மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு

1600, 1570 மிர்ஜான் கோட்டை

நான் மங்கைத்தாயார். மிர்ஜான் கோட்டையில் சென்னபைரதேவி மகாராணி அவர்களின் அரச மாளிகையிலிருக்கிறேன்.  நீங்கள் ஒருவேளை அங்கே வந்திருந்தால் என்னைப் பார்த்திருக்கக் கூடும். இப்போது இல்லை. முப்பது வருடத்துக்கு முன்பு. 

நான் இப்போதும் அங்கேதான் இருக்கிறேன். உயரமான ஒரு சுவருக்குள் என்னைப் புதைத்திருக்கிறார்கள். உடல் இல்லாமல் அங்கே நான் ஆவி ரூபமாக உலவிக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுவருக்குள் வைத்தவர்கள் எனக்கு நெருங்கியவர்கள். நண்பர்கள்.  

 விஷம். நான் சொல்வதை நம்புங்கள். எனக்கு அதைத்தான் குடிக்கக் கொடுத்தார்கள். இன்னொரு முறை சொல்கிறேன். என் உறவினர்களும், நண்பர்களும் என் விருப்பப்படி செய்தது அந்தக் காரியம்.   

 ஆயிரம் பேர் அணிவகுத்து கடற்படையாக வந்த ஒரு பெருங்கூட்டத்தை நான் வெற்றிபெற வைத்தேன் என்று என் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது சாத்தியமா என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்டது. 

வெற்றி பெற்ற அந்தப் படை நம்மவர்களுடையது இல்லை. படை நடத்தி வந்தவர்கள் ஐரோப்பாக்காரர்கள். சரியாகச் சொன்னால் போர்த்துகீசியர்கள்.      இதோ கதைக்குள் வந்து விட்டேன்.

                                ******************************************

1600

குதிரைகள் வரிசையாக நின்று இளைப்பாறிக் கொண்டிருந்த குதிரை லாயம். வெளிச்சம் குறைவான லாயத்தில் வரிசையாக முளைகளில் பிணைத்தோ அப்படியே நின்றபடிக்கோ, கூளம் நிரப்பிய தொட்டிகளில் இருந்து குதிரைகள் சவைத்து உண்டுகொண்டிருக்கின்றன. பக்கத்தில் வைத்த தண்ணீர்த் தொட்டியில் இருந்து அவ்வப்போது ஒரு மிடறு தண்ணீர் குடிக்கவும் மறக்கவில்லை அவை. 

வாழ்க்கையின் பெரும்பாலான பத்து வருட காலத்தை அரசாங்கப் பணிக்காக ஓடியோடிக் களைத்த வயதான குதிரைகள் முழு ஓய்வு அளிக்கப்பட்டு லாயத்தின் ஒரு பகுதியில் பராமரிக்கப்படுகின்றன. அவை இயற்கையாக முதுமை கனத்து உயிர் நீக்கும் வரை அங்கேதான் பிரியத்தோடு பராமரிக்கப்படும். பரங்கியர் செய்வது போல், இனியும் பயனில்லை என்று தெரிய வரும்போது சுட்டுக் கொல்லப்படுவதில்லை. 

சென்னபைரதேவி மகாராணி இரவு எட்டு மணிக்குக் குதிரை லாயத்துக்கு வரப்போவதாகச் சொல்லி  இருப்பதால் அரண்மனை, மிர்ஜான் கோட்டை உத்தியோகஸ்தர்கள் லாயத்திலும் வெளியிலும் பரபரப்பாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ராணி வந்து கொண்டிருக்கிறார் என்று தகவல் கிடைத்ததும் லாயத்து முற்றத்திலும், வாசலிலும் நின்றிருந்த அதிகாரிகள் அவசரமாக உள்ளே ஓடி வந்தது மட்டுமில்லாமல் சில குதிரைகளை மேனி சுத்தப்படுத்திக் கொண்டிருந்த குதிரை ஓட்டிகளை வெளியே போய் நிற்கவும் சொல்ல மறக்கவில்லை. 

கண்ணடைத்து சேணம் பூட்டாத குதிரைகள் சட்டென்று கூளம் வாயில் கிடைப்பது நின்று போகவும் அதிர்ச்சியடைந்து கால் மாற்றி நின்றன. சில உச்சத்தில் கனைக்கவும் செய்தன.

குதிரைகளுக்கு ஆகாரம் தரக்கூடாது என்று யார் சொன்னது? கொள்ளும் புல்லும் அந்த வாயில்லாப் பிராணிகளுக்கு அதிகாரிகளே கொண்டு வைத்து பேராயத்தின் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்குகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதானி சந்திரப்பிரபு இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தலையசைத்து இசைவு தெரிவித்தபடி மகாராணி சென்னா தனக்காக நடுநாயகமாக வைத்திருந்த பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் வீற்றிருந்தாள்.

 குதிரை லாயத்தின் ஒவ்வொரு உணவுத் தொட்டியை ஒட்டியும் முளை அடித்துக் கொளுத்தி வைத்த தீவட்டிகள் காற்று இல்லாத சூழலில் சுடர் அலைபாயாது சீராக எரிவது கூட்டத்துக்கு ஒரு பூடகத் தன்மையை அளித்திருந்தது. பரந்த எண்ணப் பகிர்வும், பரிமாறிக்கொள்ளும்   ஆலோசனைகளும், ஒட்டியும் வெட்டியுமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களுமாக நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது.   

