விடுதலை

எங்கள் மடத்தின் சந்நியாசிகளை உங்களுக்குத் தெரியாது. எங்கள் மடத்தைப் பற்றி நீங்கள் செய்தித்தாள்களிலோ இதழ்களிலோ கூட படித்திருக்க வாய்ப்பில்லை. எங்கள் குருவின் புகைப்படம் கூட உங்கள் கவனத்துக்கு வந்திருக்காது. எங்களிடம் கூட அவரின் புகைப்படம் இல்லை. மடம் என்ற வார்த்தையைக் கூட உங்கள் புரிதலுக்காகத்தான் பயன்படுத்துகிறேன். இதனை ஒரு குருநிலை என்று கூறலாம். ஒரு ஆசிரியரும் அவரது மாணவர்களும் கல்வியைச் சேர்ந்து பயிலும் இடம். ‘’ஒன்று கூடி சிந்தியுங்கள்; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்; உங்கள் மனம் ஒன்றாகட்டும்,‘’ என ஒரு தொல் பிராத்தனை பிரார்த்திப்பது போல சீடர்களும் குருவும் பயணிக்கும் இடம். எங்கள் குருநிலைக்கு சொத்து என எதுவும் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்துக்குத்  தெற்கே வடகாவேரியின் வடகரையில் ஆற்றை ஒட்டி 112 ஏக்கர் நிலம் சித்தபுரி என்ற கிராமத்தில் இருக்கிறது. அது அந்த கிராமத்தில் இப்போதும் வடக்குத் தெருவில் இருக்கும் குடியானவர் ஒருவருக்குச் சொந்தமானது. 8 பேர் பேரில் இருக்கிறது. குருவுக்கு 12 சீடர்கள் உண்டு. இந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறதே தவிர எப்போதுமே கூடியதில்லை. சூரிய உதயத்தின் போது சூரியன் உச்சியில் இருக்கும் போது சூரியாஸ்தமன வேளையில் நள்ளிரவில் என தினமும் நான்கு வேளை வன்னி சமித்துக்களைக் கொண்டு ஹோமம் இருக்கும்.  குருவுக்கு எத்தனை வயதாகிறது என்பது ஒரு யூகம் தான். சிலர் 60 என்பார்கள். சிலர் 72 என்பார்கள். எல்லாருமே அவர் பார்ப்பதற்கு 50 வயதுக்காரராக இருக்கிறார் என்று தான் சொல்வார்கள்.

 குருநிலையை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களுக்கு குரு இரண்டு சீடர்களை கல்விப்பணிக்காகவும் மருத்துவப் பணிக்காகவும் அனுப்பி வைப்பார். யாரேனும் கற்றுக் கொடுக்க சொன்னால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். யாரேனும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் அவர்களுக்கு என்ன மருத்துவம் என்று சொல்வார்கள். மருத்துவம் என்றால் சிகிச்சை அல்ல. நோயாளியை எதிரில் அமர வைத்து சில நிமிடங்கள் எதிராளியின் கண்களை மட்டும் நோக்குவார்கள். ஐந்து நிமிடம் . அதிகபட்சமாக பத்து நிமிடம். உடல்நிலையில் என்ன கோளாறு என்பதை மட்டும் சொல்லி விட்டு அதற்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள். சிலருடைய வீடுகளில் நள்ளிரவில் வீட்டுக்கு முன் வந்து அந்த வீட்டைப் பார்த்து சில மந்திரங்களை மனதுக்குள் சொல்வது உண்டு. அப்போது ஊரில் உள்ள நாய்கள் அனைத்தும் அந்த சீடர் முன் குழந்தைகளைப் போல கொஞ்சிக் கொண்டு சில அடிகள் தள்ளி நிற்பதை நான் பார்த்திருக்கிறேன். 

