பிராணஜீவிதம்

சமீபத்தில் தான் கோவிட் கொள்ளை நோயிலிருந்து விடுபட்டு வந்திருக்கிறோம் என்றாலும், இனி ஒரு முறை வராது என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.

உடைக்கு எடுப்பாக அதே வண்ணத்தில், அதே வகையான துணியில், தையல்காரர் முகக்கவசம் தைத்துக்கொடுத்தாலும், வாழ்நாள் முழுதும் முகக்கவசம் அணிந்தே ஆக வேண்டியிருக்கும் என்றால் உங்களால் அதை புன்னகையோடு, முகம் மலர ஏற்றுக்கொள்ள முடியுமா?

“மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு, காளைகளை ஒட்டிக்கிட்டு” போகும் பயணங்களாகவா நம்முடைய பயணங்கள் இருக்கின்றன?

இன்று யார் எங்கு போனாலும், பெரும்பாலும்  கரியமில வாயுவை கக்காமல் நகர்வதில்லை. அது தரை வழியானாலும் சரி, நீர் அல்லது காற்று வழி பயணங்கள் ஆனாலும் சரி!

சில ஆண்டுகளுக்கு முன்னால் கூட, சிங்கப்பூரின் வானம் சில மாதங்களுக்குத்தொடர்ச்சியாக புகைமண்டலமாக (HAZE) காட்சியளித்தது.இந்தோனேசியாவில் காடுகளை நெருப்பு வைத்து எரித்து, அந்த நிலத்தில் விவசாயம் செய்வது தான் காரணமாகச் சொல்லப்பட்டது. N95 என்ற வகையிலான முகக்கவசம் சிங்கப்பூரில் அப்போதும் பயன்பாட்டுக்கு இருந்தது. வீட்டை விட்டு வெளியேறும் போது ராகு காலம், எம கண்டம் பார்க்கிறோமோ இல்லையோ, காற்றின் மாசு அளவை தெரிந்துக்கொள்ளாமல் போனதில்லை. அப்போதெல்லாம் மாசின் அளவு 150 அளவை தொட்டால், இளம்பிள்ளைகள், முதியவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்து ஜன்னல் கதவுகளையும் அடைத்தே வைத்திருக்கவேண்டியிருந்தது.இந்த பிரச்சனையில் பணம் சம்பாதித்தவர்கள்- அப்போதைய முகக்கவசத்தயாரிப்பு நிறுவனங்களும், ஹெப்பா(HEPA)  வடிகட்டியோடு இருக்கும் காற்றை சுத்தம் செய்யும் (Purifiers) கருவிகளைத் தயாரித்து விற்கும் நிறுவனங்களும் தான்.

நான் பிலானியில் படித்த 2000 ஆண்டின் தொடக்கத்தில் மாலையில் தில்லியில் ரயில் ஏற வந்தால், காற்றின் மாசில் கண்கள் எரியும். இருபத்தி இரண்டு ஆண்டுகள் கடந்து, இன்றைய தில்லி பல வகையில் முன்னேறி இருக்கலாம், ஆனால் காற்றின் மாசு அளவு முன்னைக்காட்டிலும் மிக மோசம்.

நீங்கள் வாழும் ஊரில் குழந்தைகள் மருத்துவமனை இருந்தால் அங்கே சுவாசிக்கமுடியாமல் தவிக்கும் பிள்ளைகள் எத்தனை பேர் என்ற தகவல் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும். 

பாதை எண்  11 என்பது சிங்கப்பூரின் கே கே மருத்துவமனையில் சுவாசிக்கத் திணறும் பிள்ளைகளுக்கான அவசர அனுமதி வழி. குறை மாதத்தில், பிறந்த பிள்ளைகளை பெற்றவர்களுக்குத்தெரியும், சுவாச மண்டலம் எத்தனை முக்கியம் என்று.

கால் கட்டைவிரலில் துணி காயவைக்க போடும் கிளிப் போன்ற ஒன்றை அணிவிப்பார்கள். அது உடலில் பிராணவாயு எனப்படும் ஆக்சிஜனின் அளவைக்காட்டும். சாதாரணமாக அது  95%மேல் இருக்கவேண்டும்.90% இல் இருந்தால் ஆக்சிஜன் செலுத்திப்பார்ப்பார்கள். ஒரு அரை மணிநேரத்தில் அளவு சராசரி அளவை தொடவில்லை என்றால் சிக்கல் தான். மேல் அதிக ஆக்சிஜன் தேவைப்படும். இன்னும் சில பிள்ளைகளுக்கு, தொண்டை வழியாக ஓட்டை போட்டு நேரடியாக பிராணவாயு செலுத்தவேண்டியிருக்கும்.