எனினும், ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி நகரும் பேராயத்தின் ஆலோசனைக் கூட்டம் இது. எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்படும் பொழுது இது. 

அவ்வப்போது யாராவது ’இது நம் சக்திக்கு மீறிய நடவடிக்கை இல்லையோ, இத்தனையும் ஒரு இரவில் நாம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?’  என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவது வழக்கம். எழுந்த படிக்கே அவை அடங்கியும் விடும். 

நாளைக்கு அரசவை என்ன தீர்மானிக்கும், எந்த எந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படும், எவை விலக்கப் படும் என்று இன்றைக்கே பேசி வைத்து விடுவதற்கான செயல்முறை முன்மாதிரி கூட்டமாக இந்தப் பேரவைக் கூட்டம்    இருக்கும்.

 முதலில், யாருக்கெல்லாம் இந்த நடவடிக்கைகள் செயல்படும்போது அல்லது அதற்கு முன் தெரியவரக் கூடாது என்பதைப் பேசுவோம் என்று இரண்டாம் பிரதானி சொன்னார். 

நேமிநாதன் எழுந்து சமண முனிவர்கள், இந்து துறவிகள், இஸ்லாமிய இமாம்கள் என்று அடுக்க, சென்னா கைகாட்டி நிறுத்தினாள். 

”இமாம்களும் இந்துத் துறவிகளும் இந்த அரசியல் செயல்பாட்டில் எப்போதுமே எந்தவிதமான பங்கேற்றலும் பெற்றதில்லை. நானும் நீயும் முதல் பிரதானியும் சமணர்கள். மற்றவர்களில் மாண்டியா வைணவர்களும், சிவனை பூஜிக்கும் லிங்கயத்துக்காரர்களும். அரசியலையும் மதத்தையும் ஊடு கலப்பதில்லை. என்றாலும் வாராவாரம் அவர்கள் கலந்து கொண்ட மதத் தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு பிரதானி மூலம் தெரியப்படுத்துவது கட்டாயம். ஆகவே இந்த இரு பிரிவினருக்கு நம் பேச்சுகள் எட்டாது என்றே வைத்துக் கொள்ளலாம். சமண முனிவர்கள் மற்றும் துறவிகளுக்கு இது நிகழும்வரை தெரியாமல் இருக்க நான் நடவடிக்கை எடுக்கிறேன். அது என் பொறுப்பு” என்றாள் சென்னா. 

பிரதானி அவளை வணங்கி, ”அம்மா, பொறுப்புத் துறவுக்குத்தான் நிறையப்பேர் தேடிப் போகிறார்களேயன்று முழுப்  பொறுப்பும் ஏற்றுக் கொள்வது உங்களைப் போல் மிக மிகச் சிலர் மட்டுமே. ஜெயவிஜயீ பவ”. என்றார் திடமான குரலில்.

 ஜெயவிஜயிபவ ஒலித்து கூட்டம் சிறு சிரிப்பும் மெல்லப் பழகிப் பரவியது. ஜெயவிஜயா என்று மிட்டாய் அங்காடியில் அறிமுகமான இனிப்பை அனவரும் சுவைத்திருப்பதால் ஒரு வினாடி அந்த இனிப்பின் நினைவுச் சுவையில் மூழ்கி இருக்க,  வகுளாபரணன் என்ற இளம் உப பிரதானி எழுந்து சென்னாவின் முகத்தில் உற்றுநோக்கிக் கேட்டான் – அம்மா, கொஞ்ச நாளாக மிட்டாய் அங்காடியும் ஜெர்ஸோப்பா அரண்மனையும், மிர்ஜான் கோட்டையும் நெருக்கமாகக் கலந்து பழகி வருவது தங்கள் மேலான கவனத்தில் பட்டதா? 

ஒரு சங்கடமான அமைதி அந்தக் கூட்டத்தில் நிலவியது. மகராணி சென்னபைரதேவி முன்பு இப்படிக் கேள்வி கேட்பது முதல் தடவை. இளம் கன்று பயமறியாது என்பதை சென்னா நினைவு கூர்ந்து அவனைத் தொடர்ந்து பேசச் சொல்லிக் கை காட்டினாள். நேமிநாதன் பேசவேயில்லை.

இந்தக் கேள்வியை வகுளாபரணன்   எழுப்ப வேண்டிய முறையில் அல்லாமல் நேரடியாக எழுப்பியிருந்தாலும் அவனுடைய மறைக்கத் தெரியாத மனதுக்கும், புதுப் பார்வைக்கும் மதிப்புக் கொடுத்து இப்போது பேச எடுத்துக் கொள்ளலாம் என்றார் தளபதி. அப்படியே ஆகட்டும் என்றாள் சென்னா.  நேமிநாதன் பேசவேயில்லை.

இனிப்பு அங்காடி கிட்டத்தட்ட வாரம் ஒரு புது இனிப்பை அறிமுகப்படுத்துவதற்கும் அவர்கள் ஜெரஸோப்பா ஊரில்  இனிப்பு விற்றுப் பிரபலமாவதற்கும்  தொடர்பு இல்லாமல் இல்லை என்றார் பிரதானி. அதற்கு முக்கியமாக நம்மில் அனைவரும் இனிப்பு பிரியர்கள் என்பதும் காரணம் என்றாள் சென்னா சிரித்தபடி. 

