- வாக்குமூலம் – அத்தியாயம் 1
- வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்
- வாக்குமூலம் – அத்தியாயம் 3
- வாக்குமூலம் – அத்தியாயம் 4
- வாக்குமூலம் – அத்தியாயம் 5
- வாக்குமூலம் – அத்தியாயம் 6
- வாக்குமூலம் – அத்தியாயம் 7
- வாக்குமூலம் – அத்தியாயம் 8
- வாக்குமூலம் – அத்தியாயம் 9
- வாக்குமூலம் – அத்தியாயம் 10
- வாக்குமூலம் – அத்தியாயம் 11
- வாக்குமூலம் – 12
- வாக்குமூலம் – அத்தியாயம் – 13
- வாக்குமூலம் – அத்தியாயம் 14
- வாக்குமூலம் – அத்தியாயம் 15
- இறுதி வாக்குமூலம்
அவன்
‘கடவுள்’ என்கிற வெறும் கருத்தை, ஆதியிலே இருந்தே, நம்ம நாட்டுல சிவபெருமான், விஷ்ணு, பிள்ளையார், துர்க்கை, அம்மன், முருகர், வள்ளி, தெய்வானை, பார்வதி, பரமசிவன், ராமன், சீதைன்னு என்னென்னவோ தெய்வங்களா ஆக்கி, அவங்க கிட்டே என்னென்னம்போ வேண்டுதல் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. கிறிஸ்தவ மதத்துல இயேசு, மேரி மாதா, கர்த்தர்ன்னு கும்பிடுறாங்க. இஸ்லாத்துல அல்லா, நபிங்கிறாங்க. உலக வாழ்க்கையிலே என்னென்ன கஷ்டமெல்லாமோ, வியாதி, மனக் கஷ்டம், நிறைவேற வேண்டிய ஆசை, விருப்பம்னு ஆயிரக்கணக்குல இருக்கு. இதை எல்லாம் கடவுள் கிட்டே முறையிட்டா சரியாகிரும், நல்லது நடக்கும்னு நினைக்கிறாங்க. கடவுளை வழிபட பிரார்த்தனை, மந்திரம், சடங்குகள்னு நெறஞ்சு கிடக்குது. கோவில்களும், தேவாலயங்களும், பள்ளிவாசல்களுமா பெருத்துக் கிடக்கு. எல்லா இடத்திலேயும் பிரார்த்தனையோட முணுமுணுப்பு கேக்குது. பாவம் ஜனங்க. இதிலே செத்துப்போன பிறகு நற்கதி அடையணும், சொர்க்கத்துக்குப் போகணும்னு அதுக்காக வேற கடவுள்கிட்டே மல்லாடுகிறாங்க. இத்தனை பில்லியன் ஜனங்களோட ஆசையையும் அவரு எப்படி நிறைவேற்றி வைப்பாரு? அதனாலேதான் ‘மதம் ஒரு அபின்’னு கார்ல் மார்க்ஸ் சொன்னாரு போலிருக்கு.

இப்படிச் சொன்னா, தமிழ்நாட்டு வழக்கப்படி என்னை தி.க.காரன், கருப்புச் சட்டைக்காரன், பெரியார் கச்சிக்காரன்னு சொல்லிருவாங்க. ஆனா, ‘சாமி கும்புடாதே’ன்னு சொன்ன பெரியாரையே தெருத் தெருவா செலையா நிக்க வச்சு, மாலை போட்டும் கும்பிடுதாங்க. சிவன், பெருமாள், அம்மன், மேரி மாதா எல்லாரும் சிலையா இருக்கிற மாதிரி காந்தி, நேரு, பட்டேல், தமிழ்நாட்டிலே அண்ணாதுரை, காமராஜ், கருணாநிதின்னு சமீபத்துல உசுரோட வாழ்ந்த ஆட்களை எல்லாம் செலையாக்கி, மாலை போட்டு வணங்குதாங்க. எல்லா நாட்டிலேயும் சிலைகள் இருக்கு. வாழ்ந்த மனிதர்களைச் செலையா செதுக்கி வச்சிருக்காங்க. ஆனா நம்ம ஊரிலேதான் உருவத்தை வழிபடுறோம். கை எடுத்துக் கும்பிடுறது, கைகுலுக்குறது இதெல்லாம் மனிதப் பண்பாடா இருக்கு. இதிலேருந்துதான் கடவுள் சிலைகள் கிட்டே முறையிடுகிறது, அதைக் கும்பிடுகிறது எல்லாம் வந்திருக்கணும். இதெல்லாம் பண்பாட்டோட, கலாசாரத்தோட நீட்சி. அதன் வளர்ச்சி. கடவுள் இல்லாமே இருக்க முடியாதுங்கிற மாதிரி, தலைவர்கள் இல்லாமலும் உலகத்தால இருக்க முடியாதுன்னு தோணுது. ஆனா என்னாலே செலைகளைக் கும்பிட முடியலை. பழகினவங்கள் வீட்டுக்கு வந்தா வரவேற்றுக் கும்பிடுகிறதோட சரி.