மேற்சொன்னது என் நேரடி அனுபவம். கொரோனா வந்த பிறகு அது அமேசானில் அனைவரும் வீட்டுக்கு ஒன்றாக வாங்கும் ஆக்சி மீட்டர் என்ற அறிந்துகொண்டேன்.

நிரம்பி வழிந்த மருத்துவமனைகளையும், தொடாமல் தூரத்திலிருந்து ஈமக்கிரியை செய்த பிள்ளைகளையும், கொரோனா காலம், நம் மனதில் பசுமரத்தாணி போல பதிய வைத்து விட்டது.

இந்த கட்டுரையில் காற்றின் மாசைக்குறைக்க இயற்கையில் கைகொடுக்கும் மரங்களில் சிலவற்றை  மீள் அறிமுகம் செய்துகொள்ளப்போகிறோம்.

தியானமோ, மூச்சுப்பயிற்சியோ கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

ஆலமரத்தடியில் அமர்ந்த பிரான் என்று சொன்னால் உங்களுக்கு தட்சிணாமூர்த்தியும், அரசமரத்தடி என்றால் புத்தரும் நினைவுக்கு வருவார்கள் இல்லையா?

பழந்தமிழர் வாழ்க்கைமுறையில், மரங்களைப்போற்றுவது இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. தலவிருட்சங்கள் வந்ததும் இப்படியாகத்தான் இருந்திருக்கும்.

இயற்கையோடு கைகோர்க்கும் பொழுதுகள் நமக்கு நல்ல மனநலத்தையும், உத்வேகத்தையும் கொடுக்க வல்லவை.

ஜூன் மாதம் தமிழகப்பயணத்தில், ஒரு கிராமத்தில் கண்ட காட்சி இது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதோடு முடிந்துவிடவில்லை. வேம்பு, புன்னை, வில்வம், ஆலம், அரசு போன்ற பல மரங்கள் தமிழகத்தில் போற்றுதலுக்குரியனவாய், வழிபடப்படுகின்றன. இவற்றில் பல மருத்துவ குணங்கள் இருப்பதும், காலகாலமாய் அறியப்பட்ட ஒன்று தான்.

ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர்எழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.

திருப்பாணாழ்வாரின் பாசுரத்தில், உலகேழையும் உண்ட பிரான், ஆலமர இலையில் சிறுபாலகனாய் இருக்கும் கோலம் தன் நெஞ்சத்தை நிறை செய்ததென்கிறார்.

ஆலம் என்ற சொல் அகன்ற என்ற பொருள் தரும். அந்த ஒரு மரம் மட்டுமே பல உயிர்களுக்கு தாய் மடி.

சிட்டுக்குருவிகளுக்காகவும், எறும்புகளுக்காகவும் அரிசி மாவில் கோலம் போட்ட தமிழர்கள், கனிமரங்களில் உயர்க்கிளைகளில் பழுத்திருப்பவற்றை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் என விட்டுவைத்தார்களாம். இப்போது அந்த பழக்கமும் அருகி வருகிறது. நகர வாழ்க்கையில் மட்டுமே பரிச்சயம் கொண்ட பிள்ளைகளுக்கும், இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழும் பிள்ளைகளுக்கும், அவர்களின் மன அமைப்பில் பெரிய வேறுபாடு வாழ்நாள் முழுவதும் தொடர்வதைக் காண்கிறோம்.

அதிக நிழல் தரும் ஆலமரம் என்பது, எல்லா கிராமங்களிலும், அவர்களின் வாழ்க்கையோடு கலந்த ஒன்றாகும். நிலத்தடி நீரளவு குறையாமல் இருக்கவும், ஆண்மைகுறைபாடு வராமல் தடுப்பதற்கும் ஆலமரம் உதவி செய்கிறதாம்.

மரத்தை மனிதர்களோடு இணைத்து வள்ளுவர் பேசும் மொழி உங்களுக்காக:

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (குறள்:216)

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.( (குறள்:1008)

முதல் குறள்,  நல்ல பண்புடையவர்களுக்கு உள்ள  செல்வம் ஊருக்குள் நல்ல பயன்தரும் மரம் பழுத்தது போல, எல்லாருக்கும் பயன்தரும் என்கிறது.