”அங்காடிக்கு தினசரி நூறு வராகன் மதிப்புள்ள இனிப்பும் புது அறிமுகமான இனிப்பு என்றால் கூடுதல் ஐம்பது வராகன் மதிப்புக்கு அந்த இனிப்பு ஜெர்ஸோப்பாவிலும் அரசி கோட்டை பயணப்படும்போது கோட்டையிலும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தார் உப தளபதி. நேமிநாதன் பேசவில்லை.

 பிரதானி ”அரண்மனைக்குத் தரப்படும் கிட்டத்தட்ட தினசரி வருகையான இனிப்புகளை மகாராணி சுவைப்பதற்கு முன் யாராவது சோதித்து, சுவைத்துப் பார்க்கிறார்களா என்று தெரியப்படுத்தக் கோருகிறேன்” என்று வினவினார். 

இதைப் பிரதானி சொல்ல அழுத்தமான மௌனம் அவையில் நிலவியது. சென்னா எழுந்து நின்று அவையை வணங்கிச் சொன்னாள் – ”இதுவரை அந்த சோதனை நிகழவில்லை. இனி இரண்டு விதமாக இந்த நிகழ்வு சோதனைக்கு உட்படுத்தப்படும். முதலாவது, அங்காடி உரிமையாளர், தலைமை மடையர், மற்ற மடையர்கள் இவர்களின் பூர்வீகம் பற்றி ஆராயப்படும். இனிப்பை அல்லது ஜெருஸோப்பான்னா போன்ற புளியும் காரச் சுவையும் கலந்த உணவை அங்காடியில் இருந்து யாரும் நான் இருக்கும் இடத்திற்கு அது ஜெரஸோப்பா அரண்மனையோ மிர்ஜான் கோட்டையோ, அங்கே கொண்டு வந்து தரக்கூடாது.  நம்மவர்கள் அதுவும் பின்னணி அலசப்பட்டு நல்ல குடும்பம், படிப்பு இடம், நட்பு என்று எல்லாத் தரப்பிலும் கசடற்ற, ஐயமில்லாத பின்னணி கொண்ட ஊழியர்கள் அங்காடிக்கு அனுப்பப் பட்டு இனிப்பை வாங்கிவரச் செய்யப்படும். அந்த உணவுப் பொருளை சோதனை ஓட்டமாகச் சுவைத்து அபாயம் ஏதுமில்லை என்று நற்சான்றிதழ் தர இன்னொரு குழு செயல்படும். இந்த நடவடிக்கைக்காக மட்டுமில்லாமல் தற்போது ஈடுபட்டிருக்கும் பணியோடு கூடுதலாக இந்தப் பணியும் அவர்களுக்கு விதிக்கப்படும். மிர்ஜான் கோட்டையின், ஜெருஸுப்பா அரண்மனையின் விரிவாகத் திட்டமிட்டு நிறைவேற்றப்படும் பாதுகாப்பு ஒரு அற்பமான இனிப்புப் பலகாரத்தால் பலவீனமாவது இனியும் அனுமதிக்கப்படாது.”

சென்னா சொல்லி நிறுத்த அனைவரும் திருப்தி காட்டினர். ஜெருஸோப்பான்னா என்பது என்ன? எனக்கு உண்ணக் கிடைக்கவில்லையே என்று உபதளபதி கேட்க, அதற்கு இன்னொரு சிவராத்திரி கடந்து போகக் காத்திருக்கணும் என்றான் வகுளாபரணன். அடுத்த சிரிப்பு அலையடித்துப் போக சென்னா கைகாட்டி நிறுத்தினாள். நேமிநாதன் பேசவே இல்லை.

பேராயம் ஆலோசனைக் கூட்டம் இத்தோடு முடிவடைந்தது என்று சென்னா அறிவிக்க அனைவரும் எழுந்து வரிசையாக வெளியேறினார்கள்.

மௌனமாக நடந்தான் நேமிநாதன்.

1570

நான் மங்கைத்தாயார் திரும்பப் பேச வந்திருக்கிறேன்.

பெரும்பான்மையான ஆலோசனைக் கூட்டங்கள் இப்படித்தான் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வழியில் நடந்து முடியும். ஆனால் 1570-இல் நடைபெற்ற ஒரு கூட்டம் அசாதாரணமானது, அதைப் பற்றிச் சொல்லும்போது நான் எப்படி சுவரில் மறைந்தேன் என்பதும் உங்களுக்கு தெரிய வரும். 

சொல்கிறேன். கேளுங்கள்.

அந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கும்போதே சென்னா மகராணி தெரிவித்தார் –

”கிட்டத்தட்ட இதுவரை இங்கே நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் பேசியதற்கு எதிர்த் திசையில் தான்   இந்த உரையாடல் நிகழப் போகிறது. ஆச்சரியத்தையும் சற்று அதிர்ச்சியையும் தரக்கூடிய இந்த ஆலோசனைக் கூட்டம் முகத்தில் இருந்து தற்காலிகமாகச் சிரிப்பைத் துடைத்துப் போட்டு விடக் கூடியது. எனவே, பேசி முடித்தபின் சிரிப்பை மறுபடி அணிந்து கொள்வோம்” என்றாள் அவள். 