சடங்கு, சம்பிரதாயம், பழக்க-வழக்கம்னா எல்லாமே சடங்கு சம்பிரதாயம்தான். மதச் சடங்குகள் மட்டுமா இருக்கு? பகுத்தறிவுன்னு ஒரு பத்திரிகை ஆரம்பிச்சாங்க. ஒரு திராவிடக் கழகத் தலைவரைக் கூப்பிட்டு ஆரம்பிச்சு வச்சாங்க. இது சடங்குதானே? சடங்குகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. சடங்கு, சம்பிரதாய மறுப்பாளர்களும் அவங்களுக்குன்னு ஒரு சடங்கை வச்சிருக்காங்க. என்னாலே சடங்கு, சம்பிரதாயம் இருக்கிற பக்கம் போக முடியலை.
நான் பழகுறது எல்லாம் எழுத்தாளர், கவிஞர்கள் வட்டம். இப்போ ஏகப்பட்ட பேர் கவிதைகள் எழுதுகிறாங்க. அதைப் புஸ்தகமாப் போட ஓரளவுக்கு எல்லார் கிட்டேயும் வசதியும் இருக்கு. ரொம்ப வசதி உள்ளவங்க தன்னோட கவிதை வெளியீட்டு விழாவை ஏகப்பட்ட பணத்தைச் செலவழிச்சு ரொம்பப் பெரிசா நடத்தறாங்க. லட்சக்கணக்கிலே செலவு பண்ணி விழா நடத்தறாங்க. ஒரு பொஸ்தகம், மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டு பொஸ்தகத்தோட அவங்க காணாமப் போயிருதாங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே பால்ராஜ் கென்னடின்னு ஒருத்தர் டி.வி.யிலே, தூர்தர்ஷன்லேதான் வேலை பார்த்தாரு. அவர் கல்யாணத்துக்காக ஒரு பெரிய தொகுப்பு வெளியிட்டார். ராஜநாராயணன், வண்ணதாசன், கலாப்ரியா மாதிரி இலக்கிய வி.ஐ.பி.கள் கிட்டே எல்லாம் கதை, கவிதைகளை வாங்கிப் பொஸ்தகமாகப் போட்டு தொகுப்பு கொண்டு வந்தார். அப்புறம் அவர் என்ன ஆனார்ன்னே தெரியலை. 1974-லே தலைஞாயிறு சுப்பிரமணியம்ன்னு ஒரு கவிஞர் ஞானக்கூத்தன், பாலகுமாரன், ஆத்மாநாம், பதி மாதிரி கவிஞர்கள் கிட்டே எல்லாம் கவிதைகளை வாங்கி, பெரிய தொகுப்புப் போட்டார். அவர் என்னா ஆனாருன்னே தெரியலை. வானம்பாடியிலே எழுதின அக்னிபுத்திரன், சக்திக் கனல் இவங்க எல்லாம் ஏன் பிறகு எழுதாமல் போனாங்கன்னு தெரியலை. பாண்டிச்சேரியிலே இருந்து மஹாபிரபு, ராஜரிஷி, நாகர்கோயில் பக்கமிருந்து குமரித்துறைவன், சித்தார்த்தன்னு எத்தனையோ பேர் கவிதை எழுத வந்து, பிறகு எழுதாமலே போயிட்டாங்க. எத்தனை சிறு பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து வெளிவராமல் போயிருக்குது. நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், தயாரிப்புன்னு சினிமாத் துறையிலே எத்தனை பேர் ஒன்றிரண்டு படங்கள் பண்ணிட்டு காணாமல் போயிருதாங்க.