பின்னது,

யாருக்கும் உதவாததால், ஒருவராலும் நச்சப்படாதவன்=விரும்பப்படாதவன் பெற்ற செல்வம், ஒரு நச்சுமரம் பழுத்ததைப்போல யாருக்கும் பயனில்லாத ஒன்றாகும் என்கிறது.நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இல்லையா? நாலடியாரில்  ஆலமரத்தை உமையாகக்கொண்ட ஒரு பாடல் இது.

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலை ஆய் மற்று அதன் வீழ் ஊன்றிய ஆங்கு
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற
புதல்வன் மறைப்ப கெடும் (நாலடியார்)

சிதலை என்பது கரையான். கரையானால் தின்னப்பட்ட ஆலமரத்தை,மதலையாய் (ஒரு தூணைப்போல), அதன் விழுதுகள் தாங்குவதைப்போல, குதலைமை(தளர்ச்சி) வந்தால், தந்தையை புதல்வன் தாங்குவான்.
ஆல மரம் மறைமுகமாக வாழ்க்கைப்பாடமும் சொல்கிறது. இன்றைய தலைமுறையில் அதிகமாக மூத்தக்குடிமக்களுக்கான குடியிருப்புகளின் விளம்பரங்கள் கண்ணில்படும், மனிதர்கள் தன் நிலை மாறிவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

என்ற வரிகளுக்குச்சொந்தக்காரர் அதிவீரராமபாண்டியன் என்னும் சிற்றரசர். சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய வெற்றிவேற்கையில் சொல்லப்பட்ட பாடல்,

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே ( வெற்றிவேற்கை)

அக்கினிகுஞ்சொன்று கண்டேன் என்ற பாரதியின் வரியை எனக்கு நினைவுபடுத்தியது.

பரம்பொருள் தத்துவத்தை இந்த பாடல் மறைமுகமாக சொல்கிறது என்றும் கொள்ளலாம். ஆலமரத்தின் பழத்தினுள் இருக்கும் சிறிய விதை, நன்னீரில் இருக்கும் மீனின் முட்டையை விட சிறியதாக இருந்தாலும், பெரும்படையோடு வரும் அரசனின் சேனைக்கு நிழல் தரும் வகையில் பரந்து விரிந்த ஆலமரத்தை அது தன்னுள் கொண்டதாகும்.

அடுத்த முறை ஆலமரத்தைப்பார்த்தால், ஆலின் கீழ் மோன நிலையிலிருக்கும் தட்சிணாமூர்த்தியையும், தமிழரின் நீண்ட வாழ்வியலில் ஆலமரங்கள் எப்படி இருந்தன என்பதையும் நிச்சயம் நீங்கள் சிந்திக்கக்கூடும்.

திருஆலம்பொழில், திருஆலங்காடு, ஆலந்துறை போன்ற ஊர்களின் பெயரோடு இரண்டறக்கலந்திருக்கிறது ஆலமரம். இன்னும் சொன்னால், சிதம்பரம் எனப்படும் தில்லையின் தலமரம் கூட ஆலமரமே.

புன்னை வனத்துக்குயிலே:

நாள்காட்டியில் பக்கம் கிழித்தபோது  ஆடித்தபசு என்றிருந்தது. ஆடித்தபசு என்பது சங்கரன்கோயிலில் கோமதி அம்மன் புன்னைமரத்தடியில் செய்த தவத்தைக்குறிப்பதாகும்.

உப்புத்தண்ணீர் உள்ள பகுதிகளிலும் புன்னை மரம் வளர்கிறது. படகு மற்றும் கப்பல் செய்ய இந்த மரத்தைப்பயன்படுத்துகிறார்கள். மின்சாரம் இல்லாத நூற்றாண்டுகளில், இந்த புன்னை எண்ணெயைத்தான் அதிகம் விளக்கு எரிப்பதற்கு பயன்படுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில், பயோ டீசல் செய்ய இந்த எண்ணெயைத்தான் 80% சேர்க்கிறார்கள்.

இலங்கையிலிருந்து ஒருவர் எங்களது அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இன்றைய எண்ணைத்தட்டுப்பாடு காலத்தில் பெட்ரோல், டீசல் போன்றவை முற்றிலும் கிடைக்காது எனும்போது அவர்கள், சூரிய வெப்பம், பயோடீசல் போன்றவற்றைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

புன்னைநல்லூர் மாரியம்மனைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

புன்னை என்பது சங்கக்காலம் தொட்டே தமிழர்கள் அறிந்த ஒரு மரம்.