கல்விப் பணிக்காக செல்லும் சீடர் பொறியியல் மாணவர்களுக்குக் கூட அவர்களின் ஐயங்களைத் தீர்த்து வைப்பதை சில வருடங்களுக்கு முன்னால் கண்டேன். குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பண்ணையார் வீட்டுக் குழந்தைகளுக்கு என அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு சொல்லித் தருவார். ஒரு சொல் கூடுதலாகப் பேச மாட்டார். எவரிடமும் எதையும் பெற மாட்டார். எந்த கிரமமும் கிடையாது. ஆனால் அவரிடம் ஐயம் தெளிபவர்கள் அதன் பின் அவருக்காகக் காத்திருந்து பயில்வார்கள். என்னுடைய பெயர் நீலகண்டன். கோதாவரிக் கரையில் எனது பெற்றோர்கள் இருந்தார்கள். எங்களிடம் நூறு பசு மாடுகள் இருந்தன. கோதை ஒரு முறை பெரும் பெருக்கெடுத்த போது எங்கள் கிராமம் எங்கள் நூறு பசு மாடுகள் என அனைத்தும் அழிந்தன. அழிவு என்றால் ஒன்றுமே இல்லாமல் வெட்டவெளியாகப் போவது. என்னுடைய தாத்தாவும் நானும் மட்டுமே பிழைத்தோம். நம்புவதற்கு கடினமாக இருக்கும். சம்பவம் மட்டுமல்ல அதனை சாதாரண்மாக நான் சொல்லும் விதமும் கூட. என்றாலும் அது உண்மை. உங்களிடம் நான் அதை நிறுவி என்ன செய்யப் போகிறேன் சொல்லுங்கள். என்னுடைய தாத்தா நேராக இங்கே தான் அழைத்து வந்தார். எனக்கு அப்போது எட்டு வயது. உன்னை குருவிடம் விட்டு விட்டு நான் இமயமலைக்குச் சென்று விடுவேன். என்னை இனிமேல் நீ பார்க்க முடியாது என்று அவர் சொன்னது அந்த வயதில் எனக்கு என்ன புரிந்திருக்கும் சொல்லுங்கள். தாத்தா நேராக குருவிடம் அழைத்துச் சென்றார். அவர் பாதம் பணிந்தார். நானும் தாத்தாவைப் போல் குருவின் பாதம் பணிந்தேன். தாத்தா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நீங்கிச் சென்று விட்டார். எந்த எதிர்வினையும் இன்றி நான் எப்படி இருந்தேன் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கும். நான் இதைப் போல பல வியப்புகளை இங்கே கண்டவன். 

சில நாட்களுக்குப்  பின் குரு ஹோமம் செய்து கொண்டிருந்த போது ‘’நீலகண்டா’’ என்றார். அந்த குரல் என்னை ஹோமம் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றது. ஹோமத் தீயைக் கண்டேன். நான் கண்ட காட்சிகள் என் மனதில் கண்டதா அல்லது தீயில் தெரிந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் நன்கு அறிந்த கோதாவரியைக் கண்டேன். எங்கள் பசுமாடுகளைக் கண்டேன். அதில் எனக்கு மிகவும் செல்லமான லக்ஷ்மி கன்றுக்குட்டியும் இருந்தது. லக்ஷ்மி லக்ஷ்மி என தீயை நோக்கிச் சென்றேன். குரு லேசாக முனகினார். அது ஒரு உறுமலைப் போல் இருந்தது. நான் அப்படியே நின்று தீயைப் பார்த்தேன். அப்பா தெரிந்தார். அம்மா தெரிந்தாள். கண்ணீர் விட்டு கதறினேன். சட்டென அம்மா மறைய குரு இருந்த இடத்தைப் பார்த்தேன். அங்கே அம்மா அமர்ந்திருந்தாள். நான் மயங்கி விழுந்து விட்டேன். மூன்று நாட்கள் ஜூரம். மயங்கிய நிலையிலேயே இருந்தேன். விழிக்கும் போதெல்லாம் சுவாமி பசிக்கு ஏதாவது கொடுப்பார். பின்னர் மீண்டும் மயக்கம்.  அதன் பின் தெளிந்தேன். குருநிலையில் இருந்த மரங்களிலிருந்து சுள்ளி சேகரிப்பேன். கிணற்றில் ஏற்றம் இறைப்பேன். 