எம்.ஜி.ஆரைப் போட்டா, அவரை ‘புக்’ பண்ணினதுமே படத்தோட ஏரியா எல்லாம் வித்துரும்னு சொல்வாங்க. ஆனா, அவர் நடிச்ச எத்தனையோ படங்கள் ஓடலை. ராணி சம்யுக்தா மாதிரி அவர் நடிச்ச பல படங்கள் ஓடலை. கடைசியிலே அவர் நடிச்ச நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எல்லாம் பார்க்கச் சகிக்காது. ஶ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் எல்லாம் புகழ் பெற்ற டைரக்டர்கள்தான். ஆனா, இவங்களையும் சினிமா உலகம் ஒவ்வொரு காலத்திலே தூர ஒதுக்கி வச்சிட்டுது. இவங்க இயக்கின படங்களே ஓடாமல் போன காலம் ஒண்ணு வரத்தான் செஞ்சுது. பாக்கியராஜ், பாரதிராஜா எல்லாம் இப்பமும் இருக்கிறாங்க. அவங்க இப்போ படத்தை இயக்கினா யாராவது பார்ப்பாங்களா?
‘ட்ரெண்ட் மாறிட்டுது’ங்கிறாங்க. நெசந்தான். எல்லாத் துறையிலும் போக்கு மாறிக்கிட்டேதான் இருக்குது. ஒரு போக்கு, ஒரு ட்ரெண்ட் முடிஞ்சு, இன்னொரு ட்ரெண்ட் வருது. புதுப்புது மோஸ்தர் வருது. உணவு, உடை, கல்வி, சினிமா, அரசியல், ஆன்மீகம், எழுத்து, வீடு, குடும்பம்ன்னு உலகத்திலே உள்ள எல்லா துறைகளும் ஒரு பத்தாண்டு, இருபதாண்டு காலத்திலே மாறிப் போயிருது. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.
திருநெல்வேலியிலே, எல்லா ஊர்களிலேயும் நடக்கிற மாதிரி எல்லா சினிமா தியேட்டர்களையும் இழுத்து மூடிட்டாங்க. ஏதோ பேருக்கு ஒண்ணு ரெண்டு இருக்குது. அங்கேயும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், பல மாடிக் கட்டிடங்கள் வந்துட்டுது. வயலாக இருந்ததெல்லாம் பெரிய பெரிய கட்டிடங்களா ஆயிட்டுது. எல்லா பெரிய நகரங்களையும் மாதிரி திருநெல்வேலியும் விரிஞ்சுக் கிட்டே போவுது. புதுப் புதுக் காலனிகள், நகர்கள்… அண்ணா தெரு, கலைஞர் தெரு, பெரியார் தெருக்கள், அம்பேத்கர் தெருக்கள். இருபது வருஷத்துக்கு முன்னே இவ்வளவு அம்பேத்கர் படங்களை அரசு அலுவலகங்களில் பார்க்க முடியாது. வீடுகள்ளே கூட காந்தி, நேரு, பட்டேல், மோதிலால் நேரு படங்கள்தான் 1950, 1960-க்களிலே கூட இருந்தன. இப்போ அந்த இடத்தை பெரியார், அண்ணா, கருணாநிதி படங்கள் பிடிச்சிட்டுது. கடைகளிலே பிரபாகரன் படமெல்லாம் மாட்டி வெச்சிருக்காங்க.