ஏழாம் நூற்றாண்டு திருமயிலை பதிகத்தின் முதல் வரியை திருஞானசம்பந்தர், மட்டிட்ட புன்னையம் கானல் மடமயிலை என்று தொடங்குவார்.உலகப்போர் காலங்களில் வானொலிக்குத்தேவையான மின்சாரத்துக்குக்கூட புன்னை எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாம். மண்ணெண்ணெய் என்ற ஒன்றை நாம் அறிந்திருக்கவிட்டால், இன்று நம் வாகனங்கள் புன்னை எண்ணெயைத்தான் பயன்படுத்தியிருக்கும்.

இந்த புகைப்படம் இரும்பை என்னும் ஊரின் சிவாலயத்தின் தலவிருட்சமான புன்னை மரம். Calophyllum Innophylum என்ற தாவரவியல் பெயர், அழகான, அழுத்தமான பச்சை நிறமுடைய இலைகளைக்கொண்ட மரம் என்கிறது. இந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தால், அதிக பிராணவாயு கிடைக்கும்.

எத்தனை நெருக்கமான இலைகளைக்கொண்ட மரமாக இது இருக்கிறது!

சங்ககாலம் தொடங்கி, புதுமைப்பித்தன் வரை எல்லாரும் பாடியிருக்கும் மரம் இது.புன்னை இலை போலும் சின்ன மணிப்பாதம் மண்ணில் படக்கூடாது என்ற திரைப்பாடல் வரியைக்கேட்டால், புன்னை மரம் நினைவுக்கு வரும்.

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் து஡ற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்.
(சிலப்பதிகாரம் புகார்க்காண்டம்- கானல் வரி)

அன்னப்பறவையைப்பற்றி இப்போது தமிழகத்தில் கேட்டால், அது அழிந்துவிட்டதாகவே பலரும் சொல்கிறார்கள்.

இளங்கோ அடிகள், கோவலனை ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதை சொல்ல ஆரம்பிக்கும் இடம் இந்த கானல் வரி.புன்னை மரத்தின் மேல் வெள்ளைநிறமுடைய அன்னப்பறவை ஏறி அமர்ந்திருக்கிறது. அதே வெள்ளை நிறமுடைய புன்னை மரப்பூக்கள் பூத்திருக்கின்றன. அன்னப்பறவையை நிலவென்றும், புன்னை மரைப்பூக்களை விண்மீன்கள் எனவும் கொண்டு ஆம்பல் மலர் பூத்துவிட்டதென்று புகார் என்னும் ஊரின் அழகை இளங்கோ அடிகள் பாடுகிறார்.

மரங்களின் அரசன்-அரச மரம்:

மேற்கு நாடுகளைப்பொருத்தவரை ஓக் மரம் தான் மரங்களின் அரசன். ஆலமரம் எழுவத்தைந்தாவது சுதந்திரத்தினத்தைக்கொண்டாடும் இந்தியதேசத்தின் தேசிய மரம் என்றாலும், புத்தர் என்பவர், எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், போதி என்னும் அரச  மரநிழலில் ஞானம் பெற்றவராக அறியப்படுகிறார். எப்படி புத்தரின் பல் பல நாடுகளிலும் வழிபாடு செய்யப்படுகிறதோ, அப்படி போதிமரக்கிளை இந்தியாவிலிருந்து, இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பலநாடுகளிலும் கயாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வளர்க்கப்படுகிறது.

அரசிலி என்ற பெயருடைய ஒரு கோயிலுக்கு கடந்த முறை சென்ற இந்தியப்பயணத்தில் செல்ல நேர்ந்தது. அரசமரத்தடியை இருப்பிடமாகக்கொண்ட இறைவன் இருக்கும் இடம் அரசிலி.

அரச மரம் தலவிருட்சமாக இருக்கும் ஊர்களான திருவாவடுதுறை  மற்றும் திருவெண்காட்டில், பிள்ளை வரம் வேண்டி நின்றவர்களுக்கு, அதை அருளும் தலமாக இருந்திருக்கிறது.

குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு, ஆண்களுக்கு அரசமரமும், பெண்களுக்கு வேம்பும் தீர்வாகச்சொல்லப்படுகின்றன.

இன்றும் சில குடும்பங்களில் அரசாணி நடுதல் என்பது திருமணத்திற்கு முன்னர் செய்யப்படும் சடங்காக இருக்கிறது.

