம்  சிதறியது. 

‘சின்ன பிள்ளைக அதுக பாட்டுக்கு நின்னுட்டு போறாக’ அப்பா நிமிர்ந்து பார்க்காமல் சொன்னார். 

‘சரித்தான். நல்லத  நின்னு வேடிக்கை பார்த்து நெஞ்சில பதிச்சிக்க வேண்டிய தான். உசுர கொல்லுகத வேடிக்கை பார்க்க என்ன கிடக்கு’ என்றாள். 

‘ஏட்டி உனக்கு தனியா சொல்லணும்மா. ஓடுட்டி வீட்டுக்குள்ள’ எல்லா பிள்ளைகளும் கலைந்து சிதறிய பிறகும் அப்பா பக்கத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்த சுந்தரியை அதட்டி விரட்டினாள்.

சுந்தரி வீட்டுக்குள் ஓட,  ‘ அந்தா போகுதுலா வானத்து மீன். ஒருநாளாவது அதல ஏறி மிதந்து போயிரனும்’ அண்ணாந்து பார்த்து தனக்கு தானே சொல்லிக் கொண்டது போல, உரக்கச் சொல்லிக் கொண்டே ஓடை இருக்கும் திசைக்கு நடந்தாள். 

மறு வருஷம் குளம் தூர்வாருகிற அன்று அப்பா குளத்து திசைக்கு நடக்க, ‘மணி சவுரியாப்பட்டா எனக்கு ஒரு மீன் வாங்கி வாப்பா’ என்று அப்பாவிடம் சொல்லி விட்டாள். ‘ அவரு இருந்த வரைக்கும் வருஷா வருஷம் வாங்கிட்டு வந்திருவாரு. அதுக்கான ஆளு இல்லாம போன எல்லாம் ஒரு முழம் கட்டைதான். என்ன செய்ய’ தனக்கு தானே புலம்பிக் கொண்டாள். 

ஆச்சி சொன்னபடியே அப்பா அவளுக்காக ஒரு சப்பையான கனத்த மீனை கொண்டு வந்தார். அதன் கண்களில்  நிறைய உயிர் மிச்சமாக இருந்தது.அந்த மீனை புறவாசலில் இருந்த உருண்டையான மண் தொட்டியில் மிதக்க விட்டு, அதனை தெரு வாண்டுகளை வலிய அழைத்து வந்து வேடிக்கை காட்டினாள். 

அடுத்த இரண்டு நாட்களுக்கு, அந்த மீனை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டம் ஆச்சி வீட்டு புறவாசலில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. 

மூன்றாவது நாள், கால் கட்டை விரலை சேர்த்துக் கட்டி, நெற்றி காசு வைத்து ஆட்சியை படுக்க வைத்திருந்தார்கள். ஆச்சி சொன்ன மாதிரி ஆச்சி அயர்ந்து உறங்குவது மாதிரி தான் இருந்தது. ‘உறக்கத்திலேயே உசுரு போயிட்டு. நல்ல சாக்காலம்’ என்று ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டார்கள். 

கடைசிக் காரியம் செய்து முடிப்பதற்காக வெளியூரில் இருந்து வந்திறங்கியிருந்தவந்திறங்கியிருந்தான் ஆச்சியின் மகன். மகன் வழி பேத்திகள் இரண்டும், திண்ணையில் அழுது கொண்டிருந்த குரல்களை தவிர்த்து புறவாசலின் தொட்டி மீனை வட்டமடித்துக் கொண்டிருந்தார்கள்.  செண்பகம் ஆச்சி காடு நோக்கி போக, தொட்டி மீன் எதை நோக்கி போனதென்று சுந்தரிக்கு நினைவில் இல்லை. 

வாசல் அழைப்பு மணி ஒலித்தது. 

சுந்தரி கதவை திறக்க, பிரபு கையில் கருப்பு நெகிழி பையோடு, முதுகில் அழுத்தும் கருப்பு பையின் கனம் தாங்காமல் லேசாக முன்னே வளைந்தபடி நின்று கொண்டிருந்தான். 

‘எல்லா மீனும் தீர்ந்து போச்சு. ஏதோ சிலேபி மீனாம். பொறிக்க நல்லா இருக்கும்னு சொன்னாரு கடைக்காரரு. குளத்து மீனு போல’ சொல்லிக்கொண்டே இடது கையில் பிடித்திருந்த நெகிழி பையை சுந்தரியிடம் நீட்டினான். 

அவள் பதில் சொல்லாமல், அவன் நீட்டியதை கையில் வாங்கிக் கொண்டு, வெளியே எட்டி அண்ணாந்து பார்த்தாள். சிவப்பு ஒளி வெடுக்வெடுக்கென்று மின்னி மின்னி அடங்க ஒரு விமானம் மிதந்து கடந்து கொண்டிருந்தது. 

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.