அறுநூறுக்கு மேலே இஞ்ஜீனியரிங் காலேஜ்கள் தமிழ்நாட்டிலே இருக்குதாம். ஒவ்வொரு மாவட்டத்திலேயும் மெடிக்கல் காலேஜ் வந்துட்டுது. ஏகப்பட்ட பள்ளிக்கூடங்கள். இஞ்ஜீனியரிங் காலேஜ் நடத்துறது, பள்ளிக்கூடம் நடத்துறது நல்ல பிஸினஸா ஆகிப் போச்சு. வசதி இருந்தா மெடிக்கல் காலேஜ் கூட நடத்தலாம். இதெல்லாம் பிரமாதமான மாற்றம்தான்.
பள்ளிக்கூடங்கள், காலேஜ்கள் பெருகின மாதிரி கோவில்களும், சர்ச், பள்ளிவாசல்களும் கூடப் பெருகியிருக்குது. எல்லாமே அசுர வளர்ச்சி கண்டிருக்கு. குழந்தைகள் எல்லாம் செல் போனை ஆப்ரேட் பண்ணத் தெரிஞ்சிருக்காங்க. கூகுள், விக்கிபீடியா, ஃபேஸ்புக்குன்னு உலகமே செல் போன்லே அடங்கிப் போச்சு. 1960, 61-லே திருநெல்வேலியிலே சினிமா டிக்கெட், தரை டிக்கெட் 25 பைசாதான், உயர் வகுப்பு டிக்கெட்டை ‘சோபா டிக்கெட்’ன்னு சொல்வாங்க. அப்போ சோபா டிக்கெட் ஒரு ரூபா ஐம்பது பைசா. இப்போ ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு நானூறு, ஐநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கறாங்க. ஒரு வாரத்திலே நூறு கோடி வசூல்ங்கிறாங்க. ஆனா, இப்போ எந்தப் படமும் அம்பது நாள், நூறு நாள் ஓடுகிறதில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் படங்கள் எல்லாம் அப்போ நூறு நாள் ஓடுகிறது சர்வ சாதாரணம். இப்போ நடிகர்களின் சம்பளமே பல கோடிகள். எம்.ஜி.ஆரைத்தான் அதிகச் சம்பளம் வாங்கின நடிகர் என்று சொல்வாங்க. அவரே 1966-ல் வெளிவந்த ‘அன்பே வா’ படத்திற்குத்தான் ஒன்றேகால் லட்சம், அதிகபட்சமாகச் சம்பளம் வாங்கினாராம். இப்போது நடிகர்கள் 50 கோடி, 800 என்று வாங்குகிறார்கள். இது அவர்களுடைய பிராபல்யத்திற்கு, அது திரட்டி வைத்திருக்கிற ரசிகர்கள் கூட்டத்திற்கான சம்பளமே தவிர, அவர்களுடைய நடிப்புக்கான சம்பளமில்லை.
1950, 60-க்களிலே அண்ணாதுரை, ஆட்சியிலிருந்த காங்கிரஸை எதிர்த்து அடிக்கடி பெரிய பெரிய போராட்டமெல்லாம் நடத்துவாரு. ரயிலை மறிப்பாங்க. போராட்டக் காரங்களை விரட்ட துப்பாக்கிச் சூடு எல்லாம் நடக்கும். தொண்டர்கள் எல்லாம் ரொம்ப உணர்ச்சிகரமா இருப்பாங்க. இப்போ அந்தளவு உணர்ச்சிகரம் இல்லைன்னுதான் சொல்லணும். 250, 500-ன்னு பணம் குடுத்து, பிராந்தி, பிரியாணிப் பொட்டலம் கொடுத்து கூட்டுகிற கூட்டம் இப்போ. கூலிக்குக் கூடுகிறவங்க. மாநில அளவிலே, அகில இந்திய அளவிலேன்னு பெரிய பிரச்னைகள் இப்போ இல்லை. சின்னச் சின்ன உள்ளூர் பிரச்னைகள்தான் இருக்குது. அதை தாசில்தாரே சரி பன்ணிடுவாரு. அதிகபட்சமா கலெக்டருக்குப் போகும். அவ்வளவுதான்.
நான் எழுதினதைப் படிச்சிட்டு, “இது என்னடே நாவல்ன்னு சொல்லுதே… ஆனா கதையே இல்லையே”ன்னு சங்கர கணபதி கேக்கான். “பழசல்லா சொல்லிக்கிட்டு இருக்கே”ங்கிறான்.