இதன் மரப்பட்டையை வைட்டமின் கே மிகுதியாகக் காணப்படுகிறது.

இதன் தொடர்பில் இரண்டு விஷயங்கள் இந்த வாரம் கவனம் ஈர்த்தன.ஒன்று சமீபத்தில் கடந்த ஆவணி அவிட்டம், காயத்ரி ஜெபம் செய்த பிள்ளைகள் செய்த வேள்வியில் சேர்த்த குச்சிகள் அனைத்தும் அரசங்குச்சிகள் என்பது அருகில் கவனித்துப்பார்த்த போது தெரிந்தது.

வேள்விகளில் ஏன் அரசங்குச்சிகள் மட்டும் சேர்க்கப்படுகின்றன என்பதற்கு அவை அதிக பிராணவாயுவைத்தருவதே காரணம் என நினைக்கிறேன்.

மற்றது, சிங்கப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருக்கும் நூற்றிப்பது ஆண்டுகள் பழமையான அரச மரமும், அதன் இதய வடிவிலான இலைகளும். 

என் கண் எதிரே ஆடவர் ஒருவர் நம்பிக்கையோடு குழந்தைவரம் வேண்டி சுற்றிக்கொண்டிருந்தார்.Cranular Acid Metabolism என்ற முறையை பின்பற்றுவதால், இரவிலும் கூட பிராணவாயுவை வெளியிடும் மரம் அரசமரமாம்.

மேலே உள்ள படத்திற்குள் ஒரு படக்கதை இருக்கிறது. என்ன தான் மரங்கள் பிராணவாயுவைத்தந்தாலும், சன்னலை அடைத்து, முழு நேரமும் ஏர்கான்(Aircon) என்று நுனிநாக்கில் சொல்லும் காற்றை பதன்படுத்தும் கருவியை மட்டுமே நம்பியிருந்தால், பிரளயக்காலம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

என் அப்பா ஒருமுறை விபத்துக்குளாகி, முகம் முழுக்க தழும்புகளோடு துன்பப்பட்டபோது, அரசம்பழுப்பு என்னும் பழுத்த அரச இலைகளை, அடுப்பில் சுட்டெரித்து, தேங்காய் எண்ணையில் குழைத்து தடவிவர, தோலில் தழும்புகள் மறைந்ததைக்கண்டேன்.

பனை மரம்:

தமிழ்நாட்டின் மாநிலமரம் பனை ஆகும்.

பனை மரத்தை யாரும் வளர்ப்பதில்லை. அது தானாகவே கிராமங்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்தததாய் இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் தமிழகத்தில் மட்டும், பனை மரம் தொடர்பிலான தொழில்களில் இருக்கிறார்கள்.

பேப்பர் என்ற ஒன்றின் வருகைக்கு முன்னால், பனையோலை தான் எழுதுவதற்குப்பயன்பட்ட பொருள். பழந்தமிழில் உள்ள அத்தனை இலக்கியங்களும் பனையோலையில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.

அம்மனுக்கு சாத்தும் காதோலை கருகமணிகள் சிங்கப்பூரில் கூட பனையோலை பெட்டிகளில் கிடைக்கின்றன. பனங்கல்கண்டு, கருப்பட்டி போன்றவையும் சர்வதேச சந்தைகளில் பனையோலைப்பெட்டியில் தான் விற்கப்படுகின்றன.

பனையோலைகளில் செய்த சிலுவைகளைக் கிருஸ்தவர் வாசல் நிலைகளுக்கு மேல் கண்டிருக்கிறேன். அதே போல ஹரி ராயா என்று அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகைக்காக தொங்கவிடப்படும் பெட்டி போன்ற ஒரு அலங்காரப்பொருள், பனையோலையின் வடிவத்தில் தான் இருக்கும்.

பல மதங்களிலும்  பனையின் பயன்பாடு இருக்கிறது.

திருக்கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பானை கிராமப்பகுதிகளில் பிரபலமான ஒன்று.

பச்சை பனையோலைகளால் செய்யப்பட்ட  பெட்டி போன்ற ஒன்றில் வைத்து தான் வாசனை மலர்களை பாலித்தீவில் பிரார்த்தனையின் போது  சமர்ப்பிக்கிறார்கள்.