எதைப் பற்றி இனி பேச்சு கால்வாய் வெட்டி மடைமாற்றப்படும் என்று யாருக்குமே தெரிந்திருக்கவில்லை என்பதில் சென்னாவுக்கு ஒரு மன நிறைவு இருப்பது வெளிப்படவே அவள் முகத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தது.

ஊமத்தை தெரியுமா? சென்னாவின் அடுத்த கேள்வி அவர்களை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. தெரியும் என்று தலையசைத்தல் மூலமும், மெல்லிய குரலில் ஆமாம் என்று உடன்பாடு தெரிவித்தும் அங்கே இருந்த முக்கியமான அரசாங்கப் பிரமுகர்களால் சென்னாவுக்கு அறிவிக்கப் பட்டது.

ஊமத்தை பற்றிச் சுருக்கமாக யாராவது சொல்லுங்கள் என்று கட்டளையிட்டாள் மகாராணி. 

அம்மா, நீங்களே சொல்லுங்களேன். உங்களைப் போல் முழுத் தகவலும், கோவையாக, தடங்கல் இல்லாமல் தெளிவாகச் சொல்ல உங்கள் ஒருவரால் மட்டும்தான் முடியும் என்றார் நஞ்சுண்டையா பிரதானி.  

ஆமாம் அம்மா என்று எல்லாக் குரல்களும் சேர்ந்து கோரிக்க விடுத்தன. சென்னா பேச ஆரம்பித்தாள். குதிரைகளும் மௌனமாகக் கேட்டிருந்த இருளும் ஒளியுமான சூழலில் குதிரை லாயம் உயிர்த்திருந்தது.

சென்னா சொன்னாள் –

ஊமத்தை ஒரு செடி. பார்க்க எந்தவிதமான கவர்ச்சியோ, பச்சைப் பசேல் தோற்றமோ, அழகான பூவும், காய்களும், பழங்களும் கொண்டு பூத்தும் காய்த்தும் பழுத்துமோ மனம் கவராத செடி அது. ஊமத்தையின் இலைகளைப் பார்க்கும்போது கசக்கிப் போட்டது போல் ஒரு தோற்றம். பூக்கள் சாதாரணம் என்று சொல்லிவிட்டேனா? அது தவறு. பெரியதாக இதழ் விரித்து வெள்ளை நிறத்தில் பூப் பூத்திருக்கும் செடி அது. சாத்தானின் பூக்கள் என்று சொல்லப்படும் அந்தப் பூ மட்டுமில்லை, விதைகளும் கூட கொடிய விஷம். பூவை உலர்த்தி, விதையை அரைத்துக் கலந்து பருகக் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களில் சாவுதான். நிச்சயமாக. 

மங்கத்தாயார் மறுபடி பேசுகிறேன் – நான் சொல்வதை நம்புங்கள். எனக்கு அதைத்தான், ஊமத்தைச் சாறு என்னும் கொடிய விஷத்தைத்தான் குடிக்கக் கொடுத்தார்கள். இன்னொரு முறை சொல்கிறேன். என் உறவினர்களும், நண்பர்களும் என் விருப்பப்படி செய்தது அந்தக் காரியம். அன்பாலானது.

சென்னா மகாராணி தொடர்கிறார் -ஊமத்தை இந்த தேசத்தில் இருந்துதான் உலகம் முழுக்கப் போனது. ததூரா என்ற உலகம் முழுதும் வழங்கப்படும் பெயர் சம்ஸ்கிருத மொழியிலிருந்து வருவதாம். எனக்கு இதெல்லாம் கற்றுக்கொள்ள நிறைய நேரம் கிடைத்தது.   அதிக சக்தியுள்ள ஊமத்தை பானம் பருகினால் சாவு நிச்சயம். இல்லாவிட்டாலும் வீரியம் குறைவான பூவிதழ் சாறு அல்லது விதைகளை அரைத்த விழுது உண்டால் மனநலம் உடனே பாதிக்கப்படுமாம்.  திரும்ப மனநலம் வராமல் இருப்பது முதல் சில நாட்கள், சில மணி நேரங்கள் கூட உன்மத்த்தத்தோடு மனிதர்களை ஸ்தம்பித்துப் போக வைக்கும் ஊமத்தை.   மணிக்கணக்கில் புத்தி இழந்துபோய் சாவகாசமாகத் திரும்பிவரத் தேவையான ஊமத்தையை சிறு அளவிலோ பெரிய அளவிலோ தயார் செய்து வைத்துக்கொண்டு வித்தை காட்டலாம்.

சென்னாவின் சொல் பெருக்கு சற்றே நின்றது.

இந்தக் கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளவில்லை. அது பெண்களுக்கு ராஜாங்க ரகசியம் தெரியக்கூடாது என்ற நிலைபாடு காரணமில்லை. நாம் அழைப்பு விடுத்த இரண்டு பெண்களும் வீட்டிலும் வேலைத் தலத்திலும் பணியாற்ற மூன்று நாள் தடை உள்ள நாட்கள். எனவே அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. யார் அவர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? தளபதி கேட்டார். 