“பழசு நாவல், கதை ஆகாதா?”ன்னு கேட்டதுக்கு அவன் சிரிச்சான். சங்கர கணபதி என்னோட ஸ்கூல்ல படிச்சவன். நான், மேகநாதன், குட்டி எல்லாம் பீரியட்படி நோட்டு, புஸ்தகங்களை எல்லாம் பொதிமாடு மாதிரி பெரிய பையிலே போட்டுச் சொமந்துக்கிட்டுப் போவோம். சங்கர கணபதி ஒரே ஒரு நோட்டை மட்டும்தான் எடுத்துக்கிட்டு வருவான். ஜூன் மாசம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும்போது எல்லாரும் புஸ்தகங்கள், நோட்டுக்கள் எல்லாம் வாங்குவோம். அவன் பேருக்கு ஒண்ணு ரெண்டு பொஸ்தகம், நோட்டுத்தான் வாங்குவான். இத்தனைக்கும் அவங்க வீட்டுல கஷ்டமெல்லாம் இல்ல. ஆனா நோட்டு, பொஸ்தகமே இல்லாமே வருஷத்தைக் கடத்தியிருவான். வாத்தியார் கேட்டா, “பைண்ட் பண்ணக் குடுத்திருக்கேன்”ன்னு பொய் சொல்வான். “என் நோட்டை எய்த் ‘சி’யில படிக்கிற பையன் காப்பி பண்ணுறதுக்காக வாங்கிட்டுப் போனான்… தரலை…”ன்னு கதை விடுவான். சில வாத்தியார்கள் ஹெட்மாஸ்டர் கிட்டே அவனை அனுப்பிடுவாங்க. சில பேரு, “வகுப்புக்கு வெளியே நில்லு”ன்னு சொல்லிருவாங்க. “அப்பாவைக் கூட்டிட்டு வா”ன்னு ஹெட்மாஸ்டர் சொன்னா, “அப்பா பாம்பே போயிருக்காங்க”ன்னு புழுகுவான். எதுக்காக இப்படிச் செய்தான்னு சொல்ல முடியலை. சிலருக்கு திருடுகிறது ஒரு பழக்கமா இருக்குன்னு சொல்வாங்க. அந்த மாதிரி சங்கர கணபதிக்கு புஸ்தகம், நோட்டு இல்லாமல் ஸ்கூலுக்கு வர்றதும், அதுக்காக வாத்தியார்கள் கிட்டே விதவிதமாப் பொய் சொல்லுறதும் ஒரு பழக்கமா ஆயிப் போச்சு. அப்போ 1955, 56-லே எல்லாம் பள்ளிக்கூடங்களிலே யூனிஃபார்ம் கிடையாது. தச்சநல்லூரிலேருந்து வள்ளிக்கண்ணு படிச்சான். அவன் எதுக்காக அவ்வளவு எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு வந்தான்னு தெரியலை. எண்ணெய் ஜாடிக்குள்ளே தலையை முக்கிட்டு வந்த மாதிரி அவ்வளவு எண்ணெய் தேய்ச்சிருப்பான். நெத்தி, காதுல எல்லாம் தலையில் இருந்து எண்ணெய் வடியும். அவன் சட்டைக் காலர் எல்லாம் எண்ணெய்ச் சிக்கு பிடிச்சிருக்கும். ஆனா, எல்.டி.எஸ். பீரியட்லே ரொம்ப அருமையா பாடுவான். ‘ஆசையே அலை போலே’ன்னு குரலெடுத்துப் பாடுவான். கோமதியின் காதலன் படத்திலே சீர்காழி பாடுற பாட்டை அவ்வளவு தத்ரூபமா பாடி எல்லோரையும் சந்தோஷப்படுத்துவான். நான், வண்ணதாசன், கலாப்ரியா எல்லாம், ஒருத்தரை ஒருத்தர் யாருன்னு தெரியாமலே திருநெல்வேலி டவுன் ஈஸ்டர்ன் பிராஞ்சிலே படிச்சோம். வெள்ளிக்கிழமை சாயந்திரம் கடைசி பீரியட்தான் எல்.டி.எஸ். பீரியட். ஜாலியான பீரியட். ஹோம் ஒர்க், பாடம் ஒண்ணும் கெடையாது. பாட்டு, கதை சொல்லுறதுன்னு கழியும். அதுவும் அடுத்த நாள் சனிக்கிழமை லீவுன்னா, அந்த சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. இப்படி நெறைய சின்னச் சின்ன சந்தோஷங்கள் அப்போ இருந்திச்சு.