சுவாமிஜி கிராமத்துக்குச் செல்லும் போது என்னையும் கூட்டிச் செல்வார். அப்போது அங்கே பயிலும் மாணவர்களின் புத்தகங்களை வாசித்து வாசித்து எழுத கற்றுக் கொண்டேன். எனக்கு தெலுங்கைத் தவிர தமிழ், கன்னடம், ஹிந்தி, வங்காளி, ஆங்கிலம் பேசத் தெரியும். நாங்கள் குருநிலையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டோம். நான் சுவாமியுடன் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்றதைத் தவிர வேறெங்கும் போனதில்லை. பின்னர் எப்படி நான் இவற்றை அறிவேன் என நீங்கள் எண்ணக் கூடும். நீங்கள் உங்கள் அளவைகளுக்குள் வாழ்க்கை முழுதாக அடங்கியிருக்கிறது என எண்ணுகிறீர்கள். நீங்கள் வாழ்க்கையை சிக்கலாக உணர்வதற்கும் வாழ்க்கையில் சிக்கல் என உணரும் எல்லா விஷயங்களுக்கும் அதுவே காரணம். ’’கற்றது கைம்மண் அளவு’’ என்று ஒரு பாட்டி சொல்லியிருக்கிறாள். எனக்கு ஆறு மொழி தெரியும் என்பதையே வியப்பாக எண்ணுகிறீர்களே என்னால் பிராணிகளுடன் உரையாட முடியும் என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பிராணிகளுடனும் பட்சிகளுடனும் உரையாட எனக்கு ஒரு முறை ஒரு கொற்றப்புள் சொல்லித் தந்தது. கிணற்றில் ஏற்றம் இறைத்து வயலில் பாய்ச்சி விட்டு மதிய ஹோமத்துக்கு வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு தலைக்கு முன்னால் நான்கடி தூரத்தில் ஒரு கொற்றப்புள் சிறகடித்தது . நான் அதனைப் பார்த்தவாறு நிற்கிறேன். சிறகடித்தலை விரைவு படுத்துகிறது. என்னை அதன் நோக்கிலேயே வைத்திருக்கிறது. அதற்கு ஏதோ சொல்ல இருக்கிறது என புரிந்து கொண்டு அது என்ன என்று என் செவியை கூர் தீட்டுகிறேன். நீண்ட நேரத்துக்குப் பின் என் மனதில் ஒரு ஒலி கேட்டது. அது ஒலியா சொல்லா என்று கேட்டால் ஒலி என்று தான் கூற முடியும். எப்போதெல்லாம் அந்த ஒலி மனதில் எழுகிறதோ அப்போதெல்லாம் பிராணிகளுடன் பட்சிகளுடன் பேச முடியும். பின்னர் அதனை நான் ஒருவாறு நான் நினைக்கும் போது மீட்டுக் கொண்டு வரும் வழிமுறையை உருவாக்கிக் கொண்டேன். 