“ஓ மங்கத்தாயார் பிரதம ஒற்று அதிகாரி, செங்கமலம் உதவி மூலிகை வைத்தியர் இவர்களே இந்த ரெண்டு பேரும்”.

”அவர்கள் என்ன செய்ய வேண்டும்?” 

பிரதானி வீரபாகு முந்திக் கொண்டு கேட்டார். 

“ஏது, வரலாற்றுப் பாடம் நான் நடத்த வேண்டும் போல் இருக்கிறதே”. சென்னா கொஞ்சம் போல் புன்னகைக்கு முகத்தில் இடம் கொடுத்தாள். 

“இத்தனை விஷயம் கோவையாகச் சொன்னீர்கள். வரலாறு உங்களுக்கு சுண்டைக்காய் அல்லவா?” என்றார் வீரபாகுவும் சிரித்தபடி.

”அப்படியா சுண்டைக்காயிலும் கிழக்கு மேற்கு பார்ப்போம், முக்கியமாக மேற்கு. மேற்கு ஐரோப்பா”. சென்னா தொடர்ந்தாள்.

”வாஸ்கோ ட காமா போர்த்துகல்லில் இருந்து ஆப்பிரிக்காவைத் தொட்டு நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வெகு சுருக்காக இந்தியா வர வழி கண்டுபிடித்த பிறகு போர்ச்சுகீசியர்கள் அலை அலையாக இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்து போனார்கள். முக்கிய வியாபாரம் மிளகு, ஏலம், கிராம்பு, லவங்கம், ஜாதிக்காய் இப்படி வாசனை திரவியங்களை தரம் மிகுந்ததாகவும், விலை மலிவாகவும் வாங்க வந்து போனவர்கள். மலிவு விலை, கை நிறைய மிளகு. அந்த விலையும் எதற்காகக் கொடுக்க வேண்டும்? இங்கே நாடு பிடித்து அடிமையாக்கி விட்டால் உழைப்பும், நிலமும், விளைபொருளும்  காசு செலவில்லாமல் கிடைக்குமே என்று பேராசை வந்து சேர, வியாபாரப் படையெடுப்பு ஆக்கிரமிப்புப் படையெடுப்பு ஆனது வெகு சீக்கிரத்தில். போர்த்துகீஸ் அரசர் தூங்குமூஞ்சி செபாஸ்டியன் காலம் இது.  போர்ச்சுகீசியர்கள் விழித்தெழுந்து இப்படி நாடு பிடிக்கும் திட்டத்தோடு  போர்ச்சுகல் தவிர வேறே நாட்டுக்கும் மிளகும் ஏலமும் விற்கக்கூடாதுன்னு தடைவிதிக்கவும்,போர்சுகல் தலைநகரம் லிஸ்பனிலிருந்து இங்கே  வந்திறங்கினார்கள். வந்து இறங்கிட்டிருக்காங்க”. 

இலைச் சருகைத் தரையில் நழுவ விட்டால் பேரொலியாக அந்த சருகின் ஓசை கேட்கும் அமைதி. சென்னா நிகழ இருக்கும் போர்ச்சுகீஸ் யுத்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். தகவல் வந்து கொண்டிருக்கிறது.

”நாடு பிடிக்கறது கூட கொஞ்சம் பின்னாடி போயிருக்கு. மிளகு வர்த்தகத்தை போர்ச்சுகீசியர்கள் தவிர வேறு எந்த நாட்டோடும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நம்மை நிர்பந்திக்கறதே அவங்க ஜெயிச்சா செய்யப் போறாங்க. . ஜெரஸோப்பாவும் பட்கலும் கோவாவும் அவர்களின் தாக்கப்பட வேண்டிய நகரங்களில் முதலாவதாக உள்ளன. அதிலும் மிளகு வர்த்தகத்தில் உலக அளவில் பெயர் வாங்கும் நம் ஜெரஸோப்பாவில் தான் தாக்குதல் தொடங்க இருக்கிறது. நம்பத்தகுந்த செய்திகள் கடல் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்தது இன்று பகல் தான். பத்தாயிரம் கடற்படை வீரர்கள். நூற்றுகணக்கான சிறு கப்பல்கள் ஒரு முடிவோடு வந்திருக்கிறார்கள். நான் வெல்வோம் அல்லது அவர்கள் நம் இடத்தைப் பிடித்தெடுப்பார்கள். அதுவும் இன்னும் இரண்டு வாரத்தில் நடந்து விடும். அடுத்த கூட்டம்  இனி அடுத்த ஜன்மத்திலாக இருக்கக் கூடும்”.

சென்னா குரலை உயர்த்திச் சொல்லி முடித்தாள்.

எழுந்து நின்று எல்லோரும் ஜெயவிஜயிபவ என்று உணர்ச்சியோடு முழங்கினார்கள். 

பிரதானி நஞ்சுண்டையா  குரல் ரகசியமாகத் தொனிக்கக் கேட்டார்  – ”அம்மா எனக்குப் புரிந்தது போல் உண்டு. மற்றவர்களுக்கும் அப்படியா”.

” என்ன புரிந்தது? சொல்லுங்கள்” என்றாள் சென்னா. 