தீபாவளி, பொங்கல் அன்னைக்கி கண்டிப்பா புதுப் படம் பார்க்கணும். அதெல்லாம் அந்த வயசிலே பெரிய சாதனையா இருந்திச்சி. 70-க்கள்ல நான், கலாப்ரியா எல்லாம் சாரதாவுடைய ரசிகர்கள். சாரதா நடித்த ‘நதி’ங்கிற மலையாளப் படம் பார்த்துட்டு கெறங்கிப் போயி கெடந்தோம். எத்தனையோ விஷயங்கள்ல கெறங்கிப் போயிக் கெடந்தோம். ராயல் டாக்கீஸிலேயும், பேலஸ்-டி. வேல்ஸ்லேயும் பாத்த ஏராளமான மலையாளப் படங்கள் என்னைக் கெறங்கடிச்சிருக்கு. கல்யாணி கிட்டே மணிக்கணக்காப் பேசிக்கிட்டிருந்தா சந்தோஷம். அவர் கிட்டேயிருந்து ‘கசடதபற’, ‘அஃக்’ மாதிரி சிறு பத்திரிகைகள்லாம் வாங்கிட்டும் போயிப் படிக்கிறது சந்தோஷமா இருந்திச்சு. அசோகமித்திரனோட வாழ்விலே ஒரு முறை தொகுப்பு படிச்சிட்டு இனம் புரியாத ஆனந்தம். ஜானகிராமனோட மோகமுள்ளிலிருந்து பல நாளாச்சு மீளுறதுக்கு. லா.ச.ரா.வோட அபிதாவை, பச்சைக் கனவை பைத்தியம் மாதிரி திரும்பத் திரும்பப் படிச்சுக்கிட்டே இருந்தேன்.
தகழியோட சிறுகதைகள், பி. கேசவதேவ், உரூபு இவங்கெல்லாம் மனம் பூரா நிரம்பியிருந்தாங்க. லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்கிற பேரே மனசை இழுத்துது. ஆராதனா செகண்ட் ஷோ பார்த்துட்டு வானத்திலே பறக்காத குறை. 1970-73-லே ராஜ் கபே காபி, சாலைக்குமாரசாமி கோயிலுக்கு எதிரே இருந்த சின்னக்கடை டீ எல்லாம் கூட ரொம்பப் பிடிச்சிருந்துது. ஏதோ ஒரு காவிய மயமான நாட்களை வாழ்வது போலிருந்தது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம்ன்னு படிக்கிறது, சினிமா பார்க்கிறதுன்னு திரிஞ்ச நாட்கள் அவை. ஏதோ பேருக்குன்னு ஒரு வேல பார்த்தேன். வக்கீல் குமாஸ்தாவா இருந்தேன்.
பெரிய சிந்தனை, யோசனை எல்லாம் அப்போ கிடையாது. உணர்வு பூர்வமா வாழ்ந்த நாட்கள். ரொம்ப ஆழமான விருப்பு வெறுப்புகள் கிடையாது. ரொம்ப யோசிக்கிறது கெடையாது. சிறுகதையை, நாவலை, சினிமாவை, ஏதாவது கவிதையை, கட்டுரையை அலசி ஆராய்கிறதெல்லாம் மெட்ராஸுக்கு வந்த பிறகு ஏற்பட்ட பழக்கம். நான் பழகின மெட்ராஸ் சர்க்கிள் அந்த மாதிரி.
***
இதே போல்தான் எழுத்தாளார், இயக்குனர் திரு. சுகாவையும் காணோம்,,,