பத்மேஸ்வர் இமயமலைக்குச் சென்று ஒரு யோகியை சந்தித்திருக்கிறார். அந்த யோகி எங்கள் குருநாதரைப் பார்க்குமாறு சொல்லியதன் பேரில் எங்கள் குருநிலைக்கு வந்தார். எங்கள் குருநிலை கள்ளிச்செடிகளால் வேலியிடப்பட்டிருக்கும். ஒரு கதவைத் திறந்து கொண்டு வருவதைப் போல அங்கு வர முடியாது. எளிதில் உள்வர இயலாத வேலியும் புதர்களும் இருக்கும். அதன் வழியே எப்படி வெளியே செல்வது என்பது எங்களுக்கு மிகவும் பழகிய ஒன்று. குருநிலைக்கு பலவிதமான பட்சிகள் வரும். பிராணிகள் வரும். சர்ப்பங்கள் வரும். மனிதர்களும் அவற்றைப் போல வரலாம். யாரும் இங்கே வருவதில்லை. ஆர்வத்தால் உந்தப்பட்டு வந்த ஒருவர் புதரில் சிறுத்தை ஒன்று இருப்பதைக் கண்டிருக்கிறார். சிலர் புலிகளைக் கண்டிருக்கிறார்கள். உங்கள் மனம் தர்க்கபூர்வமானது தான். ஆனால் அச்சம் சூழ்ந்தால் அது வேலை செய்யாமல் போகிறது. 

கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் கிராமத்துக்குச் செல்லும் சுவாமிகளிடம் அதனைப் பற்றி கேட்டிருக்கிறார்கள். இந்த பகுதியில் அவை உலவ வாய்ப்பில்லையே. ஊரிலோ குருநிலையிலோ அவை தன் இரையை வேட்டையாடினால் தான் உயிர் வாழ முடியும். எந்த பிராணியும் வேட்டையால் கொல்லப்படவில்லை – வேட்டை எச்சங்கள் இல்லை – எனும் போது அவை அங்கே வசிக்கின்றன என எவ்வாறு சொல்ல முடியும் என்று கேட்டிருக்கிறார்கள்.  பத்மேஸ்வர் தில்லி உயர்குடிகளுக்கே உரிய வாழ்க்கையை – அதாவது ராஜவாழ்க்கையை – வாழ்ந்தவர். லண்டனில் படித்துக் கொண்டிருந்தார். 1975ம் ஆண்டில் தில்லியில் பல சம்பவங்கள் நடந்தன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவ்வாறான ஒரு சம்பவத்தில் பத்மேஸ்வரின் ஒட்டு மொத்த குடும்பமும் கொல்லப்பட்டது. வீடு புகுந்து கொன்றார்கள். அவர்களுடைய மாளிகைக்கு அடியாட்கள் சென்று குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவரையும் வெட்டிக் கொன்றார்கள். பத்மேஸ்வரின் மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தாள். வயிற்றில் இருந்த சிசுவும் கொல்லப்பட்டது. மொத்தம் 24 பிணங்கள். சிசுவையும் சேர்த்தால் 25. லண்டனிலிருந்து தில்லி வந்த பத்மேஸ்வருக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிணங்களைக் கண்டதும் வலிப்பு வந்தது. அந்த தினத்திலிருந்து இன்று வரை அவருக்கு ஒருநாளைக்கு இரண்டு முறை மெல்லிய வலிப்பு வருகிறது. ஐந்து நிமிடங்கள். அல்லது பத்து நிமிடங்கள். கண்கள் சொருகி கை கால்கள் இழுத்துக் கொண்டு வாயிலிருந்து எச்சில் ஒழுகி வலிப்பு வந்து கொண்டிருக்கிறது. கள்ளி வேலியை எவ்விதம் விலக்கி உள்ளே வர வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை. அங்கே நின்று கொண்டிருந்த போதே அவருக்கு வலிப்பு வந்தது. வலிப்பின் போது வெளிப்பட்ட கேவல் சத்தம் எங்களுக்குக் கேட்டது. நானும் சுவாமி ஒருவரும் அவரை உள்ளே அழைத்து வந்தோம். தூரத்தில் குரு இருந்தார். இவர் ஓடிச் சென்று அவர் முன்னால் விழுந்தார். பின்னர் மண்டியிட்டு குரு முகத்தைப் பார்த்தார். குரு சினத்துடன் ‘’என்னடா’’ என்றார். குரு சினமடைந்து நாங்கள் பார்த்ததில்லை. அவர் பேசுவதோ பெயரிட்டு அழைப்பதோ எந்த சொல்லையும் உச்சரிப்பதோ அனேகமாக இல்லை. அவர் எதையும் சொல்ல நினைத்தால் தன் மனதினுள் நினைப்பார். நாங்கள் அதனை எங்கள் மனதுக்குள் உணர்ந்து விடுவோம். அவர் எங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் முறை அதுதான். ஹோம நேரத்தைத் தவிர மற்ற நேரம் முழுக்க நிஷ்டை. அவர் மனதில் எண்ணங்களே இருப்பதில்லை. திரும்ப ‘’என்னடா’’ என்றார். பத்மேஸ்வர் உடைந்து உடைந்து அழுதார். குரு அவரிடம் பெருங்குரலில் ‘’சன்னியாசம் எடுத்துக்கடா’’ என்றார். பத்மேஸ்வர் அழுகை நிற்கவேயில்லை. குரு அங்கிருந்து சென்று விட்டார். இப்போது ஆண்டு 1996. தினமும் அவருக்கு வலிப்பு வந்து கொண்டிருக்கிறது. வலிப்புக்குப் பின் மயக்கம். கொஞ்சமாக உணவு அருந்துவார். மயக்கத்திலேயே அவர் வாழ்க்கை இருக்கும். நான் தான் அவரைப் பார்த்துக் கொண்டேன். 