“உங்கள் உன்னதமான பேச்சின் முதல் பகுதி உன்மத்தம் வரவழைத்துக் கொல்லவும் செய்யும் ஊமத்தை பற்றியது. அடுத்த பகுதி வந்து கொண்டிருக்கும் போர்த்துகீஸ் கடற்படை பற்றி. இரண்டையும் சேர்த்தால்,   சேர்த்தால்”

அவர் குரல் இடற வீரபாகு நிறுத்தி நிதானமாகக் கூறினார் –

”போர்த்துகீஸ் கடற்படையான அந்தப் பத்தாயிரம் பேரும் ஜெர்ஸுப்பாவை அமானுஷ்ய மௌனம் நிலவும் அத்துவானக்காடு ஆக்கிவிட்டு, அவர்களுடைய தலைநகரம் லிஸ்பன் திரும்பக் கூடாது. ஆள் அரவம் ஒழிந்த ஜெர்ஸோப்பா தெருக்களில்  சுயநினைவு இன்றி அலைந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது இறந்து இங்கே பெயர் பொறிக்காத கல்லறைகளில் புதையுண்டு போகவேண்டும்”. 

”அது வன்முறை. நாம் எந்த சந்தர்ப்பத்திலும் வன்முறையைக் கைக்கொள்ள மாட்டோம்”. சென்னா திட்டவட்டமாகச் சொன்னாள். தீவட்டிகளில் அசைவின்றி நிலைத்த நெருப்பும் அவள் சொற்களைக் கவனித்துக் கொண்டிருந்தது.

“அவர்கள் நம்மவரை அழிக்கத் தொடங்கும் முன் அவர்களைச் செயலற்றவர்கள் ஆக்குவோம். அதுவும் அவர்களின் உயிரைப் பறிக்க இல்லை. ஐந்தே நாட்கள். பிதற்றித் திரிந்தது எல்லாம் தெளியும் ஆறாம் நாளில். வாலைச் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடிப்பார்கள்.” 

”ஊமத்தைச் சாற்றை இவர்களுக்கு எப்படிப் பருகத் தருவது? இதைப் பற்றித்தான் இனிப் பேச்சு இருக்கும். சரியா?” பிரதானி சொல்ல சென்னா அப்படித்தான் என்பதாகத் தலையசைத்தாள். 

”என் வாயால் சொல்ல வேண்டாம் என்று பார்த்தேன். ஆபத்துக்குப் பாவமில்லை.  . என் ஆன்மீக உள்பயணம் செய்யப் பாதை அமைத்துத் தரும் சமணமும், அரசாளுமை என்ற நியாயம் சார்ந்த அறம் சார்ந்த நடவடிக்கைகளும், மனிதாபிமானமும், விசாலமான மனமும் எல்லாம் சற்றே ஓய்வெடுக்கட்டும். வன்முறை இல்லை. ஆனால் எதிரியை ஏமாற்றிக் குழி பறிக்க நானும் உடன்பட்டேன். அந்தப் பத்தாயிரம் போர்ச்சுகீஸ் வீரர்கள் வந்து இயங்கி இங்கே இருக்கும் வரை ஜெர்ஸோப்பா மூச்சு விட்டுக்கொண்டிருப்பது சந்தேகம்தான் என்பதால்”.

ஒரு ஐந்து நிமிடம் யாரும் பேசவில்லை. சென்னா தான் மறுபடி தொடங்கி வைத்தாள். நாளை முதல் வைத்தியச் செங்கமலமும், மங்கத்தாயாரும், அரண்மனை வைத்தியன் அரிந்தம் வைத்தும், செங்கமலத்தின் சீடர்கள் எட்டு பேரும் ஊமத்தைச் சாறு பிழிந்து பொடித்தும் பலமில்லாத ஊமத்தைப் பொடி உண்டாக்குவார்கள். மங்கத்தாயாரின் ஹொன்னாவர் மதுசாலையிலும் பட்கல் மதுசாலையிலும் அது பரீட்சித்துப் பார்க்கப்பட்டு ஹொன்னாவரில் போர்த்துகீஸ் படை இறங்கும்போது – அங்கேதான் பத்து வருஷமாக பூமி பிடித்து வைத்திருக்கிறார்களே – மதுசாலைக்கு வரும், வராமல் தாவளத்தில் இருக்கும் போர்ச்சுகீஸ் வீரர்களுக்கு ஊமத்தைப் பொடி கலந்த மது விளம்பப்படும். தேவைப்பட்டால், கணிகையர் தெருப் பெண்கள் கோரிக்கை விடப்பட்டு  இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பத்தாயிரம் பேரில் ஒருவரும் இதனால் இறக்க மாட்டார்கள். ஐயாயிரம் பேர் வெறும் ஐந்து தினம் எல்லாம் மறந்த போதையில் சுற்றிவர, அவர்களுடைய கப்பல்களில் ஏற்றித் திருப்பியனுப்பப் பட்டாலும் நமக்கு வெற்றி முகம்தான்”.

சென்னா பேச்சை நிறுத்தினாள். ”இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. நாளை செயல் திட்டம் வகுக்கும் கூட்டம் இதே நேரத்தில் மிர்ஜான் கோட்டை செயலக மண்டபத்தில். எல்லாரும் வருவதை எதிர்பார்க்கிறேன்”.

சென்னாவின் இரட்டைக் குதிரை சாரட் கிளம்பிப் போனது. இருட்டில் வண்டிச் சத்தம் வெகு நேரம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கேட்டிருந்தது. 