பனை என்றாலே உயரம். யாராவது உயரமாக இருந்தால், பனைமரம் மாதிரி இருக்கிறான் என்றே சொல்கிறோம்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.( குறள்: 104)

ஒருவர் தினையளவு செய்த உதவியை, அந்த உதவியின் பயனை ஆராய்ந்து பார்ப்பவர்கள்,பனை அளவு போல பெரிதாக நினைத்து பாராட்டுவார்கள் என்று பனையைப்பற்றி பனையோலையில் எழுதியிருக்கிறார் வள்ளுவப்பெருமான்.

ஓடியல்கூழ் என்பது இன்றும் இலங்கையில் மிகப்பிரபலமான உணவு. அது பனங்கிழங்கு மாவைக்கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றாகும்.

கிகிலுப்பை என்ற ஒன்றை குழந்தைகளுக்கு எப்போதும் பயன்படுத்துகிறோம். அது இயற்கையான ஒன்றாக இருக்க வேண்டும். நெகிழியில் செய்யப்பட்ட ஒன்றை விடுத்து, பனையோலையில் செய்யப்பட்ட ஒன்றைக்கூட பயன்படுத்தலாம்.

ஆரம்பகாலத்தில் தாலி என்ற ஒன்று தமிழர் பண்பாட்டில் உண்டான போது, அது பனையோலைகளால் ஆன ஒன்றாக இருந்தது.

திருப்பனந்தாள் என்ற ஊரைப்பற்றி படித்துக்கொண்டிருந்தேன். இதன் தலமரம் பனை ஆகும். பனைமரத்தின் தாளில் சிவபெருமான்  இருப்பதால், திருப்பனந்தாள் என்று இந்த ஊர் அறியப்படுகிறது. 

பனையூர், பனங்காட்டூர் போன்ற ஊர்கள் கூட பனையோடு தொடர்புடைய பேரைக்கொண்டவை. நுங்கு, கருப்பட்டி, கள், பதநீர், பனங்கிழங்கு, பனம்பழம் என்று பலவிதமாக பனையின் பயன்கள் இருக்கின்றன.

வெப்பமான பகுதியில் வளரும் மரமே ஆனாலும், மனிதர்களின் உடல் சூடைக்குறைக்க பேருதவி செய்கிறது.

திரு.சோ.தருமன் அவர்களின் சூல், நீர் மேலாண்மையைதான் மறைமுகமாக வலியுறுத்துகிறது. அதில் படித்த செய்தி.  தூக்கணாங்குருவி கூடுகளை எந்த மரத்தில் காட்டுகிறதோ அது ஆண் பனை மரமாம். ஆறறிவு இல்லாத பறவைகளுக்கு, எங்கிருந்து நுண்ணறிவு வாய்த்தது என வியந்தேன்.

மலேசிய எழுத்தாளர் பாலமுருகன் என்பவர் மூக்குத்துறவு என்று ஒரு அறிவியல் புனைவு கதையை  அரூ தளத்தில் எழுதியிருந்தார். பிராணவாயு குறைந்தால் என்னமாதிரியான நடவடிக்கைகளுக்கு உலகம் ஆளாகும் என்பதைப்பற்றிய கற்பனையின் நீட்சி. இவ்வகை கற்பனைகள் பலிக்காமல் இருப்பது  நம் கையில் தான் இருக்கிறது.

நாம் எப்படி மனம் போன போக்கில் இருக்கிறோமோ, அப்படியே இயற்கையும் நடக்க ஆரம்பித்துவிட்டது. பருவநிலை மாற்றங்களை எல்லா நாட்டினரும் அனுபவிக்கின்றனர். மழை மாதங்களில் மழை பெய்வதில்லை, பெய்தாலும் பெருவெள்ளமாக மாறி கடலில் சென்று சேர்கிறது.

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெப்ப அலை தாங்காமல் மாண்டார்களாம்.

ஆல், அரசு, பனை, புன்னை  போன்ற மரங்கள் நெடுங்காலம் வாழக்கூடியவை.மண் அறிப்பைத்தடுப்பவை. காற்றின் மாசைக்கட்டுக்குள் வைப்பவை. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுக்குள் வைக்க உதவுபவை.  அவற்றை மறைந்த நகைச்சுவை நடிகர் திரு.விவேக், திரு.பியூஷ் மனுஷ் போன்றவர்களைப்போல நாமும் நம்மை சுற்றியுள்ள இடங்களில் வளர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். அல்லது, இவர்களின் முயற்சிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவவேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு மூச்சு முட்டாமல் இருக்க இன்றே ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.