குருநிலையின் தென் திசை விளிம்பில் இருந்த குடிலில் பத்மேஸ்வர் தங்கி இருந்தார். ஹோமம் நடக்கும் போது மெல்ல மெல்ல நடந்து வந்து தூரமாகத் தள்ளி  அமர்ந்து கொள்வார். என்னுடைய ஒரு கவனம் அவரின் மேல் எப்போதும் இருக்கும். குரு உடன் இருப்பவர்கள் அனைவரும் குருவின் சீடர்கள் தான். பல்வேறு திறன்கள் எங்களுக்கு கை கூடிக் கொண்டிருந்தன. நாங்கள் அவற்றை பெரிதாக நினைத்ததில்லை. குரு அருள் என்பதன் முன் அவையெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த பிறவியில் எங்களுக்கு கிடைத்திருக்கும் அருள் இன்னும் பல பிறவிகளுக்குப் போதுமானது. ஆனால் நாங்கள் பிறவாமை வரத்தைத் தான் குருவிடமிருந்து பெற விரும்புகிறோம். 21 ஆண்டுகள் ஆகி விட்டதே தவிர பத்மேஸ்வர் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் எங்களைப் போல் தான் இருந்தார். சந்நியாசம் இன்னும் ஏற்கவில்லை. ஒருநாள் அதிகாலை ஹோமத்துக்கு வந்த பத்மேஸ்வருக்கு குருவின் முன்னிலையில் வலிப்பு வந்தது. நாங்கள் பத்மேஸ்வரை அவருடைய குடிசைக்கு கொண்டு சென்றோம். மறுநாள் காலை ஹோமத்துக்கு அவரை ஆற்றில் முழுகி அழைத்து வருமாறு குரு சொன்னார். அவ்விதமே செய்தோம். பத்மேஸ்வரை எதிரில் நிறுத்தி குரு தனது வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கையை தட்டினார். குருவின் சீடர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து பத்மேஸ்வரின் கண்களைக் கண்டோம். ஒவ்வொருவரும் சிற்சில நிமிடங்கள். நாங்கள் நின்றிருந்த பக்கத்துக்கு எதிர்ப்பக்கமாக சென்று நின்று கொண்டோம். கடைசியாக குரு பத்மேஸ்வரை நோக்கினார். கொற்றப்புள் என்னை நோக்கியது என் நினைவுக்கு வந்தது. சில நிமிடங்கள். குரு தன் தண்டத்தை பத்மேஸ்வரிடம் தந்தார். குருநிலையை விட்டு நீங்கிச் செல்லத் துவங்கினார்.  

***** 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.