********************************************************************************************

மங்கைத்தாயாருவின் மதுசாலையில் சாயந்திரம் முதலே கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. எல்லாரும் ஹொன்னாவருக்கு வந்து சேர்ந்திருக்கும் போர்த்துகீசிய கடற்படை வீரர்கள். கோவாவுக்கு லிஸ்பனில் இருந்து வந்து சேர்ந்து அங்கிருந்து பெரிய படகுகளில், சிறு கப்பல்களில் ஹொன்னாவர் துறைமுகத்தை அடைந்தவர்கள். ஷராவதி ஆறு அரபிக் கடலில் கலக்கும் இடத்தில் ஏற்பட்ட துறைமுகம் அது. 

 கடலில் வந்த படகுகள் தவறாமல் ஆற்றில் திரும்பி எதிர்பார்ப்புகளோடு ஹொன்னாவர் துறைமுக நகரை அடையும். ஹொன்னாவரில் அந்த கடற்படை வீரர்கள் தேடியலைய வேண்டிய அவசியம் இல்லாமல் மதுவும் மாதுவும் படகு விட்டிறங்கியதுமே கிடைக்கும். ஜெர்ஸோப்பாவில் இதை உள்ளூர் மதுசாலை நிர்வாகம் செங்கமலம் சொற்படி நடத்தும்.  

இதில் மதுவின் காரியத்தை மங்கைத்தாயாரின் மதுசாலை ஏழெட்டு வருஷமாகப் பெரிய அளவில் தீர்த்து வைக்கிறது. உள்நாட்டு கள்ளும், நாட்டுச் சாராயமும், போர்த்துகல் சரக்குகளுமாக எப்போதும் காத்திருக்கும் மதுக்கடை அது. மதுசாலையில் மங்கத்தாயார் மது எடுத்துத்தர வைத்திருந்த ஆண்களும்  பெண்களும் தென்னிந்திய மொழிகள், இந்துஸ்தானம், போர்த்துகீசு என்று பல மொழிகளையும் சரளமாகப் பேசக் கூடியவர்கள். முணுமுணுப்பாக இந்த மொழிகளில் பேசினாலும் உதட்டசைவை வைத்து ஒட்டுக்கேட்டுத் தகவல் கிரஹிக்கக் கூடியவர்கள். 

இன்றைக்கு சாயந்திரம் நாலு மணிக்கே வரிசையாக கடற்படை போர்த்துகல் கார இளைஞர்களும், போர்த்துகீசிய படையில் பணி எடுக்கும் ஆப்பிரிக்க வீரர்களும் வர ஆரம்பிக்க வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது.

மங்கைத்தாயார் பாம்புச் செவியோடு இந்த கடற்படை வீரர்களின் ஒவ்வொரு உரையாடலையும் காதில் வாங்கி, சாதாரணமானதை விலக்கி, தேவையானவற்றை மனதில் சேர்த்து வந்துகொண்டிருந்தாள். 

முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு இன்னிக்கு புதனா, நாளைக்கு வியாழனும் குடிக்க வந்தால் உங்களுக்கு ஐந்து சதவிகிதம் விலை குறைவு, மறுநாள் வெள்ளியும் வந்தால் பத்து சதவிகிதம் தள்ளுபடி என்று அறிவிப்பாள் குடியன்மாரிடம். 

அடுத்த வாரம் புதன் வரை தொடர்ந்து வந்தால் பாதி விலைதான் எல்லாம் என்று பூரண சந்தோஷத்தோடு அவள் அறிவிக்க அவர்கள் பலமாகச் சிரிப்பார்கள். தொடர்ந்து தகவல் உதிர்ப்பு. மங்கா காத்திருந்த நேரம் அது. 

அடுத்த வாரம்  வேலை கிட்டத்தட்ட முடிஞ்சிருக்கும். குடிக்க எங்கே வர? நாளைக்கு ஆரம்பிச்சா அது ஏன் அடுத்த வாரம் புதன் வரை நடக்கணும். எட்டாயிரம் பேர் திங்கள் அன்றைக்கே முடிச்சுடலாமே? 

இந்தக் கடற்படையெடுப்பைப் பற்றி போர்ச்சுகீசியர்களை விட மங்காவுக்கு நிறையத் தகவல் தெரியும். முக்கியமாக வரும் திங்களில் இருந்து புதனுக்குள் இந்தப் போர்த்துகீசிய கடல் படைஎடுப்பு முடிந்து போகும். ஆக கைவசம் ஆறு நாட்கள் உண்டு. 

இன்று வந்த நாள். கைவேலை காட்டமாட்டாள் அவள் விருந்தாளிகளிடம். சந்தோஷமாக கள்ளும்  பிராந்தியும் கலந்து அருந்தி ஓவென்று குதித்துக் கூக்குரலிட்டு அனுபவிக்கட்டும். நாளை முதல் தள்ளுபடி விலை, இலவச பானம் அவ்வப்போது. நிச்சயம் வந்து விடுவார்கள். கேட்ட மதுவில் ஒரு சிறு நகக்கண் அளவு ஊமத்தைப் பொடி கலந்து விடுவாள். ஒன்றும் புதுசாகத் தெரியாது. கொஞ்சம் தலை கிர்ரென்று சுத்தலாம் என்று வைத்திய செங்கமலம் சொன்னாள். அரிந்தம் வைத்தியரின் சிஷ்யர்களும் அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். வரும் திங்களுக்குள் இந்த வீரர்கள்   ஹொன்னாவர் வீதிகளில் போதம் கெட்டு அலைவார்கள். அல்லது எப்படியோ சமாளித்து கோவா திரும்பி, வந்த கப்பல்களில் சுருண்டு படுப்பார்கள்.  போருக்கு வந்தவர்களாக அவர்களில் பலரும் இருக்கப் போவதில்லை.

மங்காவின் திட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது. அந்த வெள்ளி அன்று மங்காவின் கோவாப் பிரதேச ஊழியன் ப்ரிகான்ஸோ தானும் மதுசாலையில் ஒரு கோப்பை லாகர் என்ற பார்லி தானிய மதுவைப் பருகினான்.    நாக்கு சுருளவிழ அவன் பேச ஆரம்பித்தது அன்று காலை மாதாகோவிலில் பாவமன்னிப்பு வாங்கப் போனது பற்றி. ஊமத்தை மதுவுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அது.

ஊமத்தைப் பொடி சமாசாரம் பாதிரியார் மூலமாகவும் சக குடியன்மார் மூலமும் ஹொன்னாவர் முழுக்க அன்று இரவுக்குள் பரவிவிட்டது. உடனே மாற்று மருந்து உருவாக்க வைத்தியர்களைத் தேடினார்கள் போர்த்துகீசியர்கள். அவர்களின் நல்ல வேளை இரண்டு நாள் பருகிய மதுவில் கலந்த நகக்கண் அளவு ஊமத்தை, கப்பலில் வந்த படையினரை ஒன்றும் செய்யவில்லை.

மங்காவும் செங்கமலமும் போர்த்துகீசியர்களால் சிறையில் வைக்கத் தேடப் பட்டார்கள். ஏதாவது பிரச்சனை என்றால் போர்ச்சுகீசியர்கள் உள்ளே வரமுடியாத ஜெரஸொப்பாவுக்கு வந்துவிடும்படி சென்னா சொன்னதை அவர்கள்  . மறந்து விடவில்லை. ராத்திரியோடு  ராத்திரியாக ஜெரஸொப்பா வந்து சேர்ந்தார்கள்.   அவர்களை சென்னா சந்திப்பதைத் தவிர்க்க விஜயநகர சாம்ராஜ்ய அதிபரால் நிர்பந்திக்கப்பட்டாள். சாம்ராஜ்யத்துக்கு இப்படியான   போர்த் தந்திரங்களில் உடன்பாடு இல்லை என்று விஜயநகரப் பிரமுகர் மூலம் சொல்லப்பட்டதாம். அவர்களுக்கு முதலில் சொல்லவில்லை என்பதே அவர்கள் சொல்லாத புகார்.

மங்காவும், செங்கமலமும் சேனாதிபதியோடும் தளபதியோடும் கழித்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு சகலவிதமான உதவியும் வாக்குதத்தம் செய்யப்பட்டது. அவர்களோடு கழித்த  பொழுதுகளில் ஊமத்தைப் பொடி மெலியதாக எனினும் வலியதாகக் கலந்த மது கூடலுக்குப் பின் அவர்களுக்கு ஊட்டப்பட்டதாகவும், அவர்களுடைய பணி மரியாதைக்குரியது என்று சொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. 

விஜயநகரத் தடையை மீறி சென்னா பார்க்க வந்தபோது அவர்கள் அந்திம சுவாசம் வலித்துக் கொண்டிருந்தார்கள். சென்னா வந்ததை, கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் பெருக்கியதை ஒரு நொடி உணர்ந்து மகாராணியைப் பார்த்துப் பெருமையோடு புன்னகைத்தார்கள்.   

அவர்களின் உடலைக் கோட்டைக்குள் புதைத்துத் தக்கபடி நினைவிடம் எழுப்பும்படி    அரசாணை வந்தது. இறுதி வினாடி சுவாசத்தோடு அந்தப் பெண்கள் இருவரும் கோட்டை உட்சுவருக்குள் நிற்க வைக்கப்பட்டு   செங்கலும் சுண்ணாம்பும் பூசிச் சுவர் பழையபடி ஆனதாகச் செய்திகள்.

மிர்ஜான் கோட்டையின் வெளிச்சுவர் வலம் திரும்பும் இரண்டு இடத்தில் அவர்கள் சுவர்களுக்கு உள்ளே இடைவிடாத காவலுக்கு நிற்கிறார்கள். 

தவறு என்னும் ஊமத்தைப் பொடியை நான் தான் உண்டு இரண்டு அறியாப் பெண்களைப் பலியாக்கினேன் என்று சென்னா மிக வருந்தி, குறைந்தபட்ச தண்டனையாகத் தனக்குத்தானே விதித்துக்கொண்ட படி ஒரு வாரம் உண்ணாநோன்பு இருந்தாள்.

மங்கா இதைத் தொடங்கும்போது சொன்னது உண்மைதான்.

***

Series Navigation<< மிளகு – அத்தியாயம் இருபத்தேழு  மிளகு  அத்தியாயம் இருபத்தொன்பது >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.